புதன், 17 பிப்ரவரி, 2016

ஆண்ட்ராய்ட் அட்ராசிட்டி! வாட்ஸாப் க்ரூப்




Image result for whatsapp group images
ஆண்ட்ராய்ட் ஃபோனின் ஆர்வக் கோளாறுகளில் ஒன்று வாட்ஸாப் க்ரூப். 

ஒருநாள் உங்கள் வாட்ஸாப்பை நீங்கள் திறக்கையில் ஒரு இனிய (முதலில்) ஆச்சர்யத்துக்கு ஆளாவீர்கள்.  அதாவது ஒரு க்ரூப் ஒன்று உங்களைக் கேட்காமலேயே அங்கு வந்து உங்களால் திறக்கப்படக் காத்திருக்கும்.

Image result for whatsapp group images 
திறந்தால் you are added என்று மெஸேஜ் இருக்கும்.  முதலில் சந்தோஷமாகவும் உற்சாகமாகவும்தான் இருக்கும்.  போகப்போகத் தெரியும்... அந்த க்ரூப்பின் கஷ்டம் புரியும்!

குறிப்பாக 'டேட்டா கார்ட்' போட்டிருப்பவர்களுக்குத்தான் இதனால் திண்டாட்டம்
அதிகம்.  ஒருநாள் உங்கள் காலெரியில் சென்று பாருங்கள்.  ஒரே வீடியோ பலமுறை வரவு வைக்கப்பட்டு ஆடிக்கொண்டிருக்கும்!  ஒவ்வொரு வீடியோவுக்கும் 4 MB முதல் 10 MB வரை செலவாகும். 


அலைபேசி நிறுவனங்களோ 'நெட் சார்ஜி'ல் கொள்ளை அடித்துக் கொண்டிருக்கின்றன.  நாமும் வேறு வழியின்றி, 'அது இல்லாமல் இருக்க முடியாதே' என்று அவர்கள் ஏற்றிக் கொண்டே போகும் தொகையை பிரதி மாதம் அழுது தொலைக்கிறோம்.   இவர்களைக் கேள்வி கேட்கவும் ஆளில்லை.

இவ்வளவு டெக்னாலஜி கண்டு பிடித்தவர்கள், இது போல ஏற்கெனவே வந்த வீடியோவே மறுபடி வரும்போது, "இது ஏற்கெனவே உங்களிடம் இருக்கிறது... திறக்கவா, வேண்டாமா?" என்று கேட்கும் திறமையை அந்த ஸ்மார்ட்ஃபோனில் ( !! ) வைத்திருக்க மாட்டார்களோ!

Image result for whatsapp group images 
தொழில் ரீதியாக ஓரிரு க்ரூப்களில் சேர்க்கப் பட்டிருப்பீர்கள்.  நட்பு ரீதியாக ஓரிரு க்ரூப்களில் சேர்க்கப் பட்டிருப்பீர்கள்.  குடும்ப ரீதியாக ஓரிரு க்ரூப்களில் சேர்க்கப் பட்டிருப்பீர்கள்.  சில சமயங்களில் ஒரு ஆர்வத்திலோ, தவிர்க்க முடியாமலோ நீங்களே ஒரு க்ரூப்பும் தொடங்கி இருப்பீர்கள்.
Image result for whatsapp group images

நீங்கள் ஆரம்பித்திருக்கும் க்ரூப்பில் சில கட்டுப்பாடுகளை நீங்கள் விதிக்க முடியும் -  (ஆனால் அவை மதிக்கத்தான் படாது!)


இந்த க்ரூப்களுக்கு பொதுவான சில தன்மைகளுண்டு.

-  சில நட்பு க்ரூப்களில் மற்றும் தொழில் ரீதியான க்ரூப்களில் இருக்கும் இரண்டு மூன்று பேர்களைத் தவிர வேறு யாரையும் உங்களுக்குத் தெரிந்திருக்காது.  எனவே பெரும்பாலான சமயங்களில் நீங்கள் அங்கு ஒரு வேண்டாத விருந்தாளி போலவே உணர்வீர்கள்!   நம்மைச் சேர்த்த நட்பின் முகத்துக்காக, பல்லைக் கடித்துக் கொண்டு அங்கு தொடர வேண்டியிருக்கும்.  கொஞ்ச நாள் கழித்து வெளியே வந்து விடுவீர்கள்!


Image result for whatsapp video images 
-  ஒரே காணொளியே வெவ்வேறு அல்லது அடுத்தடுத்து எல்லா க்ரூப்களிலும் வருவது ஒரு தொல்லை என்றால், ஒரே க்ரூப்பிலேயே யார் என்ன அனுப்பி இருக்கிறார்கள் என்று பார்க்காமலேயே, அடுத்ததடுத்தவர்கள் 'எல்லோருக்கும் இந்த இன்பம் கிடைக்கட்டும்' என்று அதையே மறுபடி மறுபடி அனுப்பித் தள்ளுவார்கள்.

-  கிட்டத்தட்ட க்ரூப்பில் 90% பேர்கள் யார் என்ன அனுப்பினாலும் படிக்கவே மாட்டார்கள்.  ஆனால், தாம் அனுப்புவதை மட்டும் எல்லோரும் படிப்பார்கள் என்று நம்பி அனுப்பித் தள்ளுவார்கள்.  தன்னைப்போல பிறரை நினைக்காதவர்கள் இவர்கள்!  அந்தப் பரமபிதா இவர்களை மன்னிக்கட்டும்!  சோதனைக்கு ஒரு கேள்வி ஒன்று இடையே கேட்டுப் பாருங்கள்.  அதற்குப் பதிலே வராது.  எல்லோரும் பார்த்த அடையாளமாக நீல டிக் மட்டும் விழுந்திருக்கும்.

Image result for whatsapp chat images 
-  அந்த க்ரூப்பில் நீங்கள் இருந்தாலும், உங்களை யாரும் லட்சியம் செய்ய மாட்டார்கள்.  நீள நீளமாக நாவல் எழுதுவது போல டெக்ஸ்ட் மெசேஜ்கள் அணிவகுக்கும்.   விரல்களால் தள்ளத் தள்ள வந்து கொண்டே இருக்கும்.  ஒரு ஆய்வுக் கட்டுரை தோற்கும்.  விரல்களே வலிக்கத் தொடங்கும் நேரம் அது முடியும்.....  என்று எண்ணி ஆனந்தப் பட்டு விட முடியாது.  அவர் இன்னும் இரண்டு அதே போல நாவல்களை அனுப்பி இருப்பார்!  அவற்றைப் படித்துக் கொண்டிருந்தால் ஒரு நாள் வாட்ஸாப்புக்கு மட்டுமே பத்தாது!  ஆனால் அனுதினமும் இந்த தொடர் அறுவைகள் வந்து விழுந்த வண்ணமே இருக்கும். 


-  முன்னரே சொன்னபடி, அனுப்பியவரே இதை முழுமையாகப் படித்திருக்க மாட்டார்.  சமயங்களில் நீங்கள் கேட்டிருக்கும் ஏதாவது (உங்களுக்கு) முக்கியமான கேள்வி அந்த தொடர் அறுவைகளின் இடையே துரும்பு போல மாட்டிக் கொண்டு கவனிக்கப்படாமல் போகும்.

-  ஐந்தாறு பேர்களுக்குள் மட்டும் நல்ல அண்டர்ஸ்டாண்டிங் இருக்கும்.  அவர்கள் அனுப்பும் தகவல்கள் உடனடியாகப் பாராட்டப்படும், அலசப்படும், விவாதிக்கப்படும்.  அதே தகவலை இரண்டு நாட்கள் முன்னால் நீங்கள் அனுப்பி இருப்பீர்கள்!  ஆனால் யாராலும் கவனிக்கப் பட்டிருக்காது!  அல்லது பார்த்திருந்தாலும், நீங்கள் அனுப்பியது என்பதாலேயே அதை யாரும் மதித்திருக்க மாட்டார்கள்.  ஆனால் நீங்களும் க்ரூப்பில் ஒரு மெம்பர்!

-  இப்படி நாம் அனுப்பும் தகவல்களை யாரும் மதிக்காவிடினும், அவர்களுக்குள்ளேயே சொரிந்து கொண்டாலும் நடுவில் ஒரு படம் பகிர்வார்கள்.  ஆக்டிவ் மெம்பர், அக்கேஷனல் மெம்பர், ஸைலண்ட் மெம்பர் என்றெல்லாம் குருவி படம் போட்டு கிண்டல் செய்யப் பட்டிருக்கும்.  அதாவது க்ரூப்பில் அவர்களெல்லாம் ஆக்டிவ்  ஆக இருக்கிறார்களாம்.  நீங்கள் அல்லது உங்களைப் போன்றோர் எல்லாம் சும்மா இருக்கிறீர்களாம்!  'நாம் ஏதாவது பகிர்ந்தாலும் அதற்கு என்ன மரியாதை என்று நாம் அறியாததா என்ன' என்று உங்களுக்குத் தோன்றிப் புன்னகைப்பீர்கள்.

-  காலை வணக்கம், குட்மார்னிங், மாலை வணக்கம், குட் ஈவினிங், குட்நைட், என்றெல்லாம் தவறாமல் க்ரூப்பில் போட வேண்டும்.  அதுவும் நெட்டிலிருந்து பொருத்தமான படங்களைச் சுட்டு!  ஆனால் அதற்கும் பெரும்பாலும் பதில் எதிர்பார்க்கக் கூடாது.  சொன்னவரின் க்ளோஸ் மேட்ஸ் மட்டும் அதற்கு(ம்) பதில் சொல்வார்கள்!

-  எல்லா க்ரூப்பிலும் ஒரு சட்டாம்பிள்ளை இருப்பார்.  பெரும்பாலும் (உங்களைப் போன்றோரிடம் மட்டும்) குற்றம் கண்டுபிடிப்பதே அவர் வேலை!

-  குடும்ப க்ரூப்களில் பிறந்தநாள், திருமண நாள் வாழ்த்து மழை அனுதினமும் பொழிந்த வண்ணம் இருக்கும்.  நீங்களும் கடமை தவறாமல் வாழ்த்தியிருப்பீர்கள்.  வாழ்த்தப் பட்டவர் ஒவ்வொருவராக நன்றி நவிலும்போது, உங்கள் பெயர் மட்டும் விடுபடுவது தற்செயலாகத்தான் என்று நீங்கள் நம்ப வேண்டும்!  அப்போதுதான் குடும்ப உறவுகள் பேணப்படும்!
-  ஒவ்வொரு நாளும் அந்த க்ரூப்பின் பெயரும் படமும் திடீர் திடீரென மாறிக் கொண்டே இருக்கும்.   வேறொன்றுமில்லை, க்ரூப்பில் உள்ள சிலரின் ஆர்வக் கோளாறு!  அட்மின் ஒரு சவுண்ட் கொடுக்கும் வரை சில சமயம் இது தொடரும்.  சில சமயம் அது பாட்டுக்கு மாறிக்கொண்டே இருக்கும்.  போகட்டும் என்று எல்லோரும் விட்டு விடுவார்கள்.  என்ன, சிலருக்கு அது ஏதோ புது க்ரூப் போல என்று திறந்து பார்க்காமல் கூட இருந்து விடுவார்கள்!


-  இப்படி ஒரு உரையாடல் நடக்கும்...!

"நான் ஒரு வீடியோ அனுப்பி இருந்தேனே பார்த்தியோ?"
"எது?"
"இந்த  ------  நகைச்சுவை பற்றி.."
"அட,  அது நான்தான் உங்களுக்கே அனுப்பியிருந்தேன்... !"
"இல்லை, இல்லை... இது என் ஃபிரெண்ட்ஸ் க்ரூப்பில் வந்தது.."
(நீங்கள் அனுப்பியிருந்ததைப் பார்த்ததாகச் சொன்னால் ஏதோ கௌரவக்குறைச்சல் என்பது போல!)
"நானும் அதை இரண்டு மூன்று நாட்களுக்கு முன்னால் அனுப்பி இருந்தேனே..."
"நான் அதைப் பார்க்கவில்லை"

இது எப்படி இருக்கு?


Image result for whatsapp group images 
சிலசமயம் தாங்க முடியாமல் நீங்கள் அந்த க்ரூப்பை விட்டு வெளியே வந்தால் போதும்,  'அட்மின்' உங்களிடம் ஓரிருமுறை பேசுவார்.  சில விளக்கங்கள்... சமாதானங்கள் இருக்கும்.  மறுபடியும் மறுநாள் காலை பார்க்கும்போது நீங்கள் அந்த க்ரூப்பில் மறுபடி சேர்க்கப்பட்டிருப்பீர்கள்.  இப்போது உங்களுக்கு ஞானம் வந்திருந்தால் க்ரூப்பில் நீங்கள் ஒரு சைலண்ட் ஸ்பெக்ட்டேட்டராக இருக்கலாம்!

Image result for whatsapp group images

53 கருத்துகள்:

  1. உண்மை நண்பரே சரியானபடி அலசி தகவல்களை தந்து இருக்கின்றீர்கள் வியாபாரத் தந்திரத்துக்கு நாமெல்லாம் பலியாகிக் கொண்டு இருப்பதே காரணம்.

    பதிலளிநீக்கு
  2. நீங்கள் சொல்வதெல்லாம் உண்மை. அனுபவ மொழிகளின்றி வேறில்லை. அதெல்லாம் சரி. இந்த அனுபவங்களை எல்லாம் கண்டறிய எத்தனை நாட்கள் செலவு செய்தீர்களோ தெரியவில்லை.

    பதிலளிநீக்கு
  3. இதில் மாட்டிக் கொள்ளாமல் நான் தப்பித்து விட்டேன் :)

    பதிலளிநீக்கு
  4. ஆ.....என்ன ஆச்சர்யம்.. இதில் வாட்ஸ் ஆப் என்று வரும் இடங்களில் எல்லாம் பிளாக் (வலைப்பூ) என்று மாற்றிப் போட்டாலும் சரியாகவே வருகிறதே!!!!!! இல்லை ஒருவேளை எனக்கு மட்டும்தான் அப்படி தோன்றுகிறதா??!!!(;-)


    http://concurrentmusingsofahumanbeing.blogspot.com/2016/02/blog-post_15.html

    பதிலளிநீக்கு
  5. சிலநேரங்களில் வாட்ஸாப்பில் அவனுக்கு வந்த ஓரிரு காணொளிகளை என் மகன் எனக்கு மெயிலில் அனுப்புவான் எனக்குப்பிடித்திருந்தால் நான் சில நேரங்களில் பகிர்வில் பதிவேன் அப்போது ஏற்கனவே பார்த்ததாக சில பின்னூட்டங்கள் வரும் எனக்கு அது ஏமாற்றமாக இருக்கும் / நல்ல வேளை எனக்கு ஆண்ட்ராய்ட் போன் இல்லை. என் மனைவியிடம் உண்டு ஆனால் அவள் ஒரு சைலண்ட் மெம்பர்

    பதிலளிநீக்கு
  6. நன்றி நண்பர் கில்லர்ஜி. பாஸிட்டிவ் பக்கம் இதில் என்னவென்றால் இதில் வரும் வாட்சாப் கால் ஒரு உபயோகமான ஒன்று! வெளிநாட்டில் உள்ளவர்களோடு கூட கஷ்டமில்லாமல் பேசலாம்!

    பதிலளிநீக்கு
  7. வாங்க தமிழ் இளங்கோ ஸார்.. நான் இந்தத் தொலைபேசி வாங்கி ஒன்றரை ஆண்டுகள் ஆகின்றன. கஷ்டப்பட்டு கற்றுக் கொள்ள வேண்டாம். இத்தனை நாட்களில் ஒன்றொன்றாய் பழகி, அனுபவத்தில் வந்ததுதான்!

    பதிலளிநீக்கு
  8. ஐயையோ.. அப்படி வேறு வழி இருக்கிறதா... கெட்டது போங்க! நன்றி ik Way.

    பதிலளிநீக்கு
  9. ஹா... ஹா... ஹா... நானே அப்படிச் சொல்லி இருக்கிறேன். நன்றி ஜி எம் பி சார்! ஒரு புதிய காணொளி இந்தக் கட்செவி அஞ்சலில் வந்தால் எல்லோருக்கும் எப்படியோ பரவி விடுகிறது.

    பதிலளிநீக்கு
  10. வெரி வெரி லிமிடெட் குடும்ப உறுப்பினர்களோடு பேசுவது + தகவல்களைப் பகிர்வதோடு சரி.

    மற்ற எல்லாக் குப்பைகளையும் திறந்துகூடப் பார்க்காமலேயே டிலீட் செய்துவிடுவது என் வழக்கம். அந்த அளவுக்கு நம்மை வெறுப்பேற்றியுள்ளார்கள்.

    எப்படித்தான் நம் நம்பரும் இணைப்பும் இவர்களுக்குக் கிடைக்கிறதோ? எதற்காகவோ நம்மிடம் கேட்டு வாங்கிய நம்பரை வேறு எதற்கோ மிஸ்யூஸ் செய்துகொள்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க வைகோ ஸார்..

      ரொம்பவே வெறுத்துப் போயிருக்கீங்க போல... ஆள் தெரியாத நம்பர்களிலிருந்து வாட்ஸாப் வந்தால் நான் திறப்பதே இல்லை!

      நீக்கு
  11. குரூப் எல்லாம் இல்லை. அவ்வப்போது பயன் படுத்துவது தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி சகோதரி உமையாள் காயத்ரி.

      நீக்கு
  12. எனக்கு இந்த தொந்தரவே இல்லை. என்னிடம் ஆண்ட்ராய்டு அலைபேசி இல்லை! இருப்பதில் எந்த வசதியும் - காமிரா உட்பட - இல்லை! :) இது நாள் வரை இத் தொல்லைகளிலிருந்து தப்பித்துக் கொண்டுள்ளேன்!

    சுவையான பகிர்வு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பரவாயில்லையே வெங்கட்.. எப்படி இப்படி? வாங்குவதற்கு சந்தர்ப்பம் வரவில்லையா? இல்லை,வேண்டாம் என்ற மன உறுதியுடனே இருக்கிறீர்களா? பாராட்டுகள் வெங்கட்.

      நீக்கு
  13. வாங்கக் கூடாது என்றில்லை ஸ்ரீராம். பயன்படுத்த முடியாத சூழல்.....!

    பதிலளிநீக்கு
  14. 'watsup' என்று கேட்கலாம்னு வந்தால் 'வாட்ஸ் அப்' இப்டி டென்ஷன எகிற வச்சுருக்கே.. :)

    சரியான, நல்ல அலசல் ஸ்ரீராம்.
    த.ம.+1

    பதிலளிநீக்கு
  15. நல்ல அலசல்....
    நாங்க கொஞ்சம் சிறப்பா உபயோகப்படுத்த முற்ச்சிக்கிறோம் ...ஆம் பசங்க பள்ளி செல்ல வில்லை ..என்றால் அந்த குறிப்புகளை எல்லாம் whats up images ஆக நண்பர்கள் பகிர்வார்கள் ....

    பதிலளிநீக்கு
  16. அந்தப் பரமபிதா இவர்களை மன்னிக்கட்டும்! //////
    அவரும் மன்னிக்கமாட்டார்..
    ஒரு குரூப்பில் நான் பட்ட பாடு..
    எப்படித்தான் யோசிப்பார்களோ? 5 வருடம் முன் உள்ள செய்தியெல்லாம் இரவு 12 மணிக்கு மேல் போடுவார்கள்...டொக் டொக் ந்னு சத்தம் வரும் ..போனை சைலண்டிலும் போட முடியாது....எப்படியோ வெளியே வந்தேன்..ஷ்..அப்பா...

    பதிலளிநீக்கு
  17. சைலன்ட் மெம்பர்கள் படும் துன்பங்களை ஆசாகாய் எடுத்து சொல்லி விட்டீர்கள். குருப்பில் மெசேஜ் அனுப்பும் போது , அதுவும் குடும்ப குருப்பயுள் இருக்கும் போது நாம் நம் எண்ணங்களை சர்வ ஜாக்கிரதையாக வெளிப்படுத்த வேண்டும். இல்லையெனில் பலரின் அறிவுரைகளை கேட்கத் தயாராயிருக்க வேண்டும்.
    வாட்ஸ் அப் குருப்ப் பற்றி நீங்கள் குறிப்பிட்டது அத்தனையும் நடை முறையில் இருக்கிறது. நானும் ஒன்றிரண்டு குருப்களில் மாட்டிக் கொண்டு முழித்துக் கொண்டு தானிருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  18. இந்தப் பதிவை வாசிக்கும்போதே, இது வலைப்பதிவுகள், ஃபேஸ்புக் பதிவுகள் என இரண்டுக்குமே ஒத்து வருகிறதே என்று நினைத்துக் கொண்டே வாசித்தேன். மேலே ஒருவர் அதையே சொல்லியுமிருக்கிறார்!!

    என்னிடம் ஸ்மார்ட் ஃபோன் இல்லாததால், வாட்ஸப்பும் இல்லை. இந்தத் தொல்லைகளும் இல்லை!! :-) மற்றவர்கள் இந்த ஸ்மார்ட் ஃபோன் மற்றும் வாட்ஸப்பால் அனுபவிப்பது கண்டு அடைந்த ஞானோதயம்!! :-)

    என் உறவு/நட்பு/வகுப்பு வட்டாரங்களில் “வாட்ஸப் இல்லாத அதிசய ஜீவி” என்று பிரபலமாகிவிட்டதால், முக்கியமான தகவல்களை (மட்டுமே) எனக்கு மெயிலில் அல்லது ஃபோனில் தெரிவித்து விடுவார்கள்!!

    ரொம்ப வசதியாப் போச்சு என்று இருக்கிறேன் என்று சொல்ல நினைத்தாலும், கணவரின் அலுவலகத்தில் (என் மிரட்டலால்) கணவர் மட்டுமே வாட்ஸப் இல்லா அதிசய ஜீவியாக இருப்பதால், மேலாளர் உடனுக்குடன் தொடர்பு கொள்ள முடியவில்லை, குழுமத்திற்கு மொத்தமாக செய்தி அனுப்ப முடியவில்லை என்று கடுப்படிப்பதால்... இது எதுவரை தாக்குப் பிடிக்குமென்று தெரியவில்லை!! :-(

    பதிலளிநீக்கு
  19. ஹாஹாஹாஹா, இந்தத் தொல்லைகள் எல்லாம் இல்லாமல் இருக்கும் ஒரே பேர்வழி நான் தான் என்று நினைத்தால் வெங்கட்டும், ஹூசைனம்மாவும் போட்டிக்கு வராங்களே! :))))

    பதிலளிநீக்கு
  20. வலைப்பதிவுகளை எழுதி வந்தாலும் இப்படியெல்லாம் யாரையும் தொந்திரவு செய்ததும் இல்லை! யாரும் என்னைத் தொந்திரவு செய்ததும் இல்லை. முகநூலில் ஒரு நாளைக்கு மொத்தமாய் இரண்டு மணி நேரம் இருந்தால் பெரிய விஷயம்! :)))) முகநூலோ, வலைப்பக்கமோ சில நாட்களுக்குத் திறக்கவே அடம் பிடிக்கும். அப்பாடானு நிம்மதியா இருக்கும்.:)

    பதிலளிநீக்கு
  21. அத்தனையும் உண்மை.அருமையான அலசல்.

    பதிலளிநீக்கு
  22. ஸ்ரீராம் சார், இருங்க நான் இருக்கிற நாலைஞ்சு குரூப்புக்கு உங்க நம்பரை அனுப்பி சேர்த்த சொல்றேன். நிமிடத்துக்கு இருநூறு செய்திகள் மட்டுமே பகிரப்படும் குரூப்பு அது.. ஹிஹிஹி

    பதிலளிநீக்கு
  23. http://simulationsjottings.blogspot.in/2015/10/hey-there-whatsapp-is-using-me.html

    பதிலளிநீக்கு
  24. நான் ஐபோன் வைத்து இருக்கிறேன்...வாட்ஸ் அப்பும் இருக்கிறது ஆனால் நீங்கள் சொன்னபடி தொந்தரவு எனக்கு இல்லை காரணம் என் போன் நம்பர் நெருங்கியவர்களுக்கு மட்டுமே தெரியும் அதுவும் அவசியம் என்றால்தான் அவர்கள் அதில் கால் பண்ணுவார்கள் அதிலும் வீட்டுக்கு அருகில் இருக்கும் நண்பர்கள் அழைத்தால் மட்டுமே உடனே எடுத்து பேசுவேன் மற்றவர்கள் யாராக இருந்தாலும் அப்பா மற்றும் சகோதரகள் அழைத்தாலும் அப்போது ப்ரியாக இருந்து மனது இருந்தால் மட்டுமே பேசுவேன் இல்லையென்றால் நிதானமாக நேரம் கிடைத்தால்தான் பேசுவேன் அதனால் யாரும் அநாவசியமாக எனக்கு வாட்ஸ் அப் மெஜேஜ் அனுப்புவதில்லை அதனால் அது எனக்குதொந்தரவாக இல்லை மேலும் எனது போனில் பதிவு செய்யாத எந்த போனில் இருந்து அழைப்பு வந்தாலும் எடுப்பதில்லை. ஸ்மார்ட் போனாக இருந்தாலும் அதை நாம் எப்படி பயன்படுட்துகிறோம் என்பதை பொருத்தே நமக்கு பிரச்சனைகள் தோன்றும்

    பதிலளிநீக்கு

  25. வாட்ஸ் அப்பால் என்னென்ன பிரச்சனைகள் இந்தியர்களுக்கு ஏற்படுகிறது என்பது பற்றி உங்கள் பதிவின் மூலம் விரிவாக அறிந்து கொள்ள முடிந்தது..அருமை

    பதிலளிநீக்கு
  26. ஆண்ட்ராய்ட் போன் (நீண்ட கால தள்ளிப்போடலுக்குப் பின் சமீபத்தில்தான் வாங்கினேன்).4 மாதங்கள்தான் ஆகிறது. அதற்குள் ஒன்றிரண்டு க்ருப்புகளில் இணைக்கப்பட்டிருக்க டேட்டா பேலன்சை கபளீகரம் செய்துவிட்டது. இத்தனைக்கும் அவற்றை நான் பார்ப்பதில்லை.,எந்த க்ரூப்பிலும் நானாக சேரவில்லை. வேறு அவசர இணைய வேலைக்காக பயன்படுத்தும்போது மெசெஜ்களும் வீடியோக்களும் குவிந்து விடுகின்றன. தாங்க முடியாமல் ஒரு ஆசிரியர் இயக்க குருப்பில் இருந்துவெளியே வந்துவிட்டேன்.

    பதிலளிநீக்கு
  27. நன்றி அனுராதா பிரேம். நீங்கள் சொல்வது போல உபயோகப்படுத்துவோரும் உண்டு. சில மாணவர்களே கூட அப்படிப்பட்ட ஆப்ஸ்களை தயாரித்திருக்கின்றனர். சென்னையின் பெருவெள்ள சமயத்தில் ரொம்ப உதவியது இந்த வாட்சாப்!

    பதிலளிநீக்கு
  28. ஹா.... ஹா... ஹா... நன்றி மீரா செல்வக்குமார்.

    பதிலளிநீக்கு
  29. நன்றி ராஜலக்ஷ்மி பரமசிவம் மேடம். உள்ளே தொடரவும் முடியாது,. வெளியே வரவும் முடியாது. சில இக்கட்டான க்ரூப்கள்!

    பதிலளிநீக்கு
  30. நன்றி ஹுசைனம்மா. உத்தமமான காரியம். ஆனால் டெக்னாலஜி முன்னேறும்போது நம்மால் அதை வாங்காமல் இருக்க முடிவதுமில்லை!

    பதிலளிநீக்கு
  31. நன்றி கீதா சாம்பசிவம் மேடம். போட்டிக்கு இன்னொருவரும் இருக்கிறார். உங்கள் பெயர்தான்! எங்கோ டூரில் இருக்கிறார் போலும். ஆளையே காணோம்!

    பதிலளிநீக்கு
  32. வலைப்பதிவு தொந்திரவு எல்லாம் ஒன்றுமில்லை கீதா மேடம் அது சரியாக வராது!!

    பதிலளிநீக்கு
  33. நன்றி மதுரைத் தமிழன். கட்டுப்பாடாய் இருக்கிறீர்கள் சரி. ஆனால் உறவுகள் பேசினால் கூட எடுக்க மாட்டேன் என்று சொல்வது....!

    பதிலளிநீக்கு
  34. நன்றி டி என் முரளிதரன். நம்ம கருத்துக்கு ஆதரவாய் உங்கள் குரல்!

    பதிலளிநீக்கு
  35. ஸ்ரீராம்! ஹாஹ்ஹ் நாங்கள் இருவருமே தப்பித்துவிட்டோம்...ஹிஹி...வாட்ஸப்பில் இல்லை. முகநூல் பக்கம் கூட இப்போது வர இயலவில்லை.

    கீதா: துளசியாவது ப்ளாக் பார்க்க வேண்டும் என்று (இப்போதுள்ளதிலும் பார்க்க முடியும் ஆனால் பல சமயங்களில் அது தொல்லை பண்ணுவதாகச் சொன்னார்.) ஒரு ஸ்மார்ட் வாங்கலாமா என்று பலமாதங்கள் யோசித்து வருகின்றார். ஆனால் அவரால் மெயில் செக் பண்ணவோ இல்லை ப்ளார் பார்க்கவோ கொஞ்சம் கஷ்டம்..வீட்டிலிருந்தால் என்பதால் யோசிக்கின்றார். என்னிடம் இருப்பது மிக மிகப் பழமையான ஒன்று. நான் வெளிநாட்டவருடன் பேசுவது எல்லாம் ஸ்கைப் மூலம்தான். இல்லை அவர்கள் ஃபோனில் கூப்பிடுவார்கள். மெயில்தான் இப்போதும். இல்லை மெசேஜஸ் ஸ்கைப்பில். என்னால் மேனேஜ் செய்ய முடியாது என்பதால்தான் அதில் எல்லாம் இல்லை. இப்போதே நேரம் போதவில்லை...

    ரொம்பவே ரசித்தேன் பதிவை....

    பதிலளிநீக்கு
  36. நன்றி கீதா சாம்பசிவம் மேடம். போட்டிக்கு இன்னொருவரும் இருக்கிறார். உங்கள் பெயர்தான்! எங்கோ டூரில் இருக்கிறார் போலும். ஆளையே காணோம்!// அஹஹஹ் என்னைத்தானே சொல்லியிருக்கிறீர்கள் ஸ்ரீராம்??!!!

    நான் தான் எனது பதிவில் சொல்லியிருந்தேனே பின் குறிப்பாக. கல்யாணம் உறவினர் வருகை அதனால் வலைப்பக்கம் வருவது சிரமம் என்று நேற்றுவரை செம டைட். இன்றுதான் மெதுவாக வலைப்பக்கம் வரத் தொடங்கியிருக்கின்றேன்/றோம். துளசியும் மாடல் எக்ஸாம் அது இது என்று பிசி.

    பதிலளிநீக்கு
  37. நன்றி கீதா...//நான் தான் எனது பதிவில் சொல்லியிருந்தேனே பின் குறிப்பாக. கல்யாணம் உறவினர் வருகை அதனால் வலைப்பக்கம் வருவது சிரமம் என்று//

    ஸாரி, மறந்து விட்டேன்! போட்டிக்கு உங்கள் பெயரில் இன்னொருவர் என்று சொன்னது உங்களைத்தான் என்று சொல்லவும் வேண்டுமோ! நன்றி வருகைக்கும், கருத்துக்கும், வாக்குக்கும்!

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!