சனி, 27 ஏப்ரல், 2024

பீடி தொழிலாளியின் மகன் ஐ ஏ எஸ் மற்றும் நான் படிச்ச கதை

 

சிறப்பு மிகுந்த இட்லியை விற்பனை செய்து மாதமொன்றுக்கு லட்சக்கணக்கில் வருமானம் ஈட்டுகிறார் சென்னை மறைமலைநகரைச் சேர்ந்த ஆர்.என். ரமேஷ். எம்.ஏ., படித்துள்ள இவர், இட்லி வியாபாரத்தில் இறங்கியதை கண்டு எள்ளி நகையாடிய நண்பர்களும், உறவுகளும் இன்று இவரது வளர்ச்சியைக் கண்டு வாய்பிளந்து நிற்கின்றனர். [Thank you KJC Sir}


====================================================================================================

மராவதி, ஆந்திர சட்டசபை தேர்தலில் போட்டியிடும் தெலுங்கு தேசம் கட்சியின் பெண் வேட்பாளர் ஒருவர், உயிருக்கு போராடிய பெண்ணிற்கு பிரசவம் பார்த்ததுடன், தாயையும், குழந்தையையும் காப்பாற்றி, அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளார்.
ஆந்திராவில், அடுத்த மாதம் 13ல் லோக்சபா மற்றும் சட்டசபைக்கு ஒரே கட்டமாக ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது.  இதையொட்டி, அனைத்து அரசியல் கட்சியினரும் தீவிர தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.  இந்நிலையில், பிரகாசம் மாவட்டத்தில் உள்ள தார்சி சட்டசபை தொகுதி யில், தெலுங்கு தேசம் கட்சி சார்பில் கோதிபதி லட்சுமி என்பவர் போட்டியிடுகிறார். டாக்டராக உள்ள இவர், அரசியல் பின்னணி உடைய குடும்பத்தைச் சேர்ந்தவர். தேர்தலில் முதல்முறையாக களமிறங்குகிறார்.

இதற்கிடையே, கர்ப்பிணி ஒருவர், குண்டூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அபாய கட்டத்தில் இருப்பதாக லட்சுமிக்கு தகவல் கிடைத்தது.  உரிய டாக்டர்கள் இல்லாததால், அந்த பெண்ணின் நிலை மிகவும் சிக்கலாக இருப்பதாக அவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.  
இதையடுத்து அங்கு சென்ற கோதிபதி லட்சுமி, அந்த பெண்ணிற்கு அறுவை சிகிச்சை செய்து தாயையும், குழந்தையையும் காப்பாற்றினார்.

தேர்தல் வேலை இருந்தபோதும், அதை பொருட்படுத்தாமல், ஒரு பெண்ணின் உயிரை காப்பாற்றிய அவரை பல தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.

========================================================================================

அரசு வேலையை உதறி, ஆட்டு பண்ணை நடத்தி வரும் தஞ்சாவூர் மாவட்டம், குருவாடிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் சதீஷ்குமார்:




கடந்த 2009ல், தேர்வெழுதி இரண்டாம் நிலை காவலராக சேர்ந்தேன். அப்படியே 10 ஆண்டுகள் ஓடிடுச்சு. வேலை பளு அதிகமாச்சே தவிர, சம்பளத்தில் பெருசாக மாற்றம் இல்லை. அந்த நேரத்தில் தான் வேலையை விட்டுட்டு சொந்தமாக தொழில் பண்ண முடிவெடுத்தேன்.  அதனால், உடற்பயிற்சி மையம் வைக்கலாம்னு முடிவு பண்ணி தஞ்சாவூரில் துவங்கினேன். அடுத்து, இன்னொரு தொழிலும் இருந்தால் கூடுதல் வருமானத்துக்கு உதவியாக இருக்கும்னு நினைச்சேன். வேற என்ன தொழில் செய்யலாம்னு யோசிக்கும்போது தான் ஆட்டு பண்ணை துவங்கும் யோசனை வந்தது.  கொடி ஆடு, சேலம் கருப்பு என்ற இரண்டு வகையான நாட்டு ஆடுகள் வளர்த்துக்கிட்டு இருக்கேன். இந்த ஆடுகளுக்கு தேவையான பசுந்தீவனமும் பயிர் பண்ணிக்கிட்டு இருக்கேன்.  கறிக்கடைகளுக்கு கொடுக்காமல் நாமளே நேரடியாக மக்கள்கிட்ட விக்கணும்னு முடிவெடுத்தேன். சோஷியல் மீடியாக்களில் என் பண்ணையை பற்றியும், நாட்டு ஆடுகள் வளர்ப்பு முறைகள் பற்றியும் நிறைய வீடியோ பதிவு செய்தேன்.  அதை பாத்துட்டு தீபாவளி, பொங்கல், ரம்ஜான் உள்ளிட்ட பண்டிகைகளுக்கும், கோவில் திருவிழாக்களில் நடக்கும் கிடா வெட்டு, கல்யாணம், காது குத்து மாதிரியான வீட்டு விசேஷங்களுக்கும் என் பண்ணையை தேடி, மக்கள் வர துவங்கினர்.  
பொதுவாக, 2-3 மாதங்களுக்கு ஒரு முறை, 10- - 15 கிலோ எடையுள்ள சின்ன ஆடுகள், 40 வாங்குவேன். ஒரு ஆடு ஒரு மாதத்திற்கு இரண்டரை முதல் 3 கிலோ வரை எடை ஏறும் அளவுக்கு தீவனம் கொடுப்பேன்.  ஒரு கிடா, அடுத்த ஆறு மாதத்தில் விற்பனைக்கு தயாராக இருக்கும் போது, சராசரியாக 30 கிலோ எடை இருக்கும். 1 கிலோ உயிர் எடை, 500 ரூபாய் என, விற்பனை செய்வது வாயிலாக, 15,000 ரூபாய் வருமானம் கிடைக்கும்.  ஒரு ஆண்டிற்கு, 120 ஆடுகள் விற்பனை செய்வது வாயிலாக, மொத்தம் 18 லட்சம் ரூபாய் வருமானம் கிடைக்கும். பராமரிப்பு, தீவனம் உட்பட எல்லா செலவுகளும் போக, ஆண்டிற்கு, 8.20 லட்சம் ரூபாய் லாபம் கிடைக்குது.  நான் ஏற்கனவே பார்த்த போலீஸ் வேலையில் மாசத்துக்கு, 40,000 ரூபாய் சம்பளம். ஆண்டிற்கு, 4.80 லட்சம் ரூபாய் கிடைத்தது. ஆனால், நேரம், காலம் பார்க்காமல் உழைக்கணும்.  நேரத்துக்கு சாப்பிட முடியாது, துாங்க முடியாது. அதே உழைப்பை இங்கே போட்டு, இரண்டு மடங்கு வருமானம் ஈட்டிக்கிட்டு இருக்கேன். 'அரசாங்க வேலையை விட்டுட்டு ஆடு மேய்க்கிறியா'ன்னு கிண்டல் பண்ணவங்களெல்லாம் இப்போது ஆச்சரியமாக பார்க்கின்றனர்.

தொடர்புக்கு:  95000 29243

===============================================================================================

பீடி சுற்றும் தொழிலாளியின் மகனான நந்தலா சாய் கிரண், எந்த பயிற்சி மையத்திற்கும் செல்லாமல், சொந்த முயற்சியிலேயே சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்று ஐஏஎஸ் ஆகியுள்ளார். இதோ அவரது வெற்றிக்கதையை விரிவாகப் பார்க்கலாம்.  [Thank you KJC Sir}



=========================================================================================

அரசுப் பள்ளிகள் என்றாலே பெற்றோர்கள் மத்தியில் சிறு மனத்தயக்கம் ஏற்படும் சூழலே நிலவி வருகிறது. போதிய உட்கட்டமைப்பு வசதி, கழிப்பறை தூய்மையின்மை, ஆங்கிலவழி கல்வியின்மை என அரசுப்பள்ளிகள் குறித்து நெடுங்கால குற்றசாட்டுகளையும் முன்வைத்து வருகின்றனர். இந்நிலையில், இந்தியாவில் அரசுப் பள்ளிகளைப் பற்றி நாம் நினைக்கும் முறையையே மாற்றும் நோக்கில் பள்ளிகளை மாற்றி வருகிறது கேரள அரசு. அதற்கான பிரம்மாண்ட உதாரணமாய் இருக்கிறது கோழிக்கோடு மாவட்டத்திலுள்ள நடக்காவு பகுதியில் இயங்கிவரும் அரசு தொழிற்கல்வி பெண்கள் மேல்நிலை பள்ளி.  [Thank you KJC Sir}


============================================================================================================================================================

நான் படிச்ச கதை
JKC 

முடிவற்று நீளும் கோடை
கதையாசிரியர்: யுவன் சந்திரசேகர்

இயற் பெயர் சந்திரசேகர். பிறப்பு 1961, சோழவந்தான் அருகில் உள்ள கரட்டுப்பட்டி. வணிகவியல் இளங்கலை முடித்து பாரத ஸ்டேட் வங்கியில் பணிபுரிந்து ஒய்வு பெற்றார். தற்போது சென்னை சிட்லபாக்கத்தில் வசிக்கிறார்.

இவரின் இலக்கிய ஈடுபாடு தேவத்தச்சன் அவர்களால் தூண்டப்பட்டு ஜெ
மோ, சுந்தர ராராமசாமி ஆகியோரின் ஊக்கத்துடன் வளர்ந்தது. இவர்
முதலில் கவிதைகள் தான் எழுதினார்.

யுவன் சந்திரசேகர் தன் மாற்றுமெய்மை (alternate facts) சார்ந்த பார்வையை
முன்வைக்க கவிதைகள் உகந்த வடிவமல்ல என்று கண்டுகொண்டார்.
ஆகவே புனைவிலக்கியத்திற்குத் (stories) திரும்பினார். யுவன்
சந்திரசேகரின் புனைவுலகம் மேல்தளத்தில் ஒன்றுக்கொன்று
தொடர்பற்றவை போல நிகழ்ந்துகொண்டிருக்கும் பல நிகழ்வுகள் அடியில் வேறொரு தர்க்கமுறையால் ஒருங்கிணைக்கப்பட்டிருப்பதை, அதன் வழியாக அன்றாடவாழ்க்கையால் அறியமுடியாத ஒரு மெய்மை
வெளிப்படுவதை காட்டும் தன்மை கொண்டவை. ஆகவே 
உதிரிக்கதைகளின் தொகுதியாகவே அவருடைய சிறுகதைகள்
அமைந்துள்ளன. நவீனத்துவச் சிறுகதையின் ஒருங்கிணைந்த
கதைவடிவுக்கு பதிலாக கதைக்குள் கதை என விரிந்து செல்லும்
முன்னுரை.

பானு (அக்கா) கோவித்துக்கொள்ளக்கூடாது. இந்தக் கதை
தேர்ந்தெடுக்கப்பட்டது தற்செயல் தான். மன்னிக்க வேண்டுகிறேன்.
முடிவற்று நீளும் கோடை என்ற இக்கதை சுஜாதாவின் ஒரு பாணியான
முடிவை (பானு அக்காவின் மரணம்) முன்பே கூறி வாசிக்கும் ஆர்வத்தைத்
தூண்டுகிறது. ஆனால் இந்த முடிவு கதைக்குள் கதையாக வரும் ஒரு
கதையின் முடிவு தான். இவரது கதைகளின் சிறப்பு ‘மேல்தளத்தில்
ஒன்றுக்கொன்று தொடர்பற்றவை போல நிகழ்ந்துகொண்டிருக்கும் பல
நிகழ்வுகள் அடியில் வேறொரு தர்க்கமுறையால் 
ஒருங்கிணைக்கப்பட்டிருப்பதை, அதன் வழியாக அன்றாட வாழ்க்கையால் அறியமுடியாத ஒரு மெய்மை வெளிப்படுவதை காட்டும் தன்மை கொண்டவை.’ என்று முன்பே கண்டோம். அவ்வாறு அமைந்ததே இந்தக் கதையும்.

தலைப்பு ஒரு உருவகம். கோடை என்றால் வறட்சி. முதல் கதை
வம்சத்தில் சந்தான பாக்கியம் இல்லாமை என்ற வறட்சியைப் பற்றிய
கதை.

தாத்தா ஒரு புரோகிதர். புரோகிதம் ‘செய்வினைகள் வைப்பதிலும்
எடுப்பதிலும் வல்லவராம் தாத்தா. இவரால் பாதிக்கப்பட்ட யாரோ கொடுத்த சாபம்தான், அடுத்த தலைமுறைக்குக் குழந்தை வறட்சியாக வந்து சேர்ந்ததாம்.’

இந்தக் கதையின் ஒரு பகுதி தான் பானு அக்கா கதை.  மூலக் கதையை
ஆசிரியர் அவரது 50 வயதில் எழுதுவது போன்று எழுதியுள்ளார்.
அக்கதையின் ஒரு பகுதி தான் பானு அக்கா கதை.

ஆனால் பானு அக்கா கதையைக் கூறும்போது 10 வயது சிறுவனாக கதை
நிகழ்ந்த காலத்துக்குள் சென்று கதையை விவரிக்கிறார். பானு அக்கா
இறந்தது அவரது பள்ளி கோடை விடுமுறையில்.

ஆக கோடை-வறட்சி-சந்தான வறட்சி-காரணம் என்று எல்லாவற்றையும்
கடைசியல் சேர்த்து ஒரு முடிச்சு போடுகிறார். தலை சுத்துதா? (This is what we
can say “lateral thinking to find alternate facts”)

பானு அக்காவின் கதை அந்தக் கால ஆர்யமாலா-காத்தவராயன் முதல்
பாரதிராஜாவின் வேதம் புதிது வரை கையாளப்பட்ட ஒன்று தான்.
குடும்பத்தில் ஒரே பெண்ணான சித்தப்பாவின் மகளான ஐயங்கார் பெண்
பானு அக்கா. அடுத்தவீட்டு தேவர் மகன் பன்னீர்செல்வத்தைக் காதலிக்கிறாள்.

காதல் முற்ற வீட்டாருக்கு தெரிய வர தேவர் குடும்பம் சம்மதித்தாலும்
ஐயங்கார் குடும்பம் ஒத்துப்போகாமல் கடைசியில் கொல்லப் படுகிறாள்.
அக்காட்சி நெஞ்சை உலுக்கும்.

கதை நீளமானது. முடிந்தவரை சுருக்கியுள்ளேன். கதை ஆசிரியரின்
சுயசரிதையை (கதையில் உள்ள பகுதி) நீக்கிவிட்டேன்.  கதையின்
போக்கையும் மாற்றி அமைத்துள்ளேன். கதை sirukathaigal.com இல் இருந்து
எடுக்கப்பட்டது. கதையின் சுட்டி கடைசியில் தரப்பட்டுள்ளது.

முடிவற்று நீளும் கோடை
கதையாசிரியர்: யுவன் சந்திரசேகர்
கதைச்சுருக்கம்.

சோழவந்தானுக்கு அருகில் இருந்த இரண்டு ஏக்கர் நன்செய் நிலம் எங்கள்
பரம்பரைச் சொத்து. தாத்தா புரோகிதராகத் தொழில் செய்து சம்பாதித்தது.

அவர் இன்னொரு தொழிலும் செய்தார் என்று உறவினர் வட்டாரத்தில் பேச்சு உண்டு. செய்வினைகள் வைப்பதிலும் எடுப்பதிலும் வல்லவராம் தாத்தா.  இவரால் பாதிக்கப்பட்ட யாரோ கொடுத்த சாபம்தான், அடுத்த
தலைமுறைக்குக் குழந்தை வறட்சியாக வந்து சேர்ந்ததாம்.

தாத்தாவின் புகழ் காரணமாக நேர்ந்த இன்னொரு விளைவு, ஒன்றுவிட்ட
இரண்டுவிட்ட என்றெல்லாம் எந்த உறவினரும் எங்கள் வீட்டுப் படி மிதிக்க
மாட்டார்கள் – நாங்களும் யார் வீட்டுக்கும் சென்றது கிடையாது…
நாங்கள் தல்லாகுளத்தில் குடியிருந்தோம். தங்கவேலு முதலியார் வீட்டு
மாடியில். கீழே புஜங்க ராவ் என்ற கன்னடத்துக்காரர் குடும்பம். அவரும் என் அப்பாவும் முன் ஜென்மங்கள் பலவற்றிலும்கூட விரோதிகளாய் இருந்துவந்த மாதிரி நடந்துகொள்வார்கள்.

ராமருக்கும் பெரியப்பாவுக்கும் ஒரு ஒற்றுமையும் ஒரு வேற்றுமையும்
உண்டு. ராமர் மாதிரியே இவரும் நீலமேக சியாமள வர்ணன். ராமருக்கு
இரட்டைக் குழந்தைகள் உண்டு அல்லவா? பெரியப்பாவுக்குக் குழந்தைகள் கிடையாது. அவர் அதைப் பற்றிக் குறைப் பட்டுக் கொண்டதும் இல்லை. பானு அக்காவையும் என்னையும் தமது சொந்தக் குழந்தைகளாகவே பாவித்தார்.

பானு அக்கா குடும்பம் அலங்காநல்லூர் போகும் வழியில் சிறுவாலை
கிராமத்தில் வசித்தது. சிக்கனம் கருதித்தான். பிரபல மோட்டார் நிறுவனம் நடத்திய மருத்துவமனையில், சொற்ப சம்பளத்தில், கணக்கராக இருந்தார் சித்தப்பா. அந்த வளாகத்துக்குள் இருந்த ஆஞ்சநேயர் கோவிலுக்கும் அவர்தாம் அர்ச்சகர். அதற்குத் தனி அலவன்ஸ் உண்டு.

என்னுடைய அப்பா நான் மேலே சொன்ன மோட்டார் நிறுவனத்தின்
பிரம்மாண்டமான பட்டறையில் இருந்த உணவகத்தில் மேற்பார்வையாளராக இருந்தார். காய்கறி, மளிகைச் சாமான்கள் கொள்முதல் செய்வதில் மிச்சம் பிடித்து ஏகமாய்ச் சம்பாதித்தார் என்று பின்னாட்களில் கேள்விப்பட்டேன்.

இப்படியாக, மூன்று வெவ்வேறு இடங்களில் வேர்பிடித்த கூட்டுக்குடும்பம்
எங்களுடையது.

பானு அக்கா எஸ்ஸெஸ்ஸெல்ஸி முடித்தாள். அப்போது சித்தப்பா இரண்டு காரியங்கள் செய்தார். ஒன்று, பள்ளியில் முதல் மாணவியாகத் தேறிய அக்காவை லேடி டோக் கல்லூரியில் பி யூ ஸி சேர்த்தது. இரண்டாவது, குடித்தனத்தை மதுரை நாராயணபுரம் ஐயர் பங்களாவுக்கு அருகில் மாற்றியது.

இளங்கலை சிறப்புக் கணிதம் இரண்டாம் வருடம் முடிந்ததும் பானு அக்கா தன் பங்குக்கு ஒரு காரியம் செய்து அப்பாவை உசுப்பேற்றினாள். சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொண்டது மட்டுமில்லாமல், புதிய சைக்கிளைக்
காட்டுவதற்காக நேரே எங்கள் வீட்டு வாசலில் வந்து இறங்கினாள்.


அப்பாவின் முகத்தில் பொங்கிய ஆத்திரத்தை இன்னமும் என்னால் மறக்க முடியவில்லை

‘கோந்து, மத்தியானமா நாராயணபுரம் வறியாடா? ஒனக்கும் சைக்கிள் கத்துத் தரேன்.’

புயல்மாதிரி எழுந்தார் அப்பா.

‘தப்பிலிக் கடங்காரி, நீ கெட்டது மட்டுமில்லாமெ, எம் புள்ளையையும்
சீரழிக்கணுமோ?…’

உயர்ந்த வேகத்தில் அப்பாவின் கை தானாக இறங்கியது.

‘…பொட்டெச்சியெக் கைநீட்டற வழக்கம் இந்தக் குடும்பத்திலே கிடையாது. நீ பொட்டெக்குட்டியாப் பெறந்தியோ தப்பிச்சியோ. கெளம்பு கெளம்பு…’ என்று மறுபடி தடாலென்று உட்கார்ந்தார்.

வாங்கித் தின்ன என்று அம்மா கொடுக்கும் காசில், வீட்டுக்குத் தெரியாமல் அவர் சைக்கிள் எடுத்து நான் ஓட்டக் கற்றுக்கொண்டதும், சூறாவளி மாதிரி ஓட்டுவேன் என்பதும், திருஞானத்துக்கும் எனக்குமான போட்டிகளில் எப்போதுமே நான்தான் ஜெயித்து வந்தேன் என்பதும் தெரியாமல் அடித்துக்கொள்கிறார்களே, இவர்களெல்லாம் என்ன பெரியவர்கள் என்று உள்ளுக்குள் சிரித்துக்கொண்டேன்.

அப்பாவின் குடும்பத்தில், பானு அக்காவைத் தவிரப் ’பொட்டெக் குட்டி’ வேறு யாரும் இல்லையே என்றும் தோன்றியது.

அந்த வியாழக்கிழமை சாயங்காலம், திருஞானம் ஒரு புது யோசனை
சொன்னான்:  ‘எலே நெய்க் கருவாடு, சும்மா தல்லாகுளத்துக்குள்ளேயே ஓட்டிக்கிட்டிருந்தாப்போதுமா, வேற ஏரியாவுக்குப் போவம்டா’ என்றான். எனக்கு உள்ளூற உதறியது. யாராவது பார்த்துவிட்டால், முதுகுத் தோல் உரிந்துவிடுமே?'

ஆனாலும், திருஞானத்திடம் தோற்பது கேவலமில்லையா?  "எந்தப் பக்கம் போலாம்?"

"ரிசர்வ் லைன் பக்கம். அங்கிட்டுத்தான் வெறிச்சுனு கெடக்கும்."

கோவில் வாசலில் பானு அக்காவின் சைக்கிள் மாதிரியே புது சைக்கிள்
நின்றிருந்தது. ’அட’ என்று வியந்தவாறே எங்கள் வண்டிகளை நிறுத்திவிட்டுக் கோவிலுக்குள் போனோம். உள்ளே எனக்கு இரண்டு ஆச்சரியங்கள் காத்திருந்தன.

வாசலில் நின்றது அக்காவின் வண்டியேதான். ஆனால், அக்கா தனியாக
வரவில்லை. அவளுடைய தோளில் இடித்துக்கொண்டு, பன்னீர்செல்வம்
அண்ணன் நின்றிருந்தார். ஒரு கணம் எனக்குள் பொறாமை உயர்ந்து
அடங்கியது. அடுத்த கணத்தில் கடும் பீதி எழுந்தது. கல்யாணம் ஆனவர்கள் மாதிரி இவ்வளவு நெருக்கமாக நிற்கிறார்களே?

பன்னீர் அண்ணன் சித்தப்பா வீட்டுக்குப் பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர்.
மிலிட்டரியில் இருந்தார். வருஷத்துக்கு ஒரு தடவை லீவில் வருவார்.
அக்கா என்னைப் பார்த்துவிட்டாள். அவரிடம் ஏதோ சொன்னாள். இருவரும் சிரித்தவாறே என்னைப் பார்த்து வந்தார்கள். அக்கா என்னையே பார்த்துக்கொண்டு நீட்டிய கையில், சட்டைப்பையிலிருந்து எட்டணா நாணயத்தை எடுத்து வைத்தார் அவர். அக்கா என் உள்ளங்கையைப் பிரித்து, காசை வைத்து அழுத்தினாள்.

"வாங்கித் திங்க வச்சுக்கோடா கோந்தூ. இம்புட்டுத் தொலவு நடந்தேவா
வந்தே?…"

இதற்குள் திருஞானம் எங்கள் இருவர் சைக்கிள்களுக்கும் நடுவில்
நின்றிருந்தான். நான் முட்டாள்தனமாக அவனையும் சைக்கிளையும்
பார்த்தேன்.

"…அட ராஸ்கல், சைக்கிள் ஓட்டத் தெரியுமா ஒனக்கு? அன்னிக்கிச்
சொல்லவேயில்லியே? அமுக்கன்டா நீ"  சிரித்துக்கொண்டே பன்னீர் அண்ணனைத் திரும்பிப் பார்த்தாள். அவர் ’போகலாம்’ என்கிற மாதிரித் தலையசைத்தார். அக்கா மறுபடி என்னிடம் திரும்பினாள். என் தலையைக் கோதியபடி குனிந்து என் முகத்துக்கருகில் வந்தாள்.

‘கோந்து, அக்காவை நீ பார்க்கவே யில்லே. சரியா?’

இத்தனை வருடங்கள் ஓடிவிட்டது. கிட்டத்தட்ட நாற்பது வருடங்கள்.
ஏகப்பட்ட விஷயங்களை வயது மழுங்கடித்திருக்கிறது. ஆனால், சில
விஷயங்கள் மட்டும் அழுத்தமாக நினைவில் இருக்கின்றன. சித்தப்பா வீட்டு வராந்தாவில் பரமத் தேவர் வந்து உட்கார்ந்திருந்த சந்தர்ப்பமும்
அப்படித்தான்.

பெரியப்பா தம்பதியும், எங்கள் குடும்பமும் சித்தப்பா வீட்டில்
குழுமியிருந்தோம். என்ன காரணத்துக்காக என்று குறிப்பாக நினைவில்
இல்லை. சுருட்டு மணம் கமழ, பரமத் தேவர் சித்தப்பா வீட்டுக்கு என்ன
காரணமாய் வந்தார், தானாக வந்தாரா, அழைத்ததால் வந்தாரா, அதற்கு
முன்னால் என்னவெல்லாம் நடந்தது என்று எவ்வளவோ யோசித்தும்
ஞாபகம் வர மாட்டேனென்கிறது.

சித்தப்பா வீட்டுக்குப் பக்கத்து வீட்டில் வசித்தவர் பரமத் தேவர். பன்னீர்
செல்வம் அண்ணனின் தாய்வழித் தாத்தா. அண்ணனின் அப்பாவை இளம் வயதிலேயே ஏதோ தகராறில் வெட்டிக் கொலை செய்துவிட்டார்கள்.
அப்போது அண்ணனுக்கு இரண்டு வயது. மதிய உணவுக் கூடத்தில்
ஆயாவாக இருந்த மகளுக்கும் பேரனுக்கும் காவலாக பரமத் தேவர் வந்து
சேர்ந்தார். அவர் காவல்துறையில் சர்வீஸ் முழுக்கக் கான்ஸ்டபிளாக இருந்து ஓய்வு பெற்றவர். தலை சதா நடுங்கிக்கொண்டே யிருந்தாலும், வார்த்தைகள் உறுதியாக வந்து விழும்.

பெரியப்பாவும் சித்தப்பாவும் நிற்கிறார்கள். அப்பாவும் தேவரும் ஆளுக்கொரு நாற்காலியில். தேவர் கரகரத்த குரலில் பேசியது நினைவிருக்கிறது:  ‘…ஐயிரு மேல எனக்கு…'

'…ஐயங்கார்…’ 

‘இதுலெ என்னாங்க இருக்கு. அவுக படுக்கப் போடுறாக. நீங்க நட்டக்குத்தலா நிறுத்திக்கிர்றீக. எல்லாம் மூணு கோடுதானெ சாமீ?’

அப்பாவின் முகம் கடுமையாகச் சிவக்கிறது. எல்லாரும் ஆளுக்கொரு பக்கம் பார்த்துக்கொண்டு மௌனமாக இருந்தார்கள். பரமத் தேவர் மற்றவர்களை மாறிமாறிப் பார்க்கிறார்.

அண்ணன் தம்பிகள் மூவருமே நல்ல சிவப்பு நிறம். சொல்லிவைத்த மாதிரி, மனைவிமார் மூவருமே மாநிறம். பானு அக்கா காபிக் கலரில் இருப்பாள்.  வசீகரமான முக அமைப்பு அவளுக்கு. இப்போது சமையலறையில் உட்கார்ந்து, மூக்குத்தி நனையப் பொருமிப் பொருமி அழும்போதும் முகம் அழகாகத்தான் இருக்கிறது. வழக்கத்தைவிடச் சற்று அதைத்தும் இருக்கிறது.

அப்பாவிடமும் பெரியப்பாவிடமும் ஏகப்பட்ட அறைகள் வாங்கியதில்
கன்னங்கள் இரண்டும் லேசாகப் புடைத்திருக்கின்றன.

எனக்கு அக்காவின் அருகில் ஆறுதலாக உட்கார்ந்திருக்கத்தான் ஆசை.
ஆனால், வராந்தாவில் நடக்கும் விஷயம் இன்னமும் தீவிரமானது என்று
பட்டது. பொதுவாக, இந்த மாதிரி இடங்களில் நிற்க என்னை அனுமதிக்கவே மாட்டார்கள். ஆனால், ஜன்னலின் உட்புறக் கட்டையில் நான் இருப்பதை யாருமே கவனிக்கவில்லை என்றால் எவ்வளவு தீவிரம்?

பெரியப்பா செருமினார். அப்பா, சுய நிலைக்கு வந்த மாதிரித் தேவரை
நோக்கினார். கனத்த குரலில் அப்பா கேட்டார்:  ‘… முடிவா என்ன சொல்றீங்க தேவரே?’

‘அதெத்தேன் சொல்ல ஆரமிச்சேன் – நீங்க அவசரப்பட்டுட்டீக. ஒங்க தம்பி
மேல எனக்கு ரெம்ப மரியாதெ உண்டுங்க… அட, அப்பிடிச் சொன்னாக்கூடத் தப்பிதந்தேன். அபிமானம் உண்டு.’

‘தேவரய்யா…’

‘அதேஞ் சாமி சொல்ல வாறேன். பக்கத்துவீட்டுல ஒங்க தம்பி குடிவந்தாக.
ரெண்டா நாத்து எங்க வீட்டுலெ கருவாட்டுக் கொளம்பு. ஒங்க தம்பி
பொஞ்சாதி வாயிலெ முந்தாணியெ அடச்சிக்கிட்டு எங்க வீட்டு வாசல்லெ
வந்து நின்னுருச்சு. அம்புட்டுத்தேன், எங்க வீட்டுலெ கவுச்சி சமைக்கிறதையே நிறுத்திப்புட்டோம்.’

‘அட, நீர் என்ன தேவரே, நாங்க என்ன கேக்கறோம், நீர் என்ன பேசிட்டு
இருக்கீர்?’

அப்பாவின் குரல் உரத்துப் பாய்ந்தது.

‘நடுவுச் சாமிகளே, கோவிக்காதீக. நீங்க கேட்டதுக்குத்தேன் நா வெளக்கம்
சொல்லுறேன். மிச்சதெல்லாம், கட்டுப்படுத்திக்கிர்ற விசயம், நாங்களும்
கட்டுப்படுத்திக்கிட்டோம். இது வேற சங்கதி. ரெண்டு மனசுக்கும் பிடிச்சுப்
போச்சுன்டா நாம குறுக்க நிக்யப் படாது. சின்னஞ்சிறுசுக, 
ஒண்ணொடெக்கொண்ணு ஆயிப்போச்சுன்டா, இருக்குறவகல்ல கெடந்து
ஆயுசு பூராங் கலங்கணும்.’

‘அப்ப நாங்க போலீசுக்குத்தான் போகணுங் கிறீங்க?’

‘தாராளமாப் போங்க சாமி. எம் பேரனுக்கு ஒங்க வீட்டு மகாலச்சுமி மேல
நெசம்மாப் பிரியம் இருந்துச்சுன்னா லாக்கப்பிலெயும் இருந்து காட்டத்தானே வேணும்? ஆனா, ஒண்ணுங்க சாமிகளே… நான் கிளவன், இந்தான்னு கிளம்பீருவென். ஒங்களுக்கெல்லாம் அம்புட்டு வயசில்லே. எல்லாரும் கலங்குற மாதிரி எதுவும் செஞ்சுக்கிர்றாதீக. அம்புட்டுத்தேன் சொல்வேன்.  பெறகு ஒங்க இஸ்டம்.’

பரமத் தேவர் எழுந்தார். விடுவிடுவென்று படியிறங்கி நடந்தார்.

ஐந்தாம் வகுப்பு முழுப்பரீட்சை விடுமுறையை என் ஆயுட்காலத்துக்கும்
மறக்க முடியாது. அந்த நாட்களை நினைக்கும்போது ஒருவிதமாக நெஞ்சு
அடைக்கும். கடைசிப் பரீட்சை முடிந்து நான் வீட்டுக்கு வந்த நிமிடத்திலிருந்து எனக்குள் தொடங்கிய பரபரப்பு அவ்வளவு சுலபமாக முடிந்துவிடவில்லை.

அது ஒரு வெள்ளிக் கிழமை. சற்றுமுன் கடைசிப் பரீட்சை முடிந்து வீடு
திரும்பியவனை உடனடியாக முகம் கழுவிக்கொண்டு தயாராகச் சொன்னாள் அம்மா. லீவுக்குத் தென்கரை போகிறேனாம் நான்.
எரிச்சல் முட்டியது எனக்கு. ஆனால், கொஞ்சநேரம்தான். பானு அக்கா
சைக்கிளிலும். சித்தியும் சித்தப்பாவும் ஜட்காவிலும் வந்து இறங்கிய 
மாத்திரத்தில் சமாதானமாகிவிட்டது. அக்காவும் என்னோடு லீவுக்கு
வருகிறாள். சைக்கிளைக் கீழே உள்ள வராந்தாவில் ஏற்றி வைத்தாள் அக்கா.

அப்போது எனக்குத் தெரியாது, லீவு முடிந்து வந்த பிறகு அந்த சைக்கிள்
என்னுடையதாகப் போகிறது, மையப் பேருந்து நிலையம் சென்று, சோழவந்தானுக்கு வண்டியேறும் வரை நான் தொண தொணத்துக்கொண்டே இருந்ததும், சிரித்த முகத்துடன் பானு
அக்கா பதில் சொல்லி வந்ததும் நினைவிருக்கிறது. இன்னொன்றும்
அழுத்தமாக நினைவிருக்கிறது. சோழவந்தானில் போய் இறங்கி
தென்கரைக்கு ஜட்கா பிடித்துப் போய்ச் சேரும்வரை சித்தியும் சித்தப்பாவும் ஒரு வார்த்தைகூடப் பேசவேயில்லை.

சனிக்கிழமை காலையிலேயே பேச ஆரம்பித்துவிட்டார்கள். நான்
திண்ணையிலிருந்து எழுந்து கண்ணைக் கசக்கிக்கொண்டே
சமையலறைக்குள் நுழைகிறேன், பானு அக்கா சுவரில் சாய்ந்து
உட்கார்ந்திருக்கிறாள். எதிரில் பெரியவர்கள் நாலு பேரும் அவளை
முற்றுகையிடுகிற மாதிரிச் சுற்றிலும் உட்கார்ந்திருக்கிறார்கள்.

பெரியம்மா எழுந்து எனக்குக் காஃபி கலந்தாள். அவள் விசும்புகிற சப்தம்தான் முதலில் கேட்டது. சடாரென்று முகத்தை இரண்டு கைகளாலும்
மூடிக்கொண்டு பானு அக்கா அழத் தொடங்கினாள். மற்றவர்களும்
உடனடியாகக் குலுங்கி அழுதார்கள். காரணமே தெரியாமல் நானும்
அழுதேன்.

ஞாயிற்றுக்கிழமை காலையில் என் அப்பாவும் அம்மாவும் வந்து
சேர்ந்தார்கள். பழைய மாதிரியே சமையலறையில் அக்காவைச் சூழ்ந்து
எல்லாரும் உட்கார்ந்து பேச ஆரம்பித்தார்கள். எப்போது சமைத்தார்கள்,
எப்போது சாப்பிட்டார்கள், எப்போது அக்காவை அடித்தார்கள் எதுவுமே
எனக்குத் தெரியாது. பகல் முழுக்க நான் எங்கே போனேன் என்ன செய்தேன் என்கிற மாதிரி விபரங்களெல்லாம் அவர்களுக்கும் தெரியாது. உள்ளூர் நண்பன் மதியழகனுடன் குருவித்துறை பெருமாள் கோவிலுக்கு வாடகை சைக்கிள் அழுத்திக்கொண்டு பறந்துவிட்டேன். தென்கரையில், பெரியப்பா முன்னிலையில் என்னை அடிக்க மாட்டார் அப்பா. பெரியப்பா அனுமதிக்க மாட்டார்.

சாயங்காலம் நான் திரும்பிவந்தபோது, அக்காவின் கன்னத்தில் விரல்
தடங்கள் சிவப்புக்கோடுகளாகப் புடைத்திருந்தன. ஆனால், அக்கா
உற்சாகமாகத்தான் இருந்தாள். மதுரைக்காரப் பெரியவர்கள் நாலுபேரும்
புறப்பட்டார்கள். அசன் சாயபுவின் பெரிய ஜட்காவைக் கொண்டுவரச் சொல்லி எல்லாரும் ஏறிக்கொண்டார்கள். பானு அக்காவும் நானும் வழியனுப்பக் கிளம்பினோம்.

பெரியவர்கள் ஏறி அமர்ந்த சோமசுந்தரம் பஸ் சர்வீஸ் பேருந்து நிலைய
வாசலைக் கடந்து வெளியேறிய மாத்திரத்தில் எனக்கு அந்த ஆச்சரியம்
காத்திருந்தது. பாலன் தியேட்டர் பக்கத்திலிருந்து பஸ் ஸ்டாண்டுக்குள்
நுழையும் வாசலில் பன்னீர் அண்ணன் நிதானமாக நடந்து வந்தார். கையில் சிகரெட் புகைந்துகொண்டிருந்தது. அவரைப் பார்த்ததும் அக்கா உடம்பு நடுங்கக் குமுறினாள்.

இரண்டு பேரும் கை கோத்துக்கொண்டு நடந்து வந்தார்கள். அக்கா உதட்டைக் கடித்தபடி விசும்பிக்கொண்டே வந்தாள். அண்ணன் வேகவேகமாகப் புகை விட்டார்.

தெருவோரம் அக்காவை இறுக்கி அணைத்து நெற்றி உச்சியில் வகிடு
ஆரம்பிக்கும் இடத்தில் முத்தமிட்டார் பன்னீர் அண்ணன்.

ஓரிரு கணங்கள்தாம். அக்கா விடுவித்துக்கொண்டாள். அவசரமாக ஓடி
ஜட்காவுக்குள் ஏறினாள். நான் தொடர்ந்தேன். சாயபு குதிரையைச்
சாட்டையால் அடித்தார். விசையுடன் கிளம்பி ஓடும் ஜட்காவின் பின் திறப்பு வழியாகப் பார்த்தேன். பன்னீர் அண்ணன் திரும்பிப் பார்க்காமல் பஸ் ஸ்டாண்டுக்குள் நுழைந்துகொண்டிருந்தார். அதன் பிறகு நான் அவரைப் பார்க்கவும் இல்லை. கேள்விப்படவும் இல்லை என்பது இதைச் சொல்லும் இந்த நிமிடத்தில்தான் உறைக்கிறது.

திங்கட் கிழமைப் பகல் பொழுது முழுக்க வீட்டில் நிலவிய அமைதியையும்
வெறுமையையும் அதற்கு முன்னால் நான் கண்டதேயில்லை. பெரியப்பா

பெரியம்மா பானு அக்கா மூவரும் ஒரே வீட்டுக்குள் மூன்று தனித்தனி
உலகங்களில் நடமாடினார்கள் – ஒருத்தர் முகத்தை ஒருத்தர் பார்த்துக்கொள்ளாமலே.

ராத்திரி முழுவதும் அழுதாளோ என்னவோ, முகம் கடுமையாக வெளுத்து,
வீங்கி, இமைகள் புடைத்து, வழக்கத்தைவிடவும் அழகாக இருந்தாள் அக்கா.

அடிக்கடி என்னை அணைத்துக்கொண்டாள். சாயங்காலம் நாலைந்து தடவை என் கன்னத்தில் முத்தமிட்டாள்.

பெரியம்மா அக்காவை உட்காரவைத்து தலையைப் பின்னிவிட்டாள்.
ஒற்றைப் பின்னல். அக்கா எழுந்து நடந்தபோது புட்டத்தைத் தாண்டி
இறங்கியிருந்தது. அவள் நடந்துபோவதைப் பார்த்துப் பெரியம்மாவிடமிருந்து சீறிப் புறப்பட்ட பெருமூச்சு பொருமலாக முடிந்தது.

எனக்கும் வகிடு எடுத்துத் தலைவாரிவிட்டாள் பெரியம்மா. வாசலில் சாயபு காத்திருந்தார். ஜட்காவில் ஏறி குருவித்துறை பெருமாள் கோவிலுக்குப் போனோம் நானும் அக்காவும். எந்த நிமிடமும் பன்னீர் அண்ணன் வந்து நிற்பார் என்று நான் எதிர்பார்த்துக் கொண்டேயிருந்தேன். ம்ஹும். அவர்
தட்டுப்படவேயில்லை.

வழக்கத்தைவிட நிதானமாய் இருந்தாள் அக்கா. எப்போதும் கோவிலுக்குள் வந்தோமா சேவித்தோமா போனோமா என்று இருப்பவள், அன்று பெருமாள் முன்பு வெகுநேரம் கைகூப்பி நின்றிருந்தாள். திடீரென்று ஒரு விசிப்பு.

அக்காவின் மூடிய கண்களிலிருந்து பளபளப்பாக இரண்டு கோடுகள் இறங்கிக் கன்னத்தில் வழிந்ததை நிமிர்ந்து பார்த்தேன். சடாரென்று கண் திறந்து பெருமாளை முறைத்த அக்கா என் கையை இறுகப் பிடித்து,
'வாடா கோந்து போலாம்' என்று கறாராகச் சொன்னாள் – ‘இங்கெல்லாம் நமக்கென்ன வேலை’ என்கிற பாவத்துடன். விரைந்து வெளியேறியவளுக்குச் சமானமாக எட்டி நடக்க முடியாமல் ஓடினேன்.

இரவுச் சாப்பாட்டுக்கு முதல் ஆளாக அடுக்களைக்குள் போனேன். அக்கா
காமிரா உள்ளில் தனியாக இருட்டில் புதைந்திருந்தாள். இரண்டு தட்டுகளில் தயிர் சாதம் பரிமாறிவிட்டு தலையில் கைவைத்து உட்கார்ந்திருந்தாள் பெரியம்மா. கோவிலில் அக்கா நின்றிருந்தது மாதிரியே பெரியம்மாவும் கண்மூடி இருந்தாள்.

வழக்கமாகப் பெரிய தட்டு பானு அக்காவுக்கு. சின்னத் தட்டு எனக்கு.
பெரியம்மாவின் அழுமூஞ்சியை மாற்றும் உத்தேசத்துடன்,
'நான் இன்னிக்கி அக்கா தட்டுலெ சாப்பிடப் போறேன்'
என்று உரத்த குரலில் அறிவித்தவாறே உட்கார்ந்தேன்.  சட்டெனக்
கண்விழித்த பெரியம்மா, பதறிப்போய் என்னை ஓங்கி அறைந்தாள்.

பெரியம்மாவா அடிக்கிறாள்! எனக்கு அழக்கூடத் தோன்றவில்லை. தலை
குனிந்தபடி என் தட்டுக்கு நகர்ந்தேன். இரண்டாம் முறை ஓங்கிய கையால்
தன் தலையில் நாலைந்து தடவை அடித்துக்கொண்டாள் பெரியம்மா.

இருட்டறையிலிருந்து வெளியில் வந்தாள் அக்கா. அதற்குப் பிறகு
நடந்ததெல்லாம் எனக்குத் துல்லியமாக நினைவிருக்கிறதுதான் – ஆனால்,
விஸ்தாரமாகச் சொல்ல முடியாமல் நெஞ்சை அடைக்கிறது.

அன்றைக்கு நள்ளிரவில் பானு அக்கா பொங்கிப் பொங்கி வாந்தியெடுத்தாள்.

நாலைந்து முறை வாந்தி பண்ணிவிட்டு, துவண்டுபோய்ச் சுருண்டு
படுத்துக்கொண்டவள் பிறகு கண்ணைத் திறக்கவேயில்லை.

ஆனால், அக்காவை நினைக்கும்போதெல்லாம் என்னைத் துடிக்க வைப்பது அவள் திடீரென்று இறந்தது அல்ல, சாதாரண ராச் சாப்பாட்டுக்கு முன்னால் வீட்டிலுள்ள பெருமாள் விக்கிரகத்தை எதற்காகச் சேவித்துவிட்டு வந்தாள் என்ற கேள்வியும் அல்ல, மறுநாள் காலை ஏழரை மணிக்கெல்லாம் அவசர அவசரமாக அக்காவைக் கொண்டுபோய் எரித்துவிட்டு வந்துவிட்டார்களே
சண்டாளர்கள் என்ற ஆத்திரமும் அல்ல. 

பிறகு?… 

முதல் வாய் சாப்பிடுவதற்கு முன், 'நீ ஏதுக்குக் கலங்கறே பெரியம்மா? நீ யென்ன செய்வே பாவம்?' என்று சிரித்துக்கொண்டே சொன்னாளே பானு அக்கா, அதை நினைத்தால்தான் இன்றைக்கும் உடைந்து சுக்கு நூறாகிப் போகிறேன்…

பானு அக்கா மரணமடைந்த நாலாவது நாள் பெரியம்மா தூக்குப்
போட்டுக்கொண்டு இறந்தாள். பெரியப்பா காணாமல் போனவர் போனவர்தான்.

சித்தப்பா குடும்பத்துக்கும் எங்கள் குடும்பத்துக்கும் பேச்சுவார்த்தை
நின்றுபோய், உறவு அறுதியாக முறிந்துபோயிருந்தது.

அம்மா மாரடைப்பால் காலமானபோது, நான் ரயில்வேயில் குமாஸ்தாவாகச் சேர்ந்து மூன்று மாதம் ஆகியிருந்தது.

அப்பா தனியாகச் சமைத்துச் சாப்பிட்டுக்கொண்டு குலமங்கலம் போகும்
சாலையில் ஒற்றையறையில் வசித்தார். நாங்கள் சந்தித்துக்கொள்வது
முற்றாக நின்றுபோயிருந்தது. இறந்து, நாட்கணக்காக ஆகி, சடலம்
நாறியபிறகு அக்கம்பக்கத்தில் கதவை உடைத்துக் கண்டுபிடித்தார்கள். தகவல் கிடைத்து நான் போய்ச் சேர்ந்தபோது, அழுகிய சதைப்பொதியாக ஒரு சாக்கு மூட்டையில் திணித்துக் கட்டியிருந்தார்கள் அப்பாவை.
இவ்வளவுக்கும் காரணமான அந்த விடுமுறையை எப்படி மறக்க முடியும்
சொல்லுங்கள்

கதையின் சுட்டி....  தலைப்பில் க்ளிக்குங்ககள்..


25 கருத்துகள்:

  1. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் சகோதரரே

    இன்றைய பாஸிடிவ் செய்திகள் அருமை. உழைப்பால் சாதிப்பவர்கள், தங்கள் முயற்சியால் படித்து நல்லதொரு பணியில் இருப்பவர்கள் அனைவரையும் வாழ்த்துவோம். பாராட்டுவோம். நல்லமொரு செய்தி பகிர்வுகளுக்கு மிக்க நன்றி.

    இன்றைய கதைப்பகிர்வும் அருமை. கதை மனதை கலங்க வைத்தது. தங்கள் குலத்தின் கட்டுப்பாட்டிற்காக தெரிந்தே தன்னை மாய்த்துக் கொண்ட பானு அக்காவை நினைக்கும் போது அந்த தம்பியுடன் சேர்ந்து நம் மனமும் பதறியது.

    பொதுவாக உலகில் நடப்பவை கதையாகிறது. பல சமயங்களில் கதையில் வரும் சம்பவங்கள் வாழ்வில் உண்மையாகிறது. இதை ஊழ்வினை பயன் என்பதா... ,தொன்று தொட்டு வரும் குலச்சாபம் என்பதா.... ஆனாலும், இரண்டையும் முடிச்சுப் போட்டு இக்கதையை உருவாக்கிய கதாசிரியருக்கு பாராட்டுக்கள்.

    கதைச் சுருக்கம் படித்தது மட்டுமின்றி, சுட்டிக்கும் சென்று கதை படித்து மனதில் பாரம் ஏற்றி வந்தேன்.

    கதையை தேர்ந்தெடுத்து பகிர்ந்த சகோதரர் ஜெயக்குமார் சந்திரசேகர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆயிஷா கதை போன்று இதுவும் நினைவில் நிற்கும். கருத்துரைக்கு நன்றி.

      நீக்கு
  3. அனைத்தும் சிறப்பான செய்திகள் ஜி

    பதிலளிநீக்கு
  4. கதையைச் சுற்றி குட்டி வட்டமாய் கதையின் ஜீவனுக்குத் தொடர்பான விஷயங்களைச் சொல்லிக் கதையை நடத்திச் செல்வது தனிக் கலை. ஆனால் யுவனோ குட்டிக்கு பதில் பெரு வட்டம் போட்டு விட்டதில் சிறுகதை உப்பிப் பெருத்து விட்டது.

    கதை விவரிப்பிலிருந்து கதாபாத்திரங்களின் உரையாடலாகச் சொல்வதை (".....,") இப்படித் தனித்துக் காட்டி எழுதுவது தொன்று தொட்டு வரும் வழக்கம். இடையில் எஸ்.ரா. காலத்திலிருந்தே ஏகதேசமாய் எழுத்தாளர் வினரிப்பு, கதாபாத்திரங்களின் உரையாடல், கதாபாத்திரங்களின் நினைப்பு எல்லாவற்றையும் கலந்து கட்டி எழுதி குட்டையை குழப்பும் வழக்கம் வந்து விட்டது. இந்தக் குறியீடுகளையெல்லாம் தவிர்ப்பது எழுதுவோரின் இயலாமையே என்றும் கொள்ளலாம்.

    பதிலளிநீக்கு
  5. எதற்கு இதைக் குறிப்பிட நேரிட்டது என்றால் பிற்காலத்து தமிழ் எழுத்துலகில் இந்த இயலாமையை தங்களது எழுத்து ஸ்டைல் போலவே ஒரு சாரார் ஆக்கி விட்டனர்.

    இவர்கள் எழுதுவதில் "...."
    '......' இந்தக் குறியீடுகள் எல்லாம் இருக்காது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜீவி அய்யாவின் கருத்துக்களுக்கு நன்றி. தமிழில் இந்த punctuation எல்லாம் ஆங்கிலேயர் வரவுக்குப் பின்தான். ஆக ஆங்கிலம் சரியாக அறியாதவற்கு punctuation என்பது ஒரு சவால் தான். கூடிய வரையில் நான் மூலக்கதையின் punctuation களை சரிப்படுத்தித்தான் எடுத்து எழுதுகிறேன். அப்படியும் சில தவறுகள் ஏற்படுகிறது.

      ஒரு தடவை என்னுடைய விமரிசனத்தை அந்தக் கால தமிழ் நடையில் கமா, புல்ஸ்டாப் இல்லாமல் எழுதப் பார்க்கிறேன்.
      Jayakumar

      நீக்கு
  6. மூலக்கதையில் இல்லாத குறியீடுகளை அக்கறை
    எடுத்துக் கொண்டு உங்கள் கதைச் சுருக்கத்தில் கொடுத்திருக்கிறீர்லள்.
    அதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆங்கிலேயர் வரவுக்குப் பின் தான் நாவல், சிறுகதை வடிவங்கள் நமக்குக் கிடைத்தன என்பது உண்மை தான்.

      நான் அறிந்த வரை தமிழின் முதல் நாவல் அல்லது வரலாற்றுக் கதை செய்யுள் வடிவம் சிலப்பதிகாரம். உ.வே. சாமிநாத அய்யர் அவர்களின் அரிய ஆய்வுகள், சிதைந்து போயிருந்த ஓலைச்சுவடிகளை செம்மைபடுத்ததுதல்பணிகளுக்குப் பிறகு இன்று நாம் வாசிக்கும் சிலப்பதிகாரம் நமக்குக் கிடைத்திருக்கிறது.
      நான் சொல்ல வந்ததே வேறே.

      கல்கி, அகிலனுக்குப் பிறகு தானே இந்த எஸ்.ரா., ஜெமோ எல்லாம் வந்திருக்கிறார்கள்?
      சொல்லப் போனால்
      "தொடர்கதைகள் எல்லாம் நாவல் அல்ல" என்று நேரடி மேற்கத்திய நாவல் வாசிப்பை தமிழில் பரிந்துரைத்தவர்கள்.

      நான் சொல்ல வந்ததே வேறே. ஒருவர் எழுதுவது புரிய வேண்டுமானால். இந்தக் குறியீடுகள் முக்கியம். குறியீடுகளைப் புறக்கணிப்பது சீர்த்திரித்தமோ புதுமையோ அல்ல.
      கைப்பேசியில் தட்டச்சு செயவது சிரமம் என்றாலும் மூலக்கதையை திருத்திய வடிவத்துடன் சுருக்கமாகத் தந்திருக்கும் உங்களுக்கும் நான் சொல்வது அறிந்த உடன்பாடான விஷயம் தான்.

      வீம்புத்தனத்துடன் இப்படித்தான் நாங்கள் எழுதுவோம் என்று அடம் பிடிப்போருக்காகச் சொல்ல வந்தவை இவை.

      நீக்கு
    2. இவர்கள் எல்லாம் தம் படைப்புகளை எழுதாமல் ஒலி வடிவில் பதிந்து விடுவார்களோ, அவற்றை தாம் செவி மடுத்தவாறே இவர்களின் உதவியாளர்கள் அவற்றை எழுத்து வடிவில் கொண்டு வந்தவை தாம் புத்தகங்களாகப் பதிப்புக்குப் போகுமோ என்று கூட நான் ஐயுற்றதுண்டு.

      அந்தளவுக்கு எழுத்து வடிவைப் புறக்கணித்த கதை சொல்லல்கள் இவை.

      நீக்கு
    3. இந்த மாதிரி எழுத்துக்கள் எழுத்தாளர் வாய் மொழியில் வெளிப்படும் கதைகளாகி, கதா பாத்திரங்களின் அந்தந்த நேர மன உணர்வுகள் எழுத்தில் இயல்பாகப் படிந்து அதை வாசகனுக்குக் கடத்த முடியாத சாபம் பெற்றவை.

      நீக்கு
    4. கதா பாத்திரங்களின் அந்தந்த நேரத்து மன உணர்வுகள் எழுத்தில் இயல்பாகப் படியாததால் அதை வாசகனுக்குக் கடத்த முடியாத சாபம் பெற்றவை --- என்று மேலே குறிப்பிட்டதைத் திருத்தி வாசிக்கக் கேட்டுக் கொள்கிறேன்.

      எஸ்.ரா.வின் பெரும்பாலான கதைகளில் இதை நீங்கள் பார்க்கலாம்.

      நீக்கு
  7. படித்த படிப்புக்கும் செய்யும் தொழிலுக்கும் சம்பந்தம் இல்லாமல் முயற்சியால் உழைக்கும் அனைவருக்கும் பாராட்டுகள்.

    ஜாதி வந்து காதலர்களைப் பிரிப்பது சோகம் . கதாசிரியர் குலச் சாபத்தையும் கதையில் புகுத்தியதில் மரணங்கள் தொடர்வதும் படிக்க மனதுக்கு கஷ்டமாக இருந்தது.

    பதிலளிநீக்கு
  8. படித்த படிப்புக்கும் செய்யும் தொழிலுக்கும் சம்பந்தம் இல்லாமல் முயற்சியால் உழைக்கும் அனைவருக்கும் பாராட்டுகள்.

    ஜாதி வந்து காதலர்களைப் பிரிப்பது சோகம் . கதாசிரியர் குலச் சாபத்தையும் கதையில் புகுத்தியதில் மரணங்கள் தொடர்வதும் படிக்க மனதுக்கு கஷ்டமாக இருந்தது.

    பதிலளிநீக்கு
  9. பாஸிடிவ் செய்திகள் அனைத்தும் அருமை.
    செய்யும் தொழிலை விரும்பி செய்தால் எல்லாம் நலமே!

    பதிலளிநீக்கு
  10. கதை மனத்தை பாரமாக்குகிறது.
    அன்றும் , இன்றும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது இதே கதை,
    கெளரவ கொலைகள்.

    பதிலளிநீக்கு
  11. ஒரு விஷயம் யோசித்தால் இன்று நடக்கும் ஆணவ கொலைகளுக்கு ஈடானதுதான் இது.  ஆனால் ஒரு பிராமணக் குடும்பத்தில் இப்படி நடக்குமா என்று யோசிக்க வைக்கிறது.

    பதிலளிநீக்கு
  12. சில கதைகள் இதுபோன்ற எதிர்பாரா நிகழ்வினால் மனதில் நின்று விடும். சுப்ரஜா ஒரு கதை எழுதி இருந்தார். இன்று வரை அதை நினைத்தாலே தூக்கி வாரி போட வைக்கும்.

    பதிலளிநீக்கு
  13. நந்தா என்றொரு படம்.  அம்மா மகன் சாப்பாட்டில் விஷம் கலந்து விடுவாள்.  அவனுக்கும் அது தெரிந்து விடும்.  அவன் அதைச் சாப்பிடும் காட்சி...

    பதிலளிநீக்கு
  14. @ஸ்ரீராம்.

    பிராமண பெண்கள் வேற்றுஜாதியினரை காதலித்து மணம் செய்வது இந்தக் காலத்தில் சர்வ சாதாரணம் ஆகி விட்டது. உதாரணம் : துளசி கோபால்.
    அதே சமயம் பிராமணர் அல்லாத பெண் ஜாதி மாறிக் காதலிக்கும்போது "பரியேறும் பெருமாள்" போன்று எதிர்ப்புகளுக்கு உள்ளாகின்றனர்.
    Jayakumar

    பதிலளிநீக்கு
  15. பானு அக்கா கதை பானு அக்காவைத் தவிர மற்றவர்களை மிகவும் பாதித்திருக்கிறது என்று தோன்றுகிறது.
    சாதாரணமாக ஆசிரியர் ஸ்ரீராம் கதையைப் பற்றி கருத்துக்கள் கூறமாட்டார். ஆனால் இக்கதை அவரையும் பாதித்திருக்கிறது.
    எஸ்ரா இக்கதையை சிறந்த கதையாக தேர்ந்து எடுக்கவில்லை என்பது துரதிர்ஷ்டமே.
    வந்தோருக்கும் வந்து கருத்துக்கள் கூறியவருக்கும் நன்றி.
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உணர்ச்சி வேகத்தில் ஒரு கொலை ஓரிரு கணங்களில் நடந்து விடலாம். ஆனால் அவளுக்கும் தெரியப்படுத்தி, காத்திருந்து நேரம் கடத்தி கோவில் எல்லாம் சென்று வர விட்டு, தண்டனையை நிறைவேற்றுவது தூக்கு தண்டனையை விட கொடுமையானது. அந்தப் பெண் ஏன் தப்பிக்க நினைக்கவில்லை, பன்னீரின் ரோல் என்ன இதில், தெரியுமா தெரியாதா என்றெல்லாம் கேட்கக்கூடாது என்று கதாசிரியர் தீர்மானித்து விட்டார். வகிட்டில் முத்தமிட்டு சென்று வா ப்ரியே என்று பன்னீர் வழியனுப்பி விட்டு அடுத்த ஜோலியைப் பார்க்க சென்று விடுகிறார். தண்டனையை நிறைவேற்றும் பெரியம்மாவின் மனநிலை, நிறைவேற்றிக்கொள்ளும் பானுவின் மனநிலை... சுற்றி வந்த சுட்டிப்பெண், பாசப்பெண் தெரிந்தே இல்லாமல் போகப்போகிறாள் என்பது...

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!