9.9.10

என்ன தோன்றுகிறது?

ஏதேனும் ஒரு படத்தைப் பார்க்கும்பொழுது, ஏதேனும் ஒரு நினைவு வரும்.
இங்கே உள்ள படத்தைப் பாருங்கள்.  

உடனே உங்களுக்கு என்ன தோன்றுகிறது என்பதை பதியுங்கள். 
ஒரே படம் - ஒவ்வொருவருடைய நினைவும் எவ்வளவு வேறுபடுகிறது என்பது வியப்பாக இருக்கும்.  


      (௦பெரிய கதையாக இருந்தால், engalblog@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பிடுங்க !!)

7.9.10

என் நினைவுகள்.

By அப்பாதுரை 
என் பத்தாம் வகுப்புத் தமிழாசிரியர் சுந்தரேசன்.  அண்ணாதுரை போலவே முகத்தோற்றம்.  வேண்டுமென்றே அண்ணாவைப் போல் வழுக்கை முடிக்கற்றை, மூக்குக் கண்ணாடி.  அண்ணா, நெடுஞ்செழியனைப் போலவே நிமிடத்துக்கொரு தரம் குதிகாலை உயர்த்தி ஒரு எழுச்சி.  வாயைத் திறந்தால் தமிழ்த் தேன்.  சில சமயம் தமிழ்ச் சாராயம்.  'ஏனையோர் மாணவர், மாணவி. நீ மாணாக்கன்' என்பார் என்னிடம்.  நான் அவர் பெட்.  செல்லம். சும்மா மூச்சு விட்டுக்கொண்டிருப்பேன், 'எனக்கும் தமிழுக்கும் பெருமை சேர்க்கிறான் அப்பாத்துரை' என்று ஏதாவது சொல்வார். என்னுடன் படித்த ஒரு குறிப்பிட்டப் பெண்மணிக்கு வயிற்றெரிச்சலாய் இருக்கும் (நான் தான் இன்றைக்குப் பொறாமைப் படவேண்டும் அந்தக் குரோம்பேட்டைக் கலைமாமணி மேல்).  என்னவோ தெரியவில்லை, அந்த வருடத்தோடு சுந்தரேசனையும் தொலைத்தேன்; தமிழையும் தொலைத்தேன்.  சுந்தரேசன் இன்னும் இருக்கிறாரா தெரியவில்லை. ஒரு முறை சுரேஷ் என்ற மாணவனை ஏதோ சொல்லப்போய் அவன் அவரைத் தாம்பரம் ரெயில்வே ஸ்டேஷனில் வைத்து வேட்டியை உருவி பெல்டால் அடித்து விட்டான்.  பாவம், சுந்தரேசன்.  தமிழாசிரியர்கள் நிலை எல்லா கழக ஆட்சிகளிலும் திண்டாட்டம் தான்.  

இன்னொரு ஆசிரியர் இந்திரமோகன்.   இன்றைக்கு நான் சிறையிலோ கழகக் கண்மணியாகவோ இல்லாமல் பிழைத்தமைக்காக அவருக்கு நன்றி சொல்லவேண்டும் (குறை சொல்ல வேண்டும்?).  ரஜினியை ஸ்டைல் மன்னன் என்கிறோம்; இந்திரமோகன் ஸ்டைலில் ரஜினி ஸ்டைலை எல்லாம் கட்டி அடிக்க வேண்டும், அப்படி ஒரு ஸ்டைல் அந்த ஆளிடம்.  அவரும் எத்திராஜ் என்று இன்னொரு ஆசிரியர் (க்ளார்க் கேபில் போல் சிகை) இரண்டு பேரும் ராதா என்ற ஒரு டீச்சரைத் துரத்தித் துரத்தி ஜொள் விடுவார்கள்.  ராதா டீச்சரும் தான்.  இந்திரமோகன்-ராதா டீச்சர் விவகாரம் (அல்லது வதந்தி) குரோம்பேட்டை அரசினர் பள்ளியில் எழுபதுகளின் தொடக்கத்தில் படித்தவர்களுக்குத் தெரியும்.  இந்திரமோகனை எண்பதுகளில் ஒரு முறை பழவந்தாங்கல் ரெயில்வே ஸ்டேஷனில் சந்தித்தேன்.  ராதா டீச்சரைப் பற்றி ஒன்றுமே தெரியாமல் போய்விட்டது.  

மங்கலமன்னன் இன்னொரு தமிழாசிரியர். இன்னொரு என்பது சரியாகத் தோன்றவில்லை.  முதலும் முடிவுமான தமிழாசிரியர் என்று சொல்வேன்.  எனக்கிருக்கும் தமிழறிவுக்கும்  ஆர்வத்துக்கும் காரணம் மங்கலமன்னன் தான்.  பாரதியாரை விட அழகான மீசை.  கண்களில் மை தீட்டிய (எங்களுக்குத் தெரியாது என்று அவர் நினைத்துக் கொண்டிருந்தார்) தீட்சண்யம், கம்பீரம்.  எத்தனையோ கறுப்பு சிவப்பு வேட்டிகள் பள்ளிக்கூடத்தில் திரிந்தாலும் மங்கலமன்னன் குரலுக்கும் தமிழுக்கும் இணையாகவில்லை.  சுந்தரேசனின் தமிழில் கவர்ச்சி இருந்தது;  மங்கலமன்னன் தமிழில் கலாட்டா இருந்தது.  சுந்தரேசன் தமிழில் கொஞ்சுவார்; மங்கலமன்னன் தமிழில் அதட்டுவார். கல்லூரி போனதும் இவருடனும் தொடர்பு விட்டுப் போனது.

மங்கலமன்னன், சுந்தரேசன், இந்திரமோகனைத் தெரிந்தவர்கள் யாராவது சந்தித்தால் இந்த அப்பாதுரையின் வணக்கத்தைச் சொல்லுங்கள். நன்றி.
     

6.9.10

ஆட்டமா? ஓட்டமா?


(T) EN SPORTS  என் ஸ்போர்ட்ஸ்
ESPN (Ennaa Sports Pulidaa Nee)
NEO SPORTS நீயா?  ஸ்போர்ட்?
Star(ve) Cricket

Didi Sports அல்லது டீடீஸ்போர்ட்ஸ்!!

ஸ்போர்ட்ஸ் சானல்களை நான் இப்படித்தான் பார்க்கிறேன்காரணம் ..... 

ஒரு ஃப்ளாஷ் பாக்.

*****

என்ன அர்ஜுனா?  அவார்டா?  என் எதிராளி முகத்தில் அவ்வளவு அவ நம்பிக்கை.

ஏன் அப்பிடிக் கத்துறே?  அர்ஜுன் என் தம்பியின் பேரன்.  தம்பி சிபாரிசு செய்தால் அவன் நிச்சயம் எனக்கு ஏதாவது ஒரு அவார்டு தர மாட்டானா என்ன?

தூஅப்படியா சேதிஎனக்குக் கூடத்தான்  ஸ்கேல் ரத்னா அவார்டு கிடைக்கும்.  ரத்னா என் மச்சினி.

ஸ்போர்ட்ஸுக்கும் எனக்கும் அவ்வளவு நெருக்கம்.  டிவியில் கிரிக்கெட்டென்னிஸ் (பனியன் மட்டும் அதுவும் கை வைக்காத லோ கட் பனியன் மட்டும் போட்டுக் கொண்டு ஆடுவது போல ஒரு பிரமையை ஏற்படுத்தும் நாரீமணிகள் டென்னிஸ்என்று விளையாட்டுகளை வெங்காய பக்கோடா போன்ற ஸ்போர்ட்ஸ் ஸ்பெஷல் நொறுக்குத் தீனி யுடன் சேர்த்து ரசிக்கும் போது மட்டும் தான் எனக்கும் விளையாட்டுக்கும் ஒரு 5 அடி அல்லது அடிக்குள்ளாக நெருக்கம் இருக்கும்.

முதல் முதலாக நான் விளையாட தைரியத்தை வரவழைத்துக் கொண்டு நின்றது என் சித்தப்பா மற்றும் அவரது (கேல் கில்லாடிமகன்களுடன் வாலிபால் விளையாடத்தான்.  

நான் பதுங்கிப் பதுங்கி ஒதுங்குவதைக் கண்டு சித்தப்பா, “ ஏன் இப்பிடி நடுங்கிச் சாகுறேபந்துக்குள் என்ன பெருச்சாளியா இருக்கு? “  என்று சந்தேகமாகக் கேட்டார்.  பந்துக்குள் சிறுத்தைக் குட்டி இருப்பது போன்ற கிலி எனக்கு இருந்தது என்னவோ உண்மைதான்.  அதை நிஜம்தான் என்று நிரூபிப்பது போல என் (ஆறே மாதம் இளையகஸின், செரினா வில்லியம்ஸ் ரேஞ்சுக்கு ஒரு சர்வீஸ் போட, பந்து ஒரு புலிக்குட்டி போல என் மூக்கில் தாக்கியது.  நான் மயக்கமடைந்து விழுந்தேன் என்று சொல்லியா தெரிய வேண்டும்?  அந்தக் காலத்தில் கோக்கோ கோலா எல்லாம் கிடையாது. கோலி சோடா உண்டு ஆனால் அதை வாங்கும் வசதி (விலை இன்றைய நாணயத்தில் சொல்வதானால் 3 பைசா) இல்லை.  எனவே சாவகாசமாக கிணற்றில் தண்ணீர் சேந்திக் கொண்டு வந்து என் மயக்கத்தைத் தெளிவித்தார்கள்.  அதன் பின் என்னை யாரும் பல்லாங்குழி, ஆடுபுலி போன்ற ஆட்டம் தவிர பெரிய விளையாட்டுகளுக்குக் கூப்பிடுவதில்லை.  பல்லாங்குழிக்கு கணக்குத் தேர்ச்சியும் ஆடுபுலி ஆட்டத்துக்கு சூழ்ச்சி நிறைந்த மூளையும் தேவை.  இரண்டும் எனக்கு கடவுள் தர வில்லை. 

வேறு யாரும் கூட விளையாட இல்லாத சமயத்தில் என் சம வயது சிறுமிகள் ( 6 முதல் 8 வரை) என்னை கல்லாங்காய் தாயம் போன்ற ஹார்ம்லெஸ் ஆட்டங்களுக்கு அரை மனசாகக் கூப்பிடுவார்கள்.  நானும் பயந்து கொண்டே சேர்ந்து கொள்வேன்.  வேறு ஒரு பாவாடை அல்லது கவுன் ஆட்டத்துக்கு வந்ததும் எனக்கு அன்பாக டாடா காட்டி,  அனுப்பி விடுவார்கள்.  ஒரு கல்லை மேலே வீசிவிட்டு அது விழுவதற்குள் ஒரு பிடி புளியங்கொட்டையை அள்ளிக்கொண்டு அந்தக் கல்லையும் பிடிக்க வேண்டும் என்று ஓர் ஆட்டம்.  அதில் வேண்டாத விருந்தாளியாக நான் கலந்து கொண்டு புளியங்கொட்டைகளை பலம் கொண்ட மட்டும் வீசி யதில் என் பக்கத்து வீட்டு நண்பி சரோஜாவுக்கும் எனக்கும் நிரந்தர சண்டை வந்து விட்டது.

ஸ்கூலில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது கம்பல்ஸரி விளையாட்டு பீரியடில் என் மூளையை முற்றிலும் (அப்போது என் மூளை சற்று முற்றியிருந்தது என்ற உண்மையை பெருமையுடன் சொல்லிக் கொள்கிறேன்!) உபயோகித்து ஆசிரியர்கள் வெளியிலிருந்து கண்காணிக்கும் போது நான் ஆடுவது போல பாச்சா காட்டிவிட்டு மற்ற நேரத்தில் கிரௌண்டில் ஆபத்து இல்லாத பிரதேசமாகத் தேர்ந்தெடுத்து ஓட ஆயத்தம் செய்வதுபோன்ற போஸில் நின்று கொள்வேன்.  அந்த ஒரே வருஷத்துடன் அந்தப் பள்ளிக்கு குட் பை சொல்லிவிட்டு வேறொரு ஜில்லாவுக்கு கட்சி மாறினோம்.

அங்கு டிரில் பீரியட் மாலை கடைசி வேளையில்தான் வரும், எனது ஃபிஃப்த் ஃபாரம் வகுப்புக்கு.  ரொம்ப சௌகரியம்.  “ சார் வெளியூர் சார்” என்று பரிதாபமாக முகத்தை வைத்துக் கொண்டு சொன்னால், என் சோனி ஆகிருதியைப் பார்த்துவிட்டு “ சரி போய்த் தொலை” என்று டிரில் மாஸ்டர் அனுமதி வழங்கி விடுவார்.  உண்மையிலேயே ஆறு மைல் / 9 கி.மீ தூரத்திலிருந்து வந்து படித்ததால் டிரில் கிளாஸ் இருக்கும் நாட்களில் முக்கால் மணி முன்னதாகவே ஊரை நோக்கி நடையைக் கட்டுவேன்.

இறுதி வகுப்பான எஸ் எஸ் எல் ஸி அல்லது பதினோராம் கிளாசில் பள்ளி பிஸியான நகர மத்தியிலும் பிளே கிரௌண்ட் சுமார் இரண்டு கி.மீ தூரத்திலும் இருந்ததால் கிரவுண்டுக்கு 22 நிமி எடுத்துக் கொண்டு போவேன்.  திரும்ப 22 நிமி.  ஆக ஒரு பீரியட் அம்பேல். (இந்த அம்பேல் என்ற வார்த்தைக்கு எடிமாலஜி என்ன என்று தெரியவில்லை:)). இங்கும் அமெரிக்காவில் இருந்து தூதரகம் மூலமாக ஒரு பேஸ் பால் செட் வந்தது.  அதை ஆடும் அதிர்ஷ்டசாலிகளில் ஒருவனாக (ஏனோ?) என்னை மாஸ்டர் தேர்வு செய்தார்.  முதல் முதலாக ஒரு தடியனான பையனை பாட் பிடித்துக் கொண்டு நிற்கச் சொல்லி, இன்னொரு தடியனை பந்து வீசச் சொன்னார். பந்து பறந்து வர, பாட்மேன் தன் பலம் கொண்ட மட்டும் அதை கண்ட மேனிக்கு அடிக்க அது பறந்து சென்று டிரில் மாஸ்டர் வயிற்றில் பலமாகத் தாக்கியது.  'அய்யோ' என்றலறி உட்கார்ந்தவர் நினைவு திரும்பியதும் சொன்ன ஆணை: “அந்த கிட்டை எடுத்து ரூமில் வைத்துப் பூட்டு.  இனிமே ஒரு பயலும் பேஸ் பால் ஆடறேன்னு வந்தால் தெரியும் சேதி. தவறிப்போய் மண்டையில் அடிச்சிருந்தா செத்துத் தொலைஞ்சிருப்பேனேடா பாவிகளா“ என்று எங்களிடம் பதறினார்.  நியாயம்தானே என்ற பாணியில் நான் மட்டும் முகத்தை வைத்து இருந்ததைப் பாராட்டி என் கன்னத்தில் செல்லமாகத் தட்டிவிட்டு, 'கிளாஸ் டிஸ் மிஸ்' என்று வரம் அருளினார்.
                
             

வேலைக்குப் போன இரண்டாவது வருடம் அவ்வளவாக ஆபத்து இல்லாத டேபிள் டென்னிஸில் சேர்ந்தேன்.  நான் பந்துகளை உடைத்துத் தள்ளிய வேகத்தைப் பார்த்து விட்டு என்னை நைஸாக ஓரம் கட்டிவிட்டார்கள்.  ஷட்டில் காக் பந்துகளுக்கு ஏற்பட்ட அற்ப ஆயுள் காரணமாக அங்கும் என்னை ஒதுக்கித் தள்ளினார்கள்.

அப்புறம்தான் சீட்டு, கேரம் போர்டு என்று கவனம் திரும்பியது.  கேரம் போர்டு போட்டிகளில் என் பார்ட்னர் கில்லாடி.  அவர் சாமர்த்தியத்தில் செமி ஃபைனல் வரை வந்தோம்.  எதிரிகள் எனக்குக் கன்னடம் தெரியாது என்று எண்ணி கமெண்ட் அடிக்க, எனக்குக் கன்னடம் தெரியும் என்பதை அவர்களுக்கு உணர்த்தி அந்த அதிர்ச்சியில் ஜெயித்து ஒரு சின்ன இரும்புக் கப் வாங்கியது தான் என் முதல் சாதனை.

கடைசியாக மிஞ்சினது சீட்டுதான்.  அதில் ஒரு வெறியுடன் தேர்ச்சியைத் தேடி ஓரளவு வெற்றியும் பெற்றேன்.  அங்கும் பொன்னுசாமி மேசன் என்று ஒரு பிசாசு வந்து குருட்டு அதிர்ஷ்டத்தில் ஆடி என் வெற்றி வாய்ப்புகளுக்கு சிரார்த்தம் செய்து விட்டது!!

எனவேதான் நண்பர்களே நான் விளையாட்டுகளில் மெஜாரிட்டியுடன் சேர்ந்து கொண்டு ஆடியன்ஸ் அல்லது ஸ்பெக்டேட்டர் (இரண்டுக்கும் என்ன வித்தியாசம்?) அந்தஸ்தில் பார்க்கிறேன்.  
                            

4.9.10

ஆசிரியர்கள் பலவிதம்!

ஆசிரியர் தினம் என்றால் நல்லது, பொல்லாதது இரண்டையும் எண்ணிப் பார்ப்பதிலும், எழுதுவதிலும் தவறில்லையே? (!)   
அந்தக் காலத்து ஆசிரியப் பிரான்களில் இந்தி வில்லன் நடிகர் பிரான் மாதிரி சிலரும் உண்டு.  நூறு தோப்புக் கரணம்,  மணிக்கட்டில் ஸ்கேலால் அடி, அசாதாரணமான பலம் கொண்ட குட்டு, அறை இப்படி சித்திரவதை  ஸ்பெஷலிஸ்டுகள் பலப் பலர்.  அதில் ஒரு சிலர் சொல்லிக் கொடுப்பதில் வல்லவர்களாக இருந்து தம் கொடுமைக்கு காம்பென்செட் செய்தனர்.  மற்றும் சிலர் கொடுமையே மட்டும் அடையாளமாக விளங்கி பேர் தெரியாமல் மறக்கப் பட்டனர்.

வைரமணி,  தங்கக் கிரிடம் என்று போற்றத் தக்க சில ஆசிரியர்களையும் நான் பெறும் பேறு பெற்றிருந்தேன். 











 மாணவர் திறனைப் பாராட்டி ஒரு சாக்கட்டி பரிசு வழங்கி கௌரவிப்பார், திரு ரங்கசாமி நாட்டார்.  (அந்தக் காலத்தில் ஜாதி பெயர்கள் தவறாகக் கருதப் படவில்லை. மாறாக ராவ் ஸார்,  முதலியார் ஸார் என்று அடையாளம் சாதாரணமாக சொல்லப்படும். )  மன நலம் குன்றிய என் உறவினருக்கு வெகு சிரத்தையாக மருந்து சிபாரிசு செய்து, வீட்டில் மிச்சம் இருந்த மருந்து பாட்டிலையும் கொடுத்த மகான் இவர். யாரையும் திட்டுவதோ அடிப்பதோ கிடையவே கிடையாது. அப்பா கூட கண்டிப்பாக இருப்பார், ஒரு மாமா போல இதமாக சரி செய்ய முயலும் நல்ல மனிதர்.  மாணவர்களும் அவரை கடவுளுக்கு சமமாக வைத்துப் போற்றினர்.
  
திரு குருசாமி ஐயர் எனக்கு ஏழாம் வகுப்பு கிளாஸ் டீச்சர்.  ராமகிருஷ்ண பரம ஹம்சரின் பரம பக்தர். குழந்தைகள் இல்லாதவர். சாப்பிடாமல் வகுப்புக்குச சென்று மயங்கி விழுந்த மாணவனுக்கு தம் சொந்த சொலவில் இட்டிலி வாங்கி ஊட்டி விட்டவர். பாடம் சொல்லிக் கொடுப்பதில் மகா சமர்த்தர்.  மழை மேகம் கவிந்த ஒரு நாளில் " நீங்கள் வீட்டுக்குப் போங்கள் அதுவரை மழை வராது " என்று சொல்லி அசலாக மழை வராமல் எங்களை பிரமிக்க வைத்த நல்லவர். 

திரு சங்கர ஐயர் தமிழ் ஆசான். தினசரி சிறு இலக்கியச் சுவை சொற் பொழிவு பிரார்த்தனைக்குப் பின் நிகழ்த்துவார். அரிய பெரிய விஷயங்களை அறிய நான் ஆவல் கொள்ள காரணகர்த்தர்.  

திரு மீனாட்சி சுந்தரம் பிள்ளை அந்த மகா வித்துவான் போலவே தமிழ் அறிஞர்.  ஆசு கவி வகையைச் சேர்ந்தவர். நானும் கவிதை (?!!) எழுத ஊக்கம் கொடுத்த உதாரண புருஷர்.  தமிழ்ப் பாடத்தை மிகவும் சுவைபட சொல்லித்தரும் வித்தகர்.

சௌந்தரராஜ ஐயங்கார், சம்பூரணம் ஐயர் என இரு ஆசிரியர்கள் ஆங்கிலம், கணக்கு சொல்லிக் கொடுத்தவர்கள். மாணவர்களை உண்மையிலேயே தம் பிள்ளைகளைப் போல நடத்தியவர்கள்.  மனப் பாடம் எளிதில் செய்ய சாதாரணமான சம்மரி,  புத்திசாலி மாணவர்கள் எழுத ஸ்டைல் சம்மரி என்று இரண்டு விதமாக சொல்லிக் கொடுத்தவர்  திரு சௌந்தரராஜ ஐயங்கார்.  கணக்கு ஆசிரியர் சம்பூரணம் ஐயர் என் பதினோராம் வகுப்பு கணக்கு மார்க்கை கண்டபின் எனக்கு முன்பே சரியாக கவனம் எடுத்து சொல்லிக் கொடுக்க வில்லையே, நூறு மார்க் வந்திருக்குமே என்று வருந்தி என் வியப்பையும், மதிப்பையும பெற்றார்.

திரு EVS என்று அறியப் பட்ட சுப்ரமணிய ஐயர் ரசிகர், அறிஞர், நேயமிக்கவர்.  ஏழை மாணவர்களின் பள்ளிக் கட்டணத்தை தாமே கட்டிவிடுவார்.  திருப்பிக் கொடுக்க வசதி வந்து, இருந்து, கொடுத்தால் மட்டுமே வாங்கிக் கொள்வார். மனித தெய்வம் என்று போற்ற வேண்டிய இயல்புகள் அனைத்தும் ஒருங்கே அமைந்தவர்.  அவர் ஆசியால் மட்டுமே தாம் நன்கு முன்னுக்கு வந்ததாக அவருடைய மாணவர் பலரும் நம்புவர்.  'மாலி புல்லாங்குழல் கேள், நன்றாக இருக்கும்' என்பதுவரை மாணவர்களுக்கு பல நல்ல விஷயங்களைச் சொல்லும் பண்பாளர்.
  
ஆசிரியர் தினம் என்றவுடன் என் நினைவில் வந்தவர்கள் இவர்கள்தான். 

2.9.10

ஆசிரியர்கள் தினம்


செப்டம்பர் ஐந்தாம் தேதி, ஆசிரியர்கள் தினம். 

வாசகர்கள் யாவரும், அவர்களுடைய ஆரம்பப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி, கல்லூரி ஆசிரியர்களில், அவர்களைக் கவர்ந்தவர்களைப் பற்றியும், அவர்களிடம் தாங்கள் கண்ட சிறப்பு அம்சங்களையும், கருத்துரையாகப் பதியுங்கள்.

மிகவும் நீண்ட பதிவாக இருந்தால், அதை 
engalblog@gmail.com  
மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். 

இதை நம் கல்விக் கண்களைத் திறந்து வைத்த ஆசிரியப் பெருமக்களுக்கு நம்முடைய மதிப்பையும், மரியாதையையும் தெரியப்படுத்த ஓர் அரிய வாய்ப்பாக எடுத்துக் கொண்டு எங்கள் ப்ளாக் மூலம் நம் ஆசிரியர்களின் அருமை, பெருமைகளை வலை உலகில் உலாவ விடுவோம். 
      

31.8.10

வசனத்தைச் சொன்னா...(திரைப் புதிர்)


பொழுது போக ஒரு ரிலாக்ஸ் பதிவு..!

சில புகழ் பெற்ற வசனங்களைச் சொன்னால் படம் பெயர் தெரிந்து விடும்.... உதாரணமாக "மாமா.. காஞ்சிப் போன பூமியெல்லாம் வத்தாத நதியைப் பார்த்து ஆறுதலடையும்..." என்ற வசனத்தைச் சொன்னால் உடனே படம் பெயர் சொல்லி விட முடியும்... அது போல கீழே உள்ள வசனங்களை வைத்து என்ன படம் என்று கண்டு பிடிக்க முடிகிறதா என்று பாருங்கள்...

1) "மாயா...உனக்குள்ள இருக்கற அதே மிருகம்தான் எனக்குள்ளேயும் தூங்கிகிட்டு இருக்கு...அதைத் தட்டி எழுப்பிடாதே..."
"உனக்குள்ள இப்படி ஒரு கிராமத்தான் இருக்கறது தெரியாமப் போச்சு சக்தி..."

2) "கஷ்டப் படாம எதுவும் கிடைக்காது... கஷ்டப் படாம கிடைக்கற எதுவும் நிலைக்கவும் நிலைக்காது..."

3) "வாழ்க்கை ஒரு வட்டம்டா... இங்க ஜெயிக்கறவன் தோப்பான்..தோற்கறவன் ஜெயிப்பான்..."

4) "கெட்ட நேரம் வந்தால் ஒட்டகத்து மேல ஏறி நின்னாலும் நாய் கடிக்காம விடாது"

5) "லதா...விஸ்கியைத்தானே குடிக்கக் கூடாதுன்னு சொன்னே, விஷத்தை இல்லையே?..."

6) "தம்பி....தம்பி....என் பொண்ணு உங்க படத்துல நடிக்கிறதுக்கு எவ்வளவு ஆயிரம் பணம் தருவீங்க... நான் கார் வாங்கணும், பங்களா வாங்கணும்...எஸ்டேட் வாங்கணும்..."
"யோவ் யோவ் யோவ்!...ஏமாந்தா எங்கப்பனையே வாங்கிடுவே போலிருக்கு...இது முதல் படம்,  கொடுக்கறதை வாங்கிக்கோ..இந்தா நூத்தி ஒரு ரூபாய் அட்வான்ஸ்.."

7) "வாழறத்துக்காக சாகற அளவு ரிஸ்க் எடுக்கத் தயார்.."

8) "சாகற நாள் தெரிஞ்சிட்டா வாழற நாள் நரகமாயிடும்.."

9) "பழமொழி சொன்னா அனுபவிக்கணும்...ஆராயக் கூடாது.."

10) "நான் ஒரு தடவை சொன்னா, ஐநூத்து ஒரு தடவை சொன்ன மாதிரி .... " (வசனம் சரிதான். நூறு இல்லை. .... )
  
(வாசகர்களே! நீங்களும் உங்களைக் கவர்ந்த  வசனங்களையோ / குத்து வசனங்களையோ (Punch dialog) பின்னூட்டத்தில் பதியலாம்.)