புதன், 17 ஏப்ரல், 2024

வோட்டுப் போடுவீங்களா ?

 

பானுமதி வெங்கடேஸ்வரன்: 

இப்போது 55+ இருப்பவர்கள் தங்கள் முந்தய தலைமுறையை விட உடற்பயிற்சியில் அக்கறை காட்டுகின்றனர், ஆனாலும் தங்களுக்கு மூத்த தலைமுறையினரைவிட வியாதியால் பாதிக்கப்படுவதும் அதிகமாக இருக்கறதே?

# பொதுவாக சொல்வதானால் உண்ணுகிற உணவு, குடிநீர், சுவாசிக்கும் காற்று முன் போல இல்லை என்று சொல்லவேண்டும். அதற்கும் மேலாக மன அழுத்தம் அதிகமாக ஆகி இருப்பதுகூட ஒரு காரணம் .  எனது இள வயதில் மன நல மருத்துவர் என்கிற பெயர்ப் பலகை நான் பார்த்ததில்லை.

& முந்தைய தலைமுறையினர் உடற்பயிற்சி என்று தனியாக எதையும் செய்ததில்லை என்றாலும் - அன்றாட வாழ்க்கையில் அதிக தூரம் நடந்தனர். இப்போதைய junk food வகையறாக்கள் அந்தக் காலத்தில் அதிகம் கிடையாது. வீட்டில் சமைக்கப்பட்ட சத்தான உணவுகளை உண்டு வாழ்ந்ததால், அவர்களுக்கு ஆரோக்கிய அச்சுறுத்தல்கள் எதுவும் இல்லை. 

வயதாகி விட்டது என்பதால் உடல்நலம், பொருளாதாரம் சம்பத்தப்பட்ட விஷயங்களில் என்னென்ன எச்சரிக்கைகளை கடை பிடிக்கிறீர்கள்?

# எனது அடிப்படையான கருத்து : உடல் நலம் கிட்டத்தட்ட கடவுள் அருள்.  வேண்டுமானால் dna என்று சொல்லிக்கொள்ளலாம்.  எனினும் நான் கடைப்பிடிப்பது மிக எளிமையான மூச்சுப் பயிற்சி , நடை..  பணவசதியைப் பொருத்தமட்டில் பென்ஷன் இருப்பதால் கவலை இல்லை.  முன்னெச்சரிக்கை என்று ஏதும் எடுப்பதில்லை.  அடுத்த தலைமுறை உதவிக்கு இருப்பதால், பெரிய செலவு எதுவும் என் கணக்கில் இல்லை.  கடவுளுக்கு நன்றி.

& வயதாகிவிட்டதால், உணவில் கட்டுப்பாடுகள் நிறைய கடைபிடிக்கிறேன். junk food தவிர்த்தல், அளவோடு சாப்பிடுதல், நேரத்திற்கு சாப்பிடுதல் என்று சில சமாச்சாரங்கள் உடனடியாக நினைவுக்கு வருபவை. பொருளாதாரம் - என்னுடைய சேமிப்பு, கட்டிய வீட்டிலிருந்து வருகின்ற வாடகை,  + மகன் & மகள் உதவியால் கவலையின்றி காலம் தள்ள  முடிகிறது. 

எங்கள் கேள்விகள் : 

1) நடக்கின்ற எல்லா தேர்தல்களிலும் - ஊரில் இருந்தால், வோட்டுப் போட்டது உண்டா? 

2) வோட்டுப் போடாதவர் என்றால், கீழ்க் கண்டவற்றுள் எது உங்களுக்கு அதிகம் பொருந்துகிற விளக்கம் ?

அ ) எல்லோருமே திருடர்கள் - இதில் யாரைத் தேர்ந்தெடுப்பது !

ஆ ) வோட்டுச் சாவடியில் வரிசையில் / வெயிலில் நிற்கப் பொறுமை இல்லை. 

இ ) என்னுடைய வோட்டு இந்த ஊரிலோ அல்லது பக்கத்தில் இருக்கும் வோட்டுச் சாவடியிலோ இல்லை. 

ஈ ) நான் விரும்பும் வேட்பாளர் இந்தத் தொகுதியில் போட்டியிடவில்லை 

உ ) என்னுடைய ஒரு வோட்டு வேட்பாளரின் வெற்றி / தோல்வியை நிர்ணயிக்கப் போவதில்லை. 

ஊ ) யாரும் துட்டு கொடுக்கவில்லை. எனவே யாருக்கும் வோட்டுப் போடமாட்டேன். 

எ ) வேறு ஏதாவது காரணம் இருந்தால் அதைப் பதியவும். 

= = = = = = = =

KGG பக்கம் : 

பாலிடெக்னிக் படித்த நாட்களில், நான் மறக்காமல் அடிக்கடி நினைவு கூர்ந்த மற்றொரு ஆசிரியர், மெக்கானிக்கல் டிபார்ட்மெண்ட் தலைவராக இருந்து, பின்னர் பிரின்சிபால் ஆக பதவி உயர்வு பெற்ற ஜே கோவிந்தராஜுலு. (சில வருடங்கள் கழித்து, அவர் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி இன்ஜினியரிங் கல்லூரியின் பிரின்சிபால் ஆக பதவி வகித்தார்.)

அவர் எங்களுடைய முதல் ஆண்டு வகுப்பிற்கு மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பாடம் நடத்தினார். 

டூ ஸ்ட்ரோக் இஞ்ஜின் / 4 ஸ்ட்ரோக் இஞ்ஜின் பாடம் நடத்தும்போது வகுப்புக்கு டீசல் இஞ்ஜின் பிஸ்டன், மற்றும் வால்வு ஒன்றைக் கொண்டு வந்து காட்டினார். பாடத்திற்காகப் படம் வரையும்போது நீங்கள் பிஸ்டன் என்று ஒரு செவ்வக வடிவம் வரைவீர்கள்.வால்வு என்று மேலே ஒரு தலைகீழ் T வடிவம் வரைவீர்கள்" 


"ஆனால் அந்த செவ்வகம் மற்றும் தலைகீழ் Tஉண்மையில் இந்த அளவுக்குப் பெரிய பாகம் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள் " என்றார். 


பிறகு நான் இரண்டாம் ஆண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு வகுப்பு படித்தபோது  இன்டஸ்ட்ரியல் மேனேஜ்மெண்ட் பாடம் நடத்தினார். 

பாடம் நடத்தும்போது dais மீது இங்கும் அங்கும் அவர் பேசிக்கொண்டே நடப்பது ( " let us take one industry which is producing tooth paste. ... let us take another industry which is producing tooth brush. ... ) இப்படி வரிசையாக சொல்லிக்கொண்டே மேடையில் அடுத்து அடுத்து நகரந்தவாறு அவர் பேசுவது மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும். (இந்தக் காலத்து மம்தா பானர்ஜி எப்படி பேசிக்கொண்டே இங்கும் அங்கும் சிங்கம் போல நடக்கிறாரோ - அப்படி!) 

அவர் நடத்தும் பாடம் அப்படியே மனதில் பதியும். பாடம் நடத்தும் போது நோட்டுப் புத்தகத்தில் எதுவும் எழுதிக்கொள்ள வேண்டாம் என்று சொல்லிவிடுவார். பாடம் நடத்தி முடித்த பிறகு அன்றைய அத்தியாயத்தை cyclostyle செய்தது - எல்லோருக்கும் கொடுத்துவிடுவார். அதை நாங்கள் ஃபைல் செய்து வைத்துவிடுவோம். 

அவர் நடத்தும் வகுப்பில் ஒரு முக்கிய விஷயம் என்ன என்றால் - சொல்லிக்கொண்டே வரும்போது திடீரென்று நிறுத்தி ஒரு கேள்வி கேட்பார் - உதாரணமாக production planning and control அத்தியாயம் நடத்திய போது - " today we have discussed about Production planning and ..... " என்று சொல்லி நிறுத்திவிட்டு .. மாணவர்களில் யாரையாவது கை காட்டுவார். அந்த மாணவர் திரு திருவென முழித்தால் - அடுத்த அடுத்த மாணவரைக் கை காட்டுவார். சரியான பதில் ( control என்ற வார்த்தை) யாராவது சொல்லும் வரை கை காட்டிக்கொண்டே வருவார். எனக்குப் பக்கத்து மாணவர் வரை வருகின்ற அவரது கை, என்னைக் காட்டாது எனக்கு அடுத்த மாணவரைக் காட்டும். கடைசியில் வகுப்பில் எல்லோரும் எழுந்து நின்று மௌனம் காத்த பின் என்னை நோக்கிக் கையைக் காட்டுவார். 

நான் எழுந்து " control " என்று சொன்னவுடன், புன்னகையுடன் மற்றவர்களிடம், " கிளாஸ் ல ஒருத்தர்தான் பாடத்தை கவனிக்கிறார்! மீதி எல்லோரும் தண்டம் - இங்கே உட்கார்ந்து பொழுதைக் கழிப்பதற்கு பதில் எங்காவது மாடு மேய்க்கப் போகலாம் " என்பார். 

சில சமயங்களில் அவர் அப்படிக் கேள்வி கேட்டவுடன் என்னுடைய பின் பெஞ்சு மாணவர் என் முதுகில் ஒரு தட்டுத் தட்டி ஒரு பேப்பரை என்னிடம் கொடுப்பார். அதில் நான் ஆசிரியர் எதிர்பார்க்கும் பதிலை எழுதி அந்த மாணவரிடம் கொடுப்பேன். அந்த மாணவன் அவனுடைய முறை வந்ததும் எழுதிக்கொடுத்த பதிலை சொல்லி பாராட்டு பெற்றுக்கொள்வான். 

ஆனால் பாருங்க - ஒரு தடவை கோவிந்தராஜுலு கேட்ட கேள்வியை நான் ஏதோ நினைவில் சரியாக கவனிக்கவில்லை. கேள்வி கேட்கப்பட்டு, பின் வரிசைகள் மாணவர்கள் ஒவ்வொருவராக எழுந்து ' தெரியாது' என்பதுபோல மௌனமாக நின்றார்கள். 

பின்னாலிலிருந்து என் முதுகை சொறிந்த மாணவருக்கு என்ன பதில் சொல்வது என்று கிகைத்தேன். 

அப்புறம் " Sorry I too don't know" என்று எழுதிக் கொடுத்தேன். அதற்குள் அவருடைய முறை வந்துவிட்டது. 

ஆசிரியர் அவரைக் கை காட்டியதும் அவர் அவசரமாக எழுந்து, துண்டுச் சீட்டைப் பார்த்து,  " sorry I too don't know" என்றார்! 

ஆசிரியர் திகைத்தார் ! சிரித்தார்! வகுப்பு முழுவதும் ஒரே சிரிப்பு ! நல்ல வேளை கேள்வி மற்றவர்களுக்குத் தொடராமல், என் பக்கம் வராமல் - ஆசிரியர் திரும்பவும் விளக்கம் அளித்து - என்ன கேள்வி கேட்டார் என்பதையும் கூறினார். எல்லோருக்கும் புரிந்தது.  

கோவிந்தராஜுலு அவருடைய வகுப்பில், அடிக்கடி, டிப்ளோமா படிப்பு மட்டம், டிகிரி படிப்புதான் உயர்ந்தது என்று ஒருபோதும் நினைக்காதீர்கள். இன்று BHEL தலைமைப் பொறுப்பில் இருக்கும் திரு V கிருஷ்ணமூர்த்தி ஒரு டிப்ளோமா ஹோல்டர்தான். விஷயம் இருந்தால் பெரிய படிப்பு எதுவும் அவசியம் இல்லை; யார் வேண்டுமானாலும்  தலைமை பொறுப்பிற்கு வரலாம் என்பார். 

வகுப்பு நடத்திக் கொண்டிருக்கும்போது எந்த வெளி நபர் இடைஞ்சலையும்  அவர் விரும்பமாட்டார். வகுப்பில் வருகைப் பதிவேடு கூட பார்த்து பெயர்களை அழைப்பது, வருகை உறுதி செய்துகொள்வது எல்லாம் கிடையாது. என்னுடைய வகுப்புக்கு வந்தாலும், வராவிட்டாலும் ஃபுல் அட்டெண்டன்ஸ் எல்லோருக்கும் போட்டுவிடுவேன். வராதவர்கள், பிறகு என் அறைக்கு வந்து cyclostyle நோட்ஸ் வாங்கிக் கொள்ளலாம் என்பார். அப்படி நோட்ஸ் வாங்க மறுநாள் அவர் அறைக்கு வருகின்ற மாணவரிடம் 'ஏன் வரவில்லை' என்று கேட்டு காரணம் தெரிந்துகொள்வார்.  

ஒரு தடவை கோவிந்தராஜுலு பாடம் நடத்திக் கொண்டிருக்கும்போது, வகுப்புக்கு வெளியே முந்தைய வருடம் பாஸ் செய்த மாணவர் ஒருவர் வந்து நின்றார்.

முதலில் கோவி அவரைக் கண்டுகொள்ளவில்லை. அவர் சங்கடத்தோடு பார்த்துக் கொண்டிருந்தார். தொண்டையைக் கனைத்துக் கொண்டார். கோவியின் கவனம் கலைந்தது. வாசலில் நின்ற மாணவரைப் பார்த்து, " என்ன வேண்டும்?" என்று கேட்டார். 

அந்த மாணவர் ," சார் - நீங்க உங்களை வந்து பார்க்கச் சொன்னீங்க - ரெகமண்டேஷன் கடிதம் ஒன்று எழுதித் தருவதாகச் சொன்னீர்கள் " என்றார். கோவிக்கு பயங்கரக் கோபம் வந்துவிட்டது. " ஆமாய்யா - சொன்னேன். ஆனால் என்னுடைய அறையில் நான் இருக்கும்போதுதானே நீ வந்து பார்க்கணும்? அதை விட்டுவிட்டு வகுப்பு நடத்திக்கொண்டிருக்கும்போது நடுவில் வந்து இப்படி தொந்தரவு செய்தால் என்னால் என்ன செய்யமுடியும்? எல்லா வேலைகளையும் விட்டுவிட்டு உனக்கு சிபாரிசு கடிதம் எழுதிக் கொடுக்கமுடியுமா? போ ஐயா - வகுப்பு முடிந்தபிறகு, என்னை என்னுடைய அறையில் வந்துபார்." என்று சத்தம் போட்டார். சிபாரிசு கடிதம் கேட்டு வந்த அந்த மாணவர் வேகமாக அங்கிருந்து அகன்றார். 

பிறகு கோவி எங்களிடம் - " மாணவர்களாகிய நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான விஷயம் இது. யாரையாவது ஒருவரை உங்களுக்கு ஏதாவது சிபாரிசு வேண்டும் / Favour வேண்டும் என்று பார்க்கச் சென்றால் அவரை எங்கே, எப்படி பார்க்கவேண்டும், என்பதை கவனமாகத் தெரிந்துகொண்டு அதற்குரிய முறையில் போய்ப் பாருங்கள். அவரே வரச் சொன்னார் என்றாலும் கூட எந்த நேரத்தில், எப்படி அவரைப் பார்த்துப் பேசவேண்டும் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்" என்றார். 

இந்த அறிவுரையை பிற்காலத்தில் நான் எப்போதும் நினைவில் வைத்திருந்து அதுபோல நடந்துகொண்டு பாராட்டு பெற்றது உண்டு. அது பற்றி பிறகு எப்பொழுதாவது எழுதுகிறேன். 

= = = = = = =

43 கருத்துகள்:

 1. இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து
  அதனை அவன்கண் விடல்..

  வாழ்க தமிழ்..

  பதிலளிநீக்கு
 2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 3. கற்பக கணபதி
  கனிவுடன் காக்க..
  முத்துக்குமரன்
  முன்னின்று காக்க..
  தையல் நாயகி
  தயவுடன் காக்க..
  வைத்திய நாதன்
  வந்தெதிர் காக்க..

  இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
  பிரார்த்திப்போம்..

  எல்லாருக்கும் இறைவன்
  நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

  நலம் வாழ்க..

  பதிலளிநீக்கு
 4. /// கிளாஸ் ல ஒருத்தர் தான் பாடத்தை கவனிக்கிறார்! மீதி எல்லோரும் தண்டம்.. ///

  ஆகா!...

  பதிலளிநீக்கு
 5. கோவிந்தராஜூலு
  போன்றவர்கள் நமக்குக் கிடைத்த வரம்..

  என்றும் நினைவில் வாழ்பவர்கள்..

  பதிலளிநீக்கு
 6. வாக்கு அளிக்க வேண்டும் என்று இப்போது வரையிலும் ஆர்வம் தோன்றவில்லை...

  பதிலளிநீக்கு
 7. நல்ல ஆசிரியர்களை நம் மனது எப்போதுமே நினைவில் கொள்ளும். கோவிந்தராஜுலு சார் போன்றோர் தாங்கள், மாணவர்கள் மனதில் அத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகிறோம் என எண்ணிப் பார்த்திருப்பார்களா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நினைத்திருப்பார்கள் என்றுதான் நினைக்கிறேன்.

   நீக்கு
 8. வாக்களிக்க மறந்ததில்லை.

  இங்கு வந்த பிறகு சட்டமன்றத் தேர்தல். இதோ இப்போ பாராளுமன்றத் தேர்தல்.

  எங்க வளாகத்தில் அது ஒரு கொண்டாட்டம். அதிலும் சட்ட சபைத் தேர்தலுக்கு முன் மோடியின் ரோடு ஷோ. வாக்களித்துவிட்டு வருபவர்களுக்கு க்ளப் ஹௌசில் காலை உணவு, முடியாதவர்களுக்கு இலவச ஆட்டோ என கொண்டாட்டமாக இருந்தது. இன்னும் ஐந்தாறு வருடங்களில் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் எங்கள் வளாகத்திலேயே இருக்கும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நெல்லை அவர்கள் வளாகத்தில் குடியிருப்பவர்கள் ஓரளவு வசதி படைத்த, கல்வியறிவு உள்ள நடுத்தர மக்கள் எனலாம். அவர்களே இலவச காலை உணவிற்கும், இலவச ஆட்டோ பயணத்திற்கும் மயங்கும்போது சாதாரண மக்கள் இலவசங்களுக்கு இரையாவதில் வியப்பில்லை.

   Jayakumar

   நீக்கு
  2. ஆட்டோ பயணம் வயதானவர்களுக்கு (அவங்களும் வாக்களிக்காமல் இருந்துவிடக் கூடாது என்பதற்கு). காலை உணவு, ஒரு அசோசியேஷனா கொண்டாட்ட மனநிலைக்கு. மற்றபடி, உயர் நடுத்தர வகுப்பு மற்றும் இன்னும் உயர் வகுப்புதான் எங்கள் வளாகத்தில் இருப்பவர்கள்.

   வாக்களிக்க பணம் வாங்கும் பிச்சைக்காரர்கள் வேறு. திருமங்கலம், ஈரோடு கிழக்கு போன்ற தொகுதிக்காரர்களில் பெரும்பாலோர் அந்தப் பாவத்தைச் செய்தவர்கள். இலவசங்களை விரும்ப கல்வியறிவு இல்லாததுதான் காரணம். ஜனநாயகத்தில் அறிவில்லாத மடையர்களுக்கும் அறிவு பெற்றவர்களுக்கும் சிந்திக்கத் தெரிந்தவர்களுக்கும் ஒரே மாதிரியாக ஒரு வாக்கு கொடுத்துள்ளதுதான் இந்த அனர்த்தங்களுக்குக் காரணம்.

   நீக்கு
  3. நெல்லை சொல்வது முற்றிலும் சரி.

   நீக்கு
 9. 1971 ல் தமிழ் வழிக் கல்வி என்பதனால் புகுமுக வகுப்பில் ஐம்பது ரூபாய் .. இதைத் தவிர வேறு எந்த உதவித் தொகையும் பெற்றதில்லை - தந்தை அரசுப் பணியில் இடைநிலை ஊழியர் என்பதனால்..

  அன்றைக்கு கலைஞ்ர் கட்சியும் கான்கிராசும் தான்..

  எனது நல்லொழுக்கத்தினால் கிராம நிர்வாகத்தில் ஒரு வேலை கிடைத்தது.. அதையும் எஸ்டிஎஸ் என்பவரது பேச்சைக் கேட்டுக் கொண்டு புரச்சி பிடுங்கிப் போட்டது..

  எவ்வளவு கஷ்டம்..
  நிம்மதியற்ற இன்றைய வாழ்க்கைக்கு அன்றைய அரசியலே காரணம்..

  பதிலளிநீக்கு
 10. தலைவிதி இதுதான் என்று ஒரு பக்கம் இருந்தாலும்,

  கிராம நிர்வாகத்தில் கிராமத்தின் நிலம் சம்பந்தப்பட்ட கணக்குகளைப் பராமரிக்கத் தெரியும்
  நிலம் அளக்கத் தெரியும்.. பத்திரங்கள் நுணுக்கமாக எழுதத் தெரியும்.. பத்திரங்கள்
  எழுதி பதிவு செய்து கொடுக்கத் தெரியும்..

  தில்லானா மோகனாம்பாளில் வருகின்ற ஜில் ஜில் ரமாமணி மாதிரி - எல்லாம் தான் கற்றேன்... என்ன பிரயோசனம்?..

  நடுத்துண்டு நமக்கு கிடைக்கா விட்டாலும் தலையோ வால் கிடைத்தால் சரி.. என்று பந்தியில் உட்காரத் தெரியவில்லை...

  அது தான் பிரச்னை..
  நாயின் வால் நிமிர்வதில்லை.. நாயின் வால் நிமிரக் கூடும் - நாய் நினைத்து விட்டால்..

  ஆனால் விதிமுறையை மீறி எதையும் நினைப்பதில்லை - நாய்..

  அந்த நாய் தான் நான்..

  பதிலளிநீக்கு
 11. எஸ்டிஎஸ் பேச்சைக் கேட்டுக் கொண்டு கையில் இருந்த வேலையை புரச்சி பிடுங்கிப் போட்டது..

  அந்த வேலைக்காக நடத்தப்பட்ட தேர்வில் வெற்றி பெற்றும் பணி நியமனத்துக்குப் பெருந்தொகை..

  இதெல்லாம் பெரிய புரச்சியின் ஆட்சியில்..

  எனக்கு நன்மையானது வாய்க்கவில்லை..

  பதிலளிநீக்கு
 12. உடல் நலன் பேணுதல் குறித்து உங்களுடைய பரிந்துரைகள் நன்று.

  Junk food தவிர்த்தல் அதில் முக்கியமான ஒன்று. இதைக் கருத்தில் கொண்டு உங்களால் ஆன உபகாரமாய் J.F. சமாச்சாரங்கள் தயாரிப்புகளை திங்கட்கிழமை பதிவுகளில் விலக்குமாறு வேண்டுகோள் விடுக்கலாம். அதே மாதிரி ஹோட்டல் பதார்த்தகள் உட்கொள்வதில் ஆசை ஏற்படுத்துகிற வியாழன் பதிவு எழுத்தாக்கங்களையும் அதே category --யிலான பின்னூட்டங்களையும்
  தவிர்க்க வேண்டுகோள் வைக்கலாம்.

  ஆ.விகடன் சிகரெட், மது சம்பந்தமான விளம்பரங்களை கண்டிப்பாக தவிர்த்தது நினைவுக்கு வருகிறது. ஒரு பெரிய பத்திரிகையாலேயே இதெல்லாம் முடிந்தது என்றால் பதிவுகளில் இவற்றைத் தவிர்ப்பது தம்மாத்துண்டு விஷயம் என்று நினைக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சிறு வயதினருக்கு அதனால் பாதகம் இல்லை என்பதால் வேண்டும் மக்கள் அதை செய்து சாப்பிடலாம்.‌
   நாங்கள் வெளியிடும் சமையல் வகைகளை எல்லோரும் செய்து சாப்பிடவேண்டும் என்னும் கட்டாயம் எதுவும் இல்லை!

   நீக்கு
  2. /// நாங்கள் வெளியிடும் சமையல் குறிப்புகளை எல்லோரும் செய்து சாப்பிடவேண்டும் என்னும் கட்டாயம் எதுவும் இல்லை!.. ///

   ஆகா!..

   நீக்கு
  3. //சிறு வயதினருக்கு அதனால் பாதகம் இல்லை என்பதினால்//

   அட, இந்த விஷயம் எனக்குத் தெரியாமல் போச்சே!

   எபி வாசகக் குழந்தைகளே மற்றும்
   எவ்வளவு வயதுக்குக் கீழே என்று தெரியாத எபி சிறு வயதினரே!
   உங்கள் பாடு ஜாலி! நீங்க வேண்டுகிற மட்டும் Junk Food சாப்பிடலாமாம். அதிலேயே திளைக்கலாமாம்! ஜமாயுங்கள், எபி குழந்தைகளே! ..

   நீக்கு
  4. ஜீவி ஐயா நீங்க ஒன்னு. திங்க பதிவுகளுக்கு எழுதி அனுப்ப ஆட்கள் இல்லை. தேடித் தேடி பிடிக்க வேண்டி இருக்கிறது. என்னமோ ஒரு பதிவை ஒப்பேத்தினோம் என்ற நிலையில் உள்ளபோது .....சிறுகதையில் இலக்கணமாவது வெண்டைக்காயாவது என்பது போன்று தான்.
   Jayakumar

   நீக்கு
  5. :)))) நீங்கள் சொல்வது சரி

   நீக்கு
 13. ஜெஸி ஸார்.. சரியான ஞாபக சக்தி உங்களுக்கு! ஹி..ஹி..

  பதிலளிநீக்கு
 14. ஜெஸி ஸார்.. சரியான ஞாபக சக்தி உங்களுக்கு! ஹி..ஹி..

  பதிலளிநீக்கு
 15. கேளவிகளும் பதில்களும் நன்றாக இருக்கிறது.
  ஓட்டு போடுவது கடமை என்று நானும் என் கணவரும் தவறாது ஓட்டு போட்டுவிடுவோம்.
  இந்த முறை ஓட்டு போட முடியாது .

  கெளதமன் சார் ஆசிரியர் திரு. ஜே கோவிந்தராஜுலு அவர்கள் நல்ல ஆசிரியர் . அவர் மாணவ்ர்களுக்கு பாடம் நடத்திய விதம், சொன்ன அறிவுரைகள் எல்லாம் எல்லோருக்கும் பயன்படும்.

  பதிலளிநீக்கு
 16. என் கேள்விகளுக்கு பதில் அளித்ததற்கு நன்றி.
  கோவிந்தராஜுலு பாடம் நடத்தும் விதம் பற்றி நீங்கள் விவரித்துள்ள விதத்தில் காட்சிகள் கண்முன் விரிகின்றன. கொஞ்சம் டார்க்காக, பூசினாற் போல தொள தொள பேண்ட் அணிந்திருப்பாரோ?:))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நீங்கள் சொல்வது சரியே. அவர் உடை விஷயத்தில் அதிகம் அக்கறை காட்டமாட்டார். தொள தொளா பாண்ட், சட்டை சரியே.

   நீக்கு
 17. ஊரில் இருந்தால் கண்டிப்பாக ஓட்டு போடுவேன். சென்ற தேர்தலில் ஓட்டு போடுவதற்காக மெனக்கெட்டு சென்னை சென்றோம். ஆனால் வாக்காளர் பட்டியலில் எங்கள் பெயர் விடுபட்டு போய் விட்டது.

  பதிலளிநீக்கு
 18. இந்த முறை தேர்தலில் ஓட்டு போட முடியாது என்று நினைக்கிறேன். பெங்களூருவில் என் மகனுக்கும், மருமகளுக்கும் ஓட்டர்ஸ் ஐ.டி. வந்து விட்டது, எனக்கு வரவில்லை.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!