செவ்வாய், 22 நவம்பர், 2016

கேட்டு வாங்கிப் போடும் கதை :: துணை



      எங்கள் ப்ளாக்கில் இந்த வார கேட்டு வாங்கிப் போடும் கதை பகுதியில் மூத்த பதிவர்களில் ஒருவரான திரு சென்னைபித்தன் அவர்களின் படைப்பு.

     அவரின் தளம். நான் பேச நினைப்பதெல்லாம்.


     நண்பர்களால் அடையாறு அஜித் என்று அன்புடன் அழைக்கப்படுபவர் திரு சென்னை பித்தன்.  பதிவுகளுக்கு தலைப்பு வைப்பதிலேயே ஆயிரக்கணக்கான பார்வையாளர்களைக் கவரும் வகையில் வைப்பதில் கில்லாடி.  குறும்புக்கார பதிவர்.  அவரைப்பற்றி அதிகம் அறியாதவன் நான்.  சென்னை வெள்ளம் சமயத்தில் கன்னாபின்னா வெள்ளத்தில் சிக்கியிருந்தவர், அதிகமாக பாதிக்கப்படாத என்னை எப்படியோ நம்பர் வாங்கித் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறியவர்.  தன்னுடைய அம்மாவைப் பற்றி அவர் அவ்வப்போது ஃபேஸ்புக்கில் பகிர்பவை நெகிழ்ச்சியாக இருக்கும்.

     இரண்டு கதைக(லிங்க்) அனுப்பி ஏதாவது ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள் என்கிற கடினமான வேலையை  கொடுத்து விட்டார்.  இரண்டுமே நன்றாயிருந்தது.  எதை எடுப்பது?  எனவே  ஒற்றையா இரட்டையா,  இங்கி பிங்கி பாங்கி எல்லாம் போட்டுப் பார்த்து இந்தக் கதையைத் தெரிவு செய்திருக்கிறேன். 

     அதற்கான சென்னைபித்தன் ஸாரின் முன்னுரையும், அதைத் தொடர்ந்து கதையும்...



======================================================================

கதை பிறந்த கதை


இந்தக் கதைக்கு வயது முப்பதுக்கும் மேல்! முன்னொரு காலத்தில் ஒரு நோட்டுப்புத்தகத்தில் கதைகளெல்லாம் எழுதிக்கொண்டிருந்தேன்! (கவிதையும்தான்) 


இரண்டெழுத்துத் தலைப்பில் சில கதைகள் எழுத எண்ணி முயன்ற போது பிறந்த கதை இதுவும், விதி என்ற ஒரு கதையும்.சாதாரணமாக வாழ்க்கையில் நடக்கக் கூடிய ஒரு நிகழ்வே இது.


இங்கு யாருக்கு யார் துணை?!


சென்னைபித்தன்


========================================================

துணை

 சென்னைபித்தன்


 
முருகேசன் பேருந்து நிலையத்துக்கு வந்து சேர்ந்தபோது மணி 8.அவன் போக வேண்டிய பேருந்து 9 மணிக்குத்தான்.அவன் எப்போதுமே இப்படித்தான்,குறிப்பிட்ட  நேரத்துக்கு  மிக முன்பாகவே தயாராகி விடுவான்.இதனாலேயே அவனை நண்பர்கள் முன்சாக்கிரதை முருகேசன் என்று அழைப்பார்கள்.


பேருந்து நிலையத்துக்கு வந்ததும் உட்கார இடம் இருக்கிறதா எனப்பார்த்தான்.எல்லா இருக்கைகளிலும் ஆட்கள் இருந்தனர்.ஒரு இருக்கை அருகில் சென்று,பையைத் தன் இரு கால்களுக்கிடையே வைத்துக் கொண்டு நின்றான்.அவன் பார்வை சுற்றி வந்தது.தெரிந்த முகங்கள் எதுவும் காணப்படவில்லை.சீட்டு முன் பதிவு எதுவும் செய்யாத நிலையில் தனக்குப் பேருந்தில் உட்கார இடம் கிடைக்குமா என்ற கவலையில் இருந்தான்.


சிறிது நேரம் சென்றது.


”முருகேசன் சார்” என்ற குரல் கேட்டு இது வந்த திசையில் பார்த்தான். அவன் பணி புரியும் தொழிற்சாலையில் வேறு பிரிவில் இருக்கும்  சரவணன்,இரண்டு பெண்களுடன்  வந்து கொண்டிருந்தான்

முருகேசன் அருகில் வந்த சரவணன்”எங்க சார்,சென்னைக்கா?”எனக் கேட்டான்.முருகேசன் ஆமாம் எனத்தலையாட்டியதும் ”முன்பதிவு செய்து விட்டீர்களா?”எனக்கேட்டான்.

”இல்லை.பேருந்து வந்த பின்தான் பார்க்க வேண்டும்”

”ரொம்ப நல்லதாப்போச்சு”என்ற சரவணன் உடன் இருந்த  பெண்களைக் காட்டிச் சொன்னான் “இது என் மனைவி.அது அவ  தங்கச்சி ராணி.விடுமுறைக்காக வந்திருந்தா.இவளை இன்னைக்குச் சென்னையிலே கொண்டு போய் விடறதுக்காக பதிவு செய்திருந்தேன். திடீரென்று நாளைக்கு எனக்கு இங்கே முக்கியமான வேலை வந்துடுச்சு. என்னோட டிக்கட்டை என்ன செய்யலாம்,இங்க வந்ததும் யார் கிட்டயாவது  வித்துடலாமான்னு யோசிச்சுக் கிட்டே இருந்தேன். மச்சினிச்சிக்கு வேறே ராத்திரி நேரத்திலேதுணை இல்லாம அனுப்பறோமேன்னு கவலை.
நல்ல வேளை நீங்க வந்தீங்க. என் டிக்கட்டை நீங்க எடுத்துக்குங்க. டிக்கட் பிரச்சினையும் தீர்ந்தது ;ஒரு நல்ல துணையும் கிடைத்தது.”

இரண்டு டிக்கட்டுகளையும் எடுத்து முருகேசனிடம் கொடுத்து ‘’நீங்களே ரெண்டையும் வச்சுக்குங்க.அடுத்தடுத்த சீட்தான்” என்று சொன்னான் சரவணன். முருகேசன் வாங்கிக்கொண்டு தன் டிக்கட்டுக்கான பணத்தைக் கொடுத்தான்.

பேருந்து வந்தது .இருவரும் ஏறினர்.அந்தப்பெண்  சன்னலோர இருக்கையில் அமர்ந்துகொண்டு,தன் அக்காவிடம் பேச ஆரம்பித்தாள். அவன் பக்கத்து இருக்கை
யில் மனமின்றி அமர்ந்தான்.

பேருந்து புறப்பட்டது.அவன் அவளிடம் தனக்குச் சன்னலோர இருக்கையில்  அமராவிடில் பிரச்சினையாகும் என்று சொல்லி மாற்றிக் கொண்டான்.

இரவு 12 மணி அளவில் ஒரு நிறுத்தத்தில் பேருந்து நின்ற போது, நடத்துனர்,”வண்டி 5 நிமிடம் நிற்கும் ” என்று சொல்லி விட்டு இறங்கிச் சென்றார்.அவள் அவனிடம் தண்ணீர் இருக்கிறதா எனக்கேட்டாள் அவனிடம் இல்லை.

அவள் சொன்னாள்”போய் ஏதாவது குளிர்பானம் வாங்கி வாருங்களேன். ரொம்பத் தாகமாக இருக்கிறது”சொல்லியறே தன் கைப்பையிலிருந்து பணம் எடுத்தாள்.

முருகேசனுக்கு எப்போதுமே பேருந்திலிருந்து இறங்கினால்,அது அவனை விட்டு விட்டுப் போய்விடுமோ என்ற பயம் உண்டு.அவனது பாதிக் கனவுகள் அது போன்றவைதான்.

“இங்கெல்லாம் நல்ல பானங்கள் கிடைக்காதே.பஸ் புறப்பட்டு விட்டால் ”என அவன் தயங்கியதைக் கண்ட அவள் தானே போய் வாங்கி வந்து அவனுக்கும் கொடுத்தாள்.அவனுக்கு வெட்கமாக இருந்தது.

நடத்துனர் வந்தார்;பேருந்து புறப்பட்டது,சிறிது நேரத்தில் விளக்குகள் அணைக்கப்பட்டன.
தூங்கிக்கொண்டிருந்த ராணி திடீரென்று விழித்தாள்.அவள் காலில் ஏதோ ஊர்வது போல் இருந்தது.காலை உதறிக் கொண்டாள்.ஏதுவும் இல்லை.மீண்டும் இருக்கையில் சாய்ந்து  கொண்டாள். உடனே தூக்கம் வரவில்லை.சிறிது நேரம் கழித்து மீண்டும், காலில் ஏதோ உராய்வது தெரிந்தது.காலை முன்னே இழுத்துக் கொண்டாள்.சற்று நேரத்தில்  அவள் இடுப்பில்  கை படுவதை உணர்ந்தாள். திரும்பி முருகேசனைப் பார்த்தாள். தூங்கும் அவரை எழுப்ப வேண்டியதுதான்.
 

“சார்,சார்,” அவன் காதருகில் வாய் வைத்துக் கூப்பிட்டாள்.முருகேசன் விழித்துக் கொண்டு அவளைப் பார்த்தான்.


“சார்,பின் சீட்டில இருக்கற ஆளு,காலை உரசரான்;இடுப்பில கை வைக்கிறான். கொஞ்சம் சத்தம் போடுங்க”


முருகேசன் திகைத்தான்.இது என்னடா வம்பாப் போச்சு என யோசித்தான்.அவனுக்குப் பொதுவாகவே இந்த மாதிரிச் சண்டை போடுவதென்றால் பயம்.இப்போது அவள் சொல்லி விட்டாள்  .என்ன செய்வது .எழுந்து பின்னால் பார்த்தான்.அந்த மங்கிய ஒளியில் பொன்னம்பலம் போன்று ஒருவன் அமர்ந்திருப்பதைக் கண்டான்.அவன்
தோளில் தட்டவும் அவன் இவனைப் பார்த்தான்.


“சார், பொண்ணுமேலே கால் ,கையெல்லாம் படுதாம்.பார்த்து உக்காருங்க”
என்று அவன் மெல்லச் சொல்லவும் அந்த ஆள் ”ஏதோ தெரியாம பட்டிருக்கும் இதைப்போய்ப் பெரிசாச் சொல்ல வந்துட்டீங்க?” என்றுகேட்டான். முருகேசன் பேசாமல் உட்கார்ந்து  அவளைப் பார்த்து “நீங்க வேணா என் சீட்டுக்கு வந்துடுங்க” என்று சொன்னான்.


”உங்களுக்கு அதெல்லாம் பிரச்சினையாச்சே?அதுவும் இவனுக்குப் பயந்து சீட்டை மாற்றுவதா?” எனச் சொல்லி விட்டு ஒரு முடிவுக்கு வந்தவளாக அமர்ந்தாள்.


சிறிது நேரம் கழித்து அவன் மீண்டும் தன் வேலையை ஆரம்பித்தான்.ராணி எழுந்தாள்.சீட்டிலிருந்து வெளியே வந்தாள்;பின்னால் சென்று அவன் கன்னத்தில் ஒரு அறை விட்ட படியே”கண்டக்டர்.லைட்டைப் போடுங்க!”எனச் சத்தம் போட்டுச்  சொன்னாள்.

நடத்துனர் என்னவோ எனப் பயந்து விளக்கைப் போட்டார்.இவளைப் பார்த்ததும் அருகில் வந்தார்.

ராணி சொன்னாள்”இந்த ஆள் என் கிட்டே வம்பு பண்ணிக்கிட்டே வரான். அடுத்த ஊர் வந்ததும் போலிஸ்  ஸ்டேசனுக்குப் போங்க.ஒரு புகார் குடுக்கணும்.”


இதையெல்லாம் எதிர்பார்க்காத அவன் திகைத்துப் போய் அமர்ந்திருந்தான். மற்றப் பயணிகளும் எழுந்து வந்து விட்டனர்.பலருக்கு நேரம் ஆகிவிடுமே என்ற கவலை வந்து விட்டது.இந்த மாதிரி நேரத்தில் வீரம் காட்டும் ஓரிருவர்,தர்ம அடி போட்டனர். பின் அவளிடம் விடும்மா. போலிஸுக் கெல்லாம் போனாப் பிரச்சினை பெரிசாயிடும்  எனச் சொல்லி விட்டு,கண்டக்டரிடம் அவனை இடம் மாற்றி அமர்த்தும் படிசொல்லி விட்டு,அவளையும் சமாதானப் படுத்தினர்.


பின் பயணம் தொடர்ந்தது.


அந்த முழு நிகழ்வின் போதும் முருகேசன் பிரமித்துப் போய்
உட்கார்ந்திருந்தான்.


மீதிப் பயணம் வேறு எதுவும் நிகழ்வின்றிக் கழிந்தது.பேருந்து காலை நிலையத்தை அடைந்தது.தாம்பரத்திலேயே அந்த ஆள் இறங்கி விட்டான்.நிலையத்தில் முருகேசனும். ராணியும் கீழே இறங்கினர்.அவர்கள் இறங்கியவுடன் அருகில் வந்த பெரியவரைப் பார்த்து ’அப்பா’ எனக் கூப்பிட்ட ராணி,முருகேசனிடம்,”என் அப்பா ”என அறிமுகம் செய்து வைத்தாள்.



 பின் தன் அப்பாவிடம் சொன்னாள்”அத்தான் என்னைத் தனியா அனுப்பணுமேன்னு கவலைப்பட்டுக் கிட்டேஇருந்தாங்க.நல்ல வேளையா சார் வந்தார். சார் பேர் முருகேசன்.அத்தானோடுதான் வேலை பார்க்கிறார். அத்தான் சொன்ன படி எனக்கு ஒரு நல்ல வழித்துணையாக இருந்தார்.பயமே இல்லாமல் இருந்தது” என்றாள்.


அவர் முருகேசனிடம்”ரொம்ப நன்றி சார்.வீட்டுக்கு அவசியம் வாங்க” எனச் சொல்லிப் புறப்பட்டார்.


ராணியும்” ரொம்பத் தாங்க்ஸ் சார்” என புன்முறுவலோடு சொல்லி விட்டு அப்பாவுடன் சென்றாள்.


முருகேசன் அவர்கள் போவதையே பார்த்துக் கொண்டு நின்றான்.
 
 
                    ----------------------------------------------------
 

கதை முடிந்தது.  பலரது எதிர் பார்ப்புகள் பொய்த்துப் போயிருந்தால் நான்   பொறுப்பல்ல! :)).  இது ஒரு ”இருத்தலியல்” வகையைச் சேர்ந்த சிறுகதை எனச்    சொல்லிக் கொள்ளத்தான் ஆசை.  இதில் வாழ்க்கையின் முரண்களின் மீதான ஒரு எள்ளல் இருக்கிறது.   அவ்வளவே.  உங்கள் கருத்தை, எதுவாயிருப்பினும். கூறுங்கள்.

25 கருத்துகள்:

  1. அனுபவங்களை /காதில் கேட்டதை/கண்களால் பார்த்ததை கதையாய் மாற்றும் திறமை இவரிடம் உள்ளது மேலும் படிப்பவர் மனதில் உடனே ஒரு தொலைக்காட்சி சேனலை ஓட விடுவது இவரின் பாணி போலும்.

    பதிலளிநீக்கு
  2. அருமையான யதார்த்தமான கதை
    வாழ்வில் தயங்கத்தினையே தங்களின் செயல்முறையாகக் கொண்டு
    எதற்கெடுத்தாலும் தயங்கித் தயங்கி பயந்து பயந்து வாழும் மனிதர்களும்
    இருக்கத்தான் செய்கிறார்கள்
    தம +1

    பதிலளிநீக்கு
  3. திறமை எங்கிருந்து வந்தாலும் பாராட்டுவதும் ஊக்குவிப்பதும் உங்களிடமிருந்து நான் கற்றுக்கொண்ட பாடம் DD
    142 பாடல்களை யு டியூபில் வெளியிட்டுள்ளேன் கண்டு ரசித்து கொஞ்சம் தெம்பு கொடுத்தால் இன்னும் நிறைய பாடல்களை வெளியிடுவேன்.
    உங்கள் முழு நேரத்தை விழுங்கிக்கொண்டிருக்கும் எண்ணற்ற பணிகளுக்கிடையே ஒரு நான்கே நான்கு நிமிடம் தினமும் எனக்காக ஒதுக்குங்கள் போதும். .

    பதிலளிநீக்கு
  4. நண்பன் நம்பி சொன்ன பிறகும், இப்படி மக்கு முருகேசனாய் இருப்பது தவறு :)

    பதிலளிநீக்கு
  5. கதையை எப்படியும் திறிக்கலாம் என்பதை நான் பலமுறை திரு சென்னைப்பித்தன் ஐயாவிடம் படித்து இருக்கின்றேன் இது அவரது பாணி ஐயாவுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  6. Yadartham ithu thaan, supporttuku aal iruppadhunaleye dairium varum. I liked the story

    பதிலளிநீக்கு
  7. இங்கு மன தைரியமே துணை. வேறு யார்தான் துணை?

    பதிலளிநீக்கு
  8. யதார்த்தத்தை யதார்த்தமாக எழுதியிருப்பது சிறப்பு!

    பதிலளிநீக்கு
  9. 'என்' பிளாக் செயலற்று இருக்கும்போது "எங்கள் பிளாக்" கில் என் எழுத்தைப் பார்ப்பது மனத்துக்கு இதமாக இருக்கிறது.உண்மையில் ஒரு வெகுஜனப் பத்திரிகையில் வெளியானால் ஏற்படக்கூடிய மகிழ்ச்சியை விடப் பல மடங்கு மகிழ்ச்சி அளிக்கிறது இது.ஏனெனில் இது 'எங்கள்' பிளாக்!
    நன்றி ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
  10. நல்ல கதை. சிலரால் இவ்வளவுதான் முடியும்.
    தயங்கி தயங்கியே எல்லாம் செய்வார்கள்.
    அப்பாவிடம் நல்ல வழி துணையாக இருந்தார் என்று சொன்னது நன்றாக இருந்தது , முருகேசன் துணையாக இருந்ததால் தைரியமாய் ராணி அந்த ஆளை கன்னத்தில் அடித்தாள்.

    உங்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  11. அருமையான கதை. நல்ல அறிமுகம். பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  12. அவள் தைரிய லக்ஷ்மியாக இருந்தாலும் கூட ஒருவர் இருக்கிறார் என்ற தைரியமும் சேர்ந்து கொண்டது. முருகேசனுக்கு இரண்டு வார்த்தை பேசியதே அவளுக்காகத்தான். எதுவோ அத்தானால் துணையாக அனுப்பப் பட்டவர் வழித்துணைதான். மார்க ஸஹாயம் அவரால் முடியாது. மரியாதை நிறைந்த தீரமானபெண். இப்படித்தான் இருக்க வேண்டும். துணையானகதைதான். அன்புடன்

    பதிலளிநீக்கு
  13. சில நேரங்களில் நமக்குத் துணை என்று நினைப்போருக்கு நாம் துணையாக இருப்பது என் அனுபவத்திலும் நடந்திருக்கிறது அழகான கருவில் பின்னப்பட்ட கதை

    பதிலளிநீக்கு
  14. சில கதைகளை வாசித்தால், எழுதியவரின் அனுபவமும் முதிர்ச்சியும் ஒவ்வொரு வாக்கியத்தில் அடிக்கோடிட்டதுபோலத் தெரியும். இந்தக் கதை அந்த வகையை சேர்ந்தது. பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  15. யதார்த்தம் +கதை கொண்டு போன விதம் +நல்ல மேட்டர் all contributed

    பதிலளிநீக்கு
  16. அருமையான எண்ணங்கள் வெளிப்படுகிறது.

    பதிலளிநீக்கு
  17. மிகவும் யதார்த்தமான சாதாரணதோர் நிகழ்வுதான். இருப்பினும் வெகு அழகாக ‘சென்னை பித்தன்’ ஸார் அவர்கள் தன் தனிப் பாணியில் நன்கு எழுதியுள்ளார். ஏதோ ஒரு மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் நம்மையெல்லாம் படிக்க வைத்த கதை இது. இதுதான் அவரின் தனிப்பாணி என்பது. :)

    சிலசமயம் யாருக்கு யார் துணை என்றே தெரியாமல் சில சம்பவங்கள் விசித்திரமாக நிகழக்கூடும். எனக்கே இதுபோல ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    சென்னைக்கு நான் பலமுறை சென்று வந்தும்கூட, இன்றும் எனக்கு சென்னையில் ரூட்டெல்லாம் சரிவர புரியவே புரியாது. எக்மோரில் இறங்கி ஆட்டோ பிடித்து நான் செல்ல வேண்டிய இடங்களுக்குச் செல்வதுதான் பொதுவாக என் வழக்கம்.

    அன்று (சுமார் 20 வருடங்களுக்கு முன்பு) திருச்சியிலிருந்து என்னுடனும் என் மனைவியுடனும், சென்னையில் வாழும் இளம் பெண் ஒருத்தி ராக்ஃபோர்ட் எக்ஸ்பிரஸ் இரயிலில் அகஸ்மாத்தாக பயணம் செய்தாள். எங்களுக்கும் அவள் தூரத்து சொந்தம்தான்.

    விடியற்காலம் நாலரை மணிக்கு அவளுடன் [தாம்பரத்திலோ, மாம்பலத்திலோ சரியாக எனக்கு இப்போது நினைவு இல்லை] எங்களையும் இறங்கச் சொன்னாள். ஆட்டோக்காரர் ஒருவரை அழைத்து எங்கேயோ போக வேண்டும் எனச் சொல்லி அவருடன் பேரம் பேசினாள். அதற்குள் அதிக பேரம் பேசாத வேறொரு பார்ட்டியை நோக்கி ஆட்டோக்காரர் நகரப்பார்த்தார்.

    எங்களுடன் வந்த மிகவும் தைர்யசாலியான இந்தப்பெண் அந்த ஆட்டோக்காரரின் சட்டையைக் கோர்க்காத குறை மட்டுமே. ஆட்டோவை நகர விடாமல் மிகப்பெரிய தகராறு செய்துவிட்டாள். அந்த விடியற்கால இருட்டு நேரத்தில், முன்பின் பழக்கமில்லாத ஓர் இடத்தில் எனக்கே மிகவும் பயமாகப் போய் விட்டது.

    கடைசியில் அதே ஆட்டோவில்தான் அமர்ந்து நாங்கள் அவளுடன் அசோக் பில்லர் அருகே உள்ள அவள் வீட்டுக்குப் போனோம். எங்கள் இருவருக்கும் காஃபி போட்டுக்கொடுத்தாள். பிறகு நன்கு விடிந்ததும், வேறொரு ஆட்டோவில் ஏற்றி எங்களை மேற்கு மாம்பலத்திற்கு நாங்கள் போக வேண்டிய வீட்டுக்கு பத்திரமாக அனுப்பி வைத்தாள். அவளின் அன்றைய துணிச்சலைக்கண்டு நான் மிகவும் பயந்தும் வியந்தும் போனேன்.

    ’புதுமைப் பெண்களடி .... பூமிக்குக் கண்களடி’ என என் மனைவியிடம் சொல்லிக்கொண்டேன்.

    கதாசிரியர் ‘சென்னை பித்தன்’ அவர்களுக்கு என் பாராட்டுகள். கதையைப் படிக்க வெளியிட்டு உதவியுள்ள ‘எங்கள் ப்ளாக்’க்கு என் நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  18. சிறந்த கதை. முன் ஜாக்கிரதை தேவைதான். ஆனால் அது எதையும் செய்ய ஏற்படும் தயக்கம் காரணமாகவும் உண்டாகும் போலிருக்கு :)

    பதிலளிநீக்கு
  19. மன்னிக்கவும் நண்பரே! கதையே நான் எழுதியதில்லை!தங்கள்
    அன்புக்கு மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
  20. புலவர் ராமாநுஜம் அவர்களின் கருத்துப் புரியவில்லை! :) கதையில் நடப்பது நிஜத்திலும் நடக்கக் கூடியதே! நாங்க அதாவது நான், என் அம்மா, தம்பி, எங்க பெண் ஆகியோர் ராஜஸ்தானில் இருந்து மதுரை வரை வரணும். எனக்கு இரண்டாவது பிரசவம்! ராஜஸ்தானில் வைச்சுக்கக் கணவர் பயந்து என்னை அம்மா வீட்டுக்கே அனுப்பி வைத்தார். துணைக்குத் தான் அம்மாவும், தம்பியும். இரண்டு பேருக்கும் ஹிந்தியில் ஒரு வார்த்தை தெரியாது. ராஜஸ்தானி ஹிந்தியோ அப்புறம் ரயிலில் வருகையில் பேசப்படும் ஹிந்தியோ புரியாது. பார்க்கப் போனால் நான் தான் அவர்களைக் கூட்டி வந்தேன். அவங்க என்னைத் துணையாகக் கொண்டு தான் வந்தார்கள்! :)

    பதிலளிநீக்கு
  21. மிக யதார்த்தமான கதை. வாழ்க்கையில் முருகேசன் கள் நிறைய உண்டு.
    அந்தப் பெண்ணின் சாமர்த்தியமும் வியக்கச் செய்கிறது. அழகான கதை.
    சம்பவங்கள் நடக்கின்ற வேகம் பஸ் வேகத்துக்குக் கதையும் செல்கிறது. அருமை.வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  22. இதுதான் யதார்த்தம். பெரும்பான்மையான பெண்கள் துணிச்சல் மிக்கவர்கள்தான். அதுவும் பார்ப்பதற்குப் பாவமாகத் தெரிந்தாலும், சூழ்நிலை வரும் போது புயலாய்ச் சீறவும் செய்வார்கள்.

    பாவம் முருகேசன் சற்று நெளிந்திருக்கக் கூடும் அவள் தன் தந்தையிடம் அறிமுகம் செய்த போது!!!!

    சென்னை பித்தன் ஐயாவின் கதைகளை அவரது தளத்திலேயே வாசித்து ரசித்ததுண்டு. ஐயாவைப் பற்றிய எங்கள் ப்ளாகின் கருத்துகள் சரியே....

    கதையை மிகவும் ரசித்தோம்! பல நாட்கள் கழித்து செபி சாரின் எழுத்து! வாழ்த்துகளுடன் நன்றியும்..

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!