செவ்வாய், 13 நவம்பர், 2018

கேட்டு வாங்கிப் போடும் கதை : பிரசவங்கள் - முனைவர் பா ஜம்புலிங்கம்





பிரசவங்கள்



முனைவர் பா ஜம்புலிங்கம் 


வழக்கம்போல தபால்காரர் ஒரு கவரைத் தந்து விட்டுச் சென்றார், அந்த வருங்காலக் கதாசிரியனிடம். இக்கற்பனைக் கதாசிரியனைப் பற்றி ஒரு சிறிய ஃபிளாஷ்பேக்.
பெயர் செல்வம். தனியார் கம்பெனியில் சூப்பர்வைசர் வேலை. கை நிறைய சம்பளம். புதிதாகத் திருமணமானவன். கதை எழுதும் ஆவல் அதிகம். முயற்சியும் அதிகம். அதைவிட அதிகம் திரும்பி வருவது அவனுடைய கதைகள்!
“என்ன அண்ணா! நீதான் எழுத்தாளன்னு சொல்லிக்கிட்டு அலையறே. நீ அனுப்புற வேகத்தைவிட அதிக வேகத்துல கதை திரும்புது உனக்கு” -  தங்கையின் கிண்டல்.
“குடும்பத்தைக் கவனிடா. கதை கதைன்னு புலம்பாதே. மாசமா இருக்கிற உன் பொண்டாட்டியைக் கொஞ்சம் கவனிடா” உச்சஸ்தாயியில் அம்மாவின் குரல்.
“ஏங்க! திரும்பி வர்ற கதையை மறுபடியும் படிங்க. படிக்கப் படிக்க உங்களுக்கு நீங்க செஞ்சிருக்கிற தவறு புரியும். மறுபடியும் கதையில் அங்கங்க டச் பண்ணுங்க. எந்த ஒரு முயற்சியும் பலன் தராம போகாது” – அன்பான, ஆறுதலான வார்த்தைகள் அவனுடைய மனைவி விமலாவிடமிருந்து வந்தன.
“அவள் உன் பக்கம் பேச ஆரம்பிச்சிட்டால்ல. உன்னைக் கையால புடிக்க முடியாதே! சரி சரி. அது போகட்டும் போ. கதை நெனப்புல அவளை மறந்துடாதே” என்றாள் அம்மா.
***
ஆஸ்பத்திரிக்குப் போகும்போது கூட விமலாவுடன் கதையைப் பற்றிய கதைதான் பேசினான் செல்வம்.
“விமலா! நீ கன்சீவ் ஆனதிலிருந்து என்னையும் அறியாம ஒரு சந்தோஷம் எனக்கு. அம்மா சொல்ற மாதிரி உன்னைக் கவனிக்கலேன்னு நெனச்சுக்காதே. கதை எழுதுறதுல எனக்கு அப்படி ஒரு ஈடுபாடு. உன்னைத் தவிர வேற யாரும் என்னோட மனசைப் புரிஞ்சுக்கலை.”
“உங்க மனசுப்படியே நீங்க எழுதுற கதை எப்படியும் பப்ளிஷ் ஆகத்தான் போவுது. விடாம முயற்சி பண்ணுங்க.”
விமலாவின் வார்த்தைகள் வேதவாக்கு போலிருந்தது அவனுக்கு.
“பை த பை. சொல்ல மறந்துட்டேனே. அப்பப்ப டாக்டர் சொன்ன டயத்துக்கு வந்துடு. கதை, வேலைன்னு நான் மறந்துட்டா அம்மாவோட வா. டயட்ல கரெக்டா இரு. ஆக்ஷன், திரில் சினிமா பார்க்காதே. எந்த அதிர்ச்சியும் இல்லாம உடம்ப ஜாக்கிரதையா கவனிச்சுக்க”.
ஒரு குழந்தையைப் போல உனிப்பாக அவனைக் கவனித்தாள் விமலா.
***
ஒன்பதாம் மாதம். வளைகாப்பு போட்டு விமலாவை அவள் வீட்டில் கொண்டுவிடச் சொன்றான் செல்வம்.
அவன் கிளம்பும்போது ஆறுதுல் வார்த்தைகளால் அவனை அணைத்தாள் விமலா.
“நான் என் உடம்பை நல்லா கவனிச்சுக்கறேன். நான் நம்ம வீட்டுக்கு குழந்தையோட திரும்பி வர்ற வரைக்கும் தொடர்ந்து கதை எழுதுங்க. கதை எழுதி வெளி வர்றதும் ஒரு பிரசவம் மாதிரிங்க. எனக்கு இந்தக் குழந்தை பிறக்கறதுக்குள்ளேயே உங்க கதை பப்ளிஷ் ஆனாலும் ஆயுடுங்க”.
***
திடீரென ஒரு நாள். ஒரு இன்ப அதிர்ச்சி அவனைத் தபால்காரர் உருவத்தில் தேடி வந்தது! தபால்காரர் அன்று கொடுத்தது வழக்கமாக இல்லாமல் வித்தியாசமான கவரில் இருந்தது. அந்தக் கவரில் திரும்பி வந்தது கதை இல்லை. அவன் எழுதி வெளியாகிய கதையைச் சுமந்து வந்த அந்த வார இதழ்! மெருகு குலையாமல் புத்தம்புதிதாக இருந்தது. அச்சில் தன் எழுத்தைக் கண்டதும் அவன் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. உடனே அவனுக்கு விமலாவின் நினைவு வந்தது.
விமலாவுக்கு செய்தி கொடுக்க, வீட்டில் சொல்லிவிட்டுக் கிளம்பினான். எதிரில் அவனுடைய அப்பா, விமலாவின் வீட்டிலிருந்து வந்த தந்தியை அவனிடம் காண்பித்துக் கை குலுக்கினார்.
“ரொம்ப மகிழ்ச்சி! மகனே!”
தந்தியைப் படித்தான்.
‘விமலாவுக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது’
விரைந்து சென்று தந்தி கொடுத்தான் அவளுக்கு.
‘செல்வத்திற்கு ஒரு கதை பிறந்திருக்கிறது’
தந்தி கொடுத்துவிட்டு, விமலாவைப் பார்க்கக் கிளம்பினான், பிரசவ வேதனையைப் பகிர்ந்துகொள்ள….!
(ஜன 28-பிப் 3, 1994 பாக்யா இதழில் வெளியான இச்சிறுகதை, என்னுடைய “வாழ்வில் வெற்றி” சிறுகதைத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.)  


====================================================================================================


முனைவர் பா.ஜம்புலிங்கம் (கும்பகோணம், பிறப்பு 2 ஏப்ரல் 1959, அலைபேசி 9487355314), தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் சுமார் 35 ஆண்டுகள் பணியாற்றி உதவிப்பதிவாளராக பணி நிறைவு பெற்றவர். சித்தாந்த ரத்னம்  (திருவாவடுதுறை ஆதீனம், 1997),  அருள்நெறி ஆசான்  (தஞ்சை அருள்நெறித் திருக்கூட்டம், 1998)  பாரதி பணிச்செல்வர்   (அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர் சங்கம், 2001),    முன்னோடி விக்கிபீடியா எழுத்தாளர்    (கணினி தமிழ்ச்சங்கம், புதுக்கோட்டை, 2015)  உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர்.  சிறுகதைத்தொகுப்பான வாழ்வில் வெற்றி (2001), மொழிபெயர்ப்புகளான மரியாதைராமன் கதைகள், பீர்பால் கதைகள்  (2002), தெனாலிராமன் கதைகள்  (2005),  கிரேக்க நாடோடிக்கதைகள் (2007),  க்ளோனிங் எனப்படுகின்ற படியாக்கம்  (2004)  என்ற நூல்களைத் தனியாகவும், தஞ்சையில் சமணம் (2018) என்ற நூலை மணி.மாறன், தில்லை. கோவிந்தராஜன் ஆகியோராடு இணைந்தும் எழுதியுள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்தில் பௌத்தம்  என்ற தலைப்பில் ஆய்வியல் நிறைஞர் பட்டமும்  (மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்,1995)  சோழ நாட்டில் பௌத்தம் என்ற தலைப்பில் முனைவர் பட்டமும்  (தமிழ்ப் பல்கலைக்கழகம், 1999)  பெற்றுள்ளார். தமிழகப் பல்கலைக்கழகப் பணியாளர் சங்க மலர் (1994), பன்னிரு திருமுறை சான்றோர் வாழ்வியல் (1997), மகாமகம் மலர் (2004) ஆகிய மலர் பதிப்புப்பணிகளில்   உறுப்பினராக இருந்துள்ளார். 2003 புத்த பூர்ணிமாவின்போது வானொலியில் உரையாற்றியுள்ளார்.  1993 முதல் தனியாகவும் பிற அறிஞர்களோடும் இணைந்து 16 புத்தர் சிற்பங்களையும், 13 சமணர் சிற்பங்களையும் கண்டெடுத்துள்ளார். தமிழ் விக்கிபீடியாவில் 600+, ஆங்கில விக்கிபீடியாவில் 100+, சோழ நாட்டில் பௌத்தம் வலைப்பூவில் 100+, முனைவர் ஜம்புலிங்கம் வலைப்பூவில் 250+, நாளிதழ்கள் மற்றும் ஆய்விதழ்களில் 200+ கட்டுரைகளை எழுதியுள்ளார்.

35 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம் ஸ்ரீராம், துரை அண்ணா, பின்னாடி வர எல்லோருக்கும்!

    கீதா

    பதிலளிநீக்கு
  2. அன்பின் ஸ்ரீராம், கீதா/ கீதா மற்றும் அனைவருக்கும் நல்வரவு....

    பதிலளிநீக்கு
  3. ஓ இன்று முனைவர் ஜம்புலிங்கம் ஐயா கதையா....வரேன்...

    காபி ஆத்திட்டு ...இன்று சமையல் கொஞ்சம் டைம் எடுக்கும் மெனு... 7 மணிக்குள் ஆக வேண்டும்....வாக்கிங்க் முடிச்சுட்டு வரேன்..

    கீதா

    பதிலளிநீக்கு
  4. ஆகா...
    இன்றைக்கு அன்பின் ஜம்புலிங்கம் ஐயா அவர்களின் கதை....

    எழுத்தாளனை முன் நிறுத்திய எழுத்து...
    மேலும் ஒரு வைரக்கல்....

    பதிலளிநீக்கு
  5. நாற்பதாண்டுகளுக்கு முன்
    திரும்பி வந்த எனது கதைகளை
    நினைத்துக் கொள்கிறேன்...

    திருப்பி அனுப்புவதற்கான
    அஞ்சல் தலைகளை இணைத்திருந்தாலும் திரும்பி வராத கதைகள் எத்தனையோ..

    அன்றைய நாட்கள்
    ஜெராக்ஸ் எடுத்து வைத்துக் கொள்ளக் கூட வசதி இல்லாத காலம்...

    இன்றைக்கு
    நான் - எனது தளம்..
    அன்பின் ஸ்ரீராம் மற்றும்
    ஊக்கப்படுத்துதற்கு நண்பர்கள்...
    இது போதும்... இதுவே மகிழ்ச்சி...

    பதிலளிநீக்கு
  6. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
    முனைவர் ஐயாவின் இனிய கதை வெகு நன்றாக அமைந்திருக்கிறது.

    நகைச்சுவை பளிச்சிட ,குழந்தையும் கதையும் ஒன்றாக
    பிறக்கிறது. மிக மிக மகிழ்ச்சி. வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  7. முனைவர் அவர்களின் இக்கதை எனக்கும்கூட நம்பிக்கையை ஊட்டியது.

    பதிலளிநீக்கு
  8. கதை நன்றாக இருக்கிறது முனைவர் ஐயா. எனக்கு ஒவ்வொரு பதிவுமே பிரசவ வேதனைதான்...அதாவது பதிவு என்ன எழுத வேண்டும் என்றும், கதையின் கருவும் தோன்றிவிடும் ஆனால் அதை வளர்த்து எடுக்கணுமே அது முடிக்கும் வரை, வெளியில் வரும் வரை மனது ஒரு நிலையில் இருக்காது...அதுவும் நான் ரொம்பவே ஸ்லோ...

    அதே போல நான் பள்ளி இறுதி மற்றும் கல்லூரி படிக்கும் போது எழுதி அனுப்பிய கதைகள், கவிதைகள் திருப்பி அனுப்பப்படும். அதே போன்ற கவிதைகள், கதைகள் கிட்டத்தட்ட அதே போன்று இப்போது ஆங்காங்கே வருவதைப் பார்க்கும் போது கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கும். நமக்குத்தான் லக் இல்லை என்று விட்டுவிடுவென்...வேறு என்ன சொல்ல..

    என் கசின்ஸ் எல்லாம் என்னை கலாய்ப்பார்கள். இப்போது கூட அதைச் சொல்லிச் சிரிப்போம்....

    அதுவும் திருப்பி அனுப்ப கவர் ஸ்டாம் எல்லாம் வைத்து அனுப்பினாலும் திரும்பிவரவே வராது...அதில் ஓர் அனுபவமும் உண்டு....ஆனந்தவிகடனுக்கு அப்போது போட்டிக்கு அனுப்பிய கவிதை எனது வெளியாகியிருந்தது ஆனால் வேறொருவரின் பெயரில்!! ஒரே ஒரு வரி அதுவும் இரு வார்த்தைகள் மட்டும் மாற்றப்பட்டு...

    இப்போது அக்கவிதையின் காப்பி கூட என்னிடம் இல்லை...

    கதையை வாசித்த போது இப்படி பழைய நினைவுகள் எல்லாம் வந்து சென்றது...

    கீதா

    பதிலளிநீக்கு
  9. இது நம்மில் பெரும்பான்மையானோரின் அனுவமாகத்தான் இருக்கும்....

    முனைவர் ஐயா உங்கள் கதை யதார்த்தம்...

    குழந்தையும் பிறந்தது..கதையும் வெளிவந்தது...இரு வேதனைகளும் மகிழ்ச்சியுடன் வெளி வந்தது...

    வாழ்த்துகள் ஐயா!

    கீதா

    பதிலளிநீக்கு
  10. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
  11. கதை நன்றாக இருக்கிறது.
    மனதை புரிந்து கொண்டு உற்சாகப்படுத்தும் வாழ்க்கை துணை கிடைத்தால் வாழ்வில் வெற்றிதான் என்றும்.
    தலைப்பு மிக அருமை.
    ஒவ்வொரு எழுத்தாளர்களுக்கும் அவர் கதை எழுதி முடித்து அது வெளி வரும் நாள் வரை பிரசவ வேதனைதான்.

    முனைவர் ஐயாவின் விவரங்கள் மலைக்க வைக்கிறது.
    வாழ்த்துக்கள் .

    பதிலளிநீக்கு
  12. //‘செல்வத்திற்கு ஒரு கதை பிறந்திருக்கிறது’
    தந்தி கொடுத்துவிட்டு, விமலாவைப் பார்க்கக் கிளம்பினான், பிரசவ வேதனையைப் பகிர்ந்துகொள்ள….!//

    அருமை.

    பதிலளிநீக்கு
  13. //தந்தி கொடுத்துவிட்டு, விமலாவைப் பார்க்கக் கிளம்பினான், பிரசவ வேதனையைப் பகிர்ந்துகொள்ள….!////
    தன் கணவரிடம் தான் அனுபவித்த அந்த நேரத்தை பகிர்ந்து கொள்ள காத்து இருப்பார் விமலாவும்.
    இன்பமும், துன்பமும் சேர்ந்த பொழுது அல்லவா? மழலை முகம் பார்த்தவுடன் தன் வேதனை மறக்கும் தாய் அற்புத தருணம்.

    பதிலளிநீக்கு
  14. ஜம்புலிங்கம் ஐயாவின் ஆர்வத்தை எழுத ஒரு பதிவு போதாது... வாழ்த்துகள் ஐயா...

    பதிலளிநீக்கு
  15. @ கீதா:

    //...ஆனந்தவிகடனுக்கு அப்போது போட்டிக்கு அனுப்பிய எனது கவிதை வெளியாகியிருந்தது ஆனால் வேறொருவரின் பெயரில்!! ஒரே ஒரு வரி அதுவும் இரு வார்த்தைகள் மட்டும் மாற்றப்பட்டு...//

    என்ன ஒரு அயோக்யத்தனம், அதுவும் ’பல்லாண்டு பராம்பரியம்’ மிக்க ஒரு இதழிலிருந்து! எழுத்தாளர்களை இவர்கள் மதிக்கும் லட்சணம். இவர்கள் காலங்காலமாக செய்துவரும் தமிழ்த்தொண்டிற்கு இதுவே ஒரு அத்தாட்சி. இதுபோல் பலபேர்க்கு என்னென்னவோ நடந்திருக்கிறது. வாய்திறந்து அவர்கள் சொல்வதில்லை.. அப்படியே ஒரு ஏழை எழுத்தாளன் ஏதாவது சொன்னால்தான் எவன் கேட்கிறான் தமிழ்நாட்டில்? இதைப்போன்று ஏதாவது அவரவர் துறையில் நடந்து அதை ஒரு விஜயோ, சிவகார்த்திகேயனோ, விஜய் சேதுபதியோ, ஏன் யோகிபாபு சொன்னால்கூட, கப்பென்று பிடித்து நாலாபக்கமும் போஸ்டர் ஒட்டிடுவான்களே! என் அருமைத் தமிழகமே!

    ஒரு ‘பிரபல’ எழுத்தாளர் அடிக்கடித் தன் வலைப்பக்கத்தில் புலம்பிவருவதைப்போல, தமிழ்நாட்டில் இப்போதிருக்கும் ‘தமிழ்ச்சூழலில்’ உண்மையான எழுத்தாளன், கவிஞன் இவர்களின் கதியெல்லாம் அதோகதிதான்.

    பதிலளிநீக்கு
  16. இரட்டைக் குழந்தைகள் பிறந்த மகிழ்ச்சி. வலிகள் நினைத்து மகிழும்படியாக. எவ்வளவு யதார்த்தம். அருமை,அருமை,அருமை. அன்புடன்

    பதிலளிநீக்கு
  17. அழகிய கதை, ஒரு ஆணுக்கு மிகவும் சப்போர்ட்டான மனைவி அமைந்திட்டால், எந்தப் பெரிய தோல்வியையும் பஞ்சுபோல நினைத்து எதிர்த்து முன்னேறும் தைரியம் வந்துவிடும்.... முயற்சி திருவினையாக்கியிருக்குது.

    பதிலளிநீக்கு
  18. அருமையான கதை பாராட்டுக்குரியது வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  19. ஒரே நேரத்தில் இரட்டிப்பு மகிழ்ச்சி .ஒரு படைப்பாளிக்கு எத்தனை மகிழ்வான தருணமாக இருந்திருக்கும் தனது கதை குழந்தையும் முதல் குழந்தையும் ஒரே நேரத்தில் பிரசவித்தது .
    அழகான கதை .

    பதிலளிநீக்கு
  20. இன்னிக்குக் காலம்பர இருந்து மின்சாரம் இல்லாததால் பதிவுகள் பார்க்கவும் இல்லை. கருத்துகளை வெளியிடவும் முடியலை. இப்போத் தான் நாலே முக்காலுக்கு வந்தது. இனி மெதுவாகப் பார்க்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  21. இரட்டிப்பு மகிழ்ச்சி! கதை எழுதுவதே கஷ்டம். அது வெளியாவது என்பது அடுத்த கஷ்டம். உண்மையில் ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு சிருஷ்டியே!

    பதிலளிநீக்கு
  22. ஒவ்வொரு படைப்பும் ஒரு பிரசவத்திற்கு சமமானதுதான். மனதில் சுமந்து, வார்த்தைகளில் வடிப்பது சிரமம்தான். கணவன்,மனைவி இரண்டு பேருக்கும் ஒரே நாளில் பிரசவம்! இரட்டிப்பு மகிழ்ச்சி!

    பதிலளிநீக்கு
  23. மனோன்மணீயம் எழுதிய சுந்தரனாருக்கு அவர் மனோமணீயத்தை அரங்கேற்றம் செய்த அதே நாளில்தான் மகனும் பிறந்தானாம். அவர் அமைச்சராக இருந்த திருவனந்தபுரம் அரசர், உங்களுக்கு ஒரே நாளில் இரண்டு குழந்தைகள் என்று வாழ்த்தினாராம்.

    பதிலளிநீக்கு
  24. இப்போதெல்லாம் எந்த பத்திரிகையும் பிரசுரிக்கப்படாதவைகளை திருப்பி அனுப்புவதில்லை.

    பதிலளிநீக்கு
  25. பத்திரிக்கைகளுக்கு இப்போது எல்லாமனுப்புவதில்லைபிரசுரிக்காவிட்டால் வீண் மன வேதனை என்பதிவுகளுக்கு என்று இடம்தான் இருக்கிறதே

    பதிலளிநீக்கு
  26. ஆஹா.... ஒரே நாளில் இரண்டு பிரசவம்! நம் ஆக்கங்கள் அச்சில் வருவது மகிழ்ச்சியான விஷயம். எனக்கும் சில கசப்பான அனுபவங்கள் உண்டு - ஒரு நாளிதழ் தில்லியில் ஆரம்பிக்கப்பட்ட போது, என் பெயர் கூடப் போடாமல், என் வலைப்பூவில் இடம் பெற்ற விஷயங்களை பயன்படுத்தி இருந்தனர்.

    நல்ல கதை. முனைவர் ஐயாவிற்கு வாழ்த்துகள் 🎊.

    பதிலளிநீக்கு
  27. முனைவர் ஐயா... கதை நன்றாக இருந்தது. நானும் ஓரிரண்டு கதைகள் எழுதியிருப்பதால், கதை முழுமையாக எழுதுவது எவ்வளவு கடினமான செயல் என்பதைப் புரிந்துகொள்ள முடிந்தது. திருப்பித் திருப்பி வாசித்து லாஜிக் ஓட்டைகளை அடைக்கணும். டி வி ஸ் ட் வைக்கணும். உரையாடல்கள் நல்லாவும் சுருக்கமாவும் இருக்கணும் என்றெல்லாம்.

    பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  28. கருவிலுருந்து பிரசவம் வரை ஒரு பெண் படும் அவஸ்தைகள் எழுத்தாளனுக்கும் உண்டு. கதை எழுதுவது ஒரு பிரசவம் போல. பலருக்கு கதை எழுதுவது சிரமம். சிலருக்கு கைவந்த கலை. அந்தச் சிலரில் முனைவர். ஜம்புலிங்கமும் ஒருவர் என்பது இக்கதை மூலம் மெய்ப்பிக்கப்பட்டுள்ளது. கதையில் கதாநாயகனும் அவன் மனைவியும் ஒரே காலகட்டத்தில் பிரசவிக்கிறார்கள்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!