அன்றும், ஒரு அயல்நாட்டுப் பயணிகள் கூட்டம் அவனுடைய பார்வையில் அகப்பட்டது. அவர்களும் ஒன்று சேர்ந்து நடக்காமல் நன்நாவாய், மும்மூன்றாய், இரண்டிரண்டாய்தான் ஹோட்டலைவிட்டு வெளியில் கிளம்பிக் கொண்டிருந்தனர். அப்படியும் அவர்கள் எல்லோரும் ஒரே மாதிரி மனப் பாங்கிலிருப்பதாக சட்டென்று எடுத்துக் கொண்டுவிட முடியாது. சிலர் டூரிஸம் டெவலப்மெண்டு பஸ்ஸில் ஏறி மாமல்லபுரம் செல்லக் கூடியவர்களாயிருக்கலாம். சிலர் கடைத்தெருவை மட்டும் சுற்றிப் பார்க்கக் கூடியவர்களாயிருக்கலாம். சிலர் கடற் கரைக்கு மட்டுமே சென்று சூரியக் குளியலை மேற்கொள்பவர்களாயிருக்கலாம். இவர்கள் அவனுக்குச் சரிபடாது. இவர்களால் காசுக்குப் புண்ணியமில்லை. சிலர் ஹிப்பித் தோற்றமுடைய இளைஞர்களாயிருந்தார்கள். அவர்களைக் கண்டதுமே காத்தமுத்து அருவருத்து தூர விலகிவிடுபவன். அவர்களிடம் காசு பெயராது என்பது இருக்கட்டும், கஞ்சா வாங்கிக் கொடுக்கும்படி இவனை உயிரை எடுத்திருக்கிறார்கள்.
அவனுடைய வாடிக்கைகள் கண்ணியமாயிருக்க வேண்டும். தாராளமாயிருக்க வேண்டும். எதோ சவாரி ஏறினார்கள், நாமும் நான்கைந்து இடங்களையே திரும்பத் திரும்பச் சுற்றி வந்து காட்டி கணக்கு பண்ணினோம் என்றிருக்க வேண்டும்.
- ஹார்பர் சார், சைனா பஜார் சார், ஹைகோர்ட் சார்-என்று சொல்லி சுட்டிக் காட்டினபடியே எம்யூசி வழியே திரும்பிச் சென்று காட்டினதையே வேறு எதாவது பெயரில் அழைத்துக் காட்டிவிடுவதுண்டு. கரிய தன் சப்பை வயிற்றைப் பொத் பொத்தென்று இரண்டு அறை அறைந்து காட்டி கூடுதலாக கறந்துவிடுவான்.
அந்த வகையில் தன் வழியில் படிந்து விடும்படியாய் அவர்களில் யாரார் இருக்கிறார்கள் என்று கூர்ந்து கவனித்து கடைசியில் பொறுக்கி எடுத்து விடுவான்.
அந்த வயதான ஜோடியை இன்று குறி வைத்துவிட்டான். அந்த மேனாட்டு ஜோடி ஆளுக்கொன்றாக உயர்ந்த ரக காமிராலை வைத்துக் கொண்டு விளையாடத் தொடங்கி யிருந்தனர். பெரிய பெரிய சினிமா பானர்கள், அண்ணாசாலை நெரிசலையெல்லாம் படம் எடுத்துக்கொண்டே நடந்து - மற்றவர்களை விட்டு தனித்தே நடந்து செல்லும் ஜோடியை நெருங்கினான் -
மியூசியம் சார், ஆர்ட் சார், மெரீனா பீச் சார், .கைடு சார்-என்றான்."
அவர்களிருவருமே, "நோ..... நோ..." என்று இவனை ஒதுக்கிவிட்டுத் தம் காரியத்தில் கண்ணாயிருந்தனர்.
மீண்டும் இவன் நச்சரித்தான். அப்போது இரண்டு மூன்று பிச்சைக்கார சிறுவர்கள் வெள்ளைக்காரர்களைக் கண்ட மாத்திரத்தில் ஓடிவந்து சூழ்ந்து கொண்டனர். - தொரெ ... தொரெ... - என்று கத்தி கையை அவர்கள் மீது உயராத குறையாய் நீட்டினபடியே தொடர்ந்தனர். பிறகு ஆளாளுக்கு துரை-துரைச்சானிகளைத் தொட்டுத் தொட்டு கெஞ்சி யாசித்தபடியே விடாமல் தொடர்ந்து வந்தனர். ஒருவன் காலைக் காலைப் பிடித்துத் தொட்டுக் கும்பிட்டு யாசித்தபடியிருந்தான். ஈயோட்டுவது போல ஓட்டிக் கொண்டிருந்தாள் துரைச்சானி.
அப்போது அவர்கள் செயலிழந்தாற்போல கத்தளித்தவாறு அங்குமிங்கும் பார்க்கத் தொடங்கிவிட்டனர். யாராவது உதவிக்குத் தேவைப்பட்டார்கள், காத்தமுத்துவின் ரிக்ஷா ஒரு ரதம் போல பக்கவாட்டில் உராய்வது மாதிரி வந்து நின்றது. குரலை முறுக்கி ஒரு அதட்டல் போட்டான். "இல்லே...போடா...... போங்கடா ஒண்ணு மில்லே."
அந்தப் பிச்சைக்காரர்கள் நம்பிக்கையிழக்காமல் அந்த வெள்ளைக்காரத் தம்பதிகளைத் தொட்டு, கால்களைப் பிடித்து கெஞ்சிக் கொண்டேயிருந்தனர்.
"இல்லே...போடா போடா... இல்லே,"
சிறுவர்கள் சோர்வடைந்து பின் தங்கிப் போனார்கள். என்ன தோன்றியதோ அந்தத் தம்பதி ரிக்ஷாவில் ஏறிக்கொண்டுவிட்டது.
"வாண்ட் டாப்?" என்று கேட்டுவிட்டு ரிக்ஷாவின் கான்வாஸ் டாப்பை விரிக்கப் போனவனைத் தொட்டுச் சொன்னாள் துரைச் சானி.
"ஈல்லே...ஈல்லே... டாப் ஈல்லே..."
ஓகோ, தமிழ் வந்துவிட்டதே இவளுக்கு என்று புரிந்துகொண்ட வியப்பான மகிழ்ச்சி யோடு அவர்களோடு ஒத்துழைத்தான்.
அப்புறமும் அவர்களை நெருங்கி வந்த பிச்சைக்காரர்களை அந்த ஐரோப்பியர்களே உரத்த குரலில், "ஈல்லே...ஈல்லே..." என்று சொல்லிச் சொல்லியே விரட்டிக் கொண்டிருந்தார்கள். காத்தமுத்துவும் போன இடத்திற்கே காட்டின இடங்களையே வேறு வழியில், வேறு திசையில் சுற்றிச் சுற்றி வந்து காட்டிவிட்டான்.
பிறகுதான் பூம்புகார் சிறப்பங்காடிக்குப் போக வேண்டுமென்றார்கள். வாசலில் இறக்கிவிட்டுவிட்டு இவன் வெளியிலேயே நின்றுவிட்டான். அவர்கள் உள்ளே போய் ஒரு கால் மணி நேரங்கழித்து துரைச்சானி வேகமாய் வந்து அவனையும் தன்னோடு உள்ளே வரச் சொல்லி அழைத்துப் போனாள். துரை மெய்மறந்து போய் அந்த சுட்ட செம்மண் குதிரையின் முன் நின்றிருந்தார். அந்த அய்யனார் குதிரை சுட்ட மண்ணுருவம். அதன் கழுத்தில் கட்டிவிடப்பட்டிருந்த விலை சீட்டு காத்தமுத்துவை வாயைப் பிளக்க வைத்தது. ஒன்பது நூறு ரூபாய்கள் சொச்சம். அதை அவர்கள் வாங்கிக் கொண்டார்கள். அருமையாக பாக் செய்யப்பட்ட மண் குதிரையை அவன் தூக்கிக் கொண்டு வந்து ரிக்ஷாவில் வைத்தான்.
ஓட்டலுக்கே திரும்பச் சொன்னார்கள். இவன் பேசாமல் வண்டியைச் செலுத்தினான். அந்தக் குதிரை... அவனுடைய எண்ணத்தைப்போட்டு அலைக்கழித்தது. அதன் விலை மதிப்பு அவனை அசத்தியிருந்தது. அத்தோடு, அதை அவன் ஏற்கெனவே எங்கோ பார்த்திருப்பதாய் உணர்ந்தான். எங்கே எங்கே என்று யோசித்தபடியே ஓட்டலை நெருங்கிவிட்டான். அதைத் தங்கள் அறையில் கொண்டு வந்து வைக்கும்படி கேட்டுக் கொண்டனர்.
ஆ, வந்துவிட்டது ஞாபகத்திற்கு அது. ஊர் தள்ளி, எல்லையில் ஓர் பாழடைந்த கோயிலில் அவற்றையெல்லாம் பார்த்திருக் கிறான், அய்யனார் மற்றும் குதிரைகள்.
அவர்களுடைய குதிரைப் பொட்டலத்தைச் சுட்டிக்காட்டி, அதைவிடப் பெரிய மண் குதிரை ஓரிடத்திலிருப்பதாயும் அதைத் தான் மறுநாள் காட்டுவதாகச் சொன்னான். அதைக் கேட்டு அவர்கள் பெரு வியப்படைந்திருக்க வேண்டும்.
அவர்கள் காரில் புறப்பட்டனர் காத்தமுத்து வழி சொல்லிக் கொண்டே போனான். காரை பாதையோரமாய் நிறுத்தி விட்டு வயலில் இறங்கி நடக்க வேண்டுமென்றான். சிறு காடு போன்ற இடம் வந்ததும் அவர்கள் அந்த உருவங்களைக் கண்டனர். இரண்டு அய்யனார்கள், நான்கைந்து குதிரைகள் துருப்பிடித்த சூலங்கள்.
வெள்ளைக்காரத் தம்பதிகள் அய்யனார் உருவங்களைப் பற்றிக் கேட்டுக் கொண்டார்கள். நிறைய புகைப்படங்கள் எடுத்துக் கொண்டார்கள். குதிரையின் அருகில் காத்தமுத்துவை நிற்க வைத்துப் படமெடுத்தார்கள். அந்த மேனாட்டுப் பெண்மணி அவனிடம் மெலிந்த குரலில் கேட்டான்: "இந்த மாதிரி குதிரை எனக்கொன்று கிடைக்குமா?"
காத்தமுத்து மொட்டை மொட்டையாகப் பதில் சொன்னான்: இங்கிருக்கிறதிலிருந்தே ஒன்றைத் தன்னால் எடுத்துத் தூக்கிக் காரில் வைக்க முடியுமென்று கூறினான்.
உடனே அவள் உருவங்களைப் பார்த்தாள். சூலங்களும் அதில் தொங்கும் காய்ந்த பூமாலைகளும் அவளை இன்னொரு முறை யோசிக்க வைத்திருக்கலாம். ஒருவித நடுக்கத்தோடு தோளைக் குலுக்கிக் கொண்டே "ஈல்லே...ஈல்லே..." என்றாள்.
சற்று தூரத்தில் மண்ணில் சுடுமண்ணுருவம் ஒன்று கிடப்பதைக் கண்டு சொல்லி அவர்களை அங்கே அழைத்துப் போனான்.
"ஓ, எவ்வளவு அழகானது! எவ்வளவு அற்புதமானது!'' என்றாள் அந்த மாது.
ஓர் அய்யனார் குதிரையின் தலைப் பகுதி மட்டுமே அது. கழுத்திலிருந்து தலை. கழுத்தும் தலையும் மட்டுமே அது. உடல் பகுதி காணோம். சற்று தூரத்தில் நிற்கும் உருவங்களை விடவும் காலத்தால் பழையது என்பதை அந்த மேனாட்டுத் தம்பதிகள் புரிந்துகொண்டனர். அங்கே வழிபாட்டிலிருக்கும் உருவங்களைக் காட்டிலும் இந்த பின்ன உருவம் கலை வேலைப்பாட்டில் மேம்பட்டதாய்த் தோன்றியது.
"இதை நாங்கள் எடுத்துக் கொள்வதில் யாருக்கும் எவ்வித கஷ்டமுமில்லையே?" என்று அவனுக்குப் புரியும் விதத்தில் சொற்களாயும் சைகைகளாயும் வெளிப்படுத்தினாள் அந்த மாது.
ஆனால் அது பின்னமானதாயிற்றே என் றான் இவன்.
பரவாயில்லையென்று கூறிவிட்டு அந்தக் குதிரை தலையை ஒரு புரட்டு புரட்டினாள் அவள். அடுத்த கணமே கிறீச்சிட்டலறிவிட் டாள்.
அந்தத் தலையின் பொந்திலிருந்து — என்ன வகையோ தெரியவில்லை - ஒரு பாம்பு நெளிந்து வெளியேறி மறைந்தது.
காத்தமுத்து அதைத் தூக்க முற்பட்ட போது மேனாட்டு மாது அவனைத் தடுத்து விட்டு, "ஈல்லே... ஈல்லே..." என்றாள்.
-இதென்னடா சுத்த பேஜாரு கிராக்கி - என்று முணுமுணுத்துக்கொண்டான். என்ன சொல்லியும் அந்தக் குதிரை தலையைத் தூக்க வேண்டாமென்று சொல்லிவிட்டு சில பத்து ரூபாய் நோட்டுக்களை எடுத்து அவனிடம் நீட்டினாள்.
எதற்காகப் பணம் தருகிறாள் என்பது அவனுக்கு விளங்கவில்லை.
"இல்லே... வாணாம்" என்று மறுத்தான்.
அவளோ, "ஈல்லே... ஈல்லே..." என்று மட்டுமே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டே ரூபாய் நோட்டுக்களை அவனது கையில் திணிக்க முற்பட்டாள் திரும்பி தூரத்திலிருக்கும் சூலங்களைப் பார்த்தாள்.
இவனும் திரும்பிச் சொன்னான்: "இல்லே வாணாம்..."
"ஈல்லே... ஈல்லே..."
அவளது அன்பளிப்பை ஏற்றுக் கொள்ளுவதின் மூலமாக மட்டுமே தனக்குப் புரிந்து கொள்ளுதலில் விளையும் சங்கடத்தையும் சந்தேகத்தையும் உதறித் தள்ளிப் புறக்கணிக்க முடியுமென்று நினைத்தான்.
"சரி," என்று உதிர்த்துவிட்டு வாங்கிக் கொண்டான். அப்போது அவர்கள் போய் காரில் உட்கார்ந்தார்கள். கார் செல்லும் போது அவள் பைனாகுலரை வைத்து சூலங்களையே பார்த்தபடியே இருந்தாள் என்பது காத்தமுத்துவுக்குத் தெரியாது.
- தீபம் - .1987 டிசம்பர்-ஜனவரி
========================================================================================


விட்டல்ராவ் கதையை இங்கு பார்த்ததில் சந்தோஷம். அவரும் தொலைபேசித் துறையில் பணியாற்றியவர். சேலத்தில் எனது பள்ளி பருவத்திலேயே இவரை அறிந்திருந்தேன். 'ந.பிச்சமூர்த்தியிலிருந்து எஸ்.ரா. வரை' என்ற என் நூலில் விட்டல்ராவின் படைப்புகள் பற்றி எழுதியிருக்கிறேன்.
பதிலளிநீக்குவிட்டல்ராவின் இந்த 'ஈல்லே' சிறுகதை பற்றி நண்பர்கள் என்ன சொல்லப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு எகிறியிருக்கிறது.
வாருங்கள் ஜீ வி சார். உங்களை இந்தப் பக்கம் காண்பது அரிதாகிக் கொண்டே வருகிறது. அடிக்கடி வாருங்கள்.
நீக்குவிட்டல் ராவ் பல பரிசுகள் வென்ற சாதனையாளர். நாவல் ஏதும் எழுதியிருக்கிறாரா தெரியவில்லை. கதை செல்கிற பாதை நன்றாக இருக்கிறது. வேறு படே எழுதினால் கடைசியில் அவன் குதிரைபொம்மையைக் கைதவறிக் கீழே போட்டான் என்று முடித்திருப்பார்கள். இவரும் அப்படிச் செய்துவிடக்கூடாதே என்ற கவலையோடு தான் படித்தேன்.
வாங்க ஜீவி ஸார்.. யதேச்சையாக உங்கள் நண்பர் பெயர் கண்ணில் பட்டு வந்திருக்கிறீர்கள் போல.. அவரும் தொலைத்தொடர்புத்துறைதானா? மகிழ்ச்சி. தஸ்தாவெஸ்கி மீதான உங்கள் கவிதை எஸ்ரா சொன்னதைக் கேட்டா...?
நீக்குராமன் ஸார். நான் தினமும் திங்கட்கிழமை தவிர எபி-யை வாசித்து விடுவதுண்டு. கருத்திட வேண்டும் என்று மனதிற்கு தோன்றுகிற பொழுது கருத்திடுகிறேன். அவ்வளவு தான். அமெரிக்க நூலகங்கள் பிரமிக்க்ச் வைப்பவை. எப்பொழுதும் என் வாசிப்பிற்காக வீட்டில் பத்து - பன்னிரண்டு நூல்கள் இருக்கும். Detective - Mistry நாவல்களில் கதை சொல்லும் பாணி என்னை அசத்தியிருக்கிறது. நிறைய நேரம் இயற்கை வனப்புகளில் மனத்தை பறிகொடுக்கும் வாய்ப்பும் வாய்த்திருக்கிறது. இதோ இலையுதிர் காலம் முடிந்ததும் snow வந்து விடும். பிப்ரவரி முடிவு வரை wint
நீக்குஸ்ரீராம்! இளம் பிராயத்தில் அந்நாளைய சோவியத் இலக்கியங்கள் பரிச்சயம் ஆன பொழுது NCBH வெளியீடுகள் வாசிக்கும் பேராசை பற்றிக் கொண்டது. அப்பொழுதிலிருந்தே மாக்ஸிம் கார்க்கி, டாலஸ்டாய், செகாவ்
தஸ்தாவெஸ்கி எல்லோரும் அறிமுகம் தான்.
ஸ்ரீராம்! விட்டல்ராவ் மட்டுமில்லை, ஜெயமோகனும் தொலைபேசித் துறையில் பணியாற்றியவர் தான். தர்மபுரி, நாகர்கோயில் போன்ற இடங்களில் பணியாற்றி சொந்த காரணங்களுக்காக விருப்ப ஓய்வு பெற்றவர் அவர்.
நீக்குஅனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குவாங்க கோமதி அக்கா.. வணக்கம்.
நீக்குகதை நன்றாக இருக்கிறது.
பதிலளிநீக்கு//இல்லே...போடா...... போங்கடா ஒண்ணு மில்லே."
வெளிநாட்டவர் இல்லே என்பதை ஈல்லே என்று கற்றுக் கொண்டது அருமை.
//சூலங்களும் அதில் தொங்கும் காய்ந்த பூமாலைகளும் அவளை இன்னொரு முறை யோசிக்க வைத்திருக்கலாம். ஒருவித நடுக்கத்தோடு தோளைக் குலுக்கிக் கொண்டே "ஈல்லே...ஈல்லே..." என்றாள்.//
கோயில் சொத்தை எடுத்து போக அச்சமாக இருக்கிறது,
அய்யனார் குதிரையின் தலைப் பகுதி வேறு பயமுறுத்தி விட்டது.
//அவள் பைனாகுலரை வைத்து சூலங்களையே பார்த்தபடியே இருந்தாள் என்பது காத்தமுத்துவுக்குத் தெரியாது.//
சூலம் பயமுறுத்தி இருக்குமோ!
இப்படி இப்போது கோயில் சிலைகளை கொள்ளையடிப்பவரை இறைவன் பயமுறுத்தினால் நன்றாக இருக்கும்.
அந்த நேரம் மனதில் ஒரு நேர்மை தலைதூக்கியதோ!
நீக்குமிக அருமையான நினைவுகள்.
பதிலளிநீக்கு// கறி ரொம்ப நன்றாக இருக்கிறது .எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. உங்கள் எல்லோருக்கும் வைத்துக் கொண்டு மீதம் இருந்தால் எவ்வளவு இருந்தாலும் போடுங்கள் " என்று சொன்னது மீண்டும் மீண்டும் என் நினைவுக்கு வரும். //
அடுத்தவர்களுக்கு சாப்பிட வேண்டும் என்ற நினைப்பு எல்லோருக்கும் போக மீதி இருந்தால் கொடுங்கள் என கேட்கும் தன்மையும் பிடித்து இருக்கிறது.
ஆனால் அம்மா இன்னும் கொஞ்சம் போட்டு இருப்பார்கள்.
//மொழி என்பது ஒரு கருவி தான் . நாம் பேசுவது பிறருக்குப் புரிந்தால், அவர் பேசுவது நமக்குப் புரிந்தால் மொழியின் பயன் முடிவுக்கு வந்துவிடுகிறது. இதில் சின்ன சின்னத் தப்புகள் செய்வதைப் பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டிய தேவை இல்லை " என்று சொன்னது என் ஞானக்கண்ணைத் திறந்தது போல் ஆயிற்று. //
நல்ல உறவினர் அவர் சொன்னது உண்மை.
//என் தாயார், " ஒரு தடவை ' முருகா ' என்று சொல்லிவிட்டுப் போ, உன் வேண்டுதல் பலிக்கும் " என்று அடிக்கடி சொல்வார். //
அம்மாவின் அற்புதமான குணம் நாம் கற்றுக் கொள்ள வேண்டியது.
நினைவில் நின்ற பகிர்வு அருமை, பகிர்ந்து கொண்டதற்கு நன்றி சார்.
ரசித்துப் படித்திருக்கிறீர்கள். எழுதுபவரின் எதிர்பார்ப்பும் அதுதானே ! தன்யனானேன் !
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா அக்கா.. வணக்கம். இணைந்து பிரார்த்திப்போம்.
நீக்குஅன்பின் அனைவருக்கும் இனிய காலை வணக்கம். தங்கச்சி கோமதிக்கு மாலை வணக்கம்.
பதிலளிநீக்குஹா ஹா ஹா ஒரே ஊர்க்காரவுங்க......!! வாங்க வல்லிம்மா.. வணக்கம்.
நீக்குதிரு விட்டல் ராவ் கதையைப் பதிந்ததற்கு மிக நன்றி. பழைய எழுத்துக்களில் இருக்கும் உயிரோட்டமே தனி. அந்த நாளைய ரிக்ஷா. !!! அவனின் துல்லிய மன ஓட்டம். சரியான ஈல்லே பதிவு.
பதிலளிநீக்குஆக, திரு விட்டல்ராவ் எனக்குதான் புதுசு என்று தெரிகிறது!
நீக்குகோவில் சிற்பம், அதுவும் அய்யனார் கோவில் குதிரை!! நினைக்கவே நடுக்கமாக இருக்கிறது. என்னதான் அயல் நாட்டவராக இருந்தாலும் அமானுஷ்யத்தையும் புனிதத்தையும் புரிந்தவர்களாக இருந்திருக்கிறாகள்.
பதிலளிநீக்குஇப்போது நம்மூர் மக்களே தூக்கிக் கொடுத்துப் பணம் பார்க்கிறார்கள். பாம்பு வேறு வந்து பயமுறுத்தி விட்டது:( ஏமாற்று வேலை செய்யும் ரிக்ஷா ஓட்டுபவரை நான் முன்பெல்லாம் பார்த்ததில்லை. இன்றைய ஆட்டோக்காரர்கள் தலையைச் சுற்றி மூக்கைத் தொடுவதே நமக்குப் பழகி விட்டது. நல்லதொரு இயற்கையான கதை.
நல்ல கற்பனை கொண்ட கதை. ஓரளவு புரிந்துகொள்ள முடிந்தாலும் அவளின் அந்த முடிவுக்கு என்ன காரணமாயிருக்கும், வேறு ஏதும் காரணமிருக்குமோ என்று எண்ண வைக்கும் கதை அமைப்பு.
நீக்கு''
பதிலளிநீக்குநம் வாழ்வில் நடந்த சிறு சிறு சம்பவங்களில் பேசப்பட்ட சிறு சிறு சம்பாஷணைகள் சில நம் நினைவில் இருப்பதுடன் மீண்டும் மீண்டும் நமது நினைவின் மேல் தட்டுக்கு வருவதைக் கவனித்திருக்கிறோம்.'''''''
பழைய நினைவுகள் மறப்பதில்லை. சமீபத்தில் நடப்பவை தான் மறந்து போகிறேன்:)
ஆஹா வயதானவர்களிடம் கேட்கும் ரெகுலர் டயலாக். மூளையின் நியூரான்கள் வலிமை இழக்கும்போது இவை நிகழ்கிறது.
நீக்குநல்லதை மறப்பதில்லை என்பது எல்லா நல்லதுக்கும் பொருந்துமா என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் கெட்டது சிறிது பெரிது எதுவுமே மறப்பதில்லை. இது நமது மன வக்கிரத்தைக் காட்டுகிறதா ?
நீக்குஇல்லை மனித பலவீனத்தை காட்டுகிறது.
நீக்குஅக்காவின் கணவர் மொழிகள் அவருடைய கம்ம்யூனிகேட்டிங் திறனைக் காட்டுகிறது. பாவம் அம்மா, தனக்கு வைத்துக் கொண்டாரோ இல்லையோ, மாப்பிள்ளைக்குப் போட்டு இருப்பார்.
பதிலளிநீக்குஹா.. ஹா.. ஹா... அந்த மாப்பிள்ளை வேறு எல்லாவற்றையும் சூடாகக் கேட்பவர்!
நீக்குமனசாட்சியம்... நல்லதை நினைத்திருக்கும் மனம், சுடுசொல்லை, ஒரு கெடுதல் சம்பவத்தை, அவமானத்தை மறக்கிறதா? என்னதான் பிற்காலத்தில் சமரசமானாலும் மனது அதனை ஒரு கசப்பு மருந்துபோல ஒரு ஓரமாக நிரந்தரமாக வைத்துவிடுகிறதே
பதிலளிநீக்குஇப்படி ஆகும் என்று தெரிந்ததுதானே மைலாப்பூர் தாடிக்காரர் "நன்றல்லது அன்றே மறப்பது நன்று" என்று சொல்லி வைத்திருக்கிறார்! வாங்க நெல்லை.
நீக்குநான் 'மேலே' சொல்லி இருப்பதைப் பார்த்திருப்பீர்கள். நல்லதை மறந்தாலும் மறப்போம் கெடுதலை மறப்பதில்லை என்பதே உண்மை. நம்முடைய வெற்றிகள் என்று வரும்போது அதில் எல்லாமும் நம் நினைவில் இருக்கிறதா என்பதும் எனக்குத் தெளிவாகத் தெரியவில்லை.
நீக்குவெற்றியடைந்து திருமணத்தில் முடியும் காதல்கள் பேசப்படுவதில்லை. காவியமாவதில்லை. தோல்விகள்தான் கொண்டாடப்படுகின்றன. அதுபோல சந்தோஷ தருணங்கங்களைவிட வருத்த கணங்கள் மனதில் நின்று விடுகின்றன. நல்லவைகளை விட கெட்டவைகள் நினைவிலேயே நிற்கின்றன!
நீக்குஅதே நேரம் நமக்கு ஏற்பட்ட திருப்பம் பெருமிதத் தருணங்கள் பாராட்டை அச்சீவ்மென்டை மறப்பதே இல்லை என்பதும் உண்மைதான்
பதிலளிநீக்குஅது பற்றிய தகவல் அடுத்த தீபம் இதழில். இந்த தீபம் இதழில் நா பா மறைவு பற்றிய செய்தியும், இரங்கால்களும் வெளியிடப்பட்டிருக்கின்றன.'' திரு நா பா. அவர்களின் ஒவ்வொரு நாவலும் ஒவ்வொரு விருந்து.
பதிலளிநீக்குஎனக்கு சட்டென நினைவுக்கு வருவது சமுதாய வீதி.
நீக்குமுருகா சரணம்
பதிலளிநீக்குவாங்க செல்வாண்ணா வணக்கம்
நீக்குநலம் வாழ்க
பதிலளிநீக்குநலமே நாடுவோம்.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய பொக்கிஷ கதை நன்றாக உள்ளது. இப்போதுதான் இக்கதையை படிக்கிறேன். படித்தும் ரசித்தேன்.
வெளிநாட்டினரை தன் ரிக்ஷாவில் ஏற்றி அழைத்துக் கொண்டு, சுற்றி காண்பித்த இடங்களையே மீண்டும் சுற்றிக்காட்டி வேண்டிய காசு பெறும் காத்தமுத்து அய்யனார் கோவிலில் வைத்து அந்த வெளிநாட்டு பெண்மணி தனக்கு கைநிறைய பணம் தருவதை மட்டும் சட்டென ஏற்றுக் கொள்ள ஏன் மறுத்தானோ.? அந்த பயம் அந்த வெளிநாட்டு மாதுவுக்கும் தோன்றியதில் வியப்பில்லை. அய்யனார் சிலைகளும், அதன் அருகிலிருக்கும் பிரமாண்டமான குதிரைகளும் என்றுமே மனதில் ஒரு தெய்வபக்தியுடன் ஒரு விதமான அச்சத்தையும் தரும். அங்கு நேர்மையாக நடந்து கொள்ளாவிடில் அய்யனாரின் கோபத்திற்கு ஆளாவோம் என்ற பய உணர்ச்சி எல்லோருக்கும் வருவது சகஜந்தான். அந்த அச்சம் காத்தமுத்துவுக்கு மட்டுமில்லாமல், அந்த வெளிநாட்டு பெண்மணிக்கும் வந்துள்ளது. கடைசி வரியில் அவள் தன் பைனாகுலரில் அந்த சூலங்களை பார்த்தபடி பயணித்தாள் என்பதில், அவளின் மனபயத்தை புரிந்து கொள்ள முடிகிறது.
சகோதரி கோமதி அரசு அவர்கள் சொல்லியபடி, தெய்வசிலைகளை கடத்துபவர்களுக்கு இவ்வுணர்வு தோன்றினால் நல்லது. அக்கால முகலாய அரசர்கள், வெளிநாட்டினர் என அனைவரும் நம் நாட்டுடன் செய்த போர்களில் எத்தனை, சிலைகள், எத்தனை இடங்களை தெய்வமென நோக்காமல் சிதைத்திருக்கிறார்கள். ஒவ்வொரு இடங்களிலும் இப்போது அதைக் காணும் போது மனம் பதைக்கிறது. கதைப்பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
ஆமாம். அப்படி பணத்துக்கு அலைபவன் ஏன் அவள் பணம் கொடுக்கும்போது மட்டும் பணத்தை வாங்கத் தயங்குகிறான் என்பது ஒரு கேள்வியாக எனக்குள்ளும்
நீக்குஅந்த இடத்தின் நேர்மை தந்த பயந்தான் அவனுக்குள்ளும் வந்திருக்கும் என்பது என கணிப்பு.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய மனசாட்சியமும் அருமையாக உள்ளது.
/மூளையில் அறுவை சிகிச்சை நடந்த போது ஏதோ ஒரு இடத்தைத் தொட்டதும், நோயாளி தன் பதின்ம வயது நாள் ஒன்றில் அவர் பார்த்ததை அப்படியே ஒப்பித்தாராம் . மூளை அறுவை சிகிச்சை நடக்கும்போது நோயாளிக்கு மயக்க மருந்து கொடுப்பதில்லை என்பதால் அவரது எல்லாப் புலன் இயக்கங்களும் இயல்பு நிலையில் இருக்குமாம். " மூளை அறுவை நடக்கும்போது விழித்திருந்தேன் " என்ற தலைப்பில் ஒரு கட்டுரை பல்லாண்டுகளுக்கு முன்னால் ரீடர்ஸ் டைஜஸ்டில் வெளியானதைப் படித்திருக்கிறேன்./
மூளையில் அறுவை சிகிச்சை நடத்தும் போது நோயாளிக்கு மயக்க மருந்து ஏதும் தர மாட்டார்கள் என்பதை இப்போதுதான் அறிந்து கொண்டேன்.வலிக்காதோ. ? வலியை விடுங்கள். ஒரு வித பயம் பதட்டம் நோயாளிக்கு வராதோ? அட.! . மு. பி. செ. சு. கா தெரியும் என்பது உண்மையாகிறது.
நினைவுகளைப்பற்றி நீங்கள் சொன்னதெல்லாம் அருமை. நாம் திரும்ப, திரும்ப ஒரு விஷயத்தை யோசிக்கும் போது மூளை அதை மனப்பாடமாக பதிவு செய்து வைத்துக் கொண்டு விடுகிறது. அந்த காட்சிகள் கூட நம் கண்முன் திரைப்படமாக வந்து நிற்க தவறுவதில்லை.
தங்களின் ஆங்கிலப் புலமைக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள் எல்லாவற்யும் மனம் திறந்து பேசும் உங்களின் இந்தப் பகுதியை மிக ரசிக்கிறேன். அனுபவ அறிவு மிகுந்த உங்களுக்கு என் பணிவான வணக்கங்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நம் மூளையின் சில நியூரான்களை நிரடினால் சென்ற ஜென்ம ஞாபகம் வருமாம். ஆனால் அது எது என்று கண்டு பிடிப்பது சிரமமாம்.
நீக்குஉங்கள் பதிவு உற்சாகம் தருகிறது. ரொம்ப சந்தோஷம். நன்றி. ஆங்கில ப் புலமையெல்லாம் பெரிதாக எதுவுமில்லை. ஆழமான வாசிப்பும் கிடையாது. பிழை தவிர்த்து எழுதுவதும் படித்துப் புரிந்து கொள்வதும் பெரிய விஷயம் இல்லை..
நீக்குவிட்டல்ராவ் படமும் வரைவார் என நினைவு. எனக்குத் தெரிந்து முதலில் ஆனந்த விகடனில் தான் இவர் கதையைப் படிச்சிருக்கேன். ஏதோ பரிசு பெற்றிருந்ததுனு நினைக்கிறேன். ஹோசூரில் இருந்தார் எனக் கேள்விப் பட்டிருக்கேன். என் அண்ணாவுக்கு ஹோசூரில் தான் முதல் போஸ்டிங். அப்போ அங்கே அண்ணா பெரிய வீடு எடுத்திருந்தார். அங்கே அம்மா போய் அண்ணாவுக்குச் சமைத்துப் போடுவதற்காக இருந்தார். மதுரையில் நான், அப்பா, தம்பி. பள்ளி விடுமுறையில் ஹோசூர் போவோம். அப்போ அங்கே எதிர் வீட்டில் இருந்த ஓர் வக்கீலிடம் (கன்னடக்காரர்) விட்டல்ராவ் பற்றிக் கேட்டேன். அவர் தெரியாதுனு சொல்லிட்டார். ஆனால் அவர் அங்கே இருந்ததில்லை என்பதெல்லாம் தெரியாது. அவருடைய சரளமான எழுத்துப் பிடிக்கும். தொலைத்தொடர்புத் துறையில் இருந்தது இன்னிக்குத் தான் தெரியும். ஏதோ ஒரு மருத்துவமனையில் வேலை என்பதாகப் படிச்சிருந்தேன்.
பதிலளிநீக்குநல்ல கதை. எல்லோருக்குமே மனசாட்சி உறுத்தி இருக்கிறது. அதிலும் ஐயனார் அல்லவா? குதிரையில் ஏறிக்கொண்டு துரத்திக் கொண்டு வரமாட்டாரா? அதை எல்லாம் அந்த வெளிநாட்டுப் பெண்மணிக்குத் தெரிஞ்சிருக்குமோ? அல்லது உள்ளுணர்வாலும் பாம்பைப் பார்த்த பீதியாலும் ஏற்பட்ட தயக்கமா? தெரியலை.
இம்மாதிரி ரிக்ஷாக்காரர்கள் ஏமாற்றுவதை அந்தக் காலத்து எழுத்தாளர்களான தேவன் அவரக்ளும் கொத்தமங்கலம் சுப்பு அவர்களும் தங்கள் கதைகளில் குறிப்பிட்டிருப்பார்கள்.
அப்போதெல்லாம் ஆட்டோக்களைவிட ரிக்ஷாக்கள் அதிகம். அப்புறம் குதிரை வண்டிகள். விட்டால் ஹோசூரில் இருந்தாரா என்று ஜீவி ஸார்தான் சொல்ல வேண்டும்.
நீக்குஹோசூர் தான் அவர் ஊர் எனச் சொல்லிக் கேள்வி. ஆனால் பெரும்பாலும் சேலத்தில் இருந்திருக்கார் போல. சரியாத் தெரியலை.
நீக்குகோவில் வளாகத்துக்குள் இருந்ததால் அங்கே தவறு செய்ய மனம் இடம் கொடுக்கவில்லை. இம்மாதிரி எல்லாம் நம் அறமற்ற நிலையத் துறை ஆட்களுக்கு ஏற்படாதோ? கோயிலுக்குள்ளேயே தான் வேலை செய்கின்றனர். என்னவோ எல்லோரும் சொல்கிறாப்போல் அந்த ஆண்டவன் தன்னைத் தானே தான் காப்பாத்திக்கணும் முதல்லே.
பதிலளிநீக்குஅது சரி, இந்த வருஷம் "விஷ்ணுபுரம்" பரிசு கொடுத்தது இவருக்குத் தானா? "விட்டல்ராவ்" என்று படிச்ச மாதிரி இருக்கு. ஜெயமோகனை எல்லாம் இப்போப் பின் தொடருவதோ படிப்பதோ இல்லை என்பதால் சரியாத் தெரியலை. :( விட்டல்ராவ் இருக்கார் இல்லையா? இப்படிக் கேட்டதுக்கு மன்னிக்கவும். :(
விஷ்ணுபுரம் பரிசா, இவருக்கா யார் சொன்னா
நீக்குநம்ம கோவிலின் புனிதம் பயம் அவர்களுக்கு இருக்காதே
விஷ்ணுபுரம் பரிசு வருஷா வருஷமா? ஆமாம்னு நினைக்கிறேன். சிறந்த எழுத்தாளர்கள் என அவர் குழு கருதுபவர்களுக்கு ஜெயமோகனால் கொடுக்கப்பட்டு வருகிறது.
நீக்கு//நம்ம கோவிலின் புனிதம் பயம் அவர்களுக்கு இருக்காதே //
நீக்குஇருக்கும்னு நினைக்கிறேன். ஏனெனில் ஃப்ரான்சில் உள்ள ஓர் மலைக்கோயிலுக்குப் போகும் கிறித்துவர்கள் அதற்கென உரிய முறைகளைக் கடைப்பிடிப்பதாய்க் கேள்விப் பட்டிருக்கேன்.
ம்ம்ம்ம்? இன்னிக்குப் பெரியவர் எழுதி இருப்பதில் முழுக்க முழுக்கப் புதுசாக இருப்பது மூளை அறுவை சிகிச்சையில் மயக்க மருந்து கொடுப்பதில்லை என்பதே! இப்போத் தான் தெரியும் என்பதோடு ஆச்சரியமாகவும் இருக்கு. ஏனெனில் அம்பத்தூரில் எங்க பக்கத்து வீட்டு மாமிக்கு விடாத தலைவலியால் மூளையில் அறுவை சிகிச்சை செய்திருந்தார்கள். எழுபதுகளின் கடைசியில் என நினைக்கிறேன். டாக்டர் ராமமூர்த்தி அவர்களின் மேற்பார்வையில் அவர் சீடர் நரேந்திரனோ என்னமோ பெயர், அவர் தான் சிகிச்சை செய்திருந்தார். நாங்கல்லாம் பார்த்தப்போ மாமிக்குத் தலையைச் சுத்தமாக மொட்டை அடிச்சுட்டு அறுவை சிகிச்சை பண்ணி இருக்காங்க. அதோடு ஆபரேஷன் செய்ய கபாலத்தைத் திறந்ததாகவும் சொன்னாங்க. கட்டுப் போட்டு இருந்தாங்கனு நினைவு. அதோடு அப்போ இருந்த பயத்தில் இதை எல்லாம் சரியாக் கவனிக்கவும் இல்லை. ஆனால் மாமி 2, 3 நாட்கள் மயக்கமாவே இருந்திருக்காங்க.
பதிலளிநீக்குநம் மூளை தேவையானதை நினைவில் வைச்சுக்கும். தேவை இல்லாதவற்றை அழிச்சுடும். இதை நான் பல முறை கவனிச்சிருக்கேன். அது போல் தான். நமக்கு நேர்ந்த சந்தோஷங்களை விடவும் துன்பங்களையும் நம்மைப் படுத்தியவங்களையும் தான் நினைவில் வைச்சுக்கிறது. இதை எப்படி மாத்தறதுனு யோசிக்கவே வேண்டாம். சம்பந்தப்பட்ட நபரோட நல்ல நடவடிக்கை மட்டும் நினைவில் வைச்சுண்டு அவங்க செய்த கெடுதல்களை எல்லாம் அழிச்சுட்டு அவங்களை மன்னிச்சால் போதும்.
மூளை ஆபரேஷன் என்றதும் எனக்கு மகரிஷியின் அதுவரையில் காஞ்சனா கதை நினைவுக்கு வருகிறது. ஒரு விபத்தில் மரணமடையும் காஞ்சனா என்னும் பெண்ணின் மூளையை எடுத்து இன்னொரு பெண்ணுக்கு வைப்பார்கள். அடன்ஹாப் பெண் காஞ்சனாவாகவே வாழத்தொடங்குவார்.
நீக்குகருத்துகளுக்கு நன்றி.
நீக்குமஹரிஷி கூட சேலத்துக்காரர் தான். இவருடைய ஒரு கதை தான் "புவனா ஒரு கேள்விக்குறி" திரைப்படமாக வந்து ரஜினிக்குப் பெயர் வாங்கித் தந்தது இல்லையா? அதுக்கப்புறமா சிவகுமார் இரண்டு கதாநாயகர்கள் முக்கியமாய் ரஜினி, கமல் ஆகியோருடன் நடிக்க மறுத்துவிட்டதாகச் சொல்லுவார்கள்.
நீக்குமஹரிஷியின் இந்தக் கதை மாலைமதியில் வந்த நினைவு. நினைவில் இருக்கு. இதே போல் ஓர் உறுப்பு மாற்றும் கதை அந்தக்கால அதாவது அறுபதுகளின் கடைசியில்னு நினைவு "ராணி" பத்திரிகையில் வந்திருக்கு. குரும்பூர் குப்புசாமியா எழுதினது? நினைவில் இல்லை. அதிலேயும் மூளையில் தான் ஆபரேஷன் மாத்தி நடந்துடும். அதனால் வரும் குழப்பங்கள் தான் கதையே.
நீக்குசில பேருக்குக் கை ராசி உண்டு என இப்போதும் சொல்லுபவர்கள் உண்டு. எங்க வீட்டிலும் இந்தப் பைத்தியம் எல்லோருக்கும் உண்டு. நான் பொதுவாக ஏதேனும் புதுசா ஆரம்பிச்சால் ஸ்ரீராமஜயம் சொல்லிட்டு ஆரம்பிப்பேன். தடங்கல் வந்தாலும் ராமஜயம் தான். மனசுக்குள் அந்த ராமஜயம் ஜபம் ஓடிண்டே இருக்கும். எப்போவானும் தூக்கிவாரிப் போட்டுக்கொண்டு நிஜ உலகைப் பார்க்க வைக்கும். அப்போ எல்லாமே புதுசாத் தெரியும். சுதாரித்துக் கொண்டு விடுவேன். இது ஏன்னு தெரியாது. ஒரு நிமிஷ ப்ளாக் அவுட் என நம்ம ரங்க்ஸ் சொல்லுவார். தெரியலை. புரியலை. :(
பதிலளிநீக்கு- ஏதேனும் புதுசா ஆரம்பிச்சால் ஸ்ரீராமஜயம் சொல்லிட்டு ஆரம்பிப்பேன்.-
நீக்குநான் அம்மாவை நினைத்துக் கொள்வேன். முருகா என்று சொல்லிக்கொள்வேன்.
நம்பிக்கைகள் நிம்மதிக்கு ஒரு சாதனம்.
நீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குதமிழகத்தில் அதிகார அமைப்புகளால் கண்டுகொள்ளப்படாத மூத்த படைப்பாளிகளை கௌரவிப்பதற்கென ஜெயமோகனால் நிறுவப்பட்டும் தொடரும் ஆண்டு விருது விஷ்ணுபுரம் விருது.
பதிலளிநீக்கு2026 க்கான ’விஷ்ணுபுரம்’ விட்டல்ராவுக்கு வழங்கப்படுவதாக ஜெ தளம் சொல்கிறது. விட்டல் பெங்களூரில் வசிக்கிறார் தற்போது, பாவண்ணனைப் போல!
விஷ்ணுபுரம் விருது இந்த வருடம் இவருக்குத்தான் என்பது மகிழ்ச்சி தருகிறது.
நீக்கு@Ekanthan, Thanks for confirming. Somebody posted in FB, I think.
நீக்கு... திரு விட்டல்ராவ் எனக்குதான் புதுசு என்று தெரிகிறது!//
பதிலளிநீக்குஇலக்கிய எழுத்தாளராக அவரைப்பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஒருவேளை, இவரின் சிறுகதை ஒன்றை ஏதாவது வார இதழில் வாசித்து, இப்போது நினைவிலில்லையோ என்னவோ...
இருக்கலாம்.
நீக்கு