திங்கள், 8 ஜூலை, 2013

தியேட்டர் நினைவுகள்


எம் ஜி ஆர் படம் ஒன்று வெளியாகியிருந்தது. 

                              
              
 
நண்பருடன் படத்துக்குச் சென்றேன். டிக்கெட் வாங்குமிடத்தில் கூட்டமான கூட்டம்.

அடிதடிக் களேபரத்தில் வேஷ்டி உருவப்பட்ட நண்பர், அதை வெளியில் வந்ததுமே கவனிக்க, வெறியாகி மறுபடிக் கூட்டத்துக்குள் நுழைந்தவர், வேஷ்டியுடன் வெளி வந்தார். 


                                                   

 
"எப்படி உடனே உன் வேஷ்டியைக் கண்டு பிடிச்சே?" என்று கேட்டேன்.

"என் வேஷ்டியா? அது எங்கே இருக்கோ... இது யார் வேஷ்டின்னே தெரியாது. என் வேஷ்டியை உருவினாங்க இல்லே... நானும் அதே வழியைத்தான் பின்பற்றினேன்" என்று அந்த வேஷ்டியைக் கட்டிக் கொண்டு வர, உள்ளே சென்றோம்!

நண்பர் சிவாஜி ரசிகர். எனக்கு இருவரையும் பிடிக்கும். படம் ஆரம்பித்துச் சில நிமிடங்களிலேயே நண்பர் ஒவ்வொரு காட்சியிலும், 'இது நடிப்பா' 'இது அழுகையா' என்றெல்லாம் கமெண்ட் அடித்த படியே இருந்தார். பின்னாலிருந்து முணுமுணுப்புகளும் "உச்" ஒலிகளும் எழுந்த அதே சமயம் இரண்டு மூன்று சீட் தள்ளியிருந்த ஒருநபர் உயர்த்திக் கட்டிய கைலியுடன் வேகமாக அருகில் வந்து நண்பர் சட்டையைப் பிடித்தார். 


"இதோ பார்... எங்களுக்கு இதுதான் நடிப்பு... மேல பேசினே..வெட்டிடுவேன்! ஒண்ணு அமைதியாப் படத்தப் பாரு... இல்ல...?" என்று தொடங்கியவர் சட்டென இன்னும் கோபமாகி  "எவ்வளவுடா டிக்கெட்டுக்குக் கொடுத்தே? ரெண்டார்ரூவா தானே... இந்தா... இதுல நாலு ரூவா இருக்கு... எடுத்துட்டு வெளியே ஓடிடு" 


அப்போது முதல் வகுப்பு 2.50 தான். அப்புறம் நண்பர் பேசவே இல்லை. நானும் நண்பர் பக்கமும் திரும்பவில்லை, இந்தப் பக்கமும் திரும்பவில்லை.


                                                         

 
இடைவேளையில் விளக்குகள் எரிந்தபோதும் அந்தப் பக்கம் நான் பார்க்கவே இல்லை. அங்கிருந்து எழுந்துவந்த அந்த நபர் "ஸார்! நீங்களா?" என்றபோதுதான் அவர் எங்கள் ஆபீஸ் பியூன் என்று தெரிந்தது. அப்புறம் அருகிலிருப்பவர் என் நண்பர்தான் என்று சொன்னதும் அவர் பேசாமல் போய்விட, இடைவேளைக்கு அப்புறம் கொஞ்சம் நிம்மதியாய்ப் படத்தைத் தொடர்ந்து பார்த்தாலும், நண்பர் அப்புறம் பேசவில்லை! 

==================================

இன்னொரு சமயம் சிவாஜியின் ஜேம்ஸ்பாண்ட் படம் ஒன்று வெளியான சமயம். முதல்நாள் (படம் வெளியான முதல் நாள் அல்ல!) டிக்கெட் கிடைக்காத வெறுப்பில் மறுநாள் எங்கள் ஏரியா ரிக்ஷாக்காரரிடம் பணம் தந்து நான்கு முதல் வகுப்பு டிக்கெட்டுகள் எடுக்கச் சொல்லி முன்னதாகவே அனுப்பி விட்டு, நாங்கள் அப்புறம் தியேட்டர் சென்று காத்திருந்த ரிக்ஷாக்காரரிடம் டிக்கெட்டைப் பெற்றுக் கொண்டு உள்ளே சென்றோம்.

                                                    

 
முதல் வகுப்பில் டிக்கெட்டைக் கிழிப்பவர் கையில் கொடுத்ததும் அவர் எங்களை வெறுப்புடன் பார்த்து விட்டு கீழ் திசையில் கைகாட்டினார். பார்த்தால் அங்கு காணப்பட்ட போர்ட் "தரை டிக்கெட்டுக்குச் செல்லும் வழி" என்றிருந்தது. குழம்பிப் போய் கையிலிருந்த டிக்கெட்டைப் பார்த்தால் அத்தனையும் 50 காசு டிக்கெட்டுகள்.

ரிக்ஷாக்காரர் த
ன் இயல்பில் வாங்கினாரோ, கமிஷன் அடிக்க வாங்கினாரோ.... அன்று தரையில் அமர்ந்துதான் அந்தப் படத்தைப் பார்க்க நேர்ந்தது. மாறுபட்ட அபிப்ராயங்களால், 'அப்
படியாவது அந்தப் படத்தைப் பார்க்க வேண்டுமா' என்று திரும்பி வரவும் முடியவில்லை!

===================================

'அக்னி நட்சத்திரம்' வெளியான சமயம். 

மதுரை சினிப்ரியா தியேட்டர். 

நண்பர் சுகுமார், அவர் நண்பர் பாலன் மூலம் முதல் காட்சிக்கு (6.00 மணி ஆட்டம்!) டிக்கெட் ரிசர்வ் செய்யச் சொல்லி அனுப்பி டிக்கெட்டை வாங்கி வைத்து விட்டார். என்னையும் என் நண்பனையும் அங்கு வரச் சொல்லி விட்டார். 
                                             
                                                   
பணி முடிந்து நாங்களும் அங்கு சென்றோம். டிக்கெட் கவுண்டரில் திமிறிக் கொண்டிருந்த கூட்டத்தை நக்கலாகப் பார்த்தபடி உள்ளே சென்றோம்.


                                              

 
(முன்னர் ஒருநாள், அற்றைத் திங்கள் அந்நாளில் இதே தியேட்டரில் காந்தி படம் பார்க்க இதே போலக் கூட்டத்தில் சிக்கித் திணறிக்கொண்டிருந்த சாதுவான என்னை இந்தத் தியேட்டர் ஊழியர்கள் கூட்டத்தை ஒழுங்கு படுத்துகிறேன் என்று சவுக்குக் கட்டையால் அடித்து காலை வீங்க வைத்திருந்தார்கள்! அந்த வெறுப்பில் இன்றுவரை நான் காந்தி படம் பார்க்கவில்லை! 'காந்தி படமும் டெண்டுக் கொட்டாயும்' என்ற எங்கள் பழைய பதிவில் ஏற்கெனவே இதைப் புலம்பியிருக்கிறேன்!)

டிக்கெட்டைக் கிழித்து எங்களை உள்ளே அனுமதித்தார் ஊழியர். சென்று இடம் பிடித்து அமர்ந்தோம். படம் இன்னும் தொடங்கவில்லை. சும்மா அரட்டை அடித்துக் கொண்டிருந்தோம். படம் தொடங்கும் மணி அடித்தது. விளக்கை அணைத்துப் படம் தொடங்கும் சமயம் தியேட்டர் ஊழியர் 'டார்ச் லைட்'டுடன் நான்கு பேர்களை அழைத்துக் கொண்டு எங்களை நோக்கி வந்தார். "உங்கள் டிக்கெட்டுகளைக் காட்டுங்கள் ஸார்..." என்றா.


அவர்களிடமும் எங்கள் இருக்கைக்குரிய எண்களைக் கொண்ட டிக்கெட்டுகள். கொஞ்ச நேர கோப, தாப, சர்ச்சைகளுக்குப் பின் நாங்கள் வெளியேற்றப் பட்டோம்!!


என்ன காரணம் தெரியுமா? எங்கள் கையிலிருந்தது, அதே தினத்துக்கான 'மேட்னி' ஷோவுக்கான டிக்கெட்டுகள். நண்பரின் நண்பர் பாலன் கைங்கர்யம். மாலைக் காட்சிக்குத்தானே நாம் சொல்லியிருந்தோம் என்று நாங்களும் அதைச் சரிபார்க்கவில்லை!


வெளியில் வந்த அவமானத்தில் சுகுமார் சற்றும் எதிர்பாராத ஒரு காரியம் ஒன்றை நாங்கள் மறுக்க மறுக்கச் செய்தார்.

சுகப்ரியாவில் ஓடிக் கொண்டிருந்த 'குரு-சிஷ்யனு'க்கு டிக்கெட் எடுத்துக் கொண்டுவந்து உள்ளே அழைத்துச் சென்று விட்டார். 


                         
 
அந்தக் கொடுமையை என்ன சொல்ல!


30 கருத்துகள்:

  1. நல்ல ஆபீஸ் பியூன்...!

    கு-சி அவ்வளவு கொடுமையா...?

    பதிலளிநீக்கு
  2. வேட்டி உருவிய கதை நல்ல காமெடிதான்.
    இப்போது தியேட்டர்கள் ஈ அடிக்கின்றன,

    பதிலளிநீக்கு
  3. அதானே குரு சிஷ்யன் என்ன அவ்வளவு கொடுமையா... எங்கள் பிளாக் முன் கோடி பிடிக்கும் போராட்டம் விரைவில் நடைபெறும், தலைமை தாங்குபவர் உங்கள் அலுவலக பியூன், சிறப்பு விருந்தினர் உங்கள் ரிக்சாகாரர்

    பதிலளிநீக்கு
  4. //"இதோ பார்... எங்களுக்கு இதுதான் நடிப்பு... மேல பேசினே..வெட்டிடுவேன்! ஒண்ணு அமைதியாப் படத்தப் பாரு... இல்ல...?" என்று தொடங்கியவர் சட்டென இன்னும் கோபமாகி "எவ்வளவுடா டிக்கெட்டுக்குக் கொடுத்தே? ரெண்டார்ரூவா தானே... இந்தா... இதுல நாலு ரூவா இருக்கு... எடுத்துட்டு வெளியே ஓடிடு"
    // செம்ம நெத்தியடி! ரொம்ப ரசனையான பதிவு!
    அந்தக்கால கட்டத்தில் வந்து பெரும்பாலான மொக்கைகளுக்கு நடுவில் குரு சிஷ்யன் ஒண்ணும் கொடுமையில்லை. ரஜினியின் இங்லீஷ் காமெடியும், சோவின் பொலிடிக்கல் காமெடியும் வினுச்சக்கரவர்த்தியும், மனோரமாவும் அடிக்கும் லூட்டியும், அது ஒரு ஜாலிரயட். லாஜிக்கெல்லாம் பார்க்கக்கூடாது. அந்தக்காலத்து ஜெய்சங்கர் கெளபாய் படங்கள் லாஜிக்கிலா ஓடின? ஜஸ்டு ஒரு எண்டர்டெயின்மெண்ட் தானே? ஐ லவ் இட்!

    பதிலளிநீக்கு
  5. நீங்கள் சினிமா பார்த்ததை என்னவென்று சொல்வது? ரொம்பத்தான் அதிகமாக கஷ்டப் பட்டிருக்கிறீர்கள்.இப்ப போலெல்லாம் ஆன்லைனில் டிக்கெட் வாங்க முடியாத களத்தில் சினிமா பார்க்கப் போவதே ரௌ பிக்னிக் அனுபவம் தான். உங்கள் தியேட்டர்அனுபவம் எனக்கு மலரும் அனுபவங்களைத் தந்து.

    பதிலளிநீக்கு
  6. :)இப்போதெல்லாம் காசு கொடுத்தாலும் இது போன்ற அனுபவங்கள் கிடைக்காது!

    பதிலளிநீக்கு
  7. வேட்டி அனுபவம் அட்டகாசம். கல்யாண வீட்டில் செருப்பு தொலைந்த கடுப்பில் இன்னொரு செருப்போடு வெளிவந்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  8. சிவாஜி ரசிகர்களுக்கு ரசிக்க முடிகிற படம் என்றால் என்னவென்றே தெரியாது.

    பதிலளிநீக்கு
  9. மதுரை சினிப்ரியாவா மினிப்ரியாவா?

    பதிலளிநீக்கு
  10. என் சிறுவயதில் ‘சும்மா ஏஏஏஏன்னு டயலாக்க முடிச்சு கத்தி அழறதத் தவிர இந்த ஆளுக்கு வேறென்ன தெரியும்?’னு சிவாஜி படங்களைப் பாத்து பொங்குனது ஞாபகம் வருது. வேஷ்டி உருவின சம்பவம் சூப்பரு! மதுரைல தான் நானும் அக்னி நட்சத்திரம் படம் பாத்தேன். நண்பன் வாங்கின டிக்கெட் ஸ்கிரீனுக்கு முன்னாடி மூணாவது வரிசை. க்ளைமாக்ஸையும், நின்னுக்கோரி வர்ணம் பாட்டையும் கண்ணத் திறந்து பாக்க முடியாம அவஸ்தைப்பட்டது இப்பவும் பசுமையாய் நினைவில்! அப்பா ஸார்...! ஒரே காம்ப்ளக்ஸ்ல சினிப்ரியா, மினிப்ரியா, சுகப்ரியான்னு மூணு தியேட்டர்ஸ் இருக்கு மதுரையில!

    பதிலளிநீக்கு
  11. மதுரையிலே சினிப்ரியா, மினிப்ரியா ரெண்டும் இருக்கு அப்பாதுரை. ஆனால் நல்லவேளையா இதெல்லாம் வரும் முன்னரே கல்யாணம் ஆகிப் போயிட்டேன். :))))

    நாங்க மதுரையிலே டிக்கெட்டெல்லாம் வாங்கி சினிமா பார்த்ததாக நினைவே இல்லை. வீரபாண்டியக் கட்டபொம்மன், கல்யாணப்பரிசு போன்ற ஒண்ணு, ரெண்டு படம் மட்டும் பார்த்திருப்போம்னு நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  12. எல்லாப் படத்துக்கும் ஃப்ரீ பாஸிலே தான் போயிருக்கோம். அதனால் பால்கனியிலே உட்கார்ந்து தான் பார்த்திருக்கோம். இந்த மாதிரி டிக்கெட் வாங்கக் கூட்டத்திலே நின்னு அடிபட்டுத் திரும்பி வந்த பாக்கியமெல்லாம் கிடைச்சதில்லை. நேரே மானேஜர் ரூமுக்குப் போய் அண்ணாவோ, தம்பியோ(ரெண்டு பேருமே அப்போச் சின்னப் பசங்க தான்) கையிலிருக்கும் அனுமதிச் சீட்டைக் காட்டுவாங்க. அவர் பால்கனியில் உட்கார அனுமதிச் சீட்டைக் கொடுப்பார். வாங்கிட்டு படத்தைப் பார்த்துட்டு வெளியே வருவோம்.

    பதிலளிநீக்கு
  13. கல்யாணம் ஆகி முதன் முதல் பார்த்த படம் கும்பகோணத்தில், ஏவிஎம் ராஜன் இரட்டை வேடத்தில் நடிச்ச ஏதோ ஒருபடம். சென்னை வந்ததும் அயனாவரத்தில் ஒரு தியேட்டரில் ஏதோ பாலச்சந்தர் படம் பார்த்த நினைவு. அப்புறமாக் காசே தான் கடவுளடா படத்தை அம்பத்தூரில் இருந்து தண்டையார்பேட்டையில் அந்தப் படம் ஓடின தியேட்டருக்கு வந்து பார்த்துட்டுப் போனோம்.

    அம்பத்தூரில் இருந்து தண்டையார்பேட்டைக்குத் தான் அலுவலகம் செல்லவும் தினம் வருவேன். நாங்க இருந்தது அம்பத்தூர். அலுவலகம் தண்டையார்பேட்டை போலீஸ் ஸ்டேஷன் எதிரே. இன்னமும் அங்கே தான் இருக்கு. :)))))

    பதிலளிநீக்கு
  14. உங்கள் தியேட்டர் அனுபவங்கள் நல்ல நகைச்சுவை. திருமணம் ஆகும் முன்கீதா அவர்கள் சொன்னது போல் மதுரையில் இருக்கும் போது பாஸ் தான் கஷ்டபட்டதே இல்லை.

    மற்ற ஊர்களில் படம் பார்க்க யாராவது போய் டிக்கெட் எடுத்து வைப்பார்கள் ஆரம்பிக்கும் போது போய் அமர்ந்து கஷ்டபடாமல் படம் பார்ப்பது தான் நம் வேலை.

    கணவருடன் படம் பார்க்க போகும் போது கூட்டம் இல்லாத நாள் பார்த்து போவோம், சில தியேட்டர்களில் உள்ளே போய் உட்காருங்கள் சார் நாங்கள் டிக்கட் கொடுக்கிறோம் என்பார்கள்.
    சில தியேட்டர்களில் பால்கனி டிக்கட் பெண்கள் பகுதியில் கூட்டம் இருக்காது அதனால் நான் சிரமம் இல்லாமல் எடுத்து விடுவேன்.
    குழந்தைகள் இருக்கும் போது தியேட்டர் போய் பார்த்தது சினிமாக்கள். இப்போது சினிமா பார்க்க போவதே இல்லை.
    தொலைக்காட்சியில் பார்த்துக் கொள்கிறேன். குழந்தைகளுடன் பார்க்கும் போது இடைவேளையில் கோன் ஐஸ், பாப்கார்ன் வாங்கி கொடுத்தது. , வீட்டிலிருந்து தின்பண்டங்கள் கூடையில் தண்ணீர் பாட்டில், பிஸ்கட் என்று கொண்டு போன மலரும் நினைவுகள் வருகிறது.


    பதிலளிநீக்கு
  15. /"ஸார்! நீங்களா?"/

    நல்ல கலாட்டா:)!

    சுவாரஸ்யமான அனுபவங்கள் (அடி வாங்கியது தவிர்த்து)!

    பதிலளிநீக்கு
  16. நல்ல கலகலா பதிவு. படிக்கையிலயே சிரிப்பு. இவ்வளவு கசப்பு அனுபவங்களுடன் உங்களுக்கு சினிமா பர்க்கப் பிடிக்காமல் போய்விட்டதோ:)

    வேஷ்டிதான் சூப்பர். அந்த லுங்கிக்காரர் வந்ததும் வேஷ்டி கேட்கத்தான் வந்தார் என்று பயம் வந்தது:)
    காந்தி படத்துக்கு அடி வாங்கினீர்களா. !ரொம்ப அநியாயம் ஸ்ரீராம்.

    டொட்டல் பதிவும் சூப்பார். நாங்கள் மதுரையில் பார்த்த படங்கள் இதயகமலம், பஞ்சவர்ணக்கிளி,இரும்புத்திரை,எங்கவீட்டுப்பிள்ளை,திருவிளையாடல், முகராசி. இவ்வளவுதான்:)

    பதிலளிநீக்கு
  17. "காந்தி" படத்தை நாங்கள் தொலைக்காட்சியில் தான் பார்த்தோம். ஒரு காந்தி பிறந்த நாளுக்குப் போட்டாங்க. தூர்தர்ஷன் தான் அப்போல்லாம்.

    பதிலளிநீக்கு
  18. வேட்டியைப் பறிகொடுத்தது செம. ரஜினி, கவுண்டபெல் நகைச்சுவையை நினைவுபடுத்தியது :-)))

    குரு-சிஷ்யன் பிடிக்கலையா உங்களுக்கு!!

    பதிலளிநீக்கு
  19. சுவையான அனுபவங்கள். நண்பர் ஒருவர் சட்டையைக் கிழித்துக் கொண்டு வந்ததை எனது பக்கத்தில் முன்னர் பகிர்ந்திருக்கிறேன்....

    முதல் நாள் முதல் ஷோ!
    http://venkatnagaraj.blogspot.com/2010/01/blog-post.html

    பதிலளிநீக்கு
  20. உங்கள் நண்பரின் தனித்திறமையை கட்டாயம் பாராட்ட வேண்டும் - வேறொருவரின் வேட்டியை உருவிக் கொண்டு வந்திருக்கிறாரே!

    எனக்கும் குரு-சிஷ்யன் பிடித்த படம்.

    இப்படியெல்லாம் அடிபட்டு, உதைபட்டு படம் பார்க்கணுமா?

    பதிலளிநீக்கு
  21. //சினிப்ரியா, மினிப்ரியா, சுகப்ரியான்னு மூணு தியேட்டர்ஸ் இருக்கு மதுரையில!

    ஸ்ரீப்ரியா?

    பதிலளிநீக்கு
  22. வேட்டி விஷயம் சூப்பர்...:)) குரு சிஷ்யன் நல்ல படம் தான்...

    சிறுவயதில் விடுமுறை நாட்களில் அப்பா அலுவலகம் சென்ற பின் வயர் கூடையில் நொறுக்குத் தீனி, தண்ணீர் பாட்டிலுடன் அம்மா, நான், தம்பி மூவரும் சினிமாவுக்கு சென்ற நினைவுகள் பசுமையாய்... அதில் ஒரு முறை டிக்கட் வாங்க நிற்கும் க்யூவில் ஒரு அம்மா என்னை மிதித்து என் மேலேயே ஏறிப் போக நான் அழுத அழுகையில் பெரும் சண்டையாகி வீடு வந்து சேர்ந்தோம். படம் பார்த்தோமா, இல்லையா ஞாபகமில்லை....:))

    அன்று அப்பாவிடம் அம்மா வாங்கிய திட்டுகள் ஏராளம். அன்றோடு சரி...:)) சினிமாவுக்கு குடும்பத்தோடு குட் பை...:))

    இன்னொரு முறை சிவகங்கையில் அம்மா மாமா, மாமி மூவரும் மை டியர் லிசா படத்துக்கு செகண்ட் ஷோவுக்கு செல்ல பாட்டியோடு நானும் தம்பியும் சம்பூர்ண ராமாயணம் சென்றோம்...:)))

    பதிலளிநீக்கு
  23. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் ஶ்ரீராம். இப்போத் தான் கூகிளார் வந்து கூவினார். காலம்பர கூகிள்+ சரியாப் பார்க்கலை. :)))))

    பதிலளிநீக்கு
  24. அது சரி, குரு, சிஷ்யன் என்ன அப்படி நல்ல படமா? யாரெல்லாம் நடிச்சிருக்காங்க?? ஜிவாஜி??????

    பதிலளிநீக்கு
  25. பிறந்தநாள் வாழ்த்துகள் சார்..

    பதிலளிநீக்கு
  26. சுவாரஸ்யமான அனுபவங்கள்! பகிர்வுக்கு நன்றி! குருசிஷ்யன் வினுசக்ரவர்த்தி காமெடிக்காவது பார்க்கலாமே!

    பதிலளிநீக்கு

  27. படித்த, ரசித்த, பின்னூட்டமிட்ட நண்பர்களுக்கு நன்றி.

    DD... அப்போது கு.சி கொடுமையாகத்தான் இருந்தது!

    நன்றி TNM!

    நன்றி சீனு!

    நன்றி அநன்யா... ஜெய் யின் கௌபாய் படங்களை விட வீட்டுக்கு வீடு போன்ற படங்களை ரசித்திருக்கிறேன்!

    நன்றி rajalakshmi paramasivam மேடம்...

    நன்றி HVL...

    நன்றி அப்பாதுரை... சினி மினி சுகம் ஒரே காம்ப்ளெக்சில்!

    பாலகணேஷ்.... அப்போ பக்கத்து சீட்டுல உட்கார்ந்து சிரிச்சுகிட்டுருந்தது நீங்கதானோ!

    கீதா மேடம், கோமதி அரசு மேடம் ... சினிப்ரியா, மினிப்ரியா மட்டுமில்லை, மூணாவதா சுகப்ரியாவும் உண்டு! ஏ வி எம் ராஜன் இரட்டை வேடமா... ஒரு வேடமே தாங்காதே! ஃப்ரீ பாஸ்ல படம் பார்க்கரதுல்லாம் போர். பரபரப்பா டிக்கெட் வாங்கிப் பார்க்கறதுல இருக்கற சுகம்... (ஹிஹி... வேறெப்படிச் சொல்ல!) இடைவேளையில் வாங்கும் சாப்பிடும் ஐட்டங்கள் தனி சுவாரஸ்யம்!

    ராமலக்ஷ்மி... அடியெல்லாம் வாங்கவில்லை... சட்டையை மட்டும்தான் பிடித்தார் என்கிறார் நண்பர்!

    நன்றி சே. குமார்.

    நன்றி வல்லிம்மா.... வேஷ்டி கேட்கத்தான் லுங்கிக்காரர் வந்தாரோ என்ற கற்பனை சூப்பர்! காந்தி படத்துக்கு அடி வாங்கியது பற்றி முன்....னர் எழுதியிருக்கிறேன்! கீதா மேடம்... தூர்தர்ஷனிலும் நான் பார்க்கவில்லை.

    அமைதிச்சாரல்... குரு சிஷ்யன் ஏனோ அப்போது பிடிக்கவில்லைதான்!

    நன்றி வெங்கட்!

    நன்றி ரஞ்சனி நாராயணன் மேடம்... //இப்படியெல்லாம் அடிபட்டு, உதைபட்டு படம் பார்க்கணுமா?// அப்போ அதுவும் சுவாரஸ்யமாகத்தான் இருந்தது.

    கோவை2தில்லி... உங்கள் அனுபவங்களும் சுவாரஸ்யம்.

    நன்றி 'தளிர்' சுரேஷ்!

    நன்றி கீதா மேடம், கோவை2தில்லி!

    குரு சிஷ்யன் ரஜினி பிரபு நடித்தது. நகைச்சுவை வசனங்கள் நிறைந்தது. ஜிதேந்திரா நடித்த ஒரு ஹிந்திப் படத்தின் தழுவல். ஹிந்திப்படம் பெயர் ஞாபகமில்லை!

    பதிலளிநீக்கு
  28. சுவையான சுவாரசியமான அனுபவங்கள். :-))

    பதிலளிநீக்கு
  29. இப்போதுதான் கீதாவின் பின்னூட்டம் மூலம் தெரிந்தது. தாமதமான இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ஸ்ரீராம்!

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!