திங்கள், 6 மே, 2019

திங்கக்கிழமை : இளநீர் பாயசம் - சாந்தி மாரியப்பன் ரெஸிப்பி

ஆரம்பித்திருக்கும் வெயில்காலத்திற்கேற்ற ஒரு அயிட்டத்தை அனுப்பியிருக்கிருக்கிறேன். திங்கற கிழமையில் மட்டுமல்ல.. எல்லாக் கிழமைகளிலும் சாப்பிடலாம்.
இளநீர் பாயசம்..


கோடைக்காலம் தொடங்கி முழுதாக ஒரு வாரம் கூட ஆகவில்லை, அதற்குள் வெயிலும் வெம்மையும் வாட்டியெடுக்கத் துவங்கி விட்டன. தாகத்தைத் தணிக்க ஐஸ்க்ரீம், குளிர்பானங்கள், இளநீர், குளிர் நீர் என இப்போதே குளிர்பதனப்பெட்டியை நிரப்பி வைக்கவும் ஆரம்பித்து விட்டோம். வெயில் இப்போதே இந்த போடு போடுகிறதே.. இன்னும் ஏப்ரல், மே வந்தால் என்னாவோமோ!!

கோடைக்காலத்தில் உடற்சூடு காரணமாக ஏற்படும் வயிற்று வலி, கண் எரிச்சல், உடலில் கொப்புளங்கள் ஏற்படுதல் போன்றவற்றுக்கு இயற்கை இதே கோடை காலத்தில் மருந்தும் வைத்திருக்கிறது. இளநீர், நுங்கு போன்றவைதான் அவை. உள்ளுக்குச் சாப்பிடுவதால் உடலுக்கு நன்மை ஏற்படுவது மட்டுமல்ல, நுங்கினுள்ளிருக்கும் நீரையோ அல்லது இளநீரையோ கொஞ்சம் எடுத்து முகத்திலும் உடம்பிலும் பூசிக்கொண்டால் கோடையில் ஏற்படும் வியர்க்குரு, கொப்புளங்கள் போன்றவை மறையும். கொஞ்சம் சந்தனப்பவுடர் அல்லது கடலை மாவுடன் கலந்து பேக்காவும் போடலாம்.

வீரியம் அதிகமுள்ள மருந்துகளை உட்கொள்ளும் சமயத்தில் வயிற்று வலி ஏற்படுவது சகஜம். என்னதான் மருத்துவர்கள் ஆன்ட்டி-அசிடிட்டி வகை மாத்திரைகளைப் பரிந்துரைத்தாலும் ‘அவ்வப்போது’ இளநீர் குடிப்பது வயிற்றைப் புண்ணாகாமல் பாதுகாக்கும். இதில் சோடியம் அதிகமிருப்பதால் இரத்த அழுத்தம் அதிகமுள்ளவர்களும், டயபடீஸ் உள்ளவர்களும் அளவுடன் எடுத்துக்கொள்ளப் பரிந்துரைக்கப் படுகிறார்கள்.

மஹாராஷ்ட்ராவில் “பானி வாலா, மலாய் வாலா” என இரு வித இளநீர்கள் கிடைக்கும். தண்ணீர் மட்டும் போதும், உள்ளே இருக்கும் வழுக்கை வேண்டாமென்றால் ‘பானி வாலா’ எனக் கேட்டு வாங்குவோம். அதுவே மதிய உணவு நேரங்களில் வெளியே செல்ல நேரிட்டால், ‘மலாய் வாலா’ உகந்தது. தண்ணீரைக் குடித்து விட்டு, உள்ளே இருக்கும் வழுக்கையையும் சாப்பிட்டால் வயிறு திம்மென்று ஆகிவிடும். அதிலும் ‘பத்லா மலாய்’ எனக் கேட்டு வாங்க வேண்டும். அதுதான் இளசாக சாப்பிட நன்றாக இருக்கும். ‘கடக் மலாய்’ வாங்கி விட்டாலோ வீட்டிற்கு எடுத்து வந்து கறி சமைக்க வேண்டியதுதான். லேசாக முற்ற ஆரம்பித்ததை வேறென்ன செய்வது. வாய் வலிக்க வலிக்க சாப்பிட்டுத் தீர்க்க வேண்டியதுதான்.

இளநீரை அப்படியே சாப்பிடுவது ஒரு ருசி என்றால் அதையே பாயசமாக்கிச் சாப்பிடுவது வேற லெவல் ருசி. இணையத்தில் கொட்டிக்கிடக்கும் ஏகப்பட்ட செய்முறைகளை ஆராய்ந்ததில், பெரும்பான்மையானவை பிற பால்பாயசங்களின் முறையையே ஒத்திருந்தன. அப்படியிருந்தால் இதற்கும் மற்றவைக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது? வித்தியாசம் தேடி அலைந்தபோது கிடைத்தது இந்த செய்முறை. அதிகம் சமைக்கவே தேவையில்லாத, நெய், முந்திரிப்பருப்பு என எதுவும் போடாத இந்தப் பாயசம் அட்டகாசமான ருசியில் அமைந்தது.

தேவையானவை அதிகமில்லை ஜெண்டில் மென் அண்ட் விமென்.இரண்டு கப் கெட்டியான பசும்பாலை லேசாகச் சூடாக்கி அதில் ஒரு டேபிள்ஸ்பூன் அகர் அகரைக் கரைத்து விடவும். பின், காய்ச்சிக்கொதிக்க வைத்து பால் ஒரு கப் அளவுக்குக் குறுகும் வரை வற்ற விட்டு இறக்கி அறை வெப்ப நிலைக்கு வரும் வரை குளிர வைக்கவும். அடுப்பின் பங்கு இத்தோடு முடிந்தது. இனியெல்லாம் அடுப்பில்லாச் சமையலே..ஒரு கப் இளநீர் வழுக்கையை எடுத்துக்கொண்டு அதில் கால் கப் அளவு எடுத்து தனியே வைக்கவும். பின், மீதமிருக்கும் வழுக்கையுடன் கொஞ்சம் கொஞ்சமாக இளநீரைச் சேர்த்து மைய அரைக்கவும். இதற்கு, ஒரு கப் இளநீர் போதும். மீதமிருந்தால் கடகடவென குடித்து விடுங்கள். தேனெடுத்தவன் புறங்கையை நக்காமலிருக்க மாட்டான் தெரியுமோ!!!!!அரைத்த விழுதை, ஏற்கனவே சுண்டக்காய்ச்சி ஆற வைத்திருக்கும் பாலில் சேர்த்துக் கலக்கவும். அரை மூடி தேங்காயைத் துருவி நன்கு அரைத்து முதல் மற்றும் இரண்டாம் பாலெடுத்து இரண்டையும் கலந்து ஒரு கப் எடுத்துக்கொண்டு அதையும் இத்துடன் சேர்க்கவும்.எடுத்து வைத்த வழுக்கைத் தேங்காயைப் பொடிப்பொடியாக நறுக்கி அதையும் சேர்த்துக் கலக்கி, கொஞ்சமாக ஏலக்காய்ப் பொடியையும் தூவிக்கொள்ளவும். அவ்வப்போது கடிபடும் தேங்காய்த்துண்டங்கள் வாழ்வின் சுவாரஸ்யத்தைக் கூட்டும். கொஞ்சம் இளசான துண்டங்கள் கிடைத்தால், “டிவைன்” என கண்மூடிச் சொக்கலாம்.பாயசம் என்றால் இனிப்பு இல்லாமலா? அரை கப் சர்க்கரையைப் பொடி செய்து சேர்க்கலாம். ஆனால், ஒரு கப் கண்டென்ஸ்ட் மில்க்கைச் சேர்த்தால் ருசியும் நிறமும் மணமும் நன்றாக இருக்கிறது.அவ்வளவுதான், பாயசப்பாத்திரத்தை ஃப்ரிஜ்ஜில் வைத்து மூன்று மணி நேரத்திற்குக் குளிர விடுங்கள். காலைச் சமையல் முடிந்த கையோடு பாயசத்தைத் தயார் செய்து வைத்து விட்டால், லஞ்சுக்கு டெஸர்ட் ரெடி கண்ணாடிக்கிண்ணங்களிலோ அல்லது பழரசக்கோப்பைகளிலோ பரிமாற வேண்டியதுதான்.கொஞ்சம் ரிச்சாக பரிமாற நினைத்தால், கொஞ்சம் பாதாம் பருப்பை ஊற வைத்து தோல் நீக்கி சின்னச்சின்னதாக ஸ்லைஸ் செய்து, அதை பாயசத்தின் மேலாகத் தூவிப் பரிமாறலாம். நெய்யில் வறுத்த முந்திரி திராட்சையெல்லாம் உங்கள் ச்சாய்ஸ். இளநீர்ப் பாயசத்தின் தனிச்சுவையை அனுபவிக்க விரும்பியதால் நான் அதெல்லாம் சேர்க்கவில்லை. செய்து ஃப்ரிஜ்ஜில் வைத்து விட்டால் டின்னருக்கோ, வார இறுதி விருந்துகளுக்கோ பரிமாறி அசத்தி விடலாம். நீர்க்கடுப்பு, நீர்ச்சுருக்கு, சூட்டு வலி என எல்லாவற்றையும் சரி செய்யும். தேங்காய்ப்பால் மற்றும் தேங்காய் வழுக்கை வயிற்றுப்புண்ணை ஆற்றும், உடலுக்குக் குளுமை தரக்கூடியது. என நன்மைகள் அனேகம். எல்லாவற்றையும் விட வெயில் காலத்தில் ஜில்லென்று சாப்பிட உகந்த ஒரு உணவு என்பதற்கு மேல் வேறென்ன வேண்டும்?
இது ஒரு விடியோவாக இப்போது இணைக்கப்படுகிறது.

63 கருத்துகள்:

 1. வந்துட்டேனே! யார் சமையல் இன்னிக்கு?

  பதிலளிநீக்கு
 2. ஓஓ சாரலா? அப்போ நாரோயில் செய்முறை!

  பதிலளிநீக்கு
 3. இனிய காலை வணக்கம் ஸ்ரீராம் அண்ட் எல்லோருக்கும்

  ஆஹா இளனீர் பாயாசமா சூப்பர்! பார்த்துவிட்டு வருகிறேன்

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆ! இன்று நான் ஃபர்ஸ்டு குதிக்கணும்னு வந்தா கீதாக்கா முன்னாடி வந்தாச்சு!! கீதாக்கா நீங்க தனியா இல்லையாக்கும்!! நான் இருக்கிறேன் இங்கு ஹிஹிஹி!

   கீதா

   நீக்கு
  2. நீண்ட விடுமுறைக்குப் பின்னர் வந்திருக்கும் தி/கீதாவுக்கு நல்வரவு. வாழ்த்துகள். பதிவைப் படிக்கணும். இஃகி,இஃகி!

   நீக்கு
  3. வாங்க வாங்க கீதா ரெங்கன்... வந்தாச்சா? காலை வணக்கம்.

   நீக்கு
  4. கா போ னவங்களைவிட நான் குறைவாத்தான் கா போ ஆனேன்!!! ஹிஹிஹிஹிஹி

   கீதா

   நீக்கு
  5. வந்து விட்டீர்களா கீதா, வாழ்க வளமுடன்.

   நீக்கு
 4. இனி வரப் போகும் நண்பர்களுக்கும், வழக்கமாக வரவேற்கும் துரைக்கும் மற்றும் அனைவருக்கும் நல்வரவு, வணக்கம். வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கீதாக்கா குட்மார்னிங்க்!!!

   கீதா

   நீக்கு
  2. காலை வணக்கம் கீசா மேடம் மற்றும் அனைவருக்கும்.

   நீக்கு
 5. பதிவை பார்த்து கமெண்ட் அடிப்பதற்குள் எல்லோரும் கமெண்டை அடித்து வைத்து கொண்டு பதிவிட்டதும் உடனே கருத்தை காப்பி பேஸ்ட் செய்துவிடுவார்களோ? ஹும்ம்ம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மதுரை நான் பொதுவாகவே கருத்துகளை வேர்டில் அடித்து தான் எல்லா தளங்களிலுமே காப்பி பேஸ்ட் செய்வது. இங்கு மின்வெட்டு அடிக்கடி வரும் என்பதால். கணினி ஆஃப் ஆனாலும் கமென்ட் இருக்கும் மீண்டும் அடிக்கத் தேவை இல்லை...மறதி வேறு இருக்கே..அதான்

   கீதா

   நீக்கு
 6. சூப்பர் பாயசம். சாந்தியின் செய்முறைக்குக் கேட்கவா வேணும்? வெயிலுக்கேற்ற பானம்.

  பதிலளிநீக்கு
 7. இதே செய்முறைதான். நான் செய்வது. பருப்புகள் எதுவும் சேர்க்க மாட்டேன் வித்தியாசம் என்னவென்றால் அகர் அகர் சேர்த்ததில்லை. ரெண்டாவது கண்டென்ஸ்ட் மில்க் பதில் பாலை நன்றாகக் குறுக வைத்து அதில் சர்க்கரையும் சேர்த்துக் குறுக வைத்ததைச் சேர்த்து தனியாக வைத்துக் கொண்டு சேர்த்துவிடுவது. வழுக்கையைத்தான் கட் செய்து போடுவதும்.

  சூப்பர் ரெசிப்பி!! வாய்ப்புக் கிடைத்தால் அகர் அகர் சேர்த்துச் செய்து பார்க்கிறேன். அகர் அகர் சேர்ப்பது எதற்காக?

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கீதா ரங்கன்... கொஞ்சம் அகர் அகர் சேர்க்கும்போது பாயசம் தண்ணியா இல்லாம கொஞ்சம் கூழ் தன்மையைக் கொடுக்கும். அப்போதான் இன்னும் சுவையா இருக்கும்னு நினைக்கிறேன். அதுனாலத்தான் கொஞ்சமா சேர்க்கச் சொல்லியிருக்காங்க.

   நீக்கு
  2. நெல்லை அகர் அகர் கெட்டியாக்கும் தன்மை கொண்டதுனு தெரியும்...அதுக்குத்தான் நான் பாலையே நன்றாகக் குறுக்கி அதில் சர்க்கரையும் சேர்த்துக் குறுக்கிச் சேர்த்தால் கெட்டியாகவே இருக்கும் என்பதால்தான் அகர் அகர் பற்றிக் கேட்டேன். அது சுவை கூட்டுமோ என்று. ஏனென்றால் எனக்குத்தான் இப்போ ஃப்ளேவர் தெரியாதே அதனால்தான்.

   அகர் அகர் சேர்த்து நிறைய டிஷஸ் செய்திருக்கேன். கேக்கின் மேல் போடப்படும் ஃபாண்டான்ட்க்கு (போர்வைக்கு!!!!!! அங்கிக்கு!!!) மற்றும் கேக்கின் மேல் அலங்கரிக்கப்படும் சுகர்கேண்டிஸ்கு முட்டை சேர்க்காமல் செய்ய அகர் அகர்தான் சேர்ப்பது. திக்கெனிங்க் ஏஜன்ட்...

   கீதா

   நீக்கு
 8. மதுரை தமிழ்ச் சங்கம் ரோடில் ஒரு சிறிய எட்டுக்கு நாலு சைஸ் கடை. இங்கு போடப்படும் "இளநீர் சர்பத்" ரொம்ப ஃபேமஸ். எப்போதுமே கூட்டம் அலைமோதும்.கடைக்காரர் மதிய உணவு முடிப்பதற்குள் கூட்டம் பொறுமையிழந்துவிடும். முடிந்தால் ஒரு எட்டு வந்து சுவைத்துப் பாருங்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இளநீர் சர்பத்தும் நாங்க வீட்டுலயே செஞ்சுட்டோம்ல!!! ஹிஹிஹி.

   அது வேறு ஒன்னுமில்ல....வீட்டுல நுங்கு சர்பத் நு ஒரு முறை ப்ளான் செஞ்சு நுங்கு வாங்கிக் கொண்டு வந்தது எல்லாம் தீர்ந்து விட்டது. அப்புறம் சர்பத்துக்கு குழந்தைகள் எல்லாம் டிமான்ட். மாமியார் வீட்டில் சம்மரில் எல்லோரும் கூடியிருந்த சமயம். பறித்திருந்த தேங்காய் இளநீ இருந்தது அதை வைத்துச் செய்து விட்டோம். அது செய்வதற்குள் குழந்தைகள் ஃப்ரிட்ஜில் இருந்த நெல்லி ஜூசைக் குடித்து குடித்து விஷமக்காரக் குழந்தைஅள் அதில் அளவு குறைவது தெரியக் கூடாது என்று தண்ணீரைக் கலந்து கலந்து வைக்க (எல்லாம் நான் சின்ன வயசுல செஞ்சதுதானே!!) பெரியவர்கள் அதைக் குடிக்க எடுத்துக் குடித்துவிட்டு குழந்தைகளைப் பிடிக்க ஓடியது... ஹா ஹா ஹா அதெல்லாம் கோல்டன் மெமரிஸ்...

   கீதா

   நீக்கு
 9. துரை, மாலை வணக்கம். மற்ற அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

  ஷாந்தி செய்முறையே பிரமாதமாகக் கொடுத்திருக்கிறீர்கள். இளனீர்
  டயபெடிஸ்க்கு ஒத்துக்குமா. தெரியாமல் போச்சே. இங்கே டப்பா ,டப்பாவாக இளனீர் கிடைக்கிறது.

  மில்க்மெயிட் சேர்ப்பது சூப்பர் மா.
  நல்ல ரெசிபி. பெண்ணிடம் சொல்கிறேன். மிக மிக நன்றி ஷாந்திமா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சோடியம் அதிகமிருப்பதால் இரத்த அழுத்தம் அதிகமுள்ளவர்களும், டயபடீஸ் உள்ளவர்களும் அளவுடன் எடுத்துக்கொள்ளப் பரிந்துரைக்கப் படுகிறார்கள்.//

   அக்கா, இளநீர் குடிக்கலாம் அளவுடன் என்று போட்டு இருக்கிறார்கள்.

   நீக்கு
  2. அன்பு கோமதி. இளனீரும் மாம்பழமும் அவ்வளவு பிடிக்கும். 15 வருடங்களாகச் சாப்பிடுவதில்லை.
   கால் டம்ப்ளர் இளனீர் சாப்பிடலாமோ என்னவோ.

   நீக்கு
 10. செய்முறை நல்லா இருக்கு. வெயிலுக்கேற்ற பாயசம். பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
 11. சாந்தி மாரியப்பன் எப்போதுமே கலக்கல் ரெசிப்பிஸ் தான் அதுவும் எங்க ஊர்!!!! ஸ்பெஷல் ரெசிப்பிஸ் எழுதியிருக்காங்க!! (நெல்லை உடனே வந்துடுவார் உங்க ஊர் எதுனு சொல்லுங்க முதல்லனு!!! ஹா ஹா ஹா அதனால மீ இந்த கமென்டுக்கு அப்புறம் இங்கு எட்டிப் பார்க்க ப்ரிப்பேர்டா வரணுமல்லோ!!! ஆன் த ரன்வே!!!)

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எபி தளத்துக்கு வருகிறவர்களிலேயே, எந்த ஊர் சொன்னாலும், அது 'எங்க ஊர்' என்று சொல்லக்கூடிய ஒரே ஆள், கீதா ரங்கன் அவர்கள்தான். என்ன.... கொஞ்சம் பயத்துல, 'மதுரைக் காரங்கள்ட மாத்திரம்' 'ஆமாம் எங்க ஊர்ல' என்று ஆரம்பிக்கலை. அப்படி எழுதினால், மதுரை மீனாட்சிகள் சும்மா விட்டுடுவாங்களா?

   நீக்கு
  2. அது!!!!!!!!!!!!!!! அத்து! அந்த பயம் இருக்கணும்! இருக்கட்டும்! இல்லைனா ஶ்ரீராம் மாதிரித் தஞ்சாவூர்னும் சொல்லுவாங்க, மதுரைனும் சொல்லிப்பாங்க! நாங்க தனித்தமிழ் பேசும் சுத்தமான மதுரையாக்கும்! எங்கூரு மாதிரி வருமா?

   நீக்கு
  3. //தனித்தமிழ் பேசும் சுத்தமான மதுரையாக்கும்// - இது மாத்திரம் எங்கிட்ட வேண்டாம். தமிழகத்தில் நல்ல தமிழ் திருநெவேலித் தமிழ்தான். உலகத்துல யாழ்ப்பாணத் தமிழ். 'சங்கம் வளர்த்த மதுரை', 'தமிழ்ச்சங்கம்' அதெல்லாம் முற்காலத்துல. இப்போ இல்லா. மனசிலாயா?

   நீக்கு
 12. இளநீர்ப் பாயசம் என்னுடைய ஃபேவரிட். புகைப்படங்களும், செய்முறை விளக்கங்களும் நன்றாக இருக்கிறது. நன்றி.

  பதிலளிநீக்கு
 13. அனைவருக்கும் வணக்கம்...

  நானும் வந்துட்டேன்...ல!...

  பதிலளிநீக்கு
 14. காலத்துக்கேற்ற குறிப்பாக இளநீர் பாயசம்...

  குறிப்புகள் எளிமை... நல்லதொரு பக்குவம்..
  அவரவர் கைப்பக்குவத்தில் இளநீர்ப் பாயசம் தித்தித்திருக்கட்டும்...

  வாழ்க நலம்...

  பதிலளிநீக்கு
 15. ஆனாலும் நம்முடைய நேரம் சும்மா இருக்காது...

  இளநீருக்கு இணை இளநீர் தான்...
  தென்னை தரும் பெருங்கொடை...

  இதன் மகத்துவத்தை வழக்கம் போல மறந்தது - தமிழினம்...

  தேங்காய் எந்த வகையான சமையலுக்கும் ஒத்து வருவது...

  ஆனாலும் திருவிளையாடலில் சிவபெருமான்
  முழுப் பழமாகச் சாப்பிட்டால் தான் பலனுண்டு என்று - சொன்ன மாதிரி

  இளநீரை இளநீராகக் குடிப்பதே சாலச் சிறந்தது..

  என்ன நாரதா!?..

  உண்மை.. உண்மை!...

  ஆகையால்
  வெள்ளைச் சீனி, Milk Maid, Condensed Milk - வகையறாக்களைச் சேர்ப்பதற்குப் பதிலாக நம்ம ஊர் கருப்பட்டி, வெல்லம் இவற்றை ஓரளவுக்குச் சேர்த்து நிறைந்த பயனைப் பெறுங்கள்...

  தேங்காய்த் துருவலும் சில்லு கருப்பட்டியும் தின்று பாருங்களேன்!...

  ஆஹா!..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. துரை அண்ணா அதே சில்லுக் கருப்பட்டி தேங்காய் செமையா இருக்கும்.

   நான் வெல்லம் என்று எழுதுவதற்குப் பதில் எங்க ஊர் ஸ்டைல்ல சர்க்கரைனு எழுதிப்புட்டேன்...ஹிஹிஹி....வெல்லம் சேர்த்துச் செஞ்சா அதன் சுவை தனிதான். அதுவும் தேங்காயுடன் வழுவலுடன் செம டேஸ்டா இருக்கும்...

   கீதா

   நீக்கு
  2. ஆகா.. நம்ம கட்சியில நின்னு பேசியதற்கு நன்றி...

   நம்ம கட்சியோட சின்னம் -
   அன்னகரண்டி!...

   அதான் தேர்தல் முடிஞ்சு போச்சே!.

   ச.சபை பாக்கியிருக்கே!...

   நீக்கு
  3. இந்த இளநீரின் மேல் பக்கம் நடுவாக ஒரு இடத்திலே மட்டும் துளையிட்டு அதன் வழியாக முளைகட்டிய பயறையும் கருப்பட்டி அல்லது வெல்லத்தையும் போட்டுவிட்டு நெருப்பில்/தணலாக இருக்கணும்! சுட்டு விட்டுப் பின்னர் எடுத்துச் சாப்பிடுங்க! ஹையோ! தேங்காயில் கூட இப்படிப் பண்ணலாம். ஆனால் அரை வழுக்கை இளநீர் ருசி வராது.

   நீக்கு
  4. அதுவும் செஞ்சுருக்கோமே பாண்டிச்சேரியில் இருந்தப்ப கரி அடுப்பில் தணலில் அங்கிருந்த நாங்கள் 4 குடும்பங்கள் சேர்ந்து சண்டே சமையல் என்று செய்வதுண்டு. எல்லோரும் சேர்ந்து சாப்பிடுவது மெனு போட்டு எல்லோரும் மெனுவுக்கு ஏற்ற சாமானை யார் யார் கொண்டு வருவது என்று...சொல்லி டிசைட் செய்து ஒரு வீட்டில் அடுப்பை யூஸ் செய்து அங்கு சமையல் நடக்கும். அப்ப இளனீலயும் செஞ்சுருக்கோம், தேங்காயிலும் செஞ்சுருக்கோம் கருப்பட்டி போட்டு, வெல்லம் போட்டு என்று. கருப்பட்டி புனிதா என்பவர் திருநெல்வேலிகாரர் என்பதால் அவர் சப்ளை செய்துவிடுவார். 5, 6 இளனீ அல்லது தேங்காய் செய்ய வேண்டி வரும்.

   கீதாக்கா நீங்க சொன்னாப்ல அத்தனை ருசியா இருக்கும்....அருமையான நாட்கள் அவை.

   கீதா

   நீக்கு
  5. @கீதாஸ் - //எடுத்துச் சாப்பிடுங்க! ஹையோ! // , //சொன்னாப்ல அத்தனை ருசியா இருக்கும்..// ...........ன் தின்னு கெட்டான் - இந்தப் பழமொழிக்கு நீங்க ரெண்டுபேரும் கூட காரணமோ?

   படிச்சாலே, சாப்பிடணும்போலிருக்கு. அதிலும் இளநீரை தணலில் வாட்டி - இந்தக் கண்டுபிடிப்புக்கே நிஜமா ஒரு பரிசு தரலாம்...

   நீக்கு
  6. கீசா மேடம் - இளநீர் - மட்டை எரியாதா? உள்ளிருக்கும் இளநீரை எடுத்துவிடவேணும்னு நினைக்கறேன். நீங்க குறிப்பிடலை. எப்படி சாப்பிடுவீங்க? அந்தத் துளை வழியா ஸ்பூன்ல எடுத்தா?

   நீக்கு
  7. அதான் தணல்னு சொல்லி இருக்கேனே நெ.த.! நெருப்பு என்றால் விறகில் எரியும் நெருப்பு அல்ல. நாங்க பலாக்கொட்டைகள், சர்க்கரைவள்ளிக்கிழங்கு, பிஞ்சுக் கொண்டைக்கடலை, பிஞ்சுப் பயறுனு எல்லாத்தையும் தணலில் போட்டுச் சுட்டுச் சாப்பிட்டிருக்கோம். இதெல்லாம் எங்க சித்தி வீட்டில் சின்னமனூரில்! இளநீர் இருந்தால் தான் முளைப்பயறும் வெல்லமும் நன்கு கலந்து வேகும். அப்புறமா அடைத்த துளையை நீக்கிவிட்டு எடுக்கணும். வெட்டி எடுக்கலாம். அல்லது நெருப்பில் போட்டதால் எடுக்கறது கஷ்டமா இருக்காது. மேல் பாகத்தை எடுத்துவிட்டு அந்த வழுக்கையோடு சேர்த்துச் சாப்பிடணும்! அங்கே ஆள் இருந்ததால் இதெல்லாம் எங்களுக்கு/குழந்தைகளுக்குச் சிரமாக இருக்காது. எல்லாவற்றையும் அவர் செய்து கொடுத்துடுவார்.

   நீக்கு
 16. இளநீரில் பாயாசம் புதுமையாக இருக்கிறதே...

  பதிலளிநீக்கு
 17. பதில்கள்
  1. சென்னை உறவினர்கள் கல்யாண ரிஸப்ஷனில் இந்த மெனு இருந்தது. அப்பொழுது டேஸ்ட் செய்ததுதான். இளநீர் பாயஸம் குறிப்பு நன்றாக இருக்கிறது. படங்களும்தான் அழகாக இருக்கிறது. புதியதாகஒன்றைத் தெரிந்துகொண்டோம் என்ற எண்ணம் தோன்றியது. நன்றி. சாந்தி மாரியப்பன். அன்புடன்

   நீக்கு
  2. சென்னையில் ஒரு உபநயனத்திற்கு சென்றிருந்தேன். முதல் நாள் இரவு 10 மணிக்கு மேல் போய்ச் சேர்ந்ததால் சாப்பிடத்தயங்கினேன். அப்போது உறவினர், நீங்கள் மற்றதெதையும் சாப்பிடாவிட்டாலும் பரவாயில்லை, இது இங்கே ஸ்பெஷாலிட்டி; இதை சாப்பிட்டு விடுங்கள் எனக் கொடுத்தார். இளநீர்ப் பாயஸம். இளநீரில் பாயஸமா என்று சந்தேகப்பட்டுக்கொண்டே சாப்பிட்டேன். நன்றாக செய்திருந்தார்கள். வாழ்க!

   நீக்கு
  3. இன்னும் நாங்க எந்தக் கல்யாணத்திலும் சாப்பிட்டுப் பார்க்கலை. காடரர் பெயர் சொல்லுங்க/ உறவினர் கல்யாணத்திலே இல்லாட்டியும் இது சாப்பிடுவதற்காகவே உறவு சொல்லிக் கொண்டு போய்ச் சாப்பிட்டு வந்துடலாம்! :)))))))))))))))

   நீக்கு
  4. என்ன கீதா அக்கா இப்படி சொல்லி விட்டீர்கள்? சென்னையில் சில வருடங்களுக்கு முன்பு கல்யாணம், காது குத்தல் எனறு எந்த விசேஷமாக இருந்தாலும் இளநீர் பாயசம்தான். திருச்சியில் இளநீர் பாயசம் செய்யத் தெரிந்த காடரர் இல்லையா?

   நீக்கு
  5. ஹூம் என் அதிர்ஷ்டம் கிடைச்சதில்லை! :))))

   நீக்கு
 18. சாந்தி, இள்நீர் பாயஸம் செய்முறை குறிப்பு அருமை. பாயஸ உருளி அழகு.
  செய்முறையும் முக்கியமான குறிப்புகளும் மிக மிக அருமை.

  ‘பத்லா மலாய்’ எனக் கேட்டு வாங்க வேண்டும். அதுதான் இளசாக சாப்பிட நன்றாக இருக்கும். ‘கடக் மலாய்’ வாங்கி விட்டாலோ வீட்டிற்கு எடுத்து வந்து கறி சமைக்க வேண்டியதுதான்.//

  எனக்கு எப்பவும் பத்லா மலாய் தான் பிடிக்கும், மாயவரத்தில் தினம் கொண்டு வந்து தரும் இளநீர்காரரிடம் சொல்வது ஒரு ஸ்பூன் வழுக்கைதான் இருக்க வேண்டும் தண்ணீர் இருக்கிற காய் கொடுங்கள் என்று.
  வழுக்கை இல்லாமல் வாங்கினால் தண்ணீர் ருசியாக இருக்காது.

  'கடக் மலாய்' என்றால் அதை பச்சரிசியுடன் அரைத்து தோசை செய்து விடுவேன்.

  கோடை குறிப்புகளும் மிக அருமை சாந்தி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இது மாதிரிப் பெரிய உருளியில் தான் அரவணை செய்வேன். தூக்க முடியாது! இரண்டு பேராகத் தூக்கிக் கொண்டு பூஜையில் வைப்பார்கள்.

   நீக்கு
  2. கீதாக்கா ஆமாம் எங்க பிறந்த வீட்டுல பெரிய உருளி இருக்கும் அதில தான் பாட்டி பாயாசம், அரவணை, அல்வா எல்லாம் செய்வாங்க. நான் அதைக் கழுவிதேய்த்துக் கொடுப்பது இடையில் கிளறுவது என்று செய்வோம். அப்புறம் அந்த உருளி என்னாச்சு என்று தெரியவில்லை. யாரிடம் இருக்கிறதோ. தூக்கவே முடியாது. ஆனால் சூடு செமையா தாங்கும்.

   புகுந்த வீடு பெரிய குடும்பம் என்று என் அம்மா முதலில் பெரிய உருளி சீரில் வைச்சாங்க ஆனால் மாமியார் நாங்கள் உபயோகிப்பதில்லை என்று சொல்லிவிட்டதால் எனக்கு மட்டும் என்று அம்மா சின்ன உருளி சீர்ல கொடுத்தாங்க. அதுவே எல்லாரும் கூடினாலும் செய்ய போதுமாக இருந்தது. ..ஆனால் அதை வீட்டில் விசேஷத்தில் யாரோ வெளியாள் லபக்கிக் கொண்டு போய்ட்டாங்க!!!! இல்லை எப்படிப் போச்சோ...காணாமல் போய்விட்டது!!

   கீதா.

   நீக்கு
 19. பாயாசம் அருமை...

  எனக்கு மலாய் வாலா போதும்.. பாயாசம் பிடிக்காது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முதல் வரியில் ‘அருமை’.
   அடுத்த வரியில் ‘பிடிக்காது’.

   இது என்ன மாதிரியான பின்னூட்டம்?!

   நீக்கு
  2. ஹையோ கூட்டுக்குடும்பத்தில குழப்பத்தை உருவாக்குவதே ஏ அண்ணனுக்கு வேலையாப் போச்ச்ச்ச்ச்:)...
   அதூஊஊ செய்முறை விளக்கம் படங்கள் அழகூஉ என செய்தவருக்கு கிரடிட்டைக் குடுத்தேன்:)..., எனக்குப் பாயாசம் புய்க்காது என உண்மையைச் சொன்னேன் பிக்கோஓஓஓஓஸ் மீ ஒரு உண்மை வியம்பி:) அது டப்போ:).... ஹா ஹா ஹா.

   நீக்கு
 20. இப்பொழுதுதான் இதுபோன்ற பாயாசத்தை கேள்விப்படுகிறேன்.

  பதிலளிநீக்கு
 21. வணக்கம் சகோதரரே

  சகோதரி சாந்தி மாரியப்பன் அவர்களது ரெசிபி புதிதாகவும், அருமையாகவும், உள்ளது. படங்களும் மிக அழகு. இளநீர் பாயாசத்தை அறிமுகப்படுத்திய அவர்களுக்கு நன்றிகள். தாங்கள் பகிர்ந்தமைக்கும் மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 22. கருத்துரையிட்ட அனைவருக்கும் மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 23. பாயசம் செய்முறை தற்போது ஒரு வீடியோவாக இணைக்கப்பட்டுள்ளது.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!