13.4.26

திங்க"க்கிழமை :: Butternut Squash soup -- பானுமதி வெங்கடேஸ்வரன் ரெஸிப்பி

Butternut Squash soup

பானுமதி வெங்கடேஸ்வரன்

தேவையான பொருள்கள்: "


பட்டர்னட் ஸ்க்வாஷ்   - ஒரு காயில் பாதி(1/2)

வெங்காயம்   - 2

கேரட்   -  2

பூண்டு   - 4 பல்

மிளகு   - 1/2 டீ ஸ்பூன்

உப்பு   -  தேவையான அளவு

செய்முறை:

தோல் சீவி சிறு துண்டுகளாக நறுக்கப்பட்ட பட்டர்னட் ஸ்க்வாஷ், கேரட் மற்றும் வெங்காயத்தை அவை மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி, வேக வைக்கவும். 

காய்கள் நன்றாக வெந்ததும், அதை நன்றாக மசித்து இரண்டு அல்லது மூன்று கப் தண்ணீர் விட்டு, தேவையான உப்பு சேர்த்து, இரண்டு நிமிடங்கள் கொதிக்க விடவும். ஆற வைத்து மிக்ஸியிலும் அரைக்கலாம்.

பிறகு அதில் பொடி செய்த மிளகைப் போட்டு அருந்தலாம். பசி அடங்க இருக்கும். 

மிளகுப்பொடிக்கு பதிலாக க்ரீம் போட்டுக் கொள்ளலாம்.  மேப்பில் சிரப் கூட சேர்த்துக் கொள்கிறவர்கள் உண்டு. 

மேப்பில் சிரப் என்பது கனடாவில் விளையும் மேப்பில் மரங்களிலிருந்து எடுக்கப்ப்டும் தேன் போன்ற ஒரு இனிப்பான திரவம்.

உருளைக் கிழங்கு, பட்டாணி போன்றவையும் சேர்த்துக் கொள்ளலாம்.



=======================================================================================

கவிஞர் வாலியின் நினைவு நாடாக்கள்!

பெற்றேன் பெரும் பேறு  

'படம் பாக்கப் போறேன்; வறேளா?'

'என்ன படம்?'

'மனோகரா!'

'எனக்கும் சேத்து டிக்கெட் வாங்குவியா?"

'வாங்கறேன்; வாங்கோ!"

'செத்த இரு; முஞ்சி அலம்பிண்டு வறேன்!"

பத்திரிகை அலுவலகத்தில் இருந்த பாத்ரூமுக்குள் போனார் 'சிவாஜி' பத்திரிகையின் ஆசிரியர்...

திருவையாறு லோகநாத சாஸ்திரிகளின் திருப்புதல்வர் திரு.திருலோக சீதாராம்.

'சிவாஜி' சின்னப் பத்திரிகைதான்; ஆனால் அது திருச்சியிலிருந்து வெளியாகி, திசைகளைத் தின்றது!

ஒரு ஷெல்ஃபில் அடுக்கப்பட்டிருந்த, பழைய சிவாஜி ஏடுகளைப் புரட்டுகையில் என் கண்ணில் ஒரு நாட்டுப்புறப் பாடல் தென்பட்டது. ஓரிரு வருடங்களுக்கு முன் வெளியானது.

கவிதையின் தலைப்பு 'கை வண்டிக்காரன் காதலி!" கொத்தமங்கலம் சுப்பு எழுதுவாரே, அதுபோல் கிராமியப் பாட்டு அது.

'ரெண்டு-
காசெ வெச்சா நிக்றபடி
மீசெ வெச்சான்; அவன்
தோசெ விக்ற பொம்ளெ மேலெ
ஆசெ வெச்சான்!"

என்ன எதுகை! என்ன ஓசை நயம்! நான் வியந்துபோனேன். பாட்டின் கீழே 'அகல்யா' என்று போட்டிருந்தது. யார் இந்த அகல்யா? 

முகம் கழுவிக்கொண்டு வந்த திருலோகம் அவர்களிடம் கேட்டேன்.

'யதார்த்தம் பொன்னுசாமிப் பிள்ளையோ அல்லது அனந்தன் நம்பியாரோ சரியா ஞாபகமில்லே இந்தப் பையன் பாட்டெல்லாம், உங்க பத்திரிகையில் போடணும்னு சொன்னாங்க... பாட்டும் நன்னாருந்துது; போட்டேன்!'
'அப்போ அகல்யாங்கறது...!

'அவனோட புனைப்பேரு! சரி, வா! படத்துக்குப் போவோம்!
திருலோகமும் நானும் 'மனோகரா' படம் நடக்கும் ஸ்டார் டாக்கீஸை நோக்கி நடந்தோம்!

பின்னாளில் சென்னையில் 'கிளப் ஹவுஸ்' என்னும் இடத்தில் நானும் நாகேஷ§ம் அறுபதுகளில் தங்கிக்கொண்டு சினிமா வாய்ப்புக்காகப் போராடிக்கொண்டிருந்தபோது-

என் ரூமுக்கு ஒருவர் வருவார்; நான் ஆரம்பத்தில் ஓவியனாக இருந்தது அவருக்குத் தெரியும். அவரும் நல்ல ஓவியக்காரர். என்பால் அன்புகொண்டு அவ்வப்போது வந்து அளவளாவுவார்.

அவர் பெயர் திரு.கணபதிசுந்தரம். அவரிடம் நான் சொன்னேன்: 'கணபதியண்ணே! பல ஆண்டுகளுக்கு முன்னால் 'சிவாஜி பத்திரிகையில் நான் ஒரு பாட்டைப் பாத்தேன். அது 'அருண் ராகவன்' இசையமைப்பிலே, ஒரு படத்துல வந்திருக்குது. பாட்டுப் புஸ்தகத்தெ வாங்கிப் பாத்தேன் எழுதியதுன்னு, உங்க தம்பி பேரு போட்டுருக்குதே!" என்று கேட்டுவிட்டு...
'ரெண்டு-

காசெ வெச்சா நிக்றபடி... அப்படீன்னு பல்லவியையும் சொன்னேன்.

'ஆமாம்! அது என் தம்பி எழுதிய பாட்டுதான்; பத்திரிகையில எழுதினதைப் படத்துக்குக் கொடுத்திருக்கிறான்!' என்றார் அவர்.

பத்திரிகையில் எழுதியது 'அகல்யா'ன்னு போட்டிருந்துச்சே!" என்றேன் நான்.
"அவன்தான் 'அகல்யா'ன்னு, அப்ப புனைப்பேரு வெச்சுக்கிட்டு எழுதிக்கிட்டிருந்தான்; முழுப் பேர் அ.கல்யாணசுந்தரம். அதுல முதல் நாலெழுத்தெ எடுத்து, 'அகல்யா'ன்னு வெச்சுக்கிட்டான்!" என்றார் கணபதிசுந்தரம்; அவர்தான் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் சொந்த அண்ணன்!

பழையபடி வீட்ட இடத்திற்கு வருகிறேன். நானும் திருலோகம் அவர்களும், 'மனோகரா' படத்தை பார்த்தோம்.

'டேய், வாலி! வெண்ணெய்க்கு, தொன்னை ஆதாரமா? தொன்னைக்கு வெண்ணெய் ஆதாரமா? அப்படி கலைஞரும் கணேசனும்!' என்று சொல்லிவிட்டு

'நீ ஸ்ரீரங்கம் பஸ்ஸை அப்புறம் புடிக்கலாம். இப்போ தில்லை நகர்ல ஒருத்தர் ஆத்துக்குக் கூட்டிண்டு போறேன்... அங்க ஒரு அம்மா இருக்கா; பாத்துட்டுப் போ! யார்னு சொன்னேன்னா, உனக்குத் தூக்கி வாரிப்போடும்!' என ஒரு சஸ்பென்ஸ் வைத்து, அந்த வீட்டுக்கு என்னை அழைத்துப் போனார்.

அந்த அம்மையாரைப் பார்த்தேன்; ஆரென்று புரிந்துகொண்டேன்.

மழித்த தலை; நார்ப்பட்டில், மடிசார் புடவை; ருதுவாகு முன் வதுவாகி வயது முப்பத்தொன்றில் வைதவ்வியம் எய்திய மூதாட்டி. நான் சந்திக்கையில் அந்த அம்மையாருக்கு, அகவை அறுபத்து நான்கு. 

தவிட்டையும் தங்கத்தையும் ஒக்க நோக்கும் ஒரு பக்குவம் விழியில் விளங்குவது கண்டு வசமிழந்து நின்றேன்.

'விழுந்து சேவிடா', ஞானம் வரும்!" என்றார் திருலோகம்.

நெஞ்சு நிலந்தோய, நெடுஞ்சாண்கிடையாய் விழுந்து நமஸ்கரித்தேன்.

'நன்னாரு... நன்னாரு!" என்று அம்மையார் தண்ணளி மிக்க ஒரு தாயின் நிலையிலிருந்து என்னை ஆசீர்வதித்தார்கள்.

அன்னணம் என்னை ஆசீர்வதித்த அந்த மாது சிரோமணி..

மோனைக் காலில்
முத்தமிழை நிறுத்திப் பின் -
ஆனைக் காலில்
அடிபட்டுச் செத்தானே...

அந்த மகாகவி பாரதியின் தரும பத்தினி திருமதி. செல்லம்மாள் பாரதி! 

49 கருத்துகள்:

  1. பட்டர்நட் ஸ்க்வாஷ்... நன்று. இதெல்லாம் சாப்பிடும் வாய்ப்பே இல்லைனு நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நெல்லை, இங்கு கிடைக்கிறதே....butternut squash. காய்

      கீதா

      நீக்கு
    2. @நெல்லை: இருபது வருடங்களுக்கு முன் நமக்கெல்லாம் ட்ராகன் ஃப்ரூட் என்றால் என்ன என்று தெரியுமா? நம் ஊரிலும் விரைவில் butternut squash கிடைக்க ஆரம்பித்து.. ஆ! கிடைக்கிறதாமே கீதா சொல்கிறார், தப்பித்தேன்.

      நீக்கு
    3. Tata star கடை, இன்னும் சில பிற சூப்பர் மார்க்கெட்டுகளில் கிடைக்கிறது. ஒரு காய் 40 லிருந்து 50 க்குள்

      அக்கா நீங்க சொல்லிருப்பது போல் மத்தன் போல் இதையும் கூட்டு எல்லாமெ செய்யலாம் சாம்பாரில் போட்டாலும் சுவைதான் மத்தன் போலவே தான் விதை கூட...

      கீதா

      நீக்கு
    4. பறங்கிக்காயின் எல்லா வேரியேஷனும் இங்க கிடைக்குது. எனக்கு அவற்றைக் கொண்டு செய்யும் அல்வா பிடிக்கும். சின்ன வயதில் சாப்பிட்ட வெல்லம் போட்ட கறி பிடிக்கும். மனைவிக்குப் பிடித்தமான ரெய்த்தா துவையல் போன்றதெல்லாம் எனக்குப் பிடிக்காது. நேற்றுகூட பசங்க இருவரிடமும் சொன்னேன். குறைந்தபட்சம் தயிர் சாதம் உருளை ரோஸ்ட் எனக்கு கிடைக்கும்னு சொன்னாத்மான் விமானம் ஏறுவேன். என் உணவுப் பழக்கத்தை மாற்றிவிடக் கூடாதுன்று சொன்னேன்.

      நீக்கு
  2. வாலியின் தன் வரலாற்று நூலில், நினைவு நாடாக்களைவிட நல்லா எழுதியிருப்பார். ஏற்கனவே படித்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானும் படித்திருக்கிறேன். தலைப்புதான் நினைவில் இல்லை.

      நீக்கு
  3. /'டேய், வாலி! வெண்ணெய்க்கு, தொன்னை ஆதாரமா? தொன்னைக்கு வெண்ணெய் ஆதாரமா? அப்படி கலைஞரும் கணேசனும்!'/
    ஆயிரத்தில் ஒரு வார்த்தை. பலரும் எம்ஜியார்தான் கலைஞரை முதல்வராக்கினார் என்பதால் கலைஞரின் உயர்வுக்கு எம்ஜியாரே காரணம் என்பர். அது நூற்றுக்கு நூறு உண்மைதான்....எம்ஜியாரின் ஆதரவு இல்லாவிட்டால் கலைஞர் அண்ணாவுக்குப் பிறகு முதல்வராயிருக்க முடியாது என்றுதான் நினைக்கிறேன். ஆனால் திமுகவிற்குள் கலைஞர் அவரை விட சீனியர்களையெல்லாம் புறந்தள்ளிவிட்டு எழுச்சி பெற்றதுக்கு அவருடைய சினிமா உலகப் புகழே பெருங்காரணம். அந்த வகையிலே கலைஞருடைய சினிமா உலகப் புகழுக்கு சிவாஜி ஒரு முக்கியமான காரணமாய் இருந்தார் என்பதை யாரும் மறுக்கவோ மறக்கவோ முடியாது. "தொன்னைக்கு வெண்ணையா அல்லது வெண்ணைக்கு தொன்னையா...எது ஆதாரம்" என்ற ஒரு சொல்வடையை உபயோகிக்க இதை விட ஒரு பொருத்தமான இடம் கிடையாது. ஆனால் எம்ஜியாரையும் சி(ஜி)வாஜியையும் சந்தர்ப்பம் கிடைக்கும்போது புறந்தள்ள கருணாநிதி ஒரு போதும் தயங்கியதில்லை என்பதும் உண்மைதான்....அது அவரோட பிறவிக்குணம்.

    பதிலளிநீக்கு
  4. சூப் செய்ய கனடாவுக்கு செல்லவேண்டும். அங்கு தான் பட்டர் நட் ஸ்குவாஷ் கிடைக்கும். நமக்கு லென்டில் சூப் போதும்....அது தாங்க சாம்பார் தான்.
    'வாலி' என்பது இயற்பெயரா, புனைபெயரா?

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜெயகல்குமார் சர்..  வாலி என்பது புனைப்பெயர்.  இயற்பெயர் ரங்கராஜன்.  ஊர் ஸ்ரீரங்கம்  சுஜாதா ரங்கராஜன், ரா கி ரங்கராஜன்கள்  இருந்ததாலும், வாலிக்கு இருந்த ஓவியத்திறமையால் வேறு பெயர் வைத்துக் கொல்ள தேடியபோது மாலி என்கிற பெயருக்கு ரைமிங்காய் வாலி என்று பெயர் சூட்டிக் கொண்டதும் நிகழ்ந்தது.  நா பா உடனான  இது சமபந்தமான சுவாரஸ்யமான உரையாடல் ஒன்று முன்பு பகிர்ந்திருந்தேன்.  நினைவில் இருக்கும் என்று நினைக்கிறேன்!

      நீக்கு
    2. அப்படியெலாம் இல்லை JKC சார், நம் ஊரிலேயே கிடைக்கிறதாம். இல்லாவிட்டால் மத்தனில் செய்யலாம் என்று தோன்றுகிறது. பார்வைக்கும், ருசியிலும் மத்தன்(மஞ்சள் பூசணி) போல்தான் இருக்கிறது.

      நீக்கு
    3. யாரோ ஒருவர், "வாலி என்று புனைப்பெயர் வைத்துக் கொள்ள என்ன காரணம்?" என்று கேட்க, "ராமயணத்தில் வாலியோடு யார் நேருக்கு நேர் நின்று போர் செய்தாலும் எதிராளியின் பலத்தில் பாதி வாலிக்கு வந்து விடும், அதைப்போல நான் சந்திப்பவர்களின் அறிவில் பாதி எனக்கு வந்து விட வேண்டும் என்ற ஆசையில் வாலி என்று வைத்துக் கொண்டேன் என்று கூறி சமாளித்தேன்" என்று சொல்லியிருந்தார்.

      நீக்கு
    4. //வாங்க ஜெயகல்குமார் சர்..//
      ஐயா நான் இன்னும் கல்லாகவில்லை. கொஞ்ச நாள் பாக்கி இருக்கிறது.

      நீக்கு
    5. // அதைப்போல நான் சந்திப்பவர்களின் அறிவில் பாதி எனக்கு வந்து விட வேண்டும் என்ற ஆசையில் வாலி என்று வைத்துக் கொண்டேன் என்று கூறி சமாளித்தேன்" //

      தொடர்ச்சி இன்னும் இருக்கிறது.   

      "இத்தனை வருடங்களில் எங்களை எல்லாம் சந்தித்தும், அறிவு அப்படி அதிகமான மாதிரி தெரியவில்லையே" என்று குத்தலாக நா பா சொல்ல "அப்படி இல்லை, அந்த அளவு அறிவாளிகளை நான் இன்னும் சந்திக்கவில்லை" என்று சொல்லி இருக்கிறார் வாலி.

      நீக்கு
    6. // ஐயா நான் இன்னும் கல்லாகவில்லை. கொஞ்ச நாள் பாக்கி இருக்கிறது. //

      அவசர தட்டச்சு மட்டும் அல்ல.  தட்டச்சும்போது இப்போதெல்லாம் பெரும்பாலான நேரங்களில் இரண்டு கீ பட்டன்கள் ஒன்றாக அமுங்கி விடுகின்றன..  மேலும் இடது கை சுண்டு விரல், டைப்பிங்குக்கு வசதியாய் வைத்திருக்கும் பாணியினால் leter 'a' அடிக்கடி அமுக்கப்பட்டு விடுகிறது! 

      சரியாய்ச் செய்ய முயற்சி செய்து கொண்டுதான் இருக்கிறேன். மன்னிக்கவும்.

      நீக்கு
  5. வாலி செல்லம்மாள் பாரதி சந்திப்பை வாலி விவரித்த விதம் மனதை நெகிழ வைத்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்.  எப்பேர்ப்பட்ட மனுஷியை சந்தித்திருக்கிறார்...

      நீக்கு
  6. ஆஹா! பானுக்கா, என்ன பொருத்தாம் ஆஹா என்ன பொருத்தம். இன்று நம் வீட்டிலும் இதே சூப் தான்.

    மஞ்சள் பூஷனியிலும் செய்வதுண்டு.

    butternut squash இங்கு கிடைக்கும் போது அதிலும் செய்வதுண்டு. இன்று இதுதான்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா! நீங்கள் ஒருவர் இருக்கிறீர்களோ, நான் பிழிக்கிறேன். :))

      நீக்கு
    2. *நான் பிழைக்கிறேன்

      நீக்கு
  7. செய்முறை ரொம்ப நல்லா வந்திருக்கு பானுக்கா.

    ஆமாம் க்ரீம் சேர்த்துக் கொள்ளலாம்.

    ஆனா இங்கு நான் க்ரீம் எப்போதாவதுதான் வாங்குவேன் என்பதால் பனீர் இருந்தால் அதை பால் விட்டு மிக்ஸியில் நன்றாக அடித்துச் சேர்த்துவிடுவதுண்டு!!!

    இந்த ஸ்க்வாஷில் செய்யும் போது நல்ல soft creamy ஆக வரும் சூப்.

    இதில் ஜாம் போன்று செய்து வைக்கலாம். pumpkin butter என்று ப்ரெட்டிற்கு அவங்க செய்வது போல் இதிலும் செய்யலாம். நல்லாருக்கும்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. க்ரீம் சேர்த்தால் ஹெவியாகி விடும் என்பதால் சேர்க்கவில்லை. மேப்பில் சிரப் கொஞ்சம் அசட்டு பிசட்டென்று இருக்கும் என்று தோன்றுகிறது.

      நீக்கு
    2. ஓ இதுவரை Maple syrup சுவைத்ததில்லைக்கா.

      கீதா

      நீக்கு
  8. இந்த சிவாஜி பத்திரிகையில்தான் சுஜாதா அவர்களின் முதல் கதை வெளிவந்தது நினைவிருக்கும் உங்களுக்கு, ஸ்ரீராம்

    கீதா

    பதிலளிநீக்கு
  9. வாலியின் நினைவுகள் வெகு சுவாரசியம். எத்தனை எத்தனை நல்ல நட்புகள் அதுவும் பொக்கிஷமானவை இல்லையா....அதுவும் கடைசி பாரதியின் மனைவி!!

    கீதா

    பதிலளிநீக்கு
  10. கடைசி - கவி வரிகளில் சொன்ன விதம் மனதை நெகிழ வைத்துவிட்டது ஸ்ரீராம். அழகான எழுத்து!

    கீதா

    பதிலளிநீக்கு
  11. இன்று வெளிநாட்டுச் சமையலா!..
    சிறப்பு....

    பதிலளிநீக்கு
  12. வாலி அவர்களின் கவிநடை அருமை..
    நெகிழ்ச்சி...

    பதிலளிநீக்கு
  13. soup செய்முறை நன்று. சில இடங்களில் தற்போது கிடைக்கிறது - விரைவில் எல்லா இடங்களுக்கும் வந்து விடும் - பா.வெ. அவர்கள் சொல்வது போல ட்ராகன் ஃப்ரூட் இப்போது எங்கேயும் கிடைக்கிறதே - அதே போல!

    வாலி - நினைவு நாடாக்கள் - சிறப்பு. எத்தனை பெரிய பேறு - பாரதியின் செல்லம்மாவிடம் ஆசி பெறுவது.

    பதிலளிநீக்கு
  14. வாலி, சுஜாதா, அவருடைய அண்ணா இன்னும் சிலர் சேர்ந்து ஸ்ரீரங்கத்தில் ஒரு கையெழுத்துப் பத்திரிகை நடத்தினார்களாம். வாலி சினிமாவில் புகழ் பெற்ற பிறகு அவரை சந்தித்த சுஜாதா அதைப்பற்றி வாலியிடம் கேட்க, அவர் சுஜாதாவை தெரியவில்லை என்று கூறி விட்டாராம். அதை தன்னுடைய 'கனவுத் தொழிற்சாலை' நாவலில் எழுதியிருப்பார் சுஜாதா.

    பதிலளிநீக்கு
  15. வாலி, செல்லம்மா பாரதி சந்திப்பு நெகிழ்ச்சி!

    பதிலளிநீக்கு
  16. ​விவரமான விளக்கங்கள். நன்றி.
    ஒரு சின்ன பரிவுரையை இங்கே சமர்ப்பிக்கிறேன்.
    திங்கள்கிழமையில் பரிமாற வித்தியாசமான உணவுகள் என்ற நிலையில் சாதாரணமாக செய்யக்கூடியவை எல்லாவற்ரையும் பதிவிட்டாயிற்று என்று கருதலாம்.
    ஆனால்
    கோயில் பிரசாதங்கள் ஒவ்வொரு கோயிலுக்கும் தனி பிரசித்தி பெற்றவையாக இருக்கும, சாதா தோசையாய் இருந்தால் கூட ஒரு தனி தன்மை காணும்.. அவற்றை ஒவ்வொருவாரம் பதிவிட்டால் சிறப்பாக அமையும் என்பது எனது கருத்து. உதாரணமாக ஸ்ரீரங்கம் அக்கார அடிசில், ரொட்டி, காஞ்சி குடலை இட்டிலி, அழகர் கோயில் தோசை, திருப்பதி தயிர் சாதம், மற்றும் வடை, என்று பதிவிடலாம். கோயில் பிரசாதம் என்றால் இணையம் உதவி செய்யும். ஆலோசியுங்கள்.
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு எழுதறதுன்னா செஞ்சு பார்க்கணும். கீதா ரங்கன், என் வீடு போன்ற பலரும் இனிப்புகள் செய்துபார்ப்பதைவ்விட்டுவிட்டாச்சு. கல்கண்டு பொங்கல், திருமால் வடை, அழகர்கோயில் தோசை, திருப்பதி லட்டு எனப் பலதும் செய்யவேண்டி இருக்கு.

      தயிர் சாத்த்திற்கு (திருப்பதி) நிறைய வெண்ணெய் சேர்த்துச் செய்யணும் (ஆவின் இல்லை. ஊத்துக்குளி போன்னு வெண்ணெய்). உடலுக்கு கட்டுப்படியாகுமா?

      நீக்கு
    2. கிட்டத்தட்ட எல்லா உணவு வகைகளையும் இங்கு சொல்லியாயிற்று என்று எனக்கும் தோன்றும்.  ஒவ்வொரு வீட்டில் ஒவ்வொரு பாணியில் இருக்கும்.  சில ஐட்டங்களை வெவ்வேறு பாணியில் செய்யலாம்.  கோவில் பிரசாதங்கள் ஜஸ்ட் காபி பேஸ்ட்டாயிருக்கும் என்றால் எனக்கு அதில் சம்மதமில்லை!  யோசிப்போம்.  பார்ப்போம்.

      நீக்கு
  17. ///கணபதிசுந்தரம்;
    அவர்தான் பட்டுக்கோட்டை
    கல்யாணசுந்தரத்தின்
    சொந்த அண்ணன்!///


    பட்டுக்கோட்டை பகுதியில் வசித்தபோது
    திரு கணபதிசுந்தரம் ஐயா அவர்களுடன்
    பழகியிருக்கின்றேன் என்பது
    நான் பெற்ற பேறு...

    பதிலளிநீக்கு
  18. ///பட்டுக்கோட்டை பகுதியில்///

    தாமரங்கோட்டை கிராமம்..

    பதிலளிநீக்கு
  19. விழுந்து சேவிடா',
    ஞானம் வரும்!"
    என்றார்
    திருலோகம்.


    நமக்கு இப்படி
    வாய்க்கவில்லையே..

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!