செவ்வாய், 25 அக்டோபர், 2016

கேட்டு வாங்கிப்போடும் கதை :: விருட்ச விதைகள்



இந்த வார "கேட்டு வாங்கிப் போடும் கதை" பகுதியில் இடம்பெறும் கதை திருமதி மாலா மாதவன் அவர்களுடைய படைப்பு.

அவருடைய தளம் எழுதுவோம் ஒரு பா.

ஃபேஸ்புக் நண்பர்.  திடீரென்று ஒருநாள் அவர் ஸ்டேட்டஸ் ஒன்றில் "என்னுடைய கதை இந்த வார தினமலரில்" என்று படித்ததும் அவரிடம் கேட்டு, கதையை வாங்கிப் போடுகிறேன்!

அவருடைய முன்னுரையைத் தொடர்ந்து வழக்கம்ப்ல அவர் படைப்பு.


========================================================================



பத்து வயதில் திருமணம் ஆகி புக்ககம் வந்து தன் ஆத்துக்காரரோடு  கிட்டத்தட்ட எழுபது வருடங்கள் நடத்திய புரிதல் தந்த அன்னியோன்யம், அவர் போன பின்பும் அவரது விழுதுகளில் அவர் விதைத்த சாயலை தேடி ஆசுவாசம் கொள்கிறது.

======================================================================




விருட்ச விதைகள்

மாலா மாதவன்




முதுமை என்பது வரம் வாழத் தெரிந்தவர்களுக்கு. இளமையில் விதை

 என்பார்களே. அது முதுமைக்கான விதை தான்.

 அத்தகைய வரம் வாங்கி கொண்டு வந்தவர்கள் தான் காமுவும் வேம்புவும்.

கண்ணுக்கு கண்ணாக இரண்டு குழந்தைகள். பொண் ஒண்ணு பிள்ளை ஒண்ணு.

இரண்டு பேருக்கும் கல்யாணம் ஆகி பேரக் குழந்தைகளும் பார்த்தாச்சு.

விஸ்தாரமா வீடு. ஆள் படைக்கு குறைவில்லை. ராணி மாதிரி காமுவை வாழ

வைச்சார் வேம்பு. என்ன இன்னிக்கு பார்த்தா அவருக்கு வயசு எண்பதுன்னு

சொல்ல முடியுமா என்ன. அப்படி ஒரு மெலிதான தேகம். தேஜஸ்ல அவரது

அம்மாவை கொண்டு இருந்தார்.

காமு மட்டும் என்ன குறைந்தவளா என்ன? ஆயிரம் பேருக்கு அன்னபூரணியாய்

சமைத்த கை. அந்த காலத்தில் காஸ் அடுப்பா , மின் அடுப்பா .. ஒன்றும் இல்லை.

 விறகடுப்பின் புகையை ஊதி ஊதி இவள் கண் இரண்டும் மங்க தொடங்கி இப்போ

சுத்தமா பார்வையே இல்லை.

ஆனாலும் லஷ்மீகரம் முகத்தில் தாண்டவமாடும். ஒன்பது கஜம்

சின்னாளம்பட்டும் தேவேந்திராவும் மாற்றி மாற்றி அமர்க்களப்படும். பெரிய

மூக்குத்தியும், டாலடிக்கும் வைரத் தோடும், கைக்கு இரண்டாக நெளி

வளையல்களும், சற்று பெரிதான வாடாமல்லி கலரில் குங்குமமும் காமுவை

மிக அழகியாக காட்டும்.

அந்த அறையே சாம்பிராணி புகையின் நறுமணத்தால் சூழப் பட்டு இருந்தது. ஒரு

பக்கம் கட்டில் போடப் பட்டு கட்டிலோடு கட்டிலாய் படுத்து இருந்தார் வேம்பு.

 சுற்றிலும் எத்தனை பேர் இருந்தாலும் பார்வை என்னவோ காமு மேல் தான்

இருந்தது. என் மனைவி எவ்வளவு லஷ்மீகரமா இருக்கான்னு நினைத்தார்

வேம்பு.

ஆச்சு இன்னியோட  ஆறு மாசமாச்சு. ஒரு பக்கம் கையும் காலும் விழுந்து.

வாயும் கோணிண்டு பேச்சும் குழறலா தான் இருக்கு. இவர் என்னவோ பேசறார்

தான். மத்தவாளால தான் புரிஞ்சுக்க முடியலை.

“காமு, இன்னிக்கு அமாவாசைடி. கனத்த நாள் . பத்திரமா பார்த்துக்கோடி உன்

ஆம்படையானை!”

வந்திருந்த அத்தை அவளிடம் சொன்னாள். அத்தை படு கிழம்.

அத்தனை உறவுகளை பார்த்தவள்.

காமுவின் நடுங்கும் கைகளை அந்த முதிய கரம் பற்றிக் கொண்டது.

'ம்' என்றாள் காமு. எல்லா வைத்தியமும் பார்த்தாச்சு. ஆத்துக்கு கூட்டிண்டு

போங்கோன்னுட்டாரே அத்தை. இனி தெய்வம் தான் என்றபடி வேம்புவை

நோக்கிச் சென்றாள்.

பொண்ணும் பிள்ளையும் கலங்கி நின்றார்கள். பேரன் பேத்திகளும் அப்படியே.

வேம்பு அத்தனை பேருக்கும் உசிராச்சே. காமு எதற்கும் கலங்க வில்லை.

பிள்ளையின் கை பிடித்து கட்டில் அருகே அமர்ந்து கொண்டாள்.வேம்புவின் கை

அவள் கைக்குள் இருந்தது. புறங்களை தள்ளி விட்டு அகமோடு பேசினர் மனதால்.

"பதினாறாம் வாய்ப்பாடு சொல்லுடா வேம்பு.!"

ஆசிரியர் குச்சியை எடுத்துக் கொண்டு மிரட்டினார். அன்றைய பாடத்தை

படிக்காத வேம்பு தலையை குனிந்து நிற்க ..

"இந்தாடி காமு, நீ அவனது அத்தை பெண் தானே. உன் கையால் அவனை ரெண்டு

கொட்டு கொட்டு. அதான் தண்டனை "

என்று சொல்ல அவளும் கொட்டவும் வகுப்பே கொல்லெனச் சிரித்தது.

"நீ வாடி ஆத்துக்கு. ஆத்திரம் தீர கொட்டுவேன் "

என சூளுரைத்த அவன் இன்று வரை கோபமாக கூட பேசியதில்லை.

இரவும் வந்தது. அனைவரும் வேம்புவை சுற்றியே படுத்து கொண்டிருந்தனர்.

அமாவாசை வேறா எங்கும் இருட்டு. ஒரு வெளிச்சம் இருட்டில் அஸ்தமிக்கப்

போகும் நேரத்தை நினைத்து மனம் நொந்தனர்.

வேம்பும் சாதாரண பட்டவரில்லை. கை தேர்ந்த ஜோஸ்யர். கணக்கிலேயே தன்

காலத்தை கணித்து நாள், நேரம் , நிமிடம் முதற்கொண்டு எழுதி வைத்து

இருந்தார். அதை தெரிந்து கொண்ட காமுவுக்கு மனம் பட்ட பாடு கொஞ்ச

நஞ்சமில்லை.

பார்வை அப்படியே அந்த வெள்ளி கூஜா பக்கம் சென்றது. ஒருமுறை சிவகங்கை

அரண்மணை சென்ற போது அந்த வேலைப்பாடுள்ள பன்னீர் சொம்பு மாடலில்

அமைந்த கூஜாவை பார்த்து பெண் ஆசைப்பட்டாள் என்பதற்காக வெள்ளிக்கடை

வாலா செட்டியை ஆத்திற்கே கூப்பிட்டு அதே மாடலில் பண்ணச் சொன்னார்.

அது இன்னும் அவளின் பெண் வரை வேம்பின் பேர் சொல்லி நிற்கிறது. அதில்

பால் நிரப்பி தலைமாட்டில் வைத்திருந்தார்கள்.

 சொந்தங்களும் பந்தங்களும் சிறிது பாலை வேம்புக்கு கொடுத்த வண்ணம்

இருந்தார்கள்.

போகும் தசையில் ராம நாமம் சொல்வது பயணிக்கும் ஜீவனுக்கு நல்லதென

காமுவின் சின்னம்மா சொல்ல பேரனும் பேத்திகளும் ராமா ராமா என்று சொல்லி

கொண்டே இருந்தனர்.

சட்டென முழித்த வேம்பு “ நாமா வேணாம் முகா சொலு” என்றார்.

ராமன் வேண்டாமாம் . முருகா என் சொல்லணுமாம். அந்தளவு முருகன் மேல்

ஈடுபாடு. வைணவர் தான் ஆனாலும் முருகனுக்கென கோவில் கட்டி அதனை

பரம்பரையாக பராமரித்து வரும் குடும்பம் அவர் குடும்பம்.

  ரேழியில் ஆளரவம் கேட்டது. இரவு மணி பதினொன்று. எப்பவுமே அந்த வீட்டில்

கதவடைப்பதே இல்லை. வெறுமே சாத்தியிருப்பார்கள். யார் என பார்க்க பிள்ளை

எழுந்து போனான். காமுவும் சிந்தை கலைந்து என்னவென்று விசாரித்தாள்.

"அம்மா! பெரியம்மா!  பெரிய சாமி எப்படிம்மா இருக்காரு? "

என்றபடி வந்த ஆண்கள் அனைவரும் மாலை போட்டிருந்தனர். அவர்கள்

ஊரிலிருந்து திருச்செந்தூருக்கு ஒவ்வொரு ஷஷ்டிக்கும் பாத யாத்திரையாக

செல்பவர்கள்.  அன்று அமாவாசை கிளம்பினால் ஷஷ்டி  அன்று முருக தரிசனம்.

முருகனுக்குகந்த நாள்.

"நம்ம சாமி கிட்ட துண்ணூறு வாங்காம நாங்க பயணிக்க மாட்டோமே

பெரியம்மா. அதான் வந்தோம் " என்றனர்.

காமுவும் வந்த அழுகையை அழுந்த துடைத்துக் கொண்டு பிள்ளையிடம் கை

காண்பித்தாள். அவன் உடனே எழுந்து வந்து தகப்பனாரிடம் காதில் சொல்ல

வேம்பு முகத்தில் கோடி சூர்ய ப்ரகாசம். என் அப்பன் என் முருகன் எனை கூப்பிட

ஓடோடி வந்து விட்டான் என்று மனதோடு ஆர்ப்பரித்தாரோ. அவ்வளவு தேஜஸ்

முகத்திலே. பார்த்த அனைவருமே காமுவிடம் சொன்னனர் அவர் விடை பெறும்

நேரம் வந்து விட்டதென.

எழும்பாத வலது கையை தூக்கி பிள்ளையே அனைவர் நெற்றியிலும் திரு நீறை

இட்டு விட்டான். அனைவரும் வேம்பின் கால் தொட்டு வணங்கி சென்றனர்.

சூழ்ந்த மௌனத்தை உள்ளே வந்து கொண்டிருந்த அடுத்த ஆத்து அம்பி

கலைத்தான்.

"யாத்திரை கோஷ்டிக் காரா  இவ்வளவு நேரம் பயணத்தை ஆரம்பிச்சிருப்பாளே.

இன்னும் அரை மணி நேரத்தில் ஊர் எல்லையை தாண்டிடுவா. பத்திரமா

எல்லோரும் போய்ட்டு வந்துடணும் முருகா " என்றபடி வந்து கொண்டிருந்தான்.

"ஆமாமா அம்பி . பயணம் ஆரம்பிச்சுடுத்து."

 வேம்புவை தொட்டு தடவிக் கொண்டிருந்த காமு சொன்னாள்.

"எல்லோரும் வாங்கோ குழந்தைகளா ! உங்க தாத்தா பயணப் படறார். கை

கூப்புங்கோ.! "

 பிள்ளையை கூப்பிட்டு வேம்புவை அவன் மடி மேல் வைச்சிக்கச் சொன்னாள்.

பெண்ணை வேம்புக்கு வாயில் பால் வார்க்கச் சொன்னாள். தான் மட்டும் அவர்

பார்வையில் இருந்து நகரவே இல்லை. வேம்புவும் அவளையே அவளை

மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தார். கை அவளது கைக்குள் இருந்தது.

குழந்தைகள்  "முருகா ! முருகா !"என சொல்ல காமுவின் கை ஒவ்வொரு

பகுதியாய் தடவியது. வயிறு சூடு இல்லடா . குளிர்ந்து போச்சு. இன்னும் மேலேறி

விலா பக்கமும் அடங்கி போச்சு.

"ஏண்ணா! என்னை விட்டு போறேளா? "

காமுவின் மனம் அரற்றியது.

 "கொடுத்து வைத்தவர்னா நீங்கள். இத்தனை பேரும் அருகிலிருந்து உங்களை

வழியனுப்பறா. "

விடாமல் கண்ணீர் பெருக்கெடுத்தது அவளுக்கு.

வேம்பின் பார்வை அவளை விட்டு அகல வில்லை. அகக் கண்ணால் அவரும்

மனக் கண்ணால் அவளும் வாழ்க்கையை பரிமாறிக் கொண்டிருந்தார்கள்.

ஆச்சுடா உடல் சூடு போய்டுத்து. கண் வழியா தான் உயிர் போக போறது.

தலையில் கை வைத்து தடவிய படியே காமு குழந்தைகளை நமஸ்காரம்

பண்ணச் சொல்லி உத்தரவிட்டாள்.

வேம்பின் கை அவள் வளையலை பிடித்தபடி இருக்க கண் அவளை பார்த்த படி

இருக்க உயிர் பயணம் ஆரம்பித்தது. திருசெந்தூருக்கென பயணப் பட்டவர்கள்

ஊர் எல்லை தாண்டும்  வரை பொறுத்து இருந்து அவரின் பயணம் ஆரம்பித்தது.

காமுவுக்கு கண் இல்லாத குறையை போக்கி கண்ணாய் இருந்தவர் காலன்

எடுத்துக் கொண்ட பத்தாம் நாள்.

அடுத்தாத்து செல்லம்மா மாதிரி என்னையும் முக்காடு போட்டு  உட்கார

வைச்சுடுவாளோ என கலங்கிய காமுவின் கை பிடித்த பேத்தி அனைவரிடமும்

உரக்கச் சொன்னாள்.

"எங்க பாட்டி எப்பவும் இப்படியே தான் இருப்பா. எங்க தாத்தாவோட மகாலஷ்மி

அவோ. அவர் இப்படி நகைகளோடு பார்க்கத் தான் ஆசைப்படுவார்."

புரிந்து கொண்டாயே என்னை என கலங்கிய காமுவின் கை பேத்தியை தழுவிக்

கொண்ட படி வேம்புவை நமஸ்கரித்தது.

வெகு நேரம் காலை நீட்டிக் கொண்டு பழைய நினைவுகளில் ஆழ்ந்திருந்ததால்

மரத்துப் போன காலை நீவி விட்ட படி எழுந்த காமுவின் காதில் கொள்ளுப்

பேரனின் வீறீட்ட அழுகை புன்னகையை பூசியது. ஆசை தீர அவனை எடுத்து

அணைத்துக் கொண்டு சொன்னாள்..

"எங்க போறாராம் அவர் என்னை விட்டுட்டு? இதோ வந்துட்டாரே எங்காத்து

வேம்பண்ணா. " 

பேத்தி வயத்துக் கொள்ளுப் பேரன் வேம்பு பிறந்த அதே அமாவாசை சுவாதியுடன்

கூடிய தீபாவளி  பிறந்திருந்தான் . ஆம்.  இருட்டில் கிடந்த வெளிச்சம்

பிரகாசித்தது.

                  ..       முற்றும்.

51 கருத்துகள்:

  1. நெகிழ்ந்து போய்விட்டேன் நண்பரே
    நன்றி
    தம +1

    பதிலளிநீக்கு
  2. ஸ்ரீராம் மாலாவின் கதை படித்ததில் ஒன்று மட்டும் தெளிவானது.
    நான் பார்த்த மாலா இவ்வளவு அழகா இலக்கியமா கவிதையா
    சிந்தித்துச் சித்தரிப்பார் என்ற அழகான உண்மை.
    மிக மிக நன்றி,
    மாலாமா ,,,, அழகா தாத்தாவை வரவழைத்துவிட்டார் காமு மாமி.

    முழுக்கதையும் பக்கத்தில் இருந்து பார்த்தேன். நெகிழ்ந்தது மனம்.
    மனம் நிறை ஆசிகள். அம்மா.

    பதிலளிநீக்கு
  3. நெகிழ வைத்தக் கதை. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி சார்.

    பதிலளிநீக்கு
  4. ஒரு உயிர் விடை பெறும் தருணத்தை இவ்வளவு தத்ரூபமாக உயிர்ப்புடன் சொல்லவும் முடியுமா......??? கண் முன்னே காட்சிகள் விரிகின்றனவே....????

    பதிலளிநீக்கு
  5. ஒரு உயிர் விடை பெறும் தருணத்தை இவ்வளவு தத்ரூபமாக உயிர்ப்புடன் சொல்லவும் முடியுமா......??? கண் முன்னே காட்சிகள் விரிகின்றனவே....????

    பதிலளிநீக்கு
  6. அனுசரணையான உறவுகள் - நெகிழ்வான கதை!!

    பதிலளிநீக்கு
  7. நெகிழ வைத்த கதை.
    முதுமை என்பது வரம் வாழத் தெரிந்தவர்களுக்கு. //

    உண்மை.

    நல்ல கதை பகிர்வுக்கு நன்றி.
    கதை ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்.


    பதிலளிநீக்கு
  8. நெகிழ வைத்த கதை.
    முதுமை என்பது வரம் வாழத் தெரிந்தவர்களுக்கு. //

    உண்மை.

    நல்ல கதை பகிர்வுக்கு நன்றி.
    கதை ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்.


    பதிலளிநீக்கு
  9. மிகவும் அருமையான அழகான கதை.

    படித்து முடித்ததும் மனது முழுவதும் மிக அலாதியான திருப்தியோ திருப்தி.

    பாராட்டப்பட வேண்டிய எழுத்து நடை.

    கதாபாத்திரங்களின் பெயர்களிலிருந்து ஆரம்பித்து, அனைத்துச் சம்பவங்களும் மிக அழகாகத் தொடுத்துக்கொடுக்கப்பட்டுள்ளதில் வியப்போ வியப்பு.

    கதாசிரியர் அவர்களுக்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள்.

    அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

    இன்று இங்கு வெளியிட்டு படிக்கத்தந்துள்ள ‘எங்கள் ப்ளாக்’க்கு என் நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  10. மனைவி, மக்கள், உறவினர்கள் புடைசூழ, மகனின் மடியில் தலைவைத்து, மனைவியின் நேரடிப்பார்வையில், மகள் ஊட்டிடும் அன்பு பாலுடன், பேரப்பிள்ளைகளின் பிரார்த்தனைகளுடன் எதிர்பார்த்து காத்திருந்த ........ மிக நல்ல சாவு.

    புனரபி ஜனனம் .... புனரபி மரணம் !!

    எதிர்பாராத நல்லதொரு அருமையான முத்திரை பதிக்கும் முடிவு. :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம்! அது தான் காலங்கள் ஆயினும் இன்னும் மனதில் நிற்கிறது. மிக்க நன்றி

      நீக்கு
  11. இது வெறும் கதையாகத் தெரியவில்லை. ஒரு உயிரின் ஜீவ மரண போராட்டத்தில் அதனுடன் வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து வந்த இன்னொரு உயிர் ஆசுவாசப்படுத்தி ஆதூரத்துடன் அனுப்பி வைக்கும் நிஜமான காவியமாகத்தெரிந்ததில் மனம் மிகவும் கனத்துப்போனது.
    கதாசிரியருக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்!!

    பதிலளிநீக்கு
  12. "முதுமை என்பது வரம் வாழத் தெரிந்தவர்களுக்கு. இளமையில் விதை என்பார்களே. அது முதுமைக்கான விதை தான்." என்ற அருமையான எண்ணத்தைத் தொட்டுப் புனைந்த கதை வண்ணம் அழகு.
    பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
  13. ஜூனியர் வேம்பண்ணாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் :)

    பதிலளிநீக்கு
  14. இந்தக்கதையை முதலில் படித்து ரசித்தவன் நான். பிறகு வாரமலரில் பிரசுரத்துக்கு பரிந்துரை செய்தேன். தொடர்ந்து ‘துறவு’ என்ற சிறுகதையும் வாரமலரில் பிரசுரம் செய்ய பரிந்துரை செய்தேன். எதிர்காலத்தில் இவர் நல்ல படைப்புகளைப் படைப்பார் என்ற நம்பிக்கை எனக்குண்டு. வளர்க!

    பதிலளிநீக்கு
  15. மிக்க நன்றி ஸ்ரீராம் சார் . நெகிழ்ந்து விட்டேன்.

    பதிலளிநீக்கு
  16. ஒரு உயிர் விடை பெறுவதை கண்கூடாக பார்க்க, உணர வைத்து விட்டார் ஆசிரியர் அருமையான படைப்பு
    திருமதி. மாலா மாதவன் அவர்களுக்கு வாழ்த்துகள்.
    - கில்லர்ஜி -

    பதிலளிநீக்கு
  17. என்ன சொல்வது?.. வேறு சில பேட்டிகளை இதழ்களில் படித்து விட்டு நொந்து போயிருந்த மனசுக்கு, கைப்பிடித்தவருக்கு அவர் கைப்பிடித்து பிரியா விடை கொடுத்த கதை மனசைத் தொட்டது.

    படித்துக் கொண்டே வரும் பொழுது இவ்வளவு நேரடி வர்ணனை கதைக்குத் துண்டாகத் தெரியுமோ என்று தோன்றியது. படித்து முடித்ததும் அது தான் கதையே என்றுத் தெரிந்தது.

    'நிஜமே. ஒரு சதம் கூடப் பொய்யில்லை' என்று எழுதியவரே சொன்னது, இது கற்பனை இல்லை என்று தெறித்த உண்மையாய் சுட்டது. 'அடுத்தாத்து செல்லம்மா பாட்டி மாதிரி' கதையெல்லாம் 100 வருஷ்ங்களுக்கு முன்னாடி. அதனால் தவிர்த்திருக்கலாம்.. 'புரிந்து கொண்டாயே என்று கலங்கிய' ஒரு சின்ன நெருடலையும் தவிர்த்திருக்கும்.. வேம்பத் தாத்தா ஆத்மாவுடன் ஆத்மாவாகக் கலந்த காமுப்பாட்டிகு
    அந்தக் கலங்கல் எல்லாம் நினைத்தே பார்த்திருக்கமுடியாத தூசு என்பதற்காகச் சொன்னேன்.

    முன் கதையின் பின்னால் வந்த பின் கதையின் வேம்பண்ணாவின் ஜனனம் முன் கதையைத் தூக்கி நிறுத்தியிருப்பது வாஸ்தவம்.

    வாழ்த்துக்கள், சகோதரி மாலா மாதவன்! அடுத்த கதை வெரைட்டியாக வேறு விதமாக இருக்கட்டும்..

    நிறையப் பேர் திருக்கண்ணபுரத்தானைக் 'கிள்க்'கிப் பார்த்திருப்பார்கள். அவர் தன்னைக் காட்டிக் கொள்ளாமல் கதையின் சிறப்படிச் சொல்லி வாழ்த்திப் பின்னூட்டமிட்டிருக்கலாம்.

    பதிலளிநீக்கு
  18. // கதையின் சிறப்படிச் சொல்லி//

    கதையின் சிறப்பைச் சொல்லி

    பதிலளிநீக்கு
  19. என்னுடைய அப்பாவின் கடைசி காலத்தை நினைவூட்டியது. வாழ்வதில்மட்டுமில்லை. இறுதியிலும் ஒரு அமைதியான கர்பக்கிரஹம்போல மனைவிகள் துணையாக இருந்திருக்கிறார்கள். களம் வேறாக இருக்கலாம். கதை வேறாக இருக்கலாம். துணைவி என்பவள் துணையாக முடிவுவரை இருக்கப் பக்குவப்பட்டு இருந்தனர். அருமையான நெகிழ்ச்சியைக் கொடுத்த கதைஇல்லையம்மா, நடந்தது. அப்படித்தான் தோன்றுகிறது. முன்னேற்றமான வாழ்வு பாட்டிக்கு. எல்லோரும் மனதில் நிற்பவர்கள். மாலா மாதவன்பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  20. ஓர் உயிர் பிரியாவிடை கொடுத்துப் போகும் தருணத்தை மனம் நெகிழும் விதத்தில் அருமையான நடையில் சொல்லியிருக்கும் கதாசிரியர் மாலா மாதவனுக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்!

    பதிலளிநீக்கு
  21. மனதைத் தொட்டுவிட்டது! என்ன ஒரு ஆதர்சமான தம்பதிகள். ஆயிரத்திலேனும் ஒன்று இப்படி இந்த உலகில் இருக்குமோ?!!!நல்ல நடை. வாழ்த்துகள், பாராட்டுகள் எழுத்தாளருக்கும் இதை வெளியிட்ட எங்கள்ப்ளாகிற்கும்.

    கீதா: கண்ணில் நீர் வந்துவிட்டது. ஏனென்றால் காமுவின் பேத்தியின் வார்த்தைகள்! நானும் அதே வார்த்தைகளைத்தான் என் அத்தையின் கணவர் இறந்த போது சொன்னேன். அதுவும் என் அத்தைக்கு வயது 39 தான் ஆகியிருந்தது. ஆனால் இந்தச் சமூகம், என் குடும்பம் என் வார்த்தைகளை ஏற்கவில்லை. இப்போது அவரும் இல்லை. அடுத்து என் கணவரின் தம்பி 5 வருடங்களுக்கு முன் 50 வயதில் இறந்த போது அவரது மனைவிக்கு வயது 44தான். ஆதர்ச தம்பதிகள். மனைவி கச்சேரியும் செய்பவர். என்னால் அந்தக் காரியங்களை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. என் அத்தை என் திருமணத்தின் போது ஒதுங்கி ஏன் அவரது மகளின் திருமணத்தின் போதே கூட ஒதுங்கி அதை என்னால் இன்றளவும் நினைத்துப் பார்க்க இயலவில்லை. அதனாலேயே ஏதேனும் பெண்ணின் கணவன் இறந்தால் நான் அந்த நிகழ்வுகளுக்குச் செல்வதில்லை. இந்தச் சமூகம் கைம்பெண்களை வித்தியாசப்படுத்திப் பார்ப்பதையும் என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. எழுத்தாளர் அனுராதா ரமணன் நினைவுக்கு வருகிறார்.

    நல்ல முடிவு! அதற்காகவே எழுத்தாளருக்குப் பாராட்டுகள்! வாழ்த்துகள்! என் கருத்தைப் பிரதிபலித்ததாலோ என்னவோ!!

    அருமையான கதை!

    பதிலளிநீக்கு
  22. பெரியவர் வேம்புவின் கைப்பிடித்து தடவிக் கொடுத்து வழி அனுப்பியது கூட அந்த வரிகள் அனைத்தும் மனதைத் தொட்டுவிட்டன. அருமை.

    -- இருவரும்

    பதிலளிநீக்கு
  23. மனதை நெகிழவைத்த நிகழ்வாக இருந்தது. நன்றி.

    பதிலளிநீக்கு
  24. நெகிழ்ச்சி.....

    அருமையான கதை. பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  25. இறப்பு என்பது இப்படித்தான் இருக்க வேண்டுமோ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உறவுகள் சூழ பயணம் அமைவது கொடுப்பினை. அச்சம்பவம் இக்கதையானது. நன்றி.

      நீக்கு
  26. இந்தக் கதையைப் படித்தவுடன் என் அப்பாவின் கடைசி நேரம் நினைவிற்கு வந்துவிட்டது. நாங்கள் எல்லோரும் சுற்றி நின்றுகொண்டிருந்தோம். புற்றுநோயால் பத்து மாதங்கள் அவதிப்பட்டுவிட்டு உயிர் பிரிந்தவுடன் அந்த முகத்தில் ஏற்பட்ட அமைதி இருக்கிறதே, அது இன்னும் என் கண்களில் நிற்கிறது.

    இந்தக் கதையில் வேம்புத் தாத்தா நிறைவாக இறைவனடி சேர்ந்தார். ஒவ்வொரு பாட்டிக்கும் இதுபோல ஒரு பேத்தி வேண்டும்.

    ஒவ்வொரு வரியும் மனக்கண்ணில் படமாகத் தெரிந்தது எழுத்தாளரின் வெற்றி என்று சொல்லவேண்டும். வாழ்த்துக்களும், பாராட்டுக்களும், மாலா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ரஞ்சனிம்மா. உங்கள் விமர்சனம் என்னை ஊக்குவிக்கின்றது.

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!