போக வேண்டாம் என்று நினைத்தாலும் போக முடியாதிருக்க முடியவில்லை.
சென்னைவாசிகளுக்கு சங்கீத சீசனில் தொடங்கும் வருடாந்திரக் கொண்டாட்டம் புத்தகக் கண்காட்சியில் நிறைவு பெறுகிறது!
சென்னைவாசிகளுக்கு சங்கீத சீசனில் தொடங்கும் வருடாந்திரக் கொண்டாட்டம் புத்தகக் கண்காட்சியில் நிறைவு பெறுகிறது!
சுஜாதா, சாண்டில்யன், நாபா, ஜேகே, லக்ஷ்மி என்று அத்தனை பெரிய எழுத்தாளர்களின் படைப்புகள் நிறைய என்னிடம் பி டி எஃப்
ஆக இருக்கின்றன. அதே படைப்புகள் புத்தகங்களாகவும் என்னிடம் இருக்கின்றன.
மின் நூலைச் சேகரிப்பது ஒரு கடமை, பாதுகாப்பு. அதற்காக விரும்பிய புத்தகங்களை காசு கொடுத்து வாங்காதிருப்பது இல்லை. அது வேறு, இது வேறு. இதன் சௌகர்யம் வாசகனறிந்தது. நான் வாசகன். விற்பவர்களுக்கு அது வியாபாரமும் கூட. வாசகனாக எனக்கு ரசனை மட்டும்தான்!
வாங்கிய
புத்தகங்களில் பல இன்னும் படிக்கவில்லை. வீட்டில் சில மின்சாதனப்
பொருட்களை ஆர்வமாக வாங்கி, அடிக்கடி உபயோகப் படுத்தாமல் இருப்பதில்லையா...
அது போல!
போதாக்குறைக்கு சில பெரிய பெரிய எழுத்தாளர்கள் எல்லாம் (வின்ஸ்டன் சர்ச்சில் கூடச் சொல்லியிருக்காராம்) எல்லாப் புத்தககளையும் யாராலும் முழுமையாகப் படிக்க முடியாது என்று சொல்லியிருக்கிறார்களாம். ஒருமாதிரி ஆறுதலாக இருந்தது!
அலமாரியில்
கொஞ்சம் இடம் வேறு பாக்கி தெரிந்தது. சரி, சும்மா பார்த்து விட்டு வருவோம்
என்று ஒரு வருடமாக அவ்வப்போது புத்தக விமர்சனங்கள் படித்துக் குறித்து
வைத்திருந்த லிஸ்ட்டை எடுத்துக் கொண்டு கிளம்பினேன்.
உள்ளே நடந்துகொண்டிருந்த எல்லோருமே ஒரு புத்தகம் வெளியிட்டவர்கள் போலத்
தோன்றியதற்கு அதிகமாக முக நூல் மற்றும் G+ இல் புழங்கியதும் ஒரு
காரணமாயிருக்க வேண்டும். உள்ளுக்குள் தோன்றிய கூச்சத்தை 'ஆ! நான் வாசகன்! நானில்லாமல் எழுத்தாளர்களா' என்று விலக்கிக்கொண்டு அலசலைத் தொடங்கினேன்.
விசாலமான வழியமைப்புகளில், காலில் இடரும் பலகைகளுடன் வழக்கமான சௌகர்ய, அசௌகர்யங்களுடன் வியாபாரத்துக்குத் தயாராயிருந்தது கண்காட்சி.
வெறும்
கைகளுடன் உற்சாகமாகத் தொடங்கிய வேட்டை, நேரம் செல்லச் செல்ல, கைகளில்
சுமையுடன் அலைவது கஷ்டமாக இருந்ததால் வேகம் குறையத் தொடங்கியது! சுமை இருக்கும்போது அலசிப் பார்ப்பது
குறைந்தது. பையுடன் உள்ளே சுற்றும்போது கடைக்காரர்கள் 'புத்தகத்தை எடுத்து
பையில் போட்டுக்கொண்டு விடுவானோ' என்று நம்மையே பார்ப்பதுபோல பிரமை வேறு.
பொங்கலன்று சென்றதால் வீட்டிலேயே முழு வயிறு சாப்பிட்டு விட்டுக்
கிளம்பி விட்டதால், அங்கு உணவகங்கள் செல்லும் வாய்ப்பைத் தவிர்க்க
முடிந்தது. எனவே அவர்கள் அதிக சார்ஜ் செய்தார்களா என்பதுபற்றி கவலை
ஏற்படவில்லை! தாகத்துக்குக் கவலையே இல்லை. நிறைய கேன்கள், நிறையத் தண்ணீர்!
மணிமேகலைப் பிரசுரம் உள்ளிட்ட நிறைய ஸ்டால்களில் நாம் தேடும் புத்தகங்கள் குறித்துக் கேட்டால் சரியான பதில் இல்லை. 'அங்க இருக்கும், தேடிக்குங்க' டைப் ரீ ஆக்ஷன்தான். கொஞ்சம் பழைய புத்தகங்களை அவர்கள் கொண்டு வரவில்லை அல்லது அவற்றைக் கண்ணில் படும் இடத்தில் வைக்கவில்லை! தலைப்பைச் சொன்னால் அலமாரியில் தேடுவதற்குப் பதில் டேபிள்களின் கீழே படுதா விலக்கித் தேடிப் பார்த்த ஸ்டால்களும் இருந்தன. அப்போதும் அவை கிடைக்கவில்லை என்பது வேறு விஷயம்!
என் அப்பா சி சு செல்லப்பாவின் 'சுதந்திர தாகம்' புத்தகமும், சுவாமிநாத ஆத்ரேயாவின் 'மாணிக்கவீணை'
மற்றும் அவரது எந்த படைப்புகள் கிடைத்தாலும் வாங்கச் சொல்லிக்
கேட்டிருந்தார். ஒரு ஸ்டால் விடாமல் கேட்டும் அதைப் பற்றி விவரம் சொல்லக்
கூட ஆள் இல்லை, புத்தகங்களும் கிடைக்கவில்லை!
அறிமுகப்படுத்திக்கொண்டதும், கை குலுக்கிய மூத்த எழுத்தாளர், 'முகநூல் ப்ரொஃபைல் படத்தில் முகம் வித்தியாசமாக இருந்தது' என்றார்.
வம்சியில்
புத்தகம் வாங்கிக் கொண்டபோது 'கரும்புனலை' சிபாரிசு செய்தார் அங்கிருந்த
நண்பர். புரட்டிப்பார்த்து விட்டு மறுத்து விட்டு நகர்ந்தபோது 'காக்கைகள்
கொத்தும்...' புத்தகத்தைக் காண்பித்தார். சென்ற வருடமே ஒரு நண்பர் எனக்குப்
பரிசளித்தார். இதில் இடம்பெற வேண்டி நான் கூட கதைகள் அனுப்பியிருந்தேன்'
என்று சொன்னதும் பில் போடுமிடத்தில் அமர்ந்திருந்த ஷைலஜா மேடத்திடம்
அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தினார். அவர் எழுந்து நின்று பேசியது
கூச்சத்தைக் கொடுத்தது.
1 மணி முதல் 6 மணிவரை நடை...நடை...நடை..
முக்கால்வாசி ஸ்டால்கள் முடித்து, மிச்சத்தைப் பார்க்க இன்னொருநாள் வரவேண்டும் என்று நினைத்திருந்து, முடியாமல் போனது.
மெலூஹாவின் அமரர்கள் 160 ரூபாய். பேப்பர் தரம் சொல்லிக்
கொள்ளும்வண்ணம் இல்லை. அதே அளவு, அதே 160 ரூபாய்க்கு வாங்கிய வேறு சில
புத்தகங்கள் நல்ல தரத்தில் பேப்பர். ம்..ஹூம்! விலை பற்றிப் பேசக்
கூடாது!
நுழைவுக்கட்டணம் 10 ரூபாய் ஆக்கியவர்கள் - இது பெரிய விஷயமில்லைதான் - தள்ளுபடியை 20 சதவிகிதம் வேண்டாம், 15 சதவிகிதம் தந்திருக்கலாம்! இதைச் சொன்னாலும் கணக்கு பார்க்கக் கூடாது என்பார்கள். விடுங்கள்!நான் சென்ற அன்று ரோட்டோர புத்தகக் கடைகளைக் காணோம். எதையோ இழந்தது போலத்தான் இருந்தது. வைக்கக் கூடாது என்று சொல்லி விட்டார்களோ என்னவோ... அல்லது கடைசி நாள் நெருங்க நெருங்க கடை பரப்பி விடுவார்கள் என்று எதிர்பார்த்தேன். நான்தான் ரெண்டாம்தரம் போவேனே என்று நினைத்திருந்தேன். ரெண்டாம்தரம் போகும் வாய்ப்பு கிடைக்காததால் ரோட்டோரக் கடைகள் வைத்தார்களா என்றும் தெரியாது!
அப்படி என்னதான் வாங்கினேன்?
சி சு செல்லப்பா
சிறுகதைகள் (காவ்யா), இலைகள் பழுக்காத உலகம்,அடை மழை, சுஜாதாட்ஸ்,
என்றென்றும் சுஜாதா, வானம் வசப்படும், தூக்குக் கயிற்றில் நிஜம், புயலிலே
ஒரு தோணி, திரை (பைரப்பா), சாமான்யனின் முகம், சிறகு விரிந்தது, கீதா
மாதுர்யம், திருப்பாவை விளக்கம், ஸ்ரீவில்லிப்புத்தூரார் மகாபாரதம்,
வெற்றிக்கோடு, து ஆக்களின் தொகுப்பு, நோன்பு, லஜ்ஜா (அவமானம்) வீர சிவாஜி,
விவேகானந்தர், ஸ்ரீ விஷ்ணு புராணம், அர்த்தமுள்ள கேள்விகள், அறிவுபூர்வமான
பதில்கள், மகாபாரதம் (வானதி - கே ஜி ஜி கேட்டது! ), மெலூஹாவின் அமரர்கள், லா.ச. ராமாமிர்தம்
கதைகள் பாகம் 1&2, டாக்சி டிரைவர், துளி விஷம், விஷ்ணுபுரம், வெயில் தின்ற
மழை, ஆட்டோ சங்கரின் மரண வாக்குமூலம்...