பெங்களூரில் இருந்து கொல்கத்தாவை முந்தைய நாள் இரவு அடைந்தோம். மறுநாள் காலை, உணவுக்குப் பிறகு, 8 மணிக்கு பேளூர் இராமகிருஷ்ணா மடம் இருந்த பகுதியை அடைந்தோம் என்று சென்ற வாரம் முடித்திருந்தேன். இனி இந்த வாரம்.
பயணம் செல்லும்போது, இயல்பாக, எடுத்துக்கொள்ளும் உணவின் அளவு அதிகமாகிவிடுகிறது. அதனால் எந்தப் பயணம் சென்று திரும்பி வரும்போது என் எடை குறைந்தது 2 கிலோ ஏறிவிடும். என்னுடிஅய உணவுக் கட்டுப்பாடு யாத்திரை மற்றும் பயண சமயங்களில் இருப்பதில்லை. இதனால் எனக்கு ரொம்பவே கஷ்டம். ஒரு வாரத்தில் ஏறும் எடையை 4 வாரங்கள் ஆனால்தான் கொஞ்சம் பழைய நிலைக்குக் கொண்டு வர முடியும். அதிலும் வீட்டில் முடிந்த வரை இனிப்புக்குத் தடா போட்டிருக்கும் நான், பயணங்களில் அதிகமாகச் சாப்பிட்டுவிடுவேன். என் மனதுக்கு ஆறுதலாக, என் பையன் அவ்வப்போது சொல்வதை நினைத்துக்கொள்வேன். (இப்போ ரொம்ப ரெஸ்ட்ரிக்ட் பண்ணாதீங்க. இன்னும் வயதான பிறகு அவற்றைச் சாப்பிட முடியாது என்பான்)
நாங்கள் சென்ற அன்று கொல்கத்தாவின் புதுவருடம். அதனால் சாலையில் சிறுவர்கள் ரவீந்திரநாத் படங்களுடன் ஊர்வலம் சென்றதைப் பார்த்தோம். கூடவே டீச்சர்களும். இந்த மாதிரி இளைய தலைமுறையை ஒழுங்குபடுத்துவது மிகவும் நல்லதல்லவா?
இந்த நேரத்தில், சிறிய தலைமுறையை நல்ல குடிமகனாக ஆக்குவதற்காக உழைக்கும் ஆசிரியர்களின் மகத்தான பணியை நினைவில் கொள்வோம். நான் சொல்வது ஐந்தாம் வகுப்புக்கு உட்பட்ட குழந்தைகளை. இப்போது பல ஆசிரியர்களும், 6ம் வகுப்பிலிருந்து மாணவர்களைக் கட்டுபடுத்துவது மிகக் கடினமாக இருக்கிறது, சொல்வதைக் கேட்பதில்லை, அவர்கள் பெற்றோர்களும் ஒத்துழைப்பதில்லை, சிறிய பிரச்சனை வந்தாலும் கல்வி அதிகாரிகள் ஏன் கண்டிக்கிறீர்கள் என்று எங்களிடமே சண்டைக்கு வந்துவிடுகிறார்கள் என்று புலம்புகின்றனர். அதுபோல மாணவர்களிடமும் அவர்கள் பெற்றோர்களிடமும் சாதிக் கண்ணோட்டம் மிக அதிகமாக இருக்கிறது என்றும், ஏதேனும் பிரச்சனை வந்தால், யார் செய்தது, அவர் என்ன சாதி என்பதைப் பார்த்து அதற்கேற்றபடி பிரச்சனையைப் பெரிது பண்ணுகின்றனர் எனச் சொல்கின்றனர். இந்த மாதிரி பிரச்சனைகளை (வெவ்வேறு பிரச்சனைகளை) நாம் கேட்கும்போது, நல்லவேளை அதைத் தாண்டிவிட்டோம் என்று நினைத்துக்கொள்வேன்.

ஆன்மீக வழியில் செல்பவர்களுக்கு இந்த பேளூர் மடம் மிகவும் முக்கியமானது. ஸ்வாமி விவேகானந்தர், இராமகிருஷ்ண பரமஹம்சர், சாரதாதேவி போன்றோர் கால் பதித்த இடம் இது.

பள்ளிக்கூடக் குழந்தைகள்தாம், அவர்கள் ஆசிரியர்களுடன்.

ஹூப்ளி ஆற்றின் கரையில் அமைந்திருக்கும் மடம் இது. அங்கு என்ன என்ன இடங்கள் பார்க்கணும் என்று எழுதி வைத்திருந்த போர்டு இது.
பேளூர் இராமகிருஷ்ணா மடத்தின் படங்களைப் பார்ப்பதற்கு முன்பு, அந்த மடத்தைப் பற்றிச் சிறிது அறிந்துகொள்வோமா?
இராமகிருஷ்ண பரமஹம்சரின் முக்கியச் சீடர் சுவாமி விவேகானந்தர் என்பது நமக்குத் தெரியும். அவர் மேல்நாட்டுப் பயணத்தை முடித்துக்கொண்டு வந்த பிறகு, ஹூக்ளி ஆற்றின் கரையில் (ஹவுரா மாவட்டம்) இந்த இடத்தில், இராமகிருஷ்ணரின் பாதம் பட்டிருந்ததால், அந்த நிலத்தை வாங்கி அவருக்கு ஒரு நினைவுக் கோயில் எழுப்ப நினைத்தார். தன் பயணத்தில் கிடைத்த நன்கொடைகளை வைத்துக்கொண்டு, (நன்கொடைகளை அளித்தவர்களில் மிக முக்கியமானவர் திருமதி ஒலே புல்) 1897ல் இந்தப் பரந்துபட்ட நிலப்பரப்பை வாங்கினார். 1886ல் இராமகிருஷ்ண பரமஹம்சர் மறைந்துவிட்டார். அவருடைய அஸ்தி கலசத்தை வைத்து, புதிதாக வாங்கிய நிலத்தில் சிறிய கோயிலைக் கட்டி அங்கு அன்னை சாரதாதேவி அவர்கள் (இராமகிருஷ்ண பரமஹம்சரின் துணைவி) அளித்த இராமகிருஷ்ண பரமஹம்சரின் படத்தை வைத்து வழிபட்டனர்.

1899ல் இராமகிருஷ்ண பரமஹம்சரின் அஸ்தி கலசத்தின் மீது எழுப்பப்பட்டிருந்த பழைய கோயில்.
விவேகானந்தர் தன்னுடைய 39ம் வயதிலேயே மஹாசமாதி அடைந்தார் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். 1863ல் பிறந்த அவர், 1881ல்தான் தன்னுடைய குருவான இராமகிருஷ்ணரைச் சந்திக்கிறார். பிறகு அவர் 1893ல் சிகாகோ நகரில் ஆற்றிய உரை பிரசித்திபெற்றது. 1897ல் இந்த ஆசிரமத்தை அமைத்தார் விவேகானந்தர். இங்கேயே அவர் மஹாசமாதி அடைந்தார். இறப்பதற்கு முன், இராமகிருஷ்ணருக்கான ஆலயம் எப்படி அமையவேண்டும் என்று தன்னுடைய சகோதரரான விஞ்ஞானந்தருக்குச் சொல்லி, பொறியியல் எஞ்சினீயரான அவர், இதனை வடிவமைத்து பிறகு தற்போதுள்ள கோயிலைக் கட்டினார்.
இந்த இடத்தைப் பற்றி அங்குள்ள துறவிகள் மிகவும் உன்னதமாக நினைக்கின்றனர். தக்ஷிணேசுவரத்தில் எப்படி இராமகிருஷ்ணருடன் வாழ்ந்தார்களோ, பேசிப் பழகினார்களோ அப்படியே, இந்த இட த்தில் இராமகிருஷ்ணர் சூக்ஷ்ம மாக வாழ்வதாக நம்புகின்றனர். அவருடைய சாந்நித்தியத்தை துறவியர்கள் உணர்கின்றனர்.
ஒரு தடவை, ஸ்ரீராமகிருஷ்ணருக்கு நைவேத்தியம் செய்ய ஒரு இளந்துறவி பழங்களை நறுக்கினார். அங்குள்ள தலைவர் அதனைப் பார்த்து, ‘என்ன சேவை நீ செய்கிறாய்? வாழை மற்றும் ஆரஞ்சுத் தோல்களை நீக்கும்போது, பழத்தில் அவற்றின் பிசிறு ஒட்டிக்கொண்டிருக்கலாமா? வேலையில் கவனமாக இருக்க வேண்டாமா? ஸ்ரீராமகிருஷ்ணர் இங்கு வாழ்கிறார். அவர் நம் பூஜையை ஏற்றுக்கொள்வதை நான் பார்க்கிறேன். அதனால் மிகுந்த கவனத்துடன் சேவை செய்’ என்று சொன்னாராம்.
சுவாமி விவேகானந்தர் சொல்வாராம்… ஸ்ரீராமகிருஷ்ணர் தம் நுண்ணுடலை விட்டுவிடவில்லை. அவர் தம் சரீரத்திலேயே இன்னும் வாழ்ந்து வருகிறார். பாக்கியசாலிகள் இன்றும் அவரை தரிசிக்கிறார்கள், அவர் பேசுவதைக் கேட்க முடிகிறது. உண்மையான ஆர்வமும் விடாமுயற்சியும் இருக்குமானால், நிச்சயமாக அவரைக் காணலாம் என்பாராம்.
இது பயணக் கட்டுரையாக இருந்தாலும், ஏதாவது புதிய விஷயத்தை நாம் தெரிந்துகொள்ள வேண்டும் என்று நினைப்பேன். இந்தப் பதிவுகளைச் சாக்கிட்டு நாம் ஏன் இராமகிருஷ்ண பரமஹம்சரின் சுருக்கமான வரலாறை எழுதக்கூடாது என்று தோன்றியது.
இராமகிருஷ்ண பரமஹம்சரின் சுருக்கமான வரலாறு
வங்காளத்தில், ஹூக்ளி ஜில்லாவில், காமார்புகுர் என்ற கிராமத்தில், க்ஷுதிராம சட்டோபாத்யாயர் என்பவர் வாழ்ந்துவந்தார். அவர் பிராமண குலத்தைச் சேர்ந்தவர். அவருடைய மனைவியார் சந்திரமணி தேவியார். இவர்கள் மாத்திரமே அந்தணர் குலத்தைச் சார்ந்தவர்கள் என்பதாலும், அவர்களுடைய நன்னடத்தை மற்றும் ஒழுக்க சீலத்தாலும் கிராமத்தினர் அனைவரும் இவரிடம் அன்பு பூண்டிருந்தனர். இவர்கள் ஒரு நாள் வாரணாசிக்கு யாத்திரை சென்றிருந்தார்கள். அந்த க்ஷேத்திரத்தில் கதாதர மூர்த்தியை தரிசனம் செய்து அவரிடம் பிரார்த்தித்துக்கொண்டார்கள். அன்று இரவு க்ஷுதிராம சட்டோபாத்யாயர் கனவில் இறைவன் வந்து, நாமே உமக்கு புத்திரனாகப் பிறக்கிறோம் என்று கூற, திடுக்கிட்டு சட்டோபாத்யா யர் விழித்துக்கொண்டார். தன் மனைவியிடம் கனவைப் பற்றிக் கூற, அவருக்கு இதைவிட வேறு என்ன சந்தோஷம் இருந்துவிட முடியும். மிகுந்த மகிழ்ச்சி அடைந்த அவர், நமக்கு ஆண் மகவு பிறந்தால், அவனுக்கு கதாதரன் என்ற இறைவன் நாமத்தையே வைத்துவிடுவோம் என்று தீர்மானித்துக்கொண்டார். (இவர்களுக்கு ஏற்கனவே இரண்டு ஆண் குழந்தைகள் உண்டு)
கிபி 1834ல் பிப்ரவரி 20ம் தேதி புதன் கிழமை அன்று சந்திரமணி தேவியார் ஆண் மகவு ஒன்றைப் பெற்றெடுத்தார். க்ஷுதிராம சட்டோபாத்யாயர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. இந்து தர்ம சாஸ்திரப்படி, ஆண் மகவு பிறந்தால், அவன் 21 தலைமுறைகளைக் கரையேற்றுகிறான் என்ற நம்பிக்கை. இதில் ஓரளவு உண்மையும் உள்ளது.
தர்ப்பணம் செய்யும் ஒருவன், அவனது பெற்றோர்களுக்கும், தந்தையின் முந்தைய இரண்டு தலைமுறைகளுக்கும் (அப்பா, அம்மா), தாயின் முந்தைய இரண்டு தலைமுறைகளுக்கும் தீர்த்தம் விடுகிறான். இவர்களைத் தவிர, இன்னும் முகம் தெரியாத முன்னோர்களுக்கும் தர்ப்பணம் செய்கிறான். பெண்ணிற்கு இந்தக் கடமை கிடையாது. இதன் காரணம், பெண் திருமணத்திற்குப் பிறகு இன்னொரு வீட்டிற்குச் சென்றுவிடுவதால். இருந்தாலும், அவளுக்குப் பிறக்கும் மகன், அம்மாவின் முன்னோர்களுக்கும் தர்ப்பணம் செய்வான். (அவன் தலைமுறையில் மாத்திரம்). எவ்வளவு யோசித்து இந்த மாதிரி ஒரு ஒழுங்குமுறையை வடிவமைத்திருக்கிறார்கள் என்று நான் எப்போதும் வியந்துபோவேன்.
கதாதரர் பிறந்தது வேதங்களைக் கற்று, அதிலேயே ஆழ்ந்திருக்கும் பிராமண குலத்தில். அதனால் சிறுவயதிலேயே அவற்றில் அவருக்கு பரிச்சயம் ஏற்பட்டது. பகவன் நாமாவிலும் அவருக்கு ஈடுபாடு ஏற்பட்டது. ஆறு வயதுக்குள்ளாகவே இராமாயணம் மகாபாரதம் போன்றவற்றைச் சிரவணம் செய்து அவற்றில் பொருள்களில் ஆழ ஆரம்பித்தார் என்று அவரது வரலாற்றில் சொல்லப்படுகிறது. பாடசாலைக் கல்விகளில் ஈடுபடாமல், மண்ணால் இறைவன் பிரதிமைகளைச் செய்து, அவற்றை பூஜை செய்வது, ஊர்வலமாக எடுத்துச் செல்வது என்று பக்திமார்க்கத்தில் ஈடுபட ஆரம்பித்தார். உரிய காலத்தில் (பதினான்கு-பதினாறு வயதில்) அவருக்கு உபநயனம் முடிந்ததும், அவரது பெரிய தமையனார் ராம்குமார் சட்டோபாத்யாயர், தாம் கல்கத்தாவில் நடத்திவந்த சமஸ்கிருத பாடசாலையில் சேர்ந்து கதாதரன் படிக்கட்டும் என்று நினைத்து தம்முடன் கல்கத்தாவிற்குக் கூட்டிச் சென்றார்.
அந்தப் பாடசாலையில் பிரம்மம், மாயை போன்றவற்றைப் பற்றி பலவாறு விவாதங்கள் நடந்துகொண்டிருந்தன. கதாதரருக்கு திரும்பத் திரும்ப விவாதங்களைக் கேட்டு, இதனால் ஒரு பிரயோசனமும் கிடையாது என்ற எண்ணம் ஏற்பட்டது. வெறும் பாடசாலைக் கல்வி, விவாதங்களால் ப்ரம்ம அநுபூதி (பிரம்ம அனுபவம்) தமக்குக் கிடைக்காது என்று நம்பினார். அதனால் அந்த பாடசாலையை விட்டு நீங்கிவிட்டார்.
கல்கத்தாவிலிருந்து ஐந்து கல் தொலைவில் இருந்த தக்ஷிணேசுரவரத்தில் ஒரு தேவி க்ஷேத்திரம் இருந்தது. இந்த ஆலயம் ராணி ரஸமணியம்மாள் என்பவரால் 1853ல் கட்டப்பட்டிருந்தது. அவர் விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர். சமூக அந்தஸ்து இல்லாதவர். ஆனால் உத்தம குணங்கள் வாய்த்தவர். தன் சமூகமும் அவர்களுக்கு படி நிலையில் கீழான சமூகங்களும் உயரப் பாடுபட்டவர். அவருடைய பெரு முயற்சியினால்தான் கங்கைக் கரையில் பல இடங்களில் செம்படவர்களுக்கு வரி ரத்து செய்யப்பட்டது. (இதற்காக பெரும் பணம் செலவழித்து கோர்ட்டில் வழக்கு போட்டு அதில் வெற்றிபெற்றார்) இந்த தக்ஷிணேச்வர தேவி கோயிலில்தான் கதாதரரின் இன்னொரு மூத்த சகோதரர் ராமேஸ்வர் சட்டோபாத்யாயா பூசாரியாகப் பணி புரிந்துகொண்டிருந்தார். பாடசாலையை விட்டு நீங்கியதும் கதாதரர் இந்த சகோதரரை நோக்கி வந்தார்.
அப்போது தக்ஷிணேச்வர ஆலயத்தில் கும்பாபிஷேக விழா நடைபெற்றுக்கொண்டிருந்தது. எல்லோருக்கும் கோவிலிலேயே உணவு அளித்தார்கள். அதனால் கதாதரர் தன்னுடைய அண்ணன் வீட்டிற்கு வந்த போது, ராமேஸ்வர் வீட்டில் உணவில்லை. எல்லோரும் கோயிலில் உணவு உண்ணுகிறார்கள் என்பதால் நீயும் கோயிலுக்குச் சென்று உணவு உண் என்று ராமேஸ்வர் சொன்னார். அந்த காலகட்ட த்தில், கதாதரர் மனதில், ராணி ரஸமணி அவர்கள் விவசாய சமூகத்தைச் சார்ந்தவர் என்பதால் அவர் அமைத்த கோயிலில் உணவு உண்ணுதல் சாஸ்திர விரோதம் என்ற எண்ணம் இருந்தது. தன் தமையனார் அந்தக் கோயிலில் பூஜாரியாக இருப்பதும் கதாதரர் மனதில் சரியென்று படவில்லை. அதனால் அவர் திரும்பவும் கல்கத்தாவுக்கே திரும்பிவிட்டார்.
பிறகு சில நாட்களில் அண்ணன் மீதான அன்பின் காரணமாக திரும்பவும் தக்ஷிணேஸ்வர் வந்தார் கதாதரர். சகோதரருடனேயே தங்கிக்கொண்டு, தாமே சமைத்துச் சாப்பிட்டுக்கொண்டு அங்கிருந்தார். இப்படி இருக்கையில் ராமேஸ்வர் உடல்நிலை சரியில்லாமல் போக, அவருடைய வேண்டுகோளுக்கு இணங்கி, தேவி கோயிலில் பூஜை செய்ய கதாதரர் சம்மதித்தார். அப்போது அவருக்கு சுமார் பதினெட்டு வயது.
ஆரம்பத்தில் மந்திர தந்திரங்களால் தேவியைப் பூஜித்து வந்த அவர், தேவியின் அருளால் மனம் ஒன்றி, மந்திர தந்திரங்களை நழுவ விட்டு ஆத்மார்த்தமாக பக்தி செய்தார். தேவியின் முன்னால் அமர்ந்திருக்கும்போதோ இல்லை தேவிக்கு தீப ஆராதனை செய்யும்போது இவர் கண்களில் கண்ணீர் ஆறாகப் பெருகும். அப்படியே அதே நிலையில் இருந்துவிடுவார். சில நேரங்களில் தேவி இவர் முன்பு பிரசன்னமாகாத போது, இவர் வருத்தமுற்று தேம்பித் தேம்பி அழுவார். இப்படி பூஜை முறைகளில் தடங்கல்கள் ஏற்படுவதைப் பார்த்தவர்கள், இவருக்கு சித்தப் பிரம்மப் பிடித்துவிட்டது என்று கருதினார்கள். ஒரு சிலர் மாத்திரமே இவருடைய அந்தரங்க பக்தியை அறிந்துகொண்டனர்.
தக்ஷிணேஸ்வர காளி கோயிலை உருவாக்கிய ராணி ரஸமணியின் மருமகன் மதுரநாதர் (மதுர் பாபு), இராமகிருஷ்ணர், கதாதரராக பூஜை செய்துகொண்டிருந்தபோது, கோயில் நிர்வாகப் பொறுப்புகளைப் பார்த்துக்கொண்டிருந்தார். ஆரம்பத்தில் சாதாரண அர்ச்சகர் என்றே கதாதரரை நினைத்த மதுரநாதர், மற்றவர்கள் கதாதரரின் விசித்திரமான மற்றும் தீவிரமான காளி தேவியின் வழிபாட்டு முறைகளைக் கண்டு அவரை மனநிலை சரியில்லாதவர் என்று முறையிட, மதுரநாதர், மறைந்திருந்து கவனித்து அவருடைய உண்மையான தெய்வ பக்தியை அறிந்து அவருக்கு முழுப் பாதுகாப்பு அளித்தார். ஒரு முறை கதாதரர் தேவியின் முன்னால் தியானத்தில் இருந்தபோது அவரை மதுரநாதர் உற்றுக் கவனிக்க, கதாதரரின் ஒரு பகுதி சிவனாகவும் மற்றொரு பகுதி காளி தேவியாகவும் காட்சியளிக்க, அன்றிலிருந்து கதாதரரின் சீடனானார் மதுரநாதர்.
ராமகிருஷ்ண பரமஹம்சரின் வரலாற்றை அடுத்த வாரம் தொடர்வோம். இப்போது பேளூர் இராமகிருஷ்ணா மடத்தின் படங்கள்.

இராமகிருஷ்ணர் கோவில் முகப்பு. இங்குதான் இராமகிருஷ்ண பரமஹம்ஸரின் அஸ்தி கலசத்தின்மீது அவருடைய திருவுருவம் அமைக்கப்பட்டிருக்கிறது. இராமகிருஷ்ணரின் காலம் 1836-1886. அவருடைய முதன்மை சீடர் ஸ்வாமி விவேகானந்தரின் காலம் 1863-1902. இராமகிருஷ்ணருக்கு இங்கேயே கோயில் அமைக்கவேண்டும், அது இப்படி இருக்கவேண்டும் என்று நினைத்தவர் விவேகான ந்தர். இன்னொரு நேரடி சீடரான விஜயாநந்தாவால் (1868-1938) ஜனவரி 14ம் நாள் 1938ல் இந்தக் கோயில் அர்ப்பணிக்கப்பட்டது.

உள்ளே உயிருடன் இருப்பது போலவே இருக்கும் அவரது திருவுருவம் பளிங்கில்.



இராமகிருஷ்ணரின் ஆலயத்தின் அருகே புல்வெளியில்

ஹிந்து கிறிஸ்துவ இஸ்லாமிய கட்டிடக் கலைகளை ஒருங்கிணைத்துக் கட்டப்பட்டுள்ளது இந்த இராமகிருஷ்ணர் ஆலயம்.


அந்த இடத்தில் இருந்த மாமரத்தில் ஏராளமான மாங்காய்கள் தொங்கிக்கொண்டிருந்தன. நிறைய மாமரங்கள் அந்தப் பகுதியில் இருந்தன. எனக்கு ஒரு காயைப் பறித்து அது என்ன மாமரம் என்று தெரிந்துகொள்ள ஆசை. மாங்காய் மீதும் ஆசை. மனைவி, அதையெல்லாம் தொடக்கூடாது என்று தடா போட்டுவிட்டாள்.

மடத்தின் அருகே ஓடும் ஹூக்ளி ஆறு

இராமகிருஷ்ணா மடம் அமைந்திருக்கும் பகுதியிலிருந்து 20 நிமிடங்கள் படகுச் சவாரியில் நாம் தக்ஷிணேஸ்வர் காளி கோயிலுக்குச் சென்றுவிடலாம்.
அடுத்த
வாரம் தொடரலாமா?
(தொடரும்)
= = = = = = = = = =====================================================================
ஆகாததும் உண்டோ புகல்."
- "வெட்டிப்பொழுதாய்க் கழிக்க வேண்டும் என்றால்
பட்டி மன்றமே துணை."
- " வாட்ஸாப் என்றொரு செயலி அதற்கு
மாட்சாய் வேறேதும் இலை."
- " ஃபேஸ்புக் என்றொரு தளம் அதுவே
பாஸ்புக்காம் பற்பல நபர்க்கு. "
- " ஊழலை ஒழிப்பதாய் உரத்துச் சொல்லிடினும்
சூழலில் மாற்றம் அரிது. "
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!