28.11.26

வாரம் ஒரு பாசுரம் தொடர் பகுதி 48

  

நாலாயிர திவ்யப் பிரபந்தம் – வாரம் ஒரு பாசுரம் தொடர்

நெல்லைத் தமிழன்

குரு பரம்பரை மற்றும் பாசுரம் – பகுதி 48 

ஆயிரம் வருடங்களுக்கு முன்பு, சாஸ்திர சம்ப்ரதாயங்களை ஓரளவு கடைபிடித்துவந்த ஆச்சாரமான பிராமண சமூகத்தில், பெரிய நம்பி செய்தது சமுதாயப் புரட்சியாகும். அதனை ஒத்துக்கொண்ட இராமானுஜர் ஆட்சேபம் தெரிவித்தவர்களின் வாயை மூடவைத்தார். (பெரிய நம்பியின் செய்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்க அவர்கள் அவரை ஜாதிப்ரஷ்டம் செய்ய முயன்றனர், மற்றும் அவரது திருமாளிகையின் முன்பு முட்களை இட்டு, அவரை வெளியே வரவிடாமல் செய்ய முயன்றனர்) 

மாறாநேர் நம்பியும் தன்னுடைய ஆச்சார்யரான ஆளவந்தாருக்கு எல்லாவிதமான கைங்கர்யங்களையும் செய்துவந்தார். ஆளவந்தாரின் உடைகளைத் துவைத்துச் சுத்தம் செய்வது போன்ற பலவற்றையும் விரும்பிச் செய்துவந்தார். இந்த விதமான கைங்கர்யங்களை ஒரு ஆச்சார்யருக்கு அவரது சீடர்கள் எந்த வித பாகுபாடுமின்றிச் செய்துவந்தனர். இராமானுஜரும் இதற்கு விதிவிலக்கல்ல. 

தொண்டரடிப்பொடி ஆழ்வார், தாம் இயற்றிய திருமாலையில் இரண்டு பாசுரங்களில் வைணவத்துவத்தைப் பற்றித் தெளிவாகச் சொல்லியுள்ளார். அதனை முதலில் பார்த்துவிடுவோமா? 

திருமாலை பிரபந்தத்தில் மொத்தம் 45 பாசுரங்கள் உண்டு. அதில் 42வது பாசுரத்தைப் பார்ப்போம். 

பழுதிலா ஒழுகல் ஆற்றுப் * பலசதுப் பேதி மார்கள்,*

இழிகுலத்தவர்களேலும் * எம் அடியார்களாகில்,*

தொழுமினீர் கொடுமின் கொள்மின்!' * என்று நின்னோடு ஒக்க,*

வழிபட அருளினாய் போல் * மதிள் திருவரங்கத் தானே!   

பொருள்:  மதில்களை உடைய திருவரங்கத்தில் பள்ளிகொண்டிருக்கும் அரங்கநாதனே, நான்கு வேதங்களை ஓதுகின்ற, ஒழுக்கமான நற்குணங்கள் கொண்ட பிராமணர்கள், அரங்கனின் அடியார்கள் தாழ்ந்த குலத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், அவர்களை நீங்கள் வணங்குவீர்களாகுக, உங்களிடம் இருக்கும்  நல்ல விஷயங்களை அவர்களுக்குக் கற்றுக் கொடுங்கள், அவர்களிடமிருக்கும் உன்னத விஷயங்களை நீங்கள் அறிந்துகொள்ளுங்கள் என்று உபதேசித்து அருளி, உனக்குச் சம மாக அவர்களை ஆராதிக்கவேண்டும் என்று அருளியிருக்கிறாய். 

விளக்கம்: பழுதிலா ஒழுகல் ஆற்று – பிரமன் முதலாகத் தொடர்ந்து வரும் வேதங்களை ஓதும் பரம்பரையில் ஒரு குற்றமும் சொல்ல இயலாதபடி வந்தவர்கள். சதுப்பேதி - பிராமணர்கள் நால்வகை வேதங்களையும் ஓதும் திறமை பெற்றிருந்ததால், சதுர்வேதிகள் என்று குறிப்பிடப்பட்டுள்ளனர்.  இழிகுலத்தவர் – இவர்களைக் காட்டிலும் இழிந்தவர்கள் இல்லை என்று சொல்லும்படி குணத்தாலும் பிறப்பாலும் தாழ்ந்திருந்தவர்கள்.  எம் அடியார்கள் ஆகில் – வைணவ பாகவதர்கள் என்றால்,  தொழுமினீர்-வணங்குங்கள், சேவியுங்கள், கொடுமின் – அறிவைப் பகிர்ந்துகொள்ளுங்கள், கொள்மின் – நல்ல விஷயங்களை அவர்களிடமிருந்து கேட்டுப் பெற்றுக்கொள்ளுங்கள், கற்றுக்கொள்ளுங்கள். 

எழும் சந்தேகம் – தாழ்ந்த குலத்தில் பிறந்தவர்கள் எப்படி ஞானிகளாக ஆகமுடியும்? எப்படி இறைவனின் அடியார்களாக ஆக இயலும் (அப்படிப்பட்ட நல்ல சிந்தனை அவர்களுக்கு இயல்பாக எப்படி வரும்?) 

கண்ணன் கீதையில் (7ம் அத்யாயம், 19ம் ச்லோகம்) 

ப3ஹுநாம் ஜந்மநாமந்தே* ஜ்ஞாந வாந்மாம் ப்ரபத்3யதே |*

வாஸுதே3வ:  ஸர்வமிதி* ஸ மஹாத்மா ஸுது3ர்லப4: ||* 

என்கிறான்.  இதன் அர்த்தம், ஒருவன் பல புண்யமான பிறப்புகள் எடுத்த பிறகே ஞானியாகி என்னைச் சரணம் அடைகிறான். அதிலும், எல்லாமே கண்ணன் என்று எப்போதும் எண்ணியிருக்கும் மஹாத்மாக்கள் மிக மிக அரிது. அதனால், பல புண்யமான பிறப்புகள் எடுத்து ஞானியானவர்கள் எந்தக் குலத்திலும் பிறந்திருக்கலாம். அவர்களால் அந்தக் குலம் பெருமைப்படுமே அன்றி, குலத்தால் அந்த மஹாத்மாக்கள் சிறுமைப்படுவதில்லை. 

இதற்கு உதாரணமாக பலர் இருக்கின்றனர் (ஏன் சமீப காலத்திலும்). இருவரை இங்கு  குறிப்பிடுகின்றேன். ஒருவர்   விதுரன்.  இன்னொருவர் தர்மவியாதர். 

விதுரன், வியாச மஹரிஷியின் அருளால், பணிப்பெண்ணுக்குப் பிறந்தவர். திருதிராஷ்டிரனுக்கும், பாண்டு மஹாராஜாவிற்கும் தம்பி. இருந்தாலும் பணிப்பெண்ணுக்குப் பிறந்தவர் ஆகையால், குலம் கருதி, அரசு உரிமை அவருக்குக் கொடுக்கப்படவில்லை, ஆனால் முக்கிய அமைச்சராக இருந்தார். மற்ற இருவரையும் விட, தர்ம நியாயம் தெரிந்த பெரிய மஹான். இவரைப் பற்றி அதிகமாக எழுதத் தேவையில்லை என்று நினைக்கிறேன். உங்கள் எல்லோருக்கும் தெரிந்திருக்கும். 

தருமவியாதர், மிதிலை மாநகரில் இறைச்சி விற்கும் தொழிலைச் செய்தாலும், தன்னுடைய பெற்றோருக்கு முழுமையான தொண்டு செய்த தாலும், தம்முடைய அறநெறிகளாலும் மிக உயர்ந்த ஞானம் பெற்றவர். 

கௌசிக முனிவர் கடும் தவம் செய்து ஞானம் பெற்றவர். ஒரு தடவை, அவர், ஒரு மரத்தின் கீழ் அமர்ந்திருந்தபோது, மரத்தின் மேல் அமர்ந்த கொக்கு எச்சமிட, அது கௌசிக முனிவர் மேல் விழுந்தது. கோபத்துடன் மேலே பார்க்க, அவரது கோப உக்கிரத்தில் அந்தக் கொக்கு சாம்பலாகிவிட்டது. 

பின்னர் அவர் நகரத்தில் பிக்ஷை எடுக்கச் செல்லும்போது, ஒரு வீட்டில், இவர் கூப்பிட்ட உடன் பிக்ஷையிட வராமல், தாமதம் செய்த பெண்ணைப் பார்த்து கோபமாய்ப் பார்க்க, அதற்கு அந்தப் பெண், நான் காட்டுப் பறவை இல்லை. உங்கள் கோபம் என்னை எரிக்காது. எனக்கு கணவருக்குச் செய்யும் தொண்டுதான் மிக முக்கியம் என்று சொன்னாள். 

அவள், காட்டுப் பறவையைப் போல நான் எரிந்துவிட மாட்டேன் என்று சொன்னதைக் கேட்டு ஆச்சர்யப் பட்ட கௌசிக முனிவர், உனக்கு எப்படி இது தெரிந்தது என்று கேட்க, அதற்கு அவள், ஞானம் பெற நீங்கள் மிதிலையில் உள்ள தர்மவியாதரிடம் செல்லுங்கள் என்று சொன்னாள். 

கௌசிக முனிவர் மிதிலைக்குச் சென்று தர்மவியாதரைக் கவனித்தார். அவரோ இவரைக் காத்திருக்கச் சொல்லி, தன்னுடைய இறைச்சிக் கடை கடமைகளை முடித்துவிட்டு, தன் பெற்றோருக்கான கடமைகளையும் முடித்துவிட்டு இவரிடம் வந்தார். 

கௌசிக முனிவருக்கு,  கடமைகள் பற்றியும், அகிம்சை பற்றியும், பெற்றோருக்குச் செய்யும் சேவை மற்றும் உண்மையான தர்மம் என்ன என்பது பற்றியும் உபதேசம் செய்தார் என்று அந்த மகாபாரத கிளைக் கதை செல்கிறது.

திருதிராஷ்டிரன் சபையில் கிருஷ்ணன் தூதுவராக வருகிறார். அடுத்த படம் விதுர ரும் அவர் மனைவியும் கிருஷ்ணருக்கு உணவளிக்கின்றனர். (இதுவே துரியோதனன் சபையில், விதுரரை அவமானப்படுத்தக் காரணமாகிவிடுகிறது. அதனையொட்டி, விதுரர் தன் வில்லை முறித்து யுத்தத்தில் பங்கு பெற மாட்டேன் என்று சபதம் செய்துவிடுகிறார்) 

விதுரரிடமிருந்த வில் விஷ்ணு வில், அதாவது கோதண்டம் எனப்படும் வில். அதனை யாராலும் வெல்ல இயலாது. அர்ஜுன னிடமிருந்த வில் காண்டீபம் எனப்படுவது. அது அக்னி பகவான் மூலமாக, வருணனிடமிருந்து கிடைத்த வில். ஆனாலும் காண்டீபத்தால் விஷ்ணு வில்லை வெல்ல இயலாது. அதனால் கிருஷ்ணர் தந்திரமாக விதுரரை விஷ்ணு வில்லைப் பயன்படுத்த முடியாதபடி செய்துவிட்டார். 

எம் அடியார்கள் ஆகில் – அரங்கனே நமக்கு எல்லாம் என்று எண்ணி, அவனுக்கே தொண்டு புரியும் அடியார்கள்.  அரங்கனும் அவர்கள் மீது பேரன்பு பூண்டு, நம்முடையவர்கள் என்று ஏற்றுக்கொள்கிறான். அதனால் ‘எம் அடியார்கள்’ என்று இங்கு குறிப்பிடப்படுகிறது. 

பிறந்த குலத்தாலும், கற்ற கல்வியினாலும் பெற்ற செல்வத்தினாலும் ஒருவன் கர்வம் கொண்டால், அதாவது மதம் கொள்வானேயாகில், அது இறைவனுக்கு உவப்பானது அல்ல. அப்படிப்பட்டவர்கள், தமம் – புலனடக்கம் கொண்டு, குலத்தைப் பாராமல், அரங்கனின் அடியார்களைச் சேவிக்க வேண்டும். 

உயர்ந்த குலத்தைச் சேர்ந்தவனுக்கு தாழ்ந்த குலத்தைச் சேர்ந்தவர் ஆச்சார்யராக இருக்க இயலுமா? இதற்கு இதிஹாசங்களிலும் புராணங்களிலும் பல்வேறு உதாரணங்கள் இருக்கின்றன. கைசிக மஹாத்மியத்தில், நம்பாடுவான் என்ற பாணர் குலத்தைச் சேர்ந்தவன், முற்பிறப்பில் வேதம் ஓதும் பிராமணனாகப் பிறந்து மந்திரங்கள் உச்சரிப்பதில் தவறுகள் செய்ததால் பிரம்ம ராக்ஷசனாகப் பிறப்பெடுத்த பிரம்மராக்ஷசனுக்கு உபதேசம் செய்து தன் புண்ணியத்தில் பாதியைக் கொடுத்து மோக்ஷம் அடையச் செய்த கதை ஒரு உதாரணம். 

எது ஞானம்? படிப்பதால் வருவது சாஸ்திர ஞானம். இது பொதுவாக பிராமணர்களிட த்தில் உண்டு. ஆனால் ஆத்ம ஞானம் என்பது இயல்பாக வரவேண்டும்.  ஆத்ம ஞானம் ஒன்றே இறைவனை அடைய வழி. அதாவது முழுமையான பக்தி உணர்வு, அதே சமயம் செய்யும் கடமையின் பலனில் பற்று வைக்காமல் இருப்பது. இதனால்தான் அரங்கன், தனக்கு தினமும் திருவாராதனம் செய்யும் லோக சாரங்க முனிவரை, தன்னிடம் ஆத்மார்த்த பக்தியுடன் இருந்த திருப்பாணாழ்வாரைத் தோளில் சுமக்கச் செய்து தன் முன் கூட்டி வரச் செய்தது. இதே போன்ற நிகழ்வைத்தான் நாம் நந்தனார் வாழ்வில் தில்லை நடராஜர் நடத்தியதைப் பார்த்தோம். 

இனி திருமாலை பிரபந்தத்தில், 43வது பாசுரம். 

அமரவோர் அங்கமாறும் * வேதமோர் நான்கும் ஓதி,*

தமர்களில் தலைவ ராய * சாதி அந்தணர்களேலும்,*

நுமர்களைப் பழிப்ப ராகில் * நொடிப்பதோர் அளவில்,* ஆங்கே-

அவர்கள்தாம் புலையர் போலும் * அரங்கமா நகரு ளானே!                

பொருள்: அரங்கமா நகரில் இருக்கும் அரங்கனே!  நான்கு வேதங்களையும் அவற்றிர்க்கு அங்கமாக இருக்கும் ஆறு அங்கங்களையும் தங்கள் நெஞ்சில் பதியும்படியாக ஓதியிருக்கும் பாகவதர் கூட்டத்தில் தலையானவர்களான பிராமணர்களாக இருந்தாலும், உம்முடைய அடியவர்களை, அவர்களின் குலத்தைக் கொண்டு நிந்தித்தாராகில், அந்த கணத்திலேயே அவர்கள் சண்டாளர்களாக ஆகிவிடுகிறார்கள். 

விளக்கம் – நான்கு வேதங்கள் – ருக், யஜுர், சாம, அதர்வண வேதங்கள். ரிக்வேதம் மிகப் பழமையானது, தெய்வங்களைப் போற்றும் பாடல்களைக் கொண்டது, யஜுர் வேதம் யாகங்கள் மற்றும் சடங்குகளைச் செய்யும் முறைகளை விளக்குவது, சாம வேதம் இசையுடன் பாடக்கூடிய மந்திரங்களைக் கொண்டது, அதர்வண வேதம் மாந்திரீகம், மந்திர உச்சாடனம், கலைகள் பற்றிக் கூறுவது.  அமர – நெஞ்சில் பதியும்படியாக,  அங்கம் ஆறும் – வேதங்களின் அங்கமாக க் கூறப்படும் சிட்சை, கல்பம், வியாகரணம், நிருத்தம், சந்தஸ், ஜ்யோதிஷம் ஆகிய ஆறு.  சிட்சை என்பது வேத மந்திரங்களைச் சரியான ஒலியோடு உச்சரிக்கும் விதம். கல்பம் – யாகங்கள் மற்றும் சடங்குகளைச் செய்யும் முறை. வியாகரணம் – இலக்கண விதிகள், நிருத்தம் – பழமையான வேதச் சொற்களுக்கு வேரான சொற்களை பொருளுடன் விளக்குவது, சந்தஸ் – செய்யுள் வடிவம் மற்றும் எழுத்துக்களின் அளவு, ஜ்யோதிஷம் – வானியல் அறிவியல்.  தமர்கள் – பக்தர்கள், பாகவதர்கள்.  தலைவராய சாதி அந்தணர்கள் – குலங்களில் தலைமையான பிராமணர்கள்,  நுமர்கள் – உம்முடைய அடியவர்கள் – அதாவது அரங்கனைப் பார்த்துக் கூறுவதாகப் பாசுரம். 

இதில் சாதி அந்தணர்கள் என்று சொல்லப்படுபவர்கள் பிறப்பால் பிராமணர்களை மாத்திரம் குறிக்காது. வேதங்கள் மற்றும் அவற்றின் ஆறு அங்கங்களையும் முறையாகப் பயின்று நெஞ்சில் தேக்கி வைத்து, நல்லொழுக்கமும் அறிவும் பெற்றவர்களைக் குறிக்கிறது. அதாவது அந்தணர்களிலும் உயர்ந்த மஹான்களைக் குறிக்கிறது. அப்படிப்பட்டவர்களுமே, பாகவத அபசாரம் செய்தால் அந்தக் கணத்திலேயே புலையர்கள் ஆகிவிடுகிறார்கள் என்பது அர்த்தம். 

இஷ்வாகு வம்ச அரசனான திரிசங்குவை, வசிஷ்டரின் மகன்கள் சபித்து சண்டாளனாக்கிவிடுகிறார்கள். அப்போது திரிசங்குவின் தங்கச் சங்கிலிகளே, சண்டாளர்களிடம் இருக்கும் தோலால் செய்யப்பட்ட வார் போன்று ஆகிவிட்ட து என்பார்கள். அதுபோல, பாகவத அபசாரம் செய்யும் உத்தம பிராமணர்களுடைய முப்புரி நூலுமே தோல் வார் போல ஆகிவிடும் (அதாவது அதனுடைய தகுதியை இழந்துவிடும்) என்பது கருத்து. 

பாசுரங்களுக்கு கொஞ்சம் விளக்கமாகப் பொருள் எழுதலாம் என்று நினைத்தால் அதுவே ஒரு வாரத்தின் பகுதியை ஆக்கிரமித்துவிடுகிறது. இனி இராமானுஜர் வரலாற்றைத் தொடரலாம். 

பெரிய நம்பியின் வரலாறை நாம் பின்பு பார்க்கலாம் (அப்போதுதான் இராமானுஜர் வாழ்வின் தொடர்ச்சியாக அது அமையும்). 

கொங்கில் பிராட்டிக்கு தன் பாதுகை நிலைகளை இராமானுஜர் பிரசாதி த்த தைப் பார்த்தோம். அப்படி இராமானுஜர் தினமும் மாதுகரம் எடுத்துவந்தார். இந்த நிகழ்வு, அவர் வாழ்ந்திருந்த தெருவில் நடந்தது என்கின்றனர். (கிழக்கு உத்தர வீதி). எனக்குத் தோன்றியது, அவர் திருப்பாவை அனுசந்தானம் செய்துகொண்டு கோயிலைச் சுற்றியுள்ள உத்தர வீதி அல்லது சித்திரை வீதியில் உள்ள வீடுகளில் மாதுகரம் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு இடங்களில் எடுத்திருக்கலாம் என்று. 

அந்த காலகட்டத்தில், இராமானுஜர், கோயில் பணி செய்யும் துறையில் உள்ளவர்களுக்கு ஆசாரங்களைக் கற்பித்து அதன்படி அவர்கள் நடக்கிறார்களா என்று கடுமையாகக் கண்காணித்து வந்தார். பெருமாளுக்கு கண்டருளப்பண்ணுவது மிகவும் ஆசாரமாக நடக்கவேண்டும் என்ற எண்ணம் இராமானுசருக்கு. இதனாலெல்லாம் பலருக்கு இராமானுஜரிடம் கோபம் இருந்தது. அந்தத் துறைகளுக்கெல்லாம் தலைவரான உத்தமநம்பியின் (எந்த எந்தத் துறைகள்? திருவாராதனம் செய்வது, மடப்பள்ளி கைங்கர்யம், பெருமாளுக்கு அலங்காரம் செய்வது போன்று பல்வேறு கைங்கர்யங்கள் செய்யும் அந்தணர்கள்) சம்பந்திகளில் ஒருவர், இராமானுஜர் மாதுகரத்திற்குச் செல்லும் ஒரு வைணவருடைய திருமாளிகையில், அவருக்கு நூற்றைம்பது பொன் கொடுத்து, இராமானுஜருக்கு மாதுகரத்தில் விஷம் கலந்த அன்னத்தை பிக்ஷையாகக் கொடுக்கும்படித் தூண்டினர். 

அந்த வைணவரும், தன்னுடைய மனைவியிடம் விஷம் கலந்த அன்னத்தை இராமானுஜர் மாதுகரத்திற்கு வரும்போது இடச் சொல்லித் தூண்டினார். அந்த அம்மையாரோ, இராமானுஜரின் பிரபாவம் அறிந்தவள் ஆகையால் அப்படிச் செய்ய மறுத்துவிட்டாள். ஆனால் அவள் கணவர் நிர்பந்திக்க, அந்தப் பெண்பிள்ளையும் இராமானுஜருக்கு அவ்வன்னத்தை மறைத்து, மற்ற மாதுகரங்களுடன் சேராமல் விலக்கி சமர்ப்பித்து, கண்ணீருடன் அவரது திருவடிகளில் விழுந்து பிறகு அச்சத்துடன் நின்றாள். 

எம்பெருமானாரும் இதனைக் குறிப்பால் உணர்ந்து  விஷம் கலந்த அன்னத்தை மற்ற அன்னங்களுடன் திருக்காவிரியில் கரைத்தார். அதனை உண்ட காகம் விழுந்த தைக் கண்டு உண்மை தெரிந்த எம்பெருமானார், மிகுந்த மனவருத்த   மடத்திற்கு எழுந்தருளி சில நாட்கள் உண்ணாமல் உபவாசமிருந்தார். 

இதனைக் கேள்விப்பட திருக்கோஷ்டியூர் நம்பி, அப்போதே புறப்பட்டு திருவரங்கம் நோக்கி விரைந்தார். தென் திருக்காவிரியில் எழுந்தருளி வரும்போது மத்தியான வேளையாகிவிட்டது. நம்பி வரும் செய்தி கேட்டு இராமானுஜர் தம் சீடர்களுடன் காவிரிக் கரைக்கு விரைந்து வந்து அவரை காவிரி மணற்பரப்பில் கண்ட மாத்திரத்திலேயே நெடுஞ்சாண்கிடையாக விழுந்தார். மணலோ சுடுமணல் பரப்பு. திருக்கோஷ்டியூர் நம்பி, உடையவரை எழுந்திருக்கச் சொல்லவில்லை.   

இதனைப் பார்த்து இராமானுஜருடன் வந்திருந்த கிடாம்பியாச்சான் உச்சிப் பொழுதாகையாலே மனம் பதைத்து, திருக்கோஷ்டியூர் நம்பியைப் பார்த்து, “இது என்ன சிஷ்ய ஆச்சார்ய கிரம ம்? அங்கே அவளிட்ட விஷ அன்னத்தைப் பார்க்கிலும் இந்த சுடுமணலில் கிடப்பது கொடிதாகாதோ? கருமுகை மாலையை கனத்த வெயிலில் இட்டு மனம் மகிழ்ந்திருக்க முடியுமா?” என்று கோபமாக க் கேட்டு, இராமானுஜரை வாரி அணைக்க முயல, அதைக் கண்டு, நம்பிகள் நகைத்து, ஆச்சானே, எம்பெருமானார் திருமேனி பக்கல் பரிவு கொண்டு யாரேனும் இருக்கிறாரா என்று சோதிக்கவே நாம் வாளா இருந்தோம். இனி இன்று தொடங்கி நீரே தளிகை பண்ணி, ஏக மாதுகரமாக எம்பெருமானாருக்கு சமர்ப்பியும் என்று அருளிச் செய்து, திருக்கோஷ்டியூர் திரும்பினார். 

அன்று தொடங்கி, கிடாம்பியாச்சானே உடையவருக்கு சந்தோஷம் அளிக்கும் வகையில் அந்தக் கைங்கர்யம் பண்ணிக்கொண்டு இராமானுஜர் மடத்தில் தங்கியிருந்தார். 

இராமானுஜர் தானான திருமேனி, திருவரங்கம் கோயில். இரண்டாவது படத்தை  கிடாம்பியாச்சான் வைபவம் எழுதிக்கொண்டு வந்தபோது பார்த்து மனது நெகிழ்ந்துவிட்டது. 

பல்கலையோர் தாம் மன்ன வந்த இராமானுஜன் சரணார விந்தம் நாம் மன்னி வாழ, நெஞ்சே சொல்லுவோம் அவன் நாமங்களே 

அடுத்த வாரம் தொடர்வோமா?...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!