14.11.11

இனி ஒரு விதி செய்வோம்...குழந்தைகளுக்காக

குழந்தைகள் தின நல்வாழ்த்துகள் குழந்தைகளே...



உங்களுடன்/உங்களுக்குச் சில வார்த்தைகள்...

உங்களைப் போன்ற சக மாணவர்களை எதிரிகளாக பார்க்காதீர்கள்.

நீங்கள் லீடராய் இருக்கலாம்.உங்களிடம் தோற்றுப் போனவர் உங்கள் எதிரியல்ல சக மாணவர் என்பதை மனதார உணருங்கள்.

அவர்களிடம் நல்லது இருந்தால் பாராட்டுங்கள். நல்லது சொன்னால் எடுத்துக் கொள்ளுங்கள். அல்லது சொன்னால் எடுத்துச் சொல்லிக் கலந்துரையாடிப் புரிய வையுங்கள்.

இணைந்து பணியாற்றுங்கள். நாளை அவர்களும் லீடராகலாம், ஆகவேண்டும், மாற்றம் அவசியம் என்பதற்கு உடன்படுங்கள். கவிழ்த்தல் வேலைகளும், கலைக்கும் வேலைகளும் சென்ற தலைமுறையோடு செல்லட்டும்.

அதிகமாய் ஆசைப் படாமல் உங்களுக்கு தேவையானதை/தகுதியானத்தை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள்.



அறிவோ, பொருளோ உங்களுக்குக் கிடைப்பதை எல்லோரிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

அழிவுக்கு ஆசைப் படாமல் அறிவுக்கு ஆசைப் படுங்கள்.

உங்களுக்கு சாதகமானவற்றுக்கு தப்பாயிருந்தாலும் ஆதரிப்பதையும், பொய் சொல்வதையும் செய்யாதீர்கள்.

உங்களுக்கு எதிரிகள் என்றில்லாமல், எதிர் முகாமில் இருப்பவர்களைப் பற்றி உங்களிடம் சொல்லி ஆதாயம் தேடுவோரை ஊக்குவிக்காதீர்கள். அது உங்களுக்கு நல்லது போலத் தோன்றினாலும் பொது நலனுக்கு உகந்தது அல்ல என்பதை உணருங்கள். இந்த மாதிரி நபர்கள் உங்களைப் பற்றியும் நாளை இதே போல் எங்காவது சொல்லக் கூடும் என்றும் உணருங்கள்.

எத்தகையப் பொருளுக்கு ஆசைப் பட்டும், எந்த மிரட்டலுக்கு அஞ்சியும் நமக்கும் நம்மைச் சேர்ந்தவர்களுக்கும் கேடு விளைவிக்கக் கூடிய எந்தச் செயலிலும் எப்போதும் ஈடுபடாதீர்கள்.

கெடுதல் செய்வதையும், கேடு விளைவிப்போரை ஊக்குவிப்பதும் ராஜதந்திரம், சாணக்கியம் என்று நம்பி ஏமாறாதீர்கள். என் ஊர், என் நாடு என்பதைத் தாண்டி உலகமே நமது என்று எண்ணுங்கள்.

ஆளும் தகுதியும் அளக்கும் தகுதியும் அறிவால் வரட்டும், பொருள் இல்லாததை விட அருள் இல்லார்க்கு எவ்வுலகமும் இல்லை என்பதை உணருங்கள்.



கற்கும் கல்வி மதிப்பெண் பெற மட்டுமல்லாது, மனதில் தங்கி நாளைய இந்தியாவை, உலகை ஆளட்டும்.

அடுத்தவர் அழிவில் அல்ல, வாழ்வில்தான் நம் வாழ்வும் இருக்கிறது. சேர்ந்து வளர்வோம். சேர்ந்து வாழ்வோம்.

வாழ்க வையகம்!

11.11.11

பதினொன்று


இன்றைக்குத் தேதி 11.11.11 நேரம் காலை மணி 11.11. (இந்திய நேரப்படி). 
     
  
இதே மாதிரி ஒரு தேதி, நேரம் அமைய, இன்னும் நூறு வருடங்கள் ஆகும். 


இதையே 0011, 1011, 2011, 3011 என்று ஆயிரக் கணக்கில் ஆண்டுகளைப் பார்த்தால் .... 

11.11.1011 அன்று, இராஜராஜ சோழன் உயிருடன் இருந்து, தென்னகம் முழுவதையும் ஆண்டு கொண்டிருந்தார்.
  
11.11.2011 அன்று, இந்தப் பதிவை நீங்கள் படித்துக் கொண்டிருக்கின்றீர்கள். 
   
   
      
11.11.3011 அன்று உலகம் எப்படி இருக்கும்? யாருக்காவது தெரிந்தால் பின்னூட்டத்தில் எழுதுங்கள்.

லெவன்த் ஹவர் என்று ஆங்கில சொற்றொடர் ஒன்று இருக்கின்றது. எதையும் நேரத்தில் செய்து முடிக்காமல், காலம் தாழ்த்தி, கடைசி நிமிடத்தில் செய்வதை, லெவன்த் ஹவர் ரஷ் என்று கூறுவதுண்டு. எதையும் ப்ளான் பண்ணி செய்யணும் - லெவன்த் ஹவர் பதற்றங்கள் கூடாது!

ஆதிகால மனிதன், தன்னுடைய கைவிரல்களின் எண்ணிக்கை அளவாகிய பத்து வரை மட்டும்தான் மனிதர்கள் சுலபமாக எண்ணத் தெரிந்திருந்தார்கள். பதினொன்றைக் கண்டு பிடித்தவன் அந்தக் கால கணித மேதையாக இருந்திருக்க வேண்டும்.

குழந்தைகள் அறிவாற்றல் சம்பந்தமாக கருத்து கூறுகின்ற உளவியல் நிபுணர்கள், குழந்தைகளுக்கு முதலில் ஒன் டூ த்ரீ சொல்லிக் கொடுக்கும் பொழுது, டென்னோடு  நிறுத்தி விடாதீர்கள். அதற்கு மேலும் சொல்லிக் கொடுங்கள். பதினொன்று, பன்னிரண்டு என்று மேலும் மேலும் சொல்லிக் கொடுங்கள். அப்பொழுதுதான் அவர்களுடைய எண்ணிக்கை அறிவாற்றல் எல்லைக்குள் கட்டுப்படாமல் விரிவடையும் என்று சொல்கிறார்கள். 

நவம்பர் பதினொன்று, 1918 ல் நடந்த முக்கிய நிகழ்வு என்ன தெரியுமா? அன்று காலை பதினொரு மணிக்கு, முதலாம் உலகப் போர் (1914 - 1918) முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டது. 

மேலும் ஒரு முக்கிய தகவல்: எங்கள் ப்ளாக் ரசிகர் மன்ற உறுப்பினர் எண்ணிக்கை, இன்றைக்கு, இப்பொழுது முந்நூற்றுப் பதினொன்று! 
              
மேலும் .... 
      

10.11.11

எட்டெட்டு ப 5:: மாயா, ஓ ஏ மற்றும் பிங்கி.


மாயா தொடர்கிறார்: 
          
வாழ்க்கையில் பெரும் திருப்பங்களை ஏற்படுத்தும் முடிவுகளை, நாம் ஒரு நொடிப்பொழுதில் எடுத்து விடுகின்றோம். நீண்ட ஆலோசனைகளுக்குப் பிறகு எடுக்கப்படும் முடிவுகள் பெரும்பாலும் பெரிய திருப்பங்களை ஏற்படுத்துவதில்லை. அப்படித்தான் ஆயிற்று என் வாழ்க்கையிலும். 
    
அப்பா எங்கள் திருமணத்திற்கு ஒப்புக்கொள்ளவில்லை. ஓ ஏ ஹோட்டல் திட்டம் ஒன்றை ஆய்வு செய்ய, தஞ்சை செல்வதாகவும், ஒரு வாரத்திற்குள் தஞ்சையிலிருந்து, இந்தூர் செல்வதாகவும் கூறினார். நான் அவருடன் இந்தூர் செல்லத் தயாராக இருந்தால், தஞ்சைக்கு அடுத்த வார இறுதியில் சென்று, அவரைச் சந்திக்க வேண்டும் என்றார். என்னிடம், என் அப்பா பெயரில், ஐந்து லட்ச ரூபாய்க்கு செக் ஒன்றைக் கொடுத்து, நான் என் அப்பாவை விட்டு வருவதாக இருந்தால், ஒரு கடிதம் எழுதி வைத்துவிட்டு, இந்தூர் விலாசம், ஃபோன் நம்பர் இவைகளுடன், இந்த காசோலையையும் விட்டு வரவேண்டும். என்று சொன்னார். 
     
அப்பொழுதுதான் நான் ஒரு உடனடி முடிவு எடுத்தேன். வரதட்சணை கேட்டுக் கொடுமைப் படுத்தும் எத்தனையோ ஆண்களுக்கு நடுவில், இந்த மாதிரி ஐந்து லட்ச ரூபாய் கொடுத்துத் திருமணம் செய்து கொள்கின்ற ஒருவர் நிச்சயம் நல்லவராகத் தான் இருப்பார் என்று தைரியமாக, அவருடன், அப்பொழுதே கிளம்பத் தயார் ஆகிவிட்டேன்.ஒரு காகிதத்தில், சுருக்கமாக சில வரிகள் எழுதினேன். 
     
"அன்புள்ள அப்பாவுக்கு, 
இந்தக் கடிதம் உங்கள் கைகளில் கிடைக்கும்பொழுது, நான் அஜோயுடன் தஞ்சைக்குச் சென்று கொண்டிருப்பேன். அங்கிருந்து இந்தூர் சென்றவுடன், அவருடைய தந்தை மற்றும் உறவினர்கள் முன்னிலையில்தான் திருமணம். இந்தூரில் என்னுடைய விலாசமும், ஃபோன் எண்ணும், இந்தக் கடிதத்தில், கடைசியில் உள்ளது. உங்கள் மாப்பிள்ளை, மிகவும் நல்லவராக இருக்கின்றார்.உங்களையும் என்னுடன் இந்தூருக்கு அழைத்து வரவேண்டும் என்று அவர் ஆசைப்பட்டார். நீங்கள் எப்பொழுது வந்தாலும் எங்கள் வீட்டுக் கதவுகள் உங்களுக்காகத் திறந்தே இருக்கும். உங்கள் பெயருக்கு உங்கள் மாப்பிள்ளை அளித்த செக் இதோடு இணைத்துள்ளேன். 
என்றும் அன்புடன்,
மாயா. " 
   
இந்தக் கடிதத்தை ஒரு கவரில் வைத்து, கோவிலுக்கு வந்த பக்கத்து வீட்டுப் பெண்ணிடம் கொடுத்து, அப்பாவிடம் சேர்ப்பிக்கச் சொல்லிவிட்டு, ஓ ஏ யுடன், தஞ்சைக்குக் கிளம்பிவிட்டேன். 
             
எங்கள் வல்லம் வீட்டில் ஃபோன் கிடையாது. ஆனால், எதிரில் இருந்த மளிகைக் கடையில் ஃபோன் இருந்தது. அங்கே ஃபோன் செய்து அப்பாவைக் கூப்பிடச் சொன்னால், கூப்பிடுவார்கள். தஞ்சையிலிருந்தும், இந்தூரிலிருந்தும் - நான் அந்தக் கடைக்கு ஃபோன் செய்த போதெல்லாம், அப்பா என்னுடன் பேச மறுத்துவிட்டார். அப்பா, அவர் பெயருக்குக் கொடுக்கப்பட்ட செக்கை, காஷ் செய்யவில்லை என்று என் கணவர் தன் பாங்க் கணக்கை பார்த்து சொல்லிக் கொண்டிருந்தார்.  நான் எழுதிய கடிதங்களுக்கும் அப்பாவிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை. 
               
என்னுடைய மாமியார் உயிருடன் இல்லை. எங்கள் கல்யாணத்திற்குப் பிறகு, நான், என் கணவர், மாமனார், சொன்ன வேலையைச் செய்ய , வேலைக்காரர்கள் என்று சந்தோஷமாக வாழ்ந்து வந்தோம். இவருக்கு எந்தக் கெட்ட பழக்கமும் கிடையாது. அவருக்குப் பிடித்த நிறம் கருப்பு. அதனால்தானோ என்னவோ தினமும் காலை ஒரு கோக்க கோலா குடிப்பதை வழக்கமாக வைத்திருந்தார். சில நாட்களில், அதில் ஆஸ்பிரின் மாத்திரை போட்டு குடிப்பார்.எங்களுக்குக் குழந்தை இல்லையே என்ற ஒரே குறை மட்டும்தான். அதை சரி செய்யும் வகையில், வீட்டுக்கு அருகிலேயே க்ரஷே (Creche) (குழந்தைகள் காப்பகம் )ஒன்று தொடங்கி, அதில் என்னுடைய முழு நேரத்தையும் செலவிட்டேன். நாள்தோறும் குழந்தைகளைப் பார்க்கையில், அவர்களின் மழலை மொழிகளைக் கேட்கையில், எனக்கு என்று ஒன்று பிறக்கவில்லையே என்ற குறையை மறந்திருந்தேன். 
               
என்னுடைய மாமனார் உயிருடன் இருந்தவரை, மிகவும் சந்தோஷமாக வாழ்ந்து வந்தோம். சந்தோஷ வாழ்க்கை திருமணமான நாளிலிருந்து, எட்டு வருடங்கள்தான் தொடர்ந்தது. என் மாமனார் இறந்த பிறகு, ஓ ஏ வின் போக்கில் மாறுதல் தெரிய ஆரம்பித்தது. இதே நேரத்தில் எங்கள் சந்தோஷ வாழ்க்கையில் குறுக்கிட்டாள் பிங்கி.
    
(தொடரும்) 
       

8.11.11

பாட்டைக் கேளுங்க

       

இந்த ஒலிப் பதிவைக் கேளுங்கள். இது பற்றிய அதிகபட்ச விவரங்கள் பதிபவர்களுக்கு பாயிண்டுகள் உண்டு. 

7.11.11

எட்டெட்டு ப 4:: ஓ ஏ யின் ஹோட்டல் திட்டம்

       

மாயா சொல்லும் கதை தொடர்கிறது: 

நான் பிறந்து வளர்ந்தது எல்லாம், தஞ்சாவூர் அருகே, வல்லம். அகல் குளம் அருகேதான் எங்கள் வீடு. எட்டாம் மாதம், எட்டாம் தேதி பிறந்த எனக்கு, அப்பா Maaya என்று பெயர் வைத்தார். நியூமராலஜி என்று காரணம் கூறினார். என்னுடைய தோழிகள் எல்லோரும் என்னை 'கருப்பி' என்று செல்லமாகக் கூப்பிடுவார்கள். (கே வி வலது கட்டை விரலை அசைத்து, கருப்பியா? என்று நினைத்தார்) ஆமாம் - நான் கருப்பழகிதான். ஆனால், ஆவியுலகம் வந்தவுடன், எப்பொழுது நினைத்தாலும் உருவம், வடிவம், நிறம் எதை வேண்டுமானாலும் இஷ்டம்போல மாற்றிக் கொள்ளலாம். நான் நிறத்தை மட்டும், இன்று, இங்கு வருவதற்கு முன்பு விக்ரமாற்குடு கதாநாயகி நிறத்திற்கு மாற்றிக்கொண்டேன். 

எட்டு வயது வரை நான் கேட்டது எல்லாமே கிடைத்தது. 'பாவம், தாயில்லாக் குழந்தை' என்று எல்லோருமே என்னிடம் பரிவு காட்டினார்கள். 

எட்டிலிருந்து பதினேழு வரை, மிகவும் கண்டிப்பு காட்டி வளர்த்தார், என் அப்பா. பள்ளிக்கூட நாட்களிலேயே ஹிந்தி கற்றுக்கொண்டேன். பிறகு AMC யில் சேர்ந்து படித்தேன். கல்லூரி படிப்பு முடிந்தவுடன், கம்பியூட்டர் கொஞ்சம் தெரிந்துகொண்டேன். அப்பா என்னுடைய ஜாதகம் தயார் செய்ய, குலதெய்வம் கோவில் உள்ள ஊருக்குச் சென்றார். ஜாதகம் கணித்து வந்த அப்பா, அதற்குப் பிறகு உற்சாகம் இழந்து காணப்பட்டார். என்ன காரணம் என்று கேட்கும் பொழுதெல்லாம், 'ஒன்றும் இல்லை அம்மா' என்று சொல்லி பெருமூச்சு விட்டார்.  அப்பா எதையோ என்னிடம் மறைக்கிறார் அல்லது சொல்லவிரும்பவில்லை என்பது தெளிவானது. 

கல்யாணம் பற்றி நானும் ஒன்றும் பேசவில்லை. அப்பாவும் ஒன்றும் பேசவில்லை. அப்பாவின் நண்பர்கள் என்னுடைய திருமணம் பற்றி ஏதாவது விசாரித்தால் கூட அப்பா ஆர்வம் காட்டமாட்டார். 

இந்த நிலையில்தான் நான் ஓ ஏ வை சந்திக்க நேர்ந்தது. அவருடைய முழுப் பெயர், ஒல்லிவாலா அஜாய் என்பது. ஒல்லிவாலா என்பது ஊர் பெயரோ - வீட்டுப் பெயரோ ஏதோ ஒன்று சொன்னார். இந்தூரிலிருந்து, வல்லம் வரையில் வந்து, அகல் குளம் அருகே ஒரு இடத்தை வாங்கி, அங்கே ஹோட்டல் கட்டலாமா என்பதை ஆராய அவர் வந்திருந்தார். 

அவரை நான் சந்தித்ததே ஒரு விசித்திரமான சூழ் நிலையில். ஒரு வெள்ளிக் கிழமை மாலையில், கோவிலுக்குச் செல்வதற்கு முன்பு, அர்ச்சனைப் பொருட்கள் வாங்க கோவிலுக்கு அருகே உள்ள கடைக்குச் சென்றிருந்தேன். இவர் கடைக்காரரிடம் ஆங்கிலத்திலும் இந்தியிலும் கேட்டது எதுவுமே கடைக்காரருக்குப் புரியவில்லை. திரு திருவென விழித்துக் கொண்டிருந்தார். நான் இவரிடம் விவரம் கேட்டு, அதை மொழி பெயர்த்து, கடைக்காரரிடம் சொன்னேன். அவருக்கு கோக கோலா ஒரு முழு கேஸ் வேண்டுமாம். அதாவது, சினிமா தியேட்டர்களில் 'இடைவேளை' நேரத்தில் ஒரு மர / பிளாஸ்டிக் பெட்டியில் வைத்துக் கொண்டு 'சோடா .... கலேர் ...' என்று விற்பார்கள் அல்லவா - அது மாதிரி இருக்கின்ற பெட்டி ஒன்றில் வைத்து பத்து / பன்னிரண்டு பாட்டில்கள் வேண்டுமாம். 

கடைக்காரர் கொடுத்த கோக கோலாவை பெட்டியுடன் வாங்கிக் கொண்டு, கடைக்காரர் கேட்ட பணத்தைக் கொடுத்துவிட்டு, "தாங்க் யூ ..... மிஸ்....?" என்றார். "மாயா" என்றேன். "நைஸ் நேம்" என்றார்.

அடுத்த வெள்ளிக்கிழமை, அதே போன்று கோவிலுக்குப் போகும் முன்பு கடைக்குச் சென்றேன். கடை வாசலில் அவர் நின்றுகொண்டிருந்தார். "என்ன சார்? இன்னும் ஒரு கேசா?" என்று கேட்டேன். "இல்லை மிஸ் மாயா. என்னைப் பார்த்ததுமே கடைக்காரர் ஒரு கேஸ் கோக் எடுத்துக் கொடுத்துவிட்டார். நான் உங்களுக்காகத்தான் காத்துக் கொண்டிருக்கின்றேன்." 
  
"என்ன விஷயம்?" 
  
"நீங்கள் கோவிலுக்குப் போய்விட்டு வரும் பொழுது, அகல் குளம் அருகே வந்து என்னை சந்திக்க முடியுமா?" 
   
மனம் லேசாக குறுகுறுத்தாலும், சரி என்று ஒப்புக் கொண்டு கோவிலுக்குச் சென்றேன். திரும்பி வரும்பொழுது, அகல் குளம் அருகே அவர் காத்துக் கொண்டிருந்தார். ஆனால், நான் எதிர்பார்த்ததற்கு மாறாக, அகல் குளம், அதன் சுற்றுப் புறங்கள், அங்குள்ள மனிதர்கள் பற்றி எல்லாம் கேட்டார். பிறகுதான் ஹோட்டல் பிராஜக்ட் பற்றி சொன்னார். நான் சொன்ன விவரங்களைக் கொண்டு, அங்கு ஹோட்டல் கட்டும் திட்டம் சரிப்பட்டு வராது என்று முடிவெடுத்தார். அதை, அவருடைய அப்பாவுக்கு செல் ஃபோனில் கூறினார். 
      
பேசி முடிக்கும் பொழுது " ... அப்பா நான் ஆராய்ந்த விஷயங்களையும், இங்கே நம்பத் தகுந்த நண்பர் ஒருவர் கூறியதையும் வைத்துப் பார்க்கும் பொழுது, இந்த ஹோட்டல் திட்டம் ஒத்துவராது என்று தோன்றுகிறது. ...... ஆமாம். .... சரியாகச் சொன்னால், அது நண்பர் அல்ல, நண்பி. ...... ஆமாம் அப்பா .... அது சரி..   இல்லை, இன்னும் கேட்கவில்லை. கேட்டுப் பார்க்கிறேன் அப்பா. எனக்கு அதிர்ஷ்டம் இருந்தால் அதுவும் சாத்தியம் ......" 

போனில் பேசி முடித்த அவர், "மிஸ் மாயா - மிக்க நன்றி, உங்கள் உதவிக்கு. உங்கள் உதவியால், சட்டென்று ஒரு முடிவுக்கு வர முடிந்தது. உங்களைப் பற்றி சொல்லுங்கள்."

சொன்னேன். 

சுருக்கமாகச் சொல்வதானால், அவருக்கு என்னைப் பிடித்திருந்தது, எனக்கு அவரைப் பிடித்திருந்தது. ஆனால், அப்பாவுக்குத்தான் இது எதுவுமே பிடிக்கவில்லை. 'இந்தூர் மாப்பிள்ளையா? அதுவும் தமிழ் தெரியாதவரா? பணக்காரரா? வேண்டாம் மாயா - தயவு செய்து மறந்துவிடு.' என்றார். 


ஆனால் என்னால் மறக்க முடியவில்லை. 

(தொடரும்)