செவ்வாய், 20 நவம்பர், 2018

கேட்டு வாங்கிப் போடும் கதை - அன்புள்ள பாஸ் - துரை செல்வராஜூ
அன்புள்ள... பாஸ்!..
துரை செல்வராஜூ 

================முத்து முத்தான கையெழுத்து...

அந்த ஏர் மெயில் கடித உறையைக்
கையில் வாங்கியதுமே அவனது கண்கள் கசிந்தன...

ஸ்ரீ J.BASKARAN.,
Staff No: 1256
Crescent Catering Services.,
Post Box No: AA 104.,
Salmiya.,
KUWAIT...

அவள் - வளர்மதி இப்படித்தான்...

தமிழில் எழுதினாலும் ஆங்கிலத்தில் எழுதினாலும்
ஸ்ரீ - என்று எழுதி விட்டுத் தான் பெயரை எழுதுவாள்...

கடிதம் வந்த நாளை நோக்கினான் - பாஸ்கர்...

ஆறேழு நாட்களுக்கு முந்தைய தேதி...

கம்பெனியிலிருந்து போஸ்ட் ஆபீஸுக்குச் சென்று
கடிதங்களை எடுப்பவன் என்றைக்குப் போய் எடுத்தானோ?...

என்றைக்குக் கொண்டு வந்து கொடுத்தானோ?..
இவன் இன்றைக்கு வந்து கொடுக்கிறான்!...

ஏதோ... கடிதம் கைக்கு வந்து சேர்ந்ததே!..
அதுவரைக்கும் சந்தோஷம்....

கடித உறையை மெல்லப் பிரித்தான்...

மஞ்சள் மணம் கமகம என்றிருந்தது...

குளித்து விட்டு வந்து எழுதியிருப்பாள் போல!..

ஒரு கணம் நெகிழ்ந்து நெஞ்சோடு அணைத்துக் கொண்டான்...
வளர்மதி அருகிலிருப்பதைப் போன்றதொரு உணர்வு...

ஆனாலும் - கடிதத்தை வாசிக்க வேண்டுமே!...

ஆனந்த விநாயகர் துணை!...

அவளுக்கு இஷ்டமான பிள்ளையார்...

பெரிய கோயில் கோட்டை வாசலில் சிறிய சந்நிதியில்
கொழுக்... மொழுக் - என்று நின்றிருப்பார்...

அங்கே கோயில் வாசலில் பலதரப்பட்ட வியாபாரங்கள்...
எப்போது இரைச்சலாக இருக்கும்..

ஆனாலும் , அந்தப் பிள்ளையார் சந்நிதியில் பத்து நிமிஷம் தியானம் செய்து
விட்டுத் தான் கோயிலுக்குள் நுழைவாள் - வளர்மதி...

அந்தப் பிள்ளையாருக்கு ஆனந்த விநாயகர் என்பது தான் பெயரா?..

இல்லையில்லை.. இவளாக வைத்துக் கொண்டது...
சமயத்தில் சந்தோஷ கணபதி என்றும் கொஞ்சி விட்டு வருவாள்...

மெல்லிய புன்னகையுடன் கடிதத்தைத் தொடர்ந்தான்...

அன்புள்ள...... பாஸ்.,

ஊதாப் பூ விழிகளைத் தான்
உறங்காமல் செய்து விட்டு
ஊர் கடந்து போனவனே
நலமா... நலமா!..

நெஞ்சுக்குள் இருப்பவனே..
நினைவுக்குள் இனிப்பவனே..
நிழலாகத் தொடர்பவனே..
சுகமா... சுகமா!...

சரி.. இன்னைக்கு இந்தக் கவிதை போதும்...

அப்புறம் எப்படி.. சாப்பிட்டீங்களா.. இல்லையா!..

இந்த நேரம் என்ன செஞ்சுக்கிட்டு இருக்கீங்க?..
ஸ்டோர்..ல வேலை அதிகமா இருக்கா...
அங்கே வெயில் அதிகமா இருக்கும்..ன்னு சொல்றாங்க...

மனசுக்கு ரொம்பவும் கவலையா இருக்கு...
இருந்தாலும் சந்தோஷமா இருக்க முயற்சிக்கிறேன்..

சந்தோஷ கணபதிய பார்த்து மூனு மாசம் ஆகுது...

அங்கே வளைகாப்பு போட்டு அழைச்சுக்கிட்டு வந்தாங்களா...
இங்கே வந்தும் வெளிய எங்கேயும் போகக் கூடாது..ன்னு சொல்லிட்டாங்க....

இருந்தாலும் புளியந்தோப்பு பிள்ளையாருக்கு தினசரி நெய் விளக்கு
போட்டுக்கிட்டு இருக்கேன்...

புள்ளத்தாச்சி பொண்ணு ஒக்காந்தே இருக்கக் கூடாது...
தினசரி காலாற நடக்கணும்... - ன்னு அப்பத்தா சொல்லிட்டாங்க...

அதனால தினசரி பிள்ளையார் கோயில் வரைக்கும் நடந்துட்டு வர்றேன்....
கேணியிலயும் என்னையவே தண்ணி இறைக்க விட்டுட்டாங்க!...

பதினைஞ்சு குடம்!.. கையெல்லாம் வலிக்குது!..

இதப் படிச்சுட்டு உடனே கண்ணைக் கசக்கிக்கிட்டு இருக்காதீங்க....

உங்க பையன் - களுக்..ன்னு பொறக்க வேணாமா.. அதுக்காகத்தான்...

இதை எழுதுறப்போ இந்தப் பக்கம் சுளுக்...ன்னு ஒதைக்கிறான்...

ஒவ்வொரு சமயம் தலையால முட்டுற மாதிரி இருக்கு...

பக்கத்தில இருந்து இதை எல்லாம் பார்க்கிறதுக்கு
உங்களுக்கு கொடுத்து வைக்கலையே.... ன்னு ஏக்கமா இருக்குது...

நான் என்னென்னமோ நெனைச்சுக்கிட்டு இருந்தேன்...
எல்லாத்தையும் வாரிக் கொடுத்த சாமி சிலதை மட்டும் கொடுக்கலை...

என்னான்னு.. கேக்க மாட்டீங்களா?...

புள்ள பொறக்கறப்ப நீங்க என் பக்கத்துலயே இருக்கணும்....ன்னு...

ஆனா... நாம நெனைக்கிறதெல்லாம் நடந்துடுதா பாஸ்!...

பொருளாதார பூதம்... அதுதான் பொழுதுக்கும் முன்னாலயே நிக்குது...

ஒனக்கா.. எனக்கா.. ந்னு கயிறு இழுக்கிற மாதிரி இருக்கு...

கேரட், தக்காளி விலை எல்லாம் நாலணா எட்டணா ...ன்னு விலை ஏறிப் போச்சு...

நீங்க அனுப்புற டிராப்ட் மாத்தி பணம் எடுக்க பதினைஞ்சு நாளாகுது...
அதுனால ஒன்னும் பிரச்னை இல்லை... இருந்தாலும் சொன்னேன்...

அப்பா தான் திருவையாத்துக்குப் போய் மாத்திக்கிட்டு வர்றாங்க...

மாமா அத்தைக்கு நீங்க பணம் அனுப்புறது இல்லையா?...
அத்தை கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்..ன்னு இருக்காங்க....

வளைகாப்பு போட்டு இங்கே அழைச்சுக்கிட்டு
வந்ததுக்கு அப்புறம் ஒரு தடவை வந்து பார்த்துட்டுப் போனாங்க!...

உங்க தங்கச்சி வரலை... வெளிய வரக்கூடாதாம்..
அப்புறமா - அண்ணி எப்படியிருக்கீங்க..ன்னு லெட்டர் எழுதியிருந்திச்சு..

பிரசவம் திருவையாத்து...லயா.. தஞ்சாவூர்..லயா.. ன்னு
அத்தை கேட்டாங்க!...

நானே வீட்டு..ல பார்த்துடுவேன்... நரசம்மா....ல்லாம் எதுக்கு?... ன்னு
எங்க அப்பத்தா சொன்னாங்க...

அதுகு அப்பா சத்தம் போட்டாங்க -
ஒங்க காலம் ..ன்னு நெனைச்சுக்கிட்டயா?.. - ன்னு..

நம்ம கோயில் ஐயர் மக காயத்ரி தஞ்சாவூர்...ல டாக்டரா இருக்காங்க...
அவங்க ஆஸ்பத்திரியில சொல்லி வெச்சிருக்கு...

நேத்திக்கு சாயங்காலமா வந்து என்னை செக்கப் செஞ்சுட்டு சொன்னாங்க...
எல்லாம் நார்மலா இருக்கு.. கவலைப்படாதீங்க... அப்படின்னு...

எனக்கு வெக்கம்...ன்னா வெக்கம்... வெளிய சொல்ல முடியலை...

தலை குளிச்ச தேதி கேட்டாங்க... சொன்னேன்...

அடுத்த மாசம் ஏழாந்தேதி வாக்குல புள்ள பொறக்கலாம்... ன்னு சொல்லியிருக்காங்க....

காலு அப்பப்போ லேசா வீங்கிக்குது... அப்படித்தான் இருக்குமாம்...
ரெண்டு டானிக் எழுதி கொடுத்திருக்காங்க....

புள்ள வயித்துக்குள்ள குண்டா இருப்பான் போல இருக்கு.. சொன்னாங்க..

சுகப் பிரசவமா ஆவணும்.. மகமாயி... பாதயாத்திரையா வர்றேன்.... ன்னு
மாரியம்மன் கோயிலுக்கு வேண்டிக்கிட்டு இருக்காங்க அம்மா!...

தம்பி செந்திலு தான் கூடமாட ஒத்தாசையா இருக்கான்...
தொட்டில் கயிறு, மணி, கிலுகிலுப்பை ஏதேதோ வாங்கி வைச்சிருக்கான்..

புள்ளை பொறந்ததும் அவந்தான் முதல்ல தூக்குவானாம்!..
இப்பவே சொல்லி வெச்சிட்டான்...

புள்ளை வயித்துக்குள்ள இருக்கறப்போ அழுவுமா.... ந்னு கேட்டான்...

வீட்டுல எல்லாரும் சிரிச்சாங்க.... ஒரே ஓட்டமா வெளியே ஓடிட்டான்...

அப்புறம் ஒரு நல்ல சேதி.. எங்க செவலை பசு கன்னு போட்டுருக்கு...
வெள்ளிக்கிழமை அதுவுமா... கிடேரி கன்னு... ரொம்ப நல்லது...ன்னாங்க...

எங்க பழைய வீட்டுக்குப் பின்னால
ஒரு மாந்தோப்பு இருக்குதே.. அது விலைக்கு வருது...

வாங்கிப் போடலாமா..ன்னு அப்பா கேட்டாங்க....

உங்க அம்மாவுக்கு எப்பவுமே சந்தேகம்...
அதிலயும் எங்க ஊருல வாங்கிறதுல அவுங்களுக்கு இஷ்டமே இல்லை....

அறுபதாயிரம் ஆகுமாம்... அப்பா அடுத்த வருசம் ரிட்டயர்டு ஆகிறாங்க...
ஏதோ பணம் எல்லாம் வருமாம்... உங்களால புரட்ட முடிஞ்சதை அனுப்புங்க..
இப்போ அட்வான்ஸ் கொடுத்து வைக்கிறது நல்லது...

அந்த மாந்தோப்பு பழம் எல்லாம் நல்லா இருக்கும்...
இப்பவே அப்படி இப்படி.. ன்னு சேர்த்து வெச்சா பிள்ளைகளுக்கு ஆகும்...

என்னடா இவ.. நம்மைக் கேக்காமலேயே எல்லாம் ரெடி பண்றாளே..ன்னு
நெனைக்காதீங்க... என் மனசுக்குப் பட்டதைச் சொன்னேன்....

பாஸ்... எல்லாமே உங்க இஷ்டந்தான்...
உங்கள மீறி எதும் செய்ய மாட்டேன்..

அப்புறம் எங்க பெரியம்மா... பலகாரம் எல்லாம் சுட்டுக்கிட்டு அன்னைக்கு
வந்திருந்தாங்க... உங்க தங்கச்சியப் பத்திக் கேட்டாங்க...

எவ்வளவு போடுவீங்க... என்ன எல்லாம் செய்வீங்க... ன்னு விசாரிச்சாங்க...

அந்த அண்ணன் திருச்சி பேங்க்.. ல அக்கவுண்ட் வேலை பார்க்குது...
நல்ல குணம்.. சிவப்பா லட்சணமா இருக்கும்...

நான் உங்கள ஒரு வார்த்தை கேட்டுட்டு சொல்றேன்...ன்னு சொல்லியிருக்கேன்...

மாமா அத்தையை கலந்து பேசிட்டு எழுதுங்க...
உங்க அம்மா என்ன சொல்றாங்களோ....

எங்க வீட்டு சம்பந்தமே வேணாம்... ந்னு சொன்னாலும் சொல்லுவாங்க...

இருந்தாலும் மல்லிகாவுக்கு பதினெட்டு வயசு ஆகிட்டது...
நம்ம கடமையை நல்லபடியா செஞ்சுடணும்...

நீங்க குவைத்துக்கு போனப்போ அடகு வைச்ச நகையில பத்து பவுன் மீட்டு
இருக்கோம்... இன்னும் பத்து பவுன் அடகுல இருக்கு...

நான் இப்போ ஏழு பவுன் போட்டிருக்கேன்...

இதை வைச்சிக்கிட்டு -
மத்தது எல்லாம் மல்லிகாவுக்குப் போட்டுடலாம்...
மேல் செலவுங்களுக்கு எப்படியாவது புரட்டிக்கலாம்...

நீங்க அங்கே போயி ஆறு மாசந்தான் ஆகுது...
மகனைப் பார்க்க ஊருக்கு வரமுடியுமா...ன்னு தெரியலை...

நெனைச்சா எம்மேல எனக்கே கோவம் வருது....
ஏன்.. அனுப்பி வெச்சோம்...ன்னு இருக்கு...

அப்புறம்... உங்க உடம்பைப் பார்த்துக்குங்க...
எல்லாரோடயும் ராசியா இருங்க... முன் கோபம் வேணாம்..
அதுக்காக களவாணிப் பசங்க சகவாசம் எல்லாம் வெச்சிக்காதீங்க...

நல்ல பேரோட நல்லபடியா திரும்பி வரணும்...
காசு பணத்துக்கு மேல நம்மோட கவுரவம் முக்கியம் ...

சாயங்காலம் குளிச்சிட்டு வந்து எழுத ஆரம்பிச்சேன்...
இப்போ இங்கே ராத்திரி எட்டு மணியாகுது...
அங்கே சாயங்காலமா இருக்கும்... இல்லையா!...

இன்னும் எழுதணும் போல இருக்கு...

மனசுல இருக்கிற எல்லாத்தையும் கொட்டி எழுதுறது... ன்னா
இந்தப் பூமியே பத்தாது...

அப்படி இருக்க - இந்த நாலு தாள் எந்த மூலைக்கு?....

உங்க மகன் வயித்துக்குள்ள தூங்கிட்டான் போல இருக்கு...

எனக்கும் கொஞ்ச கொஞ்சமா தூக்கம் வருது..

ஆனா - படுத்தாலும் கண்ணை மூடி தூங்க முடியலை....

ஏதேதோ நெனைப்பு... கண்ணெல்லாம் கலங்கிடுது...

வேற என்ன.. மனசு ஓரத்துல இருக்குற கஷ்டமாத் தான் இருக்கும்..
அந்தக் கண்ணுத் தண்ணியால தலையணை நனைஞ்சிடுது...

புள்ளை பொறக்குற நேரம் நல்லாயிருக்கணும்...
நம்ம கவலையெல்லாம் தீர்ந்து ஒன்னாயிருக்கணும்...

கூடிய சீக்கிரம் -
அந்தத் தலையணை ஆனந்தக் கண்ணீரால நனையணும்...

அதை நேர்ந்துக்கிட்டு தான் நெத்தியில பொட்டு வைச்சிக்கிறேன்...

அடடா... ஏதேதோ எல்லாம் சொல்லிட்டேன்.. பாஸ்!..
அதை எல்லாம் மனசுல வெச்சிக்காம ஜாலியா இருங்க!...
  என்னது... கவிதையா!?... சரி!...

முல்லையால் மாலையிட்டால்
வாடிவிடும் என்று எண்ணி
என்நெஞ்சத்தின் நிழலுக்கு
முத்தத்தால் மாலையிட்டேன்...

போதும்...டா செல்லம்!... இப்போதைக்கு இது போதும்...

என்றும் அன்புடன்,
நெஞ்சின் நிழல் - வளர்மதி...
14.5.1995...


***

பாஸ்கரன் கண்ணீரைத் துடைத்துக் கொள்வதற்கும் -

அரே.. பாய்!.. ஆஜாவ்.. ஆஜாவ்.. ரைஸ் லோடு வர்து...
லேபர்க்கு பர்மிஷன் இல்லே.. லாரி மட்டும் ஸ்டோர்க்கு வர்து...
வா... வா... அல்லாரும் வா... சீக்ரம் எடு... சீக்ரம் எடு!..
அல்லாருக்கும் நாலு மணி நேரம் ஓவர் டைம்!...

ஸ்டோர் மானேஜர் கத்துவதற்கும் சரியாக இருந்தது...  

83 கருத்துகள்:

 1. நான் பந்தளத்தில் இப்பத்தான் கதை தரிசனம் இன்னும் முழுவதும் ஆகவில்லை

  துரை அண்ணா அட!! வித்தியாசமாக !!!!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பந்தளத்திலா!...

   சபரி நாதனின் கொட்டாரத்துக்கு அருகிலா!...

   சகோதரி பந்தளத்தில் எனும்போதே மனம் மயங்குகின்றது..
   சாமியே.. சரணம் ஐயப்பா!...

   நீக்கு
 2. வணக்கம் ஸ்ரீராம், துரை அண்ணா, கீதாக்கா எல்லோருக்கும்

  கீதா

  பதிலளிநீக்கு
 3. இதோ வரேன் காப்பி ஆத்திட்டு கண்ணியை கவனித்து விட்டு வாக்கிங்க...

  கீதா

  பதிலளிநீக்கு
 4. அன்பின் ஸ்ரீராம், கீதா/ கீதா மற்றும் அனைவருக்கும் நல்வரவு....

  பதிலளிநீக்கு
 5. கண்ணீருடன் படித்தேன். அரபு நாடுகளின் இந்தியர்கள் வாழ்க்கை இப்படித் தான் என அறிந்தாலும் படிக்கையில் மனம் கசிகிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. என்ன செய்வது..
   பிறவிப் பெருங்கடலில் - இப்படியும் சிலரது வாழ்க்கைப் படகு!...

   அன்பான கருத்துரைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 6. இன்று எனது சிறுகதையைப் பதிவு செய்த ஸ்ரீராம் அவர்களுக்கு நன்றி...

  வாசித்து கருத்துரைக்க வரும் அனைவருக்கும் நல்வரவு...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நல்ல கதையைப் படிக்கும் வாய்ப்புக்கு ஸ்ரீராமுக்குத்தான் நன்றி சொல்லணும். கதை உணர்வு பூர்வமாக இருந்தால் அதன் சிறப்பே தனிதான்.

   நீக்கு
  2. நல்ல கதையைப் படிக்கும் வாய்ப்புக்கு ஸ்ரீராமுக்குத்தான் நன்றி சொல்லணும். கதை உணர்வு பூர்வமாக இருந்தால் அதன் சிறப்பே தனிதான்.

   நீக்கு
 7. அனைவருக்கும் காலை வணக்கம், வாழ்க வளமுடன்.

  பதிலளிநீக்கு
 8. அயலக வாழ்வின் துயரம் எழுத்துக்களில் கன் முண்ணே வருகிறது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்...
   அயலகத்தின் வாழ்க்கையை
   தாயகத்தில் புரிந்து கொண்டோர் மிகச் சிலரே!..
   தங்களது கருத்துரைக்கு மகிழ்ச்சி.. நன்றி...

   நீக்கு
 9. வெளிநாடுகளில் இருபவர்களுடன் அந்தக் காலத்தில் கடிதம் மூலம் பேசிக் கொள்ளும் வடிவில் கதை.
  பாஸ்கரன் கண்ணீரை துடைத்துக் கொள்வது போல் நானும் கண்ணீரை துடைத்துக் கொண்டேன்.

  //மனசுல இருக்கிற எல்லாத்தையும் கொட்டி எழுதுறது... ன்னா
  இந்தப் பூமியே பத்தாது...//

  உண்மை உண்மை.

  கடிதம் சொல்லும் குடும்பவிவரம் அருமை.
  வளர்மதியின் குடும்ப பொறுப்பு, கடமை, அன்பு, பாசம் அனைத்தும் தெரிகிறது.
  அத்தையின் நினைப்பை இடையே சொல்லிக் கொள்வதும் இயல்பு.
  அருமையான கதையை சொன்ன சகோவிற்கு வாழ்த்துக்கள்.

  கேட்டு வாங்கி பகிர்ந்த ஸ்ரீராமுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்...

   வெளிநாட்டில் வேலை செய்யும் இளைஞர்களுக்கு
   வளர்மதியைப் போன்ற பெண்கள் வரப்ரசாதம்...

   தங்களது கருத்துரைக்கு மகிழ்ச்சி.. வாழ்த்துரைக்கு நன்றி..

   நீக்கு
 10. கதை அருமை! மனம் நெகிழ்ந்துவிட்டது அண்ணா….கிட்டத்தட்ட உங்கள் அனுபவம் ஆனால் கதை வடிவில் என்றே தோன்றுகிறது….இப்படி வெளிநாட்டிற்கு நம் குடும்ப கஷ்டங்களைத் தீர்க்க காரணங்களுக்காகப் போகும் கணவன்
  மனைவி யின் வேதனைகள் சொல்லமுடியாத வருத்தங்கள்… பேசுவது போன்ற கடிதம்…….அதுவும் அப்போதெல்லாம் ஃபோன் வசதி கூட அவ்வளவு கிடையாது…
  அருமை அண்ணா…

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இந்தக் கதைக்குள்
   நாற்பது சதவிகிதம் நான் இருக்கிறேன்...

   >>> .அதுவும் அப்போதெல்லாம் ஃபோன் வசதி கூட அவ்வளவு கிடையாது… <<<

   5 தினாருக்கு தொலைபேசி அட்டையை வாங்கிப் போட்டு பேசும்போது
   கரகரகர - என்ற சத்தத்துக்கும் இரைச்சலுக்கும் நேரம் போய் விடும்...

   மீதியில் - ஹலோ... ஹலோ என்று அரற்றினால்
   அந்தப் பக்கம் கண்ணீரும் கம்பலையுமாய் -
   அம்மா அப்பா மனைவி என்று -

   அதெல்லாம் மிகப்பெரிய...அத்தியாயங்கள்...

   நீக்கு
 11. மஞ்சள் மணம் கமகம என்றிருந்தது...

  குளித்து விட்டு வந்து எழுதியிருப்பாள் போல!..//

  ஆஹா ரசித்த வரிகள்……

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அவள் காலாச்சாரத்தில் கட்டுண்டவள்...
   மஞ்சளை மறந்ததில்லை...

   மகிழ்ச்சி...

   நீக்கு
 12. பெரிய கோயில் கோட்டை வாசலில் சிறிய சந்நிதியில்
  கொழுக்... மொழுக் - //

  அதானே!! ஸ்ரீராம் அன்று போட்ட திருமண மண்டப பிள்ளையார் மட்டும் – இளைத்துப் போயிருந்தார்! ஹா ஹா ஹா...நினைவு வந்தது!!!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம்...

   தஞ்சை பெரிய கோயில் வாசலில் துவார கணபதி...
   இவரது படத்தை அடுத்தொரு பதில் தருகின்றேன்...

   நீக்கு
 13. இவளாக வைத்துக் கொண்டது...
  சமயத்தில் சந்தோஷ கணபதி என்றும் கொஞ்சி விட்டு வருவாள்...//

  அதுதான் பிள்ளையார்…நாம் எந்த வடிவில் வேண்டுமானாலும் நினைத்து கொஞ்சலாம் அவரை………………நான் ஆஞ்சுவையும் கொஞ்சுவதுண்டு!!! ..என்றாலும் பிள்ளையார் கூடக் கொஞ்சம்……நானும் அவரும் சேர்ந்து டான்ஸ் எல்லாம் ஆடுவோமாக்கும்!!!!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பிள்ளையாருக்கு மட்டும் விசேஷமாக செல்லப் பெயர்கள் எல்லாம் சேர்த்துக் கொள்ளலாம்...

   நாளைக்கு நீங்களே ஒரு பிள்ளையார் கோயில் கட்டினால் (கட்டுங்கள்)
   ரங்கவிநாயகர் என்றோ, கீதகணபதி என்றோ நாமகரணம் செய்யலாம்..

   பிள்ளையார் சந்தோஷமாக ஆவாகணம் ஆகிவிடுவார்!...

   வாழ்த்துக்கள்..

   நீக்கு
 14. அன்புள்ள...... பாஸ்.,//

  ஆ ஆ ஆ முதலில் இங்கு ஸ்ரீராம் பாஷை அண்ணாவின் கதையிலும் எட்டிப் பார்த்துருச்சோனு நினைச்சேன் அப்புறம் டக்கென்று ஆ நாயகன் பெயர் பாஸ்கரனாச்சே!!!!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கதையை கட..கட என்று எழுதி விட்டு
   என்னடா இதற்குத் தலைப்பு என்று யோசித்தபோது..

   மிகுந்த பற்றும் பாசமும் ஊடாடிய வார்த்தையாகக் கண்டது - பாஸ்(கரன்)..

   அப்படியே கதாநாயகன் பெயர் மாறியது...
   கதைக்கான தலைப்பு அன்புள்ள பாஸ்!... - என்றமைந்தது..

   நீக்கு
  2. துரை சார்... நிறையப் பேர் வீடுகள்ல, அந்த மனைவி, வெளிநாட்டில் வேலைபார்க்கு தன் கணவனுக்கு பிறர் அறியாதவாறு கடிதம் எழுத முடியாது என்பதும், என்ன எழுதினாலும் மாமனார்/மாமியார் படிக்க நேரிடும் என்ற நிலையில் இருப்பவர்கள் உங்கள் ஞாபகத்துக்கு வந்தார்களா?

   கதையில் வரும் பெண்ணுக்கு அந்த விதத்தில் லக் இருக்கிறது. ஹா ஹா.

   நீக்கு
  3. ஆமாம் அண்ணா தலைப்பை ரசித்தேன்...கதைக்குள்ளும் வருதே!!! கடிதம் தொடக்கத்தில்...

   கீதா

   நீக்கு
 15. ஊதாப் பூ விழிகளைத் தான்
  உறங்காமல் செய்து விட்டு
  ஊர் கடந்து போனவனே
  நலமா... நலமா!..

  நெஞ்சுக்குள் இருப்பவனே..
  நினைவுக்குள் இனிப்பவனே..
  நிழலாகத் தொடர்பவனே..
  சுகமா... சுகமா!...//

  வாவ் வாவ்!!! கவிதையிலேயே கடிதம்11 சூப்பர் அண்ணா நீங்க செமையா எழுதறீங்க….ரசித்தேன் ….மிகவும்!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

   நீக்கு
  2. ஊதாப் பூ விழிகளைத் தான்
   உறங்காமல் செய்து விட்டு
   ஊர் கடந்து போனவனே
   நலமா... நலமா!..

   ஆகா...
   இதெல்லாம் வளர்மதி சொன்ன வரிகள்...

   புருசன் மேல அவ்வளவு பாசம்!..

   நீக்கு
 16. //அத்தை கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்..ன்னு இருக்காங்க....//

  ஹா ஹா ஹா ஹா ஹா கீதாக்கா ராயல்டி கேக்கலையா!!!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. >>> கீதாக்கா ராயல்டி கேக்கலையா!.. <<<

   போனாப்போகுது... ன்னு விட்டுட்டாங்க..

   நீக்கு
 17. காலை வணக்கம் 🙏.

  மனதைத் தொட்ட கதை. வெளி நாடுகளில் மாநிலங்களில் வாழும் பலரின் நிலை இப்படியே.

  சிறப்பாகச் சொன்ன கதாரிசியருக்குப் பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வெங்கட்..

   தங்கள் வருகையும் பாராட்டும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 18. பாஸ்... எல்லாமே உங்க இஷ்டந்தான்...
  உங்கள மீறி எதும் செய்ய மாட்டேன்..//

  ஹா ஹா ஹா ஹா ஹா…..இது என்னவோ சேதி சொல்லுதே…முன்னாடி வந்த வரிகளுக்கும் இதையும் சேர்த்துப் பார்த்தா…….நோ வம்புஸ்…….

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. >>> இது என்னவோ சேதி சொல்லுதே… <<<

   சேதியா!...

   அதென்னவோ தெரியலை...
   இந்தப் பொண்ணுங்க சொல்றதுக்கெல்லாம் அர்த்தத்தை
   பொண்ணுங்க தான் வந்து கண்டுபுடிச்சு சொல்லுதுங்க...

   நாம என்னத்தைக் கண்டோம்!...

   நீக்கு
  2. ஹா ஹா ஹா ஹா....பாம்பின் கால் பாம்பறியும்!!!!

   கீதா

   நீக்கு
 19. எனக்கு பரிவை சே.குமார் நண்பரின் ஞாபகம் வந்தது...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் தனபாலன்..
   தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

   நீக்கு
  2. தனபாலன் எனக்கும் குமார் நினைவுக்கு வந்தார், .அப்புறம் கருவேல மரங்கள், ராஜாராம் நினைவுக்கு வந்தார்.
   வெளி நாடுகளில் வேலைப்பார்க்கும் சகோதர்களின் பிரிவு துயரை படம் பிடித்து காட்டிய அன்பர்கள்.

   நீக்கு
 20. கதையை முழுவதுமாகப் படித்துவிட்டேன். வெளிநாட்டிலேயே பலப்பல வருடங்கள் இருந்தவனுக்குப் புரியும் கதை. எத்தனை பேர்களது அனுபவம் தெரிந்திருக்கும், எத்தனை அறிவுரைகள் கேட்டிருப்பேன்....

  கடவுளின் அருளால் நாங்கள் அனேகமாகப் பிரிந்திருந்ததே கிடையாது. அவனுக்கு என் நன்றியும் வணக்கமும்.

  கதையைப் பற்றி எழுத பிறகு வருகிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் நெ.த.,

   >>> வெளிநாட்டிலேயே பலப்பல வருடங்கள் இருந்தவனுக்குப் புரியும் கதை... <<<

   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி...

   கதையைப் பற்றி நிச்சயம் எழுதவும்.. காத்திருக்கிறேன்...

   நீக்கு
  2. கீழே எழுதியிருக்கிறேன் துரை செல்வராஜு சார். மனம் நிறைந்த பாராட்டுகள், உறவை உங்கள் எல்லாக் கதைகளிலும் நேர்த்தியாகச் சொல்லுவதால். உறவின் நேர்த்திதான் நம் கலாச்சாரம். அதை எப்போதும் நிறைவாகவே கொண்டுவருகிறீர்கள்.

   தொடர்ந்து கதை எழுதுங்கள். உங்களுக்கு நன்றாக வருகிறது.

   நீக்கு
 21. வளர்மதியின் காதலும் பாசமும் பண்பும் அத்தானுக்கு
  வந்து சேர்ந்துவிட்டது. இந்தப் பாசங்களை எல்லாம் விட்டு விட்டு எங்கோ வெளினாட்டில் வெய்யிலில் ,உருக்கும் பாஸ்கர் நிலமை. மிகப் பாவம்.
  ஒரு செய்திவிடாமல் என்ன அழகான் கடிதம். மனம் நிறை வாழ்த்துகள் அன்பு துரை.
  நன்றி ஸ்ரீராம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. >>> ஒரு செய்தி விடாமல் என்ன அழகான கடிதம்..<<<

   தங்களன்பின் வருகையும் கருத்துரையும்
   வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 22. உணர்ச்சிகள் அழகாக பதிவு செய்யப்பட்டிருக்கின்றன -ball to ball commentary. by திரு.துரைராஜ்.
  இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழும் இலக்கணம் பயிலாவிடில் இப்படி பிலாக்கணம் பாடுவதை தவிர்க்க முடியாது. -தொழிலாளி படத்தில் எம். ஜி ஆர்.

  ஆசைப்பட ஆசைப்பட ஆய் வரும் துன்பம்- திருமூலர்.

  ஆனால் சராசரி மனிதர்களின் செவிகளில் இந்த அறிவுரைகள் என்றும் ஏறாது. அவர்களின் வாழ்வு என்றென்றும் இன்பத்திற்கும் துன்பத்திற்கும் இடையே கண்ணாம்பூச்சி விளையாட்டுதான்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்...
   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி..
   பொருள் நிறைந்த கருத்துரைக்கு மனமார்ந்த நன்றி...

   நீக்கு
  2. பட்டாபிராமன் சார்... என் கருத்தைத் தவறா எடுத்துக்காதீங்க.

   மனிதர்களில் பெரும்பான்மையினர் இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழப் பழகாதவர்கள். காரணம் இன்னும் முன்னேறுவோமே என்ற உத்வேகம்தான். இல்லைனா, நாங்கள்லாம் (அதாவது என் முன்னோர்கள்) நெல்லையிலேயே இருந்திருக்கவேண்டியது. அங்கேயே கிடைக்கும் வேலையில் உழன்று அங்கேயே இருந்து மடிவது. வேறு வேலை பார்க்கச் செல்வோம், வேறு வாய்ப்புகளைத் தேடுவோம் என்று முனைவதால்தான் சென்னையே வெளியூர் மக்களால் நிரம்பிவழிகிறது. கிராமத்தை விட்டுவிட்டுச் சென்னைக்கு வந்தவர்களுக்கு, சென்னை என்ன, வெளிநாடு என்ன... எல்லாம் ஒன்றுதான்.

   ஆனால் இதில் அடிபடும் விஷயம், பலருக்கு தங்களது குடும்பத்தோடு வெளிநாட்டில் வசிக்கும் வாய்ப்பு அமையாததுதான். மத்திய வர்க்கம் அதற்குக் கீழ் உள்ளவர்கள் பெரும்பாலும் குடும்பத்துடன் அங்கு வசிப்பதில்லை. காரணம், வேலையின் நிலையாமையும், இரண்டு வருட காண்டிராக்ட் என்று ஒவ்வொரு இரண்டு வருடமும் விசா நீட்டிப்பும்தான். வெளிநாட்டில் (குறிப்பா கல்ஃப் தேசங்களில்) 10-30,000 ரூ சம்பாதிக்கறவங்க, வரி இல்லாத வருமானம் என்ற காரணத்துக்காக அங்க போறாங்க. இங்க அவங்களுக்கு அதைவிடச் சிறந்த வாய்ப்பு கிடைக்காததுதான் முக்கியக் காரணம்.

   குடும்பமும், பரவாயில்லை, சில வருடங்கள்தானே, அதுவும் குடும்பத்துக்காகத்தானே என்று பிரிந்திருக்கச் சம்மதித்துவிடுகிறது. அது பெரிய சோகக் கதைதான்.

   கணவன் இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை இந்தியா வருவான், ஒரு மாதம்தான் நேரம் கிடைக்கும். உறவினர்கள் வீட்டுக்கும் செல்லவேண்டும், மனைவியோடு கூடியிருக்கவேண்டும், சமீபத்தில்தான் திருமணம் ஆகியிருந்தால், கிடைத்த அவகாசத்துக்குள்ளேயே ஒரு பிடிமானத்தை (குழந்தையை) உருவாக்கவேண்டும் என்று அவர்களுக்கு அவ்வளவு டென்ஷன்.

   இங்கு குழந்தை பிறக்கும். அவன் வருவதற்கு பெரும்பாலும் முடியாது. (இல்லைனா, ஒரு விடுமுறையைத் தியாகம் செய்து 10 நாட்கள் இங்கு வந்து குழந்தையைப் பார்க்கணும்). அப்புறம் இரண்டு வருடங்களுக்கு ஒரு முறைதான் வந்து குழந்தையைப் பார்க்கமுடியும்.

   கடந்த 30 வருடங்களில் எப்படி வெளிநாட்டில் உள்ளவர்கள் தங்கள் குடும்பத்துடன் பேசுகிறார்கள் என்று நீங்கள் அறிய வாய்ப்பில்லை.

   நீக்கு
  3. நேரடியாக 30 வருடங்களுக்கு முன்பு இந்தியாவுக்கு பேசணும்னா, ஒரு நிமிடத்துக்கு 500 ரூபாய் ஆகும். இதனைத் தவிர்க்க அப்போவெல்லாம் (துபாய்) ஒரு பிளாக் மார்க்கெட் இருந்தது. ஒரு குறிப்பிட்ட நம்பருக்குத் தொடர்பு கொண்டால், அவங்க இரவு 10 மணிக்கு ஒரு கனெக்‌ஷன் கொடுப்பாங்க. அதுக்கு 30 திர்ஹாம் (3000 ரூ?) ஆகும். அதில் 40-45 நிமிடங்கள் பேசமுடியும். இது இல்லீகல் ஆனால் இப்படித்தான் பலர் பேசுவார்கள். கணவன் பேசப்போகிறான் என்று நடு நிசிவரை (அங்க 10:30 மணினா இங்கு இரவு 1 மணி) உறவினர்கள் காத்திருக்கணும்.

   டெக்னாலஜி வளர வளர இறைவனின் கருணை இவர்கள்பால் பாய்ந்தது. இப்போ ஸ்கைப் வாட்சப் போன்றவற்றின்மூலம் தொடர்ந்து தொடர்பு கொள்ள முடிகிறது.

   இப்படிக் கஷ்டப்பட்டு வெளிநாடு போகணுமா என்றால், பெரும்பாலும் குடும்பச் சூழ்நிலைதான் இதற்குக் காரணம்.

   தசாவதாரம் படத்தில் ஒளிப்பதிவுத் துறையில் பணியாற்றிய ஒருவர், அவரது மனைவியின் உடல்நிலைச் செலவு சில லட்சங்கள் ஆகிவிட்டதால் வெளிநாட்டுக்கு மிகக் குறைந்த சம்பளத்தில் வந்தார் (அங்கு அலுவலக கிளீனிங் காண்டிராக்ட் கம்பனியில் வேலை பார்த்தார்). அந்தக் கடன் அடைந்ததும் மீண்டும் சென்னை சென்றுவிடுவேன் என்று சொன்னார். இதுபோல் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரணம். பெரும்பாலும், மாட மாளிகைகள் கட்டுவோம், சென்னையில் பங்களா வாங்குவோம் என்ற லட்சியத்தோடு மனைவியைப் பிரிந்து வெளிநாட்டு வேலைக்கு யாரும் செல்வதில்லை.

   அங்கு செய்யும் உடலுழைப்பை இந்தியாவிலேயே செய்யமுடியாதா என்றெல்லாம் கேட்டால் அதற்குப் பதிலே கிடையாது. இது, ஏன் வங்கிப் பணி என்று இன்னொரு மாவட்டத்துக்குப் போய் வேலை பார்க்கணும், உள்ளூரிலேயே நிலத்தில் உழைத்தால் அல்லது வேறு வகைகளில் உழைத்தால் காசு சம்பாதிக்கமுடியாதா என்று கேட்பதைப் போன்றது.

   மொத்தத்தில் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி குடும்பச் சூழ்நிலைக்காக உழைக்கச் செல்பவர்கள்தான் மிக மிக அதிகமானவர்கள்.

   நீக்கு
  4. நீங்க ஓலா ஊபர் போன்று பல டாக்சி ஓட்டுபவர்களிடம் பேசினால், அவர்களில் பலர் தென் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியும். (யோகா டீச்சர்களாகவும் தென் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் பணியாற்றுகிறார்கள்). மனைவி குடும்பம் அங்கே இருக்கும். இவர்கள் இங்கு வேலை பார்த்துவிட்டு 2-3 மாதங்களுக்கு ஒரு முறை அவர்களைப் பார்க்கச் செல்வார்கள்.

   இதற்கு முக்கியக் காரணம் சரியான வேலைவாய்ப்பு இன்மைதான். மற்றபடி பேராசை, 'இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழத் தெரியாதவர்கள்' என்றெல்லாம் சொல்லமுடியாது.

   நீக்கு
  5. நண்பரே.உங்கள் கருத்து யதார்த்த நிலையை வெளிப்படுத்துகிறது. நான் என்னுடைய கருத்தை தெரிவித்தேன் அவ்வளவுதான். அது பலருக்கு கசப்பாகத்தான் இருக்கும். அதனால்தான் எனக்கு உலகம் சூட்டிய பட்டம் பிழைக்க தெரியாதவன். இருந்தாலும் இந்த உலகம் எல்லோரையும் வாழ வைக்கும். எல்லோருக்கும் அவரவர்களுக்குரிய ஒரு இடத்தை இறைவன் அளித்திருக்கிறான்.   மனிதனின் மனம் எப்போதும் கடந்த காலத்தில் அனுபவித்த/இழந்த தருணங்களை அசை போடுவதில் ஒரு இன்பம் காணுகிறது.அதை வெளிப்படுத்தும்போது அந்த அனுபவங்களை பெற்றவர்கள் அவர்களோடு இணைந்து கொள்கிறார்கள்.   அத்தகைய அனுபவம் இல்லாத நான் இந்த பதிவில் மூக்கை நுழைத்தது என்னுடைய .தவறு. .


   ஆனால் நன்றாக படித்து பெரிய நிறுவனங்களில் பணி புரிபவர்களின் வாழ்க்கை நிலை வேறு. தொழிலாளர்களாக வேலைக்கு செல்பவர்களின்நிலை வேறு. இரண்டும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வேறுபாடு போன்றது.   வலைப்பூவில் பலவிதமான மலர்கள் மலரும்.ஒவ்வொன்றும் ஒவ்வொரு வடிவம், ஒவ்வொரு நிறம், ஒவ்வொரு மணம் .இவையெல்லாம் ரசிக்க தெரிந்தால்தான் இங்கு வாழ முடியும். என் கருத்துக்களை புரிந்துகொள்ளாமல் அசிங்கமாக மலத்தை என் மீது வீசியவர்களையும் நான் ரசித்திருக்கிறேன்.அதனால்தான் பல ஆண்டுகளாக வலையில் வலம் வந்துகொண்டிருக்கிறேன். எல்லாம் எனக்கு தெரியும்.   இருந்தாலும் நான் இருப்பதைக்கொண்டு சிறப்புடன் வாழும் இலக்கணத்தை என்னுடைய வாழ்க்கை அனுபவங்கள் எனக்கு இளமையிலேயே கற்றுக் கொடுத்துவிட்டது.அனுபவத்தின் காரணமாகத்தான் என்னுடைய கருத்தை தெரிவித்தேன். என்னை பிழைக்க தெரியாதவன், ஏமாளி, குறுகிய எண்ணங்கள் படைத்தவன் ,பிறர் வாழ்க்கையில் முன்னேறுவதை காண சகியாதவன், என்று நான் கேளாமலேயே இந்த உலகம் எனக்கு சூட்டிய பட்டங்கள். நான் படித்து வாங்கிய பயன்படாத பட்டங்களோடு அதுவும் கிடக்கும்

   நீக்கு
  6. பட்டாபி சார்... உங்கள் கருத்தை மதிக்கிறேன். களத்தில் நானும் நெடிய அனுபவம் உடையவன் என்பதால் எழுதினேன். தவறாக நினைக்காதீர்கள்.

   நானும் கீழ்த்தட்டில் இருக்கும் பலரை அங்கு பார்த்துள்ளேன். எப்படி வாழ்க்கையை ஓட்டுகிறார்கள் என்பதே ஆச்சர்யமாக இருக்கும். அவர்களில் பலர், இருப்பதில் மோசமான உணவை உண்டு வாழ்பவர்கள் (உதாரணமா, நாளை காலாவதியாகும் சிக்கனை கிட்டத்தட்ட இலவச விலைக்கு வாங்கி உணவு உண்பார்கள். நான், காலை 4:30 மணிக்கு நடைப்பயிற்சிக்குப் போகும் வழியில் புறாக்களுக்கு உணவை ஒரு இடத்தில் போடுவேன். அங்கு ஏற்கனவே ஒருவர் போட்டிருந்த துவரம்பருப்பை பாகிஸ்தானியர் ஒரு டப்பாவில் அள்ளிக்கொண்டு போனதை-காரில் வந்து- கண்டிருக்கிறேன்). வேலை செய்த நேரம் போக, ஆங்காங்கு பிச்சை எடுத்து பணம் சேர்ப்பவர்களையும் கண்டிருக்கிறேன்.

   இவர்களில் பெரும்பாலானவர்கள், பெரிய வாழ்க்கையை எதிர்பார்த்து ஏஜன்டுகளிடம் வட்டிக்கு வாங்கிய காசைக் கொடுத்து விசா பெற்று வேலையில் மாட்டிக்கொண்டவர்கள். திரும்பப்போனால் கடன் வாங்கிய காசைக் கொடுக்கணும், இங்க இருந்து கஷ்டப்பட்டா 2-3வருஷத்திலாவது கடன் அடைக்கலாம் போன்ற கண்ணீர்க் கதைகளுக்குச் சொந்தக்கார்ர்கள்.

   இந்தியர்கள் மட்டுமல்ல, பாகிஸ்தானியர்கள், பங்களாதேசிகள் போன்று பலரும் இதில் உண்டு. பிலிப்பைன்சைச் சேர்ந்தவர்களின் கலாச்சாரம், அது ஒரு மாதிரியானது. அவர்களில் பெரும்பாலானோரும் கண்ணீர்க் கதைகளுக்குச் சொந்தக்கார்ர்கள்.

   நீங்கள் நம்புகிற, "இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழும்" கான்சப்ட்தான் நான் கடைபிடிப்பது. கடனோ, கடன் அட்டையோ இல்லாத வாழ்வு. அந்த பிரின்சிபிளினால் இழந்தது அதிக வரவு, பெற்றது எப்போதும் நிம்மதி. அதனால், பிறர் நம்மைப் பற்றிக் கூறும் விமர்சனங்கள் நமக்கு ஒரு பொருட்டல்ல.

   நீக்கு
  7. you are the author of your own troubles என்று ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. அவரவர் தலைவிதியை அவரவர்கள்தான் நிர்ணயித்துக்கொள்கிறார்கள் என்ற உண்மை என்பதை அறிந்தவர்கள் கோடியில்ஒருவராகத்தான் இருக்க முடியும். சிந்திப்பவர்களுக்குத்தான் இது புரியும். இந்த அவசர உலகில் நாம் எல்லாவற்றிற்கும் பிறரை சார்ந்துதான் வாழ வேண்டி உள்ளது. இந்த உலகில் நம்மை யாரும் சுயமாக சிந்திக்க விடுவதில்லை. நம்மை சுற்றியுள்ளவர்கள் நம்மை மூளை சலவை செய்துவிடுவதால் அவர்களை எதிர்த்து செயல்பட அசாத்தியமான மன உறுதியும் திடமான மனதும் இல்லாமையால் பலரால் கால்பந்துப்போல் பந்து கிழிந்து பயன்படாமல் போகும்வரை உதைபட்டுக்கொண்டிருக்கிறோம்.நம்மை குழப்புவதற்கு இந்த உலகம் இவ்வுலகில் வந்த நாளிலிருந்து வெளியேறும் வரை ஆட்களைத்தயாராக வைத்திருக்கிறது. அவர்களிடமிருந்து தப்புவது மிக கடினம். விட்டுக் கொடுக்காமல் இந்த உலகில் வாழ முடியாது. ஆனால் எதற்க்கெடுத்தாலும் விட்டுக் கொடுத்துக்கொண்டே இருந்தாலும் முடிவில் வாழ்வு பட்டுப்போன மரம் ஆகிவிடும். வாழ்வில் சில நேரங்களில் துணிந்து சில முடிவுகளை எடுத்துதான் ஆகவேண்டும் .

   நீக்கு
  8. சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள். ஆங்கிலேயனுக்கு முன்னால் நம் தமிழ்ப் பாட்டன் எழுதிவிட்டான்.

   தீதும் நன்றும் பிறர் தர வாரா....

   நீக்கு
  9. சென்ற தலைமுறைக்கு வேண்டுமானால் மவுண்ட் பாட்டனைப் பற்றி தெரிந்திருக்கலாம். தற்போது இருக்கும் தலைமுறைக்கு பாட்டன் யாரென்றே தெரியாது.இந்நிலையில் முப்பாட்டன் கணியன் பூங்குன்றனாரைப் பற்றி எங்கே தெரியப்போகிறது?

   நீக்கு
 23. மன்னிக்கவும்-திரு .துரை செல்வராஜ் என்று திருத்திக்கொள்ளவும்.

  பதிலளிநீக்கு
 24. //மனசுல இருக்கிற எல்லாத்தையும் கொட்டி எழுதுறது... ன்னா
  இந்தப் பூமியே பத்தாது...//


  ஆமாம் ஆமாம்...அண்ணா அழகான கடிதம் உணர்வு பூர்வமான கடிதம்...ஒவ்வொரு வரியும் என்னென்னவோ சொல்லுகிறது....எல்லாம் தலையணை உறிஞ்சும் கண்ணீருக்குத்தானே தெரியும்! அதற்கு மட்டுமே என்றும் சொல்லலாம்....

  கீதா

  பதிலளிநீக்கு
 25. மகனைப் பார்க்க ஊருக்கு வரமுடியுமா...ன்னு தெரியலை...//

  இது யாதார்த்தம் தான் ஆனால் ஏனோ பொதுவாக சமூகம் மகன் என்று தான் சொல்லுகிறது மகள் என்று சொல்லுவதில்லை..வாழ்த்துபவர்கள் கூட அப்படித்தான்....அது.ஏனோ....? தெரியவில்லை....

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கீதா ரங்கன்... நம்ம சமூகம் ஆணாதிக்க சமூகம். சொத்து பரம்பரை எல்லாமே ஆணைச் சார்ந்து இருக்கிறது. அதனால் மகன் என்பது உசத,தி என்ற உணர்வைத் தவிர்க்க இயலாது. பெண் என்னதான் ஆணைவிட அன்பானவள், நேசமுடையவள் என்றாலும், அவள் பிறன் மனையைச் சார்ந்தவர். உதவிக்கு அழைக்க வேண்டும் என்றாலும் மாப்பிள்ளையின் அனுமதி வேண்டும்.

   ஈழத்தில் மகள் சார்ந்த பரம்மரை. திருமணமானால் மருமகன் தங்களோடு வந்துவிடுவார். மகள் தங்களுடனே இருப்பாள். பையன் திருமணத,துக்குப்பின் புகுந்தவீடு போய்விடுவான். ஒருவேளை அங்கு உணர்வுகள் வேறாயிருக்குமோ என்னவோ

   நீக்கு
 26. முல்லையால் மாலையிட்டால்
  வாடிவிடும் என்று எண்ணி
  என்நெஞ்சத்தின் நிழலுக்கு
  முத்தத்தால் மாலையிட்டேன்...//

  சூப்பர் அண்ணா....உங்க கற்பனைக்கு அளவே இல்லை!!

  சொல்லி வரும் போதே போகிற போக்கில்... மாடு கன்று.....மக்களின் நம்பிக்கைகள்...என்று கலந்துகட்டி அழகாகச் சொல்லிப் போயிருக்கீங்க...

  ஆன்மீகம், சமூக விழிப்புணர்வு கட்டுரைகள், கவிதை, கதை என்று அதுவும் அழகான இனிய தமிழில் கலக்கறீங்க அண்ணா...பல திறமைகள். நீங்கள் இலக்கிய உலகில் எங்கோ போயிருக்க வேண்டியவர்....

  மனம் அப்படித்தான் நினைத்தது. நினைக்கிறது...பாஸ்கரன் கண்ணீரைத் துடைத்துக் கொண்டான்....கடிதம் பார்த்து...

  நானும். உங்களின் கதை கண்டு...ஒன்று கடிதத்தின் விஷயங்கள்...மற்றொன்று இப்படியான் திறமையுள்ள எழுத்துக்குச் சொந்தகார துரை அண்ணா ....ம்ம்ம்ம்ம்


  கீதா

  பதிலளிநீக்கு
 27. அன்பின் ஜி
  இருபது வருடங்கள் பின்னோக்கி இருந்து மீண்டு வந்த உணர்வு.

  மடலைப் படித்ததும் கம்பெனி லட்டர் பாக்ஸில் தேடிப்பிடித்து லட்டர் எடுத்த நினைவுகள் எனக்கும் வந்தது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இந்தியன் ஸ்டாம்புகள் ஏகப்பட்டது வாங்கிக்கொண்டு சென்றதும், அவ்வப்போது கடிதங்கள் எழுதி, துபாயில் ரெஸ்டாரெண்டில் உள்ள ஒரு இடத்தில் வைத்ததும், யார் இந்தியா சென்றாலும், அவைகளை எடுத்துக்கொண்டு இந்திய போஸ்ட் ஆபீசில் போட்டுவிடும் வழக்கம் இருந்ததும் என் நினைவுக்கு வரவைத்துவிட்டீர்கள் கில்லர்ஜி.

   யார் இந்தியா சென்றாலும், அப்போதெல்லாம் கடிதங்கள் கொடுத்தனுப்புவது வழக்கம். ஸ்டாம்பும் ஒட்டியிருப்பதால், அவங்க வேலை எங்கேயாவது போஸ்ட் பாக்ஸில் போட்டுவிடுவது ஒன்றுதான்.

   நீக்கு
  2. உண்மை ஸ்டாம்பு இல்லாமல் கொடுத்து விடும் கடிதங்களை போஸ்ட் செய்யாமல் விடும் கஞ்சூஸ்களையும் ஞாபகம் வருகிறது நண்பரே...

   நீக்கு
 28. அரே.. பாய்!.. ஆஜாவ்.. ஆஜாவ்.. ரைஸ் லோடு வர்து...
  லேபர்க்கு பர்மிஷன் இல்லே.. லாரி மட்டும் ஸ்டோர்க்கு வர்து...
  வா... வா... அல்லாரும் வா... சீக்ரம் எடு... சீக்ரம் எடு!..
  அல்லாருக்கும் நாலு மணி நேரம் ஓவர் டைம்!...

  ஸ்டோர் மானேஜர் கத்துவதற்கும் சரியாக இருந்தது... //

  பாவம் நேரில்தான் முடியவில்லை இங்காவது கடிதம் வழியாவது கொஞ்ச நேரம் மனைவியின் அன்பில் தோய்ந்து மனதில் நினைவலைகளுடன் உற்சாகப் படுத்திக் கொள்ளலாம் என்றால் இப்படியான குறுக்கீடுகள்....பாவம் இப்படியான பாஸ்கரன்ககள் எத்தனை பேர்....

  கீதா

  பதிலளிநீக்கு
 29. கடிதத்தைப் படித்துமுடித்ததும் அவன் இருந்த சூழல் காண்பிக்கப்பட்ட விதம் மனதை அதிகமாக கனக்க வைத்துவிட்டது. கவிதை, ஆன்மீகம், கலை, நாட்டுப்புறக்கலை, வரலாறு, இலக்கியம் என அனைத்துத்துறையிலும் எழுத வல்லவரான கதாசிரியர் தஞ்சையம்பதி அவர்களுக்குப் பாராடடுகள். பகிர்ந்த குழுவினருக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 30. துரை செல்வராஜு சார்... உணர்வை சரியாக் கொண்டுவந்திருக்கீங்க. கதை ஏற்படுத்தும் உணர்வுகள் அதிகம். அது அந்த அந்த எக்ஸ்பீரியன்ஸ் இருப்பவங்கதான் எழுத முடியும்.

  இது தொடர்பா நிறைய எழுதவேண்டும் என்று தோன்றுகிறது. முடிந்த அளவு எழுதுவதைத் தவிர்க்கிறேன். ஹாஹாஹா.

  கணவன் வெளிநாட்டில் வேலை பார்த்தார். மனைவி 1 வயது குழந்தையுடன் இந்தியாவில், கணவனின் உறவினர்களோடு வாழ்ந்தாள் (கூட்டுக் குடும்பமாக). நான் பேச்சலராக இருந்தபோது அவர்கள் வீட்டிற்குச் சென்ற சமயங்களில், என்னிடம் (நான் பிறர் வீடுகளில் என்னை ஏற்றுக்கொள்ளும் அளவு நல்லவனாக இருந்தேன், அல்லது வெளியிடங்களில் நெறிமுறைகளை ஸ்டிரிக்டாக கடைபிடிப்பவனாக இருந்தேன்) அவங்க பேசும்போது, மனைவியை விட்டுவிட்டு வெளிநாட்டுக்கு வேலை பார்க்கச் செல்லும் தவறை ஒருபோதும் செய்துடாதீங்க என்று அந்தப் பெண் சொல்லுவாள். மனசளவுள எனக்கு எவ்வளவு கஷ்டம் என்பது எனக்கு மட்டும்தான் தெரியும் என்பார்.

  இஸ்லாமியர்களிடம் பொதுவாக திருமணமாகி மனைவியை இங்கேயே விட்டுவிட்டுச் செல்லும் வழக்கம் உண்டு. இப்போது அது வெகுவாக குறைந்துவிட்டது.

  மும்பையைச் சேர்ந்த ஒருவர் துபாயில் 55 வயது வரை வேலைபார்த்தார். மனைவி மும்பையில். 55 வயசுல அவரை கம்பெனி வேலையை விட்டுப் போகச்சொன்னது. அவர் மனைவி அவரை திரும்பவும் மும்பை வரவேண்டாம், நமக்கு பணம் தேவை, வேறு வேலை தேடுங்கள் என்று சொன்னாராம்.

  உங்கள் கதை, என் 25 ஆண்டு நினைவுகளை மீண்டும் கொஞ்சம் கொஞ்சம் நினைவுபடுத்திப் பார்க்கவைத்தது.

  மனைவியைப் பிரிந்து இருக்கும் நிலையை எனக்கு ஆண்டவன் கொடுக்கவில்லை (கடைசி சில வருடங்கள் தவிர). ரொம்ப யோசித்துப் பார்த்தால், மனைவி குடும்பத்தைப் பிரிந்து, அதுவும் திருமணமாகி முதல் 15 வருடங்கள் பிரிந்திருப்பது, என்ன சம்பாதித்தும் நமக்கு இழந்த வாழ்க்கையைக் கொடுக்காது என்பதுதான்.

  என்னுடன் பணியாற்றியவர்கள் எல்லோரிடமும் நான் சொல்வது, மனைவியை, அதிலும் தங்கள் குழந்தையின் முதல் 8 வருடங்களை, வெளிநாட்டு வேலைக்காகத் தவறவிடுவது, கிட்டத்தட்ட வாழ்க்கையே வீண் என்பதற்குச் சமம். பசங்க நம் தொடுதலில்தான் வளரணும். அவங்க வளருவதைப் பார்ப்பதன் இனிமை, எவ்வளவு பணம் கொட்டிக்கொடுத்தாலும் கிடைக்காது என்பதுதான்.

  திருமணம் ஆகியாச்சுன்னா, சுடுகாடு போவதாயிருந்தாலும் மனைவியோடுதான் போகணும் என்பதுதான் என் மெசேஜ். ஹா ஹா ஹா.

  பதிலளிநீக்கு
 31. நம்ம ஏரியாவில் இப்போது வெளியாகி இருப்பது

  https://engalcreations.blogspot.com/2018/11/blog-post_20.html

  பதிலளிநீக்கு
 32. உணர்வுகளை மிக அழகாக வெளிப்படுத்தியிருக்கும் கதை. துரை சார் நீங்கள் எங்கள் ப்ளாகோடு நின்றுவிடக் கூடாது. இன்னும் மேலே செல்ல வேண்டும்.

  பதிலளிநீக்கு
 33. /உங்க அம்மா என்ன சொல்றாங்களோ....

  எங்க வீட்டு சம்பந்தமே வேணாம்... ந்னு சொன்னாலும் சொல்லுவாங்க./..மாமா அத்தைக்கு நீங்க பணம் அனுப்புறது இல்லையா?...
  அத்தை கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்..ன்னு இருக்காங்க..../ என்னதான் பாசப்பிணைப்பு இருந்தாலும் கணவனின் தாய் மீது பெண்களுக்கு ஏனோ ஒரு காழ்ப்புணர்ச்சி விதி விலக்கே இல்லையா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சார்... இது பெரும்பாலும் மேலிருந்து கீழ் வருவது. அதாவது கணவனின் தாய் நடந்துகொள்வதைப் பொறுத்தது. ஆரம்பத்தில் ரொம்ப டாமினேட்டிங் ஆகவும் கட்டளை இடறவங்களாகவும், கணவனிடத்தில் கெட்ட பெயர் ஏற்படுத்துபவராகவும் இருப்பவர்கள் மருமகள்களின் வெறுப்பை அல்லது டிஸ்டன்ஸைத் தவிர்க்க இயலாது. எக்ஸெப்ஷன்களுக்கு இது பொருந்தாது.

   நீக்கு
 34. துரை ஸார் கதை ரொம்ப நல்லாருக்கு. கடிதம் எழுதும் பாணியில் சொன்ன விதம், அதில் மனைவி தன் உணர்வுகளைக் கொட்டி என்று அருமை.

  ஆமாம் புதிதாய் கல்யாணம் ஆன பெண்ணுக்குக் கணவன் அருகில் இல்லை என்றால் அதுவும் குழந்தை பிறக்கும் சமயம் எத்தனை மனம் கஷ்டப்படும்.

  அழகான கவிதைகள். உங்கள் எழுத்து அருமையாக இருக்கிறது சார். வாழ்த்துகள், பாராட்டுகள்

  பதிலளிநீக்கு
 35. அழகாக ஒரு பெண் தாய்மையின் உணர்வுடன் வடிக்கும் வரிகளே கதையாகி உள்ளது பாராட்டுக்குரியது

  பதிலளிநீக்கு
 36. கடிதம் எழுதுவதே இலக்கியம். கடிதம் வாயிலாக (சிறு) கதை சொல்வதும் நல்ல உத்தித்தான். பிரிவின் துயரம் சங்க இலக்கியம் முதல் இன்று வரை தொடர்கிறது. அன்றும் இன்றும் நிலை ஒன்றுதான். சூழல் தான் வேறு. பிடித்திருக்கிறது.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!