மார்ச் 2ம் தேதி, பல்லடம் - பொள்ளாச்சி நோக்கிச் சென்ற இண்டிகா கார் ஒன்று, எஞ்சின் சூடு காரணமாக, வெங்கடாபுரம் பகுதியில் தீ விபத்துக்கு உள்ளானது. இந்த விபத்தில், கார் முற்றிலுமாக தீயில் எரிந்து கருகியது. காரில் சென்றவர்கள் கீழே இறங்கியதால் விபத்திலிருந்து தப்பினர். தீயில் கருகிய கார், விபத்துக்குள்ளான இடத்திலேயே கடந்த ஒரு மாதமாக உள்ளது.
இரவு நேரங்களில் இவ்வழியாக வரும் வாகனங்கள், விபத்துக்குள்ளான காரில் மோதும் அபாயம் உள்ளது. இதை அப்புறப்படுத்த போலீசார் முயற்சிக்காத நிலையில், தொழிலதிபர் ஒருவர் தனது சொந்த முயற்சியில் காரை அப்புறப்படுத்தினார்.
இது குறித்து சுல்தான்பேட்டை சேர்ந்த பொக்லைன் உரிமையாளர் கனகராஜ் கூறுகையில், 'எனது வீடு சுல்தான் பேட்டையில் இருப்பதால், பணி தொடர்பாக அடிக்கடி பல்லடம் வந்துவிட்டு திரும்புவது வழக்கம். இவ்வாறு வரும்போது வெங்கடாபுரம் பகுதியில் தீ விபத்துக்கு உள்ளான கார் கடந்த ஒரு மாதமாக நடுரோட்டிலேயே இருந்தது. இரவு நேரங்களில் விபத்துக்குள்ளான கார் இருப்பது தெரியாமல் வாகனங்கள் அதன் மீது மோதும் அபாயம் உள்ளது. எனவே காரை அப்புறப்படுத்துமாறு பல்லடம் போக்குவரத்து போலீசார் மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் தெரியப்படுத்தினேன். இருப்பினும் காரை அப்புறப்படுத்த யாரும் முன் வரவில்லை. எனவே விபத்து அபாயம் கருதி, நானே, கிரேன் வரவழைத்து காரை ரோட்டோரத்தில் தள்ளி வைத்தேன். எதிர்வரும் நாட்களில் இது மூன்று விபத்துக்குள்ளாகும் வாகனங்களை உடனடியாக அப்புறப்படுத்த போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
முன்னதாக, கிரேன் உதவியுடன் காரை அப்புறப்படுத்திய கனகராஜ், இது தொடர்பான தகவலை எழுத்துப்பூர்வமாக டி.எஸ்.பி., விஜிகுமாரிடம் வழங்கினார். கனகராஜன் பணியை பாராட்டிய டி.எஸ்.பி., உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
=====================================================================================
தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், வேலைவாய்ப்புக்கும் முக்கிய பங்கு வகிக்கும் கோயம்புத்தூர் மாவட்டம் அடுத்தடுத்த பல சாதனைகளைப் படைத்து வருகிறது.
==============================================================================================================================================================================
நான் படிச்ச கதை+கள்
சோகவனம், வரம், அடமானம் - சோ. தர்மன்
சோ தர்மன் (இயற் பெயர் தர்மராஜ் பிறப்பு 8-8-1953, சொந்த ஊர் கோவில்பட்டி அருகில் உள்ள உருளைக்குடி) கரிசல் மண்ணின் கதை சொல்லிகளில் மேலும் ஒரு ரத்தினம்.
பள்ளிப்படிப்பு, மற்றும் தொழிற்கல்வி முடித்தவுடன் கோவில்பட்டியில் உள்ள லாயல் டெக்ஸ்டைல் மில்லில் 20 ஆண்டுகள் பணி புரிந்து விருப்ப ஒய்வு பெற்றார். இடது சாரி கொள்கைகளில் தீவிர பற்றுதல் உடையவர். ஆகவே தொழிற்சங்க பணிகளில் முழு நேர பணியாளரானார்.
"கு.அழகிரிசாமி, கி.ரா., பூமணிக்கு அடுத்த நிலையில் கரிசல் மண்ணின் ஆளுமை சோ.தர்மன்" என்று எழுத்தாளர் கோணங்கி குறிப்பிடுகிறார்.
இயல்பு வாத இலக்கியம் என்று இவரது படைப்புகளை ஜெயமோகன் பாராட்டுகிறார்.
2019 ஆம் ஆண்டின் சாஹித்திய அகாடமி விருது அவருடைய “சூல்” என்ற நாவலுக்கு வழங்கப்பட்டது. இவருடைய மற்றொரு நாவல் “கூகை” ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு “owl” என்ற பெயரில் வெளிவந்தது.
பூமணி இவரது தாய் மாமன். இவரது மனைவியின் பெயர் மாரியம்மாள். இவற்றைக் குறிப்பிட காரணத்தை கதையை வாசிக்கும்போது புரிந்துகொள்வீர்கள்.
சோ தர்மன் சுற்று சூழல் விழிப்புணர்வையும், இயற்கையோடு இயைந்த வாழ்வையும் மரபின் அறிவையும் பண்பாட்டையும் எடுத்துரைப்பதில் ஆர்வம் கொண்டவர்.
இவரது வாழ்க்கை வரலாற்றை கோ சந்தன மாரியம்மாள் நூலாக எழுதி வெளியிட்டுள்ளார்.
சோ தர்மன் (இயற் பெயர் தர்மராஜ் பிறப்பு 8-8-1953, சொந்த ஊர் கோவில்பட்டி அருகில் உள்ள உருளைக்குடி) கரிசல் மண்ணின் கதை சொல்லிகளில் மேலும் ஒரு ரத்தினம்.
பள்ளிப்படிப்பு, மற்றும் தொழிற்கல்வி முடித்தவுடன் கோவில்பட்டியில் உள்ள லாயல் டெக்ஸ்டைல் மில்லில் 20 ஆண்டுகள் பணி புரிந்து விருப்ப ஒய்வு பெற்றார். இடது சாரி கொள்கைகளில் தீவிர பற்றுதல் உடையவர். ஆகவே தொழிற்சங்க பணிகளில் முழு நேர பணியாளரானார்.
"கு.அழகிரிசாமி, கி.ரா., பூமணிக்கு அடுத்த நிலையில் கரிசல் மண்ணின் ஆளுமை சோ.தர்மன்" என்று எழுத்தாளர் கோணங்கி குறிப்பிடுகிறார்.
இயல்பு வாத இலக்கியம் என்று இவரது படைப்புகளை ஜெயமோகன் பாராட்டுகிறார்.
2019 ஆம் ஆண்டின் சாஹித்திய அகாடமி விருது அவருடைய “சூல்” என்ற நாவலுக்கு வழங்கப்பட்டது. இவருடைய மற்றொரு நாவல் “கூகை” ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு “owl” என்ற பெயரில் வெளிவந்தது.
பூமணி இவரது தாய் மாமன். இவரது மனைவியின் பெயர் மாரியம்மாள். இவற்றைக் குறிப்பிட காரணத்தை கதையை வாசிக்கும்போது புரிந்துகொள்வீர்கள்.
சோ தர்மன் சுற்று சூழல் விழிப்புணர்வையும், இயற்கையோடு இயைந்த வாழ்வையும் மரபின் அறிவையும் பண்பாட்டையும் எடுத்துரைப்பதில் ஆர்வம் கொண்டவர்.
இவரது வாழ்க்கை வரலாற்றை கோ சந்தன மாரியம்மாள் நூலாக எழுதி வெளியிட்டுள்ளார்.
என்னுரை.
சென்ற வாரம் பின்னூட்டத்தில் ஜீவி அய்யா, எழுத்தாளர் பற்றிய என்னுடைய புரிதலை தூண்டி விட்டார். எழுத்தாளர் யார் என்று சிந்தித்ததின் பின் விளைவே இந்த என்னுரை.
எழுதுபவர்கள் எல்லோரும் எழுத்தாளர் இல்லை. எப்படி சிற்பம் வடிப்பவனை சிற்பி என்கிறோமோ, ஓவியம் வரைபவனை ஓவியன் என்கிறோமோ, எழுத்தில் ஆளுமை பெற்றவனையே எழுத்தாளன் எனக் கூற முடியும். இங்கே ஆளுமை என்பது மனதில் உதித்தவற்றை வார்த்தைகளில் வடிக்கும் முறையில் (master, expertise) என்ற பொருளில் புரிந்து கொள்ள வேண்டும்.
எழுத்தில் ஆளுமை பலவகைப்படும். எடுத்துக்கொண்ட கருப்பொருளில், எழுதும் நடையில், கற்பனையில், கதை, கட்டுரை இவற்றை சொல்லும் முறையில் என பல விதத்தில் மாறுபடும். இங்கு கூறப்பட்ட காரணிகளை ஒன்றிலேனும் எழுத்தாளன் சிறப்பு தகுதி பெற்றிருப்பார்.
என்னுடைய கணிப்பில் மிக்க காரணிகளில் சிறப்பு ஆளுமை செலுத்தியவர் சுஜாதா என்பேன். வணிகப் பத்திரிகைகளுக்கு ஒரு விதம்., இலக்கிய சிற்றிதழ்களுக்கு ஒரு மாதிரி, மலிவு விலை மாத நாவல்களுக்கு ஒரு மாதிரி என்றெல்லாம் எழுதுவார். விஞ்ஞானத்தையும், ஆன்மீகத்தையும் அவருக்கே உரிய பாணியில் மற்றவர்களுக்கு பாடம் சொல்லித்தருவார். மரபுக் கவிதை, புதுக் கவிதை, ஹைக்கூ என்று கவிதைகளும் எழுதுவார். துப்பறியும் நாவலும் எழுதுவார், சரித்திர நாவலும் எழுதுவார். இப்படிப்பட்ட பன்முகங்கள் கொண்டவர் சுஜாதா.
சரி எழுத்தாளரைப் பற்றிய என்னுடைய பாடம் போதும் இன்றைய விசயத்திற்கு வருவோம்.
இங்கே மூன்று சிறுகதைகளின் முதல் பத்திகள் கொடுக்கப்பட்டுள்ளன. மூன்று கதைகளையும் எழுதியவர் ஒருவரே. அவர் தான் சோ தர்மன்.
முதல்கதை சோகவனம். எஸ்ரா தேர்ந்தெடுத்த 100 சிறந்த சிறுகதைகளில் ஒன்று.
கதையின் தலைப்பு சோகவனம்.
கதையின் துவக்கம் இவ்வாறு.
கற்பாறைகளின் இடுக்குகளிலும் கூட தன் வேர் பதித்து நீருறிஞ்சி மண் நீக்கி காற்றைச் சுவாசிக்கும் ஆத்ம வெறியில் தலை நீட்டி சுட்டெரிக்கும் அக்னி ஜ்வாலையின் சூரியத் தகிப்பில் உயிர் பெற்று தன் இனம் பெருக்கும் இனவிருத்தி என்னும் மாய வலைக்குள் சிக்கிக் கொண்டுதான் அந்த இரண்டு இளம் கிளிகளும் ஆனந்தித்துச் சுகித்திருந்தன. காற்றசைவிலும் வனங்களின் ஏகாந்த மௌனத்திலும் இலைகள் சலசலக்கும் தாலாட்டிலும் நறுமணம் வீசும் காட்டுப் பூக்களின் சௌந்தர்ய வாசனையில் நாசிகளின் மென்னுணர் நரம்புகள் புடைக்க கிளைவிட்டுக் கிளை தாவி, காற்றில் உதிரும் பூக்களெனப் பறந்து உல்லாசமாய் ஆனந்தக் கூத்தாடிக் களித்திருந்தன, அந்த இளஞ்சோடிக் கிளிகள…
இரண்டாம் கதை தினமணி பத்திரிக்கையில் வெளிவந்த ஒன்று. தலைப்பு வரம்.
கதையின் துவக்கம் இவ்வாறு.
இந்த உலகத்தில் யாருக்குத்தான் கவலையில்லை. கவலைகளின் தன்மைதான் வேறுபடுமே ஒழிய, கவலையே இல்லாத மனித உயிர் இல்லையென்றுதான் சொல்ல வேண்டும். இதில் தீர்க்கக் கூடிய கவலைகளின் அவஸ்தையை விட தீர்க்கவே முடியாத கவலைகளின் வலி கரையானைப் போல் தினமும் அரித்துக் கொண்டே இருக்கும். சமயத்தில் தன்னைப் படைத்த கடவுளையே சபிக்க வேண்டியிருக்கும்.
என்னுடைய அக்காவின் கவலை யாராலும் என்றென்றைக்கும் தீர்க்கவே முடியாத கவலை….தங்க விக்கிரகமாய் வளர்ந்து நிற்கும் ஒரே மகள் மகாலட்சுமி.
மூன்றாம் கதை நாட்டார் இலக்கிய வகையைச் சார்ந்தது. கரிசல் காட்டு மனிதர்களிடம் வில்லுப்பாட்டு போன்று கதையை சொல்லும் முறையில் அமைந்தது. தலைப்பு அடமானம்.
கதையின் துவக்கம் இவ்வாறு.
சுருக்கமாக 'கோனார் கம்பெனி' என்று சொல்லப்படும் அய்யனேரி ஜெகநாதன் முதலாளியின் 'கிருஷ்ணா மேச் ஒர்க்ஸ்' என்றால் சுற்றுவட்டாரத்தில் தெரியாதவர்கள் இருக்க முடியாது. அதற்குப் பல்வேறு காரணங்கள் உண்டு என்றாலும் பிரதான காரணம் பெரிய கம்பெனி, சொந்த லைசென்ஸ், சொந்த லேபில்,சொந்த லாரிகளில் ஏற்றி வடமாநிலங்களில் சொந்தமாக விற்பது இவைபோக, தன் கம்பெனியில் வேலை செய்கிறவர்களுக்கு மற்ற கம்பெனிகளைவிட நிறையப் பணம் அட்வான்ஸாகக் கொடுப்பது, கிருஷ்ணா மேச் ஒர்க்ஸில் மருந்து முக்குகிற வேலை என்பது பெரிய ஒசத்தியான வேலை இல்லா விட்டாலும், மோசமான வேலை என்றும் சொல்லிவிட முடியாது. நான்குமுழத் துண்டை மட்டும் இடுப்பில் கட்டிக் கொண்டு மேலெல்லாம் விளக்கெண்ணெய் தடவியதைப் போல் வியர்வை நசநசப்பில், உருகும் மெழுகடுப்பின் வெக்கையில் நின்று தீப்பெட்டிக் கட்டைகளை மெழுகில் தோய்த்து எடுத்து எதிரே நிற்பவனிடம் லாவகமாக விட்டெறிவது கருப்பசாமிக்கு எட்டு வருடமாகக் கைவந்த கலை. 'புது மாப்பிள... கட்டயக் கொஞ்சம் மெதுவா விட்டெறிங்க. இன்னும் நாலு நாள்தான் இருக்கு. பெறகு ஒங்க வீரத்த எங்க காட்டணுமோ அங்க காட்டுங்க.'
மூன்று கதைகளும் ஒன்றுக்கொன்று வித்தியாசமானவை.
முதல் கதை கவித்துவமாக ஒரு உருவகமாக மேல்தட்டு ஜோல்னா பை எழுத்தாளர்களுக்காக எழுதப்பட்டது. நகரங்களின் வளர்ச்சியில் சுற்றுசூழல் எவ்வாறு பாதிக்கப்படுகிறது என்பதை எடுத்து காட்டுகிறது எடுத்துக்கொண்ட கரு, நடை, உபமான உபமேயங்கள் அறிவு ஜீவிகளின் பார்வையிலேயே எடுத்தாளப்பட்டிருக்கின்றன.
இரண்டாம் கதை வரம் ஒரு உளவியல் கதை. பத்திரிகை வாசிக்கும் பழக்கமுள்ள மத்திய வர்க்கத்தை ஈர்க்கும் வகையில் எழுதப்பட்டது. சிறிது உளவியலை சேர்த்து மன வளர்ச்சி அடையாத உடல் வளர்ச்சி மட்டும் உள்ள பெண்ணின் கதை.
மூன்றாம் கதை கீழ்த்தட்டு மக்களுக்காக வில்லுப்பாட்டு கதை சொல்லும் பாணியில் எழுதப்பட்டுள்ளது. அவர்களுடைய அதே மொழி, பேச்சு, கிண்டல் என்று கதை தொய்வில்லாமல் இருக்கிறது..
இவ்வாறு மாறுபட்ட படைப்புகளை எழுத தனி திறமை வேண்டும். அவ்வகையில் ஆசிரியர் சிறந்த எழுத்தாளன் ஆகிறார்.
இனி மூன்று கதைகளின் சுருக்கத்தையும் தருகிறேன்.
சோகவனம்.
இக்கதை ஒரு உருவகம் எனலாம். இரண்டு கிளிகள் குடித்தனம் செய்ய குஞ்சுகளை பெற்று வளர்க்க என்று கூடுக்காக மரப்பொந்தை தேடுகின்றன. மரங்கள் எல்லாம் வெட்டப்பட்டு விட்ட நிலையில் தேடித்தேடி ஒரு சாலையோரத்தில் நிற்கும் தலை இழந்து நிற்கும் மொட்டைப்பனையின் பொந்தில் முட்டையிட்டு குஞ்சு பொரித்து வளர்க்கின்றன.
குஞ்சுகள் நகர சூழ்நிலையில் வாகன போக்குவரத்து சப்தங்களுக்கு இடையில் தாய்மொழி அறியாமல் ஹார்ன் சப்தங்களுக்கு இடையில் வளர்கின்றன.
மொட்டைப்பனையும் ஒரு நாள் வெட்டிச் சாய்க்கப் படுகிறது. கிளிகள் குஞ்சுகளோடு வனத்தையு நோக்கி பறக்கின்றன.
கிளிகள் வனத்திற்கு குடி பெயர்கின்றன.
குஞ்சுக்கிளிகள் இரண்டும் வித்தியாசமான மணம், சூழல், இரைகள் கண்டு முகஞ்சுளித்துக் கவலையோடிருந்தன. பழம் கொத்தித் தின்னவும், எதிரியின் கண் முன்னாலேயே மரத்தின் இலையா மாறி தப்பிக்கவும் தெரியாமல் ஓயாமல் ஹாரன் சத்தத்தை ஒலித்துத் திரிந்தன. ஒருநாள் இச்சி மரத்தின் உச்சியில் நின்று இரண்டு கிளிகளும் பலமாய்க் கத்தின. நடுக்காட்டுக்குள் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் ஒலி எழுப்பிக் கொண்டு போவதைப் போல் விடாமல் ஹாரன் சத்தம் கேட்டது.
திடீரென்று எதிர்திசையிலிருந்து பக்கத்திலேயே ரயில் வண்டியெழுப்பும் பயங்கரமான ஹாரன் சத்தம் கேட்கவும் கிளிகள் இரண்டும் மௌனியாய் நின்று கவனித்தன. ரயில் வண்டியின் ஹாரன் சத்தம் தங்களை நோக்கி மிக அருகே நெருங்கி வந்தது. மீண்டும் கிளிகள் உற்றுப் பார்த்தன. தங்களை நோக்கி இரண்டு மயில் குஞ்சுகள் கூவிக் கொண்டே வருவதைக் கண்ணுற்றன
படைபடையாய்ப் பறந்து வந்த சிட்டுக்குருவிகள் ஊசிப் பட்டாசுகளாய் வெடித்துச் சிதறிச் சத்தமெழுப்பி மரக்கிளைகளுக்குள் மறைந்து கொண்டன. தன் செவிப்பறைகள் கிழிந்து ஊமையாகிப் போன வனம் நாளாவட்டத்தில் சுண்ணாம்புக் காளவாசலாய் மாறி அக்னியாய் தகித்தது. வனத்தைத் தேடியலையும் எஞ்சிய பறவைகள் எழுப்பும் பலவிதமான ஹாரன் சத்தங்கள் மட்டும் விடாமல் கேட்டுக் கொண்டேயிருக்கின்றன வனங்களையும் கடந்து.
வரம்
இக்கதை மகா என்கிற மகாலட்சுமியைப் பற்றியது. மகா ஒரு கற்றல் குறைபாடு உள்ள, குழந்தைத்தனம் மாறாத ஒரு வளர்ந்த பருவப் பெண். யார் எதை சொன்னாலும் மறுக்காமல் செய்பவள்.
என்னுடைய அக்காவின் கவலை யாராலும் என்றென்றைக்கும் தீர்க்கவே முடியாத கவலை….தங்க விக்கிரமாய் வளர்ந்து நிற்கும் ஒரே மகள் மகாலட்சுமி. சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளை மாதிரி செய்யச் சொன்னதை மட்டுமே செய்யும் நடமாடும் பொம்மை. அவளால் சுயமாகச் சிந்தித்து எதுவும் செய்ய இயலாது. அரை குறைப் பேச்சு. முகத்தில் எப்போதும் மத்தாப்பாய் சிதறும் சிரிப்பாணி.
என்னுடைய அலுவல் நிமித்தமாக நான் சென்னை போகும் போதெல்லாம் அக்கா வீட்டில் தான் தங்குவேன்.
மகாலட்சுமிக்கு என்னிடம் புகார் சொல்வதற்கு நிறைய விஷயங்கள் இருக்கும். சொல்ல இயலாததால் அவள் மனசுக்குள் தேங்கிக் கிடக்கும். அக்காளே அந்த விஷயங்களை விவரிப்பாள். மகா அமைதியாக கவனிப்பாள்.
நாலு மாசத்திற்கு முன் நடந்த அந்த சம்பவத்தை அக்கா சொல்லச் சொல்ல அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தாள் மகா.
“வேற ஒன்னுமில்ல தம்பி, எளையவனைப் பாக்குறதுக்காக பொண்ணு வீட்டுக்காரங்க வந்தாக, அப்ப எளையவன் என்ன சொன்னாம்னா, மகா, நீ பெட்ரூமுக்குள்ளேயே இருந்துக்கோ, அவங்க போற வரைக்கும் வெளிய வராத அப்படின்னு சொன்னான். அதுக்கு இவ, அப்படித்தான் வருவேன், ரூமுக்குள்ள இருக்க மாட்டேன்னு அடம்பிடிச்சா, ஒடனே ரூமுக்குள்ள போட்டு பூட்டிட்டான்.”
வந்த வேலைகள் முடிந்து நான் ஊருக்குப் புறப்படும்போது மகாலட்சுமி ரொம்பவும் சோகமாக இருப்பாள். நான் அவளிடமிருந்து விடைபெறும் முன் ஒரு பெரிய நாடகமே நடித்துக் காட்ட வேண்டியதிருக்கும்.
“நகைநட்டு, பணம், இருந்து என்ன செய்ய, பச்சப் புள்ளயப் போல வச்சுக் காப்பாத்தனும், அந்த மாதிரி மனசு இப்ப உள்ள தலமொற ஆட்ககிட்ட அறவே கெடையாது.”
“அதனால நானும் ஒங்க மாமாவும் சாகுறதுக்கு முன்னாடி அவ செத்துட்டா, நாங்க ரெண்டு பேரும் நிம்மதியா கண்ண மூடிருவோம், அவளும் நிம்மதியா போயி சேர்ந்திட்டாங்கிற நிம்மதி எங்களுக்கு கெடைக்கும்”.
சரியாக ஒரே மாசம்தான், மகாலட்சுமி இறந்துவிட்ட செய்தி எனக்கு கிடைத்தபோது நம்பவே முடியவில்லை, சாமிகள் இவ்வளவு சீக்கிரமாகவா பக்தர்களுக்கு வரத்தை கொடுக்கின்றன. நான் சென்னை போய் சேர்ந்தபோது, அக்காள் சாமி தனக்கு வரம் கொடுத்த கதையை அழுகையினுடே சொன்னாள்.
“மகாவை படைத்ததன் மூலம் படைப்பின் அர்த்தத்தை நான் உணர்ந்து கொண்டேன்” அக்காளின் அழுகை அடங்க வெகுநேரமாயிற்று. நான் இப்பொழுது அலுவல் நிமித்தம் சென்னை சென்றால் லாட்ஜில் தங்கிவிட்டு ஊர் திரும்புகிறேன்.
இந்தக்கதையில் வரும் மகாவைப் போல் என் சொந்தத்திலும் உண்டு. பரிதாபப்படுவதைத் தவிர ஒன்றும் செய்யமுடியவில்லை.
அடமானம்
இக்கதையின் முதல் பத்தி படித்தது நினைவில் இல்லை எனில் மீண்டும் மேலே சென்று படித்து வாருங்கள்.
கட்டையை மெழுகில் முக்கி எறியும் கருப்பசாமிக்கு கல்யாணம்.
'மாடசாமியண்ணே, இன்னும் பத்து நாளைக்குத்தான் அய்யா சுதாரிப்பு... பெறவு கட்டையத் தூக்கக்கூட சீத்துவம் இருக்காது. நிப்பி நடந்து கிட்டப்போய்த்தான் கட்டையக் கையில வாங்கணும்.'...
'பொண்ணு பேரு மாரியம்மாளாம்... தெரிமில்ல... இருக்கங்குடி மாரியாத்தா, அப்படியே வெளையாடி விட்ருவா வெளையாடி... கருப்பசாமியெல்லாம் மாரியத்தாளக் கண்டா காத வழிக்கு ஓடணும்.'
வாசலில் கருப்பசாமியின் அய்யாவும் அம்மாவும் தலை காட்டியவுடன் கட்டை எறிவதை நிறுத்திவிட்டு ஓடினான். இடுப்பில் கட்டியிருந்த துண்டை அவிழ்த்து மேலெல் லாம் வழிந்த வியர்வையைத் துடைத்தான். முதலாளியின் அறையை எட்டிப் பார்த்து விட்டு அய்யாவை நோக்கிக் கையசைத்தான்.
அய்யாவின் கையில் பெரிய எவர்சில்வர் தட்டில் தாம்பூலமும் பழவகைகளும் நடுவே பத்திரிகையும் இருந்தது.
'வாங்க, வாங்க... இதெல்லாம் எதுக்கு? பத்திரிக மட்டும் கொண்டாந்தாப் போதாதா?'
'ஏதோ எங்களால ஏண்டது.'
'சரி, ரொம்ப சந்தோஷம்! அப்ப நம்ம கம்பெனிக்கு புதுசா ஒரு ஆள் வேலைக்கு வருது.'
'நம்ம கம்பெனிக்குத்தான் மொதலாளி வருவா! நம்ம கம்பெனிய விட்டுட்டு வேற எங்க போவா?'
'பரிசம் போடப் போறன்னைக்கு ராத்திரிக்கு வேன் வேணும்னு கருப்பசாமி சொன்னான். எப்பிடி முடிவு பண்ணியிருக்கீக!'
''ராத்திரி போயி பரிசம் போட்டுட்டு, ராத்திரியே நாங்க திரும்பிருவம், காலைல பொண்ணை அழைச்சிட்டு அவங்க இங்க வந்திருவாங்க.'
'அது அவுக பொறுப்பு மொதலாளி. பொண்ணு வேல பாக்கிற கம்பெனி மொதலாளி வேன் தாரம்னு சொல்லியிருக்காராம்!'
'அப்படியா.. அப்பனா சரி’
பெண்ணின் வீடு ஊரைவிட்டுத் தனியே உள்ள காலனியில் இருந்தது. முற்றத்தில் நிறையப் பேர் கூடியிருந்தார்கள். ஏழெட்டு டியூப் லைட்டுகள் எரிவது ரொம்ப வெளிச்சமாக இருந்தது. எல்லோருமே இவர்களை எதிர்பார்த்துதான் காத்திருந்தார்கள் போலும். வேனில் வந்தவர்கள் எல்லோரும் கூட்டமாக நடக்க... பரிசப் பெட்டி நடுவீட்டில் இறக்கி வைக்கப்பட்டது.
'எம் மக மாரியம்மாளுக்குப் பரிசம் போடப் போறம் வாங்க. வாங்க.' என்று வீடு தவறாமல் சொல்லிக்கொண்டு தெருவழியே போனாள் வள்ளியம்மாள். முற்றம் நிறைந்து விட்டது. அநேகமாக சாப்பாடும் முடிந்து விட்டது.
பொண்ணோட தாய்மாமன் எங்கய்யா, இங்கவா... இப்பிடி முன்னால வந்து உட்காரு. அங்க நின்னா எப்பிடி? பொண்ணோட அய்யா, மாப்பிள்ளையோட அய்யா ரெண்டுபேரும் இப்பிடி ஓரத்துல வாங்க.
பரிசப் பெட்டி, பழத்தட்டு, வெற்றிலைக்கட்டு, பரிசச்சேலை எல்லாம் நாட்டாண்மையின் முன்னால் வைக்கப்பட்டன.
'எங்க வள்ளியம்மாளக் காணும்? என்ன வள்ளி.. ஊரு பூராவும் சொல்லிட்டயா? வேற யாரு வீடும் பாக்கியிருக்கா... இப்ப ஆரம்பிக்கலாமா?'
'சரி, பரிசம் எவ்வளவு போடுறீக?'
'பரிசம்.. நாங்க என்ன புதுசாவா போடப் போறம்? ஊரு வழக்கப்படிதான்.'
'ஊரு வழக்கப்படியா! எங்க ஊரு வழக்கம் ஐயாயிரத்து ஒண்ணு'
'எங்க ஊர் வழக்கம் பதினொண்ணு'
'சொல்லுங்கய்யா.. சம்பந்திக ரெண்டு பேரும் இப்பிடி வாய மூடிக்கிட்டு ஒக்காந்திருந்தா எப்பிடி? பரிசம் எவ்வளவுய்யா பேசிக்கிட்டீக!'
'பரிசம் நூத்தியொண்ணு போட்ருவம்'
'நூத்தியொண்ணா.. மாரியம்மா வாரத்துக்கு நானூறு ரூவா சம்பவளம் வாங்குவாயா.. புள்ள வேலைக்காரப் புள்ள... ஒமக்கு யோகம்னு வச்சிக்கோரும்.'
'பொண்ணோட அப்பன் என்னய்யா சொல்றான்?'
'பரிசம் அவுக போடுறதப் போடட்டும்.'
'அப்பச் சரி. பரிசம் நூத்தியொண்ணு'
'ம்..வேற சீருசெனத்தி என்ன பேசிக்கிட்டீக?'
'பொண்ணுக்கு கம்மல்-மூக்குத்தி மட்டும் தான். பவுனு கிவுனு எல்லாங் கெடையாது. இன்னக்கி லேசா சொல்லீறலாம். பெறகு போடணுமில்ல?'
'சரி வேற ரொக்கம் ஏதும் உண்டா?'
'அதெல்லாம் கெடையாது, நாங்க பேசிக்கிறல.'
'சரி, பையனுக்கு தலத்தீபாவளிக்கு என்ன செய்யப் போறீக?'
'தலத்தீபாவளிக்கு வேட்டி துண்டுதான். மோதிரமெல்லாங் கெடையாது. வசதி இருந்தா நாங்களா செய்வம். ஆனா பேச்சுக் கிடையாது!'
'அது ஒங்க பிரியம்!'
'சரி, அப்ப பரிசம் வெளம்பிரலாமா? வேற எதும் கேக்கிறதுனா கேளுங்க.'
‘பொண்ணு வேலைபாத்த கம்பெனியில அட்வான்ஸ் ரூவா மூவாயிரம் பாக்கியிருக்காம். அத மாப்பிள்ளை வீட்டுக்காரங்க ஏத்துக்கிறனும்னு சொல்றாரு.'
'அப்ப பொண்ணுக்கு நாங்க ரொக்கம் குடுக்கணுமிங்காரா?'
'அது ஒங்கபாடு. அவரு சொல்லிட்டாரு. ஒங்களுக்கு முடியுமா முடியாதானு மட்டும் சொல்லுங்க!'
'அப்பிடியெல்லாம் ஏத்துக்கிற முடியாதுய்யா!'
'நீரென்ன கையிலருந்தா எண்ணப் போறீரு? அங்க போயி கம்பெனிக்குத்தானே போகப் போறா.. அந்தக் கம்பெனில வாங்கி அவ குடுப்பா.. பெறவு அவ வேலைசெஞ்சு கழிப்பா..!'
'கிழிப்பா! நல்லாயிருக்கே ஒம்ம பேச்சு.. அவ வாங்கி எங்கிட்டக் கொடுப்பா.. ஒங்க கடன நீங்கதான் தீக்கணும். இன்னக்கு அட்வான்ஸ் வாங்கிக் குடும்பீரு... பெறகு நாளைக்கி சம்பளத்தக் கேப்பீரு.. நாங்க பொண்ணக் கூட்டிட்டுப் போயி சட்டி எடுத்திட்டுப் போகவா?'
'சரி முடியாதுனு சொல்லிட்டிகள்ள, அந்த மானிக்கு அந்தப் பேச்ச விடுங்க.'
கூட்டத்தில் ஒரு சத்தத்தைக் காணோம். அத்தனை பேச்சுகளையும் கேட்டுக் கொண்டு மாரியம்மாள் பொம்மையாக உட்கார்ந் திருந்தாள். நாட்டாண்மை பரிசம் விளம்பினார்.
'ஓகோ ஒறவுமுறையாரே, தோட்லாம்பட்டி கருப்பையா மகன் கருப்பசாமி, திட்டங்குளம் பேச்சிமுத்து மக மாரியம்மாளுக்கு பரிசம் போட வந்திருக்கான்.'
'அப்பிடியா என்னென்ன கொண்டாந்திக்கான்?'
'ஏழு கெட்டு வெத்தல வந்திருக்கு.'
'யே...ம்'
'ஏழாயிரம் பாக்கு வந்திருக்கு.'
'பெறவு?'
'ஏழு வண்டி பழவர்க்கம் வந்திருக்கு.'
'யேம்... ம்'
'மஞ்சளும் குங்குமமும் வந்திருக்கு.'
'பெறவு என்ன வந்திருக்கு.'\
'எட்டுக் கூடையில பூ வந்திருக்கு?'
'யே.. ம்.'
'எட்டூரு ஆளும் எட்டு வண்டியும் வந்திருக்கு.'
'யே...ம்... அம்புட்டுத்தானா வேற ஒண்ணும் வரலையா?'
'பத்தாயிரம் ரூவாய்க்குக் காஞ்சிபுரம் பட்டும், பட்டுப் பாவாடையும், பட்டு ரவிக்கையும், பத்தாயிரத்தி ஒண்ணு பரிசப் பணமும் வந்திருக்கப்பா.'
'யே...ம். அதச் சொல்லும்.'
பரிசச் சேலை இருந்த தட்டை எடுத்து பெண்ணின் தாய் மாமனிடம் கொடுத்தார் மாப்பிள்ளையின் அய்யா. கூட்டத்தில் எல்லோரும் தொட்டுக் கும்பீட்டு கடேசியாய் வீட்டுக்குள் போனது. வாசலை மறைத்து இரண்டு மூன்று பெண்கள் நின்று கொண்டார்கள். ஒருத்தி ஓடிப்போய் ஜன்னலைப் பூட்டினாள். கூட்டம் பழைய படியும் கசாமுசா வென்று பேச ஆரம்பித்தது. பேச்சோடு பேச்சாக நாட்டாண்மை கேட்டார்:
'தாலி கட்டுக்கு பெண்ண அழைச்சிட்டுப் போறதுக்கு என்ன ஏற்பாடு?'
'பொண்ணு வேல செய்யிற கம்பெனி மொதலாளி வேன் தாரம்னு சொல்லியிருக் காராம். அதனால மாப்ள வீட்லருந்து வண்டி வர வேண்டாம்னு சொன்னாக.'
'அப்படியா, அப்பனா நல்லதாப் போச்சு! காலைல இங்க இருந்தே கெளம்பி வந்துரலாம். ஒங்கள எதிர்பாக்க வேண்டிய தில்லை!'
'கம்பெனி மொதலாளிக்கு ரொம்ப வருத்தம், புள்ள வேலக்காரப்புள்ள, கைச்சூட்டிகையான புள்ள, ஒரு நாளைக்குக்கூட வீட்ல இருக்க மாட்டா. கம்பெனியிலேயே வேலையில் இவதான் ஃபர்ஸ்ட். போனஸும் இவதான் ரொம்ப வாங்குவா.'
'அங்கயும் கம்பெனி பெரிய கம்பெனி - கப்பல் போல. வேல செய்யத்தான் கெதி வேணும். மொதலாளியும் தங்கமான மனுசரு!'
சில பெண்கள் ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தார்கள். எதற்காகவோ காத்திருப்பது போல் கூட்டம் மெளனமாக இருந்தது. நாட்டாண்மை மீண்டும் அதட்டல் போட்டார்.
'என்ன... பொம்பளகளா இன்னுமா சேல கெட்றா?'
'முடிஞ்சது... முடிஞ்சது ஆரம்பிங்க.'
'ஓகோ ஒறவுமொறையாரே.. தோட்னாம்பட்டி கருப்பையா மகன் கருப்பசாமி, திட்டங்குளம் பேச்சிமுத்து மக மாரியம்மாளுக்கு மஞ்சனை வைக்கான்.. மஞ்சனை வைக்கான்!'
'அப்பிடிச் செய்.. அப்பிடிச் செய்.. அப்பிடிச் செய்'
'கொலவ போடுங்க பொம்பளைகளா.. வேடிக்க பாக்க மட்டும் வந்திருங்க, வாயத் தொறந்துறாதிக.'
'இப்ப உள்ள கொமரிக எவளுக்கு கொலவ போடத் தெரியும்!'
மாரியம்மாள் பரிசச்சேலை கட்டி பொம்மை யாக முற்றத்துக்கு நடந்து வந்தாள். கும்பிட்டு எழுந்தாள். பொம்மையாக வீட்டுக்குள் போய்விட்டாள். வெற்றிலை பாக்கு, பூ, சந்தனம், சாக்லெட் வாங்கக் கூட்டம் முண்டியடித்தது. கூட்டம் போட்ட சத்தத்தில் வேன் கிளம்பிப் போன சத்தம் மெதுவாகக் கேட்டது.
கல்யாணம் முடிந்த மூன்றாம் நாள் மாரியம்மாள் புதுக் கம்பெனிக்குள் புகுந்தாள். தான் ஊரில் வேலை பார்த்த கம்பெனியைவிடப் பெரிய கம்பெனி. நிறையப் பெண்கள் வரிசை வரிசையா, சுவரில் எங்கே திரும்பினாலும் ஸ்பீக்கர். தான் புகுந்தவீடு மிகப் பெரிய வீடு என்று நினைத்துக் கொண்டாள். பலகையில் உட்கார்ந்து முன்னால் தீப்பெட்டிக் கட்டையைப் படுக்க வைத்துக் கிளிப்பைப் கழட்டி இரண்டு சக்கைகளில் குச்சிகளை உருவி பெட்டியில் அடைத்தாள். ஒவ்வொரு சக்கையை உருவும்போதும் தன் கை நிறையப் போட்டிருந்த கண்ணாடி வளையல்கள் சிலுக் சிலுக்கென்று சத்தம் எழுப்பியது எரிச்சலாக இருந்தது. கைக்கு இரண்டு வளையல்களை மட்டும் விட்டுவிட்டு மீதியைக் கழட்டிச் சுவரோரம் வைத்தாள். குச்சியை உருவுவதற்காக குனிந்தபொது கழுத்தில் புதிதாக தொங்கிய மஞ்சள் கயிறு உஞ்சலாடியது. அதை எடுத்து முன் ஜாக்கெட்டுக்குள் இறுக்கித் திணித்துவிட்டுத் தலைநிமிர்ந்தாள். எதிரே கணக்கப்பிள்ளை நின்றுக் கொண்டிருந்தார்.
'என்ன.. கருப்பசாமி கல்யாணமாகி மூணு நாளாகுது. இன்னும் ஒம் பொண்டாட்டி கையில வளையல் அப்பிடியே அலுங்காமக் கெடக்கு!' பெண்கள் எல்லோரும் சிரித்தார்கள். மாரியம்மாளால் சிரிக்க முடியவில்லை. திரையிட்ட கண்ணீரைத் துடைத்துக் கொண்டு வாசலைப் பார்த்தாள். மாரியம்மாளின் மாமனார் முதலாளியின் ரூமுக்குள் போய்க்கொண்டு இருந்தார். அட்வான்ஸ் பணம் வாங்குவதற்காக!
ஆசிரியர் பற்றிய விவரங்களுக்கு :
பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம் பிற செய்யாமை செய்யாமை நன்று..
பதிலளிநீக்குதமிழ் வாழ்க..
கற்பக கணபதி
பதிலளிநீக்குகனிவுடன் காக்க..
முத்துக்குமரன்
முன்னின்று காக்க..
தையல் நாயகி
தயவுடன் காக்க..
வைத்திய நாதன்
வந்தெதிர் காக்க..
இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
பிரார்த்திப்போம்..
எல்லாருக்கும் இறைவன்
நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..
நலம் வாழ்க..
காலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
இன்று சனிக் கிழமை. பெருமாளிடம் பிரார்த்தனை செய்துகொண்டீர்கள் என நினைக்கலாமா?
நீக்குஅடமானம் கதையில் எளிய மனிதர்களின் வாழ்வை, அங்கு பிறக்கும் பெண்ணே வாழ்வு முழுவதும் அடமானமாக வைக்கப்படுவதை மிக அருமையாக, அந்த நிலத்தின் வழக்குகளோடு ஆசிரியர் எழுதியிருக்கிறார்.
பதிலளிநீக்குபரிசப் பணம் பத்தாயிரம்... என்ற பகுதி குழப்பியது. அதனால் முழுக் கதையைப் படித்தேன். இந்தப் பத்தி உருவகமாக எழுதப்பட்டிருக்கிறது.
நாளை, பட்டாசுத் தொழில் நைந்தால் இவர்களைப் போன்ற மனிதர்கள் வாழ்வு என்னாகும்? பட்டாசு விபத்துச் செய்திகளைப் படிக்கையில் இந்த எளிய மனிதர்களின் நினைவு வரும்.
எளிய மனிதர்களுக்கு கல்விதான் ஆதாரம். வாழ்க்கையில் முன்னேறினால்தான் அந்தத் தலைமுறைகளுக்கு வாழ்வு.
நல்ல கதையைப் படித்த திருப்தி. பகிர்வுக்கு நன்றி
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
நீக்குதீப்பெட்டி உற்பத்தி குறைந்து விட்டது. காஸ் அடுப்பு, சிகரெட், பீடி குடிப்பவர்களின் எண்ணிக்கை குறைவு போன்ற பல காரணங்கள்.
நீக்குபட்டாசு தொழிலும் முன் போல் இல்லை. பட்டாசு வெடிக்க தனி இடம், சமயம் போன்ற காரணங்கள், சீனப் பட்டாசுகள் இறக்குமதி, சுற்று சூழல், மாசுக் கட்டுப்பாடு காரணம், போன்ற பல காரணங்கள்.
ஆக சிவகாசி தற்போது, காலண்டர், மற்றும் தேர்தல் போஸ்டர் வேலைகளால் தான் இயங்குகிறது. போஸ்டர் வேலைகளையும் பிளெக்ஸ் போர்டுகள் பிடித்துக் கொண்டு விட்டன.
நெல்லை, எபி செவ்வாய் கதை வாசிப்புகளுக்கு ஒரு மாதிரி, எபி சனிக்கிழமை வாசிப்புகளுக்கு இன்னொரு மாதிரி என்று தனித்தனி வாசக வெளிப்பாட்டை வைத்துக் கொண்டிருக்கிறீர்களா என்ன?
நீக்குஇல்லை, இதெல்லாம் அந்த அந்த நேரங்களில் நீங்கள் இருக்கும் மன நிலைகளுக்கு உட்பட்டதா?
செவ்வாய் கதைகள் நேரடி கதை வாசிப்பு சனிக்கிழமை கதைகள் இன்னொருத்தர் கதை பற்றி சொல்லியிருப்பதை வாசித்தல் என்பதினால் உங்கள் வாசிப்பு அனுபவங்கள் மாறுபடுகிறதா?..
கதையைப் படிக்கும்போது எனக்கு என்ன தோன்றுகிறதோ அதுதான் என் கருத்து ஜீவி சார். இதுலயே பாருங்க, மூன்று சுட்டி கொடுத்திருக்கிறார். சுருக்கத்தைப் படித்து இந்தக் கதையைத்தான் நான் முழுமையாகப் படித்தேன் (சுட்டியில்).
நீக்குபொதுவா செவ்வாய் கதைகள் ஆசிரியர்களைவிட, தேர்ந்தெடுத்துப் பகிரும் கதையாசிரியர்கள் சீஸண்ட் என்று நினைக்கிறேன் (செவ்வாயில் விதிவிலக்குகள் நிறைய உண்டு). அந்த எழுத்துக்கும் புதிய கதாசிரியர்கள் எழுத்துக்கும் நிறைய வித்தியாசம் உண்டல்லவா?
ஜூவியில் பல வருடங்களுக்கு முன்பு படித்தேன். பழனியில் படிக்கட்டுகளில் ஏறிக்கொண்டிருந்த ஒருவரை, பாதியில் அங்கிருந்த மிக எளிய மனிதர் கூப்பிட்டு, அப்போது அந்த இடத்தில் திருமணமாகப்போகும் தன் மகளை வாழ்த்தச் சொன்னாராம். இப்படிப்பட்ட நிகழ்வுகளையெல்லாம் படிக்கும்போது, சாப்பாட்டிற்குத் தேவையான பணம் இருக்கும் நம் மனதைக் கொஞ்சம் அசைத்துப் பார்க்கும் அல்லவா? இன்றைய கதை அப்படிப்பட்ட கதைதான்.
புதிய (மிகுந்த அனுபவம் இல்லாத) கதாசிரியர்களை criticize பண்ணியோ இல்லை கதையை போஸ்ட்மார்ட்டம் செய்து அதைரியப்படுத்தியோ நான் எழுதுவதில்லை.
நீக்குகதாசிரியனை விட உயர்ந்தவன் என்ற எண்ணம் வாசகனுக்கு இருக்கக் கூடாது. அப்படிப்பட்ட எண்ணம் ரசித்துப் படிக்கவொட்டாமல் தடுக்கும்.
நீக்கு'கதை தானே, இந்தாப் பிடி" என்று நீட்டுகிற capacity வந்து விட்டால் மற்றவர்களின் எழுத்து கிள்ளுக்கீரையாகி
விடும். இந்த நிலையை அடையவே பயிற்சி பெற வேண்டும்.
ஒரு சிறு அடிக்குறிப்பு.
பதிலளிநீக்குசோ தர்மனின் மூன்று கதைகளையும் ஒப்பிட்டு விவரிக்கும்போது சோகவனம் மேல்தட்டு மக்களுக்கு, வரம் நடுத்தர மக்களுக்கு, அடமானம் கீழ்த்தட்டு மக்களுக்கு என்று கூறியுள்ளேன். இந்த ஒப்பீடு பொருளாதார அளவில் உள்ளான ஒப்பீடு அல்ல. இலக்கிய அறிமுகம் என்ற புத்தி கூர்மையின் அடிப்படையில் ஆகும். இவ்வாறு புரிந்து கொள்ளுமாறு வேண்டிக்கொள்கிறேன்.
Jayakumar
தொழிலதிபர் கனகராஜ் அரசின் முகத்தில் கரியைப் பூசி விட்டார் வாழ்த்துகள்.
பதிலளிநீக்குநடிகர் ராகவா லாரன்ஸ் மற்றும் பாலா நீடூழி வாழவேண்டும்.
உதவிய கரங்கள் அனைத்தும் வாழ்க. விண்வெளி ஆராட்சிக்கு கோயம்புத்தூர் நிலையப் பணி பாராட்டுகள்.
பதிலளிநீக்குகதைகள் வெவ்வேறு கோணங்களில் அசத்தல்.
அடமானம் நெஞ்சை தொட்டது.
அய்யாமார்களே!
பதிலளிநீக்குஅம்மாமார்களே!
அடமானம் கதையின் சுட்டியைக் கிளிக்கி
கதைக்குப் போய்
உங்கள் நேரடி வாசிப்பில் கதையை வாசித்து உங்கள் வாசிப்பு அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளத் தவறாதீர்கள்.
படித்ததை யாரிடமாவது சொல்லியே ஆகவேண்டும் என்று நம்மை பரிதவிக்க வைக்கிற கதையும் எழுத்தும்.
வாசித்து விட்டு நாலு வார்த்தைகள் நம் அனுபவிப்பைச் சொல்லாமலிருக்க முடியாது.
அது முடியாதவர்கள் இந்தக் கதையை வாசிக்காமலேயே இருக்கலாம் என்று தோன்றுகிறது.
அடமானம், எளிய ஏழ்மையனவர்களில், பெண்களே அடமானமாவதையும், அவர்களின் உழைப்பிலேயே குடும்பங்கள் வாழ்வதையும் மனதை உருக்கும் விதமாகச் சொல்லியிருக்கிறார். இந்த மாதிரி மனிதர்கள் வாழ்வதை, கதைகளில் அல்லாமல் நேரடியாகத் தெரிந்துகொள்ளும் வாய்ப்பு நம்மில் பலருக்குக் கிடையாது. அட.. அந்த 3000த்தை நாம் கொடுத்து அடமானத்திலிருந்து அந்தப் பெண்ணை மீட்டுவிடக் கூடாதா என்று தோன்றும் கதை. இதில், கணவனோ இல்லை அவன் வீட்டாரோ குடிகாரனாக இருந்துவிட்டால் போதும், அந்தப் பெண்ணின் வாழ்க்கை பரிதாபகரமாகிவிடும். வாழ்வே ஆயுள் தண்டனையாகிவிடும்.
நீக்குஇதையே மத்திய தர குடும்பங்களில் வேலை பார்க்கும் பெண்ணாகப் பார்த்து
நீக்கு(ஆபிஸ் போற பெண்ணா இல்லேனா, வேணாம்ப்பா) திருமணம் முடிப்பதை என்னவென்று அழைப்பீர்கள்?
கணவனும் மனைவியும் வேலைக்குப் போனால் அவர்கள் குடும்ப குறைந்த பட்ச தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளலாம் என்ற யதார்த்த நிலை நிலவும் கால கட்டம் இது. நான் சமையல் கட்டைப் பார்த்துக் கொள்கிறேன். நீங்கள் இரண்டு பேரும் சந்தோஷமா வேலைக்குப் போய் வாருங்கள் என்று சொல்லும் மாமியார்கள் அமைவது பூர்வ ஜன்ம புண்ணியம்.
நீக்குஅதனால் அடமானம் என்பது கதைக்குத் தலைப்பாய் இருந்தாலும் அது முக்கியமில்லை. கிராமத்து பாணி அடித்தட்டு மக்களின் திருமண பந்தத்தை
நீக்குசடங்குகளை தன் எழுத்தின் மூலம் கண்முன் கொண்டு வந்து நிறுத்தி ஏதோ நாமும் அந்த பரிசம் போடும் நிகழ்வில் கலந்து கொண்ட மாதிரியான யதார்த்த உணர்வை ஆசிரியர் தர்மன் ஏற்படுத்தியிருக்கிறாரே அது தான் எழுதுகலையின் அசாத்திய சாத்தியப் பாடாக எனக்குப் போயிற்று.
அந்தப் பரிசம் போடும் நிகழ்வில் நாட்டாண்மை தான் ஹீரோ. தராசு தட்டைத் தூக்கிய மாதிரி எந்தப் பக்கமும் சாயாத அவர் நடுநிலை, ஏதாவது ஒரு பக்கம்
நீக்குதயக்கம் ஏற்படும் பொழுது அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும் சாமர்த்தியம், முன்னாலேயே இரு பக்க நிலைகளையும் நிச்சயப்படுத்திக் கொள்ளல், அவர் பேச்சுக்குக் கட்டுப்படும் இரு பக்கமும் என்று அத்தனையும் பிரமாதம்.
நம்ம வீட்டு நிச்சயதார்த்தங்களில் பொதுவாகக் காணப்படாத ஒரு காட்சி இது. இந்தக் காலத்து நகர்புறத்துக் கணவன்மார்கள் வாயில்லா பூச்சிகள்.. மனைவிமார்களின் நிலைப்பாடும் அவரின் சொந்த பந்தங்களின் அட்டகாடமும் தான் தூக்கலாகத் தெரியும்.
அந்த கிராமத்து மனிதர்களின் கட்டுப்பாடும், உணர்வுகளின் வெளிப்பாடும் நண்பர் தர்மனின் எழுத்துக்களில் என்னைக் கட்டிப் போட்டன.
இதான்யா கதை அல்லது கதையின் கரு என்று nutshell-ல்
நீக்குஅடக்கிச் சொல்லும் புண்ணியவான்கள்
கதை வாசிப்பை தங்களுக்குள் வளர்த்துக் கொள்ளத் தெரியாதவர்கள்.
எழுதத் தெரிந்த எழுத்தாளன் வாசகரை வாசிக்க வைப்பதற்காக தனக்குத் தெரிந்த சகல சாதுர்யங்களையும் உபயோகித்து வாசகரை வாசிக்க வைப்பான். அதில் எதையாவது ஒன்றைப் பிடித்துக் கொண்டு 'இதான் கதையின் கரு' என்று தனக்குத் தானே தீர்மானிப்பவர்கள் வாசிப்பின் சுகத்தை அனுபவிக்கவே முடியாது. கதை அருமை என்பார்கள். என்ன அருமை என்றால் சொல்லத் தெரியாது.
கதை என்பது ஆரம்பத்திலிருந்து முடிவு வரை எழுத்தாளன் நடத்திச் செல்லும் எழுத்து விளையாட்டு. அந்த விளயாட்டில் ஒவ்வொரு அம்சத்தையும் ரசித்து கதை வாசிப்பைப் பூரணமாக அனுபவிக்கும் பயிற்சி பெறுவோர்
தாங்களும் எழுத வேண்டும் என்ற urge-ல் தவிப்பார்கள். நாளைய நல்ல எழுத்தாளர்களாவும் மிளிர்வார்கள்.
ஜீவி சார்... உங்கள் பின்னூட்டமே பலவற்றை எழுத்த் தூண்டுகிறது. எனக்கு இப்போ நேரமில்லை. சென்னைக்குப் பயணப்படுகிறேன்.
நீக்குநம் வீட்டு நிச்சயதார்த்தங்களில் (பிராமின்) பெரியவர் இல்லை வயதான மாமா இதனைப் பார்த்துக்கொண்டார். சமூகத்தின் அடுத்த தட்டில் திருமணத் தரகர் பார்த்துக்கொண்டார். மற்றவற்றில் ஊர் நாட்டாமை. நீங்கள் சொல்லியிருப்பதுபோல் கதை புது உலகை, கிராமத்து நிகழ்வைத் துல்லியமாக்க் காட்டிற்று
மத்திய தரக் குடும்பங்களில் இருவர் வேலைக்குச் செல்வது வேறு ரகம்.
நீக்குஎபிக்கு எழுதுகிறவர்களே மற்ற பதிவுகளுக்கு பின்னூட்டம் போடுவதின் மூலம் தங்கள் கருத்துக்களைப் பகிர்வதிலிருந்து விலகியிருக்கும் இந்த வரட்சி காலகட்டத்தில் ஆசிரியர் குழுவாயிருந்தால் என்ன, KGG, ஸ்ரீராம் போன்றோரும் அன்றாட பதிவுகளுக்குப் பின்னூட்டமிட்டு எபியின் வழக்கமான உயிரோட்டத்தைக் காக்கலாம் என்பது என் தனிப்பட்டக் கருத்து.
பதிலளிநீக்குஅப்பாடி.. ஒரு வழியாய் நினைத்ததை சொல்லியாயிற்று. :))
கதை அட்டு என்றோ, காரசாரமாக விமர்சனம் செய்தாலோ, பகிர்ந்தவரோ இல்லை எழுதியவரோ, தன்மீதான கோபமே இத்தகைய விமர்சனமாக எழுகிறது என்று நினைத்துவிடுவார்களோ என்ற பயமே குறைந்த பின்னூட்டத்திற்குக் காரணமா? இல்லை பலர் பிஸியாக இருப்பதாலா? (எனக்குத் தெரிந்து கீசா மேடம், கோமதி அரசு மேடம், கீதா ரங்கன் அக்கா போன்றவர்கள் பிஸி, நான் உட்பட)
நீக்குகோடை வெயில் எல்லோரையும் முடக்கிப் போட்டிருக்கிறது. மேலும் வழக்கமாக வருபவர்களில் பலருடையவும் தினசரி கடமைகளும் வேலைகளும் மாறி விட்டதால் அவர்கள் வந்தாலும் பின்னூட்டம் இட முடியவில்லை.
நீக்குஏ பி யை புதிய முறையில் கொஞ்சம் சீரமைத்து புதிய பகுதிகளைத் துவங்கி கொஞ்சம் புத்துணர்ச்சி கொடுத்தால் தான் தளத்தின் வருகை கூடும்.
துவக்க காலத்தில் இருந்த ஆசிரியர்களில் ஸ்ரீராம் மற்றும் kgg மாத்திரமே பொறுப்பில் உள்ளனர். ஸ்ரீராம் வியாழன், வெள்ளி சனி பதிவுலகின் முழுப் பொறுப்பு ஏற்க kgg ஞாயிறு, புதன் பதிவுகளுக்கு முழு பொறுப்பு ஏற்றுள்ளார். திங்கள், செவ்வாய் பதிவுகள் கூட்டு பொறுப்பில் உள்ளன. இந்நிலை மாறி புதிய நிரந்தர ஆசிரியர்களை குழுவில் சேர்த்தால் நலம்.
Jayakumar
எபி வாட்ஸாப் குழுவில் கூட மற்றவர்கள் கருத்தை கவர வேண்டி இந்தப் பதிவை பார்ஃவேர்ட் செய்திருக்கிறேன்.
நீக்குநோ யூஸ்.
@நெல்லை
பதிலளிநீக்குவிமரிசனம் கதையைப் பற்றி மட்டும் இருந்தால் நல்லது. தனி மனிதத் தாக்குதல்கள் விலக்கப் படவேண்டும்.
இன்றைய பதிவிற்கு ஜி வி சார் பின்னூட்டங்களையும் கருத்துகளையும் வாரித் தந்திருக்கிறார். இது அமெரிக்கா போய் வந்ததின் மாற்றமோ அல்ல கோடை வெயிலின் தாக்கமோ? தெரியாது. என்றாலும் விரிவான கருத்துக்கள் கிடைத்த ஒரு பதிவு இது. அவருக்கு பிரத்யேக நன்றி.
பதிலளிநீக்குஇன்றைய 3 கதைகளில் அடமானம் பற்றியே எல்லோரும் கருத்துக் கூறியிருக்கிறார்கள். சிறப்பு கதையாக தேர்ந்தேடுக்கப்பட்ட சோகவனம் பற்றியோ அல்லது உளவியல் கதையான வரம் பற்றியோ யாரும் ஒன்றும் கூறவில்லை. அவர்களது ஆர்வத்தை தூண்டும் வகையில் நான் சரியான முன்னுரை தரவில்லை என்று தோன்றுகிறது.
பத்திவைப் பற்றி கருத்து கூறியவர்கள் யாவருக்கும் நன்றி.
Jayakumar