Sambandhi powder லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Sambandhi powder லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

27.1.14

திங்க கிழமை 140127 :: சம்பந்திப் பொடி.

              
தலைப்பைப் பார்த்துவிட்டு, 'ஆஹா! இரக்கமில்லாமல் வரதட்சணை கேட்கின்ற சம்பந்திகளை உருக்கி எடுத்து, பொடிப் பொடியாக செய்வது எப்படி ' என்று சொல்லப்போகிறோம் என்று நினைக்காதீர்கள்! 

பொடி விஷயங்களை, நாங்கள் சொல்வதை முதலில் சிறிய அளவில் செய்து பாருங்கள். நன்றாக இருந்தால், உங்களுக்குப் பிடித்தால், பிறகு பெரிய அளவில் செய்துகொள்ளலாம். 

பொருட்கள்:  
   

காம்பு அரிந்து, சுத்தம் செய்யப்பட்ட மிளகாய் வற்றல் கால் கிலோ. 
தனியா : ஐம்பது கிராம். 
தேங்காய் மூடி ஒன்று. (தேங்காயுடன்தான் - வெறும் மூடி வேண்டாம்) 
கறிவேப்பிலை : ஒரு பிடி  (சுமார் ஐம்பது இலைகள்!) 
 புளி: எலுமிச்சம் பழம் அளவுக்கு. 
உரித்த வெள்ளைப்பூண்டு: நூறு கிராம். 
உளுத்தம்பருப்பு ஐம்பது கிராம்.
கடுகு ஒரு டீஸ்பூன். 
பெருங்காயம் : பட்டாணி அளவு.
உப்பு தேவையான அளவு.

* மிளகாய், தனியா இரண்டையும் தனித் தனியே வறுத்து எடுத்துக் கொள்ளவும். 

* தேங்காயைத் துருவி, அதனோடு கறிவேப்பிலையைச் சேர்த்து, ஓர் இரும்புச் சட்டியில் இட்டு நன்றாக வறுத்துக் கொள்ளவும். பொன் நிறத்திற்குக் கொஞ்சம் அதிகமாகவே வறுத்துக்கொள்ளவும். 

* மிளகாய், தனியா, உப்பு எல்லாவற்றையும் மிக்சியில் இட்டு நன்றாக,அரைத்துக் கொள்ளவும். இந்தக் கலவையோடு, புளி, பூண்டு ஆகியவைகளையும் மிக்சியில் போட்டு நன்றாக அரைக்கவும். மிக்சியில் புளி, பூண்டு ஆகியவை நன்றாக அரைபட வேண்டும் என்றால், லேசாக அவைகளை இரும்பு சட்டியில் இட்டு, கொஞ்சமாக வறுத்துக்கொள்ளவும். 

* உளுத்தம்பருப்பு, கடுகு, பெருங்காயம் - இந்த மூன்றையும் தேங்காய் எண்ணையில் வறுத்து, மிக்சியில் உள்ள பொடியுடன் சேர்த்து அரைத்துக்கொள்ளவும். 

* பிறகு, இந்தக் கலவையுடன், ஏற்கெனவே வறுத்த தேங்காய்ப்பூ, கறிவேப்பிலைக் கலவையையும் சேர்த்து, மிக்சியில் நன்றாக அரைத்துக் கொள்ளவும். 
   

அவ்வளவுதான்! சம்பந்திப் பொடி தயார். இந்தப் பொடியை, சூடு ஆறியவுடன், கண்ணாடி பாட்டிலில் பாக் செய்து வைத்துக் கொள்ளலாம். (பொடியை கையால் தொடாமல், கரண்டி / ஸ்பூனால் மட்டுமே எடுக்கவேண்டும். கை பட்டால், பொடியின் ஆயுட்காலம் வெகுவாகக் குறைந்துவிடும்) கைபடாமல் தயாரித்தால், இந்தப் பொடியின் ஆயுட்காலம், செய்யப்பட்ட நாளிலிருந்து இருநூறு நாட்கள்.   

ஆமாம், இந்தப் பொடியை என்ன செய்யலாம்? 

# வடித்த சாதத்தோடு ஒரு ஸ்பூன் பொடியைக் கலந்து, நல்லெண்ணெய் / நெய் விட்டு, மோர்க்குழம்பு தொட்டுக்கொண்டு சாப்பிடலாம். 
     

* இட்லி / தோசைக்கு, மிளகாய்ப்பொடி போன்று, எண்ணையோடு சேர்த்துத் தொட்டுக்கொண்டு சாப்பிடலாம். 

* மோர்சாதத்திற்கு இந்தப் பொடியைத் தொட்டுக்கொண்டு சாப்பிடலாம். 

* பயணம் செல்பவர்களுக்கு, ஹோட்டலில் இட்லிக்குத் தருகின்ற மூவர்ண சட்டினிகள் பிடிக்கவில்லை என்றால், இதை கையோடு எடுத்துச் சென்று, தொட்டுக்கொண்டு சாப்பிடலாம்.