செவ்வாய், 27 ஜூன், 2017

கேட்டு வாங்கிப் போடும் கதை :: இரு துருவங்கள் - கீதா ரெங்கன் - சீதை 11 (முதல் பகுதி)



     சீதா ராமன் கதையில் இந்த வாரம் படைப்பை வழங்கி இருப்பவர் தில்லையகத்து க்ரானிக்கிள்ஸ் தளத்தில் எழுதும் திருமதி கீதா ரெங்கன்.


     சற்றே நீளமாக இருப்பதால் இதுவும் இரண்டு பாகங்களாக வருகிறது.


=========================================================================




இரு துருவங்கள்


கீதா ரெங்கன்


நான் தனியா வாழலாமானு ரொம்ப தோண ஆரம்பிச்சுடுச்சு, அபி”


6 மாதங்களுக்கு முன் அமெரிக்காவிற்கு வேலை நிமித்தம் சென்று, திருமணமாகி இருக்கும் தன் ஒரே மகள் அபியிடம், மஞ்சு, ஸ்கைப்பில் வீடியோ காலில் பேசிக் கொண்டிருந்தாள். குரல் உயர்ந்ததைக் கேட்டு ஹாலின் மேல் சுவற்றில் இருந்த பல்லி கூட, தான் எழுப்ப இருந்த ஒலியை அடக்கிக் கொண்டது! பல்லி சொல் பலிக்குமாமே! பலித்துவிட்டால்? தன்னை வீட்டிலிருந்து விரட்டாமல் கனிவுடன் கவனித்துக் கொள்ளும் மஞ்சு இந்த வீட்டை விட்டு வெளியேறுவதா, தன்னையும் அழைத்துச் செல்வாளா என்று நினைத்தது போலும்!


அமிர்தா, மஞ்சுவின் வீட்டின் காலிங்க் பெல்லை அழுத்தும் சமயம் மஞ்சுவின் உயர்ந்த குரலைக் கேட்டதும் மஞ்சுவின் குரலா இது? இப்படி அவள் குரல் உயர்ந்து கேட்டதே இல்லையே! என்று நினைத்துக் கொண்டே கதவு திறந்திருப்பதைக் கண்டு திறக்க, மஞ்சுவும் அமிர்தாவைப் பார்த்துவிட்டுக் கையசைத்தாள். வீட்டில் அண்ணன் இல்லை என்பது தெரிந்தது. அமிர்தா மஞ்சுவின் ஒன்றுவிட்ட நாத்தனார். கணவன் மணியின் சித்தப்பா மகள். மஞ்சு, அமிர்தாவிற்கு அண்ணி என்றாலும் நல்ல தோழி, கிட்டத்தட்ட ஒரே வயது என்பதால் பெயர் சொல்லி அழைப்பதே வழக்கமாவிட்டது.


அபி மற்றும் மஞ்சுவின் நாலுகால் செல்லம் பைரவி எழுந்து வந்து மஞ்சுவின் மடியில் முகம் புதைத்தது. என்ன புரிந்ததோ அதற்கு? ஒருவேளை தன்னையும் விட்டுச் சென்றுவிடுவாளோ என்று நினைத்ததோ தெரியவில்லை. அமிர்தாவையும் வந்து நக்கியது.


“ம்மா! வாட் ஹேபன்ட் டு யு? இத்தனை நாள் இல்லாத இந்த எமோஷன்? என்னாச்சும்மா?” இத்தனை வருடங்கள் எத்தனையோ கஷ்டங்கள் வந்த போது கூட அம்மா சொல்லாத ஒன்று என்ற வியப்பு அவள் முகத்தில்.


“அம்மா நீ இங்க வரியா ஃபார் எ சேஞ்ச்”


“இல்ல அபி…நான் அங்க வரது எல்லாம் ப்ராக்ட்டிக்கலா வொர்க் அவுட் ஆகாது”


“ஹை அத்தை! எப்படி இருக்க? அத்தை இன்னும் கொஞ்ச நேரம் இருப்பல்ல? சரி! அம்மா நீ அத்தையோடு பேசி கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணு. இன்னிக்கு நான் வொர்க் ஃப்ரம் ஹோம்தான். இவர ஆஃபீஸ் அனுப்பிட்டு, ஒரு ½ மணி நேரத்துல கூப்பிடறேன்” மஞ்சு ஸ்கைப்பிலிருந்து வெளியில் வந்தாள்.


“அமிர்தா என்ன சாப்பிடற?”


“அதிருக்கட்டும் மஞ்சு. என்னாச்சுனு சொல்லு”


“ம்ம்ம் என்னனு சொல்ல? எனக்கு கோர்ட்டுக்கு எல்லாம் போக முடியாது. ஆனா என்னால இனியும் என் சுய மரியாதையை இழந்து இங்க இருக்க முடியும்னு தோணலை”


 “மஞ்சு…..புரியுது. .ஆனா இவ்வளவு வருஷத்துக்கு அப்புறம் இப்ப திடீர்னு இப்படி ஒரு முடிவு ஏன்? காரணம்?”


 “வார்த்தைகள்! அவரது பிஹேவியர். எனக்கும் வயசாகுறதுனாலயோ என்னவோ…” சொல்லும் போதே அவளுக்குத் துக்கம் தொண்டையை அடைத்தது. மேற்கொண்டு அவளால் பேச முடியவில்லை..


“சரி மஞ்சு! கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணு. அபி திரும்ப ஸ்கைப்ல வரட்டும் பேசலாம்” மஞ்சுவைப் பார்க்க வந்த அமிர்தாவிற்கு வேதனையாக இருந்தது. மஞ்சு அப்படியே நாற்காலியில் சாய்ந்து கண்ணை மூடினாள். மனம் ஒரு குரங்காயிற்றே! கண்ணிற்குள் காட்சிகள் விரிந்தன….
.

திருமணமான புதிது. கிடைத்த நல்ல மத்திய அரசு வேலையையும் புகுந்த வீட்டில் போக வேண்டாம் என்று சொல்ல அதுவும் இல்லை. மணியின் வேலை நிமித்தம் வேறு ஊரில் தனிக் குடித்தன வாழ்க்கை. அவன் என்னென்னவோ பேசினான்.


“வாழ்க்கைல உன் எய்ம் என்ன?”


“பெரிசா எதுவும் இல்லை. என் சப்ஜெக்ட்ல ஆராய்ச்சி பண்ணனும். டீச் பண்ணனும். நிறைய வாசிக்கணும், எழுதணும். எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாம அன்போடு என்னால முடிஞ்சத எல்லாருக்கும் செய்யணும்னு தோணும், சமுதாயச் சேவை பிடிக்கும்”


“நீ கிறித்தவளா?” என்றான். அதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம் என்பது அவளுக்கு இன்று வரை புரியவில்லை.


“காட் ரியலைசேஷன்…இதுதான் என் எய்ம் இன் திஸ் லைஃப்” என்றான்.


“நாம செய்யுற எல்லா நல்ல செயல்கள்லயும் இறைவனை உணரலாமே. ஏழையின் சிரிப்…….” முடிக்கும் முன்னரேயே


“ஆல் நான் சென்ஸ்! ஆராய்ச்சியா? நீ என்னத்த வாசிச்சுக் கிழிச்ச? என்னது அது? எழுதணுமா? உங்க வீட்டுல என்னத்த சொல்லிக் கொடுத்தாங்க?” வார்த்தைகள் பாய்ந்தது.


பல புத்தகங்கள் வாசித்தலிலும், சிறுவயது முதல், திருமணம் வரை வாழ்க்கை தந்த அனுபவப் பாடத்தில் விளைந்த எவ்வளவோ சிந்தனைகள், எண்ணங்களினால் விளைந்த பதில் இருந்தாலும், பதில் சொல்ல முடியவில்லை. குதர்க்கமாகப் பேசிப் பழக்கமில்லையே! திருமணத்தில் விருப்பமில்லை என்பதால் எதிலும் நாட்டமில்லை. தாம்பத்தியத்திலும். இந்த எண்ணம் சரியா தவறா என்று தெரியவில்லை ஆனால் மனம் சுத்தமாக உடன்படாத ஒன்றில் விருப்பமில்லாமல் போனது. 


 “வாசல்ல உக்காந்துருக்கானே அவன் ஒரு ராட்சசன். அவன் உள்ள வந்துருவான்” என்று மணி சொன்ன போது இவள் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தாள். அங்கு யாருமே இல்லை. நாற்புறமும் கண்ணைச் சுழலவிட்டுப்பார்த்தாள் யாருமில்லை. கோயில்களுக்குச் சென்ற போது அங்கும் யாரோ தன்னைத் தாக்கவருகிறார்கள் என்றான். அப்படிப் பல சமயங்களில் பேசினான். மஞ்சு குழம்பினாள். அங்கிருந்த பூசாரிகளிலிருந்து, வாயில்காப்போன் வரை எல்லோருக்கும் ரூ 100 கொடுத்தான். இவள் யோசித்தாள் கணவனது வருமானம் அவ்வளவு இருக்குமா? என்று. இவள் அறிவுக்கு எட்டாத, புலப்படாத வார்த்தைகள், கருத்துகள், மொழிகள் பேசினான். அவன் செயல்பாடுகள் மிகவும் வித்தியாசமாக இருந்தது. ஒன்றுமே புரியவில்லை. புகுந்த வீட்டில் யாரிடமும் கேட்பதற்கும் பயம்.


மணியை அறிந்தவர் எல்லோரும் சொன்னது “அவன் மகா புத்திசாலி, அறிவுஜீவி, ஜீனியஸ்” என்று. பாரதியாரை எக்சென்ட்ரிக் என்று சொல்லுவார்களே அது போலவோ? என்று தனக்குத் தெரிந்த ஒரே உளவியல் வார்த்தைக்குள் கணவனது நடவடிக்கைகளை அடக்க முயற்சி செய்தாள். செல்லம்மா பாவம்! ஏனோ இந்தச் சமூகம் பாரதியாரைக் கொண்டாடுவதைப் போன்று செல்லம்மாவை அவளது கோணத்தில் புரிந்து கொள்ளவில்லையோ என்றே தோன்றியது. ஒரு வேளை அவள் இடையில் பிர்ந்து சென்று வாழ்ந்ததாலோ? இல்லை பெண் ஆனதாலோ? தனது பெண்ணுரிமை பேச்சுகள் எல்லாம் கல்லூரி அரங்கங்களோடு நின்று, சான்றிதழ்கள் எல்லாம் பரணுக்குள் முடங்கிட, யதார்த்தம் வேறு என்று புலனாகியது.


மணி மூலையையோ, விட்டத்தையோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருப்பான் அல்லது அமர்ந்து தலையைத் தொங்கப் போட்டபடி எதையோ யோசித்துக் கொண்டிருப்பான். அதிகம் பேச மாட்டான். இவள் ஏதேனும் கேட்டால் “உஷ்!” என்று வாயில் விரல் வைத்து பேசக்கூடாது என்பது போல் சைகை இருக்கும். பேசினால் ஏதேதோ புரியாத அறிவியல் மொழிகள் பல பேசுவான். புத்தகங்கள் வாசிக்கலாம் என்று தான் விரும்பும் புத்தகங்கள் வாங்கலாம் என்றால், அவை “ட்ராஷ்”. வாசிக்க அனுமதி இல்லை. டிவி? அது இடியட் பெட்டி. அதனால் வீட்டில் கிடையாது. வீட்டில் இருந்தவை எல்லாம் தத்துவப் புத்தகங்கள், உபநிஷத்துகள், கீதை, வேதாந்த புத்தகங்கள், தத்துவம் சார்ந்த அறிவியல் புத்தகங்கள். மஞ்சுவிற்கும், இப்புத்தகங்களுக்கும் இடையில் ராக்கெட் விடும் தூரம்.


“சமஸ்க்ருதம் தெரியாதா? வேஸ்ட். என்னதான் தெரியும்?”


“அன்பு! அந்த ஒரு மொழிதான் தெரியும்”


“நீ படிச்சது கிறிஸ்டியன் ஸ்கூல் இல்ல? அதான்.....நல்ல ப்ரெய்ன் வாஷ்”



“ஏன் தப்பில்லையே! எல்லா மதமும் அன்பு செய்னுதானே சொல்லுது”


“உன் அறிவு அவ்வளவுதான். சரி கீதை தெரியுமா?”


“ஓ! தெரியுமே! பக்கத்துவீட்டுப் பொண்ணு”


“கருமம்! நான் சொன்னது பகவத் கீதை! தமிழ்லயாவது வாசிச்சிருக்கியா?”


“……”


“முட்டாள்..அறிவுகெட்ட ஜென்மம்…என் தலையெழுத்து.”


வாசிப்பதற்கு எவ்வளவோ புத்தகங்கள் இருக்கிறதே! என்று தோன்றியது மஞ்சுவிற்கு.


வெளியில் சென்றால் யாரேனும் ஏதாவது யதார்த்தமாகச் சொன்னால் அவர்களுடன் சண்டை. சம்பந்தா சம்பந்தம் இன்றிப் போலீசிடம் கை ஓங்கும் அளவிற்குச் சண்டை. போலீசிடம் மன்றாடிக் கேஸ் பதிய விடாமல் கூட்டிக் கொண்டு வருவதற்குள் போதும் போதும் என்றாகிவிடும் மஞ்சுவிற்கு. மணியைப் பொருத்தவரை எல்லோருமே முட்டாள்கள், அரைவேக்காடுகள். யாருக்கும் ஒன்றும் தெரியாது.


இவளது உறவினர் யாரும் வீட்டிற்கு வரக் கூடாது. அவர்களால்தான் எங்கேயோ இருக்கும் அவனது அக்காவின் மகனுக்கு உடல்நலம் சரியில்லை என்று கேயோட்டிக் தியரி பேசுவான். பூர்வஜென்மம், கர்மா என்பான். இவளுக்குத் தெரிந்ததெல்லாம் ஆயிரம் ஜென்மங்கள் படமும், குருமா எப்படிச் செய்வது என்பது மட்டுமே!


ஏதோ சரியில்லை என்று மட்டும் புரிந்தது. ஆனால் என்னவென்று தெரியவில்லை. ஒரு நாள் திடீரென்று இவளை வீட்டிற்குள் அடைத்துவிட்டு எந்த அறைக்கும் செல்ல முடியாதபடி வீட்டைப் பூட்டிவிட்டுச் சென்றுவிட்டான். காலையில் சென்றால் மாலை 5, 5.30 மணிக்குத்தான் வீடு திறக்கப்படும். இப்படிப் 10 நாட்கள் ஓடியது. மஞ்சுவிற்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. ஆனால், அவளது தைரியமான மனது அவளை, “யோசி யோசி” என்றது. “கோயில்ல ஒருத்தன் என்னையே முறைச்சான்.” என்று சொன்னான். கோயிலுக்கு எப்போது போனோம் என்று இவள் மனதில் கேள்வி எழுந்தது. காரணம் புரியவில்லை. அதன் பின் வேலைக்குச் செல்லவில்லை. வீட்டில் கஞ்சி, கூழ் தான். சில சமயங்களில் அதுவும் இல்லை.


தலைப் பொங்கலுக்கு மஞ்சுவின் அப்பா சீர் பணம் அனுப்பியிருக்க, அந்தப் பணத்தில் புகுந்த வீட்டிற்குப் பயணம். அப்போது தன் மாமியாரிடம் கணவனின் நடவடிக்கைகள் பற்றிச் சொன்னாள். அவரிடமிருந்து எந்த பதிலும் இல்லை. மறுநாள் வீட்டிலுள்ளோர் அனைவரும் மருத்துவரிடம் சென்றனர். மஞ்சுவை அழைத்துச் செல்லவில்லை. மருத்துவர் மஞ்சுவை அழைத்து வாருங்கள் என்று சொல்லிட மறுநாள் இவளையும் அழைத்துச் சென்றனர். மருத்துவர் எல்லோரையும் வெளியில் அனுப்பிவிட்டு மஞ்சுவை மட்டும் உள்ளே இருக்கச் சொன்னார்.


“மஞ்சு! ரைட்?.. சரி. நான் நேரடியாவே விஷயத்துக்கு வரேன். மணியைப் பத்தி உங்களுக்குக் கல்யாணத்துக்கு முன்னாடி ஏதாச்சும் தெரியுமா? அதாவது அவருக்கு இருக்கற பிரச்சனை பற்றி இல்ல அவர் மருந்து சாப்பிட்டது பத்தி ஏதாவது….?”


”இல்ல டாக்டர் எதுவுமே தெரியாது. அவர் படிப்பு, வேலை, குடும்பம் இது மட்டும்தான் தெரியும்….”


“ஓகே!”


“ஆனா, அவர் மருந்து எதுவும் சாப்பிடறா மாதிரி தெரியலையே டாக்டர். எனக்கு, அவரோட நடவடிக்கைகள் பல சரியாப்படலை.”


“ஆமா. நான் தான் கல்யாணத்துக்கு முன்னாடி மாத்திரைய நிறுத்த சொன்னேன். ஒரு வேளை மாறலாம்னு. சரி தாம்பத்யம்?”


“ஸாரி டாக்டர் எனக்கு அதுல விருப்பம் இல்லை?”


“ஏன் அவருடைய நடவடிக்கைகள் காரணமா? அவர் உங்களை அணுகலையா?”


“டு பி ஃப்ராங்க் டாக்டர் எனக்கு விருப்பம் இல்ல. என் வாழ்க்கையே புரியலை. அதுக்கு ஏத்தா மாதிரி அவரும் இப்படி இருக்கறது எனக்குச் சாதகமாயிடுச்சு”


“ஓ! சரி! இப்ப, உங்களுக்கு அவர் நார்மல் இல்லைனு தெரியுது இல்லையா? கல்யாணத்துக்கு முன்னாடியே அவங்க ஏன் சொல்லலைனு தோணுதா? இந்தப் பிரச்சனைய சமாளிச்சு நீங்க அவரோட வாழ முடியுமா? இல்ல டிவோர்ஸ் அப்ளை பண்ணலாம்னு தோணுதா? ஏன் கேட்கிறேன்னா, நீங்க தொடர்ந்து வாழப் போறீங்கனா அவருடைய பிரச்சனை என்னன்னு உங்களுக்குச் சொல்லுவேன். இல்லைனா உங்ககிட்ட அதைப் பத்திச் சொல்ல வேண்டாமேனு தோணுது.”


 “டாக்டர் இப்படிச் சொடக்கு போடற டயத்துல எப்படி முடிவு எடுக்க முடியும்? எனக்கு ஒரு 5 நிமிஷம் இப்படியே இங்க உக்காந்து யோசிக்க டயம் தரீங்களா?”


“ஓ! ஷ்யுர்!”


மஞ்சுவின் மனதில் தன் பெற்றோர் மற்றும் குடும்ப முகங்கள் தோன்றிட, எண்ணங்கள் அதற்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறியது. ‘தன் ஊர் ஒரு கிராமம். படித்த தனக்கே பல விஷயங்கள் புரியாத போது அம்மா அப்பாவுக்கு இதைப் புரிந்து கொள்ளும் சக்தி இருக்குமா? குடும்பம் ஏழ்மை. போலீஸ் ஸ்டேஷனையே பார்த்திராதவர்களுக்கு வக்கீல், கோர்ட், விவாகரத்து என்று அலையும் தைரியமோ, சக்தியோ, பணபலமோ கிடையாது. வாழாவெட்டி என்ற பெயரும் கிராமத்தில் பரவும். அம்மா அப்பாவினால் அதைத் தாங்கவும் முடியாது. கிடைத்த வேலையும் கையில் இல்லை. மீண்டும் வேலை தேட வேண்டுமென்றால் நகரத்திற்குத்தான் வர வேண்டும். எங்கு தங்குவது? தன்னால் தன் பெற்றோருக்குக் கஷ்டம் வருமே!’ என்று பலதையும் யோசித்தவள், தனது மன பலத்தால் சமாளித்துவிடலாம் என்று டக்கென்று


“டாக்டர்! நான் தொடர டிசைட் பண்ணிட்டேன்” என்றாள்.



[தொடரும்] 





தமிழ்மணத்தில் வாக்களிக்க இங்கே க்ளிக் செய்யவும்.

66 கருத்துகள்:

  1. //மஞ்சுவின் மனதில் தன் பெற்றோர் மற்றும் குடும்ப முகங்கள் தோன்றிட, எண்ணங்கள் அதற்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறியது. ‘தன் ஊர் ஒரு கிராமம். படித்த தனக்கே பல விஷயங்கள் புரியாத போது அம்மா அப்பாவுக்கு இதைப் புரிந்து கொள்ளும் சக்தி இருக்குமா? குடும்பம் ஏழ்மை. போலீஸ் ஸ்டேஷனையே பார்த்திராதவர்களுக்கு வக்கீல், கோர்ட், விவாகரத்து என்று அலையும் தைரியமோ, சக்தியோ, பணபலமோ கிடையாது. வாழாவெட்டி என்ற பெயரும் கிராமத்தில் பரவும். அம்மா அப்பாவினால் அதைத் தாங்கவும் முடியாது. கிடைத்த வேலையும் கையில் இல்லை. மீண்டும் வேலை தேட வேண்டுமென்றால் நகரத்திற்குத்தான் வர வேண்டும். எங்கு தங்குவது? தன்னால் தன் பெற்றோருக்குக் கஷ்டம் வருமே!’ என்று பலதையும் யோசித்தவள், தனது மன பலத்தால் சமாளித்துவிடலாம் என்று டக்கென்று


    “டாக்டர்! நான் தொடர டிசைட் பண்ணிட்டேன்” என்றாள்.//

    இப்படித்தான் பெற்றோர், ஊர், குழந்தை இருந்தால் குழந்தை என்று மனதை கல்லாக்கி கொண்டு புரிதல் இல்லா வாழ்வை தொடர்ந்து கொண்டு அவதி படும் பெண்கள் நிறைய இருக்கிறார்கள் சமுதாயத்தில்.

    துணிந்து வெளியில் வந்தால் அவர்களுக்கு கிடைக்கும் பெயர் சொல்லவே வேண்டாம்.
    கீதாவின் கதையை அவர் தளத்தில் முன்பு படித்தேன் அருமையாக எழுதி இருந்தார்.
    இந்த கதையும் நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி கோமதிக்கா....மஞ்சுவை விடவும் கேவலமான அடிமைகளாக வாழும் பெண்கள் இருக்கிறார்கள்தான்...நன்றி அக்கா தங்கள் பாராட்டிற்கு...

      நீக்கு
  2. புதுமை. மஞ்சு வெளி வரட்டும். உயிர்த்தியாகம் செய்து ராமனை மன்னிக்க வேண்டாம் கீதா மா. வாழ்க்கை இனிமையானது.மனம் நிறை வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி வல்லிம்மா....நீங்கள் சொல்வது யதார்த்தத்தில் நடக்கலாம் ....கதையில் சீதை ராமனை மன்னிக்க வேண்டுமே....எனவே ....ஆம் வாழ்க்கை இனிமையானதுதான்....

      நீக்கு
  3. இருபது வருடங்களுக்கு முன் இருந்த அதே கட்டாயங்கள் இப்பொழுதும் இல்லாமல் போக ஆசை. கட்டுடைக்கலாம் கதையிலும். இருபாலருக்கும் பொதுவாகச் சொல்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி வல்லிம்மா உடைந்து இருக்கா....என்று அடுத்த பகுதியில் தெரிந்துவிடும்

      நீக்கு
  4. மஞ்சுவின் முடிவு சரியானதே...
    இதில் அவளுடைய வாழ்க்கையோடு தியாகமும் இருக்கிறது நல்லதே நடக்கட்டும் பார்ப்போம்...
    தொடர்கிறேன்...

    (அதானே தொடரும் போடாமல் கதையை முடிக்க வில்லங்கத்தார் என்ன துக்ளக்கா?)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி கில்லர்ஜி....மொபைலில் அடிப்பதால்....உங்களின் கருத்திற்கு இன்னும் விரிவாக எழுத முடியலை...அதாவது மஞ்சுவின் முடிவு சரியானதே என்பதற்கு.....

      ஹாஹாஹா....நமக்கு சின்னதா எழுத வரமாட்டேங்குதே....அறபு சரி...துக்ளக்கிற்கும் தொடரும் போடுவதற்கும்ம் என்ன தொடர்பு....

      நீக்கு
    2. அறபு..... அது என்று வரணும்...பிழையாகிவிட்டது

      நீக்கு
  5. தேர்ந்த நடை...

    அடுத்த பகுதி அடுத்த வாரம்..
    நீண்ட இடைவெளி...

    சற்றே பொறு மனமே!...

    பதிலளிநீக்கு
  6. தேர்ந்த நடை...

    அடுத்த பகுதி அடுத்த வாரம்..
    நீண்ட இடைவெளி...

    சற்றே பொறு மனமே!...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி துறைசெல்வராஜு சகோ....தங்களின் கருத்திற்கும், பாராட்டிற்கும்ம்...

      நீக்கு
  7. அழகான ஆரம்பம். அழுத்தமான நடை. அழப்போகிறாளா, அழ வைக்கப் போகிறாளா? (கதாநாயகியைச் சொன்னேன்.)- இராய செல்லப்பா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி செல்லப்பா சார்...உங்கள் கேள்விக்கான பதில் அடுத்த பகுதியில் ....

      நீக்கு
  8. என்ன டிசைட்,டைவோர்சுக்கா ,தொடர்ந்து சேர்ந்து வாழவா ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடுத்த பகுதியில் தேரோயும் பகவான் ஜி....

      மிக்க நன்றி ஜி

      நீக்கு
    2. தெரியும் என்று படியுங்கள்....மொபைலில் அடிப்பதால் தேரோயும் என்று வந்துவிட்டது....

      நீக்கு
  9. இந்த தகவலை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி
    தமிழ் செய்திகள்

    பதிலளிநீக்கு
  10. வணக்கம்
    ஐயா

    கதை மிக சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள் தொடருகிறேன்..

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ரூபன் தம்பி..எழுதியது..அக்கா....வெளியிட்டது ஐயா....

      நீக்கு
  11. சிறப்பான கதை! ஆனாலும் இந்தக் கதாநாயகனையே நாயகியாக நினைத்துக் கொண்டால்? அப்படி ஒரு தம்பதியரை அறிவேன்! :( அந்தக் கணவனும் இப்படித் தான் தியாகம் செய்து கொண்டிருக்கிறார்! :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி கீதாக்கா....ஆம் எனக்கும் அப்படி ஒரு கணவனைத் தெரியும்....

      நீக்கு
  12. எனக்கு வாசித்து முடித்ததும் என்னவோ போலாகிடுச்சி மனதுக்கு ..விரிவாக பின்னூட்டம் தர பிறகு வருகிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ஏஞ்சல்.....வாங்க அப்புறமா ...கருத்து போடுங்க....இரண்டு நாளாக பவர் இல்லை....நெட் இல்லை. இதோ இப்போதும் இல்லை...மொபைல் வழிதான்....கொஞ்சம் kadupputhaan.....அடிக்கக் கஷ்டமா இருக்கு

      நீக்கு
  13. மிக நன்றாக உள்ளது பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சகோ அசோகன் குப்புசாமி ...கருத்திற்கும், பாராட்டிற்கும்ம்...

      நீக்கு
  14. த ம போட்டாச்சு. "முடிந்தது" போட்ட உடனே ரெண்டையும் படிச்சிட்டு கருத்து எழுதறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடுத்த பகுதியில் முடிந்தது வந்துவிடும்.....த ம விற்கு நன்றி. உங்கள் கருத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்....

      மிக்க நன்றி நெல்லைத்தமிழன்

      நீக்கு
  15. வீட்டு பல்லிக்கு இருக்கும் இரக்கம் கூட வீட்டுக்காரர் மணிக்கு இல்லையே என்று தோன்றியது!

    அதீத புத்திசாலித்தனத்துக்கும் பிறழ் மனநிலைக்கும் மிகச்சிறிய கொடுத்தான் இடைவெளி. சொல்லாமல் திருமணம் செய்த மணியின் பெற்றோர் மீதும் தவறு இருக்கிறது. தங்கள் பாரத்தைக் குறைத்துக் கொண்டார்கள் போலும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதலில் ஸ்ரீராமுக்கு மனமார்ந்த நன்றிகள் பல.....என்னை போன்றவர்களையும் கதை எழுத வைத்து ஊக்குவித்து வெளியிடுவதற்கு.....

      அடுத்து உங்கள் கருத்திற்கு.....ஆம் ஸ்ரீராம் அதீதம் எதிலுமே பிறழ்ந்துதான் போகும்....அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சுதான் இல்லையா....மூளைத் திறனும் அதற்கு விதிவிலக்கல்ல....

      மணியின் பெற்றோர் மீது தவறு
      இருக்கிறதுதான்..ஆனால்,கதா நாயகியின் வாழ்க்கை இப்படித்தான் அமையவேண்டும் என்று விதித்திருந்தால் யாரும் ஒன்றும் செய்ய முடியாதே.... கதாசிரியர் அப்படிக் கொண்டுவந்ததால் தான் கதை நகர்ந்தது....இல்லை என்றால் சீதை மன்னித்தாள் என்று இக்கதை வந்திருக்காது இல்லையா....

      மிக்க நன்றி ஸ்ரீராம்

      நீக்கு
    2. மற்றோன்று சொல்ல விடுப்பட்டுவிட்டது ஸ்ரீராம்....நான் இரண்டாகப் போட்டிருந்தால் எங்கு தொடரும் போட்டிருப்பேனோ அந்த இடத்தில் போட்டிருக்கிறீர்கள்...மஞ்சு தொடர்வதைப் போல்.... நான் கதையும் தொடர்கிறேன்...எனும் அர்த்தத்தில்.....ஹை five

      மிக்க நன்றி இதற்கும்....

      நீக்கு
  16. மனம் கனத்து விட்டது. கிட்டத்தட்ட இதே கருவில் நானும் ஒரு கதை யோசித்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் கதையையும் ஆவலோடு எதிர்பார்க்கிறேன் பானுக்கா..இதே கருவா....சூப்பர்..நீங்கள் இதை விட மிக நன்றாக எழுத்துவீர்கள்....
      மிக்க நன்றி பானுக்கா

      நீக்கு
  17. அடுத்த பகுதியில் மஞ்சு சீதாவாகப் போகிறாரா

    பதிலளிநீக்கு
  18. ஆஆஆஆஆஆஆவ்வ்வ் வ் நான் கீதாவைப் பார்த்திட்டேன்ன்ன்ன்ன் கீதாவைப் பார்த்திட்டேன்ன்ன்ன் ஸ்ஸ்ஸ்ஸ் அதாரது பின்னுக்கு நிண்டு இடிக்கிறதூஊஊஊஊஊ.... கொஞ்சம் நில்லுங்கோ வடிவாப் பார்த்திட்டு வாறன்..... கதை படிக்க...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹஹஹஹ...பார்த்துட்டு. ஓடிட்டீங்களே....கதை...கதை....தேம்ஸ்ல போராட்டம்?

      மிக்க நன்றி அதிரா....

      நீக்கு
  19. மஞ்சு எப்படித் தாங்கிக் கொண்டாள். இப்போது திடீரென்று என்னவாயிற்று. போர்க்கொடி முதலிலேயே தூக்கி இருக்க வேண்டும். இப்போதும் என்ன முடிவோ பார்க்கலாம். அன்புடன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி காமாட்சியம்மா...அடுத்த பகுதியில் உங்கள் கேள்விகளுக்குப் பதில் இருக்கிறது என்று நினைக்கிறேன் அம்மா.மஞ்சு மறைமுகமாகப் போர்க்கொடி தூக்குகிறாள்... இதில் இருக்கு....அடுத்த பகுதியில் அறிய நேரிடும்....

      நீக்கு
  20. முடிவு அடுத்த பகுதியில் மாறுமா...?

    ஆவலுடன்

    நானும் தொடர டிசைட் பண்ணிட்டேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹஹஹஹ..டிடி.... எப்படி மாறும்...மஞ்சு மணியை மன்னிக்க வேண்டாமா....அதுதானே கதையின் முடிவு வரி....கண்டிஷன்....

      மிக்க நன்றி டிடி....

      நீக்கு
  21. வணக்கம் கீதா மேடம். ஹாட்ஸ் ஆப் டூ யூ..! அருமையான கதை. 'அறப்படித்த' ஒருவரின் குடும்ப வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை அழகாக, நேர்த்தியாகப் படம்பிடித்துக் காட்டியுள்ளீர்கள்.

    இன்னும் எழுதணும். வருகிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ராஜீவன் பாராட்டிற்கு....அண்ணா நகரில் ஒரு சென்டர் இருக்கிறது. அங்கு சென்றால் மணி போன்ற பலரைக் காணலாம்.....பரிதாபமாக இருக்கும்....மணி போன்றவர்களில் சிலர் நன்றாகவே இருக்கிறார்கள்....ஒழுங்காக மருத்துவர் சொல்வதைக் கேட்டால்...

      மிக்க நன்றி ராஜீவன்

      நீக்கு
  22. மணி போன்றவர்கள் குடும்ப வாழ்க்கைக்கு சரிப்பட்டு வரமாட்டார்கள் கீதா மேடம். இவர்கள் கண்டதையெல்லாம் படித்து, எல்லாவற்றையும் கரைத்துக்குடித்துவிட்டு, மனைவியிடம் கொண்டுபோய் அப்ளை பண்ணுவார்கள். தன்னைப்போலவே மனைவியும் இருக்க வேண்டுமென எதிர்பார்ப்பார்கள். 'உனக்கு எதுவுமே தெரியாது' என மனைவியை மட்டம் தட்டுவார்கள்.

    அங்குதான் எல்லாப்பிரச்சனைகளும் ஆரம்பிக்கின்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரிதான் ராஜீவன்.....ஆனால் மஞ்சுவைப் போன்று பல பெண்கள் இதையும் விட கொடுமையில் வாழ்கிறார்கள். மணி போன்றவர்களும் இவ்வ்உலகில் வாழ வேணும் தானே....அவர்களிடம் சில நல்லதும் இருக்கலாம் தானே....மிக்க நன்றி ராஜீவன்

      நீக்கு
  23. என்னைப் பொறுத்து மஞ்சு டிவோர்ஸ் எடுக்கோணும். அல்லது கொஞ்சக் காலம் அவரைப் பிரிந்து இருக்கோணும்.

    'ஏட்டுச் சுரக்காய் கறிக்குதவாது' என்பதை மணி அப்போதுதான் உணர்வார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ராஜீவன்.....அடுத்த பகுதியில் பாருங்கள்.....ஒன்று நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்....கதையின் முடிவு சீதை ராமனை மன்னித்தா ள்...... ஸோ டைவோர்ஸ். சான்ஸ் இல்லை...

      நீக்கு
  24. அடுத்த பகுதி படிக்க ஆவலோடு காத்திருக்கிறேன். வாழ்த்துக்கள் கீதா மேடம்

    பதிலளிநீக்கு
  25. பல்லிக்கும் உறவுப்பெண்ணான அமிர்தாவுக்கும் ஆச்சர்யமூட்டுமளவு மஞ்சுவின் குரல் உயர்ந்திருந்ததென்றால் அது சாது மிரண்டாற்போலிருக்கு !! இப்படியும் சிலர் மஞ்சுவின் கணவனை போன்றோர் இருக்கிறார்கள் ..ஆண் மட்டுமில்லை பெண்களிலும்
    இப்படி மனப்பிறழ்வினால் பீடிக்கப்பட்டோர் இருக்காங்க எங்க ஆலயத்தில் உள்ள பெண்மணி லின்னெட் அப்படித்தான் மயங்கி வலிப்பு வரும்போதெல்லாம் உரக்க கத்துவார் //சேஸ் தட் வுமன் ..ஷி இஸ் கமிங் டு கில் மீ //
    இது மருந்துகளை நிறுத்துவதால் ஏற்படும் பிரச்சினையும் கூடத்தான் ..ஆனா ஒரு விஷயம் கஷ்டமாயிருக்கு ..இப்படி குறைகளை மறைத்து எத்தனை ஆண்கள் மற்றும் பெண்கள் திருமணம் செய்து வைக்கப்படுகின்றனர் :( ..
    தெரிந்த நண்பர் ஒருவருக்கு இப்படி ஒரு பெண்ணை திருமணம் செய்வித்து அவர் திடீர் திடீர் என கத்துவாராம் இல் வாழ்வில் விருப்பமுமில்லை ..கடைசியில் விவாகரத்து ஆனபின் வேறு பெண்ணை மணம் செய்து சந்தோஷமாக இருக்கார் ..

    இக்கதையில் நாயகனுக்கு இளவயதில் ஏற்பட்ட எதோ ஒரு பாதிப்புதான் மனப்பிறழ்வுக்கு காரணமாகியிருக்கும்
    சின்ன வயதில் ஏற்படும் பாலியல் தொல்லைகள் சீண்டலால் கூட சில பிரச்சினைகள் பிற்காலத்தில்ஏற்படுகின்றன ..ஆக
    மொத்தம் சில அப்பாவி சீதைகளும் ராமன்களும் பலி ஆடுகள் ..

    சிலர் இப்படி மனப்பிறழ்வு பிரச்சினையால் துணையை அடிமைப்படுத்தி இருக்கின்றனர் இன்னும் சிலர் கொழுப்பெடுத்த திமிரினாலும் வாழ்க்கைத்துணையை அடிமைபோல நடத்துகின்றனர் ..எனக்கு தெரிந்த ஒரு ஐந்து மனைவியின் எண்ணுக்கு வரும் எண்களை தனக்கு கால் பார்வார்டிங் வைத்ததாம் பிறகு மனைவி எண் பிசியா இருந்தா தவியா தவிச்சு வந்த எண்ணுக்கு போனை போட்டு யார் யார் நீ என சைக்கோவாய் பேசுமாம்ம் ..பிறகு அவள் யாருடனும் பேச தடை காரணம் பேசினால் அல்லது வெளியுலக தொடர்புகள் இருந்தால் சீதைக்கள் அறிவு பெற்று இந்த ஜந்துக்களை தூக்கி வீசிட்டா எனும் பயமே காரணம் ..ம்ம் அந்த சீதையும்இன்னும் அந்த ஜந்துவுடன் வாழ்கிறது :(
    இதை போல எவ்வளவோ சொல்லலாம்

    கதாநாயகனை மஞ்சு மன்னித்து ஏற்றுக்கொள்ளுவார் என்றே நினைக்கிறேன் ஏனென்றால் அதுதானே கடைசி வரி ..



    பதிலளிநீக்கு
  26. ஹிஹி :) ஸாரி :) கமெண்ட் பெரிசாகிடுச்சி :)

    கீதா மிக அருமையாக மஞ்சுவின் உணர்வுகளை கதையில் சொல்லிச்சென்ற விதம் அருமை ..

    பதிலளிநீக்கு
  27. ஏஞ்சல் உங்கள் விரிவான கருத்திற்கு மிக்க நன்றி. கமென்ட் பெரிஹாகிடுச்சா? ஹஹ இல்லை...உங்களின் கமென்டை நான் எதிர்பார்த்தேன்...தெரியும் நீங்கள் இதன் தொடர்பாகச் சொல்லுவீர்கள் என்று.. நீங்கள் விவரித்திருக்கும் கேஸ்கள் சிசோஃப்ரீனியா, அதாவது ஹலுசினேஷன்ஸ் மற்றும் ஹிஸ்டீரிக்கல் கேஸ்கள். இதில் எல்லாம் கலந்து கட்டி வரும் கேஸ்களும் உண்டு அதாவது சிசோஃப்ரீனியா, பைபோலார், ஹிஸ்டீரியா, ஓசிடி, ஓசிபிடி..மூட் ஸ்விங்க்ஸ்...என்று...இதில் எந்த வகை அதிகமான சிம்டஸுடன் இருக்கிறதோ அதனை அந்த வகையில் வகைப்படுத்துகிறார்கள். மொத்தத்தில் பெர்சனாலிட்டி டிஸார்டர். இதில் ஒன்றான ஸ்ப்லிட் பெர்சனாலிட்டியைத்தான் அந்நியனில் கையாண்டிருப்பார்கள். அது பாசிபிள் என்றாலும்படம் என்பதால் சற்று மிகைப்படுத்தப்பட்டு எக்சாச்சரெட் செய்து காட்டியிருப்பார்கள்.

    ஏஞ்சல் இவர்களும் பரிதாபமானவர்கள்தான். ஏனென்றால் அவர்கள் அறியாமலேயே ஏற்படுவது. பெரும்பான்மையான அறிவு ஜீவிகளான விஞ்ஞானிகள் ஏதேனும் ஒரு மனப்பிறழ்விற்கு ஆளானவர்கள். பாரதியாரைக் கூட எக்சென்ட்ரிக் என்று சொல்வதும் உண்டு. யதார்த்த உலகிற்கு அவர்களால் வருவது சற்று கடினம். ஒரு கற்பனை உலகில் சஞ்சரித்துக் கொண்டிருப்பார்கள். எல்லாமே மூளைக்குள் நடக்கும் ப்ரெய்ன் கெமிஸ்ட்ரியில் ஏற்படும் மாற்றங்கள்தான்...ஆனால் இதில் மிகப் பெரும் சாலஞ்ச் என்னவென்றால், அவர்களது பிஹேவியர் அவர்களது பிரச்சனையால் வருவதா இல்லை அவர்களது இயல்பான குணமா என்று கோடு கிழிக்க முடியாத அளவுக்குக் கன்ஃப்யூஷன் ஏற்படுமாம்.

    ஆமாம் ஏஞ்சல் அடுத்த பகுதியில் //கதாநாயகனை மஞ்சு மன்னித்து ஏற்றுக்கொள்ளுவார் என்றே நினைக்கிறேன் ஏனென்றால் அதுதானே கடைசி வரி ..//

    முடிவைப் பற்றி அடுத்த பகுதி வெளியானதும் பேசுகிறேன். நான் எழுதி வைத்திருக்கும் சற்று மாறுபட்ட முடிவு....ஆனால் கதையின் இறுதி வரி கண்டிஷனுடன்...

    மிக்க நன்றி ஏஞ்சல்.

    பதிலளிநீக்கு
  28. ஏஞ்சல், அதிகாலையில் நெட் வந்துவிட்டதால், கணினியில் அடித்ததால் இம்மாம் பெரிய கமென்டை வழக்கம் போல அடிச்சாச்சு...அஹ்ஹஹ்

    பதிலளிநீக்கு
  29. ம் மணி மனமும் ஒரு நாள் மாறும்.

    பதிலளிநீக்கு
  30. ம் மணி மனமும் ஒரு நாள் மாறும்.

    பதிலளிநீக்கு
  31. ஏதோ நல்லதொரு எதிர்பார்ப்பினைத் தூண்டியுள்ளது இந்தக்கதை.

    எழுத்து நடை + எடுத்துக்கொண்டுள்ள கதைக்கரு மிகவும் அருமை. பாராட்டுகள். வாழ்த்துகள்.

    கிட்டத்தட்ட (ஆனால் கொஞ்சம் வித்யாசமாக) இந்தக்கதையில் வருவது போலவே வாழ்ந்து வரும் ஓர் தம்பதியினரை எனக்கு நன்கு தெரியும். அதனாலும் மேலும் ஆர்வமாக இந்தக்கதையை நான் ஊன்றிப் படித்து முடித்தேன்.

    தொடரட்டும் ..... இந்தக்கதையில் தாங்கள் தரப்போகும் முடிவினை அறிய ஆவலுடன் காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  32. அன்பே சிவம் மிக்க நன்றி! சிவம் மனம் என்பது நமது கன்ட்ரோலில் இருந்தால் மட்டுமே மாறும்....அது அவர்களது கன்ட்ரோலில் இல்லையென்றால் சற்றுக் கடினம்தான். மருந்துகள் மட்டுமே கொஞ்சம் காப்பாற்றுமாம். அப்ப்டித்தான் மருத்துவ உலகம் சொல்லுது. மாறினால் மிகவும் நல்லது...இட்ஸ் எ மிரக்கிள் இன் த மெடிக்கல் வேர்ல்ட்....உங்கள் நேர்மறைக் கருத்திற்கு மிக்க நன்றி சிவம்.

    பதிலளிநீக்கு
  33. வைகோ சார் மிக்க நன்றி பாராட்டிற்கும் விரிவான கருத்திற்கும்...

    ஆம் சார் இப்படியும் தம்பதிகள் இருக்கிறார்கள் தான்...தங்களின் ஆர்வத்தையும் எதிர்பார்ப்பையும் நிறைவுப்பகுதி பூர்த்தி செய்யும் என்று நினைக்கிறேன் சார். மிக்க நன்றி...

    பதிலளிநீக்கு
  34. அருமை.

    தொடர முடிவெடுத்ததற்கான காரணங்கள்.. நம் சமூகத்தின் சிக்கல்கள்.

    அடுத்த பாகத்திற்குக் காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  35. அடுத்த பகுதிக்கான காத்திருப்பில் நானும்.......

    பதிலளிநீக்கு
  36. அடுத்த பகுதியையும் படித்துவிட்டு அங்கே கருத்திட்டிருக்கிறேன். கதை நல்லா இருந்தது, சம்பவங்களை ரசிக்கும் மனநிலை இல்லாதபோதும்.

    பதிலளிநீக்கு
  37. //இதில் மிகப் பெரும் சாலஞ்ச் என்னவென்றால், அவர்களது பிஹேவியர் அவர்களது பிரச்சனையால் வருவதா இல்லை அவர்களது இயல்பான குணமா என்று கோடு கிழிக்க முடியாத அளவுக்குக் கன்ஃப்யூஷன் ஏற்படுமாம்.//

    உங்கள் பின்னூட்டத்தில் நீங்கள் குறிப்பிட்டிருந்த இந்தக் கருத்து, உண்மையானது. இவ்வளவு நெருக்கமாக விவரிக்கும் அளவுக்கு ஆராய்ந்திருக்கிறீர்கள். தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
  38. சில சமயம் ஒழுங்காக நடந்து கொண்டு மற்றச் சமயங்களில் வித்தியாசமாக நடந்து கொள்பவர்களும் உண்டே! அவர்களை என்னனு சொல்லுவது?

    பதிலளிநீக்கு
  39. டிவோர்ஸ் வாங்கிக் கொள்வது தான் சிறந்தது என்று எனக்குத் தோன்றுகிறது. ஒரே வீட்டில் இருந்து கொண்டு மனத்தளவில் துன்பப்பட்டுக் கொண்டு வாழ்வதை விட - தாம்பத்தியத்திலும் நாட்டமில்லாத போது - வெளியில் போய் வெளி ஆளாக அவனது பிரச்னையைப் புரிந்து கொண்டு உதவலாம் என்று நினைக்கிறேன். இப்போதுதான் கதையின் முதல் பாகத்தைப் படிக்கிறேன். எப்படி முடித்திருக்கிறீர்கள் என்று இரண்டாம் பாகத்தைப் படித்துத் தெரிந்து கொள்ளுகிறேன்.

    இந்த சிக்கலிலிருந்து கதாநாயகி எப்படி வெளிவரப் போகிறாள் என்று அறிய ஆவல்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!