திங்கள், 22 ஏப்ரல், 2024

திங்கக்கிழமை  : தஞ்சாவூர் மாங்காய் சாம்பார் - துரை செல்வராஜூ  ரெஸிப்பி 

 தஞ்சாவூர் மாங்காய் சாம்பார்

*** *** *** *** ***

மீண்டும் கொல்லர் பட்டறையில் ஊசி விற்பதற்கு வந்துள்ளேன்..

ஒட்டு மாங்காய்.. 

இதையே கிளி மூக்கு மாங்காய் என்றும் சொல்வர்.. இந்த மாங்காயைக் கொண்டு பாரம்பரிய தஞ்சாவூர் சாம்பார்..

இது மாங்காய்களுக்கான காலம்.. ஆனாலும்  விற்பனைக்கு அதிகமாக வரவில்லை என்பது சிந்திக்கத் தக்கது..

ஒட்டு மாங்காயைக் கொண்டு தான் இந்த சாம்பார் வைக்க வேண்டும்.. வேறு புளிப்பு ரகங்கள் மாற்றினாலோ கைப்பக்குவம் தவறினாலோ "கம்பேனி" பொறுப்பு அல்ல!..




தேவையான பொருட்கள்:
துவரம் பருப்பு தேவையான அளவு
ஒட்டு மாங்காய் - ஒன்று (நடுத்தரம்)
(இள மாங்காய்)
முற்றாத
முருங்கைக்காய் - இரண்டு
நீலக் கத்தரிக்காய் - இரண்டு
நடுத்தரமான கேரட் - ஒன்று
தக்காளி - ஒன்று
சின்ன வெங்காயம் - கையளவு
தேங்காய் ஒரு மூடி
சீரகம் ஒரு தேக்கரண்டி
பச்சை மிளகாய்  ஆறு
மல்லித்தூள் சிறிது
பெருங்காயத்தூள் சிறிது
மஞ்சள் தூள், கல் உப்பு..

தாளிப்பதற்கு :
கடுகு உளுத்தம் பருப்பு
கறிவேப்பிலை
கடலை எண்ணெய்

செய்முறை:
துவரம் பருப்பை சுத்தம் செய்து நன்றாக அலசி விட்டு தேவையான தண்ணீர் சேர்த்து வேக வைத்து முக்கால் வேக்காட்டில் பருப்பு மத்தினால் கடைந்து கொள்ளவும்.. விரும்பினால் இதில் சிறிதளவு பசு நெய் சேர்த்துக் கொள்ளலாம்..

வெங்காயத்தை உரித்து கழுவிக் கொள்ளவும்.. நறுக்க வேண்டியதில்லை..

பச்சை மிளகாயை நீளவாக்கில் கீறிக் கொள்ளவும்..

முருங்கைக்காய் கேரட் தக்காளி  இவற்றை  நன்றாகக் கழுவி விட்டு - விருப்பப்படி நறுக்கிக் கொள்ளவும்.. 

இளமாங்காய் என்பது மா வடுவிற்கும் மாங்காய்க்கும்  இடைப்பட்டது.. விதைக்கு மேல் ஓடு உருவாகாமல்  இருக்கும்.. புளிப்புச் சுவை இருக்காது.. 

 .. 

இந்த மாதிரி மாங்காயைத் தேர்ந்தெடுப்பதற்குத் தனித் திறமை வேண்டும்..

இளமாங்காயை அப்படியே நீள வாக்கில்  இரண்டு நாலாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.. உள்ளிருக்கும் விதையை நீக்க வேண்டிய அவசியம் இல்லை.. 

மாம்பருப்பு சற்றே துவர்ப்புடன் இருக்கும்.. குழம்பில் வெந்திருக்கும் மாங்கொட்டை அரு மருந்து.. 

அதைப் பற்றி பிறகொரு நாள்  பேசிக் கொள்வோம்..

ஒரு மூடி தேங்காயைத் துருவிக் கொள்ளவும்..  தேங்காய்த் துருவலுடன் சீரகத்தை சேர்த்து  அரைத்துக் கொள்ளவும்.. 

சீரகத்திற்குப் பதிலால சீரகத் தூளை சேர்த்துக் கொள்ளலாமா ?..

கூடாது.. சீரகத்தைத் தான் சேர்த்துக் கொள்ள வேண்டும்..

நறுக்கிய காய்களில் மாங்காயைத் தவிர்த்து மற்றவைகளை  பாத்திரத்தில் இட்டு அவை மூழ்கும் அளவு நீருடன் அடுப்பில் வைக்கவும்.. 

காய்கள் கொதித்து வருகின்ற போது  - மாங்காய்த் துண்டுகளையும் கடைந்து வைத்திருக்கின்ற பருப்பையும் சேர்க்கவும்.. மாங்காய்த் துண்டுகளை முன்னதாகவே சேர்த்து விட்டால் குழைந்து விடும்..

அத்துடன் அரைத்து வைத்திருக்கும் தேங்காய் சீரக கலவையையும் சேர்க்கவும்..

தேவையான அளவுக்கு மஞ்சள் தூள், மல்லித் தூள், பெருங்காயத் தூள், கல் உப்பு சேர்த்துக் கொள்ளவும்.. 

முதல் கொதி வந்ததும் கடலை எண்ணெயில் கடுகு உளுத்தம் பருப்பு கறிவேப்பிலை தாளித்துப் போட்டு  இறக்கினால் - இது தான் தஞ்சாவூர் மாங்காய் சாம்பார்.. 

இந்த சாம்பார் பொதுவாக கெட்டியாக இருக்கும் கொஞ்சம் நீர்க்க வைத்துக் கொள்வது அவரவர் விருப்பம்.. 

இதில் புளியும் வறட்டு மிளகாயும் சேர்க்கப்படவில்லை.. கத்தரிக்காய் ஒவ்வாது எனில் நீக்கி விடலாம்..

(நாங்கள் கோபித்துக் கொள்ள மாட்டோம்..)
ஃஃஃ

22 கருத்துகள்:

  1. உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
    இடுக்கண் களைவதாம் நட்பு...

    தமிழ் வாழ்க...

    பதிலளிநீக்கு
  2. கற்பக கணபதி
    கனிவுடன் காக்க..
    முத்துக்குமரன்
    முன்னின்று காக்க..
    தையல் நாயகி
    தயவுடன் காக்க..
    வைத்திய நாதன்
    வந்தெதிர் காக்க..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  3. தண்செய்யும் வாழ்க.. தஞ்சையும் வாழ்க..

    தளிர் விளைவாகித்
    தமிழும் வாழ்க..

    பதிலளிநீக்கு
  4. இன்று எனது குறிப்பினைப் பதிப்பித்த அன்பின் ஸ்ரீராம் அவர்களுக்கும்

    நிர்வாகக் குழுவினருக்கும் நெஞ்சார்ந்த நன்றி..

    பதிலளிநீக்கு
  5. நல்ல மனதுடன் சமையல் தளத்தினைக் காண வருகின்ற அனைவருக்கும் நன்றி..
    நன்றி..

    பதிலளிநீக்கு
  6. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டும்..

      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  7. வணக்கம் துரை செல்வராஜ் சகோதரரே

    இன்று தங்கள் செய்முறையாக தஞ்சாவூர் மாங்காய் சாம்பார் அருமையாக உள்ளது. அழகான படங்களுடன் செய்முறை விபரங்கள் அனைத்தும் நன்றாக உள்ளது.

    பதிவை படிக்கும் போதே மாங்காயின் வாசனையோடு சாம்பார் சாதத்தை சாப்பிடும் உணர்வை பெற்றேன்.

    மாங்கொட்டை (மாம்பருப்பு) சாம்பார் என்றதும், பிறந்த வீட்டில் எங்கள் பாட்டி, அம்மா செய்யும் மாங்கொட்டை வத்தக் குழம்பின் (அதுவும், விறகடுப்பில், கற்சட்டியில்) மணமும் நினைவுக்கு வந்தது. அதன் துவர்ப்பு சக்தி இறைவன் நமக்களித்த ஒரு வரப்பிரசாதம்.

    வயிற்று பொருமலுக்கும், மேலும் வயிறு சம்பந்தமான தொந்தரவுகளுக்கும், இந்த மாங்கொட்டை வத்தக் குழம்பு சிறந்ததென சாப்பிட்டுள்ளோம். அந்தக்கால உணவுகளே ஒரு அருமருந்துதான்...! மறக்க முடியாத அனுபவங்கள். அருமையான பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  8. மாங்கொட்டையின் துவர்ப்பு இறைவன் நமக்களித்த வரப் பிரசாதம்..

    ஆகா...

    தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..

    நன்றி..

    பதிலளிநீக்கு
  9. தஞ்சாவூர் மாங்காய் சாம்பார் குறிப்பு சிறப்பாக இருக்கிறது! புளி சேர்க்காத சாம்பார் வித்தியாசமாகவும் உள்ளது!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் சொல்வது சரிதான்...

      ஒட்டு மாங்காயில் சில வகை புளிப்பு உடையவை..

      மாங்காயும் புளித்து குழம்பிலும் புளி என்றால் உடலுக்கு நல்லதல்ல...

      இது பட்டுக்கோட்டை வட்டாரத்தின் செய்முறை..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி..

      நீக்கு
  10. எனக்கு மாங்காய் சாம்பார் பிடித்தமானது ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ஜி..

      நீக்கு
  11. தஞ்சாவூர் மாங்காய் சாம்பார் சூப்பர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி மாதேவி..

      நீக்கு
  12. மாங்காய் சாம்பார் செய்முறையும் படங்களும் அருமை.
    கிளிமூக்கு மாங்காய் கிடைக்கும் போது எல்லாம் , செய்வேன்.
    பிடித்தமானது. மாங்காய், முருக்கைகாய், கத்திரிக்காய் சேர்த்து செய்தால் சாம்பார் அருமையாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..

      நன்றி ..
      வாழ்க நலம்..

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!