13.10.10

காமினி சி(வா)த்த மாத்தி யோசி! (சவால் சிறுகதை)

எல்லாம் நினைத்தபடி, திட்ட மிட்டபடி நடந்தது.  டாக்டரின் ஒத்துழைப்புக்கு நன்றி சொன்னாள் காமினி.  நர்ஸ் ஜூனியர் டாக்டர் எல்லாரும் சாட்சிக்கு இருக்கிறார்கள். " பேஷண்ட் ஆபரேஷனுக்கு முன்பாக பயத்தில் தப்பி ஓடி விட்டார்"  என்று வலுவான சாட்சிகளை தயார் செய்தாகிவிட்டது அவர்களுக்குத் தெரியாமலே.  இனி டாக்டர் வெளியேறி அறை காலியானதும் தான் வெளியேறி காரியத்தை கவனிக்க வேண்டியதுதான்.  காமினிக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை.  

டாக்டர் அகன்றதும் காமினி எழுந்து தன் முகத்தில் இருந்த மாஸ்கை அக்ற்றிவிட்டு, வயர்களையெல்லாம் பிடுங்கி விட்டு அருகிலிருந்த கண்ணாடி ஜன்னலைத் திறந்து வெளியே குதித்தாள்.      

       

சிவாவுக்கு செல் போனில் ஓர் அழைப்பு.  "மறக்காமல் ரெண்டு துப்பாக்கி எடுத்துக் கொண்டு வந்து விடு" என்று நினைவூட்டினாள்.  சொன்னபடி கேட்கும் பெருமாள் என்றால் சிவாதான்.  சொன்ன வண்ணம் செய்த பெருமாளுக்குப் போட்டி.  காமினிக்கு சந்தோஷத்தில் முகம் மலர்ந்தது.

பிறகு எல்லாம் பிளான்படி வேகமாக நடந்தது.  


பரந்தாமன் நல்ல ஆள்தான்.  என்னதான் நல்லவர் என்றாலும் வருமான வரி ஏய்க்காதார் யார்?  அவரும் அந்தத் திருக் கூட்டத்தில் ஒரு தொண்டர்.  தானம் தர்மம் எல்லாம் செய்வதற்கு மனம் தயங்கவில்லை என்றாலும் இந்த வரி கட்டுவதில் ஏமாற்றாமல் இருக்க மனம் வருவதில்லை.  அங்கும் இங்கும் லஞ்சம் கொடுக்க கள்ளப்  பணம்  இல்லாமல்  சரிப்படவில்லை.  பெரிய தலைகள் எல்லாம் வீட்டுக்கு அஸ்திவாரமாக ரகசிய அறைகள் கட்டி வைத்து ஆயிரம் ரூபாய் நோட்டுக்களாக அடுக்கி வைக்கிறார்களாம்.  பரந்தாமன் இன்னும் அந்த லெவலுக்கு உயரவில்லை.  அதனால்தான் பணத்தை வைரமாக மாற்றி ஒளித்து வைக்க முடிவு செய்து மும்பையிலிருந்து   இரண்டு கோடிக்கு ஆறே ஆறு வைரம் வாங்கி வந்தார்.

அந்த ஐந்து நட்சத்திர ஓட்டலில் முன்பே பதிவு செய்து, பின் காலி செய்து காலியாகவே வைத்திருக்கப பட்ட அறையில் பூசாடியில் தண்ணீருக்கு நடுவே பாலிதீன் பையில் அண்டர் வாட்டர் ஸ்விம் செய்துகொண்டிருந்தது அந்தப் பொதிவு. திட்டமிட்டபடி அதை எடுத்து வருவதற்காக  சிவாவை சரியான வேஷத்தில் வெளியில் பாதுகாப்பாக நிறுத்தி விட்டு உள்ளே நுழைந்தாள் காமினி.  கையில் துடைப்பமும் பணியாளியின் உடையும் அவளுக்கு கொஞ்சம் கூடப் பொருத்தமாக இல்லைதான். என்ன செய்வது! சிவாவுக்கு ஓட்டல் செக்யுரிட்டி  யூனிபாரம் நன்றாகப் பொருந்தியிருந்தது!!   

    

காமினி பொட்டலத்துடன் வெளியே வரும்போது அடுத்த அறையிலிருந்து  இரண்டு நல்லுடையணிந்த முரடர்கள் வெளிப்பட்டார்கள்.  அவர்கள் காமினியை நெருங்கி என்ன ஏது என்று கேட்பதற்கு முன்னால் கைத்துப்பாக்கியுடன் பாய்ந்து வந்தான் சிவா.   

     

"ஏய், யார் நீ? இங்கே என்ன செய்யறே?  இந்த அறையைத்தான் காலையிலேயே கிளீன் செய்தாகிவிட்டதே?  இங்கே உனக்கு என்ன வேலை?  எங்கே உன் அடையாள கார்டு?"  பட பட வென்று பொரிந்த படி வந்த சிவா " கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ.  இந்தப் பசங்க யாருன்னே தெரியலை. " என்று கிசு கிசுத்துவிட்டு " சார் நீங்க கொஞ்சம் உள்ளே போங்க.. ஓட்டல்லே டெரரிஸ்ட் அட்டாக் இருக்குன்னு தகவல் வந்திருக்கு " என்றதும் இரண்டு தடியன்களும் மும்பை தாக்குதல் நினைவுக்கு வர தப தபவென்று உள்ளே ஓடினார்கள்.    

   

"ஸாரி.. எனக்கு வேற வழி தெரியலை" என்று காமினியின் நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை வைத்தான் சிவா.


செல்வாக்குள்ள அரசியல்வாதியின் கையாட்கள் கண்டபடி வேட்டையாடுவதாக பலத்த வதந்திகளுக்கு நடுவே வைரம் வந்தடைய வேண்டும்.  அதற்குதான் இந்த நாடகம் எல்லாம்.

ரூமுக்குள் பாய்ந்து கதவை தாளிட்டுக் கொண்ட குண்டர் இருவரும் பாத்ரூமுக்குள் பதுங்கிக் கொண்டிருக்க வேண்டும்.  சந்தடியே இல்லை.  போலீஸ் படை வீரர்களாக இருந்தாலும் செல்வாக்குள்ள அரசியல் புள்ளிக்கு அடியாளாக பணி புரிய வேண்டிய நிர்ப்பந்தம்.  உடுப்பு போடாத சமயத்தில் துணிச்சல் சற்றுக் குறைவாகத் தான் இருக்கும் இல்லையா!  

 சிவாவும் காமினியும் பரந்தாமனை சந்தித்து பாக்கெட்டைக் கொடுத்து கமிஷனைப் பெற்றுக் கொண்டனர்.  


"காமினி... வெல்டன்.. எப்படியோ போலீஸ் கண்ல மண்ணைத் தூவிட்டு இந்த டைமண்டைக் கொண்டு வந்துட்டியே" என்று பாராட்டினார் பரந்தாமன். 


"சார் போலீஸ் வேறு, இந்த மாதிரி கைக்கூலிகள் வேறு.  இதுங்களுக்கு வேறே பேர் வச்சுக் கூப்பிடறதுதான் சரி." என்றாள் காமினி.    


 அதன் பிறகு எல்லாரும் பார்க்கும்படியாக அதே ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆனாள் காமினி.  


துப்புத் துலக்கிக் கொண்டு வந்த இரண்டு அதிகாரிகள், ஆசுபத்திரியில் வந்து விசாரிக்கும் போது அவர்களுக்கு பதில் தயாராக இருந்தது. 


" சார் அந்தப் பெண் வயித்துவலி என்று பொய் சொல்லி அட்மிட் ஆனாள்.  பிறகு சோதனை செய்து முடிவெடுக்கப் போகும் தருணத்தில் தப்பி ஓடி விட்டாள் " என்று சொல்லி டாக்டர் ஒத்துழைத்தார்.  

             

நீங்களே சொல்லுங்கள் டாக்டர் நல்லவரா?  பரந்தாமன் கெட்டவரா? காமினி யோக்கியமான பெண்ணா இல்லையா?  

                       

9.10.10

பத்து செய்திகள், பத்து கமெண்டுகள் !



# டி.ஜி.பி.,யாக லத்திகாசரண் நியமனத்தை ரத்து செய்து சென்னை ஐகோர்ட் 'அதிரடி' உத்தரவு. 

** லத்திகாவுக்கே 'லத்தி' சார்ஜா! 

# ஆத்தூர் அருகே நரபலி முயற்சி ? 
** யார் அந்த நரபலி? ஆத்தூர் அருகே என்ன முயற்சி செய்தார் அவர்? 

# இந்தியா - ஆஸி., 2வது டெஸ்ட் : ஆஸ்திரேலியா பேட்டிங், அதிரடி ஆட்டம்.
** இப்பிடித்தான் முதல் டெஸ்டும் ஆரம்பித்தது. அப்புறம் என்ன ஆச்சு? 

# 20 கி.மீ., நடைப்போட்டி : இந்திய வீரருக்கு வெண்கலம். 
** எவ்வளவோ தடைப் போட்டிகளில் அன்றாடம் ஜெயித்து வரும் இந்தியருக்கு, நடைப்போட்டி சர்வ சாதாரணம்! 

# மின்சார ரயில் தப்பியது.  
** பவர் கட்டா? 

# பாகிஸ்தானுக்கு அச்சுறுத்தல் இந்தியா அல்ல :முஷாரப். 
** அது சரி. இந்தியாவுக்கு அச்சுறுத்தல் எது - அதையும் சொல்லிடுங்க சார்! 

# அடுத்த காமன்வெல்த் போட்டி: பெண்களுக்கான மல்யுத்தம் நீக்கம்: இந்தியாவுக்கு எதிராக சதி!  
** இன்றளவில் இந்தியா இன்னும் இருபது தங்கப் பதக்கங்களை பெற்றுள்ள மற்ற போட்டிகளுக்கும் ஏதாவது வேட்டு வைப்பார்களா? 

# நிலவில் காய்கறிகள் விளைவிப்பது சாத்தியமா?   
** விளைவிப்பது சாத்தியமாக இருக்கலாம்; ஆனால் விலை(க்கு) விப்பது (விற்பது) சாத்தியமா?         
    
  
# இந்திய ஜனநாயக கட்சி தமிழகத்தில் தனித்து போட்டி. 
** எங்களைக் கேட்டால், தனித்துப் போட்டியிடுவோம் என்று அறிவிக்கும் கட்சிகள் எல்லாம் கூட்டணி அமைத்து, போட்டியிடலாம். 


# அ.தி.மு.க., தி.மு.க.,வுக்கு இணையாக கூட்டம்? விஷப்பரீட்சையில் காங்.,
** இதுல என்னங்க விஷப்பரிட்சை? 'பிரியாணிப் பொட்டலங்கள் தயார் செய்தால் போதாதா?' என்கிறார் 'விஷ'யமறிந்த தொண்டர் ஒருவர்!   

8.10.10

வருகிறது ஒரு சிறப்பு நாள், நேரம்


இன்று அக்டோபர் எட்டு.
இன்னும் இரண்டு நாட்களில் வருகிறது ஒரு சிறப்பு.
இந்த நூற்றாண்டின் 
பத்தாம் வருடம், 
பத்தாம் மாதம்,
பத்தாம் நாள், 
அன்றைக்கு, காலை பத்துமணி பத்து நிமிடங்களுக்கு, 


நீங்கள் எங்கே இருக்கின்றீர்கள், என்ன செய்துகொண்டு இருக்கின்றீர்கள் 
என்பதை, engalblog@gmail.com முகவரிக்கு மெயிலுங்கள். 

முடிந்தால், செல் காமிரா / டிஜிட்டல் காமிரா கொண்டு பத்து மணி பத்து நிமிடம் ஆகும்பொழுது உங்கள் கண்ணுக்குத் தெரிந்த நல்ல காட்சியை படம் எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். சுவையான விவரங்களையும், படங்களையும் 'இது நம்ம ஏரியா வலையில் வெளியிடுவோம். 

பங்கு பெறுகின்ற வாசகர்கள் எல்லோருக்கும் எங்கள் அட்வான்ஸ் வாழ்த்துகள்! 

எடக்கு மடக்கு கேள்விகள், சந்தேகங்கள் இவற்றை, இந்தப் பதிவிற்கு பின்னூட்டமாக பதியுங்கள். 

நன்றி. 
            

7.10.10

புதிர்ப் போட்டி !

நமது SPS பட்டம் பெற்ற, எதிர்காலத்தில் பெறப்போகும் வாசகர்களுக்கு ஒரு புதிர்ப் போட்டி. 


இங்கே கிளிக்குக: 

யார் இவர்? என்ன புகழ்?  



4.10.10

பொடி விஷயம்...

அந்தக் காலத்தில் இருந்த எத்தனையோ விஷயங்கள் இந்தக் காலத்தில் கண்ணை விட்டு மறைந்து விட்டன. கண்ணை விட்டு மறைந்தாலும் கருத்தை விட்டு மறையாது. சிட்டுக் குருவி, பருந்து என்று பல உண்டு! அந்த வரிசையில்...

   
சமீபத்தில் தஞ்சை பெரிய கோவிலின் ஆயிரமாவது ஆண்டு விழா கொண்டாடப் பட்டது. அதைப் பற்றி படிக்கும்போது பல வருடங்களுக்கு முன்னால் தஞ்சையில் இருந்த போது கொண்டாடப் பட்ட கும்பாபிஷேகம் என்று நினைக்கிறேன்... நினைவுகள் வந்து போயின. வேஷ்டி கட்டத் தொடங்கிய புதிது. அரசுக் குடியிருப்பில் இருந்தோம். மேம்பாலம் வழியாக இறங்கி இடது பக்கமாக போய் வலது பக்கம் போனால் கோர்ட்) புதாற்றை ஒட்டி இடது பக்கம் திரும்பினால் பெரிய கோவில். தாண்டிச் சென்று இடதுபுறமாகப் போனால் சிவகங்கைப் பூங்கா. ராஜராஜன் சிலையை ஒட்டி வலது புறம் திரும்பினால் மத்திய நூலகம், ராஜா மிராசுதார் ஆஸ்பத்திரி வழியாக பஸ் ஸ்டேண்ட் அடையலாம். அந்த கும்பாபிஷேகம் சமயம் இந்தப் பாதையில் தான் பயங்கரக் கூட்டத்தில் மாட்டி, வேஷ்டி எப்போது எங்கே விழுந்தது என்று தெரியாமல் அலமலந்து ஓடி, திலகர் திடல் குட்டிச் சுவர் ஏறி, நரகல் குவியலில் குதித்து ஒரு ரிக்க்ஷா பிடித்து அப்பா, அண்ணன் தயவில் மானத்தை மறைத்து, பத்திரமாக வீடு வந்து சேர்ந்த நினைவுகள் எல்லாம் வந்தன...!     
   
ஆனால், இந்தப் பதிவு அதைப் பற்றி அல்ல...!

அப்போதெல்லாம் இந்த மாதிரி விழாக்காலங்களிலும், இன்னும் ஏதேதோ கண்காட்சி போன்ற கூட்டம் கூடும் நாட்களிலும் மக்கள் கவனத்தைக் கவர்வது பல விளம்பரங்களுக்கு நடுவில் காணப் படும் (மூக்குப்) பொடி விளம்பரம். என் வி எஸ் என்று நினைக்கிறேன்,(டி ஏ எஸ்? ) வேஷ்டியை தார்ப் பாய்ச்சிக் கட்டியது போன்ற உருவகத்துடன் ஒரு மனிதன் உட்கார்ந்து பொடி இடிப்பது போன்ற விளம்பரம். பின்னர் விளக்குகள் போடப்பட்டு, மின் இணைப்பு தரப்பட்டு, கைகள் உரலில் இடிப்பது போல மேலும் கீழும் சென்று வரும் . இது அந்நாளில் புதுமை. அந்நாளில் குடைராட்டினத்துக்கு இணையாக இதைப் பார்ப்பதற்கும் கூட்டம் சேரும்.

இப்போது முதல் பாராவை மறுபடி படிக்கவும்.

நாகப்பட்டினத்திலிருந்து என் தாத்தா தஞ்சை வருவார். எதைப் பற்றி வேண்டுமானாலும் பேசுவார். செம்மங்குடி பற்றியும் மதுரை மணி கச்சேரி சென்று வந்த அனுபவங்கள் பற்றியும் பேசுவார். சிறுவர்களிடம் அவர்களுக்கு இணையாகப் பேச்சு கொடுப்பார். ஒன்றும் தெரியாதது போல கேள்விகள் கேட்டு எங்கள் அறிவைச் சோதிப்பார். நான் அதில் ஒரு போதும் தேறியதில்லை! எங்களுடன் செஸ் விளையாடுவார். ஜோதிடம் பற்றி பேசுவார். மொத்தத்தில் சகலகலாவல்லவர். எதைப் பற்றி வேண்டுமானாலும், யாரிடம், எந்த வயதினரிடம் வேண்டுமானாலும் பேசுவார்.  அரசியலை விவாதிப்பார். பேச்சில் பொறி பறக்கும். என் அப்பாவுக்கும் அவருக்கும் குடுமி பிடி சண்டைக்கு இணையாக தடித்த பேச்சு வார்த்தைகள் பறக்கும். மாமனார் Vs மாப்பிள்ளை விவாதங்களை நாங்கள் பயத்துடன் பார்த்துக் கொண்டிருப்போம். சண்டை கைகலப்பில் முடியுமோ, தாத்தா ஊருக்குக் கிளம்பி விடுவாரோ என்று பயமாக இருக்கும்.   

அவர் ஊர் சென்று விட்டால் சுவையான பொழுதுபோக்குப் பேச்சுகள் இல்லாமல் போய் விடும் என்பது மட்டுமில்லை, தாத்தா சுவைப் பிரியரும் கூட. சாப்பாட்டில் பக்குவம் சொல்வது, புதுப் புது காம்பினேஷன்களில் எப்படி சாப்பிட வேண்டும் என்று சொல்வது என்று கலக்குவதோடு அவர் ஒரு சிறிய அலுமினியப் பெட்டி வைத்திருப்பார். அதிலிருந்து காசு எடுத்து வெள்ளை அப்பம், பஜ்ஜி, காராச் சேவு மற்றும் இன்ன பிற நொறுக்குத் தீனிகளுக்கு மாலை நேரங்களில் வழி செய்வார். 'உன் கூட யார் பேசுவா' போன்ற இறுதிக் கட்ட வசனங்களுடன் கோபமாகப் பிரியும் மாமனாரும், மருமகனும் இரவு உணவின்போதோ, மறுநாளோ மிகச் சாதாரணமாகப் பேசிக் கொள்வதைக் கேட்கும் போது ஆச்சர்யமும் சந்தோஷமும் ஒருங்கே உண்டாகும். தாத்தா பற்றி தனிப் பதிவே போடலாம்!  ஆனால், பதிவு அவரைப்  பற்றியும் அல்ல...!

அந்த தாத்தா தன்னுடைய வேட்டி மடிப்பில் ஒரு வாழை நார்ப் பொட்டலம் வைத்திருப்பார். பாடல் ராகம் இழுத்துக் கொண்டே அல்லது சுவையான விவாதங்களுக்கு நடுவே, அல்லது படித்துக் கொண்டிருக்கும் 'ஹிண்டு'வை லேசாக மடித்து இடுக்கிக் கொண்டு... மிக ஜாக்கிரதையாக அந்தப் பொட்டலத்தை உள்ளங்கையில் வைத்து லேசாக ரெண்டு தட்டுத் தட்டி, ஜாக்கிரதையாகப் பிரிப்பார். மெல்லத் திறந்து கட்டை விரலாலும், நடு விரலாலும் ஒரு சிமிட்டா அதிலிருந்து எடுப்பார். மூக்கின் இரு துளைகளிலும் சமமாகப் பங்கிட்டு கண்ணை மூடி 'சர்.ர்..ர், சர்..ர்...ர்..' என இழுப்பார். சிலபல தும்மல்கள். இதற்காகவே இடுப்பில் நிரந்தரமாகச் சொருகியிருக்கும், இப்படி துடைத்து துடைத்தே நிறம் மாறி பழுப்பாகிப் போன கைக்குட்டையை வைத்து துடைத்துக் கொள்வார். சில சமயங்களில் அது நார்ப் பொட்டலமாக இல்லாமல் நீள் உருளையாக தகர டப்பி ஒன்று வைத்திருப்பார். அதிலிருந்து எடுத்துப் போடுவார். அவருக்கு அவர் பெயர் போட்ட எவர்சில்வர் டப்பா ஒன்றை அவருடைய பையன் ஒருவர் செய்து கொடுத்திருந்தார் (தந்தைக்கு மகன் ஆற்றிய உதவி - பெயர் சொல்லும் டப்பா!) இன்னொரு பொடிப் பிரியர் அருகிலிருந்தால் அவருக்கு ஒரு சிமிட்டா கிடைக்கும். 'மூக்கு அடைப்பு, ஜலதோஷம்லாம் கிட்ட அண்டாதுடா' என்பார்.      
           
மூக்குப் பொடி எதனால் செய்யப் பட்டது என்று எங்களுக்குள் விவாதம் நடக்கும்.. 'காபிப் பொடியில் காரம் கலப்பார்கள்' என்பான் ஒருவன். 'காய்ந்த புகையிலைப் பொடிடா' என்பான் இன்னொருவன்...

அந்த பொடி மட்டையை இப்போதெல்லாம் காணோம்! இப்போதெல்லாம் யார் கையிலும் பொடி மட்டை வைத்து அல்லது பொடி போட்டுக் கூட நான் பார்க்க நேர்வதில்லை. எங்கேயும் பொடி விளம்பரங்களையும் காணக் கிடைப்பதில்லை. முன்பெல்லாம் தெருவுக்குத் தெரு கடைகளில் பொடி விற்பார்கள். தாத்தா இருபத்தைந்து பைசாவுக்கோ எட்டணாவுக்கோ பொடி வாங்கி வரச் சொல்வார். கடைக் காரர் இதற்கென்றே ஸ்பெஷலாக வடிவமைக்கப் பட்ட ஸ்பூன் ஒன்று வைத்திருப்பார். நீளக் குச்சியில் குழிந்த அடிப்பாகம் கொண்ட 'எடுப்பான்'. அதை மூக்குப் பொடி ஜாடிக்குள் விட்டு காசுக்கு தகுந்தாற்போல அளவில் எடுத்து, பதம் அல்லது பாடம் செய்யப் பட்ட நார்ப் பொட்டலத்தில் கட்டித் தருவார்கள். இதற்கென்றே வாழை மட்டைச் சருகு எடுத்து காய வைத்து அடித்து பதப் படுத்தி வைத்திருப்பார்கள். சமீப காலங்களில் எந்தக் கடையிலும் பொடி விற்பனை செய்யும் அரிய காட்சியைக் காண முடியவில்லை. நான் போகும்போது யாரும் வாங்குவதுமில்லை. வழக்கொழிந்து போய் விட்டதோ? என்று எண்ணுகின்ற அளவு என் கண்பட யாரும் பொடி போடுவதும் இல்லை...! நல்ல வேளை - நாடு முன்னேறிவிட்டது, ஒரு புகையிலைப் பழக்கத்தைக் கைவிட்டு. 
        
இன்றைய இளைய சமுதாயம் பொடியை புறக்கணித்து மறந்து விட்டதா?  அல்லது, 'உமிழ்தல், உறிஞ்சுதல், ஊதுதல்' (tobacco chewing and spitting, snuff, smoke) ஆகிய மூன்று கெட்ட பழக்கங்களில் இரண்டை மறந்து ஒன்றில் விழுந்துவிட்டார்களா? மூன்றையும் விட்டுவிட்டால் ஆரோக்கிய வாழ்க்கை வாழலாமே!