செவ்வாய், 17 அக்டோபர், 2017

கேட்டு வாங்கிப் போடும் கதை :: ராமனைத் தேடிய சீதை - துரை செல்வராஜூ - சீதை 23     சீதா - ராமன் கதையில் இன்று திரு துரை செல்வராஜூ அவர்களின் படைப்பு....


======================================================================

ராமனைத் தேடிய சீதை
துரை செல்வராஜூ


திடுக்கிட்டு விழித்த அழகு - அழகேசன் மேலே வானத்தில் நட்சத்திரங்களைப்
பார்த்து கணக்கிட்டார்...

உத்தேசமாக பன்னிரண்டு மணியைத் தாண்டியிருக்கலாம்..

தலைமாட்டுக்கு அருகில் இருந்த சொம்பு தண்ணீரை எடுத்து வாய் கொப்பளித்தார்..

ஒரு வாய் குடித்தார்... அருகிருந்த வெற்றிலையை எடுத்து நீவியபோது -

லோவ்...லோவ்ஹ்!...லோவ்... லோவ்ஹ்!.. - என்றபடி வேலிப்பக்கம் பாய்ந்தது நாய்..

டேய்.. என்னாது?.. - கூவினார்..

வேலிப் படலின் அந்தப் பக்கம் யாரோ நிற்பது போலத் தோன்றியது..

யாரது.. அங்கால.. வேலி ஓரமா?..

நாயின் குரைப்பு அடங்கவில்லை...

மெல்ல நகர்ந்தாற் போலிருந்தது..

யாரது..ன்னு கேக்குறனில்லை?...

அழகு... நாந்தான்.. ராமையா!..

ஏ.. என்ன இந்த நடுச் சாமத்தில.. ஒனக்கும் தூக்கம் வரல்லையா?..- என்றவர்,
டேய்.. சும்மா குலைக்காம இரு!..  - என்று நாயை அதட்டினார்..

என்ன புரிந்து கொண்டதோ என்னவோ -
நாய் மறுபடியும் வைக்கோல் போருக்குள் முடங்கிக் கொண்டது...

வா... ராமையா.. உக்காரு!.. தண்ணி குடிக்கிறியா?..

கொடு.. கொடு.. ஒரே காந்தலா இருக்கு!.. - என்றவாறு தண்ணீரை வாங்கிக்
குடித்தார் - ராமையா...

ராமையா.. உனக்கு உடம்புக்கு ஆகலை..ன்னு கேள்விப்பட்டேன்...

அதெல்லாம் சரியாப் போச்சு...

இப்ப என்ன எழுவது இருக்குமா நமக்கு?..

எழுபத்தொன்னு நடக்குது!...

வயசு ஆகிட்டாலே தொந்தரவு தான்!...

சீக்கு பிணி... நோய் நொடி... இனிமே ஒன்னும் கிடையாது...

டாக்டர் சொன்னாரா!...

டாக்டரு வேற சொல்லணுமாக்கும்!.. நமக்கே தெரியாதா?...

இப்ப வக்கணையா பேசுவே!.. அன்னைக்கு அஞ்சாங்கிளாஸ் படிக்கிறப்ப
அம்மைப்பால் ஊசிக்குப் பயந்து வேலிய முறிச்சிக்கிட்டு ஓடினவன் தானே
நீ!...

ஆனா.. பாரு!.. பத்து வயசுல அம்மைப்பால் ஊசிக்குப் பயந்தேன்..
பதினெட்டு வயசுல வாள்பட்டரை...ல ஏழடி நீளத்துக்கு வாள் புடிச்சி
மரத்தையெல்லாம் சப்பை சப்பையா அறுத்துப் போட்டேன்.. அதெப்படி!..
அதெல்லாம் அந்த அந்த வயசு!..

நீ மட்டுமா!.. நானுந்தானே வந்தேன்!.. ரெண்டு பேரும் தானே வாள்பட்டரை
வேலைக்குப் போனோம்... நான் மேல அறுப்பு.. நீ கீழ இழுப்பு!.. அடடா!..
என்னா வேலை.. என்னா வேலை!..

நாள் முழுக்க வாள் அறுப்பு போட்டா இருபத்து நாலணா. - ஒன்னரை ரூபாய்
கொடுப்பாரு நல்லமுத்து ஆசாரி... நல்ல மனுசன் இல்லே!..

அந்த மாதிரி மனுசனுங்க எல்லாம் அந்தக் காலத்தோட சரி!..

சற்று நேரம் இருவரிடத்தும் மௌனம்...

எனக்கென்னமோ நம்மால தான் ஆசாரி மனசு உடைஞ்சிட்டாரோ..ன்னு இருக்கும்...

நாம என்னா தப்பு செஞ்சோம்.. அழகு?...

ஒரு தப்பும் செய்யலை தான்!.. ஆனா ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாம்!...

என்னா..ன்னு சொல்றது.. எப்படிச் சொல்றது?.. அதைச் சொல்றதுக்கான காலமா
அது?.. சொல்லியிருந்தா நம்மளை உசுரோட விட்டுருப்பானுங்களா நம்ம ஆளுங்க?..

நம்ம பிரச்னையை விடு.. அந்தப் புள்ளைய.. சும்மா விட்டுருப்பானுங்களா?...

மீண்டும் அவர்களிடத்தில் மௌனம்...

அந்த வேளையில் இருவரது நினைவிலும் வந்தவள் - பொன்னரும்பு..

நல்லமுத்து ஆசாரியாரின் செல்ல மகள்..

இவர்களை விட ஒரு வயதே இளையவள்...

அழகு.. என்றால் அழகு.. அப்படியொரு அழகு.. கடைந்தெடுத்த சிற்பம் போல!..
நாளெல்லாம் பார்த்துக் கொண்டே இருக்கலாம்..

உச்சி வேளையில் கலயத்தில் அப்பனுக்கும் அறுப்புப் பட்டரை ஆட்களாகிய
ராமையனுக்கும் அழகேசனுக்கும் கஞ்சி கொண்டு வருவாள்...

நாரத்தங்காய் ஊறுகாய்... நெனைச்சாலே வாய் ஊறும்!..

எருமைத் தயிர்..ல கரைச்ச பழைய சோறு .. சுட்ட கருவாடு..
இல்லேன்னா.. வறுத்து அரைச்ச மிளகாய் துவையல்..

அப்போதெல்லாம் முழுத் தேங்காயே ஒரு அணா தான்..
ஆனாலும், தேங்காய் எல்லாம் நல்ல நாள் பெரிய நாளைக்குத் தான்...

பனை ஓலைல மடக்கு செஞ்சி ஆளாளுக்கு ஒன்னு கையில கொடுத்துட்டு
அந்தப் பழைய சோத்தை மறுபடியும் நல்லா பிசைஞ்சு கையால அள்ளி ஓலை
மடக்கு...ல வைப்பாள்...

சோறு எடுத்து வைக்க அகப்பை இருந்தாலும்
கையால் அள்ளி வைப்பதில் தான் அவளுக்கு சந்தோஷம்..

தளரத் தளர தயிர்சோறும்... முளைக்கீரையும்...
வெயில் நேரத்துக்குக் குளுகுளு..ன்னு இருக்கும்....

யம்மாடி.. சாப்பிடியாடி.. தங்கம்?.. நீயும் ரெண்டு வாய் சாப்பிடும்மா...
எஞ் சீத்தாலச்சுமி!.. - பாசம் மேலிடக் கொஞ்சுவார் நல்லமுத்து..

பொன்னரும்பு..ன்னு பேரு.. ஆனா கூப்பிடுறதெல்லாம் சீத்தாலச்சுமி!...

ஆச்சு.. அவளுக்கும் கல்யாணம் முடிக்கிற வயசு தான்... தாயில்லாம
வளர்ந்துட்டா!... நல்லவனா மாப்பிள்ளை கிடைக்கணுமே!... - என்று தவித்துக்
கொண்டிருந்த போது தான் இவர்கள் இரண்டு பேரும் வேலைக்கு வந்தார்கள்...

கஞ்சி கொண்டு வந்த வேளையில் ஒருநாள் பொன்னரும்பும் ராமையனும் கண்களால்
கலந்திருந்ததைக் கண்டு திடுக்கிட்டார்...

இது எங்கே போயி முடியுமோ..தெரியலையே!...

சீத்தாலச்சுமிக்கும் ராமையனைப் பார்க்கிறதுன்னா கொள்ளை ஆசை...

இது அழகேசனுக்கும் சாடை மாடையா தெரியும்...

பையன் கெட்டிக்காரன்.. பொழச்சுக்குவான்.. இருந்தாலும் வாயத் திறந்து
கேக்க வேணாமா?.. - நல்லமுத்து ஆசாரி மருகினார்...

மகளைக் கோவிச்சுக்கிறதா?.. தாயில்லாப் புள்ளை... திடுக்...ன்னு
அழுதுட்டா.. எம்மனசு சல்லி சல்லியா ஒடைஞ்சி போகுமே... பெத்தவ இருந்தா
பொறுப்பா கேட்டு சொல்லுவா!.. நான்.. என்ன பண்ணுவேன்!... - மனம்
தடுமாறினார்...

அன்னைக்கு ராத்திரி..
குடிசை வாசல்ல ஓலைப் பாயில படுத்துக் கிடந்தார் நல்லமுத்து -

சீத்தாலச்சுமியும் தூங்கவில்லை...
பசுஞ்சாணம் இட்டு மெழுகிய திண்ணையில் புரண்டு கொண்டிருந்தாள்..

யம்மாடி.. சீத்தா.. சீத்தாலச்சுமி!..

ம்.. என்னப்பா?..

இங்க வாயேண்டி செல்லம்!.. காலெல்லாம் நோகுதுடா...
அந்த தைலத்தைக் கொஞ்சம் தேய்ச்சி விடேன்!...

காய்ச்சிக் கொண்டாரவா.. அப்பா?..

அதெல்லாம் வேண்டாம்.. சும்மாவே தேய்ச்சி விடுடா!...

தைலத்தை எடுத்து வந்து அப்பனின் கால்களில் தேய்த்து
- இதமாக அழுத்தி விட்டாள்...

மகளின் மீது பாசம் மிகுந்து வர - மளுக்...கென நல்லமுத்து விசும்பினார்...

அப்பா... என்னது.. ஏன் அழுவுறீங்க?.. - சீத்தாலச்சுமி திகைத்தாள்..

இன்னும் எத்தனை நாளைக்கோ எம் பொழப்பு...
ஒன்னை ஒருத்தன் கையில புடிச்சுக் கொடுத்திட்டா நல்லா இருக்கும்!...

அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்.. நான் உங்க கூடவே இருக்கேன்..

அப்படியெல்லாம் சொல்லக் கூடாது ராசாத்தி..
ஊரு ஒலகம் என்ன சொல்லும்?...

..... ..... .....

அப்பன் இப்படிக் கேக்கிறானே..ன்னு தப்பா நெனைக்காதே...ம்மா!.. வாள்
பட்டரைக்கு வருதே ராமையன்... மனசுக்குப் புடிச்சிருக்கா!..

அதெல்லாம் ஒன்னுமில்லை...

நீ சொல்லாட்டாலும் அப்பனுக்குத் தெரியாதா... ம்மா?...

அதெல்லாம் வேண்டாம்..ப்பா.... அவங்கள்ளாம் பணக்காரங்க!..

ராமையனோட அப்பாரு காந்தி கட்சி... நல்லவரு.. பெரிய மனசு...

உங்க இஷ்டம்.. - விருட்.. என எழுந்து உள்ளே போனாள் சீத்தாலச்சுமி...

நமக்கு உறவுமுறை இல்லே... இருந்தாலும்,
விடிஞ்சதும் போய்ப் பேசுவோம்.. தைரியம் கொடுடி.. மகமாயி!...

வானத்தில் நட்சத்திரங்கள் இடம் மாறியிருந்தன..

விடியலில் விழித்தெழுந்த நல்லமுத்து
எதிரில் ராமையனின் தந்தை வருவதைக் கண்டார்...

வாங்க ஐயா.. விடியல்..ல என்ன அவசரம்.. சேதி சொன்னா வந்திருப்பனே!..

நல்லமுத்து.. நாளன்னைக்கு நம்ம வீட்டு...ல விசேசம்.. ராமையனுக்கு எங்க
அக்கா மகளைக் கட்டுறதுன்னு!... பந்தக்கால் நாட்டணும்.. நீ தான்.. முன்னால
நின்னு எல்லாம் செய்யனும் .. உம் மகளை அழைச்சுக்கிட்டு வந்துடு!..

குடிசைக்குள் சீத்தாலச்சுமியின் விசும்பல்...
நல்லமுத்துவின் கண்களில் நீர் வழிந்தது...

அன்றைக்கு சாயங்காலமாக நல்லமுத்து உரல் ஒன்றை செதுக்கிக் கொண்டிருக்க
அருகே பட்டைகளை அள்ளிக் கொண்டிருந்தாள் சீத்தாலச்சுமி..

ராமையனும் அழகேசனும் ஒன்றாக வந்தனர்..

ஆசாரியாரே.. அப்பா சொல்லியிருப்பாங்க.. இனிமே வேலைக்கு வர்றதுக்கு
தோதுப்படாது.. குற்றங்குறை செஞ்சிருந்தா மன்னிச்சுக்கணும்!...

நல்லாயிருப்பீங்க.. தம்பீ.. நல்லாயிருப்பீங்க!..

மெல்ல நிமிர்ந்தான் ராமையன்...

மருத மரத்தின் மறைவில் சீத்தாலச்சுமி..

அவள் கண்களில் கண்ணீர்..

இப்பவாவது ஒரு வார்த்தை சொல்லேன்!.. - கண்ணீர்த் துளிகள் கெஞ்சின..

ராமையனுக்கு நெஞ்சில் உரம் இல்லாமல் போனது..

அடுத்த சில மாதங்களில் சீத்தாலச்சுமிக்கும் கல்யாணம் கூடிவந்தது..

நம்ம குடியானவன் வீட்டு கல்யாணம் என்று ஊரே கூடி வாழ்த்தியது..

வீட்டுக்கு வீடு சீர் வரிசை வைத்தார்கள்... கல்யாணம் முடிந்த கையோடு
மாமனாரையும் அழைத்துக் கொண்டு போனான் மாப்பிள்ளை...

வெயிலும் மழையுமாய் காலம் வெகு வேகமாக ஓடிப்போனது..

தொண்டையைக் கனைத்துக் கொண்டார் அழகு..

அதுக்கு அப்பறம் சீத்தாலச்சுமி..ய பார்த்தியா நீ!..

மாயவரம் பஸ்டாண்டுல ஒரு தரம்.... ஆனா, அவ என்னை கவனிக்கலை...

எம் மனசு உடைஞ்சு போச்சி அழகு.. அந்த ஏழை மனசு என்ன நெனைச்சதோ?..
நேருக்கு நேர் பார்க்கிற தைரியம் வரலையே!..

ஒரு தரம் மட்டையில சோறு அள்ளி வைக்கிறப்ப -
போதும்! ..ன்னு நான் கையை நீட்டினேன்.. அவசரத்துல அவ கையோட
என் கை பட்டுக்கிச்சு... அதுக்கே மூனு நாள் தூங்காமக் கிடந்தேன்...

அதுக்கு அப்புறம் ஒருதரம் கோடாலி கால்..ல விழுந்தப்ப தாவணியக் கிழிச்சு
கட்டி விட்டா... என் காலைத் தொட்டவளை நான் கை தூக்கி விடலையே...ந்னு
மனசு நோகுது...

அன்னைக்கு இருந்த காலக்கட்டத்தில கன்னிப் பொண்ணுங்களப் பார்க்கிறதே பெரிய
விஷயம்!... அதுவும் உங்க வசதிக்கும் அவங்க இருந்த நிலைமைக்கும்!..

என்ன பணமோ.. என்ன கௌரவமோ?.. கடைசியில என்னத்துக்கு ஆகும்?.. போற உசிரை
புடிச்சு நிறுத்துமா?...

அழகு!.. எம்மேல அவ ஆசை வெச்சிருக்கா... ன்னு தெரிஞ்சும் அவ கூட ஒரு
வார்த்தை கூட பேசாம வந்தேனே!... அவ மனசு எப்படி துடிச்சதோ?.. அந்தப்
பாவம் சும்மா விடுங்...கிறே!...

நீ.. உங்க வீட்டுல ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாம்..

அப்பாருகிட்டே சொன்னா.. என்னைய இழுத்துப் போட்டு ஒதைக்கிறதும் இல்லாம -

ஆசாரியார் வீட்டுக்குப் போயி அங்கேயும் கலாட்டா செய்வாங்க..ன்னு நான்
பயந்திட்டேன்...

எம் மாமன் வகையறாவோ - மகா முரடனுங்க!..

ஏழைய இந்த ஊரு அம்பலத்தில ஏத்தாது... நான் என்னடா செய்வேன்!...

எல்லாத்தையும் மறந்துட்டதா ஒரு பொழப்பு...
அதுக்காக இவளுக்கு எந்த குறையும் வைச்சதில்லை...

ஆலா குருவி மாதிரி அப்பப்போ சீத்தாலச்சுமியோட நினைப்பு
மனசு ஓரமா வரும்... தொண்டைக் குழியை கப்புன்னு அடைச்சிக்கும்...

இனிமே எந்த பிரச்னையும் இல்லை...

சீத்தாலச்சுமி என்னை மன்னிச்சிருப்பாளா?... ன்னு தவிச்சிக் கிடந்தேன்...
அன்னைக்கு அவ வந்தா.. பதினெட்டு வயசுல பார்த்த மாதிரியே வந்தா!...

என்னது.. சீத்தாலச்சுமி வந்தாளா?.. என்னா சொல்றே!..

அதெல்லாம் சொன்ன உனக்கு வெளங்காது அழகு!..

சீத்தாலச்சுமி ஏன் வந்தா?.. எதுக்கு வந்தா?..
என்னை மன்னிச்சிட்டதால அவ வந்தா!...
என் நிலமை அவளுக்குப் புரியாமலா இருந்திருக்கும்?...
அவளப் பார்த்ததும் என் கண்ணு கலங்கிப் போச்சு!...

அப்படியே ஆதரவா நெஞ்சோட அணைச்சுக்கிட்டா...
கண்ணைத் தொடச்சி விட்டுட்டு - வாங்க போவோம் ..ன்னா!..

நீ முன்னால போ.. பின்னாலேயே வாரேன்..ன்னு கிளம்பிட்டேன்!..

ஏ.. ராமையா!.. இந்த இருட்டுக்குள்ள எங்கே கிளம்பிட்டே!..

இனி இருட்டு ஏது?.. அதான் மன்னிச்சிட்டாளே!...
ராமையனை சீத்தாலச்சுமி மன்னிச்சிட்டாளே!..

தெருவில் ஏதோ ஒரு வாகனம் புழுதியைக் கிளப்பி விட்டுச் சென்றது..

சுளுக்கென.. வேலிப் படல் திறக்கின்ற சத்தம்...

குணுக்..குணுக்.. - என்றபடி நாய் ஓடி வந்து -
வாலைக் குழைத்துக் கொண்டு குதித்தது..

அழகேசன் திரும்பிப் பார்க்க - அங்கே அவரது மகன்..

தூங்காம என்னப்பா செஞ்சிக்கிட்டு இருக்கீங்க!..

நம்ம மாடி வீட்டு ராமையன் வந்தான்.. பேசிக்கிட்டு இருந்தோம்.. ராமையா?..

திரும்பினார் அழகேசன்.. அங்கே ராமையனைக் காணவில்லை...

என்னது?.. ராமையா வந்திருந்தாரா?..
அப்பா!.. ஏதாவது கனா கண்டீங்களா?..

கனா கண்டேனா?.. அவன் தானே வந்திருந்தான்...

அவரு இன்னிக்கு சாயங்காலம் தஞ்சாவூர் ஆஸ்பத்திரியில காலமாகிட்டார்...
அந்திப்பட்ட நேரத்தில கொண்டு வரவேணாம்..ன்னு - இப்போ தான் வீட்டுக்கு
எடுத்து வந்திருக்காங்க...

பொழுது விடிஞ்சதும் போய் விசாரிச்சுட்டு வாங்க!.. உங்க சின்ன வயசு
கூட்டாளி...  உடனே சொல்ல வேணாம்..ன்னு நினைச்சேன்.. நீங்க என்ன..ன்னா
அவரு வந்து பேசிக்கிட்டு இருந்தார்...ங்கிறீங்க!..

நெசந்தான்... சீத்தாலச்சுமி ராமையனை மன்னிச்சுட்டா!..

அழகேசன் தனக்குள் சொல்லிக் கொண்டார்....

என்னப்பா!.. எதும் சொன்னீங்களா?..

இல்லேப்பா... ஒன்னும் இல்லை...
கையைக் காலைக் கழுவிட்டு வீட்டுக்குள்ள போ...
அந்தப் புள்ளை தனியா தூங்குது!..

சரி.. மனசு பதறாம தூங்குங்க...
நான் வேணா கூட இருக்கவா?.. - மகன் ஆதரவாகக் கேட்டான்...

வேண்டாம்.. நீ உள்ளே போய்த் தூங்கு..

மகன் வீட்டினுள் சென்று விட்டான்...

மெல்ல கயிற்றுக் கட்டிலில் அமர்ந்தார்..

நானுந்தான் அரும்பு மேல ஆசை வெச்சிருந்தேன்...
ஒரு வார்த்தை நானாவது சொல்லியிருக்கலாம்...
ஆனா அரும்பு என்னய ஏறெடுத்து பார்த்ததில்லையே..

ஆசையும் பாசமும் ராமையனோட கலந்திருக்கும் போல...
அதான் கூடவே வந்து அழைச்சிக்கிட்டுப் போய்ட்டா!..
எங்கேயாவது பொறந்து நல்லா இருக்கட்டும்!..

ராமையனுக்கு இனிமே சந்தோஷந்தான்... ஏன்னா...
சீத்தாலச்சுமி ராமையனை மன்னிச்சுட்டா!...

முணுமுணுத்துக் கொண்டே அழகேசன் கட்டிலில் சாய்ந்தார்..

மேற்கே நட்சத்திரங்கள் இறங்கியிருக்க -
கீழ் வானில் வெள்ளி முளைத்திருந்தது...தமிழ்மணம்.

58 கருத்துகள்:

 1. அன்பின் ஸ்ரீராம் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி..

  பதிலளிநீக்கு
 2. ஆதரவை அள்ளித்தர, அதிகாலை மூன்றரை மணிக்கு துயில் களையும் நண்பருக்கும் நன்றி. இன்று உங்கள் படைப்பு எங்களை கௌரவிக்கிறது.

  பதிலளிநீக்கு
 3. இன்றைய காலைப் பொழுது பண்டிகை நாளின் பரபரப்புடன் மலர்ந்திருக்கும்..

  எந்நாளும் மகிழ்வே நிறைந்திருக்க இறைவன் அருள்வானாக..

  பதிலளிநீக்கு
 4. அன்பின் ஸ்ரீராம்...
  இங்கே இப்போது இரவு வேலை.. நேற்று இரவு 10 மணியில் இருந்து இன்று காலை 5 மணி வரைக்கும்..

  மதியம் 12 மணிக்கு சமையல் முடித்ததும் சாப்பிட்டு விட்டு உறக்கம்..

  இது வசதியாக இருக்கிறது..

  பதிலளிநீக்கு
 5. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 6. என்ன சொல்வது. தவித்த ராமைய்யனுக்கு சீத்தாலட்சுமி வந்து மன்னிப்புக் கொடுத்து அழைத்தும் போய்விட்டாள். வாய்த்தது அருமை. கவிதையாக வாழ்க்கை. கதையின் முடிச்சு
  ஆவியான பிறகு அவிழ்கிறது. துரை உங்களுக்கும் ஸ்ரீராமுக்கும் நன்றி. நிறைவான எழுத்து. வாழ்க வளமுடன். இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 7. கிராமத்து அத்தியாயம். எளிய காதலைச் சொன்ன விதமும் பாத்திரங்களின் உயர் குணங்களும் கதையின் ஆழத்தை அதிகப்படுத்துகிறது. நல்ல கதை. வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 8. அன்பின்ஜி
  பழங்கால காதல் வகையில் ஒரு அமரகாவியம்.

  நிச்சயமாக இது பலருக்கும் நினைவலைகளை மீட்டி விடும் இதில் நான் மட்டும் விதி விலக்கா ?

  தாயின்றி வளர்க்கப்படும் தந்தையின் நிலைப்பாட்டை அழகாக விளக்கினீர்கள்.

  //மேலிருந்து நான் அறுப்பு கீழிருந்து நீ இழுப்பு//

  வேலைகளின் யதார்த்த வார்த்தைகள் ஸூப்பர் ஜி

  பதிலளிநீக்கு
 9. என்ன ஒரு நடை! அழகும் ஆழமும் நிறைந்த கதை கிராமத்துக் காட்சியில் விரிந்தது. யதார்த்தமும் ஏதோ நேரில் கண்டது போலவும் ஆன பாத்திரப் படைப்புகள், உரையாடல்கள் என்று கதைக்குள் இழுத்துச் சென்றுவிட்டீர்கள் சகோ. முதலில் முடிவு ஊகிக்க முடியலை ஆனால் மகன் வந்த போது புரிந்துவிட்டது..! .ஆவி ரூபத்தில் மன்னித்துத் தன்னுடன் அழைத்துச் செல்கிறாள் சீதாலட்சுமி என்று. ஆன்மாக்கள் அங்கேனும் இணையட்டும்..உங்கள் வார்த்தைகள் போல் எங்கேனும் பிறந்து அவர்களது அன்பு நிறைவேறி மகிழ்வாக வாழட்டும்!!...கதாபாத்திரங்களின் குணங்கள் மென்மையும் அன்பும் கதாசிரியரான உங்களது மனமும் பிரதிபலிக்கிறது..அருமை. மிகவும் ரசித்தோம் கதையை...வாழ்த்துகள்! பாராட்டுகள்!

  கீதா

  பதிலளிநீக்கு
 10. மிக மிக நன்றாக இருக்கிறது துரை செல்வராஜு ஸார்! கிராமீயமணம் கமழும் உரையாடலில் வழக்கமான தங்களின் அழகு தமிழில் அக்காலத்துக் காதலை இயல்பாகச் சொல்லிச் செல்லுகிறது கதை. முடிவு சற்றும் எதிர்பாராதது. வாழ்த்துகள் ஸார்.

  பதிலளிநீக்கு

 11. மிக மிக அருமையான கதை...

  எங்கும் தொய்வு இல்லாமல்...

  எங்களை யோசிக்கவே விடாமல்...

  கதையை நகர்த்தியுள்ளீர்கள்...

  கதை மாந்தர்களும்...அவர்களின் எண்ண போக்கும் சிறப்பு...

  முடிவும் இதுவரை இல்லா புதுமை...

  நன்றி ஐயா..படைப்பிற்கும்..பகிர்வுக்கும்...

  பதிலளிநீக்கு
 12. @ துரை செல்வராஜு:

  அன்புமனம் கனிந்தபின்னே அச்சம் தேவையா
  அன்னமே நீ இன்னும் அறியாத பாவையா

  என்று பொன்னரும்பு தூரத்தில் வருவதைப் பார்த்து முணுமுணுத்திருக்கலாமோ ராமையா..ஆனால் அது அந்தக்காலமாயிற்றே. கன்னிகளை ஏறெடுத்துப் பார்ப்பதையும் கண்டிக்கும் சமூகம். மனதுக்குள் நினைப்பதும் மற்றவர்க்கு தெரிந்துவிடுமோ எனப் பதறவைக்கும் காலம்.

  ஒருவேளை, பொன்னரும்பு, குறும்பு மனதுக்குள் குறுகுறுத்திருப்பாளோ இப்படி:

  காதலெனும் வடிவம் கண்டேன்… கற்பனையில் இன்பம் கொண்டேன்…
  மாலையிடும் நாளை எண்ணி… மயங்குகிறாள் ஆசைக்கன்னி…

  எப்படியிருந்தாலும், மனத்திற்குள் நிகழ்வதையெல்லாம் வார்த்தைக்குள் வரவைக்கமுடியுமா? மனமென்பதே ஒரு தனி உலகமாயிற்றே.

  காதல், மௌனமாய் நடத்திய தேவகாவியமொன்றை, ஒரு 30-40 வருடத்துக்கு முன் நிகழ்ந்திருக்கக்கூடிய அதிசயத்தை, கிராமத்து வாசனையில் தூவி வாசகர்களைக் கிறங்கவைத்துவிட்டீர்கள். வாழ்த்துக்கள் !


  பதிலளிநீக்கு
 13. அன்பின் ஐயா...
  மிகச் சிறப்பான கதை...
  சீத்தாலெச்சுமி மன்னித்தாள் என்று சொல்லும் போது புழுதி பறக்க கார் சென்ற இடத்தில் முடிவு இப்படியாகத்தான் இருக்கும் என யூகித்தேன்...
  பழைய காலத்து கிராமத்து வாழ்க்கையை அவர்களின் நினைவுகளில் இளமைக் காலத்தை விரித்ததில் ரசிக்க முடிந்தது.
  அந்தக் காலக் காதல் பெரியவர்களுக்குப் பயந்து மனசுக்குள்ளயே பூட்டி வைக்கப்பட்டதைச் சொன்ன விதம் அருமை.

  கதையைத் தெரிவு செய்து வெளியிட்ட ஸ்ரீராம் அண்ணாவுக்கும் எழுதிய தங்களுக்கும் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 14. பொக்கிஷமாய் காதல் க்விதைகதையாய் இங்கே... சொல்லாத காதல் மூவரையும் விரும்பாமல் போய்விட்டதே..... முடிவில் இருவர் சேர ஒருவர் மறுக நின்றுவிட்டதே..... யாரும் ராமனுமில்லை, சீதையும்மில்லை, காதல் மன்னித்தது இங்கே
  மிக அருமை வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 15. இயல்பான நடையில் இனிய கதை த.ம.வுடன்

  பதிலளிநீக்கு
 16. எண்ணங்களிலேயே காதலை வளர்த்து,நிறைவேறாத காதலை எண்ணி,மனதுக்குள் குமுறினாலும்,திரும்ப ஏதோ வந்த வாழ்வையும் ஏற்று, வாழ்ந்து அவர்கள் முடிவிற்குப் பின்னர் ஒன்று நேரும் காலத்தில்நேர்ந்தசேருவதாக கற்பனை அபாரம். காலமும்,வாழ்வும் அப்படியாக இருந்த ஒரு நேரம். மாசுபடாத காதல். இம்மாதிரி ஸம்பவங்கள் நேர்ந்த காலத்திலும் ஓடிப்போகும் அப்பாவிப் பெண்களின் கதைகளும் நிகழ்ந்துகொண்டு இருந்தன. அந்தக்காலக் கதைகளெல்லாம் ஞாபகம் வந்தது. அருமை. அன்புடன்

  பதிலளிநீக்கு
 17. @ வல்லிசிம்ஹன் said...

  >>> அருமை. கவிதையாக வாழ்க்கை. கதையின் முடிச்சு
  ஆவியான பிறகு அவிழ்கிறது..<<<

  தங்கள் வருகையும் வாழ்த்துரையும் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..
  அன்பின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!..

  பதிலளிநீக்கு
 18. @ நெல்லைத் தமிழன் said...

  >>> கிராமத்து அத்தியாயம். எளிய காதலைச் சொன்ன விதமும் பாத்திரங்களின் உயர் குணங்களும் கதையின் ஆழத்தை அதிகப்படுத்துகிறது...<<<

  தங்கள் வருகையும் வாழ்த்துரையும் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..
  அன்பின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!..

  பதிலளிநீக்கு
 19. @ KILLERGEE Devakottai said...

  >>> நிச்சயமாக இது பலருக்கும் நினைவலைகளை மீட்டி விடும் இதில் நான் மட்டும் விதி விலக்கா?.. <<<

  தங்கள் வருகையும் இனிய் கருத்துரையும் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..
  அன்பின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!..

  பதிலளிநீக்கு
 20. @ Thulasidharan V Thillaiakathu said...

  >>> அழகும் ஆழமும் நிறைந்த கதை கிராமத்துக் காட்சியில் விரிந்தது. யதார்த்தமும் ஏதோ நேரில் கண்டது போலவும் ஆன பாத்திரப் படைப்புகள், உரையாடல்கள் என்று கதைக்குள் இழுத்துச் சென்றுவிட்டீர்கள்..<<<

  தங்கள் வருகையும் இனிய கருத்துரையும் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..
  அன்பின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!..

  பதிலளிநீக்கு
 21. @ Thulasidharan V Thillaiakathu said...

  >>> கிராமீயமணம் கமழும் உரையாடல் அக்காலத்துக் காதலை இயல்பாகச் சொல்லிச் செல்லுகிறது கதை.<<<

  தங்கள் வருகையும் வாழ்த்துரையும் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..
  அன்பின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!..

  பதிலளிநீக்கு
 22. @ Anuradha Premkumar said...
  >>> அருமையான கதை.. எங்கும் தொய்வு இல்லாமல்...<<<

  தங்கள் வருகையும் வாழ்த்துரையும் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..
  அன்பின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!...

  பதிலளிநீக்கு
 23. @ ஏகாந்தன் Aekaanthan ! said...

  >>> எப்படியிருந்தாலும், மனத்திற்குள் நிகழ்வதையெல்லாம் வார்த்தைக்குள் வரவைக்கமுடியுமா? மனமென்பதே ஒரு தனி உலகமாயிற்றே...<<<

  உண்மையான வார்த்தைகள்..

  மேலும் கதைக்கு சுவை சேர்க்கும் வண்ணமாக தேனினும் இனிய பாடல்களின் வரிகளைத் தந்து அசத்தி விட்டீர்கள்..

  தங்கள் வருகையும் வாழ்த்துரையும் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..
  அன்பின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!..

  பதிலளிநீக்கு
 24. @ பரிவை சே.குமார் said...

  >>> அந்தக் காலக் காதல் பெரியவர்களுக்குப் பயந்து மனசுக்குள்ளயே பூட்டி வைக்கப்பட்டதைச் சொன்ன விதம் அருமை...<<<

  தங்கள் வருகையும் வாழ்த்துரையும் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..
  அன்பின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!..

  பதிலளிநீக்கு
 25. @ poovizi said...

  >>>பொக்கிஷமாய் காதல் கவிதை கதையாய் இங்கே... சொல்லாத காதல் மூவரையும் விரும்பாமல் போய்விட்டதே..<<<

  தங்கள் வருகையும் கருத்துரையும் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..
  அன்பின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!.

  பதிலளிநீக்கு
 26. @ Asokan Kuppusamy said...

  >>> இயல்பான நடையில் இனிய கதை<<<

  தங்கள் வருகையும் கருத்துரையும் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..
  அன்பின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!.

  பதிலளிநீக்கு
 27. @ காமாட்சி said...

  >>> காலமும்,வாழ்வும் அப்படியாக இருந்த ஒரு நேரம். மாசுபடாத காதல்..<<<

  தாங்கள் சொன்னதைப் போன்ற சம்பவங்களும் ஆங்காங்கே இருந்தாலும் அவை மிகவும் சொற்பம்.. கண்ணியம் மிகுந்திருந்தது மக்களின் வாழ்வில்..

  தங்கள் வருகையும் கருத்துரையும் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..
  அன்பின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!..

  பதிலளிநீக்கு
 28. @ ஸ்ரீராம். said...

  >>> ஆதரவை அள்ளித்தர, அதிகாலை மூன்றரை மணிக்கு துயில் களையும் நண்பருக்கு நன்றி. இன்று உங்கள் படைப்பு எங்களை கௌரவிக்கிறது..<<<

  தங்களது தளம் தான் என்னை கௌரவிக்கின்றது..

  தங்களது கருத்துரை மிக்க மகிழ்ச்சி.. நன்றி..
  அன்பின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!..

  பதிலளிநீக்கு
 29. @ ராமலக்ஷ்மி said...

  >>> அருமையான கதை..<<<

  தங்கள் கருத்துரைக்கு மிக்க மகிழ்ச்சி.. நன்றி..
  அன்பின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!.

  பதிலளிநீக்கு
 30. அற்புதமான கதை ..அப்படியே ஒன்றிப்போனேன் கதையுடனும் கதை மாந்தருடனும் ..அழகான கிராமிய மணம் வீசும் திரைப்படம் பார்த்த உணர்வு ..இல்லையில்லை வேண்டாம் இதை திரைப்படமா கற்பனை செஞ்சாலும் அதன் அழகு குலைந்திடும் திரையில்..

  ..அழகும் ராமையாவும் பொன்னரும்பு சீதாலெட்சுமியும் மனதில் இன்னும் பல நாள் இருப்பாங்க அவங்க நிறைவேறா காதலாலும் மன்னிப்பினாலும்

  பதிலளிநீக்கு
 31. @ Angelin said...

  >>> அற்புதமான கதை.. அப்படியே ஒன்றிப்போனேன்..<<<

  தங்கள் வருகையும் கருத்துரையும் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..
  அன்பின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
 32. கதை ரொம்ப நல்லாயிருக்கு! நடை வெகு அருமை. //உத்தேசமாக பன்னிரண்டு மணியைத் தாண்டியிருக்கலாம்..//
  //சீக்கு பிணி... நோய் நொடி... இனிமே ஒன்னும் கிடையாது...// இதைப் படித்தவுடன் கொஞ்சம் அலர்ட் ஆயிட்டேன்! :-). வாழ்வைத் தாண்டி இணைந்த நெஞ்சங்கள் நினைவில் இருப்பர்!
  தீபாவளி வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 33. அருமையான கதை. கதையும் கதையின் மாந்தருடனும் வாழ்ந்து நேரில் பார்த்தது போல் ஓர் உணர்வு. நாய் முதல்முறை குரைக்கும்போதே ஏதேனும் பேய்க்கதையோனு நினைச்சேன். ஆனால் வேறுவிதமாய்க் கதை நகர்கிறது. முடிவு மகன் வரும்போதே எதிர்பார்த்தது தான் என்றாலும் ராமையனும், சீத்தாலச்சுமி என்னும் பொன்னரும்பும் எவ்வளவு ஆழ்மான நேசிப்புடன் இருந்திருந்தால் கடைசியில் வந்து கூட்டிச் சென்றிருப்பாள். அதை இந்த ரகசியம் தெரிந்த ஒரே மனிதரான அழகுடன் ராமையன் பகிர்ந்ததைப் பார்த்தால் பிரமிப்பு அழகுக்கு மட்டுமல்ல! நமக்கும் தான். கடைசியில் தான் அழகும் பொன்னரும்பை விரும்பியது வெளியே வருகிறது. அந்தக் காலத்துக்கே கூட்டிச் சென்று விட்டீர்கள்.

  பதிலளிநீக்கு
 34. எளிதில் நிறைவேறி இருந்தால் இப்படியான ஆழ்ந்த தாக்கம் நம்மிடம் இருக்காது! மனதில் நின்ற கதை!

  பதிலளிநீக்கு
 35. உள்ளது உணர்வுகளுக்கு வார்த்தைகளில் உயிர் கொடுக்க வேண்டும் இல்லாவிட்டால் அவை வாடிச் சருகாகும் கதைகள் எழுதுவதில் எங்கோ போய் விட்டீர்கள் துரை ராஜு சார்

  பதிலளிநீக்கு
 36. தஞ்சையம்பதி பக்கத்தில் படித்தேன். மிக அருமை.கதையில் அருமையான உத்தியைப் படைத்துவரும் அவருக்கு பாராட்டுகள். பகிர்ந்த உங்களுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 37. எங்கள் பிளாக் குடும்பத்தார் மற்றும் வாசகர்கள் அனைவர்க்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 38. @ middleclassmadhavi said...

  >>> கதை ரொம்ப நல்லாயிருக்கு! நடை வெகு அருமை..<<<

  தங்கள் வருகையும் கருத்துரையும் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..
  அன்பின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!...

  பதிலளிநீக்கு
 39. @ Geetha Sambasivam said...

  >>> அருமையான கதை. கதையும் கதையின் மாந்தருடனும் வாழ்ந்து நேரில் பார்த்தது போல் ஓர் உணர்வு..<<<

  தங்கள் வருகையும் கருத்துரையும் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..
  அன்பின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!..

  பதிலளிநீக்கு
 40. @ Geetha Sambasivam said...

  >>> எளிதில் நிறைவேறி இருந்தால் இப்படியான ஆழ்ந்த தாக்கம் நம்மிடம் இருக்காது!..<<<

  இந்தக் கதையை எழுதியபின் எனக்குள் குழப்பம்..
  எப்படி எடுத்துக் கொள்வார்களோ.. - என்று..

  அனைவரையும் கவர்ந்ததில் மகிழ்ச்சி..

  தங்கள் மீள்வருகையும் கருத்துரையும் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..
  அன்பின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!..

  பதிலளிநீக்கு
 41. @ G.M Balasubramaniam said...

  >>> உள்ளத்து உணர்வுகளுக்கு வார்த்தைகளில் உயிர் கொடுக்க வேண்டும்.. <<<
  தங்களது தளத்தில் குறிக்கப்பட்டிருக்கும் சொற்றொடர்...
  அதையும் இங்கே நினைவூட்டியது சிறப்பு..

  தங்கள் வருகையும் கருத்துரையும் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..
  அன்பின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!..

  பதிலளிநீக்கு
 42. @ Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

  >>> மிக அருமை.கதையில் அருமையான உத்தி..<<<

  தங்கள் வருகையும் பாராட்டுரையும் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..
  அன்பின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!..

  பதிலளிநீக்கு
 43. @ Angelin said...

  >>> எங்கள் பிளாக் குடும்பத்தார் மற்றும் வாசகர்கள் அனைவர்க்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.. <<<

  தங்கள் வருகையும் வாழ்த்துரையும் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..
  அனைவருக்கும் அன்பின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!.

  பதிலளிநீக்கு
 44. எங்கள் ப்ளாக் ஸ்ரீராம், மற்றும் ஆசிரியர் குழு, வாசக, வாசகியர் அனைவருக்கும் மனமார்ந்த, இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

  ஆண்டவனருளால் எங்கும், எப்போதும் ஆனந்தம் பொங்கட்டும் !

  பதிலளிநீக்கு
 45. @ ஏகாந்தன் Aekaanthan ! said...

  >>> எங்கள் ப்ளாக் ஸ்ரீராம், மற்றும் ஆசிரியர் குழு, வாசக, வாசகியர் அனைவருக்கும் மனமார்ந்த, இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...<<<

  தங்கள் வருகையும் வாழ்த்துரையும் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..
  அனைவருக்கும் அன்பின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!..

  பதிலளிநீக்கு
 46. மண்வாசனை என்றால் என்னவென்று புரியவைத்தீரகள, நன்றி. தரமான குறும் படத்துக்கான கதை. பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
 47. அழகான கிராமீய தமிழில் ஒரு காதல் காவியம்! அந்தக்கால 'அகிலன்' கதையைப்படித்தது போலிருந்தது! ஒரு தேர்ந்த எழுத்தாளராய் மனதில் நின்று விட்டீர்கள்! இனிய வாழ்த்துக்கள்!!

  பதிலளிநீக்கு
 48. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் சகோதரர் ஸ்ரீராம்!!

  பதிலளிநீக்கு
 49. @அப்பாதுரை said...

  >>> மண்வாசனை என்றால் என்னவென்று புரியவைத்தீரகள்..<<<

  தங்கள் வருகையும் கருத்துரையும் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..
  அன்பின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!.

  பதிலளிநீக்கு
 50. @ மனோ சாமிநாதன் said...

  >>> அழகான கிராமீய தமிழில் ஒரு காதல் காவியம்!..<<<

  அகிலன்!.. அவர்கள் எல்லாம் பெரியவர்கள்..
  ஏதோ எனக்குத் தெரிந்ததை எழுதுகிறேன்..

  தங்கள் வருகையும் கருத்துரையும் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..
  அன்பின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!..

  பதிலளிநீக்கு
 51. @ புலவர் இராமாநுசம் said...

  >>> இயல்பான நடை அழகு..<<<

  தங்கள் வருகையும் கருத்துரையும் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..
  அன்பின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!.

  பதிலளிநீக்கு
 52. அருமை செல்வராஜ் சார். கிராமத்து காதலை அப்படியே கண்முன்கொண்டு வந்து நிறுத்திட்டீங்க.

  பதிலளிநீக்கு
 53. @ டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

  >>> கிராமத்து காதலை அப்படியே கண்முன்கொண்டு வந்து நிறுத்திட்டீங்க...<<<

  தங்களது வருகையும் அன்பின் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

  பதிலளிநீக்கு
 54. கதையை மூமுமூச்சில் படித்தேன்.
  கதை மாந்தர்கள் கண்முன் வந்து போனார்கள்.
  அருமையான அன்பான கதை.
  நேசிப்பை சொல்ல முடியாமல் ஒவ்வொருவரும் தவித்த தவிப்பு தெரிந்தது.
  கடைசி முடிவு மிக அருமை.

  தொடர்ந்து கதை எழுதுங்கள்.
  வாழ்த்துக்கள்.
  ஸ்ரீராமுக்கு நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 55. @ கோமதி அரசு said...

  >>> தொடர்ந்து கதை எழுதுங்கள்... வாழ்த்துக்கள்...<<<

  தாங்கள் இந்தக் கதையை இன்னும் படிக்கவில்லையே என்று காத்திருந்தேன்..
  தங்களது வருகையும் அன்பின் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!