22.8.26

வாரம் ஒரு பாசுரம் தொடர் பகுதி 34 & நான் படிச்ச கதை

 

நாலாயிர திவ்யப் பிரபந்தம் – வாரம் ஒரு பாசுரம் தொடர் 

நெல்லைத் தமிழன்

குரு பரம்பரை மற்றும் பாசுரம் – பகுதி 34 

திருவரங்கத்தின் பெருமைகள் என்ன? ஏன் ஆழ்வார்கள் திருவரங்கன் மீது மிக அதிகமாகப் பாசுரங்கள் இயற்றியிருக்கின்றார்கள்? ஆச்சார்யார்களுக்கு ஏன் அது தலைமைப் பீடமாக இருந்தது? 

வைணவ சம்ப்ரதாயத்தில் மூன்று முக்கியமான கோயில்கள் உண்டு. அவை, கோயில் என்று சிறப்பித்து அழைக்கப்படும் திருவரங்கம் கோயில், திருமலை என்று அழைக்கப்படும் திருப்பதி கோயில், பெருமாள் கோயில் என்று அழைக்கப்படும் காஞ்சீபுரம் வரதராஜப் பெருமாள் கோயில். இதற்கு அடுத்ததாகத்தான் திருமாலிருஞ்சோலை என்ற அழகர் கோயில்.  (சைவ மரபை ஒழுகுபவர்களுக்கு கோயில் என்றால் அது சிதம்பரம், தில்லை நடராஜர் கோயில்) 

நீங்கள் எந்த முக்கியமான கோயிலுக்குச் சென்றாலும், அந்தக் கோயிலில் இந்த மூன்று மூர்த்தங்களுக்கும் சன்னிதி இருக்கும். திருமலையில் த்வஜஸ்தம்பத்தைத் தாண்டியதும் இடது புறம் வரதராஜப் பெருமாள் சன்னிதி உண்டு. வெள்ளி வாசலைத் தாண்டியதும் நீங்கள் நேரே பார்த்தால் தங்கக் கவசமிடப்பட்ட பகுதியில் அரங்கநாதரைச் சேவிக்கலாம். அவருக்கு மேலாக பரவாசுதேவன் இருப்பார். 

ஒவ்வொரு கோயிலிலும் பாதுகாப்புக் கவசமாக நரசிம்மர் சன்னிதி மற்றும் கோபுர, விமானம் மற்றும் தூண்களில் நரசிம்மரின் பல்வேறு உருவங்கள் இருக்கும். திருவரங்கத்தில் கோயிலுக்குள் தாயார் சன்னிதி அருகில், கம்பர் இராமாயணத்தை அரங்கேற்றிய மண்டபத்தின் எதிரே 20 படிகள் மேலே மேட்டில் அமைந்துள்ளது மேட்டழகியசிங்கர் சன்னிதி. 

பல நூற்றாண்டுகளுக்கு முன்பாக திருவரங்கம் பகுதி அடர்ந்த காடாக இருந்தது. அங்கு இருந்த மக்களுக்கும் பெரியோர்களுக்கும் காட்டு யானைகள் அச்சுறுத்தல் இருந்தது. அவர்களுக்காக இங்கு பெரியாழ்வாரின் சீடரான வல்லபதேவ பாண்டிய மன்னன் நரசிம்மரை இங்கே எழுந்தருளச் செய்து கோயில் கட்டினான் என்கின்றனர். அதன் பிறகு அந்தக் கோயிலைத் தாண்டி யானைகள் வருவதில்லையாம். பொதுவாக கோயிலில் மூலவர் கிழக்கு நோக்கி அருள்பாலிப்பார். ஆனால் இங்கு மேற்கு நோக்கி, அதாவது திருவரங்கம் கோயிலைப் பார்த்தவாறு மூலவர் இருக்கிறார். மூலவர் லக்ஷ்மி நரசிம்மர் 8 அடி உயரத்தில், மகாலக்ஷ்மியை தன் இடது துடை மீது அமரவைத்த கோலத்தில் காட்சி தருகிறார். 

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால், தனிமையில் ரஹஸ்ய அர்த்தங்களை சீடர்களுக்கு விளக்கிச் சொல்ல இந்தக் கோயில் மண்டபத்தை ஆச்சார்யர்கள் உபயோகித்ததாகச் சொல்வர். அது பற்றி பின்னர் பிள்ளை லோகாச்சார்யார் பற்றி எழுதும்போது வரும்.

காட்டழகிய சிங்கர், திருச்சி திருவரங்கம்

இது தவிர இன்னொரு அழகியசிங்கர் கோயிலும் இருக்கிறது என்று படித்தேன். அது ஆற்று அழகிய சிங்கர். இது திருச்சியின் அருகில் காவிரி ஆற்றுப் பகுதியில் இருக்கிறதாம். மூன்று நரசிம்ம மூர்த்தியையும் ஒரே நாளில் தரிசனம் செய்வது விசேஷமாம். 

மேட்டழகிய சிங்கர், திருவரங்கம் கோயில். இங்கு மூலவர் இல்லை.

ஆற்றழகிய சிங்கர், திருச்சி (காவிரிக் கரையில்)

 அப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த திருவரங்கம் கோயிலைப் பற்றித்தான் ஆழ்வார்கள் அதிகமாகப் பாசுரங்களால் பாடியிருக்கிறார்கள். திருவரங்கத்தைப் பற்றி 247 பாசுரங்களும், திருவேங்கடம் பற்றி 202 பாசுரங்களும், திருமாலிருஞ்சோலை பற்றி 128 பாசுரங்களும், திருக்கண்ணபுரம் பற்றி 128 பாசுரங்களும், திருநறையூர் பற்றி 110 பாசுரங்களும் உள்ளன. இந்த ஐந்து வைணவ திவ்யதேசக் கோயில்களுக்குத்தான் நூற்றுக்கும் மேற்பட்ட பாசுரங்கள். 

திருவரங்கம் அரங்கனின் சோலை என்றும் திருவரங்கனை, அரங்கத்தின் பெரும் செல்வம் என்றும் அழைப்பர். திருவரங்கம் ஒரு தீவு. அதில் வடமேற்கில் இருப்பது அரங்கன் கோயில். தென் கிழக்கில் இருப்பது பழைமை வாய்ந்த திருவானைக்கா சிவத் தலம்.   

சிலப்பதிகாரத்தில் (2-4ம் நூற்றாண்டில் சேரன் செங்குட்டுவன் தம்பியான இளங்கோவடிகளால் இயற்றப்பட்டது. ஞாயிறு பகுதிகளில் நாம் கேரளம் தமிழ் பேசப்பட்ட நிலம் என்று பார்த்திருக்கிறோம். சேர அரசனின் தம்பி ஒரு காவியம் படைக்கும் அளவு தமிழறிவு பெற்றிருந்தார்) காடுகாண் காதையில் உள்ள வரிகள் 

நீல மேகம் நெடும் பொற் குன்றத்துப்
பால் விரிந்து அகலாது படிந்தது போல,
ஆயிரம் விரித்து எழு தலை உடை அரும் திறல்

பாயல் பள்ளி, பலர் தொழுது ஏத்த,

விரி திரைக் காவிரி வியன் பெரும் துருத்தித்

திருவமர் மார்பன் கிடந்த வண்ணமும் 

பொருள்: ஒரு பெரிய பொன்னாலான மலையின் மீது, கரிய மேகங்கள் சூழ்ந்திருப்பது போலவும், அந்த மேகத்தின் மீது வெண்மையான பால் படந்திருப்பது போலவும் காட்சி தருகிறது. அங்கு   ஆயிரம் தலைகளைக் விரித்து எழுகின்ற, பலரும் வியக்கும் இணையற்ற ஆற்றல் கொண்ட ஆதிசேஷன் எனப்படும்  நாகத்தின் மீது,  பலரும் வணங்கிப் போற்றும் நிலையில், விரிந்த அலைகளை உடைய காவிரியாற்றின் இடையில், திருமகளை மார்பில் வைத்திருக்கும் திருமால் கிடந்த கோலத்தையும் 

விளக்கம்: நீலமேகம் – கரிய கொண்டல் மேகம். மழையைத் தன்னுள்ளே அடக்கிக்கொண்டிருக்கும் மேகம் கரிய நிறமாக இருக்கும். அதனை நீல மேகம் என்று சொல்வது வழக்கம் (நீல மேகச் சியாமளனை நீ போய் அழைத்துவாடீ  பாடல் நினைவுக்கு வருகிறதா?  பெருமானை, கருநீல வண்ணன் தன்னை என்று திருநெடுந்தாண்டகத்தில் வரும்)  பாயல் – படுக்கை. பள்ளி – சயனித்திருத்தல் 

பரிபாடலிலும் (கிபி 3ம் நூற்றாண்டைச் சேர்ந்தது), திருமாலைப் பற்றி பல இடங்களில் வருகின்றது. உதாரணமாக, புலவர் நல்லெழுநியார் பாடலில், 

மின்னவிர் சுடர்மணி யாயிரம் விரித்த,

கவைநா வருந்தலைக் காண்பின் சேக்கை 

என்று வருகிறது. 

பொருள்:  ஒளிரும் மணிகள் உள்ள தன் ஆயிரம் தலைகளை விரித்த பாம்பணையில், இரண்டாகப் பிரிந்த நாக்கினை உடைய அந்த ஆதிசேஷன் என்னும் பாம்பின் படுக்கையில் துயிலும் திருமால் (அச்சமூட்டும் பெரிய உடலுடைய ஆதிசேஷன் திருமாலுக்கு மென்மையான படுக்கையாக மாறியுள்ளதை விவரிக்கிறது) 

இதுபோல பரிபாடலில், திருமாலைப் பற்றி இளம்பெருவழுதியார் என்ற புலவரும் பாடியிருக்கிறார். 

“சுடர்மணி ஆயிரம் விரித்த” என்ற வரியைப் பார்த்த தும், இதேமாதிரி திவ்யப் பிரபந்தத்தில் பாசுரம் இருப்பது நினைவுக்கு வந்தது. குலசேகர ஆழ்வார் இயற்றிய பெருமாள் திருமொழியில் முதல் பாசுரம் (அரங்கநாதனைக் காண விரும்பும் தன் விருப்பத்தை இந்தப் பத்துப் பாசுரங்களில் குலசேகர ஆழ்வார் பாடியிருக்கிறார்). 

##இருளிரியச் சுடர்மணிகள் இமைக்கும் நெற்றி*

இனத்துத்தி/ அணிபணம் ஆயிரங்களார்ந்த*

அரவரசப் பெருஞ்சோதி அனந்தன் என்னும்*

அணிவிளங்கும் உயர்வெள்ளை அணையை மேவி*

திருவரங்கப் பெருநகருள் தெண்ணீர்ப் பொன்னி*

திரைக்கையால் அடிவருடப் பள்ளி கொள்ளும்*

கருமணியைக் கோமளத்தைக் கண்டு கொண்டு* என்-

கண்ணிணைகள் என்றுகொலோ களிக்கும் நாளே 

பொருள்: அறியாமை என்கிற இருள் முழுமையாக அகன்று ஓடும்படி, ஒளிமிக்க மணிகள் நெற்றியில் மின்னும், அழகிய புள்ளிகளை உடைய ஆயிரம் தலைகளை கொண்டிருக்கும் பாம்புகளுக்கு அரசனும் பெரிய ஜோதி வடிவானவனுமான  திரு அனந்தாழ்வான் ஆகிய, அழகு மிகுந்த உயர்ந்த வெண்மையான ஆதிசேஷன் என்ற படுக்கையின்மீது, திருவரங்கம் என்கிற பெரிய நகரத்தில் காவிரி நதியானது தனது அலைகளாகிய கைகளால் இறைவனின் திருவடிகளை வருடித் தழுவிக்கொண்டிருக்க, துயிலமர்ந்திருக்கும், கரிய மணி போன்றவனும், இளகிய மனம் படைத்தவனுமாகிய அந்தப் பெருமாளைச் சேவித்து  என் கண்கள் கண்டு களிக்கும் அந்த நல்ல நாள் என்று வருமோ? 

விளக்கம்:  இருள் இரிய – அறியாமை என்ற இருள் அகல, சுடர் மணிகள்-ஒளிமிக்க மணிகள், இனத் துத்தி-புள்ளிகளுடைய, அரவரசன் – பாம்புகளுக்கெல்லாம் தலைவன், வெள்ளை அணை-வெண்மையான படுக்கை, பொன்னி-காவிரி, கோமளம் – மென்மை, அழகு, மிருது 

இப்படி ஒன்றைத் தொட்டு ஒன்றுக்குச் சென்றுகொண்டிருந்தால் திருவரங்கம் பற்றி எழுதுவது தடைபடும். தொடர்ச்சியாக கதை போல வைணவ ஆச்சார்யர்கள், இராமானுஜர் மற்றும் பலருடைய வாழ்க்கையைச் சொல்வதைவிட, அதன் ஊடாக பல விஷயங்களையும் எழுத நினைக்கிறேன். அதனால்தான் இந்த மாதிரி கிளை விரிகிறது. தமிழ் கடவுள் முருகன் என்றும் மற்ற கடவுளர்கள் வடநாட்டுக்கானது என்றெல்லாம் எல்லாம் தெரிந்தவர்கள் போலப் பலர் பேசுகின்றனர். இன்னும் சிலர் திருவள்ளுவர் திருமால், இந்திரன் போன்றவர்களைப் பற்றிச் சொல்லவே இல்லை என்றும் ஆய்வு செய்கின்றனர். அதில் ஒருவர், (பொன் சரவணன், தமிழ் ஆய்வியல் அறிஞர்) 

தாம்வீழ்வார் மென்தோள் துயிலின் இனிதுகொல்

தாமரைக் கண்ணான் உலகு 

என்பதற்கு, தாம் விரும்பும் காதலியின் மென்மையான தோளில் சாய்ந்துகொண்டு பெறும் துயிலின்பத்தைக் காட்டிலும்   நிலவுலகம் இன்பம் தருவதோ? என்று பொருள் கூறுகிறார். தாமரைக் கண்ணான் என்பதற்கு உரையாசிரியர்கள், திருமால் உலகம், அல்லது இந்திரன் உலகம் என்று பொருள் கூறியிருக்க, இவர், ‘தாமரைக்கு அண்ணான் – அதாவது தாமரைக்கு விருப்பம் இல்லாத சந்திரன்’ என்று வலிந்து பொருள் கொண்டிருக்கிறார். நாம பொதுவா என்ன சொல்லுவோம்? நல்ல சாப்பாட்டுக்கு சுவர்க்கமே ஈடாகாது என்போம். அல்லது நாம் உணரும் சுகத்திற்கு, சுவர்க்கத்தைக் காட்டிலும் பெரிது என்போம். இல்லையா? அதனைத்தான் திருவள்ளுவர் கூறியிருக்கிறார் என்பது என் புரிதல். நல்லவேளை ‘தாமரை என்பதை தாவுகின்ற மான் என்று பொருள் கொண்டு, அதற்கு எதிரி சிங்கம் என்று பொருள் கொண்டு காட்டில் உலாவுவதைவிட உயிருக்குப் பிரச்சனை இல்லாத, என்னைக் கட்டிப்போடும் உன் கண் அழகில் மெய்மறந்திருப்பேன் என்று அர்த்தம் சொல்லாதவரை சரிதான். 

ஆழ்வார்கள் திருவரங்கத்தைப் பற்றி மிக அதிகமாகப் பாடியிருக்கிறார்கள் என்று பார்த்தோம் (240க்கும் அதிகமான பாசுரங்கள்). ஆழ்வார்களுக்குப் பின் வந்த வைணவ ஆச்சார்யர்களும் திருவரங்கத்தை வைணவத்தின் தலைமைப் பீடமாகக் கொண்டு அங்கிருந்தபடி வைணவத்தை வளர்த்தெடுத்திருகின்றனர். 

ஆச்சார்யர்களுள் நாதமுனிகள், உய்யக்கொண்டார், மணக்கால் நம்பி, ஆளவந்தார், பெரியநம்பி, இராமானுஜர், எம்பார், பட்டர், நஞ்சீயர், நம்பிள்ளை, வடக்குத் திருவீதிப்பிள்ளை, பிள்ளைலோகாச்சார்யார் (அவர் சமகாலத்து, ஆனால் அவரைவிட பிராயத்தில் 50 வருடங்கள் இளையவரான ஸ்வாமி வேதாந்த தேசிகர்), திருவாய்மொழிப் பிள்ளை, ஸ்வாமி மணவாள மாமுனிகள் ஆகியோர் திருவரங்கத்திலேயே தங்கி வைணவ சமயத்தை வளர்த்திருக்கின்றனர். இதில் ஸ்வாமி மணவாள மாமுனிகள் மாத்திரம் முஸ்லீம் படையெடுப்புக்குப் பிறகு வந்த காலத்தைச் சேர்ந்தவர். இந்த வரலாறுகள் பின்பு வரும். 

திருவரங்கத்தில் தற்போது பார்க்கும் கோயில் அமைப்பு இராமானுஜர் காலத்தில் இருந்ததல்ல. கோயில் பல்வேறு மாற்றங்களைக் கண்டிருக்கிறது. 

திருவரங்கம் பற்றி அடுத்த வாரம் தொடர்வோம் (பதிவு ரொம்பவே நீண்டுவிட்டால் படிக்க அயர்ச்சியாக இருக்கும்) 

இந்த வாரம் திருவரங்கம் கோயில் பற்றிப் பார்த்துக்கொண்டிருப்பதால், அந்தத் தலத்தைப் பற்றிய பிரபந்தப் பாசுரத்தை எடுத்துக்கொள்வது பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன். 

பெரியாழ்வார் திருமொழியில் (முதலாயிரம்) நாலாம் பத்தில் பத்தாம் திருமொழியில் துப்புடையாரை என்று தொடங்கும் பத்துப் பாசுரங்களில் ஒன்றை எடுத்துக்கொள்வோம். என்னுடைய அப்பா, தினமும் பெரிய திருமொழி (திருமங்கையாழ்வார்) வாடினேன் வாடி, வாணிலா முறுவல், தாயே தந்தை என்னும் மாற்றும் துப்புடையாரை ஆகிய இந்த 40 பாசுரங்களைச் சொல்லுவார். அவரையொட்டி நானும் அவற்றைச் சேவிக்கும் வழக்கம் வைத்திருந்தேன்.  இவற்றின் முக்கியத்துவத்தை ஒரு பதிவில் எழுதுகிறேன். 

துப்புடையாரை அடைவதெல்லாம்*

        சோர்விடத்துத் துணையாவர் என்றே*

ஒப்பிலேன் ஆகிலும் நின்னடைந்தேன்*

       ஆனைக்கு நீ அருள் செய்தமையால்*

எய்ப்பு என்னை வந்து நலியும்போது*

       அங்கு ஏதும் நானுன்னை நினைக்கமாட்டேன்*

அப்போதைக்கு இப்போதே சொல்லிவைத்தேன்*  

       அரங்கத்து அரவணைப் பள்ளியானே!  

 பொருள்:  ஆற்றலும் வலிமையையும் உடையவர்களை நாம் அண்டுவது, நமக்கு ஆபத்து நேரிடும்போது அவர்கள் நம்மைக் காப்பாற்றுவார்கள் என்ற நம்பிக்கையால்தான். முன்னொரு காலத்தில் கஜேந்திர ஆழ்வான், முதலையின் வாயில் அகப்பட்டிருந்தபோது, உன்னை அழைத்தமையால் ஓடோடி வந்து நீ அருள் செய்தாயே, அந்தக் கருணையை எண்ணி, அப்படிப்பட்ட தகுதியோ இல்லை பக்தியோ இல்லாமலிருந்தபோதும் உன்னைச் சரணடைந்தேன். என் மரணத் தருவாயில் மனமும் உடலும் தளர்ந்துபோய் உன்னை என்னால் நினைக்கமுடியாமல் போய்விடும். அதனால் நான் நன்றாக இருக்கும்போதே, திருவரங்கத்தில் பாம்புப் படுக்கையில் அறிதுயில் கொண்டிருக்கும் அரங்கநாதனே, உன்னிடம், அந்தச் சமயத்தில் என்னைக் காப்பாற்றுவாயாக என்று சொல்லிவைக்கிறேன். 

விளக்கம்: முதுமையிலும் நோயிலும் அவதிப்பட்டுக்கொண்டிருக்கும்போது இறைவனை நினைப்பது கடினம் என்பதால், நன்றாக இருக்கும்போதே அவனை நினைத்து அவன் திருவடிகளைச் சரணம் அடையச் சொல்கிறது.  துப்புடையாரை – காப்பாற்றும் வலிமை உடையவரை, எய்ப்பு என்னை வந்து நலியும்போது – முதுமை, நோய் போன்ற காரணங்களால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உடல் மிகவும் தளர்ந்து வருந்தும்போது.

திருவரங்கம் கோயிலைக் காக்கத் தன் இன்னுயிரை நீத்த பன்னீராயிரம் வைணவர்கள் நினைவுடன் இந்த வாரத்தை முடிப்போம். அடுத்த வாரம் தொடர்வோம்...

========================================================================

நான் படிச்ச கதை - (JKC)

ராட்சஸம்

கதையாசிரியர்: கவிக்கோ அப்துல் ரகுமான் 

'வானம்பாடி' இயக்கக் கவிஞர்களோடு இணைந்தியங்கியவர். எழுதுபவர்களின் தலைவாயிலில் தம் கவிதை வெளியீடுகளின் வாயிலாகப் புதுக்கவிதைத் துறையில் நிலைநிறுத்திக் கொண்டவர்களுள் அப்துல் ரகுமான் சிறப்பாகக் குறிப்பிடத் தக்கவர் ஆவார்.

1960 க்குப் பின் கவிதை உலகுக்கு வந்த இவர் கவியரங்கக் கவிதைகளாலும் சிறப்படைந்துள்ளார். சிலேடை வார்த்தைகளால் கேட்போரைக் கவர்வது இவரது பாணி. வாணியம்பாடி இஸ்லாமியக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணி புரிந்தவர். அறிவுமதி உள்ளிட்ட இளந்தலைமுறைக் கவிஞர்களுக்கு ஆசானாக விளங்கினார். ஆலாபனை கவிதைத் தொகுப்புக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றவர்.

தமிழ்நாடு வக்பு வாரிய தலைவராக 2009 மே முதல் 2011 வரை பணியாற்றியவர்.

மேலும் விவரங்களுக்கு

கவிக்கோ

ராட்சஸன் 

தலைவர் பார்ட் பார்ட்டாய் வந்து இறங்கினார். தலையிலிருந்து மார்பு வரை, மார்பிலிருந்து இடுப்பு வரை, இடுப்பிலிருந்து முழங்கால் வரை, முழங்காலிலிருந்து பாதம் வரை என நான்கு பெரிய வர்ணத் துண்டுகள்.

சாரம் முன்பே கட்டப்பட்டுவிட்டது. துண்டுகளை ஒட்டுப் போட்டுத் தூக்கி நிறுத்த வேண்டியது தான் பாக்கி.

பெருமாளின் தலைமையில் ஆட்கள் பம்பரமாய்ச் சுழன்று கொண்டிருந்தனர். நாளைக் காலையில் கூட்டம். விடிவதற்குள் முடித்தாக வேண்டும். அந்தப் பரபரப்பில் ஏற்பட்ட பதற்றமும் எரிச்சலும் அவருடைய ஏவல்களில் தெரிந்தன.

பையன் டீ கொண்டு வந்து கொடுத்தான். வேலையிலிருந்து கண்களைப் பெயர்க்காமலே, பெருமாள் டீயை வாங்கிக் குடித்தார்.

பெருமாள் பழைய தலைமுறையைச் சேர்ந்தவர். பெரிய பெரிய தலைவர்களையெல்லாம் அவர் பார்த்திருக்கிறார். அவர்களுக்கெல்லாம் இப்படி ராட்சஸக் கட்- அவுட்டுகள் தேவைப்படவில்லை. அவர்கள் சுயமான விஸ்வரூபத்தில் உயர்ந்து, மக்கள் மனதில் பிரமாண்டமாக நின்றார்கள். அவர்களுடைய உயரம் துணியாலும் தூரிகையாலும் மரத்தாலும் ஆனதல்ல… அவர்களைத் தூக்கி நிறுத்தச் சாரமும் தேவைப்பட்டதில்லை.

”ஐயா…” என்ற குரலில் அவர் சிந்தனை கலைந்தது. எதிரில் ஓர் இளைஞன்.

”நானும் கூடமாட ஒத்தாசை செய்யட்டுமா?”

”வேண்டாம் தம்பி… போதுமான ஆட்கள் இருக்காங்க.”

”கூலி ஒண்ணும் வேணாங்க. சும்மா செய்றேன். தலைவருன்னா எனக்கு உசுரு. அவருக்குக் கட்- அவுட் வெக்கறதிலே நானும் சேந்துக்கணும்னு ஆசையா இருக்கு.”

”ஓம் பேரு என்ன?” – பெருமாளின் கேள்வியில் கொஞ்சம் வியப்பும் கலந்திருந்தது.

”கபாலிங்க…”

”சரி, போய்ச் செய்!”

கபாலி உற்சாகமாக ஓடினான். சாரத்தில் கால்பகுதி கட்டப்பட்டு முடிந்திருந்தது. அவன் அந்தக் கால்களில் விழுந்து வணங்கினான். எழுந்து, பக்கத்தில் தரையில் கிடந்த தலைவரின் முகத்தை ஆசையோடு தடவினான். வலை வீசும் இந்தப் புன்னகை யாருக்கு வரும்? அவனுக்குள் சுரந்த பயபக்தி முகத்தில் கசிந்தது.

கபாலி கட்சிக்காரன் அல்ல. உண்மையான அர்த்தத்தில் அரசியலும் அவனுக்குத் தெரியாது. காட்டப்படுவதை நம்பும் இனம் அவன். தலைவர் கிழவியின் தலையைத் தடவுவது, ஊனமுற்ற சிறுவனுக்குச் சக்கர வண்டி கொடுத்து அவனுக்கு முத்தமிடுவது, தீ விபத்தில் வீடு இழந்தவர்களுக்கு உணவுப் பொட் டலம், வேட்டி, சேலை கொடுப்பது…இதையெல்லாம் படங்களில் பார்த்தது… ஏழைகளுக்காக உருகி உருகிப் பேசுவது, அவர்கள் உரிமைகளுக்காக வீராவேசமாக முழங்குவது… இதையெல்லாம் கேட்டு, அவனுடைய இதயத்தில் ஒரு சிம்மாசனம் போட்டு அவரை உட் கார வைத்திருந்தான். செய்தித்தாள்களில் காட்டப்படும் வெளிப் பக்கத்தை மட்டுமே தரிசிக்கிறவன் அவன். தூண்டில் முள்ளை மறைக்கும் புழுவை அடையாளம் காணும் பக்குவமெல்லாம் அவனுக்கு இல்லை.

தலைவர் எங்கே பேசினாலும் அங்கே போய் விடுவான். ‘என் கண்ணின் மணிகளே!’ என்று அவர் தொடங்கும்போது பரவசமாகி மெய்சிலிர்த்து விசிலடித்து, ஆரவாரித்துக் கைதட்டுவான். தேர்தல் காலத்தில் அவருக்காகப் பசி தாகம் பார்க்காமல் வேலை செய்வான். போஸ்டர் ஒட்டுவான். சுவரில் எழுதுவான். ஊர்வலம் போவான். உரக்கக் கோஷம் போடுவான். அவரை யாராவது குறைத்துப் பேசினால் சண்டைக்குப் போவான். இதில் எத்தனையோ முறை அடி, உதை பட்டு ரத்தம் சிந்தியிருக்கிறான். இதை யெல்லாம் தலைவருக்குக் காணிக்கையாகவே நினைத்துக் கொள்வான். தேர்தலில் தலைவர் ஜெயித்துவிட் டால் தானே ஜெயித்தது போல் பட்டாசு கொளுத்திக் கூத்தாடுவான். அந்த ராமனுக்கு,  தான் ஓர் அணில் என்று அவனுக்கு நினைப்பு. ஆனால், அவன் முதுகு எப்போதும், யாராலும் தடவிக் கொடுக்கப்பட்ட தில்லை. அதை அவன் எதிர்பார்த்ததும் இல்லை.

நேரம் ஆக ஆகப் பெருமாளுக்குப் பதற்றம் அதிகரித்தது. கொஞ்ச நேரத்துக்கு முன்னால்தான் அமைச்சர் ஒருவர் வந்து வேகம் போதாதென்று கெட்ட வார்த்தையில் திட்டிவிட்டுப் போனார். எனவே, பெருமாள் பரபரப்பாக ஆட்களை வேகப்படுத்தினார்.

அது கட்சிக் கூட்டம் தான். ஆனாலும் மேடை, பந்தல் வேலைகளில் அரசாங்க அதிகாரிகள் பயபக்தியோடு ஈடுபட்டிருந்தனர். அரசாங்க வாகனங்கள் இங்கும் அங்கும் புழுதி பறக்க ஓடிக்கொண்டு இருந்தன.

”இவங்களுக்கு எல்லாம் பெரிசா காட்டணும். அதுவும் அவசரமா காட்டணும். ஜன நாயகம்கிறானுங்க… அமைச்சர்கள் ஜனங்களுடைய சேவகர் கள் என்கிறானுங்க… ஆனா, ஜனங்களைவிட தான் ஒசத்தி… ஜனங்க தங்களை அண்ணாந்து பாக்கணும்… தங்கள் கால்ல விழுந்து வணங்கணும்… கப்பம் கட்டணும்னு நெனக்கிறானுங்க. தெரியாத தேவதையை விட தெரிந்த அரக்கன் மேல்ங்கற ஜனங்க மனப்பான்மையை இவங்க நல்லாத் தெரிஞ்சு வெச்சிருக்கானுங்க. அதனாலே தங்களுடைய உருவத்தை, முகத்தைச் செயற்கையா அசிங்கமா பெரிசாக்கிப் பாமரர் மனசிலே பலவந்தமா திணிக்க முயற்சி பண்றாங்க. உருவத்தைப் பெரிசா காட்டினா பெரிய மனுஷன் ஆயிடமுடியுமா? இது படங் களை நம்புற தேசம். அதனாலே எல்லாரும் படங்காட்டறானுங்க. தூத்தேறி…” – பெருமாள் காறித் துப்பினார்.

தலைப்பகுதியைப் பொருத்திவிட்டு ஆட்கள் இறங்கிக் கொண்டிருந்தார்கள். கபாலிக்கு உடையெல்லாம் அழுக்காகிவிட்டது. உடம்பில் அங்கங்கே சிராய்ப்பு. ஆனால், அவனுக்குக் களைப்போ, வலியோ தெரியவில்லை. அவன் தூரத்தில் போய் நின்று பார்த்தான். தலைவர் வானளாவ உயர்ந்து அட்டகாசமாக, கம்பீரமாக நின்றுகொண்டு இருந்தார். பின்னால் இருந்த கோயில் கோபுரம் கூடத் தெரியவில்லை. அதைவிட உயரமாக அதை மறைத்துக் கொண்டு நின்றிருந்தார் தலைவர். அந்தப் புன்னகை… யாருக்கு வரும் அந்தப் புன்னகை? கபாலியின் உடம்பெல்லாம் பரவசம் பரவியது. அவன் கையெடுத்துக் கும்பிட்டான்.

”எவ்வளவு செலவாகியிருக்கும்?” – யாரோ ஒருவன் கேட்டான்.

”ஐம்பதாயிரம் ரூபாய்னு சொன்னாங்க…”

”ஐம்பதாயிரமா? அடப்பாவிங்களா..! ஐம்பது குடும்பம் ஒரு மாசத் துக்குப் பசியில்லாம சாப்பிடலாமே… ராட்சஸன் மாதிரி அவ்வளவையும் விழுங்கிட்டு நிக்கிறதைப் பாரு!”

கபாலிக்கு இதயத்தில் ‘சுரீர்’ என்றது. கோபத்தோடு திரும்பிப் பார்த்தான். கட்டையும் குட்டை யுமாக இருந்தவன்தான் அப்படிப் பேசிக்கொண்டிருந்தான்.

கபாலி அவன் மேல் பாய்ந்தான். ”எங்க தலைவரு தெய்வம்யா..! அவரைப் போய் ராட்சஸன்னா சொல்றே?” என்று கத்தியபடி அவன் முகத்தில் குத்தினான்.

எதிர்பாராத தாக்குதலில் நிலை குலைந்து திகைத்துப் போன அந்த ஆள் தன்னைச் சமாளித்துக் கொண்டு, கபாலியை ஓங்கி மிதித் தான். கபாலி கீழே விழுந்தான்.

”இவனாடா தெய்வம்? ஏண்டா தெய்வம்ங்கற வார்த்தையை இப் படி அசிங்கப்படுத்துறீங்க… உன்னை மாதிரி முட்டாப்பசங்களுக்குத் தான்டா இவன் தெய்வம். உடுத்த மறு வேட்டி இல்லாம இந்த ஊருக்கு வந்தவன்டா ஒங்க தலைவன். இப்போ இந்த ஊர்லே பாதி அவனுக்குச் சொந்தம். எங்கேயிருந்துடா வந்தது இவ்வளவு பணம்? குடியை ஒழிக்காம சாக மாட்டேன்னு கூவுறானே ஒங்க தலைவன்… பினாமியிலே ரெண்டு சாராயத் தொழிற்சாலை இருக்குடா அவனுக்கு… ஒனக்குத் தெரியுமா? சேரியை எல்லாம் ஒழிக்காம தூங்க மாட்டேன்னு மேடையெல்லாம் முழங்குறானே, அவன் எப்படி எங்க சேரியை ஒழிச்சான் தெரியுமா? தனக்குப் பெட்டி பெட்டியா கொண்டு வந்து கப்பம் கட்டறவன் ஓட்டல் கட்டறதுக்காக ஒரு சேரியையே நெருப்பு வெச்சுக் கொளுத்த வெச்சவன்டா ஒங்க தலைவன். அந்தத் தீயிலே வீடு, வாசல், குழந்தையைப் பறிகொடுத்தவன்டா நான்…” – அந்த ஆள் பொங்கி வெடித் துச் சிதறிக்கொண்டிருந்தான்.

கைகலப்பைப் பார்த்துப் பதறிக் கொண்டு ஓடிவந்தார் பெருமாள். வம்பு எதுவும் வந்து விடக்கூடாதே என்று அந்த ஆளைச் சமாதானம் பண்ணிக் காலில் விழாத குறை யாகக் கெஞ்சி அவனை அனுப்பி வைத்தார்.

கபாலிக்கு இதயத்தில் வலித்தது. ‘இல்லை, இல்லை… இதெல்லாம் உண்மையா இருக்கமுடியாது… இருக்கக்கூடாது. அவன் எதிர்க் கட்சிக்காரனா இருப்பான். பொய் சொல்றான். எங்க தலைவர் இப்படியெல்லாம் செய்யமாட்டார்…’ ஆனால், அவன் இதயத்தில் இருந்த சிம்மாசனம் லேசாக ஆடத் தொடங்கியது.

கட்-அவுட்டை அவன் நிமிர்ந்து பார்த்தான். ‘தலைவரே, இது உண்மையா… உண்மையா?’ என்று அவன் இதயம் அலறியது.

காற்று ‘ஹோ… ஹோ…’ என்று இரையத் தொடங்கியது. மரங்கள் பேயாடின. தலைவரின் அந்தப் புன்னகை மெதுவாக மறைந்தது. வாயின் இரண்டு பக்கத்திலும் கோரப் பற்கள் முளைத்தன. முகம் விகாரமானது.

கபாலி எழுந்து ஓடினான். ”இல்லை… இது உண்மை இல்லை” என்று கட்-அவுட்டின் கால்களைப் பிடித்துக்கொண்டு கதறினான்.

ஆணைக்குக் காத்திருந்தது போல் காற்று சீறிச் சினந்து ஆவேசமாகக் கட்-அவுட்டை அசைத்தது. கொஞ்ச நேரத்தில் கட்-அவுட் மடமடவென்று இரைச்சலுடன் சரிந்து விழுந்தது.

கட்-அவுட்டின் இடிபாடுகளை அகற்ற வந்தவர்கள் அதன் அடியில் ஒரு பிணத்தைக் கண்டு திடுக்கிட் டார்கள். பிணம் ரகசியமாக அப்புறப்படுத்தப்பட்டது.

அந்த இடத்தில் சாட்சியாகக் கொஞ்சம் ரத்தக் கறை மட்டும் இருந்தது… ‘இது உண்மையா, உண்மையா?’ என்ற மௌனமான அலறலோடு.

காலையில் கூடும் கும்பலின் காலடிகள் பட்டு அதுவும் மறைந்துவிடும்.

– 14-03-1993

பின்னுரை. 

கதையைப் படிக்கும் போது ஏனோ கரூர் சம்பவம் நினைவில் வந்தது, தலைவரையோ மக்களையோ குற்றம் கூறவில்லை. ஆனாலும் உயிரிழப்புகள் தவிர்க்க வேண்டியவை. தலைவர்களும் மக்களில் ஒருவரே என்ற உண்மை சாதாரண மனிதனுக்கு புரிந்தால் சரி. கபாலி அந்த உண்மையை அறிந்தபோது அவனுடைய உயிர் பிரிந்து விட்டது சோகம் தான். 

கதையோ கட்டுரையோ எதுவானாலும் முதல் வரி வாசிப்பவரை மேற்கொண்டு வாசிக்கத்  தூண்டும் வகையில் ஆரம்பம் இருக்க வேண்டும் என்று ஜீவி சார் கூறியிருந்தார். 

‘தலைவர் பார்ட் பார்ட்டாய் வந்து இறங்கினார். தலையிலிருந்து மார்பு வரை, மார்பிலிருந்து இடுப்பு வரை, இடுப்பிலிருந்து முழங்கால் வரை, முழங்காலிலிருந்து பாதம் வரை’ என்று துவங்கி உள்ளே இழுத்து, இறங்கியது, இறக்கியது கட் அவுட் என்று சஸ்பென்ஸை அவிழ்க்கிறார் கவிக்கோ. 

அதே போன்று கபாலி கட் அவுட் இலிருந்து நீங்கிய பின்பு அவன் உண்மையை அறிந்த பின்பு,  ‘உண்மை சுடும்’ என்பதற்கேற்ப கட் அவுட் கால்களை பிடித்துக் கொண்டே  அவன் உயிர் துறக்கிறான். எதிர்பாராத முடிவு.  

கதை எக்காலத்திற்கும் பொருந்தும். 

P S : தலைப்புகளில் வித்தியாசம் வேண்டுமென்றே செய்யப்பட்டது. 

கதை sirukathaigal.com லிருந்து பெறப்பட்டது.

=====>தினமலர் செய்தி  <======

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!