ஆலு பனீர் கிரேவி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆலு பனீர் கிரேவி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

20.2.17

"திங்க"க்கிழமை 170220 :: ஆலு பனீர் கிரேவி


கிச்சன் பக்கம் சென்று நாளாகி விட்டது.  ஆயிரத்தில் ஒருவன் எம் ஜி ஆர் மாதிரி நேற்று என் பாஸிடம் "பூங்கொடி.. இரு..  சற்று விளையாடி விட்டு வருகிறேன்" என்று கிச்சனைப் பார்க்கக் கிளம்பியதும் பாஸ் என் பக்கம் திரும்பி புன்னகைக்கு பதில் பீதிப்பார்வை பார்த்தார்.



கத்தரிக்காய் - முருங்கைக்காய்  -  இதை என் மாமியார் ஏனோ "முருங்கிக்காய்" என்பார்! -  வெந்தயக்குழம்பு செய்து (ப்பூ....  இதெல்லாம் ஜுஜுபி!  ஆனால் அதை பற்றி நாம் கதைக்கப் போவதில்லை சகோதரி அதிரா..) ) ஓரமாக வைத்து விட்டு...  கறிக்கு (கரமது, பொரியல் எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம்) என்ன செய்யலாம் என்று பார்த்தேன்.  சேனைக்கிழங்கு கண்ணில் பட்டது.  வேண்டாம்.  ஒரே ஒரு கத்தரிக்காய் (மீதி) இருந்தது.  வேண்டாம்.  கண்ணில் பட்ட முட்டைக்கோஸையும் பன்னீர்செல்வத்தை ஒதுக்கிய 122 எம் எல் ஏக்கள் போல விலக்கினேன். 


உருளைக்கிழங்கை வைத்து விளையாட முடிவு செய்தேன்!  ஆம், விளையாட்டுத்தான்.  கைக்கு கிடைத்ததை எல்லாம் எடுத்து ஒரு குழந்தை விளையாடுமே..  அது போல அடுத்த கொஞ்ச நேரத்துக்கு நானும் ஒரு குழந்தையாகிப் போனேன்.


அரசியலில்தான் பன்னீரைக் கொண்டு வர முடியவில்லை.  சமையலில் பனீரைக் கொண்டு வருவோம் என்று முடிவு செய்தேன்.




நடுத்தர அளவில் ஐந்து உருளைக் கிழங்கை வேகவைத்து எடுத்துத் தோலுரித்துக்கொண்டு..






குடைமிளகாயை நறுக்கி எடுத்துக்கொண்டு,







நான்காக வெட்டிய பெரிய வெங்காயத்தைப் பிரித்து -  ஆம், பிரித்து -  இதழ்களை பிரித்து எடுத்துக்கொண்டு...






பனீரை நறுக்கி எடுத்துக்கொண்டு..




இரண்டு தக்காளி, நான்கு பச்சைமிளகாயை அரை ஸ்பூன் பெருஞ்சீரகம், கொஞ்சூண்டு பட்டையுடன் வதக்கி எடுத்துக் கொண்டு,துருவிய அரைமூடித்  (சிறிய மூடி!) தேங்காயுடன் கொஞ்சம் கொத்துமல்லி சேர்த்து  மிக்சியில் அரைத்துத் தனியாக வைத்துக்கொண்டு.....


தோல் நீக்கிய உருளையில் உப்பு, காரப்பொடி, பெருங்காயம், தூவிக் கொண்டு,





குடை மிளகாயையும், வெங்காயத்தையும் தனித்தனியாக உப்பு கொஞ்சம் சேர்த்து வதக்கி எடுத்துக் கொண்டு.. (தனித்தனியாக உப்பு சேர்ப்பதால் மொத்தமாக எவ்வளவு போடுவது என்று வேண்டாமே என்று இந்தமுறை இப்படி)


காரத்தில் ஊறிய உருளையை வாணலியிலிட்டுத் திருப்பி,





குடைமிளகாய் சேர்த்து...




வெங்காயம் சேர்த்து...  இன்னும் கொஞ்சம் காரம் சேர்த்து..

             


அரைத்த கலவையைச் சேர்த்து...


பனீரைப் போட்டுத் திருப்பி..   செஷ்வான் பொடியை  தூவி, திருப்பி...



வெளியில் வந்தால் மேஜையில் பாஸ் காலை வாங்கி வைத்திருந்த ப்ரெட்!  விடலாமா?   எடுத்தேன்.  வாணலியில் இட்டு புரட்டினேன்.   




இறக்கி வைத்து விட்டு வெளியில் வந்தால் கண்ணில் பட்ட கொத்துமல்லித் தழையை பொடியாக நறுக்கி அதன்மேல் தூவி..



வறுத்த ப்ரெட் துண்டங்களை போட்டுப் புரட்டி..




சாப்பிடலாம்.  ரெடி!  





"இதைச் செய்த நேரத்துக்கு நான் ஒரு ஃபுல் சமையலே செய்திருப்பேன்" என்று பாஸ் இடது தாவாங்கட்டையையையும் இடது தோள்பட்டையையும்  இணைத்துக் கொண்டதை நான் இங்கு சொல்லப்போவதில்லை.  


பெரியவன் கருத்து  :  "குடைமிளகாயை இன்னும் சிறிதாக நறுக்கி, இன்னும் கொஞ்சம் வதக்கி இருக்கலாம்!"   சற்றுப் பெரிய அளவில் இருந்ததால் அது வதங்கவில்லை  என்னும் முடிவுக்கு வந்துவிட்டான் போல! இருக்கலாம்.  திருத்தம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.


சிறியவன் கருத்து  :  "ஓக்க்க்க்கே....  ஆனால் ஒன்று சொல்லணும்... இது மாதிரி சாப்பிட்டதில்லை.  பனீர் செமையாய் சேர்ந்திருக்கு!"


அண்ணன் மகன் கருத்து  :  "நல்லாயிருக்கு.  இன்னும் கொஞ்சம் காரம் சேர்த்திருக்கலாம். "  ஆமாம்....  தக்காளியும், தேங்காய்த்துருவலும் காரத்தைக் குறைத்திருக்கும். 


கணினியை வைத்தியம்  இளைஞரின் கருத்து :  "இதுவரை இதுமாதிரி சாப்பிட்டதில்லை ஸார்.  நன்றாக இருக்கு"  செய்முறையைச் சொல்லியிருந்தால் தெறித்து ஓடியிருப்பார்.  அப்புறம் என் கணினி எப்படிச் சரியாகும்!  எனவே நன்றி கூறிப் புன்னகைத்து விட்டு மௌனமானேன்.


நன்றி...  மீண்டும் ஒரு திங்கறகிழமையில் உங்களைச் சந்திக்கும்வரை வணக்கம் கூறி விடை பெறுவது..  உங்கள்...