29.7.26

ஒருவன் செய்யும் தவறுகளில் எந்தத் தவறுகள் மன்னிக்க இயலாதவை? + சரோஜா தேவி பகுதி 09

 

கேள்வி பதில்கள் : 

நெல்லைத்தமிழன்: 

வசதி வாய்ப்பு மிக அதிகமாக அதிகமாக ஒருவன் முதலில் செய்யும் தவறு என்னவாக இருக்கும்? அதாவது செல்வம் வரும்போது ஒருவனிடம் வரும் முதல் தவறு எது?

# தான் மற்றவரை விட சற்றே உயர்வு எனும் அகந்தை வரும்.  இது தவறு என்று சொல்வதற்கில்லை.  ஆனால் இந்த அகந்தை புலனடக்கத்தைச் சிதைத்தால் விரும்பிய எதையும் பெற தவறு செய்யலாம் என்ற தைரியம் வரும். அழிந்து போன பெருஞ்செல்வர்கள் சிலரை எண்ணிப் பாருங்கள்.

* வரும் முதல் தவறு அதிகமாக செலவு செய்வதுதான்!

ஒருவன் செய்யும் தவறுகளில் எந்தத் தவறுகள் மன்னிக்க இயலாதவை? எவற்றை பெரிய தவறுகளாகக் கருத முடியாது?

# பிறரை நோக அடிக்கும் தவறுகள் மன்னிக்க இயலாதவை. யாருக்கும் தீங்கு செய்யாத தவறுகள் அதாவது நமக்கு மட்டுமே பாதிப்பு தருபவை பிறர் மன்னிக்கத் தேவையில்லாதவை.

* "தவறு என்பது தவறிச் செய்வது.  தப்பு என்பது தெரிந்து செய்வது.  தவறு செய்தவன் திருந்தப் பார்க்கணும்; தப்பு செய்தவன் வருந்தி ஆகணும்"  மன்னிக்க முடியாத தவறு என்னைப்பொறுத்த வரை நம்பிக்கை துரோகம்.

ஒரு பிரபலத்தைப் பார்ப்பதற்கு ஏன் முண்டியடிக்கிறோம்? பார்ப்பதனால் நமக்கு என்ன கிடைத்துவிடுகிறது? (தொட்டுவிடும் தூரத்தில் அவரைப் பார்த்தேன், இவர் நாம நினைக்கறமாதிரி அழகு கிடையாது, கறுப்புதான்,  பக்கத்துல பார்த்தேன், என்னா வசீகரப் புன்னகை?  என்றெல்லாம் பெருமை பேசிக்கொள்ளவா?)

# ஒருவரைப் பற்றிய அற்ப விஷயங்கள் பெரிய அளவில் பேசப்படும் போது அவரைப் பார்க்க வேண்டும் என்கிற ஆசை நமக்குள் எழுந்து நமக்கு தெரியாமலே அடங்கி உட்கார்ந்திருக்கிறது. அப்படி பார்க்கும் சந்தர்ப்பம் வரும்போது அது பீறிட்டு எழுந்து வந்து நம்மை செயல்பட வைக்கிறது. அது தருகிற அபரிமிதமான அற்ப ஆயுளுடன் கூடிய சந்தோஷம் நம்மை  அது பற்றிப் பெருமை அடித்துக் கொள்ள வைக்கிறது.

*  நல்லவேளையாக எனக்கு இதுவரை இப்படியான ஆசை வந்ததில்லை.

இரவு உணவாக ஓரிரண்டு சப்பாத்தியோ இல்லை ஒரு தோசையோ போதும் என்றெல்லாம் உணவுக்கு குறைந்த அளவு கொடுக்க ஆரம்பித்தது,  நிறைய சப்பாத்தி பண்ணி, தோசை வார்த்து நொந்த பெண் மருத்துவராக இருக்குமோ? நமக்கு எவ்வளவு தேவை என்று நம் வயிறு சொல்லாதா?

# வயிறு சொல்லும்; ஆனால் நாக்கு கேட்காது.

*  பிடித்த உணவு சாப்பிடும் முன்பு இரண்டு மூன்று முள்ளங்கி பத்தை பச்சையாக சாப்பிட்டு விட்டு பத்து நிமிடங்கள் கழித்து உணவை அணுகவும்!

பானுமதி வெங்கடேஸ்வரன் :

சமையலில் புதிதாக ஏதாவது முயற்சிக்க வேண்டுமென்றால் உங்கள் தேர்வு காணொளிகளா? புத்தகங்களா(டிஜிடல் புத்தகங்களும் இதில் அடங்கும்)?

# இதற்கு நம் நண்பர் நெ.த அல்லது ஸ்ரீராம்தான் பதிலளிக்க சரியானவர்.

என்னிடம் சமையல் புத்தகம் எதுவும் கிடையாது. அண்மையில் வெண்டைக்காய் கறி எப்படி செய்ய வேண்டும் என்று youtube ஐ பார்த்து செய்தேன். அவ்வளவுதான் நம்ம சாமர்த்தியம்.

& இரண்டுமே உண்டு. இரண்டுக்கும் சம பங்கு! 

*  பெரும்பாலும் சொந்தக் கற்பனைதான்.  தேடிச்சென்று பார்ப்பதில்லை என்றாலும் தானாக வரும்  சமையல் குறிப்புகளை பார்ப்பதுண்டு.

சிறு குழந்தைகள் வயதுக்கு மீறி பேசினால் அதிகப்பிரசங்கித்தனம் என்கிறோம். வயதானவர்கள் தங்களுக்கு வயதாவதை ஒப்புக்கொள்ள மறப்பது என்ன தனம்?

# அது முட்டாள்தனமா பரோபகார சிந்தையா என்பது அவர் செய்ய அல்லது செய்யாமலிருக்கும் காரியம் என்ன என்பதைப் பொறுத்திருக்கும்.

*வயசாவதை ஒப்புக்கொள்ளாவிட்டால் கூட பரவாயில்லை.  சிறுகுழந்தை போல பேசாமல் இருந்தால் சரிதான்!

= = = = = = = 

படமும் பதமும் : 

நெல்லைத்தமிழன் :


பஹ்ரைனில் முத்து ரவுண்டபவுட் (பேர்ல் ரவுண்டபவுட்) என்று ஒன்று இருந்தது. மிகவும் புகழ் பெற்ற மிக அருமையான இடம். பஹ்ரைனில் இருக்கும் செண்ட்ரல் மார்க்கெட் என்ற இடத்திற்குப் பக்கத்தில் இருந்தது. செண்ட்ரல் மார்க்கெட் நம்ம ஊர் கோயம்பேடு மார்க்கெட் போன்று. எல்லா நாட்களிலும் இந்திய மற்றும் எல்லா தேச காய்கறிகள் பழங்கள் குறைந்த விலையில் கிடைக்கும்.  பெரும்பாலும் நான் வெள்ளிக்கிழமை காலையில் செண்ட்ரல் மார்க்கெட் செல்வேன் (பசங்களையும் வற்புறுத்தி எழ வைத்து அழைத்துச்செல்வேன். அவங்க கடுப்பாவாங்க).  காய்கறிகள் வந்துகொண்டிருக்கும்போதே புத்தம் புதிதாக நான் வாங்குவேன். அதிலும் மிகவும் சீக்கிரம் சென்றால்தான் சௌசௌ கிடைக்கும். அது பெரும்பாலும் இந்தியாவிலிருந்து வராது. பிலிப்பைன்ஸில் இருந்து வரும். அந்த மக்களுக்குப் பிடிக்குமாம்.  அது சரி...பேர்ல் ரவுண்டபவுட் படத்தைப் போட்டுவிட்டு மார்க்கெட் பற்றிப் பேசுகிறேனே என்று நினைக்கிறீர்களா? இந்த ரவுண்டபவுட் இப்போது இல்லை. அழிக்கப்பட்டுவிட்டது. அதைப்பற்றி எப்போது எழுதுவேன், அதற்கும் என் கம்பெனிக்கும் ஒரு வகையில் சம்பந்தம் ஏற்பட்டு எப்படி கம்பெனி பாதிக்கப்பட்டது என்றெல்லாம் எழுதமுடியுமா?


துறைத் தலைவன் என்பதால், வருடத்திற்கு ஒரு முறை பஹ்ரைனில் என்னுடைய டிபார்ட்மெண்டில் வேலை பார்த்த அனைவருக்கும் ஒரு நாளில் ஒயிட் ஃபாரஸ்ட் கேக் ஆர்டர் செய்வேன்.  இதைத் தயாரிப்பது எங்கள் சூப்பர்மார்க்கெட்டின் பேக்கரி டிவிஷன்.


ஸ்ரீராம் :

மதுரைக்கு சற்றே வெளியே கோவில்.  2014 ல் எடுக்கப்பட்ட ஃபோட்டோ.  அப்போதே செல்ஃபி பாய்ண்ட் வைக்கப்பட்டிருக்கிறது இல்லை?!!


சற்றே மேடேறி அருகே சென்றால் அந்த செல்ஃபி பாயிண்ட் இதுதான்....

= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =

KGG பக்கம் : 

சரோஜாதேவி தொடர்கதை : 

முந்தைய பகுதி சுட்டி : பகுதி 08 : நானே நாநா, யாரோதானா ! 

இனி 

பகுதி 09 : மாயா மச்சீந்திரா .. ! 

நாநா: " என் அம்மா அப்பா இருவரும் டெல்லியில் இருக்காங்க. இருவரும் அங்கே வேலையில் இருக்கிறார்கள். மத்ய சர்க்கார் வேலை. என் அண்ணன் குடும்பம் ஆந்திராவில் இருக்கிறார்கள். என் அப்பாவின் தாத்தா ஆங்கிலேயர் காலத்தில் சட்டப் படிப்பு படித்து, நீதித்துறையில் பெரிய பதவி வகித்தவர் . அந்தக் காலத்திலேயே அவர் இந்த மைலாப்பூரில் வாங்கிப் போட்ட சொத்துகள் எல்லாவற்றையும் நான் பார்த்துக் கொள்கிறேன். தாத்தா ஆந்திராவில் வாங்கிப் போட்ட சொத்துகள் எல்லாவற்றையும் அண்ணன் பார்த்துக் கொள்கிறார். அவர் பிரைவேட் கம்பெனியில் தலைமைப் பொறுப்பில் இருக்கிறார். அப்பாவின் தாத்தாவின் சொத்துக்கள் எல்லாம், அவரின் ஒரே பேரனானதால் இவருக்கு வந்துவிட்டது. அப்பா அம்மா ஆசைப்பட்டபடி நான் சென்னையில் கம்ப்யூட்டர் இஞ்சினீரிங் படித்து, சொந்த பிஸினஸ் செய்ய ஆரம்பித்துள்ளேன். 

என் பிஸினஸ் நிறுவனத்தின் பெயர் 🍌Banana enterprises. இந்த நிறுவனத்தில் பல பிரிவுகள் உள்ளன. 

பிரைவேட் டிடெக்டிவ் ஆக நீ பதிவு செய்தபோது அதில் C A படிப்பு முடித்ததாக நீ எழுதி இருந்தது சரியான தகவல்தானே? " 

" ஆமாம்" என்றான் பாபா. 

" எனக்கு இப்போ வேண்டியது ஒரு ஆடிட்டர். எனக்குக் கிடைக்கும் சில கணக்கு வழக்குகளை ஆராய்ந்து உண்மை நிலையை அளிக்கக்கூடிய ஒரு நம்பத் தகுந்த ஆள். " 

" ஓ கே. என்னால் முடியும்" 

" அது போதும். தேவை என்றால் நீயும் அருவமாக மாறி சில தகவல்களை கண்காணித்து எனக்கு விவரங்கள் கொடுக்க வேண்டும். " 

" செய்கிறேன். சட்டத்திற்குப் புறம்பான விஷயங்கள் எதுவும் கிடையாதுதானே" 

" இதற்கு ஒரு வார்த்தையில் பதில் சொல்ல வேண்டும் என்றால் ' இல்லை' என்பேன்; விளக்கமாக சொல்ல வேண்டும் என்றால் ' ends justify the means' என்று சொல்வேன். போகப்போக நீயே புரிந்துகொள்வாய் " 

" சரி. புரிந்து கொள்கிறேன். சந்தேகம் வந்தால் கேட்கிறேன். ஆனந்துக்கு வீணா எனக்கு விமலா போல உனக்கு யாராவது இருக்கிறார்களா?" 

" இன்றளவில் அப்படி யாரும் என் மனதில் இல்லை. எதிர்காலத்தில் யாராவது வரலாம். நான் கல்யாணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கை தொடங்கினால்தான் ரிடையர் ஆன பின்பு என்னோடு வந்து இருப்போம் என்று அம்மா அப்பா சொல்கிறார்கள். அடிக்கடி கல்யாண புரோக்கர் ஒருவரை வேறு என்னைப் பார்க்கச் சொல்லி அனுப்புகிறார்கள். அவர் கொண்டு வந்த படங்களும் விவரங்களும் பாவனாவிடம் ஒரு தனி ஃபைலில் உள்ளன. ஆனால் அவர்களில் யாரும் எனக்கு ஏற்றவர்களாகத் தோன்றவில்லை.‌" 

" சரி. நானும் பார்த்து காலாகாலத்தில் உனக்கு ஒரு கால்கட்டு போட முயற்சி செய்கிறேன் " என்றான் பாபா.‌

*****

" ஆஸ்பத்திரிக்குப் போகிறேன் என்று சொல்லிவிட்டு வந்திருப்பதால் இரண்டு மூன்று நாட்களுக்கு இங்கேயே என்னோடு தங்கு. ஆனந்தினுடைய அப்பா அம்மா இங்கே வரும்போது அவர்களுடன் சேர்ந்து நாம் இருவரும் உன் வீட்டுக்கு போவோம். ஆனந்த் அப்பா அம்மா இருவரும் ஜயராமனைப் பார்த்து பேசட்டும்.‌ பிறகு வீணாவும் ஆனந்தும் வீடியோ காலில் பேசட்டும். முதலில் அவர்களின் டும் டும் டும் முடியட்டும்.  அப்புறம் பாபா விமலா டும் டும் டும் "

" நடக்கட்டும் நடக்கட்டும் " என்றது பாவனா. 

****** 

அன்று சாயந்திரம் நாநா பாபாவிடம், " வா என்னோடு ஒரு வாக்கிங் போய்ட்டு வரலாம் " என்றான். 

இருவரும் கிளம்பினார்கள். 

இருவரும் பக்கத்தில் இருந்த பார்க் ஒன்றில் நடந்தபடியே பல விஷயங்கள் பற்றி பேசினார்கள்.‌

திரும்பி வரும்போது ஒரு டாக்டர் வீட்டு வாசலில் நிறைய பேர் காத்திருந்தனர். 
' டாக்டர் அ. கபாலி ' என்று வாசலில் பெயர் போட்டிருந்தது.‌

பக்கத்தில் இருந்த டீக்கடை வாசலில் கொஞ்சம் பேர் இருந்தனர். 


நாநா : " பாபா நீ  கொஞ்ச நேரம் இங்கே நில்லு. நான் அரூபமாக மாறி ஐந்தே நிமிடங்களில் திரும்பி வருகிறேன்"  என்று  சொல்லி திடீரென்று மாயமாக மறைந்தான். 

(தொடரும்) 

112 கருத்துகள்:

  1. வயதானவர்கள் தங்களுக்கு வயதாவதை ஒப்புக்கொள்ளாத்து...... இது தவறில்லை. என்னைக் கேட்டால் அதுதான் சரியான கண்ணோட்டமாக இருக்கணும். அப்போதான் ஓரளவு மனதை இளமையாக வைத்துக்கொள்ள முடியும்.

    பத்து தடவைகள் எனக்கு வயசாயிடுச்சு, அவ்வளவு தூரம் நடக்கணுமோ ஐயோ.. என்னால் முடியாது, ரிட்டயர் ஆயாச்சு வயசாச்சு மாடில்லாம் ஏற முடியாது என்றெல்லாம் சொல்லிக்கொண்டிருந்தால் நமக்கு அளவுக்கு அதிகமாக வயசாகிவிடும். முடியாது என்று சொல்வதை மனம் நம்பி நம்மை முடக்கிப்போட்டுவிடும்.

    பசங்கள்ட, என்ன இன்னும் சின்னப் பையனா.. கழுதை வயசாகுது எனச் சொல்வதே தவறு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நெல்லை நூறு சதவிகிதம் ஒத்துக்கொள்கிறேன்.

      நீக்கு
    2. going grey gracefully என்பதை கேள்விபட்டதில்லையா? அந்தந்த வயதிற்கு ஏற்றார்போல நடந்து கொள்வதுதான் அழகு!. வயதாவதை ஒப்பு கொள்வது என்பது வயதாகி விட்டது என்று புலம்புவது ஆகாது, அதற்கு ஒரு தைரியம் வேண்டும். வயதானதை ஒப்பு கொள்ளாதவர்களால் அவதிப்பட்டவர்கள் ஏராளம்!
      நரைத்த முடியோடு கட்சியளிக்கும் ரேவதியும், சிம்ரனும் கடைசி வரை மேகப்போடு காட்சியளித்த, அளிக்கும் நடிகைகளை விட அழகாக தோன்றுகிறார்கள்.

      நீக்கு
    3. வயதுக்கு ஏற்றார்ப்போல் நடந்து கொள்வதற்கும், எனக்கு வயதாகிவிட்டது என்று புலம்புவதற்கும் என்ன சம்பந்தம்? நரைத்த முடியுடன் தோன்றும் நடிகைகள் அழகு, கனவுக் கன்னிகள் என வரு ஆண்தானே சொல்லணும்? வயதானதை ஒப்புக்கொள்ளாத்தால் எப்படி அவதிப்படுவாங்க? வயதாகிவிட்டது எனக்கு வயசாச்சு என்று சொல்லிக்கொண்டிருப்பவர்கள் எப்படி மகிழ்ச்சியா இருப்பாங்க?

      நீக்கு

    4. ​பா வே அவர்களின் (அவருக்கு வயசாயிடுச்செல்லே) கருத்தை ஆமோதிக்கிறேன்.அந்தந்த வயசுக்கு ஏற்ப செய்ய முடிந்த காரியங்களை செய்யலாம். எனக்கு ஒன்னும் வயசாகல்லை, நான் மவுண்ட் ரோடில் நடப்பேன் என்றால் 'யோவ் பெருசு வீட்லே சொல்லிக்கினு வந்தியா' போன்ற வசவுகளை நேரிட வேண்டும்.

      Jayakumar

      நீக்கு
    5. நெல்லை நான் சொல்வதை திரித்து குழப்பாதீர்கள். நான் சொன்னது வயதானவர்கள் தனக்கு வயதாகி விட்டது என்பதை உணராமல், பொறுப்பில்லாமல் நடந்து கொள்வதால் அவரைச் சுற்றியுள்ளவர்கள் படும் பாடு அதிகம். வயதிற்கேற்றார் போல் நடந்து கொள்வதை வயசாய்டுச்சுனு புலம்புவது என்று நீங்கள்தான் சொன்னீர்கள். நான் சொல்லவில்லை.

      நீக்கு
    6. //பா வே அவர்களின் (அவருக்கு வயசாயிடுச்செல்லே)// இதை நான் மறக்கவுமில்லை, மறைக்கவுமில்லை.

      நீக்கு
    7. ஹூம், இந்தத் தலைப்புக்கு ஏற்றவர் எங்க அப்பா தான். எனக்குப் பத்து வயசு ஆகும்போதே எனக்கு வயசாயிடுத்துனு சொல்லிக் கடுமையான சட்டதிட்டங்களைப் பிறப்பித்தார். அதை மீறவே முடியலை கல்யாணம் ஆகும்வரையிலும். அக்கம்பக்கத்தாரையும் கூடச் சேர்த்துண்டு அவங்க கிட்டே நீங்க சொல்லுங்க என்பார். 13 வயசில் படிச்சது போதும் வயசாயிடுத்து. அடுத்து கல்யாணம் தான்னு சொல்லி மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்துத் தாத்தாவிடம்/பெரியப்பாவிடம் போய்ச் சொல்ல, பெரியப்பாவுக்கும் சரி, தாத்தாவுக்கும் சரி ஆளுக்கு ஒரு பெண் 20/22 வயசில் கல்யாணத்துக்கு இருந்ததால் நான் தப்பிச்சேன். அதுவும் தாத்தா ஜோசியம் நன்கு அறிந்தவர் என்பதால் எனக்கு இப்போத் திருமணம் இல்லை என்பதையும் அப்பாவிடம் உறுதியாகத் தெரிவித்துப் படிக்க வைக்கச் சொல்லி வற்புறுத்தினார். அந்த வருஷம் அடுத்த வகுப்புப் போகறச்சே ஒரு மாமா தான் பள்ளியில் என் பெயரை நீக்காமல் இருக்காங்களானு பார்த்துட்டு மத்த ஏற்பாடுகளையும் பண்ணிக் கொடுத்தார். வேறே என்ன, புத்தகம், நோட்டுப் புத்தகங்கள் இத்யாதி, இத்யாதி.

      நீக்கு
    8. அஞ்சு வயசுக் குழந்தையை கூட 'உனக்கு அஞ்சு வயசாச்சு..  இனிமே இதெல்லாம் செய்யக்கூடாது' ன்னு சொல்றோம்...  அது அப்படியே கடைசிவரை பழகிடுது!

      நீக்கு
  2. அருவமாகி என்ன செய்து கால்கட்டு போட உதவ முடியும்? பிள்ளைப் பூச்சியு மடியில் கட்டிக்கொண்டது போல ஆகிவிடாதா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரொம்ப நாளா/வருஷமா ஒரு சந்தேகம். இந்தப்பிள்ளைப் பூச்சி என்பது தேள்குஞ்சு தானா?

      நீக்கு
    2. இல்லை.  இது ரெண்டு பாகமா இருக்கும்.  சரிரீ பாதியாய் பிரிஞ்சிருக்கும்.  கொடுக்கெல்லாம் இருக்காது.

      நீக்கு
    3. ஜே டி எஸ் படித்த காலத்தில் ஃபௌண்டரி & மோல்டிங் வகுப்பில் மண் மீது ஒருநாள் ஏதோ பூச்சியைப் பார்த்து ஒரு மாணவன் " ஜலமண்டலி... ஜலமண்டலி.." என்று கத்த ஆசிரியர் உட்பட மாணவர்கள் எல்லோரும் பயந்து ஓடினோம். அது கடித்தால் உடனடி மரணம் என்று சொல்வார்கள்.

      நீக்கு
    4. //இல்லை. இது ரெண்டு பாகமா இருக்கும். சரிரீ பாதியாய் பிரிஞ்சிருக்கும். கொடுக்கெல்லாம் இருக்காது.// Oho!

      நீக்கு
  3. பொதுவா கிளினிக் பக்கத்துல பார்மசி இருந்து கல்லா கட்டுவாங்க. இங்க என்னடான்னா டீக்கடை. ஆட்டமேட்டிக்கா டீ போட்டுச் சாப்பிட்டு அனைவரையும் விரட்டப் போகிறாரா?

    பதிலளிநீக்கு
  4. முதலில் காணொளிகள்தாம். (செய்முறை படங்களுடன் கூடிய குறிப்பு ஓகே). அப்புறம் எக்ஸ்பர்ட் ஆன பிறகு சமையல் குறிப்பு....

    தற்போதைய தலைமுறை யூடியூபைப் பார்த்துத்தான் செய்யறாங்க. அம்மாட்ட கத்துக்கிட்ட காலம் போய்விட்டது என்பது என் எண்ணம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கருத்துரைக்கு நன்றி

      நீக்கு
    2. எனக்கு காணொளிகளைப் பார்ப்பது நேரம் அதிகம் எடுப்பதாக தோன்றும். யூ டியூபரின் வளவளாக்களை பொறுத்துக் கொள்ள வேண்டும். சமையல் குறிப்பு என்றால் ஸ்ட்டென்று ரெஃபெர் செய்து விட்டு மூடி விடலாம். மேலும் யூ டியூபில் ஒன்று கேட்டால் பத்து வரும், எதை பின்பற்றுவது என்று குழப்பம் வரும்.

      நீக்கு
    3. நெல்லை சொல்லுவது சரியே, இப்போதைய இளம்பெண்கள், இளைஞர்கள் யூ ட்யூபில் இருந்தே எல்லாமும் கற்கின்றனர். வீட்டில் அம்மாவோ/மாமியாரோ இருந்தால் கூடக் கேட்டுப்பதில்லை. ஆனால் யூ ட்யூபில் சாம்பாருக்குத் தேவையே இல்லாமல் ஜீரகப்பொடியும் அல்லது ஜீரகம் தாளித்தலும் சோம்புப் பொடியும் சேர்க்கச் சொல்றாங்க. ஏனெனில் இவங்க பார்க்கும் யூ ட்யூப் பாரம்பரியச் சமையல் சமைப்பவர்களால் சொல்லப் படுவது இல்லை. அதுக்கு ஸ்ரீரங்கம் வந்தக்குழம்பு, மாயவரம் பச்சடி, கும்பகோணம் தவலை அடை (பெரும்பாலும் இதைத் தவளை அடை என்றே சொல்லுவார்கள்/எழுதுவார்கள்.க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்) என்றெல்லாம் சொல்லுபவர்களிடம் போனால் நம்ம காலத்துச் சமையலாவது கிடைக்கும். எங்கே!

      நீக்கு
    4. எங்க பொண்ணு மட்டும் எத்தனை வருஷமானாலும் என்னைத் தவிர யாரையும் கேட்க மாட்டாள். இப்போதைய அவள் புலம்பல் நீயும் இல்லைனா எனக்கு யார் இருக்காங்க இதை எல்லாம் சொல்லிக் கொடுக்க என்பதே! :((((

      நீக்கு
    5. கீசா மேடம், அவசர அவசரமாக ஏதேதோ உணவுக் காணொளிகளைப் பார்த்திருப்பார்கள். தவலை அடை ரெசிப்பி பார்க்க யூடியூபர் பெயரைப் பார்த்து காணொளி பார்க்கணும். ரஹீமா கான் யூடியூப் பார்த்தால் தவளை அடைதான் ரெசிப்பில இருக்கும். ஹா ஹா.

      நீக்கு
    6. //நீயும் இல்லைனா எனக்கு யார் இருக்காங்க இதை எல்லாம் சொல்லிக் கொடுக்க என்பதே! // அதான் ஒண்ணுக்கு இரண்டு சமையல் புத்தகங்கள் போட்டிருக்கீங்களே. அதைப் பார்த்தால் போதாதா (எனக்கு இப்போ எழுந்த சந்தேகம்...உங்கள் மகளுக்கு தமிழ் எழுதப் படிக்கத் தெரியுமா? நீங்க ஜாம் நகர், ராஜஸ்தான், பாகிஸ்தான்னு ஊர்கள் பேர்லாம் சொல்றீங்களே தவிர, அம்பத்தூருக்கு வந்ததே கிட்டத்தட்ட ரிடையர் ஆகும் வயதிலேதான்னு நினைக்கிறேன். ஹாஹாஹா)

      நீக்கு
    7. சரியான கருத்து நெல்லை. எங்க பொண்ணு பள்ளிப் படிப்பை ஆரம்பிச்சதே நசிராபாத், ராஜஸ்தானில் தான். கேஜி வகுப்பில் இருந்து இரண்டாவது வகுப்பு வரை அங்கே கேந்திரிய வித்யாலயா. பின்னர் 2,3 சிகந்திரா பாத் கேந்திரிய வித்யாலயா.. 3 இல் இருந்து 10 ஆம் வகுப்பு வரை பட்டாபிராம் மிலிடரி சைடிங்கில் கேந்திரிய வித்யாலயா. பத்துக்குப் பின்னர் +1, +2 இரண்டும் மீண்டும் நசிராபாத் கேந்திரிய வித்யாலயா. கல்லூரி சென்னை க்வீன் மேரீஸில் சம்ஸ்க்ருதம்.

      பையர் முதலில் கேஜி சிகந்திராபாதில் படிச்சார். பின்னர் சென்னை வந்துட்டோம். அங்கே ஒரு ஆர்மி அதிகாரியின் மனைவி நடத்திய ஒரு பள்ளியில் ப்ரி கேஜியில் இருந்து ஒண்ணாம் வகுப்பு வரை படிச்சார். அதை முடிச்சதும் இரண்டாம் வகுப்பில் சேர்க்கப் பொண்ணு படிச்ச பட்டாபிராம் பள்ளியில் நுழைவுத் தேர்வு எழுதிப் பாஸானார். இரண்டாம் வகுப்புப் போகணும். ஆனால் ப்ரின்சிபல் பிறப்புச் சான்றிதழைப் பார்த்துட்டு வயசு கம்மினு சொல்லிட்டார். ஆகவே மறுபடி ஒண்ணாம் வகுப்பில் சேர்த்துக்கறோம். இல்லைனா வேறே பள்ளி பார்த்துக்கோங்கனு சொல்ல கே.வி. ஸ்கூலை விட முடியுமா என்பதால் மறுபடி ஒண்ணாவதே சேர்த்தோம். க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர். பையருக்கு இன்னிக்கு வரை அதில் குறை உண்டு. பெண்ணுக்கும் ஆரம்பத்திலேயே அப்படித் தான் சொல்லி இருந்தாங்க. அதோட அவளுக்கு வயசும் சரியாக செப்டெம்பரில் வந்திருந்தது என்பதால் ஓகே ஆனது.

      நீக்கு
    8. இதன் மூலம் சொல்ல வருவது என்னவெனில் பையர், பெண் இருவருக்குமே தமிழ் பேசத்தான் தெரியும். ஆனால் தமிழ் நாவல்கள், தேவன் எழுத்துக்கள், கல்கி எழுத்துக்கள் எல்லாம் நான் அறிமுகம் செய்து வைச்சிருக்கேன். என்னோட சமையல் புத்தகங்களை என் மருமகள் உள்பட யாருமே எங்க வீட்டில் பார்க்கலை. நாத்தனார் பெண்கள், மைத்துனன் பையர் எல்லோருமே தமிழ் பேச மட்டுமே தெரிந்தவர்கள். மற்றபடி யாருக்கும் நான் எழுதினேன்/எழுதுகிறேன். இந்த நண்பர்கள் எல்லாம் எப்படித் தெரியும் என்பதெல்லாம் என் அண்ணா, தம்பிக்குத் தான் தெரியுன். மத்தவங்க நான் ஏதோ பொழுது போகாமல் சாட்டிங்கில் நட்புப் பாராட்டி வரேன்னு நினைச்சுப்பாங்க. நான் எழுதி இருப்பது எதையும் எங்க வீட்டில் யாருமே இன்னி வரை படிச்சது கிடையாது. என் சித்தி ஒருத்தர் தவிர்த்து. அவருக்கும் தற்செயலாகத் தெரிந்தது.

      நீக்கு
    9. //தவளை அடை..!!!!!// எழுதறச்சே கூடத் தவளை அடைனே எழுதுவாங்க ஸ்ரீராம். யூ ட்யூபெல்லாம் மாமா தான் பார்த்துட்டுப் புதுசா இருந்தா எனக்குச் சொல்லுவார். பிள்ளை, மருமகள் தொலைக்காட்சியில் யூ ட்யூப் தான் செட்டிங்க்சில் வைச்சிருக்காங்க. அவங்க பார்ப்பாங்க. நான் அந்தத் திசையில் கூடத் தலை வைச்சுப் படுத்ததில்லை. கு.கு. எனிட் பிளைடனோட ஃபேமஸ் ஃபைவ் சீக்ரெட் செவென்னு பார்க்கும். நானெல்லாம் இந்த வயசில் ஆங்கிலப் புத்தகமே படிச்சதில்லை. இது வெளுத்துக்கட்டும்.

      நீக்கு
    10. //ரஹீமா கான் யூடியூப் பார்த்தால் தவளை அடைதான் ரெசிப்பில இருக்கும். ஹா ஹா.//அப்படி ஒருத்தர் இருக்காங்கனே தெரியாது. நான் எப்போவானும் பார்ப்பது வெங்கடேஷ் பட்டும், ராகேஷ் ரகுநாதனின் அம்மாவும் நானும்.

      நீக்கு
  5. என் அப்பா எனக்குச் சொல்லிக் கொடுத்தது, செய்நன்றி மறவாமை. அதை எப்போதும் பண்ணிடக்கூடாது என்பார். நான் அனுபவத்தில் கற்றுக்கொண்டது, எளிய ஏதிலிகளை, நம்மை இவன் என்ன செய்யமுடியும் என்ற எண்ணத்தில் துன்புறுத்துவது, கடினமாக நடந்துகொள்வது.

    சின்ன வயதிலிருந்தே (இப்போதும் 55 தாண்டலை.. பா வெ..மேடம்.. நோட் தி பாயின்ட்) எல்லோரையும் நீங்க என்று அழைக்கும் வழக்கம் வந்துவிட்டது. பிறரும் நீ எனச் சொல்வது பிடிக்காது. ஒரே விதிவிலக்கு என் ஒரே நண்பன். பசங்கள்டயும் பெரும்பாலும் நீங்கதான். என் பையன் என்னப்பா இது என்று சமீபத்தில் சொன்னான். வேற வழியில்லாமல் மாப்பிள்ளையை ஒருமையில் அழைக்கிறேன். அப்படித்தான் என்பது கன்டிஷன்.....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்ல கொள்கை நெல்லை.  ஆனால் பிள்ளையை பன்மையில் அழைத்து மாப்பிள்ளையை ஒருமையில் அழைப்பது வியப்பு!  

      நீக்கு
    2. ஆம். வியப்புதான்!!

      நீக்கு
    3. ஒவ்வொரு தடவையும் ஒருமையில் அழைக்கும்போது தவறு என மனம் சொல்லுது, நான் இயல்பா இல்லைனு தோணுது. (என் மாமனார், எனக்கு ப்ரொஃபசரா இருந்தவர் என்னை எப்போதும் நீங்க, என்ன சொல்றீங்க சார் என்றே அழைப்பார்.) மனைவிக்கு இயல்பா இருக்கு, எனக்கு இயல்பா இல்லை.

      நீக்கு
    4. //இப்போதும் 55 தாண்டலை.. // அதாவது மனதளவில், அப்படித்தானே?

      நீக்கு
    5. என் கணவர் மாப்பிள்ளையை ஒருமையில்தான் அழைப்பார். என் அக்கா அவள் மாப்பிள்ளைகளை ஒருமையில்தான் அழைப்பாள். நான் அப்படி செய்வதில்லை.

      நீக்கு
    6. என் தாத்தா அம்மாவின் அப்பா என் அப்பாவை ஒருமையில் அழைப்பதோடு சில சமயங்களில் "டா"வும் வரும், அதே போல் பெரிய மாமாவும் அப்பாவும் ஒருவரை ஒருவர் அடா, புடா எனப் பேசிப்பாங்க. ஏனெனில் சின்ன வயசிலிருந்து ஒரே தெருவில் குடித்தனம். நாங்க மூணு பேரும் அப்பா/அம்மாவை ஜாலியா இருக்கும் நேரம் பார்த்து (ரொம்பவே அபூர்வம்) நீங்க இரண்டு பேரும் லவ் மேரேஜ் எனக் கேலி செய்வோம்.

      ந்ம்ம ரங்க்ஸை என் அப்பா, பெரியப்பா, அண்ணா முதற்கொண்டு எல்லா உறவினர்களுமே மரியாதையாகத் தான் அழைப்பார்கள். சின்னவங்க எல்லோருமே பொதுவில் "அத்திம்பேர்" என்பார்கள். ஆகவே எங்க குடும்பத்தில் "அத்திம்பேர்" என்றால் பெயரெல்லாம் வேண்டாம். இவர் தான்.

      நீக்கு
    7. என் தாத்தா என் அப்பாவை ஒருமையில்தான் அழைப்பார்.  என் அப்பாவும் என் அக்கா கணவரை ஒருமையில்தான் அழைப்பார்.  எனக்கு இந்தப் பிரச்னை இல்லை.  எனக்கு மகன்கள்தான்!!

      நீக்கு
    8. உங்க வீட்டில் உறவுமுறைத் திருமணம் அதிகம் இல்லையோ? என் மாமனார் வீடு மாதிரி. இங்கேயும் அப்படித் தான். உறவு முறைத் திருமணம் அதிகம். முதல் முதல் அந்நிய சக்தியாக உள்ளே நுழைஞ்சது நான் தான். பின்னரும் யாரும் இல்லை. பெண்களும் கூடச் சுத்தி வளைச்சு உறவு முறையில் கொடுப்பாங்க. அந்த வகையில் என் நாத்தனார்களும் உறவு முறை தான்.

      நீக்கு
  6. அனைவருக்கும் இனிய காலை வணக்கம். நல்லதே நடக்கட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க வெங்கட்.. வணக்கம். பிரார்த்திப்போம்.

      நீக்கு
    2. அக்பர் சாஸ்திரி என்னும் கதையில் தி.ஜானகிராமன், "வயது, அது தந்த தைரியம்.." என்று அந்த கதையின் கதாநாயகர் பேசுவதை குறிப்பிட்டிருப்பார். அதைப் போல சிலர் தைரியமாக உரிமை எடுத்துக் கொள்வார்கள். எனக்குத் தெரிந்த ஒரு மாமி எல்லோரையும் சகட்டுமெனிக்கு வாடா, போடா, வாடி போடி என்று பேசுவார். எனக்கும் அப்படி உரிமை எடுத்துக் கொள்ள ஆசைதான்.

      நீக்கு
    3. அது பரவாயில்லை.  வயது தரும் உரிமை என்று உறவில் இளம் பெண்களை முதுகிலும் தடவு தடவென்று தடவுபவர்களைப் பார்த்திருக்கிறேன்! :(

      நீக்கு
    4. ஸ்ரீராம்.... அவங்கள்லாம் அடி வாங்கிப் பார்த்ததில்லையா? பா.வெ. மேடம் சொன்னதைப் படித்தபோது ஏழாம் வகுப்பில் நடந்தது நினைவுக்கு வந்தது. அப்போ என்னுடன் படித்துக்கொண்டிருந்த பெண்ணை, தமிழ் வாத்தியார், டீ போட்டுக் கூப்பிட்டார். அவள் உடனே, இந்த டீ போடற வேலையெல்லாம் எங்கிட்ட வச்சுக்காதீங்க என்று வகுப்பிலேயே சொல்லிவிட்டாள் (நான் டீ என்று அவளிடம் பேசுவேன்..அப்போது அந்த வழக்கம் இருந்தது, சிலரிடம் மாத்திரம். என் கஸின்கள் மற்ற எல்லோரையும் நீங்க என்று பேசுவேன். சிலர் என்னிடம், என்னடா இப்படி அந்நிய மனுஷன் மாதிரி பேசற என்று கோபித்துக்கொள்வார்கள். நான், வயதுக்கு மரியாதை கொடுக்க வேண்டாமா என்பேன்)

      நீக்கு
  7. முத்து round about - நாம் பார்த்த இடங்கள் மாறிப் போவது காலத்தின் கட்டாயம் என்றாலும் மறக்க முடிவதில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் நெய்வேலி நினைவுகள் கிளறப்பட்டிருக்கும் இல்லையா?!

      நீக்கு
    2. இது மாறியதற்கு அரசியல் காரணங்கள். அது ஒரு இயல்பு நிலை இல்லாத காலம். நாம் வியக்க, கற்றுக்கொள்ள ஒரு சமாச்சாரம் உண்டு. போராட்டம், போலீஸ், கெடுபிடி எதுவும் வெளிநாட்டவரைப் பாதித்ததில்லை.

      நீக்கு
  8. "தவறு என்பது தவறிச் செய்வது. தப்பு என்பது தெரிந்து செய்வது. தவறு செய்தவன் திருந்தப் பார்க்கணும்; தப்பு செய்தவன் வருந்தி ஆகணும்" ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏனென்றால் நல்ல நல்ல பிள்ளைகளை நம்பித்தானே  இந்த நாடே இருக்குது!

      நீக்கு
  9. எல்ஃபி என விளையாட்டாக்க் குறிப்பிட்டிருந்த படம் நல்ல கோணத்தில் எடுக்கப்பட்டிருக்கிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம். நானும் நினைத்தேன்!

      நீக்கு
    2. ஆனால் 12 வருடங்களுக்கு முன் எடுக்கப்பட்டது

      நீக்கு
  10. பிடித்த உணவு சாப்பிடும் முன்பு இரண்டு மூன்று முள்ளங்கி பத்தை பச்சையாக சாப்பிட்டு விட்டு பத்து நிமிடங்கள் கழித்து உணவை அணுகவும்!//

    அப்படீங்கறீங்க? ராஜஸ்தான், குஜராத்தில் இருந்தப்போவெல்லாம் முள்ளங்கியைப்பச்சையாக முழுசாகக் கடிச்சுச் சாப்பிடறவங்களை நிறையப் பார்த்திருக்கேன். நானுமே முள்ளங்கி சாலட், முள்ளங்கிப் பச்சடினு பண்ணி இருக்கேன். அப்படி எல்லாம் வித்தியாசம் தெரிந்தது இல்லையே? அது சரி, பச்சை முள்ளங்கியைச் சாப்பிட்டால் என்ன பண்ணும்ங்கறீங்க? இப்போவும் முள்ளங்கி பிஞ்சாக இலையுடன் இருந்தால் இலையைப் பருப்பு உசிலியும், முள்ளங்கியை சாலடாகவோ அல்லது ரொட்டியாகவோ பண்ணுவேன்.
    //

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கடைகள் எதிலும் பச்சை முள்ளங்கி பார்த்தது இல்லை; வெள்ளை அல்லது சிவப்பு முள்ளங்கி மட்டுமே பார்க்கிறேன்!

      நீக்கு
    2. @Gouthaman, grrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr

      நீக்கு
    3. சமைக்காத முள்ளங்கி நாக்கின் சுவை நரம்புகளை அரை மயக்கத்தில் வைத்துவிடும்!!

      நீக்கு
  11. எல்லா பிரபலங்களை பார்ப்பதற்கும் எல்லோரும், எல்லா இடங்களிலும் முண்டியடிக்க மாட்டார்கள். உதாரணம் விமான நிலையம். விமான நிலையத்திற்குள் பிரபலங்களை கண்டு கொள்ள மாட்டார்கள். பிரபலங்களின் வீட்டு திருமணங்களில் நாம் யாரையும் வெறித்துப் பார்க்க மாட்டோம். மேலும் அந்த பிரபலத்தை நமக்கு தெரிந்திருக்க வேண்டும், பிடித்திருக்க வேண்டும்.
    கோவில்களில் பிரபலங்களை சூழ்ந்து கொள்பவர்களை பார்த்தால் எரிச்சல்தான் வரும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கௌதமன் சார்.... ஒருத்தரை வாயைப் பிளந்து பார்க்க ஆசையிருந்தாலும் கௌரவம் கருதி விமான நிலையம் போன்ற முக்கிய இடங்களில் கண்டுகொள்ளாத மாதிரி நடந்துகொள்வார்கள்.

      நான் விஜய் ஆண்டனியுடன் பேசியிருக்கிறேன். எனக்கு முன்னால் இருந்த சோஃபாவில் அமர்ந்திருந்த கமலஹாசனைப் பார்த்திருக்கிறேன். பேசி தொந்தரவு தர விரும்பலை. அப்போது எஸ்பிபியும் அவர் சகோதரியும் அங்கு வந்தார்கள், கொஞ்சம் தள்ளி உட்கார்ந்திருந்தார்கள். எனக்கு ஷைலஜாவைக் கண்டாலே பிடிக்காது (சலங்கை ஒலி பார்த்த நினைவில், ராங்கிக்காரி என்றே நினைப்பேன்). கமல் படத்தையும், விஜய் ஆண்டனியுடன் எடுத்த படத்தையும் முடிந்தால் பகிர்கிறேன்.

      நீக்கு
    2. இப்படியான பயணங்களில் எனில் நாங்க அதிகம்/அடிக்கடி பார்த்தது இப்போல்லாம் பவன் கல்யாண், ஸ்ரீமன் என்னும் பெயரில் ஒருத்தர் இருந்தார் அவர் போன்ற அதிகம் பிரபலமாகாத நடிகர்களே. ஆழ்வார்ப்பேட்டையிலேயே இருந்தும் உலக்கை வீடு வழியாக அடிக்கடி போயும் ஏனோ அவரைப் பார்த்ததே இல்லை. பார்க்கவும் விரும்பலை.

      இன்னிக்கு ஒரு ரீல்ஸோ என்னமோ முகநூலில் வந்தது. தனுஷைப் பார்க்க மக்கள் முக்கியமாய் இளைஞர் கூட்டம் அலை மோதுகிறது. போயஸ் கார்டன் வீடாம். அந்த ரீல்ஸை எடுக்க நினைச்சாலும் முடியலை. இவங்கல்லாம் எப்போத் திருந்துவாங்கனு கேட்டால் ஜோதிஜி என்னும் வலை உலக நண்பர் இவங்கல்லாம் மாறவே மாட்டாங்க. அதுவும் தமிழ்நாட்டில் நீங்க இதை எதிர்பார்க்கவே கூடாதுனு சொல்றார். :(

      நீக்கு
    3. காத்தாடி சகோதரர்களும் க்ரேசி சகோதரர்களும் அடிக்கடி நாங்க பயணம் செய்யும்போதெல்லாம் 2 போகி தாண்டி அவங்களும் வருவாங்க. அதிலும் காத்தாடியை அடிக்கடி பார்க்க நேரிடும். பக்கோடா காதர் அவர் குழுவினர்னு எல்லோருமே கும்பகோணம் போகையில் டே எக்ஸ்பிரஸில் வருவாங்க.

      நீக்கு
    4. கீதா அக்கா.... ஜோதிஜி பக்கத்தில் நீங்கள் போட்ட கமெண்ட் பார்க்கவில்லையா

      நீக்கு
    5. என்ன ஆச்சு? ஏதானும் பிரச்னையா? எந்தப் பதிவுனு நினைவில் இல்லையே? ரீல்ஸ் எனில் பலதும் வருது. அதில் எது? இந்த ரீல்ஸ் வருவதைத் தடுக்க யாரானும் தொழில் நுட்பம் தெரிஞ்சவங்க இருந்தாச் சொல்லுங்க.

      நீக்கு
  12. மஸ்கட்டில் வாடி கபீர் என்னும் இடத்தில் வெள்ளிக்கிழமை காய்கறிகள் ஃப்ரெஷ் ஆக கிடைக்கும். அங்கு முகமது என்னும் உளுந்தூர்பேட்டையைச் செர்ந்தவரின் கடை மிகவும் பிரசித்தி. பின்னாட்களில் எல்லா கதைகளும் ஓமானியர்கள்தான் நடத்த வேண்டும் என்று நடை முறை படுத்தி, அந்த மார்கெட்டையே முழுமையாக ஏஸி செய்திருந்தார்கள். அங்கு சென்ற போது எதையோ இழந்த மாதிரி இருந்தது.

    பதிலளிநீக்கு
  13. அது எந்தப் பெருமாள் கோயில்? உள்ளே போகலையா? கோயில் பழங்காலத்துக் கோயிலோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோவில் பெயர் மறந்து விட்டது. சொல்கிறேன்.

      நீக்கு
    2. இது யானைமலை நரசிம்மர் கோவில் எதிரிலுள்ள பாலசுப்ரமணியர் கோவில்.

      நீக்கு
    3. ஓகே, ஓகே, நினைவலைகளில் இருந்து மீட்டுக் கொண்டு வந்தேன். யானைமலை போனப்போ இங்கேயும் போயிருந்தோம். அங்கே சாப்பிட்ட டிஃபன் மட்டும் மறக்கவே இல்லை. :))))

      நீக்கு
  14. பானுமதி சமையலில் மாற்றங்கள் செய்வது அல்லது புதிதாகச் சமைப்பது பற்றிக் கேட்டிருக்கார். எனக்கெல்லாம் அந்த நிமிஷம் தோன்றுவது தான். 2004 ஆம் ஆண்டில் அம்பேரிக்கா போனப்போ யாரோ நிறையப் பச்சை ஆப்பிளை வாங்கிக் கொண்டு வந்து கொடுத்தாங்க. பெண்ணும், மாப்பிள்ளையும் திருதிரு. பின்னர் எனக்கு ஒரு யோசனை தோன்ற எல்லாவற்றையும் துருவிக் கொண்டு வாணலியில் நல்லெண்ணெயில் மாங்காய்த் தொக்கு பண்ணுவது போல் பண்ணி வைக்க மாப்பிள்ளையும் பெண்ணும் ப்ரெட்டுக்கெல்லாம் தடவிக் கொண்டு சாப்பிட்டார்கள். ஓரிரண்டு ஆப்பிள்களை ஆவக்காய் மாதிரியும் போட்டு வைச்சேன். நல்லா இருந்தாலும் என்னதான் 24 மணி நேர ஏசி என்றாலும் அந்த ஊறுகாயைக் குறைஞ்சது நாலைந்து நாட்கள் தான் வைச்சிருக்கலாம். வீணாகிவிடும் எனப் புரிஞ்சது. அதே தொக்கு ஒரு மாசம் வந்தது.

    ரவா கிச்சடி பண்ணினது மிஞ்சிப் போகச் சாயங்காலம் ப்ரெட்டை எடுத்து தண்ணீரில் ஊற வைச்சு கிச்சாடியோடு சேர்த்துக் கொண்டு கொஞ்சம் கரம் மசாலா, கொஞ்சம் ஜீரகப் பொடி சேர்த்து நன்கு கலந்து கொண்டு கட்லெட் மாதிரி வேகவிட்டு எடுத்தேன். சாயந்திரம் ஸ்நாக்ஸுக்கு நல்ல ரசிகர்கள் கிடைச்சாங்க. இதெல்லாம் 20 வருடங்கள் முன்னரே பண்ணியது. பின்னர் பையர் சொல்லி ராகேஷ் ரகுநாதன் பார்த்த்டேன். தொலைக்காட்சியிலேயே வெங்கடேஷ் பட் நிகழ்ச்சி வஃரும். என்றாலும் அதிலிருந்து அதிகம் தெரிஞ்சுக்கலை. ராகேஷ் ரகுநாதன் சமையலில் பொதுவாகத் தெரிந்தவையே என்பதால் செய்முறை மாறுகிறதானு மட்டும் பார்ப்பேன். வெங்கடேஷ் பட் நிகழ்ச்சி மூலம் நாமெல்லாம் பண்ணுவது பிசிபேளா பாத்தே இல்லை என்பதையும் அதன் செய்முறையையும் தெரிந்து கொண்டேன். அதே போல் நீர் தோசை பட் சொல்லித் தான் அறிமுகம். இன்னும் உடுப்பி ரசம், உருளைக்கிழங்கு சாகு போன்றவை எல்லாம் பட் மூலம் பரிச்சயம் ஆனது. சாகு முன்னெல்லாம் நான் வேறே மாதிரி பண்ணிக் கொண்டிருந்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சுவாரஸ்யம்தான்.  எனக்கும் புதுப்புது ஐடியாக்கள் வருகிறது.

      நீக்கு
    2. துளசி கோபால் டீச்சர், பச்சை ஆப்பிள்களை வைத்து ஊறுகாய் செய்முறை படங்களுடன் போட்டிருந்த நினைவு.

      நீக்கு
  15. இந்தப் படத்தைப் பார்த்ததும் தோஹா நினைவு வந்தது. நான் சூப்பர் மார்க்கெட்டெல்லாம் போகவில்லை. சும்மா ஆஸ்பத்திரி போகையில் பார்க்கும் இடங்கள் தாம். இந்தப் பெரிய தூண் போல தோஹாவிலும் இருக்கு. மரங்களும் சாலையின் இரு பக்கங்களிலும் வரிசையாகக் காண முடியும்.

    பதிலளிநீக்கு
  16. த்ப்பு அறியப் போயிருக்கும் நாநாவுக்கு என்ன என்ன அனுபவங்கள் நேருமோ தெரியலை.

    பதிலளிநீக்கு
  17. துப்பு "தப்பாக" தப்புனு அதிலும் த்ப்பு என வந்திருக்கு. :( அது சரி கபாலி யார்? மயிலாப்பூர் என்பதால் கபாலினு ஒரு குணசித்திரம் வந்தே ஆகணும்னு வந்திருக்காரோ? சரி, சரி, அடுத்த வாரம் தானே தெரிஞ்சுடுமே. :)))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. துப்பு அறிந்துகொண்டோம். கபாலி சும்மா ஒரு பெயர்.

      நீக்கு
    2. அட!!!!!1 அந்த டீக்கடை நாயகி நாநாவின் எதிர்கால மனைவியாமே? கமலா ஹரிஹரன் சொல்லிட்டாங்க. எனக்கெல்லாம் இப்படி யூகிக்கவே தெரியலை பாருங்க. மண்டுவாக இருக்கேன். :))))

      நீக்கு
    3. அடக் கடவுளே ! கதையை எல்லோருமாகச் சேர்ந்து எங்கோ தூக்கிப் போய்விடுவார்கள் போலிருக்கே!

      நீக்கு
  18. சினிமா கம்பெனிக்கு எதிரே வீடு இருந்ததால் நிறையப் பிரபல நடிக, நடிகைகளைச் சின்ன வயசிலேயே பார்த்திருக்கேன். டிடிகே, காமராஜர், பக்தவத்சலம் ஆகியோருடன் 67 தேர்தல் பிரசாரத்தின்போது எங்க வீட்டு வாசலிலே உட்கார்ந்திருந்தாங்க. பேசி இருக்கேன். தெருவின் இரு பக்கமும் பெரிய ப்ளாட்ஃபார்ம்கள் (நடை மேடை இருந்த காலம் அது. வெயில் காலத்தில் எல்லோருமே வாசலுக்கு வந்துடுவோம். அங்கே நாற்காலி போட்டுக் கொண்டோ ஈசி சேரிலோ அல்லது தரையைச் சுத்தமாகப் பெருக்கிட்டோ உட்கார்ந்து பேசுவாங்க. சிலர் திண்ணையில் இருப்பாங்க. பின்னர் கதவைப் பூட்டிக் கொண்டு சாயங்காலே தண்ணீர் தெளித்திருந்த மொட்டை மாடியில் போய்ப் படுப்போம். இரவில் மதுரை ஜில்லோ ஜில்லு.

    பதிலளிநீக்கு
  19. கேள்வி பதில்கள் கண்டோம்.

    வயதாகி விட்டது என புலம்பல் வேண்டாம்.
    உடல் வயதானாலும் மனம் இளமையாக இருந்தால் வாழ்க்கை இலகுவாக இருக்கும்..

    நெல்லை, ஸ்ரீராமின் படங்கள் நன்றாக உள்ளன.

    கதை..... டாக்டர் வீட்டுக்கும் ரீக் கடைக்குமாக.....வந்து நிற்கிறது .....பார்ப்போம்

    பதிலளிநீக்கு
  20. வணக்கம் சகோதரரே

    இன்றைய புதன் கேள்வி பதில்கள் அனைத்தும் எப்போதும் போல் அருமை. சகோதரர் நெல்லைத் தமிழர், மற்றும் சகோதரர் ஸ்ரீராம் அவர்கள் பகிர்ந்த படங்களும் நன்றாக உள்ளது.

    சமையலில் நம் பாரம்பரியங்களுடன், நம் கற்பனைகளையும் சேர்த்து சமைப்பது ஒரு வித்தியாசந்தான். ஆனால், பாரம்பரியமான நம் அம்மாக்கள் சமைத்த உணவுக்கு ஈடாகாது. எத்தனையோ சமையல் காணொளிகள் வடிவங்களும் இப்போது யூடியூபில் கொட்டிக் கிடக்கின்றன.

    அதன் குறைகளை சுட்டிக் காட்ட முடியாது. "தவறு என்பது தவறி செய்வது.... என்பது மாதிரி," கூட்டும், கூட்டின் முறையும் காட்டும் என்னிடம் கதை சொல்ல வந்தாயோ..! "எனச் சுலபமாக சொல்லி விடுவார்கள். :))

    இன்றைய கதை பகுதி நன்றாக உள்ளது. விரைவில் பாபாவுக்கும், அமெரிக்கா மாப்பிள்ளை ஆனந்துக்கும் எதிர் வீட்டு அழகிகளுடன் திருமணங்கள் நடைபெற்று விடுமென பாவனா உறுதியாக சொல்லி விட்டார். இனி நாநாவையும் கல்யாணம் செய்து கொள்ளத்தான் இந்த நீலா என்ற பெண் மைலாப்பூரில் டீக்கடை நடத்துகிறாரரோ..! பார்க்கலாம்... அரூபமாக மறைந்து சென்றிருக்கும் நாநா வந்து அடுத்த வாரம் என்னைச் சொல்லப் போகிறார் என அறிய ஆவலாக உள்ளேன்.

    இன்று நான்தான் கடைசி பெஞ்ச் மாணவியாக வந்துள்ளேன். மன்னிக்கவும். இரண்டு மூன்று நாட்களாக பதிவுலகம் வரவே இயலவில்லை. அதற்கும் மன்னிக்கவும். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. "நாநா வந்து என்னச் சொல்லப் போகிறார்."என வந்திருக்க வேண்டும். தட்டச்சுப் பிழை. இங்கும் "தவறு என்பது தவறி வந்து விட்டது.":)) மன்னிக்கவும்.

      நீக்கு
    2. விளக்கமான கருத்துரைக்கு நன்றி.

      நீக்கு
  21. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  22. நானும் தான் கடைசி பெஞ்ச் மாணவியாக வந்துள்ளேன். கமலா ஹரிஹரன்

    பதிலளிநீக்கு
  23. கேள்விகளும், பதில்களும் அதற்கு வந்த பின்னூட்டங்களும் அருமை.

    படமும் பதமும் :

    நெல்லைத்தமிழன் , ஸ்ரீராம பகிர்ந்த படங்கள் நன்றாக இருக்கிறது.

    செல்ஃபி பாயிண்ட் படம் நன்றாக இருக்கிறது.
    இந்த கோயில் இரண்டு தடவை போய் இருக்கிறேன்.
    பதிவும் செய்து இருக்கிறேன்..

    பதிலளிநீக்கு
  24. கதை நன்றாக இருக்கிறது.
    பக்கத்தில் இருந்த டீக்கடை வாசலில் கொஞ்சம் பேர் இருந்தனர். //

    டீ குடிக்க வரிசையில் நிற்கிறார்களே!

    பாபா நீ கொஞ்ச நேரம் இங்கே நில்லு. நான் அரூபமாக மாறி ஐந்தே நிமிடங்களில் திரும்பி வருகிறேன்" என்று சொல்லி திடீரென்று மாயமாக மறைந்தான். //

    வரிசையில் நிற்க முடியாது என்பாதல் டீகுடிக்க கடைக்குள் போய் விட்டாரா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /டீ குடிக்க வரிசையில் நிற்கிறார்களே!

      பாபா நீ கொஞ்ச நேரம் இங்கே நில்லு. நான் அரூபமாக மாறி ஐந்தே நிமிடங்களில் திரும்பி வருகிறேன்" என்று சொல்லி திடீரென்று மாயமாக மறைந்தான். //

      வரிசையில் நிற்க முடியாது என்பாதல் டீகுடிக்க கடைக்குள் போய் விட்டாரா?/

      ஆகா..! . தங்களுடையது நல்ல கவனிப்பான கருத்து. நானும் வரிசையை பார்த்தேன். அந்த ஃபோனை தலை குனிந்து உன்னிப்பாக பார்த்தபடி இருப்பவர்தான் பாபா வாஎன கேட்க நினைத்தேன். கேட்க விடுபட்டு போய் விட்டது.

      நீக்கு
    2. கருத்துரைகளுக்கு நன்றி!

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!