செவ்வாய், 27 நவம்பர், 2018

கேட்டு வாங்கிப் போடும் கதை : நாக்கு - ரிஷபன்


நாக்கு
ரிஷபன்

"ஏய்.. குட்டி. இங்கே வாடி"

கிழவரின் அதட்டலான குரல் கேட்டுத் திரும்பினாள். முறைத்தாள்.

"என்னை டின்னு சொல்லாதேன்னு சொன்னேன் தானே"

"சரிடி. இங்கே வா. உங்கம்மா என்ன பண்றா"

கிழவரின் நாக்கில் உமிழ்நீர் சுரந்தது.

" உன்கிட்ட சொல்லக் கூடாது"

"அப்புறம் நாலணா தருவேன்"

பேத்தி யோசித்து விட்டு போனால் போகிறதென்று சொன்னாள்.

" மைசூர்பாக்.. லட்டு.. மிக்சர்"

கிழவருக்கு ஒரு நிமிடம் பார்வை பரவசத்தில் மங்கியது. யாரோ ஆர்டர் கொடுத்திருக்கிறார்கள்.

" யார் வீட்டுக்கு"

" தெரியல"

ஓடி விட்டாள். இனியும் அவர் கேள்விகளுக்குப் பதில் சொல்வது தனக்கு அபாயம் என்று புரிய.

கிழவர் திண்ணை நுனி வரை நகர்ந்தார். வாசல் கதவருகே தயஙகி நின்றார்.

" தாத்தா வழியை விட்டு நில்லு"

பேத்தி இடித்துக் கொண்டு உள்ளே ஓடினாள்.

ஒண்டுக் குடித்தன வீடு. உள்ளே ஆறு போர்ஷன்கள். கிழவர் தனிக்கட்டை தான். மனைவியும் இல்லை. மகனும் இல்லை. மருமகளும் பேத்தியும் மட்டுமே.

புஷ்பவல்லி முதலில் இடிந்து தான் போயிருக்க வேண்டும். வயதான மாமனார். பெண். இரு சுமைகள். சுதாரித்துக் கொண்டு விட்டாள்.

" நீ நல்லா சமைக்கிறே"

எல்லோரும் வாய் நிறைய பாராட்டியது இன்று கை கொடுக்கிறது.

வீட்டு விசேஷஙகள் ஆர்டரின் பெயரில் பட்சணங்கள் என்று நளபாகம் காட்டியதில் மாத செலவுகளுக்கு ஈடு கட்ட முடிகிறது. கணவன் தவறியது ஒரு விபத்தில் என்பதால் கிடைத்த ஈட்டுத் தொகை முதலீடாக்கப்பட்டது.

சமீப காலமாக இனம் புரியாத எரிச்சல். கிழவரின் முகம் பார்த்தாலே எரிந்து விழுந்தாள். உணவு வாசலுக்கு வந்தது. படுக்கை வாசல் திண்ணையிலேயே. பேச்சு அறவே கிடையாது.

கிழவர் தனக்கு இது வேண்டும் என்று கேட்கும் உரிமையை இழந்த நிலை.

முதலில் அவருக்குப் பெரிதான பாதிப்பு இல்லை. ஆனால் தொடர்ச்சியான சம்பவங்கள் அவரைக் கவலைக்கு இடமாக்கின. கிழவர் ஒரு வேண்டா விருந்தாளி !

பலகார நெய் மணம் வீசியது. மைசூர்பாக் உருவாகிக் கொண்டிருக்கிறது. ஜீரண சக்தி அதன் எல்லையைத் தொட்டு பசி தேவதை கொண்டா பட்சணங்களை என்று கூக்குரலிட்டாள். நாக்கு ஜீராவில் மிதந்தது.

பேத்தி மறுபடி வாசலுக்கே வரவில்லை.
சமையல் உதவி என்று அவள் பெயரும் இணைக்கப்பட்டு சில காலமாகி விட்டது. அதில் தனி அந்தஸ்து உணர்ந்து கர்வம் கூடிய நடை.

போ தாத்தா என்று அவளே அதட்டுகிறாள் இப்போது.

கிழவர் திண்ணைக்கும் வாசல் நடைக்கும் அல்லாடிக் கொண்டிருந்தார். ரொம்ப நாட்களாகி விட்டது. அந்த நாளில் அவரே கிளறிக் கொட்டியிருக்கிறார். வாயிலிட்டால் கரையும். யாரு.. நம்ம சாம்புவா. வெண்ணையா கரையறதே பேஷ்.. என்று ஞாபக அடுக்கில் பாராட்டு பத்திரங்கள் இன்னமும் இருக்கின்றன.

ஏதோ உள்ளே பொரிகிறது. வாசனை ஆளைத் தூக்கி அந்தரத்தில் நிறுத்தியது. தரையில் கால் பதியாமல் அல்லாடினார்

' ம்ஹும். அவ இருந்தான்னா.. ஒரு தட்டுல கொண்டு வந்து வச்சுட்டுப் போவா. டேஸ்ட் பாருங்கோன்னு' என்று இல்லாத மனைவியை நினைத்து கண் கலஙகினார்.

இனியும் பொறுக்க முடியாது

திடீரென அலறல் கேட்டது

மருமகளின் குரல் கூடவே பேத்தியின் அழுகை. தட்டுத் தடுமாறி உள்ளே ஓடினார். நல்ல வாய்ப்பு. ஒரே கல்லில் இரண்டு மாங்காய். பட்சணத்தையும் கண்ணால் பார்க்கலாம்.

சமையலறையில் கொதிக்கிற எண்ணை தரையில் வழிந்திருந்தது. மருமகளின் கையிலும். தீப்புண் பட்ட எரிச்சலில் வலி பொறுக்காமல் அலறிக் கொண்டிருந்தாள்.

நன்றி  :  இணையம்.

" என்ன ஆச்சு"

கிழவர் நடுஙகுகிற குரலில் கேட்டார்.

" தவறி மேலே கொட்டிருச்சு"

டாக்டர்ட்ட போ

தேனைத் தடவு

இங்க் இருந்தா போடலாமே

தண்ணி ஊத்தலாமா

பக்கத்து போர்ஷன்காரர்கள் எட்டிப் பார்த்து ஆலோசனைகள்

"அய்யோ. இப்ப நான் என்ன பண்றது. ஆறு மணிக்கு ரெடியா இருக்கும்னு சொன்னேனே. வந்திருவாஙகளே"

புஷ்பவல்லி வலியிலும் கடமைக்காக அழுதாள்.

" சர்த்தான் வாடி. இப்ப உடம்புதான் முக்கியம்"

யாரோ அவளை இழுத்துக் கொண்டு போனார்கள்.

பேத்தி மிரண்டு போய் மூலையாக நின்றிருந்தது.  வாயாடிதான்.  ஆனால் அனுபவத்தில் முதல் விபத்து. காயம்.  கண்ணீர். வலி  அதிர்ச்சி.

அருகில் போனார். வழியில் தாம்பாளத்தில் கிளறிக் கொட்டிய மைசூர் பாகு. உருண்டை பிடிக்க வேண்டிய லட்டு. மிக்சருக்கு உபகரண விஷயங்கள்

" ஏண்டி எப்போ வருவாஙக"

" ஆறு மணிக்கு. முழுப் பணமும் கொடுத்துட்டாங்க. கட்டாயமா ரெடியா இருக்கணும் "

" சரி. இங்கே வா. நான் சொல்ற மாதிரி பண்ணு"

கிழவர் வெகுநாட்கள் இடைவெளிக்கு பின் கோதாவில் இறஙகினார்

இந்தா இதே மாதிரி இப்படி உருட்டிப் போடு சரியா

நன்றி : இணையம் 

பூந்தி துகள்களை துணியில் தட்டியபோது நாக்கு மரத்திருந்தது.

46 கருத்துகள்:

 1. அன்பின் ஸ்ரீராம், கீதா/ கீதா மற்றும் அனைவருக்கும் வணக்கமும் நல்வரவும்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம். இனிய காலை வணக்கம் துரை செல்வராஜு ஸார்.

   நீக்கு
  2. வருகை தந்த தரப்போகும் அனைவருக்கும் நன்றி கலந்த வணக்கம்.

   நீக்கு
 2. இன்று திரு.ரிஷபன் அவர்களுடைய கைவண்ணமாக இருக்கும் என்று நினைத்தேன்....

  பதிலளிநீக்கு
 3. கதையின் போக்கு ஒருபுறம் இருந்தாலும் -
  கடைசியில்
  நாக்கு மரத்து விட்டது...

  பதிலளிநீக்கு
 4. அனைவருக்கும் காலை வணக்கம். வாழ்க நலம்

  பதிலளிநீக்கு
 5. கண்ணீரும் வற்றி விட்டது! அந்தக் கோபம், அதன் காரணம்!!!!!!! யூகிக்க வேண்டும். இதான் ரிஷபன் சாரோட பஞ்ச்! அதை வைத்தே இன்னொரு கதை எழுதிடலாம்.

  பதிலளிநீக்கு
 6. எனக்கு என்னவோ இந்தக் கதையைப் படிக்கும்போது கோபு சார் எழுதிய 'ஜிலேபி' சம்பந்தமான கதை நினைவுக்கு வந்தது. இனிப்பு செய்பவர்கள், அதைச் சுவைக்கவோ இல்லை தங்களுக்கு நெருங்கியவர்களுக்கு ஆசையாகக் கொடுக்கவோ வாய்ப்பு கிடைக்கிறதா?

  பதிலளிநீக்கு
 7. கடமை, எதற்கு முன்னுரிமை என்று வரும்போது தங்களின் சொந்த ஆசைகளுக்கு இடமில்லாமல் போய்விடுகிறது.

  கதையை ரசித்தேன். ரிஷபன் சாருக்கே உரித்தான, 'ஏன் அப்படி' என்பதை படிக்கிறவர்களை யூகிக்கவிட்டுவிடுகிறார். இதில் அவரவர் மனநிலைக்குத் தகுந்தவாறு புரிந்துகொள்ளவேண்டியதுதான்.

  1. புஷ்பவல்லிக்கு காசு கொஞ்சம் புரள ஆரம்பித்துவிட்டது. இனி தானே முன்னேறிவிடலாம் என்ற நம்பிக்கை வந்துவிட்டது. கதையில் வராத 'ஆர்டர் பிடித்துத் தரும் ஏஜெண்ட்' இடம் மனது சென்றது. அவனோ குழந்தையோடு அவளை ஏற்றுக்கொள்கிறேன் என்று சொல்கிறான். கிழவர் இருக்கும்வரை அதற்கு வாய்ப்பேது. அந்த எரிச்சலில் கிழவர் மீதான அன்பு போய்விட்டது. (அட எனக்குள் இப்படி ஒரு வில்லனா?)

  2. சின்ன வயதில் கிழவரும் கஷ்டப்பட்டிருக்கிறார். இப்போ பாதுகாப்பு என்ற அளவில் அவர் இருப்பது தனக்கும் குழந்தைக்கும் மிக்க நல்லதாக இருப்பதாகப் படுகிறது. அவருடைய கைராசி, ஆலோசனைதான் தன்னை இந்தத் தொழிலில் ஈடுபட வைத்து இப்போது தானும் தன் குழந்தையை ஒற்றைக்காலில் நின்று ஆளாக்கமுடியும் என்ற நம்பிக்கையைக் கொடுத்தது. ஆனால் அவர் நல்ல உடல்நிலையோடு இருக்கணுமே. அவரானா இனிப்பு எண்ணெய் பட்சணங்கள் சாப்பிடுவதில் மிகுந்த ஆசையோடு இருக்கிறார். வயதான காலத்தில் அடுப்படியில் கிடந்து உழன்று அவருக்கு ஏதேனும் ஆனால், தங்கள் கதி? அவரிடம் இனி கண்டிப்போடு இருந்துவிட வேண்டியதுதான். இனி வெளியில்தான் அவருக்கு வாசம். அடுப்படிப் பக்கத்தில் வரக்கூடாது. காரணத்தையெல்லாம் சொன்னால் கிழவர், பாசத்தைக் காட்டி தன்னை மீற வைத்துவிடுவார். அதனால் பேச்சே அவரிடம் வைத்துக்கொள்ளக்கூடாது. கிழவருக்கு வருத்தம் ஏற்பட்டாலும் பரவாயில்லை, அவருடைய, நம்முடைய நன்மையை உத்தேசித்துத்தானே இப்படி நடந்துகொள்கிறோம்.

  கதாபாத்திரங்களின் குணாதிசயங்களை இன்னும் சித்தரிக்காததால் 'எதனால்' என்ற கேள்விக்கு எப்படியும் நம் மனதில் புரிந்துகொள்ளமுடியும். இது நல்ல டெக்னிக், அதே சமயம் படிக்கிறவர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றமாகவும் இருக்கும் (முழுக் கதையும் புரிந்துகொள்ளமுடியாததால்).

  பாராட்டுகள் ரிஷபன் சார்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நெம்பர் வன் க்கு கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் * karrrrrrrrrrrrr:)
   உங்களுக்குள் வில்லன் அல்ல, இப்போ நீங்களே வில்லனாக தெரிகிறீங்க:) ஹையோ மீக்காக றம்ப் அங்கிள் வெயிட்டிங் மீ ரன்னிங்:)

   நீக்கு
  2. @நெல்லைத்தமிழன் ..நம்பர் 2 தான் செம ..இப்படித்தான் இருந்திருக்கும்

   நீக்கு
  3. நன்றி

   நம்மோடு இருப்பவர்களையே நாம் முழுமையாகப் புரிந்து கொண்டிருக்கிறோமா.. இல்லை என்பது தான் என் அபிப்பிராயம்.

   என் சிறுகதை பாணியும் அதுவே

   நீக்கு
 8. லட்டு பிடிக்கும் படத்தைப் பார்த்ததும் எனக்கு ஒன்று தோன்றியது.

  பஹ்ரைனில் 1000 லட்டு ஆர்டர் வரும். பாவம் இருவர், தங்கள் இரண்டு கைகளினாலும் ஒரே அளவில் லட்டு தொடர்ந்து பிடித்துக்கொண்டு இருப்பார்கள். உள்ளங்கை என்னத்துக்காகும் என்று எனக்குத் தோன்றும். ஒரு தடவை என்னை லட்டு பிடித்துப் பார்க்கச் சொன்னார்கள். இரண்டு மூன்று பிடிப்பதற்குள் வலி ஏற்பட்டமாதிரி தோன்றியது. ஒரு பொருளை அனுபவிக்கும்போது அதற்காகத் தங்கள் உழைப்பைக் கொடுத்த எளியவர்களை நாம் நினைப்பதே இல்லை. இது நம் வாழ்வில் ஒரு குறைதான்.

  பெரிய கடைகளில் லட்டு சிதறாமல் உருண்டையாக இருக்கவேண்டும், அப்படிப் பிடிக்கவேண்டும் என்பதற்காக குளூகோஸ் சிரப் உபயோகித்து லட்டு பிடிக்கிறார்கள். (அதனால் கூடுதல் இனிப்பு உடலுக்குச் சேரும். நல்லதும் கிடையாது). நான் இனிப்புக் கடைக்காரரை சிநேகம் பிடித்துக்கொண்டால், இது மாதிரி நிறைய விஷயங்கள் தெரிந்துகொள்வேன். (அதனால் சாப்பிடும்போது எச்சரிக்கை உணர்வும் வரும். உதாரணமா இமர்த்தி-ஜாங்கிரி செய்ய, அங்க உள்ள கடைகளில் கூடு மட்டும் (அதாவது ஜீராவில் போடாத ஜாங்கிரி) பொரித்து சாக்குப்பையில் கட்டி வைத்துவிடுவார்கள். இது 6 மாதத்துக்குமேல் உபயோகப்படுமாம். தினமும் தேவையான அளவு ஜாங்கிரிகளை எடுத்து, திரும்பவும் பொரித்து ஜீராவில் போட்டு இமர்த்தி தயார் செய்வார்கள். தெரிந்துகொண்டதால் நான் புதிதாகச் செய்யும் சமயம் தவிர மற்ற சமயங்களில் வாங்குவதில்லை. இதுபோல காலாவதியான இனிப்புகளை, மேல்புறம் மட்டும் சுரண்டிவிட்டு, திரும்பவும் ரீ சைகிள் செய்துவிடுவார்கள். அதனால் பொதுவாக எதுவும் வேஸ்ட் ஆவதில்லை. கஸ்டமர் வயிற்றுக்குள் எந்த விதத்திலாவது சென்றுவிடும்.

  இதுக்கு மேல் எழுதினா, 'செவ்வாய்'க்கிழமையை, 'திங்கக் கிழமையாக' ஆக்குவதா என்று ஸ்ரீராம் கோபப்படுவார். ஹா ஹா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இந்தக் கை சுடும் பயத்தினால்தான் நான் லட்டு செய்வதில்லை, ஆனா ஊரில் சிலசமயம் ரவ்வை லட்டை ஏதாவது போத்தல் மூடிகளில் போட்டு அழகழகா செய்திருக்கிறோம் கையில் சுடாமல்... அச்சு லட்டுப் போல வருமாக்கும் வேணுமெண்டா சொல்லுங்கோ செய்து அனுப்புறேன்:)

   நீக்கு
  2. பக்கத்துத் தெரு கிரான்ட் ஸ்வீட்ஸில் கிலோ 6 யூரோவுக்கு வாங்கிடலாம். நீங்க செஞ்சு அதை அனுப்ப கிலோ 20 யூரோன்னா கேட்பீங்க? (நீங்க செஞ்சதைச் சாப்பிட்டுட்டு ஆஸ்பத்திரிக்கு வேற செலவழிக்கணும்னு, ஏஞ்சலின் சொல்ற மாதிரி நான் இரக்கமில்லாமல் சொல்லமாட்டேன்)

   நீக்கு
 9. காலை வணக்கம் 🙏

  மனதைத் தொட்ட கதை. ரிஷபன் ஜி பஞ்ச் கடைசியில்.

  பதிலளிநீக்கு
 10. உரிய நேரத்தில் கைகொடுத்து மனதில் நிற்கிறார் தாத்தா. சூழ்நிலைகளைச் சமாளிக்கும் சூழல் என்பது சிலருக்கே அசாத்தியமானது. எவருக்கும் எவ்வித சிக்கலுமில்லை.

  பதிலளிநீக்கு
 11. //நல்ல வாய்ப்பு. ஒரே கல்லில் இரண்டு மாங்காய். பட்சணத்தையும் கண்ணால் பார்க்கலாம்.// இக்கட்டில் கூட சுயநலமாக யோசிக்கும் மனசு, பின்னர் மாறி உள்ளுக்குள் இருக்கும் மனிதம் வெளிப்படுவது.. சிறப்பு.

  பதிலளிநீக்கு
 12. தவறான சிந்தையை தூண்டியது தொடக்கம்...
  முடிவில் அழகு வாழ்த்துகள்.

  (தீப்புண்கள் குணமாக பிரார்த்தனைகள்)

  பதிலளிநீக்கு
 13. நாக்கு என்று தலைப்பை படித்தவுடன் கதையை வேறு மாதிரி நினைத்தேன்.
  கதை பெரியவரின் நாக்கு பற்றி புரிந்து கொண்ட போது மனம் கனத்து விட்டது.
  ஜீராவில் மிதந்த நாக்கு கடைசியில் மரத்து போய் விட்டதே!

  பதிலளிநீக்கு
 14. தாத்தாவுக்கு இப்போது கடமைதான் பெரிது ஆறுமணிக்கு கொடுக்க வேண்டுமே பட்சணங்க்களை.

  இனி மருமகள், பேத்தியுடன் அவரும் இணைந்து செய்யப் போகிறார். வீட்டு விசேஷஙகள் ஆர்டரின் பெயரில் பட்சணங்கள் என்று ஆர்டர் குவிய போகிறது. எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்க போகிறார்கள்.
  வாழ்க வளமுடன்.

  பதிலளிநீக்கு
 15. அந்தத் தாத்தாவை திண்ணையிலேயே இருக்க விட்டதுதான் நல்லது, பேத்திடம் கேட்டுக் கேட்டே இப்படி நா ஊறுகிறார்... இவரை உள்ளே விட்டால்:)... ஹா ஹா ஹா ஆனாலும் பேசாமல் இருப்பது தப்பு... தாத்தாவுக்கு இவர்களை விட்டால் யாருமில்லையே பேச...

  பதிலளிநீக்கு
 16. ஆகவும் ஓவர் திமிர்கூடாதுதான் அந்த மருமகளுக்கு... ஆனைக்கும் ஒருநாள் அடி சறுக்கும் எனச் சொல்லி நிக்கிறது கதை...

  பதிலளிநீக்கு
 17. //" உன்கிட்ட சொல்லக் கூடாது"

  "அப்புறம் நாலணா தருவேன்"//

  இதிலேயே புரிகிறது பெரியவர் முன்பு கோதாவில் இருந்தபோது அல்லது திண்ணைக்கு டிரான்ஸ்பர் கிடைக்குமுன் நிறைய ஸ்வீட்ட்டை சாப்பிட்டு உடலை கெடுத்திருப்பார்னு :) அதனாலோ மருமகள் வாசலோடு நிற்பாட்டிவிட்டார் ..ஆனாலும் பெரியவர் பாவம்தான் .
  அருமையான கதை ..ஒரு சின்ன க்ளூ கொடுத்திருந்தாலும் கதை மாந்தரில் பெரியவர் அல்லது மருமகள் இருவரில் ஒருவர் மீது கோபம் மற்றவர் மீது அனுதாபம் விழுந்திருக்க சாத்தியமுண்டு ஆனா ரிஷபன் சார் அழகா பாலன்ஸ் செஞ்சி நம்மையே யூகிக்க வைச்சிட்டார் :)

  பதிலளிநீக்கு
 18. நான் ஸ்கூல் படிக்கும்போது நண்பி வீட்டுக்கு போனேன் அவள் தந்தை மருத்துவர் ..அவங்க அப்பா வழி தாத்தாவை திண்ணையில் வச்சிருந்தாங்க..பெரிய தட்டு நிறைத்து மிக்ஸர் சாப்பிட்டுக்கொண்டிருந்தார் .அவர் மருமகள் வந்து திட்டி கொண்டிருந்தார் :) பிளாஸ்கில் காபி வேறு ..அநேகமா உறங்க மட்டுமே உள்ளே போயிருப்பார்னு நினைக்கிறன் .இப்போ புரியுது
  பல முதியோருக்கு நாக்கு தான் வாசலில் சீட் போட வச்சிருக்கு ...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. படிக்க சொல்லி நம்பி அனுப்பினால், நண்பி வீட்டுக்குப் போவது. ... ஊர் சுற்றுவது கர்ர்ர்ர்ர்ர் இன்னும் இப்பழக்கம் விட்டுப் போகுதில்லை அஞ்சுவுக்கு:)...

   ஹையோ நேக்கு ரைமாச்சூஊஊ பெல் அடிக்குதேஎ:) ரன்னிங்:)

   நீக்கு
  2. கர்ர்ர்ர் :) என் ப்ரண்டு என்னோட ரெக்கார்ட் நோட்டை எடுத்திட்டு போனவ 10 நாள் ஸ்கூலுக்கு வரலை அதை வாங்கத்தான் போனேன் .ஸ்கூல் நாளில் க்ளாஸ் கட்டடிச்சு மரமேறி மீனாட்சிபழம் சாப்பிட்டவங்களுக்கு பேச்சை பாரு

   நீக்கு
  3. ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர் முதல்ல வல்லாரை ஊஸ் ஐ நிறுத்துங்கோ:)...

   நோ நாங்க நம்ப மாட்டோம்ம் மெடிகல் சேர்டிபிகேட் காட்டுங்கோ நண்பியின் லீவுக்கு:)

   நீக்கு
  4. ஹஹ்ஹா :) உங்களுக்கே நினைவில்லை நீங்க மரம் ஏறி சாப்பிட்ட மீனாட்சிபழம் ஆனா எனக்கு நினைவிருக்குன்னு போர்ர்ராமை உங்களுக்கு

   நீக்கு
 19. /பூந்தி துகள்களை துணியில் தட்டியபோது நாக்கு மரத்திருந்தது.//

  ஒருவேளை மருமகளின் மனதும் வேலை பளுவினால் தான் மரத்து போயிருக்கும்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹலோவ் தமிழில் டீ குடிச்ச ஞானி :) மருமகளுக்கு வேலை செஞ்சி செஞ்சி நொந்து முதலில் மனம் மரத்து போனதால்தான் மாமனாரை அதுவும் வயதான பெரியவரை திண்ணைக்கு டிரான்ஸ்பர் செஞ்சிருக்கார் அதை ஜொன்னேன்

   நீக்கு
  2. ஓ அஞ்டு இப்போ மருமகள் கரெக்ட்டருக்குள் நுழைஞ்சிட்டா:).. மீ 96 இல வ். சேதுபதிக்குள் என்றியானதைப்போல புவஹாஆஆ புவஹாஆஆ:)

   நீக்கு
  3. எனக்கும் முன்னாடி நமக்கும் முன்னாடி நெல்லைத்தமிழன் என்னமா ஆராய்ச்சி செஞ்சிருக்கார் பாருங்க :)

   நீக்கு
 20. நண்பர் நெல்லைத் தமிழன் அவர்கள் கதைகுறித்த அருமையான ஆய்வையே செய்துவிட்டார்
  இருவருமே பாராட்டிற்கு உரியவர்கள்

  பதிலளிநீக்கு
 21. வண்டியும் ஒரு நாள் ஓடத்தில் ஏறிய கதைதான்.
  பாவம் தாத்தா. மனைவி இழந்தவர்கள் படும் பாட்டைப் பார்த்திருக்கிறேன். வயதானவர்களுக்குப் பசி தாங்காது.
  மருமகள் மாம்னார் இருவருமே அழகாக விட்டுக் கொடுத்திருக்கலாம். இந்த நிகழ்ச்சியால் அவர்கள் குடும்பம் வளம் பெறட்டும்.
  நிறைய பலகாரங்கள் செய்யும் போது அனைவருக்கும் ஏற்படும் ருசி மறப்புதான் தாத்தாவுக்கும்.
  மிக அருமையாகக் கதை வடித்திருக்கும் ரிஷபன் ஜிக்கு மனம் நிறை பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
 22. ரிஷபன் சார் கையைக் கொடுங்க! அட்டகாசமான முழுமையான நச் கதை! சிறுகதைக்குள் எத்தனை சொல்லலாம்னு சொல்லிட்டீங்க! ஆஹா!

  பதிலளிநீக்கு
 23. ரிஷபன் ஸார் கதை ரொம்ப அருமை. தாத்தா பாவம் தான்....மருமகளும் பாவம் தான் இப்போது தாத்தா உதவுவது சிறப்பு.

  பதிலளிநீக்கு
 24. ரிஷபன் அண்ணா வழக்கம் போல அருமை. பல வரிகள் பல ஊகங்கள் கொடுக்குது.

  தாத்தாவுக்கு திண்ணை என்பது கொஞ்சம் வேதனைதான். அதுவே மற்றொரு கதைக்கு வழி வகுக்குது. (இன்னும் ட்ராஃப்ட்ல இருக்கற கதைகளையே முடிக்கற வழியக் காணும் பிட்டு பிட்டா இருக்கு இதுல இந்தக் கதைல இன்னொரு கதை எழுதப் போறியான்னு என் மைன்ட் வாய்ஸ் என்னை ரொம்பவே நையாண்டி செய்யுது!!!! ஹிஹிஹிஹி)

  நாக்கு ஜீராவில் மிதந்தது// ஆஹா...ஸ்வீட் டங்க்....ஆனால் வார்த்தைகள் அப்படி இருந்திருக்காதோ அதனால்தான் திண்ணையோ...சரி எதுவாக இருந்தாலும் இப்ப தாத்தா கை கொடுக்கும் கையாக கிச்சனுக்குள் நுழைந்தாயிற்று. இனியேனும் திண்ணையிலிருந்து கூடத்துக்கு வருவார் என்று நம்புவோம்...எவ்வளவோ ஊகிக்க முடிகிறது...

  நல்ல கதை. உங்கள் ஸ்டைலே தனிதான்...

  கீதா

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!