திங்கள், 16 ஆகஸ்ட், 2010

சுதந்திர தின சிந்தனைகள்.







ஆகஸ்ட் 15 என்றவுடன் நினைவுக்கு வருவது நள்ளிரவில் பெற்றோம் விடுதலை எப்போது விடிவு வருமோ என்ற (மு.மேத்தா?) குறுங்கவிதை, மற்றும் கொடித்துணியைக் கிழித்துக் கோவணமாகத் தந்தேன் என்ற சமத்காரச் சொல்லாட்டமும்தான்.  
     
சுதந்திரம் நம் மக்களுக்கு, ஒரு செண்ட்டிமெண்ட்டல் கிளுகிளுப்பு தவிர வேறு எதையும் தரவில்லை. எதிலிருந்து சுதந்திரம் பெற்றோம்?? ஆங்கிலேயருக்கு அடிமையாக இருப்பதிலிருந்து விடுபட்டு, வாணலிக்குத் தப்பி நெருப்பில் விழுந்த கதையாக இப்போது நம்மவராலேயே சுரண்டப் பட்டு சோகத்தில் தவிக்கிறோம். இதில் நம் (கம்ப்யூட்டர், கார், வீடு என்று சற்று வசதியாக வாழ்கின்ற) ஒரு சிலரைத் தவிர மற்ற அனைவரும் புதுப் புது மாதிரியாக சுரண்டலுக்கும் பிளாக்மெயிலுக்கும், அச்சுறுத்தலுக்கும் மன மயக்கங்களுக்கும் ஆளாகி கௌரவம் மரியாதை இழந்து தாம் தவிப்பதையும் உணராது அவலத்தில் இருக்கிறார்கள்.   
                   
இந்த நிலையில் ஒரு சில நூறு கோடிகளை செலவழித்து சுதந்திர தினம் கொண்டாடுவது ஒரு கேலிக் கூத்து என்பதைத் தவிர வேறு என்ன? தவறான வழியில் சம்பாதித்த செல்வாக்கு என்பதைத் தவிர வேறு தகுதியேதும் அற்ற பலப் பலர் லட்சாதிபதிகள் அல்ல அதற்கும் மேலாக கோடீஸ்வரர்கள் ஆகி இருப்பதைக் காண்கிறோம். கேவலமான நடத்தையும் குற்றவாளித்தனமும் கொண்ட அயோக்கியர்கள் தொலைக் காட்சியில் தோன்றி " நான் குற்றம் இழைத்தேன் என்பதற்கு என்ன சாட்சி இருக்கிறது " என்று கேட்கிறார்கள். (நான் குற்றம் செய்ய வில்லை என்று பெரும்பாலும் இவர்கள் சொல்வதில்லை என்பது ஒரு விசித்திரம்). 
                   

யாரும் யாரும் கூடி யாரைக் கவிழ்க்கலாம் என்பது தவிர வேறு லட்சியங்கள் அற்ற அர்சியல்வாதிகளால் சீரழிகிறோம். அரசில் எனக்குப் பங்கு என்று கொள்ளைக்குத் துணைபோன சின்னத் திருடர்கள் பெரிய திருடர்களிடம் உரிமை கொண்டாடும் வெட்கமற்ற காட்சிகள் கண்முன்னே விரிகின்றனஇந்த லட்சணத்தில் யாரோ சில ஆயிரம் குழந்தைகளை விடிகாலையில் எழுப்பி புது சீருடை அணிவித்து பள்ளிக்கு அனுப்பி யாரோ ஒரு பூஜ்யர் பித்துக் குளித்தனமாக உளறுவதைக் கேட்கவும் கை பிசு பிசுக்க ஓரிரண்டு பப்பரமுட்டுக்களை வாங்கிக் கொள்ளவும் அனுப்பி வைக்கிறோம். " இல்லைன்னா டீச்சர் திட்டுவாங்க! " ( டீச்சரை திட்ட வேறு ஏற்பாடுகள் இருக்கின்றன.)
                       

பெரும்பதவிப் பெருச்சாளிகள் மைக் முன்னே நின்றுகொண்டு லட்சியப் பிரசங்கங்கள் செய்வதைக் கேட்கும் போது சிரிப்பு வரவில்லை, அழுகை வருகிறது.
                      
அண்மையில் பயங்கரவாதிகளை, "தயவு செய்து பேச்சு வார்த்தைக்கு வாருங்கள் " என்று கெஞ்சாத குறையாக அழைப்பு விடும் காமெடிக் காட்சிகளுக்கும் பஞ்சமில்லை. இடையே 600 டன் (கிலோ இல்லை டன்) வெடி மருந்தை சில புத்திசாலிகள் வண்டியில் ஏற்றி அனுப்பி, அவை காணாமல் போய் வெறும் வண்டிகள் மட்டும் தெருவில் அம்போ என்று நிறுத்தப்பட்டிருந்தனவாம். இந்த வெடிமருந்து எத்தனை இந்தியர்களை அல்லது இந்தியச் சொத்துக்களை அழிக்கப் பயன்படப் போகிறதோ யாரறிவார்?

                                        

கைதேர்ந்த குற்றவாளிகளை "அவர் சிரிக்கும்போது கன்னத்தில் குழி விழும் அழகே அழகு " என்று பாராட்டி லாபம் பார்க்கிறார்கள். ஒரே குத்தில் எதிரியை (எதிரிகள் ஒவ்வொருவராகத் தான் வர வேண்டும் என்பது எழுதாத விதி!) பம்பரமாக நாற்பது அடி தூரத்துக்கு சுழற்றி அடிப்பதாகக் காட்டி ஹீரோக்கள் சிருஷ்டிக்கப் படுகிறார்கள். அவருக்குப் படத்துக்குப் பதினைந்து கோடி, இவருக்கு பாட்டுக்கு 2 லட்சம், காமெடிக்காரருக்கு ஷாட்டுக்கு 2 லட்சம் என்று சுவாரஸ்யமாகச் செய்திகள் போட்டு மக்கள் வெங்காய பக்கோடாப் பொட்டலம் வாங்கி ரசித்துச் சாப்பிடுவதைப் போல கொறித்துத் தள்ளுகிறார்கள்.
                          
மீட்பர் எப்போது வருவார்? வருவாரா? இல்லை படிப்படியான அழிவுதானா? ஆண்டவனே அறிவான்.      

10 கருத்துகள்:

  1. என்னங்க இந்தப் புலம்பல் புலம்புறீங்க? சுதந்திர தினம் ஒரு நாள்..just a day. அனேகமாக உலகம் முழுதும் (இங்கிலாந்து தவிர; அங்கேயும் கூட மேக்ன கார்டா கையெழுத்தான தினம் சிறப்பு) சுதந்திர தினம் அனுசரிக்கப்படுகிறது. சுதந்திர தினத்தன்னிக்கு மட்டும் விழிப்புணர்ச்சியா பேசியும் நடந்துகிட்டாலும் போதுங்களா? கொஞ்சம் யோசிப்போம்; ஐனூறு வருடங்கள் போல் தாழ்த்தப்பட்டும் ஒடுக்கப்பட்டும் இருந்த India சென்ற ஐம்பது அறுபது ஓகே எண்பது ஆண்டுகளாகத்தானே நடமாடத் தொடங்கியிருக்கு? சென்ற பத்து வருடங்களில் ஏற்பட்ட முன்னேற்றம் அதற்கு முந்தைய நாற்பது வருடங்களை விட அதிகமில்லையா? பெர்லின் சுவர் விழுந்த மாதிரி நீங்க சொன்ன போலிகளும் விழுந்தழியும். மீட்பரைக் கண்ணாடியில் பார்க்கலாம்; எப்பவோ வந்து விட்டார்.

    பதிலளிநீக்கு
  2. //மீட்பரைக் கண்ணாடியில் பார்க்கலாம்; எப்பவோ வந்து விட்டார்//

    இந்தத் தன்னம்பிக்கை தான் நம் எல்லோருக்கும் வேண்டும். நன்றி அப்பாதுரை!

    பதிலளிநீக்கு
  3. கவலையாத்தான் இருக்கு. வெள்ளைக்காரன் சுரண்டினாலும் கட்டமைப்புக்கு காரணமா இருந்தான். நம்மாளுங்க இருந்த இந்தளவு வளர்ச்சியிருக்குமா?

    பதிலளிநீக்கு
  4. அப்பாதுரை சார் சொல்றது ரொம்ப ரொம்பக் கரெக்ட்! மீட்பர் வேறெவரோ என்றெண்ணிக் கொண்டிருந்தாள் மீட்சியே இல்லை! எல்லாம் "நமக்கு நாமே" தான்! நம்மைக் கண்ணாடியில் பார்த்துக் கொள்வதை விட்டு விட்டு , குடும்பத் தொல்லைக் காட்சிகளில் மானாட மயிலாட பார்த்துக் கொண்டிருந்தால் ரேஷன் கடையில் ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி மட்டும் தான் கிடைக்கும்!

    பதிலளிநீக்கு
  5. // மீட்பரைக் கண்ணாடியில் பார்க்கலாம்; எப்பவோ வந்து விட்டார் //
    நண்பர் அப்பாதுரையின் வரிகளை ஏற்றுகொள்ளவே வேண்டும். வேறு யாரோ வருவார்கள் சரி செய்வார்கள் என்ற நம் போது குணம் மெல்ல மெல்ல மறைத்து போகட்டும். இந்த வலைதளத்தில் ஒரு பத்து ,இருபது பேராவது தேறுவார்களா பார்க்கவேண்டும்.அதிகம் தேறும் என்றே நினைக்கின்றேன்.

    பதிலளிநீக்கு
  6. ம்ம்... சிலசமயம் இந்தியாவுக்கு ராணுவ ஆட்சி அல்லது ஒரு (நல்ல) சர்வாதிகாரியின் ஆட்சி சில காலமாவது தேவை என்று தோன்றும்.

    பதிலளிநீக்கு
  7. கைதேர்ந்த குற்றவாளிகளை "அவர் சிரிக்கும்போது கன்னத்தில் குழி விழும் அழகே அழகு " என்று பாராட்டி லாபம் பார்க்கிறார்கள்.


    ...... மக்களுக்கு மீடியாதான் எல்லாவற்றையும் சொல்லி தருகிறது..... அழுவதற்கும், சிரிப்பதற்கும், கோபப்படுவதற்கும், ரசிப்பதற்கும், பொங்கி எழுவதற்கும்...... ம்ம்ம்ம்.....

    பதிலளிநீக்கு
  8. //ஒரு(நல்ல) சர்வாதிகாரியின் ஆட்சி //
    என்று ஒன்று எங்காவது இருந்திருந்தால், தயவு செய்து குறிப்பிட்டுச் சொல்கிறீர்களாம்மா ?

    பதிலளிநீக்கு
  9. நம்புவதும் மீட்பரை கண்ணாடியில் பார்ப்பதும் நன்றாகத்தான் இருக்கிறது. சுய முன்னேற்ற பெப் டாக் தவிர இந்த நம்பிக்கைகளுக்கு பொருள் இருக்கிறதா என்று சலிப்பு ஏற்படுவது என்னவோ உண்மைதான். முன்னேற்றம் ஏற்பட்டிருப்பது உண்மையே. ஆனால் முன்னேற்றம் வளர்ச்சி யாரைச் சென்றடைய வேண்டுமோ அவர்களுக்குப் போக வில்லை என்பதும் உண்மைதானே.

    ஊழல் லஞ்சம் போன்ற சமூகக் கேடுகள் மேல்மட்டத்திலிருந்து கீழே இறங்குமானால் அதன் விளைவுகள் விபரீதமாக இருக்கும் என்பது கண்கூடு. அந்தக் காலத்தில் தாலுகா ஆபீஸ் பியூன் அரை ரூபாயும் கிளார்க் இரண்டு ரூபாயும் மேல் வரும்படியாகப் பெற்றது கிட்டத் தட்ட அவர்களுடன் நின்று போயிருந்தது. மேலிடத்தில் புகார் செய்து விடுவேன் என்று பயமுறுத்த முடிந்தது. இப்போது நிலை அப்படி இல்லையே. " உன்னால் ஆனதைப் பாத்துக்க. எவன் கிட்டே வேணும்னாலும் போய் கம்ப்ளைன்ட் பண்ணிக்க " என்று சவால் விடுகிறார்களே பார்க்கவில்லைய?

    இந்தக் கவலைகளுக்கும புலம்பல்களுக்கும் பின்னணி என்ன என்பது நன்றாகவே புரிகிறது.

    பதிலளிநீக்கு
  10. நல்ல பகிர்வு.. ம்ம்ம் மீட்பரைத்தான் கண்ணாடியில் பார்த்துக் கொள்ள வேண்டும் ..

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!