புதன், 29 ஜனவரி, 2014

இலைகள் பழுக்காத உலகம் - ராமலக்ஷ்மி

                           
                                       


நீள நீளமாய்க் கவிதைகள் எழுதுவது என்னைப் பொருத்தவரைக் கடினமான செயல். நாலுவரி எழுதுவதற்குள் நாக்கு தள்ளி  விடுகிறது! பாரா பாராவாக அதை நீட்டிச் சொல்வதற்கு திறமை வேண்டும். அது ராமலக்ஷ்மியிடம் நிறைய இருக்கிறது. பல்துறை வித்தகர். கதை, கவிதை, கட்டுரை, பயண அனுபவங்கள் என்று எழுதுவதோடு மூன்று தளங்களில் ஆசிரியர் பொறுப்பும். அப்புறம் அவரது ஸ்பெஷல் ஃபோட்டோக்ராஃபி.
           
நவீன விருட்சம், கீற்று, கல்கி, விகடன், உயிரோசை, சொல்வனம், மல்லிகை மகள், தேவதை என்று பல்வேறு இடங்களிலும் வெளிவந்த அவரது கவிதைகளின் தொகுப்பாக வந்துள்ளது இந்த நூல். மிகச் சமீபத்தில் கல்கியில் வந்த அவரது 'நாளினை நனைத்த சொற்களு'ம் கூட நூலில் இடம் பெற்றிருப்பதற்கு அகநாழிகைப் பொன் வாசுதேவனைப் பாராட்ட வேண்டும். அவரை இன்னொரு விஷயத்துக்கும் பாராட்ட வேண்டும். நேர்த்தியான வடிவமைப்பு, கச்சிதமான அளவு மட்டுமல்ல, புத்தகத்தில் எழுத்துப் பிழைகளை கண்ணில் விளக்கெண்ணெய் விட்டுதான் தேட வேண்டும். மிகச் சொற்பமான அளவிலேயே பிழைகள்.  
                  
ஏனென்றால், பிழைகளுடன் இருக்கும் புத்தகம் சமீபத்தில் படித்த அனுபவத்தில் சொல்கிறேன்!  நல்ல கருத்துகள் கொண்ட புத்தகம் கூட பிழையினால் பொலிவிழந்து போகும்!  
          
பெரும்பாலும் ஏற்கெனவே அவர் பகிர்ந்து படித்தவைதான். ஆனாலும் ஒவ்வொன்றாக ப்ளாக்கில் படிப்பதற்கும், புத்தகமாய்ப் பார்ப்பதற்கும் நிச்சயம் வித்தியாசம் இருக்கிறது.  
             
61 தலைப்புகளில் கவிதைகள். (கவிதைகளுக்குத் தலைப்பு வைக்கவேண்டும் என்றே எனக்கு சமீபத்தில்தான் தெரியும்!)  
                
ஒவ்வொரு கவிதையைப் படிக்கும்போதும் ப்ளாக்கில் படித்தபோது எனக்கு என்ன தோன்றியது என்று நினைத்துப் பார்க்கத் தோன்றியது. இத்தனைக்கும் நான் படிக்காத கவிதைள் கூட இருந்தன, புத்தகத்தில்.  படித்து நினைவில்லையா, அல்லது சிலவற்றை ராமலக்ஷ்மி அவர்கள் வலைப்பக்கத்தில் பகிரவில்லையா... தெரியவில்லை. 
               
அன்றாட வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வையும் எவ்வளவு ஆழ்ந்து கவனிக்கிறார் ராமலக்ஷ்மி என்று கவிதைகளின் கருவிலிருந்து தெரிகிறது. முன்னுரையில் 'புன்னகை' கவிதை இதழ் ஆசிரியர் க. அம்சப்ரியா இதைத்தான் சொல்கிறார்.
               
சிலசமயம் கவிதைகள் சொல்லவரும் கருப்பொருளை, கவிதையின் நடுவிலிருந்து தேடி எடுக்க வேண்டியிருக்கிறது. நடுவில் எங்கோ ஒளிந்திருக்கும் கவிதைக் கருவின் வார்த்தைகள்! சொல்லவரும் கருத்து தெரிந்தவுடன், கவிதையை மறுபடி படித்தால், எங்கிருந்து, எதனை ஒப்புமைப் படுத்துகிறார் என்று ஆச்சர்யம் ஏற்படுகிறது. 
               
கதை எழுதும் அதே கவனத்தோடு கவிதைகளுக்கும் கரு தேவைப் படுகிறது.  (உதாரணத்துக்கு 'ஒன்றையொன்று') ராமலக்ஷ்மிக்கு அதற்குப் பஞ்சமேயில்லை. கடற்கரைக்குச் சென்றால் காற்று வாங்கி விட்டுத் திரும்பும் என் போன்றோரிடையே அங்கு கடல், சிப்பியைக் கொண்டு வரும் தடம், அதை எடுக்கச் சென்ற குழந்தையின் கால் தடம்,  என்றெல்லாம் கவனித்து, அந்தக் கால் தடம் கலையாதிருக்க கடல் படும் கவலையைச் சொல்கிறார். 
              
மற்றவர்கள் பார்க்காததை எல்லாம் கவிஞனின் கண்கள் பார்க்குமாம். இரவு கண்ணிழுக்கும் தூக்கத்தில் கார் ஓசை கேட்டு ஒவ்வொரு வீடும் விழித்துக் கொண்டு 'தன் வீட்டுக் கா(ர)ரா' என்று படும் கவலையைக் கவிதையாக்குகிறார்.  ( 'நட்சத்திரங்கள்' - இங்கு எனக்கு என்னமோ 'மிளிர்ந்து கொண்டிருக்கின்றன நட்சத்திரங்கள்' வரியோடு கவிதை முடிந்து விடுகிறது!)
         
புத்தகத் தலைப்பான 'இலைகள் பழுக்காத உலகத்தை' அப்பாவை நினைத்து எழுதி இருக்கிறார். புத்தகத்தையும் அப்பாவுக்கு சமர்ப்பித்திருக்கிறார். 
              
ஒரு மூச்சிலேயே படித்து முடித்தேன் என்று சொல்லக் கூடிய புத்தகம் இல்லை இது. அவ்வப்போது எடுத்து புரட்டிக் கொண்டே இருக்கலாம். 

பூக்குட்டியின் கவலை புரிந்து விரையும் மேகம்..
இருந்த இடத்தைத் தேடும் மூஞ்சூறு... ஓவியக் கண்காட்சி பற்றி சமீபத்தில் கூட எழுதி இருந்தார். அங்கு செல்லும்போது கண்கள் காணும் காட்சியில் எல்லாம் மனம் ஒரு கதையை, சம்பவத்தைக் கற்பனை செய்துவிடும் போல!   
              
குழந்தை கால்தடம் மீதான கடலின் 'தவிப்பு'...
பூமி குளிர மழை பொழியக் காரணம்...
வண்ணத்துப் பூச்சியாக ஆசைப்படும் ஒரு வண்ணத்துப் பூச்சி..
              
ராஜாத் தேனீக்களுக்கு கொடுக்குகள் இல்லாத காரணம் தெரியுமோ...
'அழகிய வீரர்கள்' - எதிலிருந்து எதற்கு ஒப்பீடு செய்கிறார் என்று ஆச்சர்யம் ஏற்படுகிறது.  
               
மனிதம் குறைந்த உலகில் தென்படும் துளிக் கருணை நனைக்கிறது மனதை, தொடரும் பயணத்தில் ... 
    
சுவாரஸ்யப் புதிராய் 'யார் அந்தச் சிறுவன்' 
   
மறுப்பு - அந்த வயதான பெண் தானே உள்ளே சென்று படைக்கலாமே என்ற ஆதங்கம் தருகிறது!   
                
'பிரார்த்தனை' யில் 'பிரார்த்திக்கத் தொடங்குகிறது வேதனையுடன் அன்பு' என்ற வரிகளை என் சௌகர்யத்துக்காகக் கடைசியில் சேர்த்துக் கொண்டேன்!  
     
காதல், காதல் தோல்வி என்று கவிதைகள் படித்திருக்கிறேன். 

ஒட்டுமொத்தப்பார்வையில் ராமலக்ஷ்மி கவிதைகளில் தத்துவார்த்த சிந்தனையும், வாழ்வின் ஒவ்வொரு அசைவிலும் கவனிக்கப் பட்டிருக்கும் நுணுக்கமான சமூகப் பார்வையும் தெரிகிறது.  
               
எனக்கெல்லாம் 'கைமாத்தாக'க் கிடைத்தால்தான் உண்டு கவிதை! 
           
'ஒரு சொல்' சமீபத்திய என் அவஸ்தையை நினைவு படுத்துகிறது. படித்த ஒரு நாவலின் பெயரை மறந்து திண்டாடிக் கொண்டிருக்கிறேன்.
'பேரன்பி'ல் எனக்கு என் அப்பாவின் நினைவு வந்தது!

              
மென்மேலும் சிகரங்களைத் தொட எங்கள் வாழ்த்துகள் ராமலக்ஷ்மி.

'இலைகள் பழுக்காத உலகம்'
ராமலக்ஷ்மி
அகநாழிகைப் பதிப்பகம்
96 பக்கங்கள், 80 ரூபாய். 
                

செவ்வாய், 28 ஜனவரி, 2014

புத்தகக் கண்காட்சி 2014

            
போக வேண்டாம் என்று நினைத்தாலும் போக முடியாதிருக்க முடியவில்லை. 

சென்னைவாசிகளுக்கு சங்கீத சீசனில் தொடங்கும் வருடாந்திரக் கொண்டாட்டம் புத்தகக் கண்காட்சியில் நிறைவு பெறுகிறது!   

                 
சுஜாதா, சாண்டில்யன், நாபா, ஜேகே, லக்ஷ்மி என்று அத்தனை பெரிய எழுத்தாளர்களின் படைப்புகள் நிறைய என்னிடம் பி டி எஃப் ஆக இருக்கின்றன. அதே படைப்புகள் புத்தகங்களாகவும் என்னிடம் இருக்கின்றன. மின் நூலைச் சேகரிப்பது ஒரு கடமை, பாதுகாப்பு. அதற்காக விரும்பிய புத்தகங்களை காசு கொடுத்து வாங்காதிருப்பது இல்லை. அது வேறு, இது வேறு.  இதன் சௌகர்யம் வாசகனறிந்தது. நான் வாசகன். விற்பவர்களுக்கு அது வியாபாரமும் கூட.  வாசகனாக எனக்கு ரசனை மட்டும்தான்!   
                   
வாங்கிய புத்தகங்களில் பல இன்னும் படிக்கவில்லை. வீட்டில் சில மின்சாதனப் பொருட்களை ஆர்வமாக வாங்கி, அடிக்கடி உபயோகப் படுத்தாமல் இருப்பதில்லையா... அது போல!
       
போதாக்குறைக்கு சில பெரிய பெரிய எழுத்தாளர்கள் எல்லாம் (வின்ஸ்டன் சர்ச்சில் கூடச் சொல்லியிருக்காராம்) எல்லாப் புத்தககளையும் யாராலும் முழுமையாகப் படிக்க முடியாது என்று சொல்லியிருக்கிறார்களாம். ஒருமாதிரி ஆறுதலாக இருந்தது!  
             
அலமாரியில் கொஞ்சம் இடம் வேறு பாக்கி தெரிந்தது. சரி, சும்மா பார்த்து விட்டு வருவோம் என்று ஒரு வருடமாக அவ்வப்போது புத்தக விமர்சனங்கள் படித்துக் குறித்து வைத்திருந்த லிஸ்ட்டை எடுத்துக் கொண்டு கிளம்பினேன்.
        
உள்ளே நடந்துகொண்டிருந்த எல்லோருமே ஒரு புத்தகம் வெளியிட்டவர்கள் போலத் தோன்றியதற்கு அதிகமாக முக நூல் மற்றும் G+ இல் புழங்கியதும் ஒரு காரணமாயிருக்க வேண்டும்.  உள்ளுக்குள் தோன்றிய கூச்சத்தை  'ஆ! நான் வாசகன்!  நானில்லாமல் எழுத்தாளர்களா' என்று விலக்கிக்கொண்டு அலசலைத் தொடங்கினேன். 
           
விசாலமான வழியமைப்புகளில், காலில் இடரும் பலகைகளுடன் வழக்கமான சௌகர்ய, அசௌகர்யங்களுடன் வியாபாரத்துக்குத் தயாராயிருந்தது கண்காட்சி. 
            
வெறும் கைகளுடன் உற்சாகமாகத் தொடங்கிய வேட்டை, நேரம் செல்லச் செல்ல, கைகளில் சுமையுடன் அலைவது கஷ்டமாக இருந்ததால் வேகம் குறையத் தொடங்கியது!  சுமை இருக்கும்போது அலசிப் பார்ப்பது குறைந்தது. பையுடன் உள்ளே சுற்றும்போது கடைக்காரர்கள் 'புத்தகத்தை எடுத்து பையில் போட்டுக்கொண்டு விடுவானோ' என்று நம்மையே பார்ப்பதுபோல பிரமை வேறு.  
                
பொங்கலன்று சென்றதால் வீட்டிலேயே முழு வயிறு சாப்பிட்டு விட்டுக் கிளம்பி விட்டதால், அங்கு உணவகங்கள் செல்லும் வாய்ப்பைத் தவிர்க்க முடிந்தது. எனவே அவர்கள் அதிக சார்ஜ் செய்தார்களா என்பதுபற்றி கவலை ஏற்படவில்லை! தாகத்துக்குக் கவலையே இல்லை. நிறைய கேன்கள், நிறையத் தண்ணீர்!   
             

மணிமேகலைப் பிரசுரம் உள்ளிட்ட நிறைய ஸ்டால்களில் நாம் தேடும் புத்தகங்கள் குறித்துக் கேட்டால் சரியான பதில் இல்லை. 'அங்க இருக்கும், தேடிக்குங்க' டைப் ரீ ஆக்ஷன்தான். கொஞ்சம் பழைய புத்தகங்களை அவர்கள் கொண்டு வரவில்லை அல்லது அவற்றைக் கண்ணில் படும் இடத்தில் வைக்கவில்லை! தலைப்பைச் சொன்னால் அலமாரியில் தேடுவதற்குப் பதில் டேபிள்களின் கீழே படுதா விலக்கித் தேடிப் பார்த்த ஸ்டால்களும் இருந்தன. அப்போதும் அவை கிடைக்கவில்லை என்பது வேறு விஷயம்!   
           
என் அப்பா சி சு செல்லப்பாவின் 'சுதந்திர தாகம்' புத்தகமும், சுவாமிநாத ஆத்ரேயாவின் 'மாணிக்கவீணை' மற்றும் அவரது எந்த படைப்புகள் கிடைத்தாலும் வாங்கச் சொல்லிக் கேட்டிருந்தார். ஒரு ஸ்டால் விடாமல் கேட்டும் அதைப் பற்றி விவரம் சொல்லக் கூட ஆள் இல்லை, புத்தகங்களும் கிடைக்கவில்லை!
       
அறிமுகப்படுத்திக்கொண்டதும், கை குலுக்கிய மூத்த எழுத்தாளர்,  'முகநூல் ப்ரொஃபைல் படத்தில் முகம் வித்தியாசமாக இருந்தது' என்றார்.  

(என்னுடைய முகநூல் ப்ரொஃபைல் படம்!) 
   

வம்சியில் புத்தகம் வாங்கிக் கொண்டபோது 'கரும்புனலை' சிபாரிசு செய்தார் அங்கிருந்த நண்பர். புரட்டிப்பார்த்து விட்டு மறுத்து விட்டு நகர்ந்தபோது 'காக்கைகள் கொத்தும்...' புத்தகத்தைக் காண்பித்தார். சென்ற வருடமே ஒரு நண்பர் எனக்குப் பரிசளித்தார். இதில் இடம்பெற வேண்டி நான் கூட கதைகள் அனுப்பியிருந்தேன்' என்று சொன்னதும் பில் போடுமிடத்தில் அமர்ந்திருந்த ஷைலஜா மேடத்திடம் அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தினார். அவர் எழுந்து நின்று பேசியது கூச்சத்தைக் கொடுத்தது.
               
1 மணி முதல் 6 மணிவரை நடை...நடை...நடை..
          
முக்கால்வாசி ஸ்டால்கள் முடித்து, மிச்சத்தைப் பார்க்க இன்னொருநாள் வரவேண்டும் என்று நினைத்திருந்து, முடியாமல் போனது.  

மெலூஹாவின் அமரர்கள் 160 ரூபாய். பேப்பர் தரம் சொல்லிக் கொள்ளும்வண்ணம் இல்லை. அதே அளவு, அதே 160 ரூபாய்க்கு வாங்கிய வேறு சில புத்தகங்கள் நல்ல தரத்தில் பேப்பர்.   ம்..ஹூம்! விலை பற்றிப் பேசக் கூடாது!
நுழைவுக்கட்டணம் 10 ரூபாய் ஆக்கியவர்கள் - இது பெரிய விஷயமில்லைதான்  - தள்ளுபடியை 20 சதவிகிதம் வேண்டாம், 15 சதவிகிதம் தந்திருக்கலாம்! இதைச் சொன்னாலும் கணக்கு பார்க்கக் கூடாது என்பார்கள். விடுங்கள்!


நான் சென்ற அன்று ரோட்டோர புத்தகக் கடைகளைக் காணோம். எதையோ இழந்தது போலத்தான் இருந்தது. வைக்கக் கூடாது என்று சொல்லி விட்டார்களோ என்னவோ... அல்லது கடைசி நாள் நெருங்க நெருங்க கடை பரப்பி விடுவார்கள் என்று எதிர்பார்த்தேன். நான்தான் ரெண்டாம்தரம் போவேனே என்று நினைத்திருந்தேன். ரெண்டாம்தரம் போகும் வாய்ப்பு கிடைக்காததால் ரோட்டோரக் கடைகள் வைத்தார்களா என்றும் தெரியாது!
அப்படி என்னதான் வாங்கினேன்?  
              

சி சு செல்லப்பா சிறுகதைகள் (காவ்யா), இலைகள் பழுக்காத உலகம்,அடை மழை, சுஜாதாட்ஸ், என்றென்றும் சுஜாதா, வானம் வசப்படும், தூக்குக் கயிற்றில் நிஜம், புயலிலே ஒரு தோணி, திரை (பைரப்பா), சாமான்யனின் முகம், சிறகு விரிந்தது, கீதா மாதுர்யம், திருப்பாவை விளக்கம், ஸ்ரீவில்லிப்புத்தூரார் மகாபாரதம், வெற்றிக்கோடு, து ஆக்களின் தொகுப்பு, நோன்பு, லஜ்ஜா (அவமானம்) வீர சிவாஜி, விவேகானந்தர், ஸ்ரீ விஷ்ணு புராணம், அர்த்தமுள்ள கேள்விகள், அறிவுபூர்வமான பதில்கள், மகாபாரதம் (வானதி - கே ஜி ஜி கேட்டது! ), மெலூஹாவின் அமரர்கள், லா.ச. ராமாமிர்தம் கதைகள் பாகம் 1&2, டாக்சி டிரைவர், துளி விஷம், விஷ்ணுபுரம், வெயில் தின்ற மழை, ஆட்டோ சங்கரின் மரண வாக்குமூலம்...  
                   

திங்கள், 27 ஜனவரி, 2014

திங்க கிழமை 140127 :: சம்பந்திப் பொடி.

              
தலைப்பைப் பார்த்துவிட்டு, 'ஆஹா! இரக்கமில்லாமல் வரதட்சணை கேட்கின்ற சம்பந்திகளை உருக்கி எடுத்து, பொடிப் பொடியாக செய்வது எப்படி ' என்று சொல்லப்போகிறோம் என்று நினைக்காதீர்கள்! 

பொடி விஷயங்களை, நாங்கள் சொல்வதை முதலில் சிறிய அளவில் செய்து பாருங்கள். நன்றாக இருந்தால், உங்களுக்குப் பிடித்தால், பிறகு பெரிய அளவில் செய்துகொள்ளலாம். 

பொருட்கள்:  
   

காம்பு அரிந்து, சுத்தம் செய்யப்பட்ட மிளகாய் வற்றல் கால் கிலோ. 
தனியா : ஐம்பது கிராம். 
தேங்காய் மூடி ஒன்று. (தேங்காயுடன்தான் - வெறும் மூடி வேண்டாம்) 
கறிவேப்பிலை : ஒரு பிடி  (சுமார் ஐம்பது இலைகள்!) 
 புளி: எலுமிச்சம் பழம் அளவுக்கு. 
உரித்த வெள்ளைப்பூண்டு: நூறு கிராம். 
உளுத்தம்பருப்பு ஐம்பது கிராம்.
கடுகு ஒரு டீஸ்பூன். 
பெருங்காயம் : பட்டாணி அளவு.
உப்பு தேவையான அளவு.

* மிளகாய், தனியா இரண்டையும் தனித் தனியே வறுத்து எடுத்துக் கொள்ளவும். 

* தேங்காயைத் துருவி, அதனோடு கறிவேப்பிலையைச் சேர்த்து, ஓர் இரும்புச் சட்டியில் இட்டு நன்றாக வறுத்துக் கொள்ளவும். பொன் நிறத்திற்குக் கொஞ்சம் அதிகமாகவே வறுத்துக்கொள்ளவும். 

* மிளகாய், தனியா, உப்பு எல்லாவற்றையும் மிக்சியில் இட்டு நன்றாக,அரைத்துக் கொள்ளவும். இந்தக் கலவையோடு, புளி, பூண்டு ஆகியவைகளையும் மிக்சியில் போட்டு நன்றாக அரைக்கவும். மிக்சியில் புளி, பூண்டு ஆகியவை நன்றாக அரைபட வேண்டும் என்றால், லேசாக அவைகளை இரும்பு சட்டியில் இட்டு, கொஞ்சமாக வறுத்துக்கொள்ளவும். 

* உளுத்தம்பருப்பு, கடுகு, பெருங்காயம் - இந்த மூன்றையும் தேங்காய் எண்ணையில் வறுத்து, மிக்சியில் உள்ள பொடியுடன் சேர்த்து அரைத்துக்கொள்ளவும். 

* பிறகு, இந்தக் கலவையுடன், ஏற்கெனவே வறுத்த தேங்காய்ப்பூ, கறிவேப்பிலைக் கலவையையும் சேர்த்து, மிக்சியில் நன்றாக அரைத்துக் கொள்ளவும். 
   

அவ்வளவுதான்! சம்பந்திப் பொடி தயார். இந்தப் பொடியை, சூடு ஆறியவுடன், கண்ணாடி பாட்டிலில் பாக் செய்து வைத்துக் கொள்ளலாம். (பொடியை கையால் தொடாமல், கரண்டி / ஸ்பூனால் மட்டுமே எடுக்கவேண்டும். கை பட்டால், பொடியின் ஆயுட்காலம் வெகுவாகக் குறைந்துவிடும்) கைபடாமல் தயாரித்தால், இந்தப் பொடியின் ஆயுட்காலம், செய்யப்பட்ட நாளிலிருந்து இருநூறு நாட்கள்.   

ஆமாம், இந்தப் பொடியை என்ன செய்யலாம்? 

# வடித்த சாதத்தோடு ஒரு ஸ்பூன் பொடியைக் கலந்து, நல்லெண்ணெய் / நெய் விட்டு, மோர்க்குழம்பு தொட்டுக்கொண்டு சாப்பிடலாம். 
     

* இட்லி / தோசைக்கு, மிளகாய்ப்பொடி போன்று, எண்ணையோடு சேர்த்துத் தொட்டுக்கொண்டு சாப்பிடலாம். 

* மோர்சாதத்திற்கு இந்தப் பொடியைத் தொட்டுக்கொண்டு சாப்பிடலாம். 

* பயணம் செல்பவர்களுக்கு, ஹோட்டலில் இட்லிக்குத் தருகின்ற மூவர்ண சட்டினிகள் பிடிக்கவில்லை என்றால், இதை கையோடு எடுத்துச் சென்று, தொட்டுக்கொண்டு சாப்பிடலாம். 
                

ஞாயிறு, 26 ஜனவரி, 2014

சனி, 25 ஜனவரி, 2014

கடந்த வார பாஸிட்டிவ் செய்திகள்



1) வயதைப் பொருட்படுத்தாது வாசிப்பை நேசிப்போரை உருவாக்கும் 75 வயது சண்முகவேல்.
 


 


3) கார்ப்பரேட் கம்பெனியில் நல்ல ஊதியத்தில் தான் பார்த்துக் கொண்டிருந்த வேலையை விட்டுவிட்டு, இன்றைய குழந்தைகள் இணையத்தளம், கணினி விளையாட்டு என்று மூழ்கியிருக்கும் குழந்தைகளைப் புத்தகங்கள் பக்கம் திருப்பவேண்டி, மடிப்பாக்கத்தில் 'ரீடர்ஸ் க்ளப்' என்று தொடங்கியிருக்கும் (www.readersclub.co.in) படிப்படியாகத் தொடங்கி இன்று 10,000 புத்தகங்கள் கொண்ட நூலகத்தை உருவாக்கியிருப்பது பெரிசில்லை, அவைகளை கேட்பவர்கள் வீட்டுக்கெக் கொண்டு சென்று கொடுத்து விட்டு வருவதும், படித்த உடன் திரும்ப தானே நேரில் சென்று வாங்கியும் வருகிறார் திரு. சேதுராமன். கட்டணம் குழந்தைகளுக்கு 60 ரூபாய், பெரியவர்களுக்கு 75 ரூபாய். [19/1 கல்கியில் படித்தது]
 


4) விளம்பரத்தை விரும்பாத உதவி.  என்ன பெயர்?



வெள்ளி, 24 ஜனவரி, 2014

வெள்ளிக்கிழமை வீடியோ 140124 :: நேற்றைய பதிவின் எதிரொளி!




இங்கே தெரியவில்லை என்றால், இந்த சுட்டியில் சொடுக்கி, யு டியூப் சென்று பாருங்கள். மனவாடு யாராவது மொழி பெயர்ப்புக்காக அருகில் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்!
                    

வியாழன், 23 ஜனவரி, 2014

கும்னாபி பாபாதான் நேதாஜியா? - நேதாஜி மரண சர்ச்சையின் ஒரு பகுதி



                                                     
                                                       


இன்று ஜனவரி 23 நேதாஜியின் பிறந்தநாள்.

இன்றைய தமிழ் இந்துவில் தலையங்கக் கட்டுரையாக நேதாஜி பற்றி வந்துள்ள தகவல்களைப் படித்தபோது, பல நாட்களுக்குமுன் மதுரையிலிருந்து வந்த ஒரு பார்சலில் கட்டியிருந்த தினமலர் செய்தித்தாளின்  கட்டிங் வைத்திருந்த நினைவு வந்தது. அதைத் தேடித் பிடித்து தினமலர் வலைப் பக்கத்துக்குச் சென்று பிப்ரவரி 2, மற்றும் 3, 2013 ஆம் ஆண்டில் தேடினால் அதற்கு வாய்ப்பே தரவில்லை அதன் இணையப்பக்கம்!

எனவே, மடித்து வைத்திருந்த அந்த கட்டிங்கை அப்படியே தட்டச்சு செய்கிறேன்! இதன் தொடர்ச்சியாக தி இந்துவின் இன்றைய தலையங்கக் கட்டுரையின் லிங்க் கொடுத்து  விடுகிறேன். ஆர்வம் இருப்பவர்கள் பொறுமையாகப் படிப்பார்கள் என்ற நம்பிக்கையுடன்!

 
உத்தரப் பிரதேசம் பைசலாபாத்தில் வசித்து 1985 ஆம் ஆண்டில் மறைந்த கும்னாபி பாபாதான் நேதாஜி சுபாஷ் சந்திரா போஸா? என்று கண்டுபிடிக்க விசாரணைக்கமிட்டி அமைப்பது பற்றி பரிசீலிக்குமாறு மாநில அரசுக்கு ஐகோர்ட் கிளை அறிவுறுத்தியது.

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இறுதிக்காலம் பற்றிய மர்மத்துக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை. தைவான் நாட்டில் 1945 ஆகஸ்ட் 18ஆம் தேதி  விபத்தில் அவர் உயிரிழந்ததாக ஒரு தகவல் உள்ளது. அந்தத் தகவலை தைவான் அரசு அந்த வேளையிலேயே மறுத்துள்ளது. 

இங்கிலாந்து, அமெரிக்கா, ரஷ்யா, ஜெர்மனி உட்பட பல நாடுகளும், தைவான் விமான விபத்துத் தகவல் பற்றி சந்தேகம் வெளியிட்டன. விபத்துத் தகவலை ஜப்பான் மட்டுமே ஏற்றது.  ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள ரெங்கோஜி கோவிலில் நேதாஜியின் அஸ்திக் கலசம் வைக்கப்பட்டுள்ளது. 

நேதாஜி மரண மர்மம் குறித்து விசாரிக்க ஜஸ்டிஸ் எம்.கே முகர்ஜி கமிஷனை மத்திய அரசு நியமித்தது. கடந்த 2005 ல் கமிஷன் சமர்ப்பித்த அறிக்கையில், 'தைவான் விபத்தில் நேதாஜி இறக்கவில்லை' ரெங்கோஜி கோவிலில் வைக்கப்பட்டிருப்பது நேதாஜி அஸ்தி அல்ல' என்று தெரிவிக்கப்பட்டது. இந்த அறிக்கையை மத்திய அரசு நிராகரித்து விட்டது. 

இதற்கிடையில், உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தி அருகில் உள்ள பைசாபாத்தில் 'ராம்பவன்' என்ற வீட்டில் வசித்து வந்த கும்னாபி பாபா பகவான்ஜி என்ற துறவிதான், நேதாஜி என்ற பரபரப்பு இருந்து வந்தது. 'சில ரகசியக் காரணங்களுக்காக நேதாஜி  துறவியாக வாழ்ந்து வந்தார்.

நேரு, சர்தார் படேல், ராஜேந்திர பிரசாத், இந்திரா காந்தி போன்ற பல தலைவர்களுக்கும் கும்னாபி பாபாதான் நேதாஜி என்று தெரியும். அவர்கள், அவரிடம் ரகசிய ஆலோசனை பெற்று வந்தனர். 
 
நேரு மரணம் அடைந்த போது கும்னாபி பாபாவும் மாறு வேடத்தில் டெல்லி வந்து அஞ்சலி செலுத்தினார்.  அவரிடம் பல . தளபதிகளும் ஆலோசனை பெற்று வந்தனர்' என்றெலாம் அவ்வபோது  பரபரப்பு தகவல்கள் வந்தன.

கும்னாபி பாபா, 1985 செப்டம்பரில் மறைந்தார்.  செப்டம்பர் 18ஆம் தேதி நடந்த அவரது இறுதிச்சடங்கில்  சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட மூத்த தலைவர்கள், சில தளபதிகள், நேதாஜி உருவாக்கிய இந்திய தேசிய ராணுவத்தில் பணியாற்றியவர்கள் உட்பட பல பிரமுகர்கள் பங்கேற்றனர். அவரது உடல் தகனம் செய்யப்பட இடத்தில் சமாதி அமைக்கப்பட்டுள்ளது. அதை 'நேதாஜி சமாதி' என்றுதான் பலரும் குறிப்பிட்டு வருகின்றனர்.

       
கடந்த 2010 ஆம் ஆண்டில், நேதாஜி வாழ்க்கைத் தொடர்பான 'ப்ளாக் பாக்ஸ் ஆஃ ப் ஹிஸ்டரி'  என்ற ஆவணப்படத்தை அம்லங்குஷும் கோஷ் என்ற வங்காள இயக்குனர் வெளியிட்டார். அதில் 'கும்னாபி பாபாதான் நேதாஜி' என்று தெரிவிக்கப் பட்டிருந்தது. 

  

அதற்கு ஆதாரமாக பல தகவல்களை கோஷ் குறிப்பிட்டிருந்தார். 'கும்னாபி பாபாவின் தனிப்பட்ட டாக்டர்கள் ஆர் கே மிஸ்ராவும்  பி. பண்டோபாத்யாவும், அவர்கள் நேதாஜி என்று கருதுகின்றனர். அவர் பத்திரமாகப் பாதுகாத்து வந்த 40 க்கும் மேற்பட்ட பெட்டிகளில் இந்திய சுதந்திரப் போராட்டம் பற்றிய ஆவணங்களும், நேதாஜி குடும்பத்தினரின் புகைப்படங்களும் இருந்தன என்று அவர்கள் தெரிவித்தனர். நேதாஜி கையெழுத்தும், கும்னாபி பாபாவின் கையெழுத்தும் ஒன்றுதான் என்று தேசியத் தடயவியல் ஆய்வு மையத்தின் முன்னாள் கூடுதல் இயக்குனர் டாக்டர் பி. லால் உறுதி செய்துள்ளார்' என்றெல்லாம், கோஷ் அதிரடித்திருந்தார்.  இந்த ஆதாரங்கள் பற்றி அரசுத் தரப்பில் கருத்துத் தெரிவிக்கப் படவில்லை.

இதற்கிடையில், கும்னாபி பாபாதான் நேதாஜியா? என்று கண்டுபிடிக்க அரசுக்கு உத்தரவிடுமாறு, நேதாஜியின் மருமகள் லலிதா போஸ், உ.பி. ஐகோர்ட்டில் கடந்த 1986 ஆம் ஆண்டில் மனுச் செய்திருந்தார். கடந்த 2010 ஆம் ஆண்டில், 'முகர்ஜி கமிஷனிடம் ஒப்படைக்கப்பட்ட கும்னாபி பாபாவுக்குச் சொந்தமான பொருட்களை அரசு அருங்காட்சியகத்துக்கு மாற்ற வேண்டும்' என்று கோரி இன்னொரு மனு தாக்கல் செய்யப் பட்டது.

இந்த மனுக்களை ஐக்கோர்ட்டின் லக்னோ கிளை விசாரித்து வந்தது. விசாரணையின்போது, நேதாஜி மற்றும் கும்னாபி பாபா பற்றி மீடியாக்கள் வெளியிட்ட பரபரப்புத் தகவல்கள் மற்றும் ஆதாரங்களை மனுதாரர்கள் தாக்கல் செய்தனர். 

இந்நிலையில், நீதிபதிகள் தேவிபிரசாத் சிங், வீரேந்திரகுமார் தீட்சித் கொண்ட ஐகோர்ட் டிவிஷன் பெஞ்ச் முன், இந்த இரு மனுக்களும் இரு தினங்களுக்குமுன் விசாரணைக்கு வந்தன.

அப்போது 'கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆதாரங்களைப் பார்க்கும்போது, கும்னாபி பாபா சாதாரணத் துறவி என்று தோன்றவில்லை. அவரை நேதாஜி குடும்பத்தினரும் நேதாஜியின் நண்பர்களும் அடிக்கடி சந்தித்து வந்துள்ளனர்' என்று நீதிபதிகள் கருத்துத் தெரிவித்தனர். மேலும், 'எந்த அடிப்படையில், முகர்ஜி கமிஷன் அறிக்கையை அரசு நிராகரித்தது?  ரெங்கோஜி கோவிலில் உள்ள அஸ்தியைப் பயன்படுத்தி மரபணு சோதனை நடத்த அரசு ஏன் தயங்குகிறது?' என்று கேள்வி  எழுப்பினர்.

பின்னர், 'கும்னாபி பாபாதான் நேதாஜியா?' என்று கண்டுபிடிக்க, ஓய்வுபெற்ற ஐகோர்ட் நீதிபதி தலைமையிலான ஒரு கமிட்டியை அமைப்பது பற்றியும் அரசு பரிசீலிக்க வேண்டும். கமிட்டி உறுப்பினர்களாக ஆய்வு நிபுணர்கள் மற்றும் அரசு உயரதிகாரிகளை நியமிக்கலாம். கும்னாபி பாபா தொடர்பான பொருட்களைப் பாதுகாக்க, பைசாபாத்தில் ஒரு அருங்காட்சியகத்தை அமைப்பது பற்றி மாநில அரசு பரிசீலிக்க வேண்டும். முகர்ஜி கமிஷனிடம் ஒப்படைக்கப்பட்ட கும்னாபி பாபாவின் பொருட்கள், அவரது புகைப்படங்கள், வீடியோ பதிவுகள் ஆகியவற்றை, பைசாபாத் கருவூல அதிகாரியின் பொறுப்புக்கு மாற்ற வேண்டும். 

அவற்றை அரசு அருங்காட்சியகத்துக்கு மாற்றும்வரை, கருவூல அதிகாரி பாதுகாப்பாகப் பராமரிக்கவேண்டும். இந்த இருவிஷயங்களிலும், மூன்று மாதங்களுக்குள் அரசு முடிவு செய்து, பதில் மனு தாக்கல் செய்யவேண்டும்' என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

-  இந்தச் செய்தி வெளிவந்தது அநேகமாக கடந்தவருடம் பிப்ரவரி 3 ஆம் தேதி. தினமலர், மதுரை அல்லது திருச்சி பதிப்பு.  -

'இன்னும் விலகாத மர்மம்' என்ற தலைப்பில் இன்றைய 'தி இந்துவில் கட்டுரை. 
முத்துராமலிங்கத் தேவர், தான் நேதாஜியை உயிருடன் சந்தித்து விட்டு வந்ததாகச் சொன்னதாகவும், இன்றைய
ந்தக் கட்டுரை சொல்கிறது!