25.8.26

எ போ கதை  -  சோனிக் குழந்தை  -  M V வெங்கட்ராம் 

 

சோனிக் குழந்தை 

M V வெங்கட்ராம்


தீர்த்த யாத்திரை செய்து விட்டு ஆறு மாதங்களுக்குப் பிறகு திரும்பி வந்திருந்த லக்ஷ்மி, மஞ்சள், குங்குமப் பரணி கொண்டு வைத்து உட்கார்ந்திருந்தாள். ஆனால் கல்யாணிக்கோ அவளோடு பேசக்கூட நேரமில்லை. வீரிட்டு அழும் குழந்தையைத் தொட்டிலில் போட்டுத் தாலாட்டுவதற்கே அவளுக்கு நேரம் சரியாக இருந்தது. கடைசியில் அது ஒரு தினுசாகத் தூங்குவதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது.

குழந்தை தூங்கினதும் கல்யாணி, லக்ஷ்மி அருகில் வந்து உட்கார்ந்து யாத்திரையைப் பற்றி விசாரிக்கத் தொடங்கினாள். அதுவும் முடிந்து, லக்ஷ்மியின் முறை வந்தபோது அவள் கேட்டாள், "ஏண்டி! இதுவும் நோஞ்சலாயிருக்கு?"  இப்படிக் குறிப்பிடப்பட்டது குழந்தை.

கல்யாணி மெதுவாகச் சொன்னாள், "அதற்கு என்ன செய்யறது? நானும் எத்தனையோ செஞ்சு பார்த்தாச்சு. ஒண்ணா ரெண்டா, எத்தனையோ மருந்து வாங்கி அலுத்துப் போயிடுத்து. இதெல்லாம் நம்ம கையிலேயா இருக்கு?"

சொல்லி விட்டு ஒரு பெருமூச்சு விட்டான் அவள். அந்தப் பெருமூச்சு இறந்த காலத்தின் சம்பவங்களின் எதிரொலி போலும்! கல்யாணம் ஆகி மூன்று வருஷம் வரை குழந்தையே பிறக்காமல், அப்புறம் பிறந்து, ஒரு வருஷம் வளர்ந்து, பிறகு மடிந்தது. பின்னர் ஒரு குழந்தை செத்தே பிறந்தது. எல்லாம் அப்படியே அவளுக்கு ஞாபகத்தில் வந்தது. ஒரு வேளை அவளுக்குக் குழந்தை ஒவ்வாதோ என்னவோ? இந்த நினைவு அவள் மனத்தைக் கசக்கிவிட்டது.

மறுபடியும் லக்ஷ்மி கேட்டாள், "பால் சரியா வருதோ?"

"அதுக்கென்ன, நிறைய வருது."

"ஒரு வேளை அந்தப் பால் தோஷமோ என்னவோ? முத ரெண்டு குழந்தை போனத்துக்கும் இது தான் காரணமோ என்னவோ?"

"நீங்க சொல்றது புதுசாயிருக்கே! தாய்ப்பால் தானே குழந்தைக்கு உசிர்!"

"ஆமாம், சில பேர் உடம்புவாசி அப்படி."

"அதற்கு என்ன செய்யறது? புட்டிப் பால் கொடுக்கறதா? புட்டிப்பால் செய்த வேலைதான் நமக்குத் தெரியுமே!"

"ஏன்? வேறே யார் கிட்டேயாவது பால் கொடுக்கக் கொடுத்துடலாம்!"

"நம்மை விட அவா ரொம்ப அக்கறையா பாத்துக் கொள்ளப் போறாளாக்கும்!"

"ஏன் பாத்துக்க மாட்டா? பூக்காரி குள்ளி இருக்கானே தெரியுமோல்வியோ? அவ கிட்டே கொடுத்தா போச்சு, நல்லா பாத்துக்குவா. இந்தத் தெருவிலே எத்தினியோ குழந்தெங்களை வளத்திருக்கா ...தன் குழந்தைப் போல பாத்துக்குவா."

"எனக்கு என்னவோ பிடிக்கல்லே."

"அப்புறம் உன் இஷ்டம்."

கல்யாணி அப்புறம் ஏதேதோ யோசித்துத் பார்த்தான். ஒன்றும் வழி புரியவில்லை; லக்ஷ்மி சொன்னதைத் தவிர வேறு வழி தெரியவில்லை. இன்னும் கால தாமதம் செய்யவும் அவளுக்கு இஷ்டமில்லை. முதலிலேயே இரண்டு குழந்தைகளைப் பறி கொடுத்தவள் அல்லவா?  அந்தக் குழந்தையும் பிறந்தவுடன் ஆரம்பித்த அழுகையை இன்னும் நிறுத்தின பாடில்லை. பால் குடிக்கும், அழும். ஜலதோஷம் பிடித்து விக்கும். உலகத்தில் அது செய்யும் வேலை இவ்வளவு தான். ஒரு வேளை 'பழைய' இடத்துக்குப் போன அப்புறம் சொந்தமாய் விடுமோ என்னவோ?

2

சில நாள் கழித்து, கல்யாணியும் குள்ளியும் பேசிக் கொண்டிருந்தார்கள்.

"ரொம்ப ஜாக்கிரதையாகப் பார்த்துக்கணுமே!"

"நீங்க என்னம்மா அப்படி சொல்றீங்க? எதுத்த வீட்டு அம்மா கிட்டேயே கேட்டுப் பாருங்களேன். குள்ளி செய்யற காரியத்துலே குத்தம் கண்டு பிடிக்க எந்த ஜில்லியாலும் முடியாது அம்மா!—"

"ஒனக்குக் குழந்தை பிறந்து எத்தனை மாசம் ஆகுது?"

"ரெண்டு மாசம் ஆவுதுங்கோ."

"அதக்கு பாலு?"

"பள்ளிப் புள்ளைக்கு என்னங்கோ? தண்ணீர் சாப்பிட்டுட்டு வளந்தரும்."

"என்னமோ ஒன் குழந்தை போல பாத்துக்கணும். எத்தனை கேக்கறே?"

"எதுத்த வூட்லேயே கேட்டுக்குங்க!"

"நீ சொல்லுமா! அவா பணக்காரரா; அவாளுக்கும் நமக்கும் சேத்தியா?"

"ஒம்போது ரூவா குடுங்கொ."

"ஏ அப்பா! ரொம்ப அதிகமா கேக்கிறீயே,  ஏளு  ரூவா தந்துடறேன். அப்புறம் குழந்தை பாடு; ஒம்பாடு."

"பணம் தான் ரொம்ப குறெச்சிபிட்டிங்கோ, சரி, உங்களுக்காகப் போனாப்போவுது..."

"எத்தனை மாசம் உங்கிட்டே இருக்கணும்?"

"ஆறு மாசம் இருந்தா போறுங்க. அப்புறம் பாருங்கோ உங்க குழந்தையை அடையாளமே கண்டு புடிக்க முடியாது. கொழு கொழுன்னு ஆகாம போனா ஏன்னு கேளுங்க!"

"நாளக்கி நாள் நல்லாருக்கு, வந்து குளந்தையெ எடுத்துண்டு போ."

மறுநாள் இரண்டு ரூபாயுடன் குழந்தையைக் குள்ளியிடம் கொடுத்தாள் கல்யாணி.

"ஆவாதது போவாதது எல்லாம் குடுக்காதே. குழந்தையை ரொம்ப ஜாக்கிரதையாப் பாத்துக்கோ, சொல்லி்ட்டேன். பணத்துக்காக இன்னுட்டு ஒண்ணும் செய்யாதே. வேணுமானா ஒண்ணு அரை செலவுக்கு வாங்கிக்கோ. நாலிலே மூணிலே குழந்தையைத் தூக்கிண்டு வா இங்கே."

"நீங்க ஒண்ணுமே சொல்லவே வேண்டிய தில்லிங்கோ. எல்லாம் எனக்குத் தெரியும்—ராஸா இங்கே வா, என் கண்ணில்லே!"

குள்ளி கை நீட்டிக் குழந்தையை வாங்கிக்கொண்டான். வாசலை விட்டிறங்கும் அவளைப் பின் தொடர்ந்து கல்யாணியும் வந்தாள். "அட இழவே! எண்ணெய்க்குடமல்லவா எதிரே வருகிறது!"

"குள்ளீ! இங்கே வா, செத்தே தாகத்துக்குச் சாப்பிட்டுட்டு போ—"

குள்ளி திரும்பி வந்து திண்ணை மீது உட்கார்ந்து கொண்டான். கல்யாணி கொண்டு வந்து கொடுத்த ஜலத்தைக் குடித்துவிட்டு, வெற்றிலை போட்டுக் கொண்டு எழுந்தாள்.

"ஆமா, இன்னொர வாட்டியும் சொல்றேன். ரொம்ப ஜாக்கிரதையா, உன் குழந்தைப் போலப் பாத்துக்கோ!" குள்ளி வாசலை தாண்டி, தெரு கடந்து, திரும்பி மறைந்து போய்விட்டான். கல்யாணி ரொம்ப நேரம் அங்கேயே நின்று கொண்டிருந்தாள். எவ்வளவோ தேற்றிப் பார்த்தும் பாழும் மனசு கேட்கவில்லை. அவள் கண்களில் ஜலம் நிறைந்துவிட்டது.

3

குள்ளி பால் வியாபாரி. தரித்திரம் அவளுடைய தாய்மையைத் தின்றுவிட்டது.

கல்யாணியிடமிருந்து குழந்தியை வாங்கி கொண்டு போன சில நாளில் இன்னொரு கொழுத்த கிராக்கி வந்தது.  அதை எப்படி விட முடியும்?  அந்தக் குழந்தையையும் வாங்கி வந்துவிட்டான்.

இப்போது அவளிடம் மூன்று குழந்தைகள்; பணக்காரக் குழந்தை, நடுத்தரக் குழந்தை, ஏழைப் பள்ளிக் குழந்தை என மூன்று ரகங்கள்.

மூன்றுக்கும் பால் கொடுக்க அவளுடைய மார்பு வற்றாத  ஊற்று அன்று. என்னதான் ஊட்டம் கொடுத்தாலும் ஒரு குழந்தைகே பால் காணாது. மற்ற இரண்டு குழந்தைகளுக்கும் என்ன வழி? பால்காரன் பால் குறைந்தால் என்ன செய்கிறான்? தண்ணீரைக்கலப்பான். குள்ளி பால் என்று நினைத்து வெந்நீர் ஊட்டுவாள். .

அவள் பால் கொடுப்பதிலும் வியாபார தினுசு தான். பணக்காரக் குழந்தைக்கு அந்தப் பால், கல்யாணியின் குழந்தைக்கு அடுத்தபடி, பள்ளிக் குழந்தைக்கு மீதி மிச்சம். பின் அவளைக் கபடக்காரி என்று யாராவது சொல்லமுடியுமா? தன் குழந்தைக்கு முதல் இடம் கொடுத்தால் தானே அப்படிக் கூற முடியும்?

ஆனால் பாவிக் குழந்தைகளுக்கு குள்ளியின் வியாபார ரகசியம் ஏதாவது தெரியுமா? பள்ளிக் குழந்தை திமிரடி, பால் கிடைக்காத வரை ஓயாத அழுகை பிடிக்கும்; நீர் ஊற்றினால் வெளியில் துப்பும். ஒரு குழந்தை குடிக்கும் போதே இன்னொன்று பால் வேண்டி அழ ஆரம்பித்துவிடும். சில சமயம் ஒரு குழந்தை பால் குடிக்கும் போதே ஸ்தன்யத்தைப் பிடுங்கி மற்றொன்றின் வாயில் வைக்கவும் நேரும்!

குள்ளி மகா பொறுமைசாலி; இல்லாவிட்டால் இந்தக் கலவரங்களை யெல்லாம் பொறுக்க யாரால் முடியும்?

4

மூன்று மாசமாகிவிட்டது. அதாவது குள்ளி குழந்தையைக் கொழுகொழுவென்றாக்கக் கேட்டுக்கொண்ட கெடுவில் பாதி. 'நாலில் மூணில்' குழந்தையைப் பார்த்துக் கொண்டிருக்கும் கல்யாணிக்குத் திருப்தி உண்டாகவே இல்லை. எப்படி உண்டாகும்? குழந்தை அன்றைப்போலவே இன்றும் இருந்தது.  வயிற்றைத் தவிர வேறு எங்கும் சதை என்பதே கிடையாது.

ஒருநாள் கல்யாணி குள்ளி வீட்டிற்குப் போனாள். அவளுடைய நடையை முதலிலேயே கண்டுவிட்ட குள்ளி, அவள் குழந்தையை எடுத்து மடியில் போட்டுக் கொண்டு உட்கார்ந்துவிட்டாள். கல்யாணி உள்ளே வந்ததும் வெற்றிலையைத் தட்டி எடுத்து வைத்து உபசரணையெல்லாம் பண்ணினாள்.

குள்ளி கீழே விட்டதும் குழந்தை கூப்பிடத் தொடங்கியது. அதைத் தூக்கித் தொட்டிலில் போட்டு பாடத் தொடங்கினாள் குள்ளி.

"ஆராரோ ஆரிரரோ ஆரிராராரோ,
'ஆரிமேலே தாமரைப்பூ  ஆராராரோ. .
கும்பப் பூ பூசை செஞ்சி வேண்டிக் கிண்டேனே,
எங்கள் ராகவன் வேணுமென்னு வேண்டிக் கிண்டேனே,
அரசராம் சத்தியத்து வேண்டிய்கிண்டேனே!
அரசமரம் சுத்தி வந்து வேண்டிக்கிண்டேனே 
நம்ம பாலகிட்டன் வேணுமென்னு வேண்டிக்கிண்டேனே 
கல்லைகண்ட இடமெல்லாம் தெய்வமென்னு  வேண்டிக்கிண்டேனே!
கிணத்தங்கரை சுத்திவந்து வேண்டிக்கிண்டேனே 
எங்க சுஞ்சி காமாட்சி அம்மனை வேண்டிக்கிண்டேனே 
வேண்டிக்கிண்டேனே   வேண்டிக்கிண்டேனே 
என்று உடைந்த கீச்சுங்குரல் பல்லவி. கல்யாணிக்கு சகிக்கவில்லை.  அந்தக் குழந்தையை அதில் என்ன இனிமை கண்டதோ! ஊங்காரம் போட்டுச் கொண்டே தூங்கத் தொடங்கியது.

கல்யாணி குழந்தையைக் கூடச் சரியாகப் பார்க்கமுடியவில்லை. குள்ளியின் வாத்ஸல்யம் அவளை எண்ணமுற ஆக்கிவிட்டது. இத்தனை பிரியமாய் பெற்ற தாயாவது இருப்பாளா?

குள்ளி அவள் அருகில் வந்து நின்று கொண்டாள்.

"வெத்திலை போடுங்கோ —"

"அது இருக்கட்டும்; இந்த நோஞ்சலெ தேற்ற முடியாது போலிருக்கே!—"

"ஏம்மா, அவசகுன மாட்டமா பேசறீங்கோ? ஏப்பா, அது இப்போது செய்யற லூட்டியெ பாத்தா இல்லெ தெரியம்! கொஞ்ச நாள்லே தேறிப்பூடுது, எனக்கு ஒரு யோசனெ இல்லெ தோணுது—"

"என்னது?"

" 'ஆருலீசு' என்கிறாங்களே , அது ஒண்ணு வாங்கி குடுக்களேன்—"

கல்யாணி முதலிலேயே பூரித்து போயிருந்ததால் சரி போட்டு விட்டாள். மறுநாள் ஹார்விக்ஸும் வந்தது. ஆனால் அதைச் சாப்பிட்டது குள்ளி; அவள் பால் தானே குழந்தைக்கு குடிக்கப்போகிறது?

கல்யாணி பால்கோவா கொஞ்சம் கிண்டினாள். . அதைவாயில் போடடுதற்கு அவளுக்கு மனசு வரவில்லை. 'தித்திப்பு இ ல்லையா? குழந்தை எவ்வளவு பிரியமாகச் சாப்பிடும்?' மாலை மூன்று மணி வெயிலையும் கவனிக்காமல் கையில் கொஞ்சம் 'கோவா' எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டாள் குள்ளி வீட்டிற்கு. வாசலிலிருந்து மெதுவாக உள்ளே எட்டிப் பார்த்தாள்.

"கழுதை, சும்மா தொல்லைப்படுத்திரியே, ஊம் சாப்பிடு, இந்தா—"

குள்ளியின் அருகே உட்கார்ந்திருந்தது கல்யாணியின் குழந்தை, தொந்தியை நீட்டிக்கொண்டு.  அவள் ஒரு பீங்கான் பாத்திரத்தில் நீர் ஆகாரம் வைத்து, குழந்தைக்கு ஊட்டிக்கொண்டிருந்தாள்.

கல்யாணிக்கு எரிச்சலும் ஆத்திரமும் ஒருமுகமாக வந்துவிட்டது.

"குள்ளி!"

குள்ளி திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தாள். கல்யாணியைக் கண்டதும் அவளுக்கு ஏக நடுக்கம்.  வேகமாக சோற்றும் பாத்திரத்தை நகர்த்தி குழந்தையின் வாயைத் துடைத்து விட்டு எழுந்தாள்.

"குழந்தைக்கு என்னடீ கொடுத்துக் கொண்டிருக்கிறே?"

"ஒண்ணுமில்லைங்க!"

"ஒண்ணுமில்லேன்னு ஒண்ணு இருக்கார் நிஜத்தைச் சொல்லு!"

"சோத்து நீருங்க!"

"சோத்துநீரா? சோறா?"

"அது என்னுங்க அப்படி கேக்கிறீங்க? தப்பித் தவறி ஒண்ணுரெண்டு பருக்கை உள்ளே போனாத் தானுங்க—"

"சரிதாண்டீ! என் கண்ணாலே பார்த்தேன். நீ வாயிலெ சோறு வச்சதெ; என் தலையிலேயே அடிக்கிறியே!"

"சாதம் குடுத்தா குழந்தைக்கு ஆவாதுன்னு எனக்குத் தெரியாதுங்க."

"ஏண்டி, அதுக்குச் சோறு ஜெரிக்குமா? இப்டி கொடுக்கிற தொட்டுத் தான் வயிறு உப்பறது. சரிதான்டி அம்மா மகராஜி எந்தக் குழந்தையை நாங்க வளத்துக்கத் தெரியும். நீ குடுத்துட்றீ  அம்மா!"

குள்ளி அழும் குரலில் சொன்னாள்.

"என் பொழப்பே போயிடுங்கோ. தெரியாமெ செஞ்சிப்புட்டேனுங்க, இன்னிமே சோறு குடுக்கல்லே; குழந்தை சரியாப் பூடுங்க!"

"எம்பளது (80) குழந்தெங்ககிளெ  வளத்துப்புட்டேன்னு பீத்திகிண்டியே!"

"எல்லா குழந்தையும் இப்பிடித்தான் வளத்தேனுங்க!"

"அடி, பாவி!"

"தெரிஞ்ச அப்புறம் செய்வேனுங்களா? இந்தத் தபா மன்னிச்சிடுங்கோ. இன்னொருவாட்டி செய்யவே மாட்டேனுங்க."

"வேண்டாம்; நம்ப குழந்தை நம்மோட இருக்கட்டும்."

"அப்பிடி யெல்லாம் சொல்லக்கூடாதுங்க!"

கல்யாணியிடமிருந்த குழந்தை குள்ளியிடம் போகவேண்டு மென்று அழவாரம்பித்தது. இயற்கையின் சிருஷ்டியான இந்த அன்பு கல்யாணியின் மனத்தைக் கலைத்துவிட்டது. இன்னொரு தடவை விட்டுப் பார்த்தால் என்ன?

"இதோ பாரு, இன்னொரு வாட்டி நீ இப்படி செஞ்சதைப் பார்த்துட்டேன்னு பார்த்துக்கோ! குழந்தையெ எடுத்துண்டு போறதோடு விட்டுடுவேன்னு நினைச்சக்காதே. அவர் ரொம்பப் பொல்லாதவர்; சொல்லி விட்டா போகும்!"

"நீங்க என் தாய்மாதிரி; பெரிய வார்த்தையா- வுட்டேன், வுட்டேன்- இன்னமே இப்படி செய்யமாட்டேனுங்க."

கல்யாணிக்குத் திருப்தி உண்டாகவில்லை. இன்னும் அவளுக்கு யோசனை தான். குழந்தையை அழைத்துக்கொண்டு போய் விட்டால் என்ன? இந்த ராக்ஷஸியை  எப்படி நம்புவது? சத்தியத்துக்கு என்ன, நீர் மாதிரி இவர்களுக்கு! இவர்களை நம்பவே கூடாது!

அவள் திரும்பிப் பார்த்தாள். குழந்தையை குள்ளியின் மார்போடு ஒண்டிக் கொண்டிருந்தது. தூக்கமும் வந்திருக்கும் போலிருக்கிறது. கல்யாணியிடம் இப்படி தூங்குமோ, என்னவோ? இப்படி அழாமலிருக்குமோ என்னவோ?

கடைசியில் எப்படியோ தேற்றிக் கொண்டு, குழந்தையை விட்டுவிட்டு போய்விட்டாள். ஆனால் அவள் ஹிருதயத்தில் கனமாகவே இருந்தது.

அப்பா! குள்ளி மீட்சியடைந்து மூச்சு விட்டுக்கொண்டே குழந்தையைத் தொட்டிலில் போட்டாள் ஆத்திரமாக.

6

"நீ குற்றம் செய்ததற்காகத்தானே நான் அடித்தேன்? அப்படிக்கும் நீ பழி வாங்க எண்ணினால் என்னைத்தானே அடிக்கவேணும்? அவனை அடிப்பானேன்?"

குள்ளி நல்ல பாம்பு; வேடிக்கையாகத் தொட்டுவிட்டாலும் சீறிக் கடிக்கும் சுபாவம். கல்யாணியிடம் அவள் அயர்ந்து பேசிவிட்டாலும், அவளுக்கு உள்ளுக்குள் ஒரு எதிர்ப்புத் திட்டம் போட்டிருந்தாள்.

அதன் பலனாக அந்தப் பணக்காரக் குழந்தைக்கு அதிர்ஷ்டம் கிட்டியது. கல்யாணியின் குழந்தை வாயில் மண் விழுந்தது. முதலிலேயே அதற்குப் பால் கிடைப்பது அதிகம். இப்போது அதற்குப் பால் கொடுப்பதையே குறைத்துவிட்டாள் குள்ளி. வயிறு நிறையப் பாலும் வெந்நீரும் கொடுக்கிறாளே, போதாதா? எப்படியாவது வயிறு நிரம்ப வேண்டியது தானே!

தாய்மையின் பிரேமையிலிருந்து கவரப்பட்டு வாடுகின்றது இந்த ஜீவன், பாவம்!

7

மழைக்காலம். வெள்ளிக்கிழமை மத்தியானத்திலிருந்தே ஆகாசம் மாப்பாயிருந்தாலும் மழை பெய்யவில்லை. ராத்திரித் தூற்றல் போட்டிருந்தது.

கல்யாணிக்கும் அன்று மப்பாக இருந்தது. என்ன என்று தெரியாத ஒரு துக்கம் அவளைச் சூழ்ந்துகொண்டிருந்தது. ஓங்கி வரும் கையைக் கண்டு ஹிருதயம் வளைந்து கொடுக்கிறது போலும்!

நாலைந்து நாளாக அவள் குழந்தையைப் பார்க்கப் போகவில்லை. வேறு அலுவல்களாக இறந்துவிட்டாள். . அது என்ன செய்கிறதோ? முதலிலேயே பழையது கொடுத்த அந்தப் பாவி எப்படி வைத்திருக்கிறாளோ? இரண்டு நாளாக அடை மழையாகப் பெய்தது. ஒரு வேளை ஜலதோஷம் பிடித்திருக்கலாமே; ஜ்வரம் கண்டிருந்தால்?

ஏகக் குழப்பமாயிருந்தது. இனி எப்படிப் போய் பார்க்க முடியும்? இருட்டாக இருக்கிறதே!

கடைசியில் அவள் படுத்தாள். சரியாக தூக்கம் வரவில்லை. தூங்கின கொஞ்ச நேரத்தில் மழை வலுத்தது. மாடிமீது போட்டிருந்த தகரத்தின்மீது ஜாலம் விழுவதால் 'ஹோ' வென்று சப்தம் வேதே. தூக்கம் வருமா? திடீரென்று சப்தம். கதவு தட்டும் சப்தமா அது? அப்படியில்லை என்று தோன்றி மறுபடியும் விளக்கமாகக் கேட்டது. யாரோ கூப்பிடுகிறார்கள் போலிருக்கிறதே!

"அம்மா, அம்மா!"

"குள்ளியா? ஆமாம் போலிருக்கிறதே, ஏன்? என்?"

கல்யாணி பாய்ந்து எழுந்து கதவைத் திறந்தாள். குள்ளியும் அவள் புருஷனும் ஜலம் சொட்டச் சொட்ட நின்றிருந்தார்கள்.

"என்னடீ அது!"

"அம்மா கொளந்தெ —!"

குள்ளி அழவாரம்பித்தான். கல்யாணி பதறிவிட்டாள்.

"என்னடி!  குழந்தைக்கு என்னடீ! சீக்கிரம் சொல்லுடி!"

“இசிவு வந்து—”


கல்யாணி அப்புறம் ஒன்றும் கேட்கவில்லை. மழை பெய்வதையும் கவனிக்கவில்லை. கையிலிருந்த விளக்கை எடுத்துக்கொண்டு கதவைச் சாத்தியபடியே ஓட ஆரம்பித்தாள். குளிரிலும் அவள் புருஷனும் பின் தொடர்ந்து ஓடினார்கள்.

கதவை இடித்துத் தள்ளிக்கொண்டு உள்ளே போனாள். கல்யாணி விளக்கின் ஒளியில் குழந்தையைப் பார்த்தாள். மரணத்தின் எல்லையைக் கிட்டிவிட்டதை உணர்ந்தாள். துக்கமும் அதன் உச்சாணி கிளையிலே ஆத்திரமும் உண்டாயிற்று.

“எந்தனை நாளாடி இப்படி?”

“நாலு நாளா—”

“அப்பவே என்கிட்டே ஏண்டி சொல்லல்லே?”

“சரியாப் பூடு மின்னு நினைச்சேனுங்க —”

“சரியாப் போயிட்டுது, போ!”

ஆத்திரத்தில் கல்யாணிக்கு ஒன்றும் புரியவில்லை. கையிலிருந்த விளக்கை எடுத்துக் குள்ளி பக்கம் எறிந்துவிட்டாள். நல்ல வேளையாக அது அவளை உராய்ந்து கொண்டு சென்று, சுவரில் மோதித் தூளாகியது. வீட்டில் முன் இருந்த லேசான வெளிச்சம் மிஞ்சியது.

குள்ளியும், அவனும் நடுங்கிப்போய் வெளியில் வந்து திண்ணைமீது நின்று கொண்டார்கள்.

கொஞ்ச நேரத்தில் உள்ளே இருந்து அழுகை ஒலி எழுவதை அவர்கள் கேட்டார்கள்......

பிரகிருதி சண்டியாகிவிட்டாள்........

--------------------------------------------------------------
மணிக்கொடி -  அக்டோபர் 15, 1938

===========================================================================================

தமிழக அரசு சொல்லியுள்ள மாமன் சீர் ஒரு கிராம் தங்கக்காசு ஒரு கிராம் தங்கக்காசு ஒரு ரூபாய்!என்று முடிவாகியுள்ளது!

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இவரைத்தெரியுமோ?  இவரும் மணிக்கொடி கால எழுத்தாளர்தான்.  ஆனால் அதற்கும் மேலே...

தஞ்சாவூர் மேல வீதியைச் சேர்ந்த மணிக்கொடி காலத்து பிரபல எழுத்தாளர் வி. சுவாமிநாத ஆத்ரேயர் வியாழக்கிழமை (டிச.19) அவரது இல்லத்தில் உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 94.
கடந்த 1919 ஆம் ஆண்டு நவ. 19-ம் தேதி பிறந்த இவர் தனது தந்தை சிமிழி வெங்கடராம சாஸ்திரியிடம் சகல சாஸ்திரங்கள், ராமாயண பாகவதாதி இதிகாச புராணங்களைக் கற்றார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சம்ஸ்கிருத வ்யாகரண சிரோமணி பயின்றார்.

சமஸ்கிருதத்தில் புலமைப் பெற்ற இவர் ஆங்கிலப் பேராசிரியர் சில்வர் டங்க் சீனிவாச சாஸ்திரியின் வகுப்பில் கலந்து கொண்டு அவர் கூறும் சொற்றொடர்களுக்கு சம்ஸ்கிருதத்தில் எடுத்துரைத்து, அவரது நன் மதிப்பைப் பெற்றவர். இவர் சென்னை குப்புசுவாமி ஆய்வு நிறுவனத்தில் சிறிது காலம் பணியாற்றினார்.

காஞ்சி காமகோடி பீட ஆஸ்தான வித்வானாகிய சுவாமிநாத ஆத்ரேயர் இசையிலும் புலமைப் பெற்றவர். குறிப்பாக, தியாகராஜ கீர்த்தனை நுணுக்கங்களை நன்கறிந்தவர். மணிக்கொடி காலத்து எழுத்தாளரான சுவாமிநாத ஆத்ரேயர் மாணிக்க வீணை போன்ற படைப்புகளுக்குச் சொந்தக்காரர். அவரது படைப்புகளில் பகவத்கீதை தமிழ் மொழிபெயர்ப்பு, துளசி ராமாயணம் தமிழ் மொழியாக்கம், பக்த சாம்ராஜ்யம், நாம சாம்ராஜ்யம், ஸ்ரீராமமாதுரீ, ராமநாமம், தியாகராஜ அனுபவங்கள், ஆத்ரேய லகு லேக மாலா, ஜய ஜய ஹனுமான், சிவ லீலார்ணவம் தமிழாக்கம் ஆகியவை குறிப்பிடத்தக்கவை.
காஞ்சி மஹா பெரியவரின் அன்புக்குரிய சீடரான சுவாமிநாத ஆத்ரேயர் மஹா பெரியவரின் விருப்பப்படி சமர்த்த ராமதாஸ் சரிதம் என்ற நூலை எழுதியுள்ளார். இந்த நூலில் சிவாஜி மராட்டிய சாம்ராஜ்யத்தை அமைப்பதற்கு சமர்த்த ராமதாசரின் பெரும் பங்கை மிக அழகாக விளக்கியுள்ளார்.

அவர் எழுதிய தியாகராஜ அனுபவங்கள் என்ற நூலில் சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜ சுவாமிகளின் உளப்பாங்கு, கீர்த்தனைகள் உருவான விதம் குறித்து மிக அழகாக வர்ணித்துள்ளார். அவரது சம்ஸ்கிருத நூல்களையும், தொண்டையும் பாராட்டி அவருக்கு முன்னாள் மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் முரளி மனோகர் ஜோஷி ராஷ்ட்ரிய சம்ஸ்கிருத சம்ஸ்தான மூலம் என்ற விருதை வழங்கி கௌரவித்தார்.

மேலும், இவருக்கு 1963 ஆம் ஆண்டில் காஞ்சி பெரியவர் ஆசுகவி திலகம் என்ற விருதையும், மடத்தின் ஆஸ்தான வித்வான் என்ற விருதையும் வழங்கினார். தவிர, இவருக்கு 2010 ஆம் ஆண்டு ஜனவரி முதல் தேதி கிருஷ்ணா ஸ்வீட்ஸ் அறக்கட்டளை ஞானச்செம்மல் என்ற விருதையும், உலக வேத அமைப்பு வேதஸ்ரீ என்ற விருதையும் வழங்கி கௌரவித்தன.

========================================================================================

1935 ன் குழந்தை நட்சத்திரம்!


சினிமா விளம்பரம்.

1938 



===========================================================================================================================

கர்நாடகாவைச் சேர்ந்த ஆருஹி ரெட்டி என்ற பெண், ஆண்டுக்கு ரூ. 40 லட்சம் சம்பாதிக்கும் நல்ல தோற்றமுடைய மாப்பிள்ளையின் திருமண வரனை நிராகரித்தார். அந்த மாப்பிள்ளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ராகுலை தனது முன்மாதிரியாக குறிப்பிட்டிருந்த காரணத்தினால், அவர் அந்தத் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்தார். இது சமூக வலைத்தளங்களில் பெரிய விவாதத்தை ஏற்படுத்தியது. அதுமட்டுமின்றி அந்தப் பெண் ராகுலை கடுமையாக சாடி சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது....


31 கருத்துகள்:

  1. வருக வருக.ஸ்ரீராம். எடுத்த விடுமுறை நாட்கள் போதும். இனிமேல் லீவ் எடுக்கக் கூடாது. சரியா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜீவி ஸார்... நன்றி, ஆனால் என்ன செய்ய... மிகவும் தவிர்க்க முடியாத சூழல்..

      நீக்கு
    2. வணக்கம் ஸ்ரீராம் சகோதரரே

      உங்கள் சூழல் புரியவில்லை. ஆனால், உங்கள் பிரச்சனைகளை இறைவன் நல்லபடியாக தீர்த்து வைக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    3. நன்றி கமலா அக்கா

      நீக்கு
    4. இன்னிக்கு வந்திருப்பதே நான் எதிர்பார்க்கவே இல்லை. எல்லாம் நல்லபடியாக நடக்க இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

      நீக்கு
    5. நன்றி கீதா அக்கா

      நீக்கு
  2. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  3. இன்றைய பதிவு நல்லா இருக்கு.

    இன்னும் எழுதணும் என்ற ஆசை இருக்கு, இடமில்லை என்பதால்தான் பாதியிலேயே பதிவு முடிந்ததுபோலத் தோன்றுகிறதா? (கூறியிருப்பதாவது......)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நெல்லை...  நன்றி.  கூறி இருப்பதாவது என்ன வென்று  ​தெரிந்து கொள்ள மேலே உள்ள சுட்டியை க்ளிக்க வேண்டும்!

      நீக்கு
    2. ஆருஹி ரெட்டி பெயரை க்ளிக் செய்யவும்.

      நீக்கு
  4. தாய்ப்பால் தானம் திட்டம் இப்போது ஆரம்பித்து இருக்கிறார்கள்.

    சேகரிக்கப்பட்ட பால் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உள்ள தாய்ப்பால் வங்கிகளில் (Milk Banks) பாதுகாப்பாகப் பதப்படுத்தப்பட்டு (pasteurization) வழங்கப்படுகிறது.

    என் சித்திக்கு (சித்தப்பாவின் மனைவி) அவர் பெரியம்மா பால் கொடுத்து வளர்த்தார்கள் என்பார்கள்.

    அந்தகாலத்தில் எல்லாம் வீட்டுக்கு வந்து குழந்தைக்கு பால் கொடுத்து போவார்கள் என்று கேள்வி பட்டு இருக்கிறேன். அவர்களுக்கு சேலை, அரிசி பணம் எல்லாம் கொடுப்பார்கள்.

    இப்படி இந்த கதையில் வருவது போல அவர்கள் வீட்டுக்கே கொடுத்து விடுவார்களா?

    பணத்துக்கு ஆசைபட்டு இப்படி குழந்தைகளை வாங்கி வைத்து கல்யாணியின் குழந்தைக்கு பால் கொடுக்காமல் அதன் நிலமையை படித்ததும் மனம் கனத்து போனது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குழந்தையை அவள் வீட்டுக்கே கொடுத்து விடுவதும், ரொம்ப நாட்கள் கவலைப்படாமல் நம்பி இருப்பதும் எனக்கும் அதீதமாகத்தான் பட்டது.  அந்தக் காலத்துக்கு ஓகே போல! 

      நீக்கு
    2. இரண்டு குழந்தைகளை இழந்த கல்யாணி இந்தக் குழந்தையையாவது அக்கறையோடும், அதிக கவனிப்புடனும் வளர்த்திருக்க வேண்டும். இப்படி இன்னொருத்தரிடம் குழந்தையைத் தூக்கிக் கொடுப்பதைக் கொஞ்சமும் நம்பவோ, ஆதரிக்கவோ முடியவில்லை. அதோடு குழந்தையைப் போய்ப் பார்க்க முடியாமல் நாள் கணக்கில் வீட்டிலேயே இருப்பதும். கொஞ்ச நேரம் பக்கத்து வீட்டில் போய் விளையாடினாலே அரை மணிக்கொரு தரம் போய்ப் பார்க்கச் சொல்லும். எம்.வி.வெங்கட்ராம் கல்யாணியின் பாத்திரப்படைப்பில் சறுக்கி விட்டாரோ?

      நீக்கு
    3. எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது

      நீக்கு
  5. மற்ற பழைய , புதிய செய்திகள் படித்தேன்.

    பதிலளிநீக்கு
  6. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா.. வணக்கம். இணைந்து பிரார்த்திப்போம்.

      நீக்கு
  7. வணக்கம் சகோதரரே

    கதை மனதை கனக்க வைத்தது. தான் பெற்ற பிள்ளையை இப்படி வளர்க்க வேறொருவரிடம் தர அந்த தாய்மை மனது எப்படி சம்மதித்ததோ ? இந்த குழந்தையாவது தக்க வேண்டுமே என்ற தாய்மை போராட்டம் வேறு வழியின்றி வெற்றிக் கொண்டது போலும். கஸ்டமான சூழ்நிலை. கதையென்றாலும் படிக்கும் போதே மனது தவித்து விட்டது.

    "ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்" என்ற பழமொழிபடி கதை உருவானது போல. ஆனால் அந்த குள்ளிக்கென்று பிறந்த குழந்தை என்னவாயிற்றோ .? .பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்படி ஒரு கஷ்டமும், இப்படி ஒரு பிழைக்கும் மொழியும் அந்த காலத்தில் இருந்திருக்கிறது பாருங்கள். சமயங்களில் கருத்துக்கள் ஒரு பக்கம் இருக்கட்டும், இப்படியெல்லாம் நிலைமை இருந்திருக்கிறது என்று தெரிகிறது அல்லவா...

      நீக்கு
  8. கதை நம்பும்படியாக இல்லை. தாய்ப்பால் இல்லாதவர்கள் ஆனால் சரி. தாய்ப்பால் சுரந்திட்டும் தாய்ப்பாலுக்காக வேறு ஒருத்தியிடம் குழந்தையை வளர்க்க சொல்லி கொடுப்பது சரியில்லை.
    வந்து வந்து அரசியல், கல்யாண பேச்சுகளிலும் நுழைந்து விட்டது பரிதாபம் தான். ஆருஹி ரெட்டி பெண் செய்தது சரியோ தப்போ அது அவருடைய முடிவு. ஆனால் அதை அரசியலாக்குவது தான் சரியில்லை என்பது எனது கருத்து

    Jayakumar​

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜே கே சி சார்! கதை நம்பும்படி இல்லை என்பதை எம் பி வி அவர்களிடம் தான் சொல்ல வேண்டும்!! 1938 இல் என்ன நிலைமையோ யார் கண்டார்!! ஏதோ அவருக்கு தோன்றியது அவர் எழுதியிருக்கிறார் பாவம்.

      அரசியல் நுழையாத இடம் ஏது?!!

      நீக்கு
  9. அந்த காலத்தில் பெற்ற தாயைத் தவிர மற்றவர்களும் பாலூட்டுவது சகஜமாக இருந்திருக்கிறது. இப்போதும் மருத்துவ மனைகளில் தாய்ப்பால் வங்கி என்று அமைத்திருக்கிறார்கள். ஆனால் இந்தக் கதை சற்று அதீதமாக தோன்ருகிறது. தாய்ப்பாலுக்காக குழந்தையை,அதுவும் ஏற்கனவே குழந்தைகளை பறிகொடுத்த தாய் மற்றவர்களிடம் எப்படி கொடுப்பாள்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க பானு அக்கா! இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால், எவ்வளவு பெரிய எழுத்தாளராக இருந்தாலும் சமயங்களில் இப்படி எழுதுகிறார்கள்! அவர்களின் நூறு படைப்புகளை எடுத்துக் கொண்டால் 20 அல்லது 30 படைப்புகள்தான. நல்லபடியாக தேறலாம் என்று நினைக்கிறேன்.

      நீக்கு
  10. மற்ற செய்திகள் சுவாரஸ்யம்!

    பதிலளிநீக்கு
  11. ஆருஹி பத்தியும் , மாமன் சீர் பத்தியும் முகநூலிலேயே படிச்சாச்சு. எம்.வி.வெங்கட்ராமின் இந்தக் கதையும் "மணிக்கொடி காலம்" புத்தகத்தில் இருக்கோனு நினைக்கிறேன்.

    ஸ்வாமிநாத ஆத்ரேயரின் வீட்டு வழியாகக் கும்பகோணத்தில் அடிக்கடி போயிருக்கோம். அவரோட துளசி ராமாயணம் தான் நான் ராமாயணத் தொடர் எழுதும்போது குறிப்புகளுக்கு எடுத்துக் கொண்டேன். அதிகம் உதவியது திருப்புகழ். அதிலிருந்த ராமாயண நிகழ்வுகளை அம்பேரிக்காவில் வட கரோலினாவில் இருக்கும் மருத்துவரான சங்கர்குமார் எடுத்துத் தொகுத்து அனுப்பி உதவினார். நிகழ்வுகளையும் அவற்றின் விளக்கங்களையும் படிச்சுட்டு எழுதி இருக்கேன். இப்போல்லாம் அவங்களோட தொடர்பே இல்லை. பலரும் இப்போது தொடர்பில் இல்லை. :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மணிக்கொடி காலம் புத்தகத்தில் கதைகள் இருக்கின்றதா என்று தெரியவில்லை. பொதுவான கட்டுரைகளாக தானே அது இருக்கும்?

      நீக்கு
  12. தியாகபூமியில் நடிச்ச பேபி சரோஜாதான் (பத்மா சுப்ரமணியம் அக்கானு நினைவு.) அந்தக் காலத்துக் குழந்தை நக்ஷத்திரமாகப் புகழ் பெற்றவர். இவங்கல்லாம் தெரியலை. மற்றவற்றுக்கும் ஓகே.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!