திங்கள், 28 நவம்பர், 2016

"திங்க"கிழமை 161028 :: மசாலா இட்லி ! அப்போ தோசை இப்போ இட்லி!



     தோசையில் செய்வது போல இட்லியிலும் செய்தால் என்ன என்று தோன்றியதும் அடுத்து அதையும் செய்து பார்த்து விட்டோம்.  பார்க்கத்தான் பார்த்தீர்களா?  சாப்பிடவில்லையா என்று கேட்காதீர்கள்!  நொடியில் காணாமல் போனது!
 
 
 
 
     இட்லிக்கு இது சரியாக வருமா என்கிற சந்தேகம் இருந்தது.  எனினும் முந்தைய தோசை அனுபவத்தில் இட்லிக்கு காரம் சற்று தூக்கலாகச் சேர்க்க முடிவு செய்தோம்.  ("இதெல்லாம் பழக்கப் படுத்தாதீங்க..  அப்புறம் சாதாரண இட்லியே சாப்பிட மாட்டாங்க பசங்க..." - பாஸ் )
 

 
 
     இன்றிரவு இட்லி என்றால் மற்ற சிற்றுண்டிகளுக்கு முன்னால் சற்று இளப்பமாகவே தோன்றும் எங்கள் வீட்டில்.  சரி,.. இட்லியில் நம் கைவரிசையைக் காண்பிப்போம் என்று களம் இறங்கினோம்!  (ம்ம்..  பெரிய ஜுனியர் விகடன், நக்கீரன் டீம் என்று மனதில் நினைப்பு)
 
 
  

 
 
 
  
 
     அதே போலத்தான், ஆனால் தக்காளி மிஸ்ஸிங்.  நீர்த்துப்போய் இட்லி சரியாக வராதோ என்று சந்தேகம்.  
 
 
 
 
 
     எனவே வெங்காயம், பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய் (சற்று அதிகமாகவே) பூண்டு சில பற்கள், உப்பு, அப்புறம் சற்று யோசித்து மசாலா பாக்கெட்டைப் பிரித்து அதிலிருந்து லவங்கப்பட்டை, பெருஞ்சீரகம், என்று ஓரிரண்டு பொருட்களை உதிர்த்துக் கொண்டோம்.
 

 
 
     ஒரு ஈட்டில் 24 இட்லிகள் வரும் என்பதால் அதற்கான மாவைத் தனியாக எடுத்து அந்த அளவில்தான் இதைத் தயார் செய்து கலந்தோம்.  தொட்டுக்கொள்ள எதுவும் தேவை இல்லை என்றாலும் பாஸ் எதற்கும் இருக்கட்டும் என்று ஒரு தக்காளி சட்னி செய்திருந்தார்.
 
 

 
 
     கலர்ஃபுல் மட்டுமல்ல, சுவையாகவும் இருந்தது என்பதற்கு உடனே காலியான இட்லிகள் சாட்சி!  எப்போதும் நான்கு அல்லது ஐந்து இட்லிகளை மட்டும் வைத்துக் கொண்டு பத்து நிமிடம் சாப்பிடும் இளையவன் "நான்கு இட்லி உள்ளே போன வேகமே தெரியலையே.." என்று சிலாகித்தான்.  
 
 
     
     சாதாரணமாக அவனிடமிருந்து அப்படி கமெண்ட் கிடைக்காது!  நொடியில் காலியாகி வெற்றுடலாகக் காட்சியளித்த இட்லித் தட்டுகளை ஏக்கமாகப் பார்த்தபடி இருந்தன நான்கு குழந்தைகள்.  (என் மகன்கள் இருவர், அண்ணன் மகன் ஒருவன், அப்புறம் நான்...  ஹிஹிஹி)
 
 
     24 இட்லிகள் இட்டதும் என்ன ஆச்சு என்றால் கொஞ்சம் இந்த "ஸ்பெஷல் மாவு" ( ! ! ) மிஞ்சியது.  குட்டி இட்லி இடலாமா என்றால் குக்கர் மூடாமல் மக்கர் செய்ய, தனி குக்கரில் வைத்து விடலாம் என்று முடிவெடுத்து, தனிக்குக்கரில் இட்லித் தட்டில் வைக்காமல் அந்த மாவை அப்படியே ஒரு குட்டி பேசினில் மொத்தமாகக் கொட்டினோம்.  
 
 
 
 
 
     அதில் குடைமிளகாய், சின்ன வெங்காயம், கொத்துமல்லி, சின்ன தக்காளியில் பாதி ஆகியவற்றை பொடியாக நறுக்கிப் போட்டுக் கிளறி மூடி குக்கரில் வைத்தோம்.  இறக்கி வெளியே எடுத்து கேக் போல துண்டங்களாக்கிச் சாப்பிடலாம் என்று ஐடியா!  ஆனால் வழக்கமான இட்லி போலவே 14 நிமிடங்கள் வைத்தது நாங்கள் செய்த தவறு.  பேசின் என்பதால் கொஞ்சம் நேரம் கூடுதலாக வைத்திருந்திருக்க வேண்டும்.
 
 

 
 
     எனவே எடுத்துக் பார்த்தபோது கேக் சரியாக வேகாமல் இருக்க, அதை ஒரு வாணலியில் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஊற்றி அதில் இதை போட்டு லேசாகக் கிளறி இறக்கி நல்லெண்ணெய் மேலாகத் தடவிச் சாப்பிட்டால்...
 
 

 
 
     முன்னர் சாப்பிட்ட இட்லியைத் தோற்கடித்தது இது!
 
 



     எனவே அடுத்த தரம் இட்லி வார்க்கும்போது இந்த மாதிரிக்கு கலவை செய்த பின் அதில் குடைமிளகாய், வெங்காயம், ஆகியவற்றைத் துருவிச் சேர்க்க முடிவு.  

22 கருத்துகள்:

  1. ஆகா
    உடனே சாப்பிட்டுப்பார்க்க ஆவல் கூடுகிறது நண்பரே
    தம +1

    பதிலளிநீக்கு
  2. சோதனை மேல் சோதனை! :) இது சோகமாக பாட வேண்டியதில்லை. எத்தனை வித சோதனைகள் செய்து பார்க்கிறீர்கள்... பாராட்டுகள். இட்லி பார்க்க நன்றாகவே இருக்கிறது. சாப்பிட்டுப் பார்த்தால் தான் நல்லது - அடுத்த பயணத்தில் தமிழகம் வரும்போது உங்கள் வீட்டுக்கு வந்து விடுகிறேன்!

    பதிலளிநீக்கு
  3. நானும் வரப் போறேன் ஸ்ரீராம் உங்க வீட்டுக்கு. திங்கள் கிழமை இட்லி
    ஐடியா பிரமாதம். நல்லதொரு குடும்பம் போல பாஸ் ஒத்துழைத்தால் எல்லாம் சரியா நடக்கும்.

    பதிலளிநீக்கு
  4. அருமையான மசாலா இட்லி.
    பின்னர் செய்த இட்லி கேக் உப்புமாவும் அருமை.

    பதிலளிநீக்கு
  5. மிளகும் தெரிகிறது அரைக்கும் பொருளில் அதுவும் உண்டா?

    பதிலளிநீக்கு
  6. பேசாமல் உங்கள் புதிய கண்டுபிடிப்புகளுக்கு எல்லாம் காப்பிரைட் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள் குட் ஐடியா சீக்கிரம் செயது பார்த்துவிட வேண்டியதுதான்

    பதிலளிநீக்கு
  7. எதுவுமே வேஸ்ட் கிடையாது !மசாலா இட்லியால் வெ(வ)ந்த தத்துவம் இது :)

    பதிலளிநீக்கு
  8. 'நீங்க செய்யற வேலைகளைப் பார்த்தால், கேரட், பீன்ஸ், பச்சைப் பட்டாணி யைக் கட் பண்ணி, உப்பு நீரில் வேகவைத்து, இட்லி மாவோடு கலந்து செய்தால் காய்கறி இட்லியாகிவிடும்போல் தெரிகிறதே. வித்தியாசமா பண்ணினா, சாப்பிடுவதற்கும் இன்டெரெஸ்டிங்காக இருக்கும். எது நல்லா போணியாறதோ, அதைத் தொடரலாம். இல்லாட்டா அன்னிக்கு டெஸ்ட் செய்ததோடயே நிறுத்திக்கவேண்டியதுதான்.

    இப்போ, இட்லி வித்யாசமாச் செய்யறதுக்கு, (வடிவில்), முக்கோணம், சாண்ட்விச் போல என்று விதவிதமான இட்லி தட்டுக்கள் வந்திருக்கிறதே.. பார்த்தீர்களா?

    இட்லி மாவுடன், கொஞ்சம் நெய் அல்லது எண்ணெய் சேர்த்துக்கொண்டு, குழாய்புட்டு பண்ணுவதுபோல் இருக்கும் கொஞ்சம் சிறிதான குழலில் போட்டு வேகவைத்து, எடுத்து வட்ட வட்டமாக (கொஞ்சம் தடிமனாக) கட் செய்துகொண்டு, கடுகு கறிவேப்பிலை தாளித்து வித்தியாசமான இட்லி பண்ணலாம்.

    எனக்கும் இப்படிப் பண்ணிப்பார்க்க ஆவலாத்தான் இருக்கு. பசங்க சாப்பிடும். ஆனால் இங்க இல்லையே...

    பதிலளிநீக்கு
  9. மசாலா இட்லி! பார்க்கறப்பவே நாக்குல நீர் ஊறுது! நன்றி!

    பதிலளிநீக்கு
  10. பாஸுடைய தக்காளிசட்னிதுணை. மஸாலா இட்லி. வெற்றிகரமான கண்டு பிடிப்பு.நெல்லைத் தமிழன்,ஸ்ரீராம் என அணிவகுப்பு. இட்லிமாவு சற்று கெட்டியாக அரைத்துக் கொண்டால்,காய்கறிகள்,தக்காளி என்று சற்று வதக்கி மஸாலைவுடன் சேர்த்தால் ஏன் என்று கேட்கும் ருசி.நீர்க்காதுமாவு. முளைவிட்ட தானியங்கள், ட்ரை ஃபுரூட்ஸ் என ஜமாயுங்கள். சமையல் மன்னர்களாக மாறிவிடுவீர்கள். ரவை இட்டிலியிலும் புதுப்புதுக் கலவைகள் சேர்த்து தயாரித்து அசத்துங்கள். சிறுதானியங்களையும் விட்டு விடாதீர்கள். அடுத்து பட்டமழிப்பு விழா எப்போது சொல்லுங்கள்? அன்புடன் இட்டிலி ரஸிகைகள் சங்கம்.

    பதிலளிநீக்கு
  11. ஐயோ. பட்டமளிப்பு விழா என்று திருத்தி வாசியுங்கள் சிறிய தவறுதல். அன்புடன்

    பதிலளிநீக்கு
  12. சொல்றீங்களேதவிர ஒரு தடவையாவது புது ஐட்டங்களை கண்ணுல காட்டறீங்களா...??? டேஸ்ட் பண்ணிப் பார்த்தபிறகே சர்ட்டிபிகேட் தரமுடியும்.....!!!

    பதிலளிநீக்கு
  13. சொல்றீங்களேதவிர ஒரு தடவையாவது புது ஐட்டங்களை கண்ணுல காட்டறீங்களா...??? டேஸ்ட் பண்ணிப் பார்த்தபிறகே சர்ட்டிபிகேட் தரமுடியும்.....!!!

    பதிலளிநீக்கு
  14. பசி நேரத்தில் படங்களுடன்
    பதிவைப் பார்த்ததால்
    பசி அகோரப் பசியாகிப் போனது

    பதிலளிநீக்கு
  15. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  16. வித்தியாசமான முயற்சிக்கு இனிய பாராட்டுக்கள்!

    பதிலளிநீக்கு
  17. என் கடைக்கு வாடிக்கையாக வரும் ஒருவர் இட்லி ஊற்றும் போது வெங்காயம், மிளகாய், கடுகு சீரகம் தாளித்து இட்லி மாவில் கொட்டி இட்லி செய்வதோடு நடுவில் உருளைக்கிழங்கு மசாலாவை வைத்தும் அவித்தெடுக்கலாம் என ஒரு முறை சொன்னார். நான் இன்னும் முயற்சித்ததில்லை. என் மகனுக்கு இட்லி எனில் தேவாமிர்தம் போல் ஒரு நாளில் மூன்று வேளை போல் ஐந்து வேளைக்கும் இட்லி கொடுத்தாலும் சாப்பிடுவான், நான் தான் இங்கே இருக்கும் வேலைச்சூழலில் அடிக்கடி செய்வதில்லை, இந்த முறையில் இந்த வாரம் இட்லி செய்து பார்த்து விடுகின்றேன்.

    பதிலளிநீக்கு
  18. இட்லி தோசையில் இன்னொவேஷன்கள் வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!