புதன், 20 ஜனவரி, 2010

என்ன சமையலோ...

இப்போதெல்லாம் வெளியூரில், மற்றும் வெளிநாட்டில் நிறையப் பேர் வேலை செய்வதால் ஆண்கள் சமையல் கட்டாயமாகி விடுகின்றது..ஒரு அறையில் தங்கியிருக்கும் பல கல்யாணமாகாத 'பையன்கள்' , மற்றும் கல்யாணமாகியும் தனியாக இருக்கும் மக்கள் சுழற்சி முறையில் சமைப்பது சாதாரணம்.


எனவே ஆண்கள் சமையல், பெண்கள் சமையல் என்றெல்லாம் தனிப் படுத்திச் சொல்ல ஒன்றுமில்லை என்று நினைக்கிறேன்...பெண்கள் ஆண்கள் செய்யும் வேலையை செய்தாலோ ஆண்கள் பெண்கள் செய்யும் வேலைகளைச் செய்தாலோ சற்று சிரமம் எடுத்து 6 சிக்மா (!) எல்லாம் உபயோகித்து excel ஆக முயற்சிப்பது இயல்பு. செய்யப் பட்ட வேலையை உடனே எல்லோரும் பாராட்டி விடுவார்கள். ஆனால் அதற்குக் காரணம் மாறுதல்கள் உடனடியாக வரவேற்பைப் பெறும் தத்துவம்தான்..ஒரே சமையலைச் சாப்பிட்டு வந்தவர்கள் கை மாறிய சமையலை ரசிப்பது இயற்கைதான்..


மேலும் ஒருவர் ஒரு செயலைச் செய்துவிட்டால் அடுத்து முயற்சிப்பவர் அதில் சில புதுமைகள், வித்யாசங்கள் செய்யத் தோன்றி, செய்வதும் கூடுதல் கவர்ச்சிகள்.


அந்தக் காலம் முதல் அம்மாக்களின் மாதாந்திர விடுப்பில் வீட்டிலுள்ள ஆண்கள் கோலம் போடுவது முதல் சமையல் பொறுப்பு வரை ஏற்பது நடக்கக் கூடியதுதான். அப்பா, குழந்தைகள் விவரம் தெரிந்து செய்யும் காலம் வரை செய்வார்கள். அவர்கள் பொறுப்பேற்றால் இவர்கள் பொறுப்பு போய் விடும்!


நான் ஆறாவதோ ஏழாவதோ படிக்கும் போது முதல் முதலாக சமையல் முயற்சி செய்த ஞாபகம். அது வரை அப்பா 'புளி இவ்வளவு போதுமா? தண்ணீர் இவ்வளவு வைக்கலாமா?' என்றெல்லாம் நடந்து நடந்து கேட்டு வருவதைப் பார்த்தபின் வந்தது ஆர்வம்.


விறகு அடுப்புதான்...நாராயண நாயர் புண்ணியத்தில் மாத அக்கௌண்டில் ஒரு வண்டி விறகு வந்து விடும். வாங்கி சமையலறை பரணில் அடுக்கி விடுவோம். ஒரு நாளைக்கு இரண்டு விறகுக்கு மிகாமல் ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொள்வோம்! வெந்நீர், சமையல் விறகடுப்பில். காபி, அப்பளம், துவையலுக்கு கத்திரிக்காய் ஆகியவை கரி அடுப்பில். கரி அடுப்பு பற்ற வைப்பதே ஒரு சுவாரஸ்யம் அந்த நாளில்.


விறகு அடுப்பிலோ வரட்டித் துண்டை மண் எண்ணெயில் நனைத்து, பற்ற வைத்து, விறகை அதில் வைத்து அது அழகாய் எரியும் நேரம் வரைப் போராட்டம்தான். நடுவில் அணைந்து விட்டால் ஊதுகுழல் கொண்டு சத்தம் வர, கண்கள் சிவக்க ஊதுவதும் அவஸ்தை.


வெண்கல பாத்திரம் சாதம் வடிக்க. 'முக்கால் அளவு தண்ணீர் ஊற்று..அதன் விளிம்பில் உள்ளங்கையை வைத்து உள்புறமாக கையை மடக்கினால் தண்ணீர் ஆள்காட்டி விரல் நுனியில் படவேண்டும்' என்பார் அம்மா. வடி தட்டு வைத்து மூடி, கொதித்ததும் களைந்த அரிசி போட்டு மூடி, பதம் பார்த்து இறக்கியபின் ஒரு முக்கிய வேலை அதில் உண்டு...


கஞ்சி வடிப்பது... வடி தட்டை வைத்து மூடி, இரு புறமும் துணி பிடித்து உயரமான இடத்தில் வைத்து கீழ் பாத்திரத்தில் கஞ்சி வடிப்பது சின்ன வயதில் ரிஸ்கான ஒன்று! வடித்த கஞ்சியை துணி அயர்ன் செய்வது முதல் மோர், உப்பு, பெருங்காயம், ப.மிளகாய், இஞ்சி இட்டு குடிப்பது வரை உபயோகிப்போம்.


பெரும்பாலும் நான் செய்வது வெந்தயக் குழம்பு அல்லது வத்தக் குழம்பு அல்லது 'பொரிச்ச குழம்பு'தான். அதுதான் ஈசி. மணத்தக்காளி, மிதுக்க, சுண்டைக்காய், கத்தரிக்காய், கொத்தவரைக்காய் போன்றவற்றில் வத்தல் தயார் செய்து ரெடியாக இருக்கும் அதை காயாக வைத்து குழம்பு செய்தால் வத்தக் குழம்பு. கத்திரி, முருங்கை போன்ற பச்சைக் காய்கறிகள் வைத்து தயார் செய்தால் வெந்தயக் குழம்பு. இது இல்லாமல் அப்பள வெந்தயக் குழம்பு வைக்க அம்மா கற்றுக் கொடுத்திருந்தாள். அது வீட்டில் எல்லோருக்கும் பிடித்த ஐட்டம்.


சாம்பாரில் சுவை வரவழைக்க தனித் திறமை வேண்டும். நாங்கள் எப்போதும் எல்லாவற்றிலும் வெங்காயம் சேர்ப்பது இல்லை.. வெங்காயம் இல்லாத சாம்பார்தான். வெந்தயக் குழம்புக்கும் சாம்பாருக்கும் பருப்புதான் வித்தியாசம். (தெரியாதாக்கும் என்று திட்ட வேண்டாம்..) வெங்காயம் மட்டும் போட்டு வெங்காய சாம்பார் வைப்போம்.


பொரியல் என்று ரொம்பச் சிரமப் பட்டதாய் ஞாபகம் இல்லை. அது ரொம்பச் சுலபமான விஷயம். வாழைக்காய், உருளைக் கிழகு, கோஸ் கை கொடுக்கும். அல்லது அப்பளம் கரி அடுப்பில் வாட்டி விடுவோம். கரி அடுப்பில் அப்பளம் என்றால் அப்பள அடுப்பில்...? என்று கேட்காதீர்கள்!


இப்போதெல்லாம் சமைத்தால் ஒரே டெக்னிக்தான்...முடிந்தவரை லேட் செய்து விடுவது...நல்ல பசி வந்து விடும் மக்களுக்கு...அப்போது சாப்பாடு போட்டால் ஆஹா..ஓஹோ..என்று பாராட்டி விடுவார்கள். 'அப்பா நீ சமைப்பா' என்று குழந்தைகள் நச்சரிப்பார்கள். மேலும் வித்யாசமாக ஏதாவது முயற்சிப்பதும் வழக்கம்...அந்த நாளில் நான் சாப்பிட மைதா மாவு கார பிஸ்கட், இனிப்பு பிஸ்கட் முதல் இன்று எல்லாக் காய்களையும் அரைத்து (!) சாம்பார், சப்பாத்தி மாவிலேயே வெங்காயம், குடை மிளகாய், காரம் என்று சேர்த்து பிசைந்து சப்பாத்தி முயற்சிப்பது (எங்கள் வீட்டில் புதுசுங்க...உங்களுக்கு பழசா இருக்கலாம்...!) ஆப்பிள், பைனாப்பிள் ரசங்கள். பொடி தூவிக் கறி...


எந்த வேலையையும் ரசித்து பொழுதுபோக்காய்ச் செய்தால் நன்றாக இருக்கும்தான்...


முதல் முறை உப்பு, காரம் அளவு தெரியாமல் செய்து எல்லோரும் கஷ்டப் பட்டு சாப்பிட்ட காட்சிகள் மறக்காது. எண்ணெய் பாட்டில் கீழே போட்டு உடைத்தது, அப்புறம் பாத்திரத்தில் வைத்தாலும் பாத்திரம் வழுக்கிக் கீழே விழுந்து கொட்டியது, அப்பாவிடம் அடி வாங்கியது, கையிலும் காலிலும் ஏற்படுத்திக் கொண்ட சமையல் வீரத் தழும்புகள்...! விறகுகளுக்கு நடுவிலிருந்து ஓடிய தவளையை பாம்பு என பயந்தது, அடுத்த முறை 'தவளைதான். எனக்குத் தெரியும்' என்று அசால்டாய் பயப்படாமல் இருந்த போது பாம்பே வந்தது கண்டு அலறியது...(அப்போ பல்லியை டில்லி என்று பயந்தீர்களா என்று கிண்டல் செய்ய வேண்டாம்..)

20 கருத்துகள்:

  1. //விறகுகளுக்கு நடுவிலிருந்து ஓடிய தவளையை பாம்பு என பயந்தது,//

    நம்புறோம் சாமியோவ்.

    //அடுத்த முறை 'தவளைதான். எனக்குத் தெரியும்' என்று அசால்டாய் பயப்படாமல் இருந்த போது பாம்பே வந்தது கண்டு அலறியது.//

    இந்த உடான்ஸ்தானே வேணாங்கறது..

    //அசால்டாய்//
    இது எந்த மொழி? இந்த வார்த்தையின் (ஆங்கிலமாக இருந்தால்) அர்த்தம் இங்கு ஒட்டவில்லையே?

    பதிலளிநீக்கு
  2. அப்போ எங்க ஊர்ல அந்த வார்த்தையை அலட்சியமாய் என்ற பதத்துக்கு பயன்படுத்துவோம்...

    மாதவன்...அரைகுறை இருளில் நகர்வது அல்லது அசைவது தவளையா பாம்பா என்பது நொடிகளில் பதறுவது..முழு சைஸ் பார்த்து அல்ல...!

    (ஸ்...அப்பா...எப்படி எல்லாம் சமாளிக்க வேண்டியிருக்கு...)

    பதிலளிநீக்கு
  3. சமைச்சது ! அது ஒரு காலம். ஆனா ரொம்ப போர் அடிக்குற வேலை.

    நம்புறேன். நீங்க பார்த்தது பாம்பு மாதிரி இருந்த தவளையன்னு :-)

    பதிலளிநீக்கு
  4. //எந்த வேலையையும் ரசித்து பொழுதுபோக்காய்ச் செய்தால் நன்றாக இருக்கும்தான்...//

    ஒரு வாக்கியமாயினும் திருவாக்கியம்:)!

    விறகு அடுப்பு, வெண்கல ஊதுகுழல் எல்லாவற்றையும் நினைவுக்கு கொண்டு வந்து விட்டீர்கள். சுவாரஸ்யமான இடுகை.

    பதிலளிநீக்கு
  5. ரொம்ப அழகா, சுவாரசியமா எழுதி இருக்கீங்க!
    வெண்கலப்பானைல எது பண்ணினாலும் ஒரு தனி ருசிதான். சாதம், அரிசி உப்புமா, திருவாதுரை களி இதெல்லாமே வெங்கலப்பானைலதான் எங்க அம்மா பண்ணுவாங்க. எங்கம்மா வெண்கல உருளீள திரட்டுப்பால், கடலைப் பருப்பு, பாசிபருப்பு போட்டு வெல்லப் பாயசம் இதெல்லாம் பண்ணினா, ஆஹா, தேவாம்ருதம்தான்! எனக்கு நல்லா சாப்பிடதான் தெரியும். சமைக்க வருமம்ம்ம்ம்.....ஆனா அவ்வளவா வராது!

    //எந்த வேலையையும் ரசித்து பொழுதுபோக்காய்ச் செய்தால் நன்றாக இருக்கும்தான்...//
    ரொம்ப சரியா சொல்லி இருக்கீங்க.

    பதிலளிநீக்கு
  6. //எந்த வேலையையும் ரசித்து பொழுதுபோக்காய்ச் செய்தால் நன்றாக இருக்கும்தான்...//


    இந்த சூத்திரம் மறக்காமல் இருந்தால் நாம் செய்யும் எல்லா (நல்ல) செயலிலும் வெற்றி
    அடைய முடியும், நன்றி.

    பதிலளிநீக்கு
  7. //அப்போ எங்க ஊர்ல அந்த வார்த்தையை அலட்சியமாய்...//

    Regent for Decent
    Commercial for conversational

    ippadiyaa?

    பதிலளிநீக்கு
  8. எங்க ஊர்ல எவர்சில்வர் பாத்திரக்கடைகள் ஒவ்வொன்றாக வரத் துவங்கிய காலத்தில், எங்கள் அண்ணன், வேடிக்கையாக வீட்டுப்பக்கம் இருந்த மாமிகளிடம், புதுசா 'எவர்சில்வர் வெண்கலப்பானை' கடையில வந்திருக்கு என்று சொல்ல, அதை ஆராயாத மாமிகள், நீலா தெற்குத் தெருவில் இருக்கும் எவர்சில்வர் பாத்திரக்கடைக்குச் சென்று, எவர்சில்வர் வெண்கலப் பானை' கேட்டு, கடைக்காரர் முழி பிதுங்கி நின்றார்.

    பதிலளிநீக்கு
  9. பின்னோக்கி,
    நம்பினதுக்கு நன்றி...! புதுசா ஏதாவது சமையல்ல ட்ரை பண்ணிப் பாருங்க..சுவாரஸ்யமா இருக்கும்.

    ராமலக்ஷ்மி,
    உங்கள் கோபுர புகைப் படங்களைப் பார்த்து ரசித்தவர்கள் நாங்கள்..நீங்கள் பெற்ற விருதுகளுக்கு வாழ்த்துக்கள்.

    மீனாக்ஷி,
    ரசனைக்கு நன்றி..

    S. K. பரோட்டா,
    நன்றி..தொடர்ந்து வாருங்கள்...

    அனானி..,
    அதே..அதே..

    பதிலளிநீக்கு
  10. உங்களது இலவச சமையல் சேவையை வரவேற்கிறேன்

    பதிலளிநீக்கு
  11. அம்மா ஞாபகம் வருது.என்னிடம் ஒரு தேநீர் வைத்து வாங்கிக் குடிக்கிறதுக்குள்ள....நீங்க சொன்ன அத்தனை கதையும் எங்கம்மா சொல்லிடுவாங்க.நாங்க அந்த நேரத்தில.....ன்னு !

    பதிலளிநீக்கு
  12. footprints on the sands of time.. great post.

    விறகடுப்பு (குமிட்டி?) எல்லாம் கிராமத்தில் பார்த்திருக்கேன். வீட்டில் ம.எ பின்னர் கேஸ் அடுப்பு சமையல். (and திரி ஸ்டவ்). அரிசிக்கு அளவான தண்ணீர் சேர்ப்பது கலை. அன்றைக்கும் சரி. இன்றைக்கும் சரி. பெண்களை விட ஆண்கள் நன்றாக சமைப்பார்கள் என்று நினைக்கிறேன். (ஊதி வப்போம்)

    பதிலளிநீக்கு
  13. ஆமாம் ஹேமா - அம்மா 'அந்தக் காலத்துல' என்று ஆரம்பித்துச் சொன்ன கதைகளை நாம ஆர்வமா கேட்டிருக்கிறோம்.
    இந்தக் காலத்துப் பசங்க, நம்ம அந்த மாதிரி ஏதாவது சொல்ல ஆரம்பிச்சாலே - வடிவேலு கதை சொல்ல ஆரம்பித்தவுடன் சுற்றி இருப்பவர்கள் அந்தர்த்யானம் ஆகிவிடுவதுபோல் - எஸ்கேப் ஆகிவிடுகிறார்கள்.

    பதிலளிநீக்கு
  14. மரத் தூள் உபயோகித்து, ஒரு ஒற்றை விறகில் நிறைய நேரம் எரியக் கூடிய "தூள் அடுப்பு" பற்றி யாருமே சொல்லவில்லையே! இப்பொழுது உபயோகத்தில் இருக்கிறதோ?

    பதிலளிநீக்கு
  15. அப்பாதுரை பற்றவைத்தது, அதிவேகமாக வேலை செய்துவிட்டது. பெண்களைவிட ஆண்கள் நன்றாகச் சமைப்பார்கள் என்பதை, பதிவாசிரியர் பெருமையாக அவர் மனைவியிடம் படித்துக் காட்டியவுடன், அவங்க, 'அப்பிடீன்னா இன்னிக்கி நீங்களே சமைச்சி, எனக்கும் போட்டுடுங்க'ன்னு சொல்லிட்டாங்களாம். பதிவாசிரியர், 'பத்தவெச்சுட்டியே பரட்டே' பாணியில் புலம்பிக்கொண்டிருக்கிறார்!

    பதிலளிநீக்கு
  16. நல்ல சமையல்
    நல்ல பகிர்வு
    நல்ல பாராட்டு.
    நன்றி தேனம்மை.

    பதிலளிநீக்கு
  17. எனக்கும் ஞாபகம் இருக்கு.மரத்தூள் அடுப்பு.எங்க வீட்ல பாவிச்சிருக்கோம்.எங்க வீட்டைச் சுற்றி மரவேலை செய்பவர்கள்.
    அதனால் மரத்தூள் இலவசமாகக் கிடைக்கும்.

    பதிலளிநீக்கு
  18. ஹாஹா, ஹாஹா, அப்பாதுரைக்காக மிதுக்கவத்தல் படம் தேடப் போக இந்தப் பதிவு கிடைச்சது. எங்க வீட்டிலேயும் பல வருடங்கள் விறகு அடுப்புத் தான். விறகு வாசலில் கைவண்டியில் வந்து இறங்கினதும், வண்டிக்காரர் அடுத்து எடுத்துக் கொடுக்க நான், அண்ணா, தம்பி, அம்மா என வரிசையாக நின்று கைமாத்தி உள்ளே கொண்டு வந்து அடுக்க வேண்டிய இடத்தில் அடுக்குவோம். விறகு அடுக்குகளில் பாம்பெல்லாம் புகுந்ததில்லை. தேள்கள் மட்டுமே/ :))))

    நான் சமைக்க ஆரம்பித்த சுபயோக சுபதினத்தில் இருந்து எங்க வீட்டில் கரி அடுப்பு எனப்படும் குமுட்டி மட்டுமே. அதிலேயே பெரிய கரிஅடுப்பில் வெண்கலப்பானை வைச்சுச் சாதம், உருளி வைச்சுக் குழம்பு, சின்னக் கரி அடுப்பில் ஈயச் செம்பில் ரசம், கறி, அல்லது கூட்டு செய்வேன். பெரிய கரி அடுப்பில் தோசைக்கல்லைப் போட்டு தோசை வார்த்தல், சப்பாத்தி செய்தல் எல்லாம் அப்போ உண்டு. நீங்க சொல்றாப்போல் வெந்தயக் குழம்புக்கும், சாம்பாருக்கும் பருப்புத் தான் வித்தியாசம். ஆனால் அதை சாம்பார்னு நாங்க சொல்ல மாட்டோம். அடியிலே தாளிச்சுக் காய்களைப் போட்டு வதக்கிக் குழம்புப்பொடி/ரசப்பொடியைப் போட்டு புளி ஊற்றிக் கொஞ்சமாய்ப் பருப்புப் போட்டுச் செய்யும் அதை பருப்புக் குழம்பு என்று சொல்வோம். சாம்பார் என்றால் பொடியே போடாமல் முழுக்க வறுத்து அரைச்சுத் தான்.

    அப்புறம் மெல்ல வரேன். இப்போச் சமைக்கப் போகணும்.:))))

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!