செவ்வாய், 8 நவம்பர், 2016

கேட்டு வாங்கிப் போடும் கதை :: அர்த்தமுள்ள குறியீடு



     இந்த வார 'எங்களின்' "கேட்டு வாங்கிப் போடும் கதை" பகுதியில் நண்பர் மாதவனின் கதை இடம் பெறுகிறது.
     அவரின் தளம் மாதவன், மன்னை மைந்தர்களில் ஒருவன்.
     முன்னர் வலையுலகில் சுறுசுறுப்பாக இயங்கி வந்தார்.  சமீபத்தில் வலையில் எழுதுவதில்லை.  எங்களின் இனிய நண்பர்.  இப்போதும் அவர் புதன் புதிர்ப் பதிவுகளில் அதிகமாகத் தலைகாட்டுவதிலிருந்து அவர் சுவாரஸ்யங்கள் எதில் என்று தெரிந்து கொள்ளலாம்.  வித்தியாசமாய், மாற்றி யோசிப்பவர்.  இப்போதெல்லாம் ஃபேஸ்புக்கில் பரபரப்பாக - அதுவும் ஓரளவுக்குத்தான் - இயங்குகிறார்!
     இந்தப் படைப்புக்கு நண்பர் அப்பாதுரை ஒரு கேள்வி கேட்டிருந்தார்.

     அதற்கு நண்பர் மாதவனின் பதில்...

      படைப்பாளியின் வழக்கமான முன்னுரைக்குப் பின் அவர் கதை தொடரும்.




====================================================================




ஒரு அறிமுகம் :


வலையுலகம் என் அண்ணனின் மூலம் எனக்கு அறிமுகமானது 2009ல். ஓரளவிற்கு எழுதவரும் எனக்கு, யதார்த்தங்கள் அதிகமாக வரும் என நினைக்கிறேன். 2012க்கு மேல் வலைப்பதிவு எழுதுவதில் ஆர்வம் குறைந்து, முகப்புத்தகத்தில் நாட்டம் செலுத்த ஆரம்பித்தேன். தற்பொழுது தமிழ்ச் செய்யுள் இலக்கணப் படி எழுதக் கற்று வருகிறேன். நாட்டம் / விருப்பம் மாறும், காலம் மாறுவதுபோல.


எங்கள் பிளாக் ஸ்ரீராம் சார் மற்றும், கௌதமன் சாருடன் அடிக்கடி வலைத்தளம் மூலம் சந்திப்பு நேர்ந்து வருகிறது.
காலங்கள் மாறிடினும், ஞாயிறு படம் வழங்குவதையம், வெள்ளி வீடியோ வழங்குவதை 'எங்கள்' தொடர்ந்து செய்வது பாராட்டுதலுக்குரியது. தற்போது வார நாட்கள் வரிசையில் ஒரு தலைப்பு பற்றி வரும் செய்திகள் அருமை.



கேட்டுப் போடும் கதையில், ஏற்கனவே எனது வலைப்பூவில் வெளியான, ஓரளவிற்கு பாராட்டப்பட்ட கதை, மேலும் இது 'பரிசல்காரன்' நடத்திய - சவால சிறுகதைப்  போட்டியில் ஆறுதல் பரிசு கிடைக்கப் பெற்ற கதை. அந்தப் போட்டியில் 'சவால்' என்னவென்றால், கொடுக்கப்
பட்ட இவ்வரிகள் அதே வரிசையில் கதையின் போக்கினை ஒத்து, வரவேண்டும். அவ்வரிகள்  இரண்டு பாகங்களாக கொடுக்கப் பட்டது. அவையாவன.


1) -----------------------
Mr. கோகுல்,
S W H2 6F - இதுதான் குறியீடு கவனம் 
- விஷ்ணு
2) ------------------
Sir,
எஸ்.பி. கோகுலிடம் நான் தவறான
குறியீட்டைத்தான் கொடுத்திருக்கிறேன்
கவலை வேண்டாம்.
-- விஷ்ணு
மேலும் இந்தப் படம் கதையுடன் ஒத்து வரவேண்டும்.  நான் எதிர்கொண்ட சவால் இப்படித்தான் சமாளிக்கப் பட்டது......
========================================================================



அர்த்தமுள்ள குறியீடு
 மாதவன்



செந்தமிழ் நாட்டின் தலைநகரின் மத்தியப் பகுதியில் இருக்கும், நூற்றாண்டு கண்ட ஆளுயர்ந்த மாளிகை பல்கலைக் கழக பேச்சரங்கம், 'எள்' போட்டா எண்ணையாயிடும்னு சொல்லுறமாதிரி அரங்கம் ஓவர் லோடாகி இருந்தது.


"காசு கொஞ்சம் கொஞ்சமாத்தான் சேக்க முடியும், சினிமா தியேட்டருல ஒவ்வொரு ஆளா சேர்றது போல, ஆனா சேந்த காச, சினிமா முடிஞ்சு கூட்டம் வேகமா கலையறதுபோல சீக்கிரம் செலவழிச்சுடலாம்", இதற்கு நேர்மாறா இருக்கும் நமது இளம் புயல் விஷ்ணு பேசற நிகழ்ச்சி இருக்கும். சும்மாவா, பத்து வயசுல பத்தாவது படிச்சவனோட அறிவும், காலேஜ் போகறப்ப பாடம் தவிர அதிவேக  சமயோசித  புத்தியும்  கொண்ட அதிசய பிறவியாச்சே !


கம்பியூட்டர் ஹார்ட்வேர் அன்ட் சாஃப்ட்வேர் ரெண்டுலயும் முனைவர் பட்டம் வாங்கி.. நாட்டோட ராணுவம் மற்றும் முக்கிய பாதுகாப்புத்  துறையில பொறுப்புள்ள பதவில இப்ப இருக்கான். பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில விஷ்ணு பேச ஆரம்பிச்சான்,

"நம்ம நாட்டோட நாளைய தூண்கள் நீங்களே. உங்களுக்கு நல்ல வாய்ப்பு காத்திருக்கிறது. பொறுப்போடு உங்க கடமையை செய்ய வாழ்த்துக்கள். இன்றைய கால கட்டத்தில் எதற்கெடுத்தாலும் கணணி, கைபேசி இப்படி எலெக்ட்ரானிக் யுகத்தில் எத்தனையோ பயன்கள். கண்டு பிடித்த ஆராய்ச்சியாளர்களும், அதன் மூலம் தொழில்நுட்பத்தை மக்களுக்கு பயன்படும் வகையில் மேம்பாடு பட்டு உயர்த்துபவர்கள் ஒருபுறம். அந்த தொழில்நுட்பத்தை தவறான வழியில் பயன்படுத்தி பணம் பதவி.. இன்னும் என்னென்னவோ. முக்கியமா தீவிரவாதத்த தூண்டிவிட்டு கலவரம் பண்ணி மக்களுக்கு தீமை செய்யறவங்கள நீங்க முக்கியமான எதிரியா நெனைக்கணும். நீங்க நல்லவர்களாகவும், நல்லவர்களுக்கு மட்டுமே துணைபோகவும் வேண்டும். அலுவல் பணி காரணமாக என் சிற்றுரையை இத்துடன் முடித்துக் கொள்கிறேன். புதிய பட்டதாரிகள் அனைவருக்கும், மறுபடியும் வாழ்த்துக்கள்."


அவனது சிற்றுரை முடியட்டும் எனபதற்கு காத்திருந்ததுபோல அவரது கைபேசி சிணுங்கியது.. எடுத்து பேச ஆரம்பித்ததும், முகம் வேகமாக சுருங்க ஆரம்பித்தது. ஆனாலும் அதை உடனே உணர்ந்த  விஷ்ணு, தனது முகபாவத்தை இயல்புநிலைக்கு கொண்டு வந்துகொண்டே பதில் சொன்னான்.. "ம்ம் பத்து நிமிஷத்துல அங்க வந்துடறேன்"

----------------------------------- 

சொல்லியபடி பத்தே பத்து நிமிஷத்துல அவனோட அலுவலகத்தின் முதன்மை வாயினுள் தனது காரை நுழைத்தான். அந்த  கட்டிடத்தின் காம்பவுண்ட்  சுவரை சுற்றியுள்ள எல்லா பகுதியிலும் வழக்கமான  செக்யூரிட்டி இல்லாமல் முகம் தெரியாத புதிய ஆட்கள்  டியூட்டியில் இருப்பது முதலில் அவன் கண்ணில் பட்டது. போர்டிகோ சென்று காரை நிறுத்தவும், உயர் ரக துப்பாக்கி ஏந்திய தடித் தடியான மூன்று ஆட்கள் அவனை நெருங்கவும் சரியாக இருந்தது. அதில் இருவர் உடனே அவனுடைய இரு பக்கங்களிலும் துப்பாக்கியை நீட்டிக் கொண்டிருக்க, மற்றவன் தனது துப்பாக்கியை மடக்கி, அவனை முழுவதுமாக சோதிக்கத் துவங்கினான்.


கடுமையான சோதனைக்குப் பின், அவனிடம் ஆயுதம் எதுவுமே இல்லை என்பதை உறுதி செய்துமுடித்து மிதனான குரலில் அவனிடன் சொன்னான், "நீ, எங்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தால், உள்ள இருக்குற உங்க ஆளுங்க எல்லாரும், நீ உள்பட பிழைக்க முடியும். தப்பித் தவறி எதிர்ப்பு காட்டினாகூட, அப்படி எங்களுக்கு சந்தேகம் வந்தாகூட தயங்க மாட்டோம், தூக்கிடுவோம்", சொல்லிக்கிட்டே விஷ்ணுவோட கண்ணையும், முகத்தையும் உற்றுப் பார்த்து விஷ்ணுவிடம் பயம் இருப்பதை உறுதி படுத்திக் கொண்டான்.


ஐந்து நிமிடத்தில், நால்வரும் மையக் கதவு வழியே உள்ளே செல்ல, லிஃப்ட் அருகே துப்பாக்கி ஏந்தியபடி இருந்த வேறு மூன்று ஆசாமிகளின் பார்வையை ஏந்திக் கொண்டே லிஃப்டினுள் சென்று, இரண்டாவது தளத்தில் முதல் அறையினுள் சென்றார்கள்.


அவர்கள் நோக்கம், ராணுவம் மற்றும் பாதுகாப்பு பற்றிய முக்கிய இரகசியங்கள்தான் என்பதை தெள்ளத் தெளிவாக விஷ்ணுவிடம் சுருக்கமாக சொல்லப் பட்டது.  ராணுவ பாதுகாப்பு ரகசியங்கள் அடங்கிய அவனது அலுவலக லேப்டாப், சரியான பாஸ்வேர்டை மட்டுமே விழுங்கி உங்களுக்கு வழிவிடுவேன், இல்லையேல் முகத்தில் காரி துப்புவேன் எனச் சொன்னதால், வேறு வழியின்றி அவன் அழைக்கப் பட்டதும், விஷ்ணுவிற்கு தெரியவந்தது.


விஷ்ணுவின் கண்கள் அவர்களை ஒரு நோட்டம் விட்டன. வந்தர்களில் பாதி பேருக்கு நரைத்த முடி, மற்றவர்களுக்கு கருத்த முடியாக இருந்தாலும், அங்கொன்றும் இங்கொன்றுமாய் தலையை மழித்து பழிவாங்கியது. தலை நரைச்ச ஆளெல்லாம், சொட்டைத் தலையைப் பார்த்து ஆறுதல் பெறுவதும், சொட்டை ஆளெல்லாம், நரைச்ச தலை ஆளை பார்த்து ஆறுதல் பெறுவதும் மனதில் தோன்றியது. மனதினுள் சிரித்தான். கண்ணுக்குக் கீழே கருப்பு முகமூடி, வந்திருந்த அனைவர் முகத்திலும்.


சக அலுவலர்கள் வாயினுள் துணி வைத்து கைகள் கட்டப்பட்டு, துப்பாக்கியை எதிர்கொண்ட வண்ணமிருந்தனர். நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து கொண்டான், விஷ்ணு. தனக்கு மட்டுமே அந்த பாஸ்வேர்ட் தெரிந்திருப்பது ஒரு விதத்தில் நல்லது என்று நினைத்தவன், அப்போது மற்றவர்களின் உயிர் அந்தரத்தில் ஊசல் ஆடுவதை நன்கு கணித்தான்.


விஷ்ணு அவர்களின் தலைமை ஆளிடம் கேட்டான். "இந்த லேப்டாப்பில் இருக்குற தகவல்தான உங்களுக்கு முக்கியம் அந்தப் பாஸ்வேர்டு தந்தா இவங்கள விட்டுடுவீங்களா?" என்றான்.


"அதெப்படி போதும். நீ பக்கத்துலேயே இருந்து எல்லா முக்கியமான ஃபைல்களையும்  காமிக்கணும். எங்க பக்கமும் எக்ஸ்பெர்ட் இருக்காங்க. அவங்க தகவல்களோட தன்மைய உறுதி செஞ்சாத்தான் உங்க எல்லாருக்கும் விடுதலை. அதுவும் நாங்க இந்த லேப்டாப்ப  எடுத்திட்டு, இதோ இங்க இருக்காரே எஸ்.பி. கோகுல்  அவரோட நாங்க எல்லாரும் எங்க இடத்துக்கு ஸேஃபா போன பின்னாடிதான்", சொன்னான் ஹெட் முகமூடி


சொந்த பந்தமில்லாத எஸ்.பி. கோகுல், அந்த அலுவகத்திற்கு அமர்த்தப்பட்ட பிரத்யேக போஸில் ஆபீசர். செக்யூரிட்டி வியூகங்கள அமைக்கிறது அவரோட தலையாய கடமை.(!) அவரை மடக்கிப் போட்டுத்தான் இந்த கும்பல் தன்னோட அதிரடி திட்டத்தை  இப்போது நடத்துவதும் சுருக்கமாக சொல்லப் பட்டது.


எஸ்.பி.கோகுல்  தொடர்ந்தார், "ஆமா, நானும் எப்ப பெரிய பணக்காரனாகி வாழ்க்கையில செட்டில் ஆகுறது. இந்த குருப்புக்கு உதவி செஞ்சு, இந்த டீல்ல லம்ப்பா ஒரு தொகைய அடிச்சிட்டு, வசதியா வேற நாட்டுல வேற பேருல வெள்ளைக்கார தோல் பொண்ணோட செட்டில் ஆயிடப் போறேன். அதுக்கு இந்த கும்பல் ஏற்கனவே ஏற்பாடு செஞ்சிட்டாங்க. சரி, சரி வேலைய ஆரம்பிங்க". என்று தனது பங்கிற்கு வாலாட்டினார். 


வேறவழி இல்லை என்பதை உணர்ந்த விஷ்ணு, லேப்டாப்பை உயிர்பித்தான். அவன் செய்வதை கவனமாக ஒரு குள்ள முகமூடி கூர்ந்து கவனிக்கலானான்.

  • username : vishnu
  • password : *********
எஸ்.பி கோகுல், விஷ்ணு தந்த பாஸ்வேர்ட் அடங்கிய துண்டுச் சீட்டை  மேசைமீது வைத்து விட்டு, அதைப் பார்த்து யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்டை எழுதிக் கொண்டு, மற்ற  தகவல்களை தனது கையில் இருந்த குறிப்பேடில் எழுத ஆரம்பித்தார். விஷ்ணு அளித்த பாஸ்வேர்ட் மேட்ச் செய்தபின், தான் தேடிக்கொண்டிருந்த மணாளனைக் கண்ட மங்கைபோல கதவை திறந்தது லேப்டாப். லேப்டாப்பினுள் அதிகமாக பைல்கள் இருக்கவில்லை. தேவையான முக்கியமான தகவல்கள் மட்டும், சரியான முறையில் மற்றவர்களுக்கு புரியும்படி வைக்கப்பட்டிருந்தது. குறிப்பெடுத்துக் கொண்டிருந்த குள்ளனுக்கும் எளிதாகப் புரிந்தது. மேம்போக்காக பைல்களின் தன்மையை உறுதிபடுத்திக் கொண்டான்.

அனைத்தும் முடிந்ததும். குண்டன், லேப்டாப்பை ஷட்டவுன் செய்து மீண்டும் அதனை உயிர்பித்தான். எஸ்.பி தந்த குறிப்பேடில் இருந்தபடி யூசர் நேமும், பாஸ்வேர்டையும் டைப் செய்து, மீண்டும் எல்லா ஃபைல்களையும் மேம்போக்காக பார்வையிட்டன. பிறகு தலைமை முகமூடிக்கு பச்சைக் கொடி காட்டுவதுபோல தம்ஸ்-அப்பினான்.

அரை மணி நேரத்தில் அனைத்தையும் முடித்துக் கொண்டு அந்த முகமூடிகள், தங்களின் பாதுகாப்பை உறுதிபடுத்திக் கொண்டு விஷ்ணுவின் வாயிலும் துணியை வைத்து மூடி, கைகளை பின்னால் கட்டிபோட்டு, அலுவலக எல்லா அறைகளையும் மெயின் கேட்டையும் பூட்டிவிட்டு, வந்தவழி திரும்பி சென்றார்கள். இதுவரை எஸ்.பி.யாக இருந்த கோகுலும், 'பி'யை உதறிவிட்டு அவர்களுடன் 'எஸ்' ஆனார்.

பல்கலைக் கழகத்தை விட்டு விஷ்ணு வரும் வழியில் ஓரளவிற்கு ஊகித்து, தனது கைபேசி மூலம், ஒன்றரை மணி நேரம் கழித்து தன்னிடமிருந்து தகவல் வராத நிலையில் தனது அலுவலகத்திற்கு தகுந்த பாதுகாப்போடு வருமாறு இன்ஸ்பெக்டர் கண்ணபிரானிடம் தகவல் தந்திருந்தான். அதன்படி தேவையான அளவிற்கு தகுந்த ஆயுதமேந்திய   காவலர்களுடன் வந்தவர்கள் அனைத்து அலுவலர்களின் கட்டுக்களை அவிழ்த்து விட்டு மேற்கொண்டு ஆக வேண்டிய விஷயம் பற்றி பேசலானார்கள்.

மற்றவர்கள் பட படக்க.. விஷ்ணு அமைதியாக, எந்த தப்பும்  நடக்காதமாதிரி இயல்பாக  இருந்தான். அலுவலகத்தில் இருந்த மற்றவர்களுக்கு ஆச்சர்யம். இந்தளவுக்கு நடந்தும் விஷ்ணுவிடம் பதட்டமோ படபடப்போ இல்லையென்று தான்.

விஷ்ணுவின் உயரதிகாரி விஷ்ணுவிடம் "விஷ்ணு, நீங்க கஷ்டப் பட்டு பாதுகாத்து வந்த முக்கியமான ராணுவ, பாதுகாப்பு ரகசியங்கள் எல்லாம் இருக்குற உங்க லேப்டாப்ப எடுத்துட்டுப் போயிட்டங்களே. என்னதான் உயிர்ச் சேதம் இப்ப இல்லேன்னா கூட, அந்த ரகசியம்லாம் தெரிஞ்சிட்டு நூத்துக்  கணக்கான உயிர்கள கொன்னுடுவாங்களே  உங்க முயற்சிலாம் வீணாப் போயிட்டுதே", என்று ஆதங்கப் பட்டார்.

அவரிடம் சென்று ஒரு துண்டுச் சீட்டை கையில் அழுத்தியபடி, "எனக்கு கொஞ்ச நேரம் டயம் கொடுங்க., குடும்பத்தோட ஊருக்கு போகவேண்டிய நிலை. வீட்டுல எல்லாரும் தயாரா இருக்காங்க. என்னோட நெலமைய  ஃபோன் மூலம் சொல்லிட்டு வந்துடறேன்", எனச் சொல்லியபடியே, பதிலுக்கு காத்திராமல் அறையை விட்டு வெளியேறினான், விஷ்ணு.

துண்டுச் சீட்டில் படித்துப் பார்த்த அவனது உயரதிகாரி மகிழ்ச்சியடைந்தாலும், மிஞ்சி நிற்கும் ஆச்சர்யத்தையே வெளிப்படுத்த முடிந்தது.
------------
சொன்னபடி மீண்டு(ம்) வந்த விஷ்ணு, ஆரம்பித்தான்", யாரும் கவலைப் பட வேண்டாம். யாராவது திருட்டுத்தனம் செய்வாங்கன்னு ஏற்கனவே யோசிச்சு ஒரு வழி செஞ்சிட்டேன் போன மாசமே", என்றான் 

"என்னது? விளக்கமா சொல்லுங்க" என்றார் இன்ஸ்பெக்டர் கண்ணபிரான்.

விஷ்ணு பேச ஆரம்பித்தான், "என்னோட லேப்டாப்ல மூணு வித லாகின் இருக்கும். ஒன்னு ஒரிஜினல் டேட்டா இருக்கும். இந்த லாகின் நேம இப்ப சொல்ல விரும்பல. ரெண்டாவது லாகின் 'vishnu',  மூணாவது 'vishnu '. ரெண்டாவது மற்றும் மூணாவது லாகின் நேம் டைப் பண்ணச்சே ஒரேமாதிரிதான் இருக்கும். ஆனா, ரெண்டாவதுக்கு இன்னும் சில லெட்டர்ஸ் இருக்கு. மொதோ ஆறு எழுத்துக்கு மேல டிஸ்ப்ளே ஆகாது. செட்டிங்க்ஸ் அப்படி. மத்த ரெண்டு லாகினுக்கும் பாஸ்வேர்ட் ஒண்ணுதான். அவங்க இருந்தப்ப, நா ரெண்டாவது லாகின்ல என்ட்டர் பண்ணேன். ரெண்டாவது மூணாவது அக்கவுண்ட்ல இருக்குற டேட்டா எல்லாம் போலி. 'சிஸ்டமேடிகலி கரப்டட்' டேட்டாதான். ப்ளான் பண்ணி டேட்டால  தேவையில்லாத அல்லது குழப்பம் தர்ற தகவல, திணிச்சிட்டேன். மேம்போக்கா படிச்சா அத கண்டுபிடிக்க முடியாது. டேட்டாவ கரப்ட் பண்றதுல பல லெவல் இருக்கு. மூணாவது லாகின்ல இருக்குறது ஹைலி கரப்டட் டேட்டா", எனச் சொல்லி சற்று மூச்சு வாங்கினான். தொண்டைக்கு இதமாக இளஞ்சூடு தண்ணீரை தாரை வார்த்தான்.

"எதுக்கு மூணு லாகின் ? ரெண்டாவது லாகின்லையே ஹை லெவல் டேட்டா கரப்ஷன் வெச்சிருக்கலாமே?" எனக் கேட்டார் கண்ணபிரான்.

அங்கதான் விஷயமே இருக்கு. என்னோட ஒரிஜினல் டேட்டா என்னோட லேப்டாப்ல மட்டுமே இருக்கு. நா ரெண்டாது லாகின்ல என்ட்டர் பண்ணி, ஸ்க்ரீன்ல  ஐகான் எதுவும் இல்லாத ஒரு பர்டிகுலர் ஸ்பாட்ல மூணு தடவ க்ளிக் பண்ணா ஒரிஜினல் டேட்டாவ இங்க இருக்கற மெயின் கம்பியூட்டருக்கு ட்ரான்ஸ்ஃபர் பண்ணிட்டு முதலாவது லாகின் அக்கவுன்ட்ட டெலீட் பண்ணிடும். அப்புறம் லேப்டாப்ப இந்த கட்டிடத்த விட்டு வெளிய எடுத்திட்டு போயி, எப்ப மூணாவது அக்கவுண்ட்ல லாகின்  பண்ணாலும் ரெண்டாவது லாகினையும் அக்கவுண்டையும் டெலீட் பண்ணிட்டு, லாப்டாப் கீழ் பக்கத்துல நா வெச்சிருக்கற அல்ட்ரா-ஸ்லீக் கைபேசியை ஆக்டிவேட் பண்ணிடும். உடனே அந்த சிம் என்னோட மொபைலுக்கு கால் பண்ணும். லேப்டாப்ல இருக்குற மொபைல் சைலென்ட் மோட்ல இருக்கு, அதனால யாருக்கும் நடப்பது என்னனு தெரியாது. இப்பலாம் எல்லா இடத்துலையும் சிக்னல் டவர் இருக்குறதுனால எனக்கு தொடர்ந்து அந்த லேப்டாப் இருக்குற இடம், ஜி.ஆர்.பி.எஸ் மூலமா தெரியவரும்", என அங்கிருந்த மானிட்டரை காண்பித்தான். விஷ்ணு பேசி முடித்து விட்டு, மேடை மீதிருந்த கோகுல் விட்டுச் சென்ற துண்டுச் சீட்டைப் எடுத்து அதனை தனது அருகில் வைத்தான். அதில்,
Mr. கோகுல்,
S W H2 6F - இதுதான் குறியீடு கவனம் 
- விஷ்ணு
என்றிருந்தது. 

அதனை கவனித்த அவனது அதிகாரி, விஷ்ணு தனக்குத் தந்த துண்டுச் சீட்டையும்  அதனருகே வைத்தார்.  அதனை கவனித்த இன்ஸ்பெக்டர் கண்ணபிரான், விஷ்ணுவின் அருகில் சென்று பார்த்தார். இந்த சீட்டில்
Sir,
எஸ்.பி. கோகுலிடம் நான் தவறான
குறியீட்டைத்தான் கொடுத்திருக்கிறேன்
கவலை வேண்டாம்.
-- விஷ்ணு
என்று இருந்தது.


ஏதோ கண்ணபிரான் சொல்ல ஆரம்பிக்க, மேசைமீதிருந்த விஷ்ணுவின் கைபேசியில் 'Vishnu  Informer Calling', என வருவதும் சரியாக இருந்தது. 'லேப்டாப்ல இருக்கற என்னோட வேற மொபைல் தான் அந்த இன்ஃபார்மர்", எனச் சொல்லிக்கொண்டே அழைப்பினை ஏற்றுக் கொள்ளாமல் சிவப்பு பட்டனை அழுத்தினான். நடந்து சென்று வேறு ஒரு எலெக்ட்ரானிக் உபகரணத்தை உயிர்பித்தான். பெரிய மானிட்டரில், லேப்டாப் தற்போது இருக்கும் இடத்தை ஜி.பி.ஆர்.எஸ் மூலம் உடனுக்குடன் தகவல் தர ஆரம்பித்தது.


                                                                                                          --- முற்றும் 

பின்குறிப்பு : 'குறியீடு' என்பது பாஸ்வேர்டை மட்டும்  குறிக்க வேண்டுமென்பதல்ல. யூசர் நேமை குறிக்கும் சொல்லாகவும் இருக்கலாமல்லவா?
நாங்களும் மாத்தி யோசிப்போமில்ல !

25 கருத்துகள்:

  1. கதை அருமை. சஸ்பென்ஸ், சூப்பர். நன்றி.

    # நமக்கு நாமே கமெண்ட்.

    பதிலளிநீக்கு
  2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  3. புத்திசாலித்தனம் அருமை
    நன்றி நண்பரே

    பதிலளிநீக்கு
  4. பாராட்ட வார்த்தைகளே இல்லை.

    பதிலளிநீக்கு
  5. கதை அருமை. பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்.
    பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  6. இதனை ஏற்கனவே படித்துள்ள நினைவு உள்ளது. இங்கு இப்போது மீண்டும் ஒருமுறை படித்தும் விட்டேன். ஆனால் இதையெல்லாம் புரிந்துகொள்ளும் அளவுக்கு என் மண்டையில் மஸாலா இல்லை. என் மேல் மாடி காலியாக உள்ளது. :)

    பதிலளிநீக்கு
  7. போட்டியின் போதே படித்து விட்டேன்! வாழ்த்துக்கள்!!

    பதிலளிநீக்கு
  8. வித்தியாசமான கோணம் இரசித்தேன் நண்பரே

    பதிலளிநீக்கு
  9. இக்கதையை படித்து கருத்துரைத்த அனைவருக்கும் நன்றிகள்.

    // வை.கோபாலகிருஷ்ணன் said...
    இதனை ஏற்கனவே படித்துள்ள நினைவு உள்ளது. //
    எனது வலைதளத்தில் படித்திருப்பீர்கள்.


    // என்னவென்றால், கொடுக்கப்படா இவ்வரிகள் அதே வரிசையில் கதையின் போக்கினை ஒத்து, வரவேண்டும். //

    அறிமுக வரிகளில் ஒரு திருத்தம். எழுத்துப்பிழை : 'கொடுக்கப்படா' என்பதை, 'கொடுக்கப்பட்ட' என திருத்தி வாசிக்கவும்.
    *ஸ்ரீராம் சார்! முடிந்தால் அறிமுக எழுத்துப் பிழையை சரி செய்யவும்.
    நன்றி.

    பதிலளிநீக்கு
  10. புரியாத ஸப்ஜெக்ட். கம்யுட்டர் ரகஸியம். அன்புடன்

    பதிலளிநீக்கு
  11. reminds me of sujathas rajesh kumars initial stories.... keep it up ji

    பதிலளிநீக்கு
  12. ஆறு குருடர்கள் ஒரு யானையை விவரித்தால் எப்படி இருக்கும் அந்த ஆறில் நானும் ஒருவன் மாத்தி யோசித்தது தெரிகிறடு வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  13. #மேம்போக்கா படிச்சா அத கண்டுபிடிக்க முடியாது.#
    இது இந்த கதைக்கும் பொருந்தும் :)

    பதிலளிநீக்கு
  14. மாறுபட்ட எண்ணங்களுடன்
    சிறந்த கதைப் புனைவு
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  15. நல்லதொரு அறிவியல் புனைக்கதை! பாராட்டுக்கள்!

    பதிலளிநீக்கு
  16. வல்லவனுக்கு வல்லவன் இவ்வையத்தில் உண்டு என்று சொல்வார்கள். இந்த விஷ்ணுவை தூக்கிச் சாப்பிட்டுவிடும் படியாக ஒருவர் வரக்கூடும்.
    அறிவியலில் ஆர்வம் இருப்பவர்களுக்கு சுவாரசியம் தரக்கூடிய கதை. என்னை போன்ற 60+ எல்லாம் ஒதுங்கிவிடுகிறோம்.

    மாதவனுக்குப் பாராட்டுக்கள்.

    ஒரு சின்ன யோசனை: வாங்கிப் போடும் கதைகளில் நகைச்சுவையே காணோமே! கொஞ்சம் கொண்டு வாருங்களேன்.

    பதிலளிநீக்கு
  17. கதை நன்றாகத்தான் இருக்கிறது. சுஜாதாவை ஞாபகப் படுத்தியதுதான் ஒரு குறை.

    பதிலளிநீக்கு
  18. நல்ல கதை...
    சவால் சிறுகதைப் போட்டியில் வாசித்த கதை...
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!