Wednesday, August 24, 2011

காதல் கடிதம், லகான், சோனியா, மணிக்கொடி எழுத்தாளர்கள், -வெட்டி அரட்டை.


      
அன்புள்ள மன்னவனே ... ஆசையில் ஓர் கடிதம் !                    
கடிதம் வந்த காலங்களெல்லாம் காணாமல் போய் விட்ட இந்நாளில் ஒருவருக்கு கடிதம் வந்தால் எப்படி இருக்கும்? அதுவும் எதிர்பாராத ஒருவரிடமிருந்து! அபபடி ஒரு கடிதம் வந்த செய்தியை சில நாட்களுக்குமுன் தினமணியில் படித்தேன்.அதுவும் எப்படி? ஐம்பத்தி மூன்று வருடங்களுக்கு முன்னால் எழுதப் பட்டகடிதம்...
                           
உடனே நம்ம ஊர்லதான் இப்படியெல்லாம் நடக்கும், அதனால் எந்த ஊர் என்று கேட்க வேண்டாம். இது கலிஃபோர்னியாவில் நடந்த சம்பவம். தற்சமயம் எழுபத்தி நாலு வயதாகும் அந்த கிழவருக்கு எங்கெங்கோ சுற்றி விட்டு அலைந்து திரிந்து வந்துள்ள கடிதம். பிரித்துப் பார்த்த போது அவருடைய அப்போதைய காதலி எழுதியிருந்த கடிதம். பல்கலைக் கழகத்தில் படித்தபோது நிகழ்ந்த சம்பவங்கள் நினைவிலாட கொசுவர்த்தியுடன் கிழவர் பாட்டுப் பாடாத குறை. அந்தக் காதலிதான் இவர் முதல் மனைவி. நான்கு குழந்தைகள் பெற்றுக் கொண்டபின் விவாகரத்து வாங்கி இரண்டாவது மனைவி கல்யாணம் பண்ணி அவள் மூலமாக அவருக்கு பதினைந்து குழந்தைகளாம்!
                                             
ம்..ஹூம்...எல்லா ஊர்லயும் போஸ்டல் டிபார்ட்மென்ட் இப்படிதானா? எல்லா ஊரிலும் காதல் இவ்வளவுதானா? (காதல் மனைவிக்கு நான்கு குழந்தைகள், 'கல்யாண' மனைவிக்கு பதினைந்து குழந்தைகள்...!)
=====================================

                              
விவாகரத்து ஆகி பிரிந்து விட்டாலும் லகான் தயாரிப்பு நாளோ, வெற்றி நாளோ, ஏதோ ஒன்று கொண்டாடும்போது ஆமிர்கான், அந்தப் படத் தயாரிப்பில் முக்கியப் பங்கு வகித்த தன் முதல் மனைவியை விழாவுக்கு அழைத்து மரியாதை செய்து உணர்ச்சி வசப்பட்டிருக்கிறார். யாதோன் கி பாராத் படத்தில் மூன்றாவது குழந்தையாக நடித்தது ஆமிர்கான்தான் தெரியுமோ...? (ராணுவ ரகசியத்தைச் சொல்லி விட்டீர்களாக்கும் என்று நொடிக்க வேண்டாம்!)   
=====================================
                                      
ராணுவ ரகசியங்கள் எல்லாம் சர்வ சாதாரணமாக லீக் ஆகும்போது ஸ்விஸ்ஸ் வங்கிக் கணக்கு விவரங்கள் தப்பித் தவறிக் கூட வெளியில் வராதவாறு கவனமாக, மிக கவனமாக பார்த்துக் கொள்கிறது சோனியாவின் அரசு என்கிறது ஒரு பத்திரிக்கைச் செய்தி.
========================================
                                                   
ஒரு அழுக்கான ஆஸ்பத்திரி. அல்லது கொஞ்சம் சுத்தமான ஆஸ்பத்திரி. சுமார் பதினைந்து பேர் உள்ள ஜெனெரல் வார்ட் அது. கேண்டீனில் போய் ஃபிளாஸ்கில் காஃபி வாங்கி வரும் ராகுல் அந்த ஏழாம் எண் பெட் அருகே போய் படுத்திருக்கும் சோனியா சாப்பிட்ட டிஃபன் கேரியரை ஒதுக்கி அருகில் உள்ள ஸ்டூலில் அமர்கிறார். அருகில் உள்ள படுக்கையில் ஒரு கிழவி, 'இருமு இருமு' என்று இருமுவதை பொழுது போகாமல் வேடிக்கை பார்க்கிறார் ராகுல்.

இப்படி ஒரு காட்சி மனக் கண்ணில் ஓடியது "சோனியா ஜெனெரல் வார்டுக்கு மாற்றப் பட்டார்' என்ற செயதியைப் படித்ததும்!

அவருக்கு என்ன வியாதி?

தெரியாது.

என்ன ஆபரேஷன்?

தெரியாது. மன்மோகன் சிங்குக்கும் அவர் அரசாங்கத்துக்கும் ஒன்று மட்டும் தெரியும். அன்னை சோனியாவுக்கு உடம்பு சரியில்லை.
=========================================
                                                  
கல்கியில் சமீபத்தில் தஞ்சை மாவட்ட சிறப்பிதழ் போட்டார்கள். (31-7-2011). அவ்வப்போது ஒவ்வொரு மாவட்டச் சிறப்பிதழாக போடுவதுதான். இந்த இதழ் பக்கங்கள் எல்லாவற்றிலும் பலப்பல அரிய தகவல்கள். அதில் மிக முக்கியச் செய்தி ஒன்று, பி.எஸ்.ராமையா, கு.ப.ரா., புதுமைப் பித்தன், கரிச்சான் குஞ்சு ஆகிய மணிக்கொடி எழுத்தாளர்களோடு இருந்த இன்னொரு மணிக்கொடி எழுத்தாளர் சுவாமிநாத ஆத்ரேயன் பற்றி. இன்று நம்மிடையே இருக்கும் மணிக்கொடி எழுத்தாளர் இவர் ஒருவர்தானாம் . வயது தொண்ணூற்றைந்து ப்ளஸ்ஸில் இருக்கும் இவர் தஞ்சையில் இருக்கிறார். இவரிடம் 'ரெண்டு வார்த்தை' வாங்கிப் போட்டிருக்கிறார்கள். பேசாத போது முழுவதும் ராம ஜபம் செய்கிறாராம். இவர் கதை ஒன்றும் படித்ததில்லை. (சமஸ்க்ருத நெடி என் கதைகளில் அதிகம் இருக்கும் என்கிறார் அவர்) "ஆத்ரேயன் நல்லாத்தான் எழுதறார்... ஆனால் தமிழ்ல எழுதுங்களேன்... இன்னும் நல்லா இருக்கும்" என்று வாழைப்பழ ஊசியாய் கமெண்ட் அடிப்பாராம் பு.பி.

ஜீவி சார்... இவர் கதை எதாவது இருந்தால் பிரசுரியுங்களேன்... அல்லது பி டி எஃபில் கிடைக்குமா?

கல்கியின் தஞ்சைச் சிறப்பிதழ் பழைய தஞ்சைக் கால நினைவுகளை கிளறி விட்டது.
=============================================
                                    
இதற்கும் அடுத்த இதழ் கல்கியில் சிறுகதைப் போட்டி முடிவு அறிவித்து விட்டார்கள். வண்ணதாசனும், கே பாரதியும் நடுவர்கள். பேராசிரியை பாரதி அவர்களை எனக்குத் தெரியும் என்பது எனக்குப் பெருமை! (அவருக்கும் என்னைத் தெரியுமாக்கும்!) முதல் பரிசு அசோகமித்திரனுக்கு.

பழம்பெரும் எழுத்தாளர். நன்றாக எழுதுவார். என்னுடைய கருத்து என்னவென்றால் அசோகமித்திரன் பெயர் வாங்கி விட்ட எழுத்தாளர். அவர் இந்தப் போட்டியில் கலந்து கொண்டது புதிய எழுத்தாளர்கள் வழியை மறைப்பது போல் இல்லையா என்று தோன்றியது ஒரு புறம், மறு புறம் பிரசுரிக்கப்பட்டுள்ள அவர் கதையில் பெரிய சம்பவம் அல்லது நிகழ்வு என்று ஒன்றுமில்லாமல் இருக்கிறது. வண்ணதாசன் அதற்கு ஒரு விளக்கம் கொடுத்திருக்கிறார்."யதார்த்தமும், ஒரு விட்டேற்றியான மனோபாவமும் கதையில் வறுமையை பிரச்சாரமாகச் சொல்லாமல் கலாபூர்வமாகச் சொல்கிறார்"
=============================================
                                  
"ஆடி மாசம் கல்யாணம் செய்யலாமா?"
                                    
ஜாதகம் பார்ப்பது முதல் சத்திரம் பார்ப்பது வரை எல்லாம் ஆடி மாதத்தில் செய்யலாம். கல்யாணம் மட்டும் கூடாது!
             
"விசா கிடைக்க எந்த கோவிலுக்குச் செல்ல வேண்டும்"
                        
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் உள்ள ஆஞ்சநேயரைப் போய் பார்த்து வரணும்... அர்ச்சனை செய்யணும்.. ராமபிரான் கடல்தாண்டிச் செல்ல உதவியவர் இந்த ஹனுமான்தான்..."
                                
இதெல்லாம் கல்கியில் வரும் ஜோசியப் பகுதியில் வரும் கேள்விகள், மற்றும்  பதில்கள்! 
                           
"விதியை மதியால் வெல்ல முடியுமா?"
                                
இந்தக் கேள்விக்கு என்ன பதிலாக இருக்கும் என்று நினைக்கிறீர்கள்...?
====================================
                                                      

21 comments:

ஹுஸைனம்மா said...

//அவருக்கு என்ன வியாதி?
தெரியாது.
என்ன ஆபரேஷன்?
தெரியாது. //
முன்னெல்லாம் அப்பப்ப, ஜெ.வும்தான் சிகிச்சை எடுக்கிறார், ஓய்வு எடுக்கிறார்னு நியூஸ் வரும். எதுக்குனு தெரியுமா? தெரியாது.

ஸ்டாலின்கூட லண்டன் போனார் சிகிச்சைக்கு. முதுகுவலிக்குன்னு வெளியே சொல்லிகிட்டாங்க.

ஏன், இப்ப ரஜினி சிங்கப்பூர் போனாரே, ஊர்சுத்திப் பாக்கத்தானே? :-))))

//அவர் இந்தப் போட்டியில் கலந்து கொண்டது புதிய எழுத்தாளர்கள் வழியை மறைப்பது போல் இல்லையா என்று தோன்றியது//
எனக்கும்!!

//"விதியை மதியால் வெல்ல முடியுமா?"//
சாவித்திரியால், மார்க்கண்டேயனின் என்றும் 16?

Madhavan Srinivasagopalan said...

// விதியை மதியால் வெல்ல முடியுமா? //

முடியும்
if விதி = India &
மதி = England

முடியாது
if விதி = England &
மதி = India

தமிழ் உதயம் said...

முதல் பரிசு பெற்ற அசோகமித்ரனின் கதை ஏமாற்றம் தந்தது தானே.

அப்பாதுரை said...

madhavan comment tops.

அப்பாதுரை said...

அசோகமித்திரன் கதையை விமரிசனம் செய்யலாம். அவர் புதிய எழுத்தாளர்களை மறிப்பதாக நினைப்பது, தவறாக எண்ணவில்லையெனில், பிற்போக்காகத் தோன்றுகிறதே? அசோகமித்திரன் கலந்து கொள்வது புதிய எழுத்தாளர்கள் வழியை மறைக்கவில்லை. பரிசு கொடுத்ததை வேண்டுமானால் சொல்லலாம் - அதுகூட பிற்போக்கு தான். எழுதுவோரில் என்ன பழைமை புதுமை பேதம்?

பழைய எழுத்தாளர் என்று ஒரு வகை உண்டா என்ன? அவர்களுக்கெல்லாம் எந்தப் பத்திரிகையில் போட்டி வைக்கிறார்கள்?

அப்பாதுரை said...

இந்தியா விசா கிடைக்க எந்தக் கோவிலுக்குப் போக வேண்டும் என்று கேட்டுச் சொல்லுங்களேன்?

geetha santhanam said...

அரட்டை எப்பொழுதுமே சுகம்தான். சுவாமிநாத ஆத்ரேயன் அவர்கள் எழுதிய சில புத்தகங்களைப் படித்திருக்கிறேன். ராம நாம மகிமை என்ற அவர் புத்தகத்தில் பல கதைகள் நன்றாக இருக்கும். என் அம்மா வசிக்கும் கோவிந்தபுரத்தில் அவர் ஒரு வருடம் தங்கியிருந்ததால் அவரிடம் பேசும் வாய்ப்பும் கிட்டியது. மிக எளிமையான மனிதர். சம்ஸ்கிருதத்திலும், ஆங்கிலத்திலும் பெரும் புலமை பெற்றவர் என்று கேள்விப் பட்டிருக்கிறேன். உங்கள் அரட்டையில் அவரைப் பற்றி படித்ததும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
புதுமைப் பித்தன் அவர்கள் போட்டிலயில் பங்கேற்றதைக் குறித்து துரைஅவர்கள் கருத்தை நானும் ஆதரிக்கிறேன்.

Chitra said...

அரட்டை என்றாலே நல்லா இருக்கும் தானே.

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

நிறைய தகவல்கள். நல்ல தகவல்கள். சுவையான அரட்டை.

ஜீவி said...

பிரசுரிக்க அல்ல.

//இன்றும் நம்மிடையே//

அந்த 'ம்'மை மட்டும் நீக்கிவிடுங்கள்.
பிறகு வருகிறேன்.

பத்மநாபன் said...

நல்ல மிக்சர் தகவல்கள்...அசோக மித்திரன் கலந்து கொள்வதே சக போட்டியாளர்களுக்கு கௌரவம்....

HVL said...

//ஐம்பத்தி மூன்று வருடங்களுக்கு முன்னால் எழுதப் பட்டகடிதம்... //
பரவாயில்லை! அவர் காலத்திலேயே வந்துடுச்சே!
கல்கி போட்டியைப் பற்றி சொன்னதை ஒப்புக் கொள்கிறேன்!

HVL said...

@ அப்பாதுரை

எழுத்தாளான் தனக்கு கிடைத்த பரிசுத்தொகையை விட தன் கதைக்கு கிடைத்த அங்கீகாரத்தையே பெரிதாக எண்ணுகிறான்.

பிரபல எழுத்தாளர்கள் இனி தான் பரிசு பெற்று அங்கீகாரம் பெற வேண்டும் என்பது இல்லை. அவர் கதையை பிரசுரம் செய்ய பத்திரிக்கைகள் தயாராகவே இருக்கும்.

அந்த இடம் வேறு எழுத்தாளனுக்கு அளிக்கப்பட்டிருந்தால் ஊக்கத்துடன் மேலும் நிறைய எழுதியிருப்பார் என்பது என் கருத்து!

Baskaran said...

விளையாட்டுப் போட்டிகள் அறிவிக்கும் பொழுதே, மெடல் பெற்றோர், இன்னும் பெறாதோர் என்று இரண்டு குழுக்களாகப் பிரித்து அறிவிப்பார்.
அறிமுகம் ஆகாத எழுத்தாளருக்கு என்று அறிவிக்காத வரை யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம். ஒலிம்பிக்கில் ஒரு முறை மெடல் வென்றவர் இன்னொரு முறை பங்கேற்கக் கூடாது என்று வைத்தால், போட்டியின் விறுவிறுப்பு குறைந்து விடலாம். இங்கே கூட, கதை அனுப்புவோர் தாங்கள் பெயரைப் பதிவிட வேண்டும் என்று சொல்லி, அசோகா மித்திரன் பங்கேற்கிறார், அப்பாதுரை எழுதுகிறார் என்று விளம்பரப் படுத்தினால் இன்னும் நிறையப் பேர் பங்கேற்கக் கூடும்.

RAMVI said...

செய்திகுறிப்புகளுக்கு உங்க விமர்சனம் அருமையாக இருக்கு.

//"விதியை மதியால் வெல்ல முடியுமா?"

இந்தக் கேள்விக்கு என்ன பதிலாக இருக்கும் என்று நினைக்கிறீர்கள்...?//

‘அப்படி வெல்வதே உன் விதியாக இருக்கும்’
என்று ஸ்வாமி விவேகானந்தர் சொல்லியிருப்பதாக எங்கேயோ படித்த நினைவு.

அமைதிச்சாரல் said...

நல்லாவே பொழுது போச்சு அரட்டையில் கலந்துக்கிட்டதில்..

Kannan said...

//"விதியை மதியால் வெல்ல முடியுமா?"//
முடியும்.

நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com

இராஜராஜேஸ்வரி said...

விமர்சனம் அருமையாக இருக்கு.

அப்பாதுரை said...

மணிக்கொடி காலத்துச் சிறுகதைத் தொகுப்புகள் சிலவற்றை கன்னிமரா நூலகத்தில் பார்த்திருக்கிறேன். படிக்கத் தோன்றாமல் போனதை நினைத்து இப்போது வருத்தமாக இருக்கிறது. தஞ்சாவூரில் ஏதோ பெரிய நூலகம் இருக்கிறதே - சட் - அங்கே தேடினால் கிடைக்கலாம்.

இராஜராஜேஸ்வரி said...

கல்கியின் தஞ்சைச் சிறப்பிதழ் பழைய தஞ்சைக் கால நினைவுகளை கிளறி விட்டது.

எங்கள் said...

// தஞ்சாவூரில் ஏதோ பெரிய நூலகம் இருக்கிறதே //

சரஸ்வதி மஹால்?

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!