ஹோட்டலில் சாப்பிடவேண்டும் என்ற ஆசை
எல்லோருக்கும் இருந்தபோதிலும் எத்தனை நாள் ஹோட்டலில் சாப்பிட முடியும்?
'எப்படா வீட்டுச் சாப்பாடு சாப்பிடுவோம்' என்ற ஏக்கம் வந்துவிடும்.
அதுமாதிரி சமயங்களில் வீட்டில் சாப்பிடும் ஒரு மோர் சாதத்துக்கும்
நார்த்தங்காய் ஊறுகாய்க்கும் ஈடு இணை எது? அல்லது பழைய சாதத்துக்கு சின்ன
வெங்காயம் பச்சை மிளகாய்க் கடித்துக் கொண்டு சாப்பிடுவது போலத்தான் வருமா?
ஹாஸ்டலில் தங்கிப் படித்துக் கொண்டிருந்த உறவினர் வீட்டுப் பையன் ஒருவன் அவ்வப்போது எங்கள் வீட்டுக்கு வந்து தங்குவான். வீட்டுச் சாப்பாட்டுக்கு ஏங்கி இருக்கும் அவன் நாவுக்கு நாங்கள் கொஞ்சம் ஆறுதலளித்தாலும் அவன் சொந்த ஊர் செல்லும்போது ஒரு விசேஷத்துக்காக நாங்களும் கூடச் சென்றோம். சாப்பிடும் நேரம் "நம்ம வீட்டுச் சாப்பாடு நம்ம வீட்டுச் சாப்பாடுதான்மா...இந்த ருசி வேற எங்கயுமே கிடைக்கல" என்றவனை அவன் அம்மா அடக்கினார். நாங்கள் தவறாக எடுத்துக் கொள்வோமோ என்று!
அவன் சொன்னதில் என்ன தவறு?
தாங்கள் தங்கள் இளமையில் தங்கள் வீடுகளில் சுவைத்த சுவையை இங்கும் சமையலில் தொடர்கிறார்கள்.
நமக்கு நம் வீட்டுச் சமையல்தான் மனதில் நிற்கும்,
பிடிக்கும்! ஆனாலும், சில உணவு வகைகள் அவர்களின் பிரத்தியேகமான பாணியில்
ரசிக்க வைக்கும். நாம் இவற்றை நண்பர்கள், உறவினர்கள் வீட்டுக்குச்
செல்லும்பொழுது அனுபவிக்கலாம்.
இன்னொரு உறவினர் வீட்டில் குழம்பு, ரசம் எல்லாவற்றிலும் காரம் தூக்கலாக இருக்கும். மற்ற வீடுகளில் 'சப்'பென்று இருப்பதாகவும் தங்கள் வீட்டில்தான் சரியாக இருப்பதாகவும் சொல்வார்கள். சுகுமார் கூட உப்பு ஒரு அரைக்கல் அதிகமோ என்ற அளவில்தான் உப்புப் போடுவார். சொன்னால், 'உன் அம்மா செய்வது போல இல்லை, அதானே?' என்பார்.
உண்மைதானே? ஆனாலும் அவருக்கும் அந்த அரைக்கல் அதிக உப்பு அளவுதான் சரி என்பது அசைக்க முடியாத கருத்தாக இருந்தது கொஞ்ச நாள் முன்பு வரையிலும் கூட!
அப்புறம் கைப்பக்குவம் என்று ஒன்று. சிலர் எத்தனைமுறை அதே
உணவை சமைத்தாலும் ஒரே மாதிரி சுவை மாறாமல் சமைக்கிறார்கள். சாதாரணமாக்
செய்யும் உணவுகள் கூட சுவைக்கும். சிலர் சமைத்தாலோ, ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு சுவை!
எனக்குக் காபி சாப்பிடப் பிடிக்கும். என் மனைவிக்குப் பாயசம், அதாவது காபியைப் பாயசம் மாதிரி சர்க்கரைச் சேர்த்துச் சாப்பிடப் பிடிக்கும். சிலருக்கு டபுள் ஸ்ட்ராங் டபுள் சர்க்கரை (என் நண்பன் ஒருவன்) , சிலருக்கு டபுள் ஸ்ட்ராங் சர்க்கரை கம்மி, சிலருக்கு டிகாக்ஷன் லைட்டாக விட்டு.... என் ஒரு மகனுக்கு இன்றளவும் காபி பிடிக்கவில்லை! இன்னொரு மகன் காபிதான் குடிக்கிறான்! எங்கள் வீட்டில் கத்தரிக்காய் என்னைத் தவிர வேறு யாருக்கும் பிடிக்கவில்லை. வாழைப்பூவும், வாழைத்தண்டும் அங்ஙனமே! பீன்ஸ் என்னைத் தவிர எல்லோருக்கும் பிடித்திருக்கிறது.
எல்லோருக்கும் பிடித்த உ.ருளைக் கிழங்கு
எனக்குப் பிடிப்பதேயில்லை. என் நண்பர்கள் நிறைய பேர்கள் ரசமே
சாப்பிடுவதில்லை. ரசம் சாப்பிட்டால் உடனே மறுபடி பசி வந்துவிடும் என்று
சொல்வான் ஒரு நண்பன்.
ரவா உப்புமா சாப்பிட்டாலும் சீக்கிரமே பசி வந்துவிடும் என்பான் (ரவா சீக்கிரம் ஜீரணமாகிவிடுமாம்!). புரட்டாசியில் கூட அசைவத்தைத் தள்ளிவைக்க முடியாத என் நண்பர்கள் இருக்கிறார்கள். பிரியாணியில் என்னதான் இருக்கிறதோ, ட்ரீட் என்று வந்தாலே பிரியாணிதான் கேட்கிறார்கள்.

ரவா உப்புமா சாப்பிட்டாலும் சீக்கிரமே பசி வந்துவிடும் என்பான் (ரவா சீக்கிரம் ஜீரணமாகிவிடுமாம்!). புரட்டாசியில் கூட அசைவத்தைத் தள்ளிவைக்க முடியாத என் நண்பர்கள் இருக்கிறார்கள். பிரியாணியில் என்னதான் இருக்கிறதோ, ட்ரீட் என்று வந்தாலே பிரியாணிதான் கேட்கிறார்கள்.
என் மனைவி வீட்டுப் பழக்கம், சப்பாத்திக்கு பழைய குழம்பு, சட்னி என்று எது இருந்தாலும் தொட்டுக் கொண்டு சாப்பிட்டு விடுவார். எனக்கு, சப்பாத்தி என்று செய்தால், குருமா வேண்டும்! குறைந்தபட்சம் சின்ன வெங்காயம் சேர்த்து, எலுமிச்சம் பழச்சாறு பிழியப்பட்ட பருப்புக் கடைசலாவது!
இந்தக் காலத்தில் வீட்டுச் சமையலில் துவையல் என்ற அம்சமே தொலைந்துகொண்டு வருகிறது. ரசிப்பவர்கள் குறைந்து விட்டார்கள். சமீபத்தில் சுட்ட கத்திரிக்காய்த் துவையல் அடம்பிடித்து செய்யச் சொல்லிச் சாப்பிட்டேன். ஆனால் இப்பவும் கத்தரிக்காய் பொடிதூவிக் கறியும், வெண்பொங்கலுக்கு கத்தரிக்காய்க் கொத்சுவும் டியூ!
அவ்வப்போது நண்பி ஒருவர் தயவால் பிரண்டைத் துவையலும் கிடைக்கிறது!
இப்போதெல்லாம் நிறைய வீடுகளில் வக்கணையாக தினமும் குழம்பு, ரசம், கூட்டு, பொரியல் என்று சமைக்கும் வழக்கம் இல்லை. குழம்பு மட்டும் பொரியலோடு என்று அவசரக் கோலத்தில் சமைத்துச் செல்கிறார்கள். பெரும்பாலும் வீடுகளில் வெஜ். பிரியாணி, ஃபிரைட் ரைஸ் என்று பொழுது ஓடி விடுகிறது. அலுவலக அவசரங்கள்!
இன்னும் சில வீடுகளில் வீட்டில் வந்து டெலிவரி செய்யும்
கேடரிங் மெஸ் போன்று நடத்துபவர்களிடம் ஆர்டர் கொடுத்து விடுகிறார்கள்.
மும்பை டப்பாவாலாக்கள் போல அவர்கள் ஏகப்பட்ட டிபன் கேரியர் பாத்திரங்களுடன்
தெருவெங்கும் விரைகிறார்கள்.
சமீபத்தில் புத்தகக் கண்காட்சியில் இருவர் பேசிக் கொண்டது,
சமையல் புத்தகங்கள் போடுபவர்கள் நஷ்டம் என்று கையைச் சுட்டுக் கொண்டதே
இல்லையாம்.
தோசைக்கு மிளகாய்ப்பொடி மட்டுமே தொட்டுக் கொண்டு எத்தனை நாள்தான் சாப்பிடுவது? இருங்கள், தோசை பற்றி மெதுவாகச் சொல்கிறேன். அதற்காக ஆரம்பித்த பதிவுதான் இது. முன்னுரை நீளமாகி விட்டது. எனவே அடுத்த பதிவில் தொடர்கிறேன்...!