பிரபு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பிரபு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

2.4.21

வெள்ளி வீடியோ : கண்ணோரம் ஆயிரம் காதல் கணை வீசுவாள்.. முந்தானை சோலையில் தென்றலுடன் பேசுவாள்..

 பிரபுவின் நூறாவது படம் என்று அவர்கள் சொந்தத் தயாரிப்பில், அதாவது சிவாஜி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் வெளியான படம் ராஜகுமாரன்.  வெளியான ஆண்டு 1994.  

8.7.13

தியேட்டர் நினைவுகள்


எம் ஜி ஆர் படம் ஒன்று வெளியாகியிருந்தது. 

                              
              
 
நண்பருடன் படத்துக்குச் சென்றேன். டிக்கெட் வாங்குமிடத்தில் கூட்டமான கூட்டம்.

அடிதடிக் களேபரத்தில் வேஷ்டி உருவப்பட்ட நண்பர், அதை வெளியில் வந்ததுமே கவனிக்க, வெறியாகி மறுபடிக் கூட்டத்துக்குள் நுழைந்தவர், வேஷ்டியுடன் வெளி வந்தார். 


                                                   

 
"எப்படி உடனே உன் வேஷ்டியைக் கண்டு பிடிச்சே?" என்று கேட்டேன்.

"என் வேஷ்டியா? அது எங்கே இருக்கோ... இது யார் வேஷ்டின்னே தெரியாது. என் வேஷ்டியை உருவினாங்க இல்லே... நானும் அதே வழியைத்தான் பின்பற்றினேன்" என்று அந்த வேஷ்டியைக் கட்டிக் கொண்டு வர, உள்ளே சென்றோம்!

நண்பர் சிவாஜி ரசிகர். எனக்கு இருவரையும் பிடிக்கும். படம் ஆரம்பித்துச் சில நிமிடங்களிலேயே நண்பர் ஒவ்வொரு காட்சியிலும், 'இது நடிப்பா' 'இது அழுகையா' என்றெல்லாம் கமெண்ட் அடித்த படியே இருந்தார். பின்னாலிருந்து முணுமுணுப்புகளும் "உச்" ஒலிகளும் எழுந்த அதே சமயம் இரண்டு மூன்று சீட் தள்ளியிருந்த ஒருநபர் உயர்த்திக் கட்டிய கைலியுடன் வேகமாக அருகில் வந்து நண்பர் சட்டையைப் பிடித்தார். 


"இதோ பார்... எங்களுக்கு இதுதான் நடிப்பு... மேல பேசினே..வெட்டிடுவேன்! ஒண்ணு அமைதியாப் படத்தப் பாரு... இல்ல...?" என்று தொடங்கியவர் சட்டென இன்னும் கோபமாகி  "எவ்வளவுடா டிக்கெட்டுக்குக் கொடுத்தே? ரெண்டார்ரூவா தானே... இந்தா... இதுல நாலு ரூவா இருக்கு... எடுத்துட்டு வெளியே ஓடிடு" 


அப்போது முதல் வகுப்பு 2.50 தான். அப்புறம் நண்பர் பேசவே இல்லை. நானும் நண்பர் பக்கமும் திரும்பவில்லை, இந்தப் பக்கமும் திரும்பவில்லை.


                                                         

 
இடைவேளையில் விளக்குகள் எரிந்தபோதும் அந்தப் பக்கம் நான் பார்க்கவே இல்லை. அங்கிருந்து எழுந்துவந்த அந்த நபர் "ஸார்! நீங்களா?" என்றபோதுதான் அவர் எங்கள் ஆபீஸ் பியூன் என்று தெரிந்தது. அப்புறம் அருகிலிருப்பவர் என் நண்பர்தான் என்று சொன்னதும் அவர் பேசாமல் போய்விட, இடைவேளைக்கு அப்புறம் கொஞ்சம் நிம்மதியாய்ப் படத்தைத் தொடர்ந்து பார்த்தாலும், நண்பர் அப்புறம் பேசவில்லை! 

==================================

இன்னொரு சமயம் சிவாஜியின் ஜேம்ஸ்பாண்ட் படம் ஒன்று வெளியான சமயம். முதல்நாள் (படம் வெளியான முதல் நாள் அல்ல!) டிக்கெட் கிடைக்காத வெறுப்பில் மறுநாள் எங்கள் ஏரியா ரிக்ஷாக்காரரிடம் பணம் தந்து நான்கு முதல் வகுப்பு டிக்கெட்டுகள் எடுக்கச் சொல்லி முன்னதாகவே அனுப்பி விட்டு, நாங்கள் அப்புறம் தியேட்டர் சென்று காத்திருந்த ரிக்ஷாக்காரரிடம் டிக்கெட்டைப் பெற்றுக் கொண்டு உள்ளே சென்றோம்.

                                                    

 
முதல் வகுப்பில் டிக்கெட்டைக் கிழிப்பவர் கையில் கொடுத்ததும் அவர் எங்களை வெறுப்புடன் பார்த்து விட்டு கீழ் திசையில் கைகாட்டினார். பார்த்தால் அங்கு காணப்பட்ட போர்ட் "தரை டிக்கெட்டுக்குச் செல்லும் வழி" என்றிருந்தது. குழம்பிப் போய் கையிலிருந்த டிக்கெட்டைப் பார்த்தால் அத்தனையும் 50 காசு டிக்கெட்டுகள்.

ரிக்ஷாக்காரர் த
ன் இயல்பில் வாங்கினாரோ, கமிஷன் அடிக்க வாங்கினாரோ.... அன்று தரையில் அமர்ந்துதான் அந்தப் படத்தைப் பார்க்க நேர்ந்தது. மாறுபட்ட அபிப்ராயங்களால், 'அப்
படியாவது அந்தப் படத்தைப் பார்க்க வேண்டுமா' என்று திரும்பி வரவும் முடியவில்லை!

===================================

'அக்னி நட்சத்திரம்' வெளியான சமயம். 

மதுரை சினிப்ரியா தியேட்டர். 

நண்பர் சுகுமார், அவர் நண்பர் பாலன் மூலம் முதல் காட்சிக்கு (6.00 மணி ஆட்டம்!) டிக்கெட் ரிசர்வ் செய்யச் சொல்லி அனுப்பி டிக்கெட்டை வாங்கி வைத்து விட்டார். என்னையும் என் நண்பனையும் அங்கு வரச் சொல்லி விட்டார். 
                                             
                                                   
பணி முடிந்து நாங்களும் அங்கு சென்றோம். டிக்கெட் கவுண்டரில் திமிறிக் கொண்டிருந்த கூட்டத்தை நக்கலாகப் பார்த்தபடி உள்ளே சென்றோம்.


                                              

 
(முன்னர் ஒருநாள், அற்றைத் திங்கள் அந்நாளில் இதே தியேட்டரில் காந்தி படம் பார்க்க இதே போலக் கூட்டத்தில் சிக்கித் திணறிக்கொண்டிருந்த சாதுவான என்னை இந்தத் தியேட்டர் ஊழியர்கள் கூட்டத்தை ஒழுங்கு படுத்துகிறேன் என்று சவுக்குக் கட்டையால் அடித்து காலை வீங்க வைத்திருந்தார்கள்! அந்த வெறுப்பில் இன்றுவரை நான் காந்தி படம் பார்க்கவில்லை! 'காந்தி படமும் டெண்டுக் கொட்டாயும்' என்ற எங்கள் பழைய பதிவில் ஏற்கெனவே இதைப் புலம்பியிருக்கிறேன்!)

டிக்கெட்டைக் கிழித்து எங்களை உள்ளே அனுமதித்தார் ஊழியர். சென்று இடம் பிடித்து அமர்ந்தோம். படம் இன்னும் தொடங்கவில்லை. சும்மா அரட்டை அடித்துக் கொண்டிருந்தோம். படம் தொடங்கும் மணி அடித்தது. விளக்கை அணைத்துப் படம் தொடங்கும் சமயம் தியேட்டர் ஊழியர் 'டார்ச் லைட்'டுடன் நான்கு பேர்களை அழைத்துக் கொண்டு எங்களை நோக்கி வந்தார். "உங்கள் டிக்கெட்டுகளைக் காட்டுங்கள் ஸார்..." என்றா.


அவர்களிடமும் எங்கள் இருக்கைக்குரிய எண்களைக் கொண்ட டிக்கெட்டுகள். கொஞ்ச நேர கோப, தாப, சர்ச்சைகளுக்குப் பின் நாங்கள் வெளியேற்றப் பட்டோம்!!


என்ன காரணம் தெரியுமா? எங்கள் கையிலிருந்தது, அதே தினத்துக்கான 'மேட்னி' ஷோவுக்கான டிக்கெட்டுகள். நண்பரின் நண்பர் பாலன் கைங்கர்யம். மாலைக் காட்சிக்குத்தானே நாம் சொல்லியிருந்தோம் என்று நாங்களும் அதைச் சரிபார்க்கவில்லை!


வெளியில் வந்த அவமானத்தில் சுகுமார் சற்றும் எதிர்பாராத ஒரு காரியம் ஒன்றை நாங்கள் மறுக்க மறுக்கச் செய்தார்.

சுகப்ரியாவில் ஓடிக் கொண்டிருந்த 'குரு-சிஷ்யனு'க்கு டிக்கெட் எடுத்துக் கொண்டுவந்து உள்ளே அழைத்துச் சென்று விட்டார். 


                         
 
அந்தக் கொடுமையை என்ன சொல்ல!