நம்ம வூடுதான்! உள்ள வாங்க! படிங்க! படிங்க!! படிச்சுகிட்டே...இருங்க! வலை உலகிலே "எங்கள்" புதிய பாணி!
28.10.16
27.10.16
சிவப்பு பட்டுக் கயிறு - தேனம்மை லக்ஷ்மணன்
தேனம்மை பரபரப்பான எழுத்தாளராகி விட்டார். நிறைய புத்தகங்கள் வரிசையாக வெளியிடுகிறார்.
அதில் லேட்டஸ்ட் (சரிதானே தேனம்மை? ஒருவேளை அடுத்த புத்தகம் வெளிவந்து விட்டதா?) இந்த "சிவப்பு பட்டுக் கயிறு.
"பின்னால்
இங்கு வரப்போக முடியும் என்றாலும் அன்றைய கணக்குப்படி அந்த வீட்டோடான
வாழ்வு முடிந்து விட்டது. இனி அது வேறு வீட்டுப்பிள்ளை."
மணமான புதிதில் பெண்கள் புகுந்த வீட்டில் சுவாசிப்பது பற்றி தேனம்மை எழுதி இருப்பதை ரசிக்க முடிந்தது.
சிவப்புப் பட்டுக் கயிறு
103 பக்கங்கள் டிஸ்கவரி புக் பேலஸ்,
80 ரூபாய்.
26.10.16
புதிர் 161026
'நெல்லைத் தமிழன் said...
கேள்வி - ஒரு நாடகத்தைப் படமாக எடுத்தபோது நாடகத்தில் ஆண் நடித்த பாத்திரத்தில், பெண் நடித்தார். ஒரே கதையை இரண்டாம் முறை படமாக எடுத்தபோது, முதல் படத்தில் ஆண் நடித்த பாத்திரத்தில் பெண் நடித்தார். யார் யார், என்ன படங்கள்?
எங்கள் பதில் :
1) நந்தனார். (என்று நினைக்கிறோம்)
2) சாந்த சக்குபாய்.
சரியா?
இந்த வாரக்கேள்வி:
==================
A என்ற நாடு. B என்னும் விசித்திரமான மன்னன் ஆண்டுவந்தான். C என்ற ஆளு ஒரு கிரிமினல் குற்றம் செய்துவிட்டான். D என்னும் விசித்திர தண்டனையை அவனுக்கு அளித்தான் மன்னன்.
அது இதுதான்:
சி யை, ஒரு பெரிய சிறையில் விட்டு, கதவைப் பூட்டி விடுவார்கள்.
அந்த அறையிலிருந்து வெளியே வர இரண்டு வழிகள். (E1 , E 2) ஒவ்வொரு வழியையும் ஒரு காவலாளி காத்து நிற்பார்கள்.
K1 , K2 என்று காவலாளிகளை வைத்துக்கொள்ளலாம் .
அதில் ஒருவர் எந்தக் கேள்வி கேட்டாலும் பொய் சொல்லுவார். மற்றவர் எந்தக் கேள்வி கேட்டாலும், உண்மை சொல்லுவார்.
இரண்டு வழிகளில், ஒன்றின் வழியாகப் போனால், பழமரங்கள் உள்ள சோலை வழியாக சென்று, பசியாறி, தப்பித்துக்கொள்ளலாம்.
மற்றொரு வழியாகச் செல்பவர்களை, கொடிய மிருகங்கள் சாப்பிட்டு, ஏப்பம் விட்டுவிடும்.
சி என்னும் கிரிமினல், ஏதேனும் ஒரு காவலாளியிடம், ஒரே ஒரு கேள்வி மட்டும் கேட்டு, அந்தக் கேள்விக்கு, அந்தக் காவலாளி அளிக்கும் பதிலை வைத்து, சமயோசிதமாகத் தப்பிக்கவேண்டும்.
சி என்ன கேள்வி கேட்டு, எப்படித் தப்பிப்பார்?
குறிப்பு:
# இரண்டு காவலாளிகளுக்கும், தப்பிக்கும் வழி எது என்று தெரியும்.
# யார் உண்மை சொல்பவர், யார் பொய் சொல்பவர் என்ற விவரம் சி க்கு தெரியாது. ஆனால் ஒருவர் உண்மை சொல்பவர், மற்றவர் பொய் சொல்பவர் என்பது மட்டும், தண்டனை அளிக்கப்படும் பொழுதே மன்னன் கூறிவிட்டான்.
மேற்கொண்டு விளக்கங்கள் ஏதேனும் தேவைப்பட்டால், அவ்வப்பொழுது அளிக்கிறேன்.
================================
25.10.16
கேட்டு வாங்கிப்போடும் கதை :: விருட்ச விதைகள்
========================================================================
பத்து வயதில் திருமணம் ஆகி புக்ககம் வந்து தன்
ஆத்துக்காரரோடு கிட்டத்தட்ட எழுபது வருடங்கள் நடத்திய புரிதல் தந்த
அன்னியோன்யம், அவர் போன பின்பும் அவரது விழுதுகளில் அவர் விதைத்த சாயலை
தேடி ஆசுவாசம் கொள்கிறது.
======================================================================
விருட்ச விதைகள்
மாலா மாதவன்
முதுமை என்பது வரம் வாழத் தெரிந்தவர்களுக்கு. இளமையில் விதை
என்பார்களே. அது முதுமைக்கான விதை தான்.
அத்தகைய வரம் வாங்கி கொண்டு வந்தவர்கள் தான் காமுவும் வேம்புவும்.
கண்ணுக்கு கண்ணாக இரண்டு குழந்தைகள். பொண் ஒண்ணு பிள்ளை ஒண்ணு.
இரண்டு பேருக்கும் கல்யாணம் ஆகி பேரக் குழந்தைகளும் பார்த்தாச்சு.
விஸ்தாரமா வீடு. ஆள் படைக்கு குறைவில்லை. ராணி மாதிரி காமுவை வாழ
வைச்சார் வேம்பு. என்ன இன்னிக்கு பார்த்தா அவருக்கு வயசு எண்பதுன்னு
சொல்ல முடியுமா என்ன. அப்படி ஒரு மெலிதான தேகம். தேஜஸ்ல அவரது
அம்மாவை கொண்டு இருந்தார்.
காமு மட்டும் என்ன குறைந்தவளா என்ன? ஆயிரம் பேருக்கு அன்னபூரணியாய்
சமைத்த கை. அந்த காலத்தில் காஸ் அடுப்பா , மின் அடுப்பா .. ஒன்றும் இல்லை.
விறகடுப்பின் புகையை ஊதி ஊதி இவள் கண் இரண்டும் மங்க தொடங்கி இப்போ
சுத்தமா பார்வையே இல்லை.
ஆனாலும் லஷ்மீகரம் முகத்தில் தாண்டவமாடும். ஒன்பது கஜம்
சின்னாளம்பட்டும் தேவேந்திராவும் மாற்றி மாற்றி அமர்க்களப்படும். பெரிய
மூக்குத்தியும், டாலடிக்கும் வைரத் தோடும், கைக்கு இரண்டாக நெளி
வளையல்களும், சற்று பெரிதான வாடாமல்லி கலரில் குங்குமமும் காமுவை
மிக அழகியாக காட்டும்.
அந்த அறையே சாம்பிராணி புகையின் நறுமணத்தால் சூழப் பட்டு இருந்தது. ஒரு
பக்கம் கட்டில் போடப் பட்டு கட்டிலோடு கட்டிலாய் படுத்து இருந்தார் வேம்பு.
சுற்றிலும் எத்தனை பேர் இருந்தாலும் பார்வை என்னவோ காமு மேல் தான்
இருந்தது. என் மனைவி எவ்வளவு லஷ்மீகரமா இருக்கான்னு நினைத்தார்
வேம்பு.
ஆச்சு இன்னியோட ஆறு மாசமாச்சு. ஒரு பக்கம் கையும் காலும் விழுந்து.
வாயும் கோணிண்டு பேச்சும் குழறலா தான் இருக்கு. இவர் என்னவோ பேசறார்
தான். மத்தவாளால தான் புரிஞ்சுக்க முடியலை.
“காமு, இன்னிக்கு அமாவாசைடி. கனத்த நாள் . பத்திரமா பார்த்துக்கோடி உன்
ஆம்படையானை!”
வந்திருந்த அத்தை அவளிடம் சொன்னாள். அத்தை படு கிழம்.
அத்தனை உறவுகளை பார்த்தவள்.
காமுவின் நடுங்கும் கைகளை அந்த முதிய கரம் பற்றிக் கொண்டது.
'ம்' என்றாள் காமு. எல்லா வைத்தியமும் பார்த்தாச்சு. ஆத்துக்கு கூட்டிண்டு
போங்கோன்னுட்டாரே அத்தை. இனி தெய்வம் தான் என்றபடி வேம்புவை
நோக்கிச் சென்றாள்.
பொண்ணும் பிள்ளையும் கலங்கி நின்றார்கள். பேரன் பேத்திகளும் அப்படியே.
வேம்பு அத்தனை பேருக்கும் உசிராச்சே. காமு எதற்கும் கலங்க வில்லை.
பிள்ளையின் கை பிடித்து கட்டில் அருகே அமர்ந்து கொண்டாள்.வேம்புவின் கை
அவள் கைக்குள் இருந்தது. புறங்களை தள்ளி விட்டு அகமோடு பேசினர் மனதால்.
"பதினாறாம் வாய்ப்பாடு சொல்லுடா வேம்பு.!"
ஆசிரியர் குச்சியை எடுத்துக் கொண்டு மிரட்டினார். அன்றைய பாடத்தை
படிக்காத வேம்பு தலையை குனிந்து நிற்க ..
"இந்தாடி காமு, நீ அவனது அத்தை பெண் தானே. உன் கையால் அவனை ரெண்டு
கொட்டு கொட்டு. அதான் தண்டனை "
என்று சொல்ல அவளும் கொட்டவும் வகுப்பே கொல்லெனச் சிரித்தது.
"நீ வாடி ஆத்துக்கு. ஆத்திரம் தீர கொட்டுவேன் "
என சூளுரைத்த அவன் இன்று வரை கோபமாக கூட பேசியதில்லை.
இரவும் வந்தது. அனைவரும் வேம்புவை சுற்றியே படுத்து கொண்டிருந்தனர்.
அமாவாசை வேறா எங்கும் இருட்டு. ஒரு வெளிச்சம் இருட்டில் அஸ்தமிக்கப்
போகும் நேரத்தை நினைத்து மனம் நொந்தனர்.
வேம்பும் சாதாரண பட்டவரில்லை. கை தேர்ந்த ஜோஸ்யர். கணக்கிலேயே தன்
காலத்தை கணித்து நாள், நேரம் , நிமிடம் முதற்கொண்டு எழுதி வைத்து
இருந்தார். அதை தெரிந்து கொண்ட காமுவுக்கு மனம் பட்ட பாடு கொஞ்ச
நஞ்சமில்லை.
பார்வை அப்படியே அந்த வெள்ளி கூஜா பக்கம் சென்றது. ஒருமுறை சிவகங்கை
அரண்மணை சென்ற போது அந்த வேலைப்பாடுள்ள பன்னீர் சொம்பு மாடலில்
அமைந்த கூஜாவை பார்த்து பெண் ஆசைப்பட்டாள் என்பதற்காக வெள்ளிக்கடை
வாலா செட்டியை ஆத்திற்கே கூப்பிட்டு அதே மாடலில் பண்ணச் சொன்னார்.
அது இன்னும் அவளின் பெண் வரை வேம்பின் பேர் சொல்லி நிற்கிறது. அதில்
பால் நிரப்பி தலைமாட்டில் வைத்திருந்தார்கள்.
சொந்தங்களும் பந்தங்களும் சிறிது பாலை வேம்புக்கு கொடுத்த வண்ணம்
இருந்தார்கள்.
போகும் தசையில் ராம நாமம் சொல்வது பயணிக்கும் ஜீவனுக்கு நல்லதென
காமுவின் சின்னம்மா சொல்ல பேரனும் பேத்திகளும் ராமா ராமா என்று சொல்லி
கொண்டே இருந்தனர்.
சட்டென முழித்த வேம்பு “ நாமா வேணாம் முகா சொலு” என்றார்.
ராமன் வேண்டாமாம் . முருகா என் சொல்லணுமாம். அந்தளவு முருகன் மேல்
ஈடுபாடு. வைணவர் தான் ஆனாலும் முருகனுக்கென கோவில் கட்டி அதனை
பரம்பரையாக பராமரித்து வரும் குடும்பம் அவர் குடும்பம்.
ரேழியில் ஆளரவம் கேட்டது. இரவு மணி பதினொன்று. எப்பவுமே அந்த வீட்டில்
கதவடைப்பதே இல்லை. வெறுமே சாத்தியிருப்பார்கள். யார் என பார்க்க பிள்ளை
எழுந்து போனான். காமுவும் சிந்தை கலைந்து என்னவென்று விசாரித்தாள்.
"அம்மா! பெரியம்மா! பெரிய சாமி எப்படிம்மா இருக்காரு? "
என்றபடி வந்த ஆண்கள் அனைவரும் மாலை போட்டிருந்தனர். அவர்கள்
ஊரிலிருந்து திருச்செந்தூருக்கு ஒவ்வொரு ஷஷ்டிக்கும் பாத யாத்திரையாக
செல்பவர்கள். அன்று அமாவாசை கிளம்பினால் ஷஷ்டி அன்று முருக தரிசனம்.
முருகனுக்குகந்த நாள்.
"நம்ம சாமி கிட்ட துண்ணூறு வாங்காம நாங்க பயணிக்க மாட்டோமே
பெரியம்மா. அதான் வந்தோம் " என்றனர்.
காமுவும் வந்த அழுகையை அழுந்த துடைத்துக் கொண்டு பிள்ளையிடம் கை
காண்பித்தாள். அவன் உடனே எழுந்து வந்து தகப்பனாரிடம் காதில் சொல்ல
வேம்பு முகத்தில் கோடி சூர்ய ப்ரகாசம். என் அப்பன் என் முருகன் எனை கூப்பிட
ஓடோடி வந்து விட்டான் என்று மனதோடு ஆர்ப்பரித்தாரோ. அவ்வளவு தேஜஸ்
முகத்திலே. பார்த்த அனைவருமே காமுவிடம் சொன்னனர் அவர் விடை பெறும்
நேரம் வந்து விட்டதென.
எழும்பாத வலது கையை தூக்கி பிள்ளையே அனைவர் நெற்றியிலும் திரு நீறை
இட்டு விட்டான். அனைவரும் வேம்பின் கால் தொட்டு வணங்கி சென்றனர்.
சூழ்ந்த மௌனத்தை உள்ளே வந்து கொண்டிருந்த அடுத்த ஆத்து அம்பி
கலைத்தான்.
"யாத்திரை கோஷ்டிக் காரா இவ்வளவு நேரம் பயணத்தை ஆரம்பிச்சிருப்பாளே.
இன்னும் அரை மணி நேரத்தில் ஊர் எல்லையை தாண்டிடுவா. பத்திரமா
எல்லோரும் போய்ட்டு வந்துடணும் முருகா " என்றபடி வந்து கொண்டிருந்தான்.
"ஆமாமா அம்பி . பயணம் ஆரம்பிச்சுடுத்து."
வேம்புவை தொட்டு தடவிக் கொண்டிருந்த காமு சொன்னாள்.
"எல்லோரும் வாங்கோ குழந்தைகளா ! உங்க தாத்தா பயணப் படறார். கை
கூப்புங்கோ.! "
பிள்ளையை கூப்பிட்டு வேம்புவை அவன் மடி மேல் வைச்சிக்கச் சொன்னாள்.
பெண்ணை வேம்புக்கு வாயில் பால் வார்க்கச் சொன்னாள். தான் மட்டும் அவர்
பார்வையில் இருந்து நகரவே இல்லை. வேம்புவும் அவளையே அவளை
மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தார். கை அவளது கைக்குள் இருந்தது.
குழந்தைகள் "முருகா ! முருகா !"என சொல்ல காமுவின் கை ஒவ்வொரு
பகுதியாய் தடவியது. வயிறு சூடு இல்லடா . குளிர்ந்து போச்சு. இன்னும் மேலேறி
விலா பக்கமும் அடங்கி போச்சு.
"ஏண்ணா! என்னை விட்டு போறேளா? "
காமுவின் மனம் அரற்றியது.
"கொடுத்து வைத்தவர்னா நீங்கள். இத்தனை பேரும் அருகிலிருந்து உங்களை
வழியனுப்பறா. "
விடாமல் கண்ணீர் பெருக்கெடுத்தது அவளுக்கு.
வேம்பின் பார்வை அவளை விட்டு அகல வில்லை. அகக் கண்ணால் அவரும்
மனக் கண்ணால் அவளும் வாழ்க்கையை பரிமாறிக் கொண்டிருந்தார்கள்.
ஆச்சுடா உடல் சூடு போய்டுத்து. கண் வழியா தான் உயிர் போக போறது.
தலையில் கை வைத்து தடவிய படியே காமு குழந்தைகளை நமஸ்காரம்
பண்ணச் சொல்லி உத்தரவிட்டாள்.
வேம்பின் கை அவள் வளையலை பிடித்தபடி இருக்க கண் அவளை பார்த்த படி
இருக்க உயிர் பயணம் ஆரம்பித்தது. திருசெந்தூருக்கென பயணப் பட்டவர்கள்
ஊர் எல்லை தாண்டும் வரை பொறுத்து இருந்து அவரின் பயணம் ஆரம்பித்தது.
காமுவுக்கு கண் இல்லாத குறையை போக்கி கண்ணாய் இருந்தவர் காலன்
எடுத்துக் கொண்ட பத்தாம் நாள்.
அடுத்தாத்து செல்லம்மா மாதிரி என்னையும் முக்காடு போட்டு உட்கார
வைச்சுடுவாளோ என கலங்கிய காமுவின் கை பிடித்த பேத்தி அனைவரிடமும்
உரக்கச் சொன்னாள்.
"எங்க பாட்டி எப்பவும் இப்படியே தான் இருப்பா. எங்க தாத்தாவோட மகாலஷ்மி
அவோ. அவர் இப்படி நகைகளோடு பார்க்கத் தான் ஆசைப்படுவார்."
புரிந்து கொண்டாயே என்னை என கலங்கிய காமுவின் கை பேத்தியை தழுவிக்
கொண்ட படி வேம்புவை நமஸ்கரித்தது.
வெகு நேரம் காலை நீட்டிக் கொண்டு பழைய நினைவுகளில் ஆழ்ந்திருந்ததால்
மரத்துப் போன காலை நீவி விட்ட படி எழுந்த காமுவின் காதில் கொள்ளுப்
பேரனின் வீறீட்ட அழுகை புன்னகையை பூசியது. ஆசை தீர அவனை எடுத்து
அணைத்துக் கொண்டு சொன்னாள்..
"எங்க போறாராம் அவர் என்னை விட்டுட்டு? இதோ வந்துட்டாரே எங்காத்து
வேம்பண்ணா. "
பேத்தி வயத்துக் கொள்ளுப் பேரன் வேம்பு பிறந்த அதே அமாவாசை சுவாதியுடன்
கூடிய தீபாவளி பிறந்திருந்தான் . ஆம். இருட்டில் கிடந்த வெளிச்சம்
பிரகாசித்தது.
.. முற்றும்.
24.10.16
"திங்க"க்கிழமை 161024 :: அவியல் - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி.
அவியல்
என்று ஒன்று வந்ததே, மிஞ்சின குறைந்த அளவு உள்ள காய்கறிகளை வைத்து என்ன
செய்வது என்று யோசித்ததால்தான் இருக்கும் என்று நினைக்கிறேன். கல்யாணம்
முடிந்து மறுநாள்
கட்டுச்சாதம் அன்னைக்கு மிஞ்சின காய்கறிகளை வைத்து அவியலும், பலவித கலந்த
சாதங்களும் எங்கள் பக்கத்தில் செய்வார்கள். பொதுவாக வீட்டில், அவியலுக்கு
என்று காய் வாங்குவது அபூர்வம். (யார் தேவையான காய் எல்லாவற்றிலும் 100
கிராம்னு வாங்கறது?). அவியல் என்பது திருநெல்வேலிப்
பகுதியில் பிரபலமானது. கேரளாவில் இது முக்கியமான பண்டிகை நாட்களில்
செய்யப்படுவது. பெரும்பாலும் உணவுவிடுதிகளில் முருங்கைக்காய்
சேர்ப்பார்கள். எனக்கு இது ரொம்பவும் எரிச்சலாக இருக்கும். நிம்மதியா
அவியலைச் சாப்பிடமுடியாது. எங்கள் வழக்கத்தில் (முந்தைய தலைமுறை) நாட்டுக்
காய்கள் மட்டும்தான் சேர்ப்பார்கள். அதாவது, ஆங்கிலக் கறிகாய்களுக்குத்
(பீன்ஸ், கேரட், உருளை போன்றவை) தடா. அதேபோன்று, அவியலுக்கு உணவு
விடுதிகளில் செய்வதுபோல், நீள் சதுரவாக்கில் அழகழகாகவெல்லாம்
திருத்தமாட்டார்கள். கொஞ்சம் பெரிய அளவில்தான் திருத்துவார்கள். அவியல்ல
புளியும் சேர்ப்பார்கள். பெரும்பாலும் மாங்காய் சேர்த்துப் பார்த்ததில்லை.
இதற்கு, மாங்காய் குறிப்பிட்ட பருவகாலத்தில்தான் கிடைக்கும் என்பது
காரணமாயிருக்கலாம். மாங்காய் சேர்த்தால், புளி சேர்ப்பது தேவையில்லை.
அரைக்கிலோ காய்கறிக்கு, அரை மூடித் தேங்காய் தேவை. தேங்காயும், 4 பச்சை மிளகாயும் சேர்த்து (கொஞ்சம் தண்ணீர் விட்டுக்கொண்டு) வழுமூன மிக்சியில் அரைக்கவும். நான் இதிலேயே கொஞ்சம் உப்பையும் சேர்த்துக்கொள்வேன்.

இப்போ, குக்கரில் ஓரளவு வெந்திருக்கும் காய்கறிகளை எடுத்துக்கொள்ளவும். நீரை வடிகட்டிவிடலாம். கடாயில, தேங்காய் எண்ணையில் கடுகு பொரித்து, அதில் இந்த வெந்த காய்கறிகளைப் போடவும். அதனுடன் தேங்காய் பேஸ்டையும் சேர்த்து, தேவையான உப்பு சேர்த்து, மிதமான தீயில் கொஞ்சம் சுட வைக்கவும். தேங்காய் கொஞ்சம் ஆகவேண்டும். புளி போதவில்லை என்று தோன்றினால், குக்கரிலிருந்து எடுத்தபோது, நீரை வடிகட்டினோமே அதைத் தேவையான அளவு சேர்த்துக்கொள்ளலாம்.
அடுப்பை அணைத்துவிட்டு, 2-3 தேக்கரண்டி தேங்காய் எண்ணெயும், 2 ஆர்க் காம்புடன் கூடிய கருவேப்பிலையையும் சேர்த்துக் கலக்கவும். அப்புறம் நல்ல புளிக்காத தயிரை 1 ½ கப் அளவில் சேர்த்துக் கலக்கவேண்டியதுதான். (பின்குறிப்பைப் பார்க்க)
அவியல்
பண்ணுவது ரொம்ப சுலபம். கொடுத்துள்ள இத்தனை காய்கறிகளும் வேண்டுமா என்று
மலைக்கவேண்டாம். கொஞ்சம் குறைவாக இருந்தால் அவியலின் கம்பீரம் குறையாது.
என்ன, வாழைக்காய்,
அவரை (அல்லது பீன்ஸ்), சேப்பங்கிழங்கு, கத்தரி, பூசணி இவைகள் இருந்தால்
போதும். எங்க அம்மா, பச்சைத் தக்காளிக் காய் மட்டும்போட்டு அவியல்
செய்வார்..அது இன்னும் என் மனதிலேயே இருக்கு. சண்டைல கிழியாத சட்டை எங்க
இருக்கு என்று சொல்வதுபோல், எங்க அம்மா பண்ணித்தருவதுபோல்
நீயும் பண்ணு என்று மனைவியிடம் சொல்லாத கணவன் வெகு அபூர்வமல்லவா?
தொட்டுக்க
வேண்டாம்.. அப்பிடியே ச்சாப்பிடுவேன்.. என்பதுபோல, எனக்கு அவியலுக்கு,
வெறும் சாதம், வாசனைக்குக் கொஞ்சம் தேங்காய் எண்ணெய் (எங்கள் வீடுகளில்
நெய்தான் சாதத்துக்கு)
போதும். என்னைப் பொறுத்தவரையில் அவியல், கொஞ்சம் காரமான கலந்த சாதங்களுடன்
(புளியோதரை, எள்ளுச்சாதம்-கார வகை) நன்றாக இருக்கும். அடைக்கு அவியலைத்
தொட்டுக்கொள்ளலாம் என்று கண்டுபிடித்த மஹராசனே.. நீயே அனுபவி அந்தக்
காம்பினேஷனை.. எனக்கு வேண்டாம். (அடைக்கு மரியாதை…
நெய்யுடன் சேர்ந்த வெல்லப் பொடி. இல்லாட்டா இட்லி மிளகாய்ப்பொடி. மற்ற
காம்பினேஷன்லாம், சும்மா எண்ணிக்கைக்குத்தான்.. சரவணபவன், சிவப்பு, பச்சை,
மஞ்சள், வெள்ளை என்று வண்ண வண்ணமாக சட்னி தருவதுபோல)
பின்குறிப்பு:
1.
பொதுவாக,
அவியலில் (அதாவது அடுப்பை அணைத்தபின்), உடனேயே தயிர் சேர்க்கவேண்டாம்.
பரிமாறுவதற்கு முன் தயிர் சேர்க்கலாம் என்று சொல்வார்கள். அப்போதுதான்,
சாயும்காலத்தில்
அவியல் மிஞ்சியிருக்கும்போது, திருப்பி தயிர் சேர்த்துச் சாப்பிடலாம்.
இல்லைனா, அவியல் புளிக்கும். ஆனால் எங்கள் வழக்கத்தில் கடவுளுக்குப்
படைத்தபின் அதில் எதையும் சேர்க்கும் வழக்கம் இல்லை. அதனால் அவியல்
பண்ணும்போதே தயிரையும் சேர்த்துவிடுவார்கள்.
2.
தயிர்
புளிப்பாக இருக்கும் என்று தோன்றினால் (காலையில்), காய்கறிகளைக் குக்கரில்
வைத்துவேகவைக்கும்போது, புளிஜலம் சேர்க்கவேண்டாம். மாங்காயையும் திருத்தி
அவியலில் சேர்ப்பதானால், புளிஜலம் தேவையில்லை.
3.
காய்கறிகள்
ஒவ்வொன்றுக்கும் வேக, ஒவ்வொரு உஷ்ணநிலை வேண்டும். எல்லாத்தையும் ஒரேமாதிரி
குக்கரில் வைத்தால் ஒன்றும் தவறில்லை. வாழை, கத்தரிக்கு வேக நேரமாகாது.
எல்லாக் காயும் முக்கால் வெந்திருந்தால் போதும். கடைசியில் கடாயில்
தேங்காய் பேஸ்டுடன் கொதிக்க வைக்கும்போது மீதி வெந்துவிடும்.
4.
அவியல் கொஞ்சம் நீர்க்க இருந்தால்மட்டும் (அடுப்பில் இருக்கும்போது), 1 தேக்கரண்டி அரிசிமாவு கரைத்துச் சேர்க்கலாம்.
நான்
வெள்ளிக்கிழமை அவியல் செய்தபோது, வடகங்களும் அப்பளாமும் பொரித்தேன்.
சாதம், அவியல், வடகம். இந்தக் காம்பினேஷன் எனக்குப் பிடித்தது.
அன்புடன்,
23.10.16
22.10.16
ஒரு பெண்ணை நடு இரவில் காப்பாற்றியவர்..
1)
"...... அப்போ தான், உங்களைத் தான் அவன் தேடறான்னு புரிஞ்சுது'னு
சொன்னாங்க. அந்த நிமிஷத்தில் எனக்குள் ஏற்பட்ட உணர்ச்சிகளை வார்த்தைகளால்
சொல்ல முடியாது. ஆட்டிசத்துக்கும், இசைக்கும் நிச்சயமாக ஏதோ தொடர்பு
இருக்குன்னு புரிந்தது.
இனி அவர்களுக்காக மட்டுமே என் பாட்டுன்னு முடிவெடுத்தேன். அப்போது ஆரம்பித்தது இந்தப் பயணம்.
ஆட்டிச நிலையாளர்களுக்கு, ௯௯.௯ சதவீதம் இசையில் ஆர்வம் உண்டு...."
சென்னை, அண்ணாமலைபுரத்தில், 'ஆட்டிசம்' என்ற மனவளர்ச்சி குறைப்பாட்டால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இசை வகுப்புகளை நடத்தி வரும், கர்நாடக இசைக் கலைஞர் லட்சுமி மோகன்.
சென்னை, அண்ணாமலைபுரத்தில், 'ஆட்டிசம்' என்ற மனவளர்ச்சி குறைப்பாட்டால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இசை வகுப்புகளை நடத்தி வரும், கர்நாடக இசைக் கலைஞர் லட்சுமி மோகன்.
2) செல்வகுமார்.
3) சமயோசிதமாய் செயல்பட்டு ஒரு பெண்ணை நடு இரவில் காப்பாற்றியவர். மனிதம் இன்னும் மறித்து விடவில்லை என்று நினைக்க வைத்திருப்பவர்.
4) ஜேசுமேரி.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)















