இப்போதெல்லாம் வெளியூரில், மற்றும் வெளிநாட்டில் நிறையப் பேர் வேலை செய்வதால் ஆண்கள் சமையல் கட்டாயமாகி விடுகின்றது..ஒரு அறையில் தங்கியிருக்கும் பல கல்யாணமாகாத 'பையன்கள்' , மற்றும் கல்யாணமாகியும் தனியாக இருக்கும் மக்கள் சுழற்சி முறையில் சமைப்பது சாதாரணம்.
எனவே ஆண்கள் சமையல், பெண்கள் சமையல் என்றெல்லாம் தனிப் படுத்திச் சொல்ல ஒன்றுமில்லை என்று நினைக்கிறேன்...பெண்கள் ஆண்கள் செய்யும் வேலையை செய்தாலோ ஆண்கள் பெண்கள் செய்யும் வேலைகளைச் செய்தாலோ சற்று சிரமம் எடுத்து 6 சிக்மா (!) எல்லாம் உபயோகித்து excel ஆக முயற்சிப்பது இயல்பு. செய்யப் பட்ட வேலையை உடனே எல்லோரும் பாராட்டி விடுவார்கள். ஆனால் அதற்குக் காரணம் மாறுதல்கள் உடனடியாக வரவேற்பைப் பெறும் தத்துவம்தான்..ஒரே சமையலைச் சாப்பிட்டு வந்தவர்கள் கை மாறிய சமையலை ரசிப்பது இயற்கைதான்..
மேலும் ஒருவர் ஒரு செயலைச் செய்துவிட்டால் அடுத்து முயற்சிப்பவர் அதில் சில புதுமைகள், வித்யாசங்கள் செய்யத் தோன்றி, செய்வதும் கூடுதல் கவர்ச்சிகள்.
அந்தக் காலம் முதல் அம்மாக்களின் மாதாந்திர விடுப்பில் வீட்டிலுள்ள ஆண்கள் கோலம் போடுவது முதல் சமையல் பொறுப்பு வரை ஏற்பது நடக்கக் கூடியதுதான். அப்பா, குழந்தைகள் விவரம் தெரிந்து செய்யும் காலம் வரை செய்வார்கள். அவர்கள் பொறுப்பேற்றால் இவர்கள் பொறுப்பு போய் விடும்!
நான் ஆறாவதோ ஏழாவதோ படிக்கும் போது முதல் முதலாக சமையல் முயற்சி செய்த ஞாபகம். அது வரை அப்பா 'புளி இவ்வளவு போதுமா? தண்ணீர் இவ்வளவு வைக்கலாமா?' என்றெல்லாம் நடந்து நடந்து கேட்டு வருவதைப் பார்த்தபின் வந்தது ஆர்வம்.
விறகு அடுப்புதான்...நாராயண நாயர் புண்ணியத்தில் மாத அக்கௌண்டில் ஒரு வண்டி விறகு வந்து விடும். வாங்கி சமையலறை பரணில் அடுக்கி விடுவோம். ஒரு நாளைக்கு இரண்டு விறகுக்கு மிகாமல் ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொள்வோம்! வெந்நீர், சமையல் விறகடுப்பில். காபி, அப்பளம், துவையலுக்கு கத்திரிக்காய் ஆகியவை கரி அடுப்பில். கரி அடுப்பு பற்ற வைப்பதே ஒரு சுவாரஸ்யம் அந்த நாளில்.
விறகு அடுப்பிலோ வரட்டித் துண்டை மண் எண்ணெயில் நனைத்து, பற்ற வைத்து, விறகை அதில் வைத்து அது அழகாய் எரியும் நேரம் வரைப் போராட்டம்தான். நடுவில் அணைந்து விட்டால் ஊதுகுழல் கொண்டு சத்தம் வர, கண்கள் சிவக்க ஊதுவதும் அவஸ்தை.
வெண்கல பாத்திரம் சாதம் வடிக்க. 'முக்கால் அளவு தண்ணீர் ஊற்று..அதன் விளிம்பில் உள்ளங்கையை வைத்து உள்புறமாக கையை மடக்கினால் தண்ணீர் ஆள்காட்டி விரல் நுனியில் படவேண்டும்' என்பார் அம்மா. வடி தட்டு வைத்து மூடி, கொதித்ததும் களைந்த அரிசி போட்டு மூடி, பதம் பார்த்து இறக்கியபின் ஒரு முக்கிய வேலை அதில் உண்டு...
கஞ்சி வடிப்பது... வடி தட்டை வைத்து மூடி, இரு புறமும் துணி பிடித்து உயரமான இடத்தில் வைத்து கீழ் பாத்திரத்தில் கஞ்சி வடிப்பது சின்ன வயதில் ரிஸ்கான ஒன்று! வடித்த கஞ்சியை துணி அயர்ன் செய்வது முதல் மோர், உப்பு, பெருங்காயம், ப.மிளகாய், இஞ்சி இட்டு குடிப்பது வரை உபயோகிப்போம்.
பெரும்பாலும் நான் செய்வது வெந்தயக் குழம்பு அல்லது வத்தக் குழம்பு அல்லது 'பொரிச்ச குழம்பு'தான். அதுதான் ஈசி. மணத்தக்காளி, மிதுக்க, சுண்டைக்காய், கத்தரிக்காய், கொத்தவரைக்காய் போன்றவற்றில் வத்தல் தயார் செய்து ரெடியாக இருக்கும் அதை காயாக வைத்து குழம்பு செய்தால் வத்தக் குழம்பு. கத்திரி, முருங்கை போன்ற பச்சைக் காய்கறிகள் வைத்து தயார் செய்தால் வெந்தயக் குழம்பு. இது இல்லாமல் அப்பள வெந்தயக் குழம்பு வைக்க அம்மா கற்றுக் கொடுத்திருந்தாள். அது வீட்டில் எல்லோருக்கும் பிடித்த ஐட்டம்.
சாம்பாரில் சுவை வரவழைக்க தனித் திறமை வேண்டும். நாங்கள் எப்போதும் எல்லாவற்றிலும் வெங்காயம் சேர்ப்பது இல்லை.. வெங்காயம் இல்லாத சாம்பார்தான். வெந்தயக் குழம்புக்கும் சாம்பாருக்கும் பருப்புதான் வித்தியாசம். (தெரியாதாக்கும் என்று திட்ட வேண்டாம்..) வெங்காயம் மட்டும் போட்டு வெங்காய சாம்பார் வைப்போம்.
பொரியல் என்று ரொம்பச் சிரமப் பட்டதாய் ஞாபகம் இல்லை. அது ரொம்பச் சுலபமான விஷயம். வாழைக்காய், உருளைக் கிழகு, கோஸ் கை கொடுக்கும். அல்லது அப்பளம் கரி அடுப்பில் வாட்டி விடுவோம். கரி அடுப்பில் அப்பளம் என்றால் அப்பள அடுப்பில்...? என்று கேட்காதீர்கள்!
இப்போதெல்லாம் சமைத்தால் ஒரே டெக்னிக்தான்...முடிந்தவரை லேட் செய்து விடுவது...நல்ல பசி வந்து விடும் மக்களுக்கு...அப்போது சாப்பாடு போட்டால் ஆஹா..ஓஹோ..என்று பாராட்டி விடுவார்கள். 'அப்பா நீ சமைப்பா' என்று குழந்தைகள் நச்சரிப்பார்கள். மேலும் வித்யாசமாக ஏதாவது முயற்சிப்பதும் வழக்கம்...அந்த நாளில் நான் சாப்பிட மைதா மாவு கார பிஸ்கட், இனிப்பு பிஸ்கட் முதல் இன்று எல்லாக் காய்களையும் அரைத்து (!) சாம்பார், சப்பாத்தி மாவிலேயே வெங்காயம், குடை மிளகாய், காரம் என்று சேர்த்து பிசைந்து சப்பாத்தி முயற்சிப்பது (எங்கள் வீட்டில் புதுசுங்க...உங்களுக்கு பழசா இருக்கலாம்...!) ஆப்பிள், பைனாப்பிள் ரசங்கள். பொடி தூவிக் கறி...
எந்த வேலையையும் ரசித்து பொழுதுபோக்காய்ச் செய்தால் நன்றாக இருக்கும்தான்...
முதல் முறை உப்பு, காரம் அளவு தெரியாமல் செய்து எல்லோரும் கஷ்டப் பட்டு சாப்பிட்ட காட்சிகள் மறக்காது. எண்ணெய் பாட்டில் கீழே போட்டு உடைத்தது, அப்புறம் பாத்திரத்தில் வைத்தாலும் பாத்திரம் வழுக்கிக் கீழே விழுந்து கொட்டியது, அப்பாவிடம் அடி வாங்கியது, கையிலும் காலிலும் ஏற்படுத்திக் கொண்ட சமையல் வீரத் தழும்புகள்...! விறகுகளுக்கு நடுவிலிருந்து ஓடிய தவளையை பாம்பு என பயந்தது, அடுத்த முறை 'தவளைதான். எனக்குத் தெரியும்' என்று அசால்டாய் பயப்படாமல் இருந்த போது பாம்பே வந்தது கண்டு அலறியது...(அப்போ பல்லியை டில்லி என்று பயந்தீர்களா என்று கிண்டல் செய்ய வேண்டாம்..)