புதன், 10 ஏப்ரல், 2024

முந்திரிக்கொட்டை தியாகராஜன்!

 

நெல்லைத்தமிழன்: 

அடுத்த வீட்டிலும் கரென்ட் இல்லை - மற்றவர்கள், அதிலும் உறவினர்கள் வெற்றி அடையும்போது பொறாமையும், அவனின் கஷ்டத்தைப் பார்த்து, அப்பாடி... நமக்கு அவ்வளவு கஷ்டமில்லை என ஆதரவு அடைவதும் பலரின் குணமாக இருக்க என்ன காரணம்?

# ஒப்பிடுதல் நம் மனதில் ஆழப் பதிந்திருக்கிறது. ஒருவரை முன் உதாரணமாகக் கொண்டு நீ அவர் போல  முன்னுக்கு வா என்று பலமாக போதிக்கப் பட்டு வருகிறோம். எனவே இயல்பாக நம்மினும் மேலே இருப்பவரைக் கண்டு ஊக்கம் பெறுவதற்கு பதில் பொறாமையும், நம்மினும் கீழே இருப்பவர் மீது அனுதாபத்துக்கு பதிலாக நாம் மேல் என்ற சுய திருப்தியும் அடைகிறோம். உள்நோக்குப் பார்வை, காருண்யம் மங்கிப் போனால் இப்படித்தானே ஆக வேண்டும் ?

சமீபத்தில் சென்னை பயணத்தில் பத்து மணி நேரம் கார் எடுத்தேன். இடையில் பெட்ரோல் போட ஐந்நூறு ரூபாய் கொடுத்தது, செட்டில் பண்ணும் நேரம் நள்ளிரவை நெருங்கிவிட்டதால், காட்டிய தொகையைக் கொடுத்துவிட்டேன். ஐந்நூறு ரூபாய் ஏமாந்துவிட்டேன். நெல்லைப் பகுதியைச் சேர்ந்தவன், என்னென்னவோ விஷயங்களைப் பேசிக்கொண்டு வந்தவன் இப்படி ஏமாற்றுப் பேர்வழியா இருப்பான் என்று நினைக்கலை. ஏழ்மையோ இல்லை பணத் தேவையோ ஒருவனை ஏமாற்றுப் பேர்வழியாக ஆக்கிவிடுமா?

& ஏமாற்றுப் பேர்வழிகள் ஏமாற்றுவதற்கு ஏழ்மையோ அல்லது பணத்தேவையோ காரணமாக இருக்காது. ஏமாறுபவர்கள் இருக்கும்வரை, ஏமாற்றுபவர்களும் இருக்கத்தான் செய்வார்கள். மக்கள் எல்லோருமே எல்லா நேரங்களிலும் விழிப்புணர்வுடன் இருக்க இயலாது. எல்லாவற்றுக்கும் மேலாக நாம் சிலரால் ஏமாற்றப்படவேண்டும் என்ற விதி இருந்தால் அப்படித்தான் நடக்கும். பழனி முருகன் கோவிலுக்கு நாற்பது வருடங்களுக்கு முன்பு நான் பெற்ற அனுபவம் நினைவுக்கு வருகிறது. 

= = = = = = = =

KGG பக்கம் : 

சென்ற வாரம் சிம்பிள் பெண்டுலம் பரிசோதனை பரிட்சை பற்றி எழுதி பாதியில் நிறுத்தியிருந்தேன். 

செகண்ட்ஸ் பெண்டுலம் நீளம் ஏன் 100 வரவில்லை என்பதற்கு நான் எழுதியிருந்த விளக்கம் : " செகண்ட்ஸ் பெண்டுலம் நீளம் 100 செ மீ என்பது நமக்குத் தெரியும் - ஆனால் பரிசோதனை & கால்குலேஷன் படி 99.8 செ மீ வந்ததன் காரணம் PI வேல்யூ = 22/7 என்று நாம் எடுத்துக் கொள்ளும் வேல்யூ தோராயமானது" என்று எழுதியிருந்தேன். 

அந்தப் பரிட்சையில், எனக்கு வாஞ்சிநாதன்  30 / 30 மதிப்பெண் கொடுத்து physics lab மதிப்பெண் 100% என்று பரிட்சை விடைத் தாளின் வெளியில் 100/100 என்று போட்டிருந்தார். 

பரிட்சை பேப்பரை பிரித்துப் பார்த்தால் - நான் எழுதியிருந்த விளக்கத்தை முழுவதுமாக சிவப்பு மசியால் சுழித்து " பேத்தல் " என்று எழுதியிருந்தார். அதோடு கூட "please come and see me" என்றும் எழுதியிருந்தார்! 

அது பற்றி நான் அவரிடம் ஒன்றும் கேட்கவில்லை என்றாலும் - பிறகு பாடம் நடத்தும்போது ஒருநாள் கூறினார் - "PI வேல்யூ என்பது இதுநாள் வரை தொடர்ந்துகொண்டே இருக்கும் வேல்யூ - அது முடிவிலி - 3.14159265358979 என்று தொடங்கி வளர்ந்துகொண்டே இருக்கும் . நம்முடைய சௌகரியத்திற்காக 22/7 என்றும் 3.1416 என்றும் வைத்துக்கொண்டு கணக்கு செய்கிறோம். இதனால் செகண்ட்ஸ் பெண்டுலம் நீளம் கணக்கு செய்வதில் பெரிய மாற்றம் எதுவும் இருக்காது. செகண்ட்ஸ் பெண்டுலம் நீளம் நாம் பரிசோதனை செய்யும் இடத்தின் புவியீர்ப்பு விசை வேல்யூ , நாம் கணக்கு செய்யும் ஸ்டாப் வாட்ச் துல்லியம், உபயோகிக்கும் லாகரிதம் டேபிள் துல்லியம் என்று பல அம்சங்கள் கொண்டது " என்றார். அப்போது எனக்குப் புரிந்தது. 

சில மாணவர்களின் விடைத் தாள்களில் அவர் எழுதும் கமெண்ட்ஸ் படித்தால் சிரிப்பாக வரும். நூற்றுக்கு 30 மார்க் வாங்கிய மாணவரின் விடைத்தாளில், + 5 (தருமம்) = 35 என்று எழுதுவார். 

0 மார்க் வாங்கிய மாணவரின் விடைத்தாளில் " தண்டம் " என்று எழுதுவார். (ஒன்றுமே எழுதாமல் கொடுத்திருந்தால் neetness மார்க் கிடைத்திருக்கும் என்றும் சொல்வார்!) 

= = = = = =

Physics lab பரிசோதனையில் மைக்ரோ மீட்டர் & vernier caliper கொண்டு பொருட்களின் நீள அகலங்களை கணக்கிடுவது ஒரு பரிசோதனை. 

ஒவ்வொருவருக்கும் ஒரு Micrometer, Vernier Caliper , one glass piece, one small stainless steel ball, steel wire எல்லாம் கொடுக்கப்பட்டது. 

அந்த இரண்டு சாதனங்களை வைத்து, சிறிய அளவுகளை துல்லியமாக கணக்கிட வேண்டும் குறிக்கோள். 

மைக்ரோ மீட்டர் கொண்டு கண்ணாடித் துண்டின் தடிமனையும் (thickness) ஸ்டீல் கம்பி விட்டத்தையும் (diameter ) சிறிய ஸ்டீல் பால் விட்டத்தை vernier caliper கொண்டும் அளக்கவேண்டும். 

ஒரு மாணவன் என்ன செய்தார் என்றால், கொடுக்கப்பட்ட கண்ணாடித் துண்டின் thickness அளக்காமல் அதன் நீளத்தை vernier caliper உதவியால் அளந்துகொண்டிருந்தார். 

அதைப் பார்த்த வாஞ்சிநாதன் " அண்ணே என்ன செய்யறீங்க ? " என்று கேட்டார். 

அந்த மாணவர் " கண்ணாடித் துண்டின் நீளத்தை அளக்கிறேன் சார் " என்றார். 

வாஞ்சிநாதன் உடனே " அய்யா - varnier caliper வைத்து உங்கள் ரெகார்ட் நோட் நீளத்தை அளந்து சொல்லுங்க " என்றார். மாணவர் திகைத்துப் போனார்! பிறகு வாஞ்சிநாதன் - அவரிடம், " மைக்ரோ மீட்டர், வர்நியர் காலிபர் எல்லாம் சிறிய அளவுகளை அளக்க மட்டுமே பயன்படுத்தவேண்டும். கொடுக்கப்பட்டுள்ள கண்ணாடித் துண்டு நீள அகலங்கள் எல்லாம் ஒரே சீராக இருக்காது. தடிமன் மட்டுமே அதில் அளக்கவேண்டிய விஷயம்"  என்று எடுத்துக் கூறினார்! 

= = = = = = =

வாஞ்சிநாதன் கூறிய இன்னொரு முக்கிய விஷயம் : 

" பரிட்சை வினாத் தாளில் கேட்கப்பட்டுள்ள கணக்கு பகுதிகளை ஆழ்ந்து படியுங்கள். சில சமயங்களில் கொடுக்கப்பட்டிருக்கும் கணக்கில் தவறு இருக்கலாம் - சில விவரங்கள் குறைவாகக் கொடுக்கப்பட்டிருக்கலாம் - அல்லது தவறான விவரங்கள் கொடுக்கப்பட்டிருக்கலாம் - போர்ட் எக்ஸாம் எழுதும்போது அப்படி கொடுக்கப்பட்டுள்ள கணக்குகளை நீங்கள் attempt செய்திருக்கிறீர்கள் என்றாலே முழு மதிப்பெண் கொடுக்கப்படவேண்டும் என்பது தேர்வு போர்ட் விதி - அத்தகைய சந்தர்ப்பங்களை தவறவிட்டு விடாதீர்கள். " என்று கூறியிருந்தார். 

மேலும் அவர் - " நீங்கள் போர்ட் எக்ஸாம் எழுதும்போது ஏதேனும் கேள்வி அப்படி தவறுதலாக கேட்கப்பட்டிருந்தால் -- எக்ஸ்டர்னல் எக்ஸாமினர் மேற்பார்வையில் பரிட்சை நடத்தப்படுவதால் நான் அது பற்றி நேரடியாக எதுவும் குறிப்பிட இயலாது. ஜாடை மாடையாக குறிப்பிடுவேன் " என்றார். 

வகுப்பில் எம் தியாகராஜன் என்று ஒரு மாணவர். நாங்கள் அவரை முந்திரிக்கோட்டை தியாகராஜன் என்று குறிப்பிடுவோம். வகுப்பில் ரொம்ப ஆக்டிவ் ஆக இருப்பதுபோல காட்டிக்கொள்வார். வகுப்பில் கேட்கப்படும் கேள்விகளுக்கு அவசரமாக அபத்தமான பதிலைக் கூறி பிறகு அசடு வழிவார். 

அந்தக் காலைத்தில் ஃபிசிக்ஸ் பரிட்சையில் மொத்தம் பத்து கேள்விகள் இருக்கும். அவற்றில் ஏதேனும் ஏழு கேள்விகளுக்கு விடை எழுத வேண்டும். ஒவ்வொரு கேள்வியிலும் இரண்டு பகுதிகள் : 

முதல் தியரி பகுதி கேள்விக்கு ஐந்து மதிப்பெண். அதை ஒட்டிய கணக்கு - இரண்டாம் பகுதி கேள்விக்கு பத்து மதிப்பெண்கள்.

( ஆமாம் 7 x 15 = 105 வருகிறதே என்று நீங்கள் நினைக்கலாம் - தியரி பகுதிக்கு முழு மதிப்பெண்கள் யாருக்குமே கிடைக்காது. அதனால் மொத்தம் கணக்கு செய்யும்போது நூறு வரவே வராது!) 

வாஞ்சிநாதன் எப்போதும் என்ன செய்வார் என்றால், போர்ட் எக்ஸாம் மாணவர்கள் எழுதும்போது கேள்வித்தாள் ஒன்றை பரிட்சை ஆரம்பித்தபின் எக்ஸாமினரிடமிருந்து வாங்கி, தன்னுடைய அறையில் உட்கார்ந்து கேள்விகளை நன்கு அலசி ஆராய்ந்து - ஒரு பேப்பரில் கணக்குகளைப் போட்டுப் பார்த்து மாணவர்கள் எல்லோரும் சரியாக எழுதமுடியுமா என்று ஆராய்ந்து பார்த்துக்கொண்டிருப்பார்.  

நாங்கள் அந்த வருடம் எழுதிய physics பரிட்சையில், தவறான கேள்வி ( insufficient data ) ஒன்று வந்திருந்தது. விடுவாரா வாஞ்சிநாதன்? இந்தக் கணக்கை மாணவர்கள் அட்டெம்ப்ட் செய்தாலே பத்து மார்க் கிடைக்குமே என்று நினைத்தார். 

நாங்கள் பரிட்சை எழுதும் பரிட்சை ஹாலுக்கு வந்தார். 

வெளி எக்ஸாமினரிடம் " ஒரு கேள்வி சரியாக அச்சாகவில்லை - நான் அதை சரியாக மாணவர்களுக்குப் படித்துக் காட்டிவிட்டு செல்கிறேன் " என்றார். 

எக்ஸாமினர் சம்மதித்தவுடன் " ஒரு கணக்குக் கேள்வி சில கேள்வித் தாள்களில் சரியாக அச்சாகவில்லை. நான் அதை சரியாக படித்துக் காட்டுகிறேன். உங்கள் கேள்வித் தாளில் அது சரியாக அச்சு ஆகவில்லை என்றால், இப்பொழுது அதை சரியாக எழுதிக் கொள்ளுங்கள் " என்று சொல்லி, அந்தக் குறிப்பிட்ட கணக்குக் கேள்வியை நிதானமாக நிறுத்தி படித்தார். 

எப்பொழுதும்போல நம்ம முந்திரிக்கோட்டை தியாகராஜன், " சார் - என்னுடைய கேளவித்தாளில் அது சரியாகத்தான் இருக்கு. ஒன்றும் பிரச்சனை இல்லை " என்றார். 

வாஞ்சிநாதன் அவரை ஒரு தடவை முறைத்துப் பார்த்துவிட்டுச் சென்றார்.

நாங்கள் வாஞ்சிநாதன் உணர்த்திய குறிப்பை தெரிந்துகொண்டு, எல்லோரும் அந்தக் கணக்கை அட்டெம்ப்ட் செய்து given data (கொடுக்கப்பட்டுள்ள விவரங்கள் ) எல்லாவற்றையும் எழுதி, கீழே insufficient data என்றும் எழுதிவைத்தோம். 

பரிட்சை எழுதி முடித்து எல்லோரும் வெளியே வந்தோம். வாஞ்சிநாதன் எம் தியாகராஜனை தன்னுடைய அறைக்கு அழைத்து, அவரிடம் " நான் எதற்கு பரிட்சை எழுதும் ஹாலுக்கு வந்தேன், என்ன சொன்னேன், எதற்கு சொன்னேன் ? என்று தெரிந்ததா ?"  என்று கேட்டார். 

" ஆமாம் சார் - ஒரு கணக்குக் கேள்வி சரியாக அச்சாகவில்லை என்று சொன்னீர்கள். என் கேள்வித்தாளில் அது சரியாக இருந்தது - ஆனால் நான் அதைப் பற்றிக் கவலைப்படவில்லை. அந்தக் கேள்வியை சாய்ஸ்ல விட்டுட்டேன்" என்றார். 

வாஞ்சிநாதன் அவரிடம் விஷயத்தை விளக்கிக் கூறியதும், வழக்கம்போல மிஸ்டர் எம்டி ( MT / empty ) அசடு வழிந்தார்! 

= = = = = = = =

20 கருத்துகள்:

  1. வாஞ்சிநாதன் சார் அவர்களின் ஆர்வமும் உழைப்பும், மாணவர்களுக்குச் சொல்லிக்கொடுத்த விதமும் மிகவும் கவர்ந்தது.

    இருந்தாலும் போர்ட் எக்சாமில் அரைகுறையாக்க் கேட்கப்பட்டிருந்த கேள்வியை மாணவர்களுக்குக் குறிப்பால் உணர்த்தியது தவறு இல்லையா?

    பதிலளிநீக்கு
  2. 50 வருடங்களுக்கு முன் நடந்த விஷயங்களை துல்லியமாக நினைவில் வைத்திருப்பது ஆச்சர்யம் தான். பாடங்களைத் தவிர பிற அனுபவங்கள் இல்லையா? அவற்றில் சிலதையும் எழுதலாமே.
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முன் அத்தியாயங்களில் பாடம் தவிர்த்த விஷயங்களை நிறைய எழுதியுள்ளேன். இனியும் எழுதுவேன்.

      நீக்கு
  3. என் அப்பா,விடைத்தாளை மதிப்பீடு செய்யும் (பத்தாம் வகுப்பு) சென்டரின் சூபர்வைசராக இருந்த சென்டருக்கு என் கணக்கு விடைத்தாள் வந்தது. பத்து விடைத்தாள்களுக்கு (?) ஒன்றை என் அப்பா, எப்படித் திருத்தப்பட்டிருக்கு, சரியாகத் திருத்துகிறார்களா என்று சரிபார்க்க வேண்டுமாம். என் விடைத்தாளைப் பார்த்தபோது, மதிப்பெண்களைக் கூட்டுவதிலும், ஒரு கணக்கைத் திருத்துவதிலும் தவறைக் கண்டாராம். மதிப்பெண் கூட்டலு மாத்திரம் சரிசெய்யச் சொன்னாராம். கொஞ்சம் பார்த்துப் போடுங்க என்று சொன்னால் கூட மார்க் வந்திருக்குமே எனக் கேட்டதற்கு, அதெல்லாம் வாழ்க்கைக்குப் பிரயோசனப்படாது என்றார். சில மாதங்கள் கழித்து அவர் இருந்த தாளவாடி போயிருந்தபோது என் விடைத்தாளைக் காட்டினார். ம்ம்ம் அப்கோதெல்லாம் போட்டோஎஆப்பி இருந்திருந்தால் நினைவுக்கு எடுத்துவைத்துக்கொண்டிருக்கலாம்.

    ஆறாம் வகுப்பு படித்தபோது, கண்ணைக் கட்டிச் சுற்றிவிட்டு தூரத்தில் தொங்கவிடப் பட்டிருக்கும் பானையை உடைக்க வேண்டும். அந்தப் போட்டியில் முதல் பரிசு பெற்றதற்கு (எனக்கு கண்ணைக் கட்டிவிட்டாலும் திசை கவனம் இட கவனம் உண்டு) ஹெட்பாஸ்டர் என்ற முறையில் அப்பா கையெழுத்திட்ட சர்டிபிகேட் கிடைத்தது. 88ல் அதனைத் தொலைத்துவிட்டேன்.

    பதிலளிநீக்கு
  4. மிகுந்த நினைவு சக்தியோடு நீங்கள் எழுதுவது நன்றாக இருக்கிறது. ஒரு காலத்தில் வெர்னியர் காலிப்பர் உபயோகித்தது நினைவுக்கு வந்தது.

    பதிலளிநீக்கு
  5. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  6. கற்பக கணபதி
    கனிவுடன் காக்க..
    முத்துக்குமரன்
    முன்னின்று காக்க..
    தையல் நாயகி
    தயவுடன் காக்க..
    வைத்திய நாதன்
    வந்தெதிர் காக்க..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  7. வாஞ்சிநாதன் ஐயா போன்றோர் மாணவர்களுக்குக் கிடைத்த வரப்பிரசாதம்!..

    பதிலளிநீக்கு
  8. பிப்பெட், பியூரெட், வர்னியர் காலிப்பர், தனி ஊசல்...

    தவளைக் குட்டீஸ்களை மல்லாக்கப் போட்டு வயிற்றைத் திறக்கின்ற தொழில் நுட்பம்...

    இத்தனைக் காலம் ஓடிப்போனதே தெரியவில்லை..

    காலத்தை அப்படியே யாரேனும் நிறுத்தி வைத்திருக்கக் கூடாதா?..

    பதிலளிநீக்கு
  9. பள்ளிக்காலம் பற்றி நன்றாக சொல்லி வருகிறீர்கள். வாஞ்சி நாதன் போன்ற ஆசிரியர்கள் கிடைப்பது மாணவர்களுக்கு கொடைதான்.

    பதிலளிநீக்கு
  10. வணக்கம் சகோதரரே

    இன்றைய கேள்வி பதில்கள் அனைத்தும் எப்போதும் போல் அருமை.

    படிக்கும் பருவத்தில் நல்ல ஆசிரியர் அமையவும் கொடுத்து வைத்திருக்க வேண்டும். தாங்கள் திரு. வாஞ்சிநாதன் போன்ற சிறப்பான ஆசிரியரை பெற்றதற்கு மகிழ்ச்சி. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!