திங்கள், 7 நவம்பர், 2016

"திங்க"க்கிழமை 161107 :: தேங்காய் சீயான் - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி
தேங்காய் சீயன்

இது என்னடா சீயன் அப்படின்னு நினைக்காதீங்க. இது எங்கள் வீட்டுப் பழக்கம். சீயனை நான் எங்கள் வீட்டில், கிருஷ்ணஜெயந்திக்கும் சிராத்தத்தின்போதும்தான் செய்துபார்த்திருக்கிறேன். சின்ன வயதில் கிருஷ்ணஜெயந்தி பட்சணங்கள் மூக்கைத் துளைக்கும்.. ஆனால் ஒண்ணும் தராமல் தூங்கச் சொல்லிவிடுவார்கள். அப்புறம் எல்லா பூஜையும் முடித்து, கிட்டத்தட்ட நடுநிசியில் எழுப்பி எங்களுக்கு எல்லாப் பட்சணங்களையும் பிரசாதமாகக் கொடுப்பார்கள். ‘நாங்க என்ன பெரியவங்களா.. கடவுளுக்குப் படைக்கும்வரை உணவை எண்ணி ஆசைப்படாமல் இருப்பதற்கு. சாயந்திரம் ஸ்கூல் விட்டு வந்தவுடனேயே பட்சணங்களின் வாசனை மூக்கைத் துளைக்கும். அதுவே பயங்கர மகிழ்ச்சியாக இருக்கும். அப்புறம் தூங்கும் வரை அதே நினைப்புதான். என் மாமனார் வீட்டுல, 10 மணிக்குள்ளாற பிரசாதம் கிடைத்துவிடும். (இதுவே லேட்டுதானே… யார் கிருஷ்ணனை நடுநிசியில் பிறக்கச்சொன்னார்கள். ஓ.. அது மாறிடுத்துன்னா கதையே மாறிடுமே.. எப்படி குழந்தையை இடம் மாற்றுவது?)
இந்தச் சீயனை, செட்டிநாட்டில், சீயம் அல்லது சுகியன் என்று சொல்வார்கள். பருப்பு வெல்லம் சேர்த்து அவர்கள் சுகியன் செய்வார்கள். கேரளா கடைகளில், பயறு, வெல்லம் சேர்த்து உள்ள ஸாஃப்டா இருக்கிற சுகியனை (இனிப்பு போண்டா என்று சொல்வார்கள் என்று நினைக்கிறேன்.. தில்லையகத்து…. உதவிக்கு வாருங்கள்) சாப்பிட்டிருக்கிறேன். என்ன இருந்தாலும் தேங்காய் சீயனுக்கு இணையாகாது (பல்லு கொஞ்சம் ஸ்டிராங்கா இருப்பவர்களுக்கு). அதுவும் வெளியில் கொஞ்சமாக தேங்காய் வெல்லம் சேர்ந்த பாகு வந்துகொண்டிருக்கும்.. எழுதும்போதே நாக்குக்கு டேஸ்ட் தெரிய ஆரம்பிச்சுடுச்சு. சீயன், தேங்காய் போளி எல்லாம் ஒரே குடும்பம் (தேங்காய் போளி டிரெடிஷனாச் செய்யறது. கர்நாடகாவுல செய்யற மாதிரி ஈஷிச் செய்யறது இல்ல. அது தோசை ரோஸ்ட் மாதிரி இருக்கும். நம்ம ஊர்லதான் பூரணம் வைத்து, அதன் மேல் மாவு வைத்து சப்பாத்திமாதிரி இட்டு அல்லது கையால் தட்டி, நல்லா எண்ணெய் விட்டு தேங்காய் போளி செய்வார்கள்). 
தேங்காய் சீயன் எப்படிச் செய்யறதுன்னு பார்ப்போம்.

ஒரு டம்ளர் துருவின தேங்காய் எடுத்துக்கொள்ளுங்கள்.  கால் டம்ளர் வெல்லத்தைக் கடாயில் விட்டு, அத்துடன் கால் டம்ளருக்கும் கொஞ்சம் குறைவாக தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும். நல்லா பாகுபதம் வரணும். கரண்டில எடுத்தா பாகு பதம் தெரியணும். பாகாக ஆகலைனா உருண்டை பிடிக்க வராது. இங்கல்லாம், நல்ல, குப்பைகள் இல்லாத கோலாப்பூர் வெல்லம் கிடைக்கும். வெல்லத்தின் தரம் குறைவாக இருந்தால், கொஞ்சம் சூடான உடனேயே, வெல்லஜலத்தை வடிகட்டி, மீண்டும் கடாயில் விட்டு பாகுபதத்திற்குக் கொண்டுவரவேண்டியதுதான். (வெல்லத்துல உள்ள அழுக்கை எடுக்க, சூடான வெல்ல ஜலத்தில் கொஞ்சம் பால் விட்டால் அழுக்கு ஓரத்துக்கு வந்துடும்னுலாம் சொல்லி உங்களைப் படுத்த விரும்பவில்லை) பாகு காய்ச்சினபின், அதில் துருவின தேங்காய் போட்டுக் கிளறவும். இத்துடன் ஏலப்பொடி சேர்க்கவும். கெட்டியானபின், அடுப்பை அணைத்துவிடலாம். நல்லா ஆறினபின்பு, சின்னச் சின்னதாக உருண்டை பிடிக்கலாம். இந்த உருண்டைகளை நல்ல தாம்பாளத்தில் வைத்துவிடவும்.
அடுப்பில் எண்ணெயைக் காயவைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் ½ டம்ளர் மைதா, 1 ஸ்பூன் அரிசி மாவு, சொட்டு மஞ்சள் பொடி இவற்றைத் தண்ணீர் விட்டுக் கெட்டியாகக் கரைக்கவும். பஜ்ஜி மாவு பதம்.  இது ரொம்பக் கெட்டியா இருந்ததுனா, கொழக்கட்டை பண்ணுவதுபோல், தேங்காய் வெல்ல உருண்டையில் மாவை நாம ஒட்டும்படி ஆகிடும். ரொம்ப ஜலமா இருந்ததுனா, மாவு பூசினமாதிரியே தெரியாது. 
இப்போ எண்ணெய் காய்ந்திருக்கும். ஒரு உருண்டையை எடுத்து, மாவுல முக்கி எண்ணெயில போடவேண்டியதுதான். எண்ணெய் தெரிக்காமப் பார்த்துக்கணும்.  ஒரு சின்ன டம்ளருக்கு சுமார் 11 சீயன் வரும்).  செய்வது சுலபம். சாப்பிட ரொம்ப நல்லா இருக்கும். ஓடு மட்டும் கொஞ்சம் கட்டியா இருக்கறமாதிரி இருக்கும். அதுவும் தேங்காய்ப்பூரணமும் சேர்த்துச் சாப்பிட அட்டஹாசமா இருக்கும்.

பின்குறிப்பு – படத்துல இருக்கற மைதா தோசையப் பார்த்துட்டு என்ன காம்பினேஷன் இது என்று நினைக்க வேண்டாம். ஒண்ணு டிபன். மற்றது அப்போ அப்போ சாப்பிட.  யாராவது ஒருத்தராவது, சீயனை, சீயான் என்று படித்து நடிகர் விக்ரமை நினைவுகூர்ந்தால் நான் பொறுப்பல்ல.


அன்புடன்,

நெல்லைத்தமிழன்.

39 கருத்துகள்:

 1. மேல்மாவு செய்முறையே தப்பு! தவளை, தஞ்சாவூரு மாப்பிள்ளை! :))))))

  பதிலளிநீக்கு
 2. ஒவ்வொரு வாரமும் இப்படி படம் போட்டு அசத்தறீங்களே... தொடருங்கள்....

  பதிலளிநீக்கு
 3. மறந்து போன ஒரு இனிப்பு இப்ப ஞாபகபடுத்திட்டீங்களே நெல்லைத்தமிழன் கொஞ்சம் அனுப்பிவைக்க கூடாதா எனக்கு?

  பதிலளிநீக்கு
 4. நண்பர் திரு. நெல்லைத்தமிழன் அசத்துகின்றார்.

  பதிலளிநீக்கு
 5. இதனை நாங்களும் செட்டிநாட்டு ஆசாமிகள் போல ’சீயம்’ என்றுதான் சொல்லுவது உண்டு.

  >>>>>

  பதிலளிநீக்கு
 6. சீ என்று சொல்ல வைக்காது இந்த சீயன் :)

  பதிலளிநீக்கு
 7. சீயம், தேங்காய் போளி எல்லாம் ஒரே குடும்பம் (தேங்காய் போளி டிரெடிஷனாச் செய்யறது. கர்நாடகாவுல செய்யற மாதிரி ஈஷிச் செய்யறது இல்ல. அது தோசை ரோஸ்ட் மாதிரி இருக்கும். நம்ம ஊர்லதான் பூரணம் வைத்து, அதன் மேல் மாவு வைத்து சப்பாத்திமாதிரி இட்டு அல்லது கையால் தட்டி, நல்லா எண்ணெய் விட்டு தேங்காய் போளி செய்வார்கள்).

  வர்ணனைகள் எக்ஸலண்ட். படிக்கும்போதே நாக்குக்கு டேஸ்ட் தெரிய ஆரம்பிச்சுடுச்சு. :)

  பதிலளிநீக்கு
 8. 'நன்றி ஸ்ரீராம் வெளியிட்டமைக்கு. அப்புறம் வருகிறேன்.

  கீதா மேடம் - செல்லாது..செல்லாது (நாட்டாமை பாணியில் படிக்கவும்). என்ன தப்பு என்று சொல்லுங்கள். உங்கள் முறையில் உள்ள வித்தியாசத்தையும் சொல்லுங்கள். எவ்வளவு தப்போ, அவ்வளவு சீயன்'களை நான் தட்டிலிருந்து வாபஸ் பெற்றுக்கொள்கிறேன்.

  பதிலளிநீக்கு
 9. //இது எங்கள் வீட்டுப் பழக்கம். சீயத்தை நான் எங்கள் வீட்டில், கிருஷ்ணஜெயந்திக்கும் சிராத்தத்தின்போதும்தான் செய்துபார்த்திருக்கிறேன்.//

  நான் அன்று சிராத்த சமையல் பற்றிய என் பின்னூட்டத்தில் சீயம் என்று தவறாகக் குறிப்பிட்டுவிட்டேன்.

  எங்கள் அகத்து சிராத்தத்தில் செய்வது அதிரஸம் அல்லது சொஜ்ஜியப்பம் மட்டுமே.

  அன்றைய தினம் நாங்கள் சீயம் செய்வது இல்லை.

  பதிலளிநீக்கு
 10. //என்ன இருந்தாலும் தேங்காய் சீயனுக்கு இணையாகாது (பல்லு கொஞ்சம் ஸ்டிராங்கா இருப்பவர்களுக்கு). அதுவும் வெளியில் கொஞ்சமாக தேங்காய் வெல்லம் சேர்ந்த பாகு வந்துகொண்டிருக்கும்..//

  முதல் படத்தில் காட்டியுள்ள ’பூர்ணம்’ மட்டுமே எனக்குப் போதுமானது. அதை அப்படியே சாப்பிடுவதில் எனக்கு ‘பூர்ண திருப்தி’ ஏற்படுவது உண்டு.

  மாவில் சொப்பு செய்து, உள்ளே பூர்ணம் வைத்து, மீண்டும் வேகவிடும், பிள்ளையார் சதுர்த்தி கொழுக்கட்டைகளிலும் கூட எனக்கு அதிக விருப்பம் இருப்பது இல்லை.

  ஏலப்பொடி + தேங்காய் துருவல் கலந்த வெல்லப்பூரணத்தைத் தனியே, ஒரு டவரா நிறைய வாங்கி, ஸ்பூன் போட்டு சாப்பிடுவதில் தான் எனக்கு இஷ்டம் உண்டு.

  >>>>>

  பதிலளிநீக்கு
 11. http://gopu1949.blogspot.in/2014/04/vgk-13.html

  இதோ இந்த மேற்படி இணைப்பில் உள்ள முழு நீள நகைச்சுவைக் கதையின் பகுதி-5 ஐ மட்டுமாவது அவசரமாகப் படியுங்கோ. அதில் இந்த பூர்ணம் + பிள்ளையார் சதுர்த்தி கொழுக்கட்டைகள் பற்றிய படங்களும், செய்முறைக் குறிப்புகளும், மேலும் நகைச்சுவை கலந்து ஓர் கதாபாத்திரம் சொல்வது போலக் கொடுக்கப்பட்டுள்ளது.

  அதனைப் பார்க்கவோ படிக்கவோ சந்தர்ப்பம் கிடைப்பவர்கள் மட்டுமே பாக்கியசாலிகள் ஆவார்கள். :)))))

  பதிலளிநீக்கு
 12. நாக்கில் நீர் வரவழைக்கும் ’சீயம்’ பற்றிய படங்களுக்கும், செய்முறைக் குறிப்புகளுக்கும் பாராட்டுகள், வாழ்த்துகள், பகிர்வுக்கு நன்றிகள்.

  சீயம் செய்யும்போது, இனிப்பு போண்டா போல மேல் தோல் கெட்டியாக இருக்கவே கூடாது.

  என் பெரிய சம்பந்தி மாமி இதனை மிக அழகாகவும், அற்புதமாகவும், ருசியாகவும் செய்வார்கள். மேல் தோல் கெட்டியாக இல்லாமல் டிரான்ஸ்பரெண்ட் ஆக உள்ளே உள்ள சமாச்சாரங்கள் (செக்ஸியாக) வெளியே தெரிவதுபோலச் செய்வார்கள். அதனை மட்டும் நான் வாங்கி விரும்பிச் சாப்பிடுவது உண்டு.

  இந்தப் பதிவினை வெளியிட்டு, எங்கட ‘நெல்லைத் தமிழன்’ அவர்களின் புகழை உலகறியச் செய்து சிறப்பித்துள்ள, ‘எங்கள் ப்ளாக்’க்கும், குறிப்பாக எங்கட ‘ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம்’ அவர்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 13. என் அன்புக்கும், பிரியத்திற்கும் உரிய பெரிய சம்பந்தி அம்மாளின் புகைப்படமும், சமையலில் அவர்களின் தனித்தன்மைகளும், தனித்திறமைகளும் இதோ இந்தப்பதிவின் இறுதியில் என்னால் காட்டப்பட்டுள்ளன + சொல்லப்பட்டுள்ளன. http://gopu1949.blogspot.in/2015/01/19_4.html

  பதிலளிநீக்கு
 14. //கீதா மேடம் - செல்லாது..செல்லாது (நாட்டாமை பாணியில் படிக்கவும்). என்ன தப்பு என்று சொல்லுங்கள். //

  மாட்டேனே! ஹையா, ஜாலி!

  பதிலளிநீக்கு
 15. எங்கள் பிறந்த வீட்டில் பேச்சு வழக்கில் சுய்யம் என்பார்கள். உள்ளே வைப்பது தேங்காய் பூரணம்தான். புகுந்த வீட்டில் சுகியன் என்பார்கள். தேங்காய் பூரணம் அல்லது வெல்லமும் தேங்காயும் போட்ட காராமணி சுண்டல் உள்ளே வைக்கப்படும்.
  மேல் மாவு மைதா கிடையாது. உளுத்தம் மாவு.
  மேல் மாவு செய்முறை:
  ஒரு ஆழாக்கு/டம்ளர் உளுத்தம் பருப்பு
  பச்சரிசி ஒரு டேபிள் ஸ்பூன்
  உ.பருப்பையும் அரிசியையும் கழுவி ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். உ.பருப்பு நன்றாக ஊறியதும் வடிய வைத்து தண்ணீர் சேர்க்காமல் மிக்ஸியில்
  நன்றாக அரைக்கவும். பின்னர் தயாரித்து வைத்துள்ள பூரணத்தை இந்த மாவில் முக்கி எடுத்து காய்ந்து கொண்டிருக்கும் எண்ணெயில் பொரித்தெடுக்க வேண்டும்.

  அரைத்த மேல் மாவை ஒரு மணி நேரம் குளிர்சாதன பெட்டியில் வைத்து விட்டு பிறகு சுகியன் செய்தால் நன்றாக வரும்.

  பதிலளிநீக்கு
 16. http://geetha-sambasivam.blogspot.in

  அடுத்துத் தேங்காய் போளியா, தேங்காய்த் திரட்டுப்பாலா? :)))))

  பதிலளிநீக்கு
 17. அருமையான சுசியம்.

  நாங்கள் சொல்வது சுசியம் என்று தான்.
  நெல்லை தமிழன் செய்வது போல் , தேங்காய் சுசியம், கடலைப்பருப்பு சுசியம் இரண்டும் செய்வோம். இரண்டும் பிடிக்கும். உடலுக்கு கெடுதல் செய்யாது தேங்காய் சுசியம்.
  செய்முறை படங்கள் அருமை.
  இருவருக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 18. பொதுவாக வக்கணையாக ருசித்து ரஸித்துச் சாப்பிடும், என்னைப்போன்ற ஆண்களுக்கு, அதனை எவ்வாறு செய்கிறார்கள் என்ற பக்குவம் பற்றி ஒன்றுமே தெரியாது.

  இவற்றை மிகப் பக்குவமாகவும் ருசியாகவும் செய்யத்தெரிந்துள்ள பெண்களில், என் மனைவி உள்பட பலருக்கு, அதனை பக்குவமாக எழுத்தில் வடித்துத்தரத் தெரியாது. Sequence wise பொறுமையாக எடுத்துச்சொல்லவும்கூடத் தெரியாது.

  பெண்களில் சிலருக்கு இவற்றையெல்லாம் செய்யத்தெரியாது போனாலும், பிறர் செய்யும் அவற்றைப் பற்றி கேட்டு, ஏதோ அரைகுறையாகக் கொஞ்சம் தெரிந்துகொண்டு, ரெஸிப்பி என்ற பெயரில், எங்கெங்கோ தேடிப்பிடித்து எடுத்த படங்களுடன், பதிவாக வெளியிட்டு, பெருமை பட்டுக்கொள்ள மட்டுமே தெரியும்.

  இதிலுள்ள உண்மையான, பரம இரகசியங்களாகிய இவையெல்லாமே, வாசகனும், தீனிப்பண்டாரமுமாகிய எனக்கு மிக நன்றாகவே தெரியும்.

  டேஸ்டான + ரிச்சான சமையல் செய்வதிலும், அதனை மிக அழகாக பதிவிடுவதிலும் உண்மையிலேயே மிகப்பிரபலமானவர், எனக்குத் தெரிந்து எங்கள் ஊர்காரரான திருமதி. ராதா பாலு மேடம் ஒருவர் மட்டுமே. இவர்களின் வக்கணையான சமையல்களில் சிலவற்றை நன்கு ருசி பார்த்தும் உள்ளேன். இவர்களின் பதிவுகளைப் பார்த்து பிரமித்துப் போய் வியந்து போயும் உள்ளேன்.

  என்னைப்பொறுத்தவரை, திருச்சி திருமதி ராதா பாலு மேடம் அவர்களைத் தவிர, சமையல் விஷயத்தில் தங்களின் பதிவுகளில் பெருமை பீத்திக்கொள்ளும் மற்ற பதிவர்களெல்லாம் சும்மா ஜுஜுபி மட்டுமே.

  சகலகலாவல்லியான திருமதி ராதாபாலு பற்றி, படங்களுடன் மேலும் பல விஷயங்கள் அறிய இதோ இணைப்பு:

  http://gopu1949.blogspot.in/2015/02/3.html

  இவையெல்லாம் இவ்வாறு இருக்க, ’நெல்லைத் தமிழன்’ ஆகிய தாங்கள், திங்கட்கிழமை தோறும், இந்த வலைப்பதிவினில் சக்கை போடு போட ஆரம்பித்துள்ளீர்கள். உங்களுக்கு என் ஸ்பெஷல் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

  பதிலளிநீக்கு
 19. 'நன்றி வெங்கட். நன்றி கரந்தையார் அவர்களுக்கு. நன்றி DD. (எங்கயோ கேள்விப்பட்ட பேராயிடுதே.. சரி சரி. வலையுலக D D) கீதா மேடம் நல்லவேளை ஆசிரியை ஆகவில்லை. ஆகியிருந்தா, பரிட்சைப் பேப்பரைத் திருத்தாமல், ஒவ்வொரு கேள்விக்கும் தான் சரி என்று எண்ணுகிற விடைகளைத் தனித்தாளில் எழுதிக்கொண்டிருந்திருப்பார்கள்.

  பதிலளிநீக்கு
 20. அவர்கள் உண்மைகள் மதுரைத் தமிழன்- அதான் ரெசிப்பி இருக்கில்ல. எப்போயும் பண்ணற மாதிரி, நீங்களே செய்து சாப்பிட்டு நல்லா இருந்தா அங்கயும் கொடுத்து, ஒரு நாளாவது பூரிக்கட்டையிலிருந்து தப்பிச்சுக்கோங்க.

  பதிலளிநீக்கு
 21. கில்லர்ஜி - நன்றி.. ஊருக்குப் போயாச்சா (தேவகோட்டை).

  பகவான்'ஜி - நன்றி. கடிக்க முடியலைனா, பூரணம் மட்டும் சாப்டாலே நல்லா இருக்கும்.

  பதிலளிநீக்கு
 22. பானுமதி மேடம். நன்றி. மேல் மாவுக்கு நீங்கள் சொல்லியுள்ளது சரிதான். மேல்மாவு சமயத்தில் நீர்க்க ஆகிவிட்டால் குளிர்சாதனப் பெட்டியில் வைத்தால் நல்ல பதத்துக்கு வந்துவிடும்.

  பதிலளிநீக்கு
 23. கோமதி அரசு மேடம் - சுசியம் பெயர் கேட்டதில்லை. (சாப்பிட சுகமா இருக்கறதுனால சுகியன் என்று நினைச்சுக்க முடியுது) கடலைப் பருப்பு சீயன், வீட்டில் செய்ததில்லை. ஹாஸ்டலில் இருக்கும்போதும், கேரளத்தவர்கள் நடத்தும் தே'நீர்க்கடையிலும் சாப்பிட்டிருக்கிறேன். நன்றி.

  பதிலளிநீக்கு
 24. கோபு சார்.. உங்கள் விரிவான பல பின்னூட்டங்களுக்கு நன்றி.

  'செட்டிநாட்டு ஆசாமிகள் போல சீயம்' - பூவை புஷ்பம்னு சொல்லலாம். புய்ப்பம்னு சொல்லலாம். நீங்க சொல்ற மாதிரியும் சொல்லலாம் என்பதுதான் எனக்கு நினைவுக்கு வருது. என்ன பேருனா என்ன.. யாராகிலும் பண்ணித் தந்தால் போதும்.

  "படிக்கும்போதே நாக்குக்கு டேஸ்ட்" - எனக்குப் படிக்கும்போதே டேஸ்ட் வந்தால்தான் பண்ணுவேன். ஒவ்வொரு வேளைக்கும் சாப்பாட்டு மெனு சொல்லும்போது, எனக்குச் சாப்பிடும் ஆவல் வரவேணும். இல்லைனா பண்ணச்சொல்ல மாட்டேன். (இதுல்லாம் நல்லா ரசிச்சு வக்கணையா சாப்பிடறவங்களைத் தவிர வேறு யாருக்குத் தெரியும்?)

  சிராத்தத்தின்போது, தளிகை செய்பவர் (தவசிப்பிள்ளை என்பது நெல்லையின் சொல்வழக்கு. பரிசாரகர் என்பது எங்கள் வீட்டுவழக்கு) நம்மிடம் சாய்ஸ் கேட்டுடுவார். சொஜ்ஜியப்பம் பண்ணவா சீயன் இருக்கட்டுமா, அதிரசம் செய்யவா என்று.

  பூரணம் சாப்பிடுவதில் உங்களைப் போலவே எனக்குப் பூரண ஈடுபாடு. பாகு நல்லா முறுகலா இருந்ததுனா, இரண்டு வாரம் வரை குளிர்சாதனப் பெட்டியில் வைத்திருந்தாலும் அருமையா இருக்கும்.

  உங்கள் இடுகையை முன்னமேயே படித்திருந்தேன். சமயத்தில் அப்போதிருக்கும் ஆசையை வ.வ.ஸ்ரீயின்மேல் ஏற்றிவிட்டிருக்கிறீர்கள். அது சீயனாகட்டும், துபாய் பயணமாகட்டும் (Carrefour என்ற பெயர் missing. அங்குதான் வீட்டு மளிகைச்சாமான்'கள் வாங்கியிருப்பார்கள்), பெண்களைப் பற்றிய வர்ணனையாகட்டும்.

  சிறிய வயதில் மேல் தோல் கெட்டியாக இருப்பதாலும், அதைத் தாண்டி உள்ளே செல்லும்போது இனிப்பான பூரணம் கிடைப்பதாலும் எனக்குப் பிடித்திருந்தது. வயது ஏற ஏற, மேல்பகுதி சாஃப்ட்டா இருந்தா நல்லா இருக்குமே என்று தோணுகிறது. (எனக்கு பொரிவிளங்கா உருண்டை ரொம்பப் பிடிக்கும். அதைச் சுலபத்தில் கடித்துச் சாப்பிட முடியாது என்பதால். அதுதான் அதன் தனிச் சிறப்பு. ஆனால் இப்போ கடைகளில் விற்பவை, பயத்தமா லட்டு மாதிரி பொடிந்துவிடுகிறது. இதைப் பொருள்விளங்கா உருண்டை என்று சிலர் குறிப்பிடுகிறார்கள். வயதாகும்போது பல்லின் வலிமை குறைவதால் பல்லை டெஸ்ட் பண்ணும் இத்தகைய பட்சணங்களில் கொஞ்சம் ஆர்வம் குறைவது இயற்கைதான்)

  உங்கள் பெரிய சம்பந்தி அம்மாளின் சமையலை நீங்கள் புகழ்ந்துள்ளதை எப்போதோ படித்துள்ளேன். பாராட்டுவதன்மூலம், அவரின் சேவை (இடியாப்பம்) மாதா மாதம் உங்களைத் தேடிவருகிறது.

  திருமதி ராதா பாலு அவர்களின் பிளாக்கைத் தேடிக் கண்டுபிடித்துப் படித்திருக்கிறேன். உங்கள் பாராட்டு நியாயமானதுதான். ஆனால், பெரிய பெரிய ஜாம்பவான்களை நினைவில் கொண்டுவந்தால், நானெல்லாம் கத்துக்குட்டிதான். ஜெ, அரஸ், நடனம், ம.செ போன்ற ஆர்ட்டிஸ்டுகளை மனதில் வைத்துக்கொண்டிருந்தால் செல்வன் அநிருத்தின் படத்தை 'நீங்கள் ரசித்து எழுதமுடியுமா? அதுவேறு இது வேறு. அதனால்தான் நான் எழுதுவதையும் உங்களால் பாராட்ட முடிகிறது.

  உங்கள் பின்னூட்டங்களுக்கும் பாராட்டுக்கும் மிகுந்த நன்றி.

  பதிலளிநீக்கு
 25. நானே இதைப் பற்றி எழுதணும் என்றிருந்தேன் , வேறு விதமாக . நீங்கள் சொன்ன முறை எங்கள் பக்கமும் ( தஞ்சை )செய்வார்கள்

  பதிலளிநீக்கு
 26. "அடுத்துத் தேங்காய் போளியா, தேங்காய்த் திரட்டுப்பாலா? :)))))" - கீதா மேடம்.. ஏதோ நான் ஏகப்பட்ட ஐட்டங்களைச் செய்து ரொம்ப அனுபவப்பட்டவன்போல் நினைத்திருக்கிறீர்கள். ஏதோ எனக்குப் பிடித்ததை, என் ஹஸ்பண்டோட செய்முறை, இணையத்தில் படித்தது எல்லாவற்றையும் கலந்து கட்டி செய்துபார்க்கிறேன் (எது எனக்கு விருப்பமோ அதை). தேங்காய் போளி, தயிர் வடை இரண்டும் லிஸ்டுல இருக்கு. எப்போ பண்ணுகிற மூடு வரும் என்று தெரியவில்லை. சமீபத்துல ஒரு ப்ரொபஷனல் கிட்ட (மொத்தமா மிஷினில் சேவை தயாரித்து ஹோட்டல்களுக்கு அனுப்புபவரை) சேவை அவர் பாணியில் எப்படிப் பண்ணுவது என்று கற்றுக்கொண்டேன். வெறும் ஆர்வம்தான். மற்றவர் செய்து (ஹஸ்பண்ட்) ஹால்ல, டிவி பார்த்துண்டே சாப்பிடும் குதூகலம் வருமா?

  பதிலளிநீக்கு
 27. குறிப்பு அருமை!
  எங்கள் பக்கம் [தஞ்சை] மேல்மாவு நீங்கள் எழுதியது போலத்தானிருக்கும். சுழியன், சுகியன், தோப்பம், சீயம் என்று பல பெயர்கள் உண்டு. அது போல பூரணம் செய்முறைகளும் வித்தியாசமாக இருக்கும்!

  பதிலளிநீக்கு
 28. என் மனைவியும் செய்வாள் சுகியன் என்று சொல்வாள் யார் என்ன சொன்னாலும் உங்கள் தனி வழியில் நில்லுங்கள் நெ த.

  பதிலளிநீக்கு
 29. நான் சின்னவளாயிருக்கும் போது பெரியம்மா வீட்டில் இப்படி செய்து சாப்பிட்டிருக்கின்றேன்.எங்க பக்கம் கொழுக்கட்டைக்கு பூரணம் செய்தாலும் கொஞ்சம் நற்சிரகம் தான் சின்ன சீரகம் வறுத்து தூள் செய்து போடுவார்கள்.பயறு,வெல்லம் சேர்க்கும் பூரணத்திலும் அப்படித்தான்!சீரக வாசனையோட இனிப்புமாய் சாப்பிடவே நல்லா இருக்கும், பயறு,வெல்லாம் சேர்த்து செய்வதற்கு பயற்றுருண்டை எனவும் சொல்வார்கள். தனி தேங்காய்ப்பூவெல்லம் சேர்த்து மாவில் தோய்த்து பொரிக்கும் பலகாரம் பெயர் தெரியவில்லை, ஆனால் அங்கும் போண்டா,போளி எனும் பெயர் உண்டு!

  பதிலளிநீக்கு
 30. மனோ மேடம். தங்கள் பின்னூட்டத்துக்கு நன்றி

  பதிலளிநீக்கு
 31. ஜிஎம்பி ஐயா... நன்றி. என்ன பேர் சொன்னா என்ன. சாப்பிட நல்லாருந்தாச் சரி

  பதிலளிநீக்கு
 32. நன்றி நிஷா. நற்சீரகம்- அருமையான சொற் பிரயோகம்

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!