19.5.20

கேட்டு வாங்கிப் போடும் கதை  :  தீமாட்டிக் கல்யாண வைபோகமே! - பானுமதி வெங்கடேஸ்வரன் 


தீமாட்டிக் கல்யாண வைபோகமே! 
பானுமதி வெங்கடேஸ்வரன் 


சாரு அந்த கல்யாண பத்திரிகையை கொண்டு வந்த ஜோரிலேயே அது அவளுக்கு வேண்டப்பட்டவர்கள் வீட்டு கல்யாணம் என்று புரிந்து கொண்டேன். 


"இந்த இன்விடேஷனை பார்த்தீர்களா?"

"என் கையில் தந்தால்தானே பார்க்க முடியும்.."

அவள் கொடுத்த பத்திரிகையை பிரித்தேன். அதில் குறிப்பிட்டிருந்த பெயர்கள் எதுவும் எனக்கு பரிச்சயமான தில்லை. 

"யாரு?"

"எங்க கடைசி அத்தையோட, ரெண்டாவது பெண்ணின் பெண்ணுக்கு கல்யாணமாம். 

ராஜி அத்தை பேத்தியா?

ராஜி அத்தை இல்ல, சக்கு அத்தை.

அப்படி ஒரு அத்தை இருப்பதே எனக்கு இப்போதுதான் தெரிகிறது. சக்கு அத்தையா? எனக்கு தெரிஞ்சு உனக்கு மூணு அத்தைதான். பிரேமா அத்தை, ஜமுனா அத்தை, ராஜி அத்தை. சக்கு அத்தை யார்?

"எங்க அப்பாவின் பெரியப்பா பெண். நம்ம கல்யாணத்துக்கு கூட வந்திருந்தா." 

பதினைந்து வருடங்களுக்கு முன் கை  குலுக்கிய, எத்தனையோ பேர்களில் சக்கு அத்தை யார் என்று என்னால் நினைவு கூற முடியவில்லை. 

"கல்யாணம் எங்க?"

"ரெசார்ட்டுல"

"ரெசார்ட்டுலயா? எங்க? ஓ.எம்.ஆரிலா?" எனக்கு பகீரென்றது. கே.கே.நகரிலிருந்து ஓ.எம்.ஆருக்கு ஒலாவோ, ஊபரோ போக வர ஆயிரம் பழுத்து விடும். அதைத் தவிர மொய்..நான் மனதிற்குள் கணக்கு போட, சாரு குரலில் பெருமை வழிய பத்திரிகையை புரட்டியபடி சொன்னாள். அந்த பத்திரிகையே ஒரு புத்தகம் போல இருந்தது. 

"என்னிக்கி கல்யாணம்?"

"20ம் தேதி. சண்டே."

"நல்லதாப்  போச்சு. டிராபிக் கம்மியா இருக்கும். காலங்கார்த்தால கிளம்பினா சீக்கிரம் போய்டலாம்." 

பத்திரிகையை படித்து முடித்த சாரு," நாலு நாள் கல்யாணம்" என்றாள். 

"நாலு நாளா? நாலு நாள் ஒளபாசனமா?"

"ஒளபாசனமும் இல்ல, சொட்டு நீர் பாசனமும் இல்ல, முதல் நாள் மெஹந்தி,.."

"அப்படீன்னா?" 
"மெஹந்தினா மருதாணி," 

"மருதாணி கல்யாண பெண் இட்டுக்கப் போறா.. "

"நீங்க எந்த காலத்துல இருக்கீங்க? இப்போ எல்லாம் ரிலேட்டிவ்ஸ், ஃபிரெண்ட்ஸ்னு எல்லோருக்கும் மருதாணி இட்டு விடறாங்க".

"ஓஹோ!"

"அடுத்த நாள் சங்கீத் அண்ட் ரிசப்ஷன்."

இதற்கு நான் சாருவிடம் விளக்கம் கேட்கவில்லை. நம் ஊர் திருமணங்களில் புகுந்து விட்ட ஏதோ வட இந்திய வழக்கம் என்பது புரிந்தது. 

"அடுத்த நாள் கல்யாணம்,"

"அதற்கு அடுத்த நாள் கட்டுசாத கூடை."

"எல்லா நாட்களும் போக முடியாது.." என்று நான் சொல்ல நினைத்ததை சொல்ல விடாமல் சாரு முந்திக் கொண்டு ,"அட! தீமாட்டிக் கல்யாணம், அதனால எல்லா நாட்களுக்கும் டிரஸ் கோட் போட்டிருக்காங்க.

இப்போது கல்யாணங்களில் பல புதுமைகள் புகுந்து விட்டது எனக்குத் தெரியும். ஆனாலும் தீமாட்டிக் மேரேஜ் என்றால் என்ன என்று புரியவில்லை. வேறு வழியில்லை. சாருவிடம் கேட்டுதான் தீர வேண்டும். 

"இதென்ன புதுசா இருக்கு.. தீமாட்டிக் மேரேஜ்..?"
"ஒவ்வொரு நாளுக்கும் ஒரு தீம் எடுத்துக் கொண்டு அதன்படி கல்யாண மண்டப அலங்காரம், மணமக்களின் டிரஸ் எல்லாம் இருக்கும். வருகிறவர்களும் அதற்கேற்றார்போல் டிரஸ் பண்ணிக்க கொண்டு வர வேண்டும். 
இவங்க சங்கீத் அன்னிக்கு பீக்காக் என்று தீம் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அதனால் அன்னிக்கு அந்த ஹால் முழுவதும் மயில் வண்ணத்தில் அலங்காரம் செய்திருப்பார்கள். மணமக்கள் உட்காரும் நாற்காலி மயில் போல் இருக்கும். "

எனக்குத் தெரிந்து ஷாஜஹான்தான் மயிலாசனத்தில் அமர்ந்து கொண்டான் என்று சரித்திரத்தில் படித்திருக்கிறேன். ஆனால் குறுக்கே கேள்வி கேட்டு சாருவின் கோபத்திற்கு ஆளாக விரும்பாததால் பேசாமல் இருந்தேன். எனவே சாரு தன் பிரதாபத்தை தொடர்ந்தாள். 

'ஸோ, சங்கீத்திற்கு வருபவர்கள் எல்லோரும் மயில் வண்ணத்தில் உடை அணிந்து கொண்டு வர வேண்டும்." 

ஒரு திருமணம் என்றால் எல்லோரும் விதம் விதமாக உடை அணிந்து கொண்டால்தான் பார்க்க நன்றாக இருக்கும்? இது யூனி ஃபார்ம் மாதிரி ஆகி விடாதா? 

நீலம் என்றால் அதில் எவ்வளவு ஷேட்ஸ் இருக்கு? எல்லோரும் ஒரே நீலத்தையா போட்டுக் கொள்வார்கள்? 

அது சரி. மெஹந்தி அன்று எங்கேயாவது ஈகோ ஃப்ரெண்ட்லி என்று இலை, தழை, மரவுரி இப்படி எதையாவது கட்டிக்க கொண்டு வாருங்கள் என்று சொல்லி விடப் போகிறார்கள்..

ஜோக் சகிக்கல..

அதற்கு மேல் எப்படி பேசுவது? ஒரு நாள்தானே தன்னிடம் இருக்கும் ஏதோ ஒரு புடவையை சாரு  கட்டிக்கொண்டு விடுவாள் என்று வழக்கம் போல் தவறாக நினைத்தேன்.
----
அடுத்த வாரத்தில் ஒரு நாள் நான் அலுவலகத்திலிருந்து வீடு திரும்பிய பொழுது, வீட்டில் ஏகப்பட்ட கட்டை பைகள் உள்ளே புதுத் துணிகள். என்னது இது? கல்யாணத்துக்கு ஜவுளி வாங்குற மாதிரி வாங்கியிருக்க?

"ஆமாம் கல்யாணத்துக்குதான்" 

"கல்யாணமா? யாருக்கு?"

"எவ்வளவு தடவை சொல்ல முடியும்? எங்க சக்கு அத்தை பேத்திக்கு." 

"அதுக்கு அவர்கள் ஜவுளி வாங்கட்டும், நாம் ஏன் வாங்க வேண்டும்?" 

"ரொம்ப அழகா இருக்கே..! அந்த கல்யாணம் தீமாட்டிக் வெட்டிங், நடக்கப் போறது ஒரு ரிஸார்டுல, அதுக்கு ஏற்றார் போல் ட்ரெஸ் பண்ணிக்க வேண்டாமா?

உன்கிட்ட வேற சாரியே இல்லையா? 

"அதெல்லாம் அல்ரெடி வேற கல்யாணங்களுக்கு கட்டிண்டாச்சே..? பாக்கறவங்க என்கிட்ட வேற புடவையே  இல்லன்னு நினைச்சுக்க மாட்டார்களா?"

"அத்தனை பேர்கள் வரும் கல்யாணத்தில் நீ கட்டிக்கொண்டு வரும்  வரும் புடவையில்தான் எல்லோருடைய கவனமும் இருக்குமா?"

"அப்போது கவனிக்காவிட்டாலும் போட்டோவில் தெரிந்து விடாதா? இப்போதுதான் எல்லோரும் ஏதாவது நிகழ்ச்சிக்குப் போனால் உடனே அதை ஃபேஸ் புக், இன்ஸ்டாகிராம் என்று எல்லாவற்றிலும் போட்டு விடுகிறார்களே? உங்களுக்கும் ட்ரெஸ் வாங்கியிருக்கிறேன்.".

"எனக்கா? எனக்கு எதற்கு? ஒரு வேஷ்டி, சட்டை போறாதா?"

"கலர் கோட் இருக்கு என்று சொன்னதை மறந்து விட்டீர்களா? சங்கீத்திற்கு ஷர்வாணி, கல்யாணத்திற்கு போட்டுக் கொள்ள இந்த சட்டை" என்று ஒரு பச்சை கலர் பள பள சட்டையை காட்டியதும், கொஞ்சம் மிரண்டு போனேன். 

"சங்கீத்திற்கெல்லாம் போகப் போகிறோமா என்ன?" 

"போகாமல்? எங்கள் வீட்டில் எல்லோரும் போகும் பொழுது நான் மட்டும் போகாமல் இருந்தால் நன்றாக இருக்குமா?" என்றவள் தொடர்ந்து "எப்படியும் எல்லோரும் காரில்தான் போக வேண்டும், ட்ராவல்ஸில் கார் எடுத்துக் கொண்டு செலவை ஷேர் பண்ணிக் கொள்ளலாம்" என்றாள். 
.....

அந்த ரிசார்ட்டை நாங்கள் அடைவதற்கு இரண்டு மணி நேரங்களாகியது. சங்கீத் எனப்பட்ட நிகழ்ச்சியில் அலறும் ஹிந்தி, தமிழ் சினிமா பாடல்களுக்கு பெண், பிள்ளை வீட்டார் ஆடிய டான்ஸ்தான் முக்கியமாக இருந்தது. இரு வீட்டிலிருந்தும் சிலர் தங்கள் உறவினர்களை பற்றி(மணமக்களின் பெற்றோர்களை பற்றியும், மணமக்களை பற்றியும்) அறிமுக உரை போல் நிகழ்த்தினார். பின்னர் மணமக்கள் உட்பட எல்லோரும் ஆடிய நடனம். அதை கற்பிக்க ஒரு ட்ரைனர் வேறு உண்டாம் அவருக்கு எத்தனையோ ஆயிரம் என்று பெண்ணின் அம்மா பெருமையாக சொல்லிக் கொண்டார். என்னதான் கற்பித்தாலும் எல்லோருக்கும் நடனமாட வந்து விடுமா? ஆடத்தெரியாதவர்கள் ஆடும் நடனத்தை பார்க்கும் துர்பாக்கியம் பார்வையாளர்களுக்கு. இரவு உணவில் ஏகப்பட்ட ஐட்டங்கள் இருந்தாலும் சங்கீத்திற்கு இடையே கட்லெட், மினி சமோசா, ஃபிங்கர் சிப்ஸ் என்றுவந்து கொண்டே இருந்ததை கொறித்ததால் சரியாக சாப்பிட முடியவில்லை. 

மறு நாள் கல்யாணத்தில் ஊஞ்சல் நடந்து கொண்டிருந்த பொழுது ஒரு பெரியவர்,"கொஞ்சம் என் கூட வர முடியுமா? புது இடங்களில் நடப்பது கொஞ்சம் சிரமமாக இருக்கும், இப் யூ டோன்ட் மைண்ட்" என்றார்.  இயற்கையின் அழைப்பு. டாய்லெட் எங்கே என்று தேடி கண்டுபிடித்துக் கொண்டு அம்மா வீடு எங்கே? இன்னும் கொஞ்சம் தூரம் என்பது போல நடந்து நடந்து நடந்து சென்றோம். செல்லும் வழியில் அவர் மாப்பிள்ளை வீட்டை சேர்ந்தவர் என்றும் இதே ரிசார்டில்தான் தங்கியிருக்கிறார்கள் என்றும் தெரிந்தது.  

"உங்க ரூமுக்கே போயிருக்கலாமே?" என்றேன். அதுவும் ஒண்ணும் கிட்டக்க இல்ல " என்றார்.  ஒரு வழியாக ஜோலியை முடித்துக் கொண்டு வந்த பொழுது தாலி கட்டி முடித்து விட்டார்கள். " 

"முக்கியமான நேரத்தில் எங்கே போய் விட்டீர்கள்?" என்று அவரை கடிந்து கொண்டது அவர் மனைவியாகத்தான் இருக்க வேண்டும். 

"நான் என்ன பண்ண முடியும்? ஆத்திரத்தை அடக்கிடலாம்..." 

"சரி, சரி, அதோட நிறுத்திக்கோங்கோ.. பலதானம் வாங்கிக்க கூப்பிடறா.."

மத்தியான சாப்பாடு இரண்டு பாயசம், மூன்று ஸ்வீட், என்று அமர்க்களமாக இருந்தது. சிறு வயதில் இலையில் போடுவதை வீணாக்கக்கூடாது, கையில் வாங்கி கொள் என்பாள் அம்மா.. இப்போது அப்படி செய்ய முடியாதே. அடுத்த முறை கல்யாணங்களுக்குச் செல்லும் பொழுது, கையில் ஒரு ஜிப் லாக் கவர் கொண்டு செல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். அதிகமாக இருக்கும் இனிப்புகளை ஜிப் லாக்கில் போட்டுக் கொண்டு விடலாம். 

ஒரு வழியாக எல்லோரிடமும் விடை பெற்றுக் கொண்டு வீடு திரும்பினோம். லெட்டர் பாக்ஸை திறந்து பார்த்த சாரு கையில் ஒரு திருமண பத்திரிகை. எனக்கு வயிற்றை கலக்கியது. 

============

86 கருத்துகள்:

துரை செல்வராஜூ சொன்னது…

எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு..

நலம் வாழ்க...

துரை செல்வராஜூ சொன்னது…

அனைவருக்கும் அன்பின் வணக்கம்...

துரை செல்வராஜூ சொன்னது…

வூட்டுக்குத் திரும்பி லெட்டர் பாக்ஸைத் திறந்தால் கல்யாண பத்திரிகை...

ஆகா... மறுபடியும் முதல்..ல இருந்தா!..
நல்ல நகைச்சுவை...

ஸ்ரீராம். சொன்னது…

நலமே விளைக..

ஸ்ரீராம். சொன்னது…

வணக்கம் துரை செல்வராஜு ஸார்..்். வாங்க...

ஸ்ரீராம். சொன்னது…

ஹா... ஹா... ஹா...

நெல்லைத்தமிழன் சொன்னது…

காலை வணக்கம் அனைவருக்கும். இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்.

Geetha Sambasivam சொன்னது…

அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவும், வாழ்த்துகளும், பிரார்த்தனைகளும். இன்றும் தமிழ்நாட்டு நிலையோ, இந்தியாவின் நிலையோ அறிந்திருக்கவில்லை. செய்திகளைப் பார்க்கக் கொஞ்சம் அலுப்பும், கவலையும். அதனால் எது மாறப் போகிறது. வழக்கம் போல் பிரார்த்திப்போம். மனமார்ந்த பிரார்த்தனைகளை ஆண்டவன் காலடியில் சமர்ப்பிப்போம். சகஜமான நிலை திரும்பப் பிரார்த்திப்போம்.

நெல்லைத்தமிழன் சொன்னது…

முதலில் தலைப்பு, சீமாட்டிக் கல்யாணம் என்று இருந்திருக்கணுமோ என நினைத்துக்கொண்டே படிக்க ஆரம்பித்தேன்.

நல்ல தீம். நன்றாக எழுதியிருக்கிறார்.

கால மாறுதல்களை டைஜஸ்ட் செய்தவது சிரம்மாக இருக்கிறது.

வல்லிசிம்ஹன் சொன்னது…

அனைவருக்கும் இனிய காலை நல் வாழ்த்துகள்.
இது போல நடந்த திருமணங்கள்
இப்போது பத்து பேரோட கல்யாணம் முடிந்துவிடுகிறதாம்:)
எத்தனை செலவு.!!!! சுவாரஸ்யமான கல்யாண நிகழ்வுகளுக்கு
சுவையாகக் கதை போல சொன்னது அருமையாக இருக்கிறது.
அங்கே வந்த போது இது மாதிரி திருமணம் ஒன்று பார்த்தேன். கடவுளே என்றிருந்தது.
பானுமா பாராட்டுகள்.

Geetha Sambasivam சொன்னது…

முதலில் வந்திருக்கும் துரைக்கும் இனி வரப்போகும் அனைவருக்கும் வணக்கம், நல்வரவு. இப்படி எல்லாம் கல்யாணங்கள் நடத்துகிறார்கள் என்பதை இன்னிக்கே அறிந்தேன். இது வரை இதைப் பற்றித்க் தெரியாத அசடாக இருந்துட்டேன். ரிசார்ட்டில் கல்யாணம் நடத்துவதில் உள்ள அசௌகரியங்களை அந்தப் பெரியவர் மூலம் பானுமதி சுட்டிக் காட்டி விட்டார். சங்கீத் என்னும் நிகழ்ச்சி வேறே தனியாக நடப்பதையும் இப்போத் தான் அறிந்து கொண்டேன். நான் அறிந்தவரை மாப்பிள்ளை அழைப்பு ஊர்வலத்தில் தான் ஊர்வல வண்டிக்கு முன்னால் பிள்ளை வீட்டு ஆண்களும், பெண்களும் ஆடிக்கொண்டு வந்து பார்த்திருக்கேன். பின்னர் கல்யாணச் சத்திரம் நெருங்க நெருங்க பெண் வீட்டுத் தரப்பிலும் கலந்து கொண்டு சத்திர வாசலில் பெண்ணும் சேர்ந்து கொள்ள, மாப்பிள்ளை காரில் இருந்து இறங்கி வந்து அவரும் ஆடுவார். கஷ்டம்! இப்போ இப்படியா? நாலு நாள் கல்யாணம் எனில் நான் வைதிக முறைப்படியோனு நினைச்சுட்டேன்.

நெல்லைத்தமிழன் சொன்னது…

ஓஎம்ஆருக்கு ஓலாவோ ஊபரோ... என்று ஆரம்பிக்கும் வரிகளிலேயே கதை இயல்பானதாக அமைந்துவிடுகிறது.

ஆமாம்... இத்தகைய பிரம்மாண்ட திருமணங்களில் உண்மையில் சந்தோஷமாக இருப்பது யார்? ஏன்?

நெல்லைத்தமிழன் சொன்னது…

தட்டச்சுப்பிழை, "பண்ணிக்க கொள்ளலாம்", "என்று வந்து கோனே"

Geetha Sambasivam சொன்னது…

எங்க வீட்டிலும் என் மூத்த நாத்தனார் பெயர் சக்கு. கடைசி நாத்தனார் பெயர் ராஜி. ஆக நானும் இந்தக் கல்யாணத்திற்குப் போயிட்டேன். சொல்ல வந்த விஷயத்தைச் சுருக்கமாகவும் கன கச்சிதமாகவும் எப்போதும் போல் சொல்லி அசத்தி விட்டார் பானுமதி. அதிலும் அந்தக் கடைசி வாக்கியம்! அருமை!

Geetha Sambasivam சொன்னது…

நான் தீவட்டிக் கல்யாணம்னு படிச்சுத் தொலைச்சேன்! :))))) கண்கள் செய்யும் கோளாறு!

நெல்லைத்தமிழன் சொன்னது…

என்ன இந்த கீசா மேடம் அந்தக் காலத்திலேயேருக்காங்க.....

கேட்டால்... திருமணம் என்பது இருகுடும்பங்கள் இணைவது, அதற்கு தெய்வப் ப்ரீத்தியும், பெரியவர்கள் ஆசீர்வாதமும், ஊர்கூடி தேர் இழுப்பது போன்று அனைவரின் physical பங்களிப்பும், குதூகுலமும் என்று ஏதேதோ நினைக்கறாங்க.

இப்போல்லாம் பல திருமணங்கள், தங்களிடம் உள்ள பண பலத்தையும், என்ன பெரிய உறவினர்கள்.. நண்பர்கள், ஆபீஸ் நண்பர்கள் இவர்களையே வைத்து பிரம்மாண்டமாக, திரைப்படம்போல நடத்துவதற்காகவே ஆன ஒரு ஈவென்ட்.

இதெல்லாம் புரிந்ததனால்தான், திருமணத்தை நடத்திவைப்பவரும் சினிமா சாஸ்திரிகள் போல நடந்துகொண்டுவிடுகிறார். போட்டோவுக்கும் காணொளிக்கும் ஏற்றபடி திருமணம் நடக்க வேண்டும் என்பதால் தேவையில்லாத புகை மண்டலம், திருமணத்துக்கு உரிய பழைய நிகழ்ச்சிகள் (பிடி சுத்துவது, நலங்கு...) இதெற்கெல்லாம் தடா.

பொதிகையில் பழைய படம் பார்ப்பதற்குப் பதில் இன்றைய ஓஎம்ஆர் வகை திருமணத்துக்குப் போய் புதிய படம் பார்த்த சந்தோஷத்தில் வரணும். அவ்ளோதான்.

ஆற அமர ருசித்து சாப்பிடுவோம் என்றெல்லாம் நினைக்கப்படாது. மால்களில் அந்த அந்த கடைகளில் விதவிதமாக சாப்பிடுவதுபோல கொறிக்கணும். மால்ல பைசா கொடுக்கணும். இங்க அதே பைசாவை போக வர பயணத்திலும் மொய் மூலமாகவும் அதிகமாகவே செலவழிக்கணும்.

வாங்க, வந்தீங்களா, சாப்பிட்டுப் போங்க, வந்ததுல சந்தோஷம், போய்ட்டு வாங்க, இந்தாங,க தாம்பூலப்பை - இதையெல்லாம் சொல்வது காசு வாங்கி அந்த வேலையைச் செய்ய வந்திருக்கும் காண்டிராக்டர்கள் என்பது தெரியலைனா நீங்க 30 வருடங்கள் பின்னோக்கிப் போயிட்டீங்கன்னு அர்த்தம்.

இன்னும் நிறைய இந்த கீசா மேடத்துக்குச் சொல்லித்தர வேண்டியிருக்கு.

middleclassmadhavi சொன்னது…

இன்றைய காலை இனிமையான நகைச்சுவை காலையாக விடிந்தது. மிக்க நன்றி. வாழ்த்துக்கள்

Bhanumathy Venkateswaran சொன்னது…

அனைவருக்கும் காலை வணக்கம். அட இன்று என்னுடைய கதை! மீண்டும் படித்ததில் தட்டச்சு பிழைகள் தென்பட்டன. மன்னிக்கவும். பின்னர் வருகிறேன்.

கௌதமன் சொன்னது…

கண்ணில் பட்ட தட்டச்சுப்பிழைகளை சரி செய்துவிட்டேன்.

Kamala Hariharan சொன்னது…

காலை வணக்கம் சகோதரரே

அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

ஐயகோ... மறுபடியுமா...?!

KILLERGEE Devakottai சொன்னது…

//அப்போது கவனிக்கா விட்டாலும் போட்டோவில் தெரிந்து விடாதா ?//

அதானே சமத்து...

முடிவில் மறுபடியும் புரோட்டா திங்கிற கதையாகப் போச்சே...

Kamala Hariharan சொன்னது…

வணக்கம் சகோதரரே

கதை அருமை. ஐந்து நாள் திருமணம் என்றதும் பழைய பாணிக்கே மக்கள் மாறி விட்டார்களோ என நினைத்தேன். ஒவ்வொரு நாளும், திருமணத்தில் கலந்து கொள்ளும் அனைவருமே ஒவ்வொரு ஆடை ஆபரணங்கள் என்பது புதுமையாக மட்டுமின்றி, கலந்து கொள்பவர்களின் கனவு ஆசைகளையும் நிறைவேற்றி, துணிகடைகளையும் பிரபலமாக்கும் என்பது அசைக்க முடியாத உண்மை.

கதை முதலில் இருந்து இறுதி வரை சுவாரஸ்யமாக சகோதரி பானுமதி வெங்கடேஷ்வரன் அவர்களின் திறமையான நல்ல எழுத்து நடையுடன் மிளிர்கிறது. இது போல் குறுகிய எழுத்துக்களில் நிறையவே புரிய வைக்கும் அவரது எழுத்து திறமை கண்டு வியக்கிறேன். பாராட்டுக்கள்.

மறுபடியும் முதல் தொடர்வது வேடிக்கை. ஆனால் இது அவரின் உறவினர் வீட்டு கல்யாணமென்றால் செலவு மிச்சம். ஹா. ஹா. ஹா. பகிர்வுக்கு மிக்க நன்றி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

Kamala Hariharan சொன்னது…

அருமையான கேள்வி. ஆமாம் இது புதன் கேள்விகளா? ஹா.ஹா.ஹா

G.M Balasubramaniam சொன்னது…

எனக்கு வந்த திருமண அழைப்பிதழி ட்ரெஸ் கோட் என்று ஏதொ இருக்க திருமணத்துக்கு அணிய வேண்டிய உடை என்று விளகினார்க ள் என்னை யாரும் க்ட்டுப்படுத்துவதை விரும்பவில்லைக் நான் திருமணத்துக்குவாவில்லை என்று சொல்லி விட்டேன்

Ramah Srinivsan சொன்னது…

//எனக்குத் தெரிந்து ஷாஜஹான்தான் மயிலாசனத்தில் அமர்ந்து கொண்டான் என்று சரித்திரத்தில் படித்திருக்கிறேன். ஆனால் குறுக்கே கேள்வி கேட்டு சாருவின் கோபத்திற்கு ஆளாக விரும்பாததால் பேசாமல் இருந்தேன். எனவே சாரு தன் பிரதாபத்தை தொடர்ந்தாள்//.
ஸூப்பர் பானு. அதேதான். வேண்டாத (நமக்கு) புது வழக்கங்கள். எனினும் சிறுசுகள். சந்தோஷிக்கட்டும் என்று விட்டு விடுவோம். இருந்தாலும் செலவு பழுக்கும்போதுதான் வலி தெரியும் (பெற்றோருக்கு). வெளியே சொல்லவும் முடியாது. கிட்டத் தட்ட திருடனுக்கு தேள் கொட்டினார்போல்தான். (இரண்டு பெண்களை வைத்திருக்கிறேன்). கப்சிப்.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நல்ல கதை. இப்பொழுது பல திருமணங்கள் இப்படித்தான் நடக்கின்றன.

கோமதி அரசு சொன்னது…

தீமாட்டிக் கல்யாண வைபோகமே!//

மிக அருமை.

இப்போது நடக்கும் திருமணங்களை பற்றி அழகாய் நல்ல நகைச்சுவையாக பகிர்ந்து கொண்ட பதிவு.

ராஜலட்சுமி பரமசிவம் அவர்கள் "அரட்டை" என்று வலைத்தளம் வைத்து இருப்பவர் இப்படி கணவன், மனைவி உரையாடலில் நகைச்சுவை பதிவுகள் எழுதுவார்.

நடிகை பானுமதி ராமகிருஷ்ணா கதைகள் நன்றாக நகைச்சுவையாக இருக்கும் அது போல் இருக்கிறது தொடர்ந்து நகைச்சுவை கதைகள் எழுதலாம் பானுமதி. பாராட்டுக்கள்.

உண்மையில் திருமணங்கள் இப்போது இப்படித்தான் நடக்கிறது. நம்மை மிரள வைக்கிறது.

கல்யாணத்திற்கு எல்லோரும் இந்த மாதிரி ஆட பாட்டு, நடனம் எல்லாம் பயிற்சி செய்யப்படுகிறது. அப்பா, அம்மா, மாமியார், மாமனார் எல்லோருக்கும் பங்கு உண்டு.

ஏதோ ஒரு தொலைக்காட்சி சேனலில் இந்த மாதிரி கல்யாணங்களை காட்டுகிறார்கள்.
இரண்டு தடவை பார்த்து இருக்கிறேன்.



Yaathoramani.blogspot.com சொன்னது…

அற்புதம்...முடித்தவிதம் இன்னும் அருமை..வாழ்த்துகளுடன்...

ஜீவி சொன்னது…

சிறுகதைக்காக எடுத்துக் கொண்ட தீம் பிரமாதம். அந்தக் காலத்துக்கு சாவியின் வாஷிங்கடனில் திருமணம் என்றால் இந்தக் காலத்துக்கு இது. இயல்பான கை வந்த எழுத்து நடை; இனிமையான வாசிப்புக்கு வழி நடத்திச் சென்றது. அதற்காகவே பாராட்ட வேண்டும்.

//"ரெசார்ட்டுலயா? எங்க? ஓ.எம்.ஆரிலா?" எனக்கு பகீரென்றது. கே.கே.நகரிலிருந்து ஓ.எம்.ஆருக்கு ஒலாவோ, ஊபரோ போக வர ஆயிரம் பழுத்து விடும். அதைத் தவிர மொய்..நான் மனதிற்குள் கணக்கு போட, .. //

அப்பட்டமான உண்மை. சொந்த பந்தங்களின் செளகரியங்களை கணக்கில் எடுத்துக் கொள்ளாத சொந்த தீர்மானங்கள்
தான் முக்கியமாகிப் போய் விட்டது. எல்லாவற்றிலும் ஒரு திணிப்பு. தாத்தா, பாட்டி, வயசான மாமா, மாமி, அக்கா, அத்திம்பேர், 'வாக்கர்' துணை கொண்ட வயசானவர்கள் யாரைப்பற்றியும் யோசிப்பதில்லை. லிப்ட் வசதியில்லாத பெரிய கல்யாண சத்திரத்தின் நாலாவது மாடியில் கல்யாண கூடம் என்றாலும் சரியே.. இப்பொழுதெல்லாம் இதையெல்லாம் முன் கூட்டியே யோசிக்கும் அளவில் கூட எதுவும் முக்கியத்துவம் பெறுவது இல்லை.

நீங்களும் கதை முடிவில் சாட்டையை சுழட்டவும் இல்லை; சாமரம் வீசவும் இல்லை. மத்யமாக வாசிப்பவர் போக்கில் விட்டு விட்டீர்கள். அதையும் புரிந்து கொள்ள முடிகிறது.

எழுதத் தெரிந்தவர்கள், எதையும் கதையாக்கலாம் என்று பாதை போட்டுத் தந்த பான்மைக்கே உங்களைப் பாராட்ட வேண்டும். வாழ்த்துக்கள், பா.வெ.

ஜீவி சொன்னது…

ஒரு ஆணின் சிந்தனைப் போக்கில் பெண்ணின் எழுத்து என்ற சிறப்பைக் குறிப்பிட மறந்தேன். இதெல்லாம் அசாதாரணமான முயற்சிகள். வாழ்த்துக்கள்.

இராய செல்லப்பா சொன்னது…

கல்யாணத்திற்குப் போவதென்றால் இந்தப் பெண்டாட்டிகள் படுத்தும் பாடு இருக்கிறதே, சொல்லி மாளாது. தமிழ்கூறும் நல்லுலகிற்கு எங்கள் கஷ்டத்தைப் புரியவைத்ததற்கு நன்றி!

Angel சொன்னது…

ஹாஹ்ஹா ஆரம்பம் முதல் கதையின்  இறுதி வரை சுவாரஸ்யமா இருந்ததுக்கா :) சூப்பர் .ஆரம்ப பாராக்களை படிச்சிட்டு வரும்போது சாருவின் ஸாரீ efferts எல்லாம் c 19 ஆல் இயலாமற்போகும்னு நினைச்சேன் ஆனா இன்னொரு வெடிங் இன்விடேஷனோடு சாருவின் கணவரை கதிகலங்க வச்சிட்டீங்க :)

Angel சொன்னது…

இந்த thematic வெட்டிங்ஸ் செலிப்ரேஷன்லாம் பஞ்சாபியர் கிட்டருந்து நம்மமக்கள் எடுத்துகிட்டாங்கன்னு நினைக்கிறன் .இங்கே ஒரு பஞ்சாபி பெண்மணி சொன்னார் இந்தியாவில் அவங்க வெட்டிங்ஸ் 1 மாசம் கொண்டாட்டமா நடக்குமாம் ஆனா இங்கிலானதில் லீவ் கிடைக்க கஷ்டம்னாலே 2 வாரத்துடன் முடிக்கிறோம்னு :) ..அதிர்ச்சியாயிட்டேன் .
நிச்சயமா எனக்கு இன்விடேஷன் வந்தாலும் இப்படிப்பட்ட வெடிங்ஸ்க்கு நானா போக மாட்டேன் :) என்னமோ பொதுவாவே வெளி விசேஷங்களுக்கு செல்வது fish out of water உணர்வை தரும் எனக்கு :) 

Angel சொன்னது…

எங்கள் திருமணத்தில் என்கேஜ்மென்ட் அப்புறம் திருமணம் இதற்கு இருமுறை டிராவல் செய்ததற்கு ஜெர்மனி டு சென்னை கணவரின் வேலையிடத்தில் ஆச்சர்யப்பட்டார்களாம் ..இத்தனை செலவு எதற்குன்னு :))

Angel சொன்னது…

எங்கள் குடும்பத்து பெண் ஒரே பெண் ரீசன்ட்டா 15 உறவினர் இருவர் சைடும் இருந்து மட்டும் பங்கெடுக்க , வெடிங் நடந்து முடிஞ்சிருக்கு போஸ்ட்போன் செய்ய முடியாததால் .C 19 ஆல் .

Angel சொன்னது…

இங்கே வெளிநாட்டில் இந்தியர் இலங்கைத்தமிழர் செய்யும் படாபடோபங்களை எழுதின எனக்கு கல்லடி விழும் என்கிற காரணத்தால் :) அமைதியாக கதையை ரசித்து கடந்து செல்கின்றேன் :)

Angel சொன்னது…

நீண்ட நாட்களுக்குப்பின் உங்களை இங்கே பார்க்கின்றேன் மாதவி ..நலம் தானே .

KILLERGEE Devakottai சொன்னது…

அதானே ஐயாவிடம் செல்லுமாங்கிறேன்....

ஏகாந்தன் ! சொன்னது…

சுறுசுறுவென்று ஆரம்பித்த கதை, கையில் இன்னொரு பத்திரிக்கையுடன் திருதிருவென விழிக்கிறதே!

Thematic கல்யாணம், problematic வாழ்க்கையோ!

வடநாட்டுக்காரன் யாரும் - தமிழன், தெலுங்கன், கன்னடன், மலையாளி எப்படிக் கல்யாணம் செய்கிறான் என்று பார்க்க, தெரிந்துகொள்ள விரும்புவதில்லை. அப்படியே தற்செயலாகப் பார்த்தாலும்,கல்ந்துகொண்டாலும், அதை ’காப்பி அடிக்க’ நிச்சயம் ஆசைப்படுவதில்லை! மாறாக, சிலர் கிண்டல் செய்து பார்த்திருக்கிறேன்..கேட்டிருக்கிறேன்.

ஆனால், நம்ம ஆட்கள் ? சினிமா நடிகைகளிலிருந்து கல்யாண வழக்கங்கள் வரை, மேலும் என்னென்னவோ, வடநாட்டுக்குப் பின்னே ஓடுவதே இவர்களுக்குப் பிடித்திருக்கிறது. பெருமையாக நினைக்கிறார்கள்.. கலாச்சார சூன்யங்கள்!

ஏகாந்தன் ! சொன்னது…

*கலந்துகொண்டாலும்

Geetha Sambasivam சொன்னது…

வாங்க மிகிமா. உங்களைப் பார்ப்பதே அரிதாக இருக்கிறது.

Geetha Sambasivam சொன்னது…

ஆஹா, உங்களுக்குத் தெரியுமா? நான் இன்னிக்குத் தான் முதல் முதலாகக் கேள்விப் படறேன்.!!!!!!!!!!!!!!!!!

Geetha Sambasivam சொன்னது…

ஆமா, இல்ல! ராஜலக்ஷ்மி பரமசிவம் யூ ட்யூப் சானலிலே கூட சமையல் குறிப்புகளெல்லாம் போட்டார். இப்போத் தான் காணோம். அவரும் நகைச்சுவையாக இரண்டு பாத்திரங்களுக்குப் பெயர் வைத்து எழுதுவார். இப்படி ஆடப் பயிற்சி எல்லாம் உண்டு என்பதெல்லாம் எனக்குப் புதிய செய்தி!

Geetha Sambasivam சொன்னது…

ஆனாலும் நாங்க "கிந்தி படிக்க மாட்டோம்! கிந்தி அரக்கி! தமிழை அழித்துவிடுவாள்!" என்றெல்லாம் சொல்லுவோம். கல்யாணம் நடத்துவதெல்லாம் வடநாட்டு முறைப்படி! சாப்பாடும் அப்படியே அவங்களைக் காப்பி அடிச்சு! சாம்பார், ரசம், மோரெல்லாம் போயே போச்சு!

ஏகாந்தன் ! சொன்னது…

உலகத்தோடு சேர்ந்து அரக்கப்பறக்க ஆடும், ஓடும் மனைவியை ‘அனுசரித்துப்போக’, ஆண்படும் பாட்டை சின்னக் கதைக்குள் ’சிக்’ எனக் கொண்டுவந்திருக்கிறீகள்.

ஏகாந்தன் ! சொன்னது…

*...வந்திருக்கிறீர்கள்

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

"இந்த இன்விடேஷனை பார்த்தீர்களா?"

"என் கையில் தந்தால்தானே பார்க்க முடியும்.."//

இது முதல் இறுதியில் லெட்டர் பாக்ஸை திறந்து பத்திரிகை வயிற்றைக் கலக்கியது வரை நல்ல இதமான நகைச்சுவை எல்லா இடங்களிலும். கூடவே நவீனக் கல்யாணம் பற்றிய விமர்சனமும் அழகுக்கு அழகு சேர்க்கிறது.

அருமையாக எழுதியிருக்கிறீர்கள் சகோதரி. பாராட்டுகள். வாழ்த்துகள்!

துளசிதரன்

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

பானுக்கா எங்க இருக்கீங்க!!!?? கை கொடுங்க!! செம செம...அட்டகாசமா எழுதியிருக்கீங்க. ஹையோ சிரிச்சுட்டேன் நிறைய இடங்கள்ல. ரொம்ப ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க.

பாராட்டுகளுடன் ஒரு பொக்கே!!!

இப்படியான கல்யாணங்கள் அட்ராசிட்டிஸ் தெரியும்... மேலும் இங்கு சொல்லலை...அது வேறு வடிவில் வரும்...இங்கு...ஹிஹிஹிஹி ஆனா எப்பன்னு தான் தெரியலை..!!!!!!!!

கீதா

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

எங்க ஊர்ல சின்ன வயசுல கல்யாணம் அல்லது கிராமத்து சாப்பாடுகளில் பலரும் இப்படி ஸ்வீட், வ்டை கூட கையில் வாங்கிக் கொண்டு விடுவதுண்டு. இலையில் போட்டால் எடுக்க முடியாதே எச்சில் ஆகிவிடும் என்பதால் தனியாக வாங்கி சைடில் வைத்துக் கொண்டு விடுவாங்க. இல்லேனா ஒரு டிபன் பாக்ஸ் கொண்டுவருவாங்க. சிலர் இரண்டு மூன்று கொண்டு வந்துருவாங்க பாயாசம், ஸ்வீட்ட், பக்ஷனம், போளி வடை எல்லாம் எடுத்துக் கொண்டு போய்டுவாங்க அல்லது ரெண்டாவது செர்விங்க் பாக்ஸ்ல!!!!!!!!!!!!

ஸோ நாங்களும் ஸ்வீட் போளி எல்லாம் தனியாக வாங்கி வைத்துக் கொண்டு வீட்டுக்கு எடுத்துச் செல்வோம். அப்புறம் அதில் பங்கு பிரிப்பது கைமாத்து எல்லாம் செம ஊழல் நடக்கும் எங்களுக்குள்!!!!! ஹா ஹா ஹா ஹா

கீதா

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

பானுக்கா முடிவு அட்டகாசம்.

நான் எழுதிவருவதில்... போக்கில் அவள் திருதிருவென முழிப்பாள்..அசடும் வழிவாள்!!!. கடைசியில்.!!!!!!!! அக்கா உங்கள் அனுமதியுடன் அதை முடித்து அனுப்புவேன்!!!!!!!!!!!!

கீதா

Bhanumathy Venkateswaran சொன்னது…

ரசிப்புக்கு நன்றி துரை சார்.

Bhanumathy Venkateswaran சொன்னது…

நன்றி நெல்லை. 
@கீதா அக்கா: /நான் தீவட்டிக் கல்யாணம்னு படிச்சுத் தொலைச்சேன்!// அட கஷ்டமே! கண்களை கவனிதனுக் கொள்ளுங்கள். நமக்கு கண்கள் மிகவும் அவசியம். 

Bhanumathy Venkateswaran சொன்னது…

மீள் வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி நெல்லை. //ஆமாம்... இத்தகைய பிரம்மாண்ட திருமணங்களில் உண்மையில் சந்தோஷமாக இருப்பது யார்? ஏன்?//நிச்சயமாக பெண்ணின் பெற்றோர்கள்தான். தன்னுடைய குழந்தையின் வாழ்வில் வரும் முக்கியமான நிகழ்ச்சியை சிறப்பாக நடத்த முடிகிறதேயென்னும் சந்தோஷம், பெருமை, ஏன் கொஞ்சம் கர்வம் கூட.

Bhanumathy Venkateswaran சொன்னது…

நன்றி கீதா அக்கா. நீங்களும் திருமணத்திற்கு சென்றிருந்தது மகிழ்ச்சி. 

Geetha Sambasivam சொன்னது…

நாங்கல்லாம் இப்போவும் கூட பக்ஷணங்கள் கையிலே வாங்கிக் கொண்டு விடுவோம். அநேகமாகக் கையில் சின்னப் பை இருக்கும். இல்லைனா வெற்றிலை, பாக்குப் பையைக் கேட்டு வாங்கிப்போம். இந்த ரஸமலாய் கொடுத்தாலோ பதிர்பேணி என்றாலோ தான் பிரச்னை! அங்கேயே சாப்பிடணும்.

Bhanumathy Venkateswaran சொன்னது…

வாங்க மிடில் கிளாஸ் மாதவி. ரசிப்புக்கு நன்றி. 

Bhanumathy Venkateswaran சொன்னது…

நன்றி கௌதமன் சார். 

ட்றம்ப் அங்கிள் செகரட்றி அதிரா:) சொன்னது…

ஹா ஹா ஹா இன்று பானு அக்கா கதையோ... விடிய படித்து விட்டேன் கொமெண்ட் போடத்தான் இவ்ளோ நேரமாச்சு...
பானு அக்காவுக்கு ஷோட்டாக மட்டுமில்லை கொஞ்சம் பெரிசாகவும் எழுத வரும் எனக் காட்டிட்டா ஹா ஹா ஹா

இன்றைய காலத்தை மிக அழகாகக் காட்டிட்டீங்க, உண்மைதான் இப்போ நம் மக்கள் படும் பாடு சொல்லி வேலையில்லை, வெளிநாடுகளில் மிகவும் ஓவராகிப் போய்க்கொண்டிருந்ததைப் பொறுக்க முடியாமல்தான் கடவுள் கொரோனாவை அனுப்பியிருக்கிறார் போலும் ஹா ஹா ஹா

நல்ல கதை... முடிவு ஸூப்பர்:)

ட்றம்ப் அங்கிள் செகரட்றி அதிரா:) சொன்னது…

நான் இன்று கீதா கதையாக இருக்குமென எதிர்பார்த்தேனே:)... ஜஸ்ட்டூ மிஸ்ட்ட்டூஊஊஊ... அப்போ அடுத்த செவ்வாய்:)... ஹா ஹா ஹா ச்சும்மா சொல்லி வைக்கிறேன்:)

Bhanumathy Venkateswaran சொன்னது…

ஹாஹா! அதற்கு நீங்கள் ஏன் இப்படி ஜெர்க் ஆகிறீர்கள் டி.டி.?

Bhanumathy Venkateswaran சொன்னது…

அதற்காக திருமணத்தை தவிர்த்திருக்க வேண்டாம் என்று தோன்றுகிறது.  சிலர் ட்ரேஸ்கோடிற்கு மாறாக தங்கள் விருப்பம் போல் உடை அணிந்து கொண்டும் வருவார்கள். நன்றி.  

Bhanumathy Venkateswaran சொன்னது…

ஹாஹா. இன்னும் அனுபவங்கள் காத்திருக்கின்றன உங்களுக்கு. நன்றி ரமா.

Bhanumathy Venkateswaran சொன்னது…

நன்றி வெங்கட்!

Bhanumathy Venkateswaran சொன்னது…

நன்றி வல்லி அக்கா!

Bhanumathy Venkateswaran சொன்னது…

நன்றி கில்லர்ஜி!

மாதேவி சொன்னது…

இக்கால கல்யாணம் பற்றி சுவாரசியமாக சொல்கிறார் முடிவு மிகவும் ரசனை.

Bhanumathy Venkateswaran சொன்னது…

நன்றி கமலா!

Bhanumathy Venkateswaran சொன்னது…

ராஜலக்ஷ்மியின் 'அரட்டை' படித்ததில்லை. பானுமதி ராமகிருஷ்ணாவின் மாமியார் எப்போதோ  படித்திருக்கிறேன்.  அவர் ஒரு லெஜெண்ட்! பாராட்டிற்கு நன்றி.  

Bhanumathy Venkateswaran சொன்னது…

மிக்க நன்றி ரமணி சார். 

Bhanumathy Venkateswaran சொன்னது…

//அந்தக் காலத்துக்கு சாவியின் வாஷிங்கடனில் திருமணம் என்றால் இந்தக் காலத்துக்கு இது.// ஏ அப்பா! எத்தனை பெரிய பாராட்டு! உங்களின் மனம் திறந்த விசாலமான பாராட்டு கணங்களில் நீர் துளிர்க்க வைத்து விட்டது. நன்றி! நன்றி! 

Bhanumathy Venkateswaran சொன்னது…

ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. மிக்க நன்றி. உங்கள் பாராட்டை வணங்கி ஏற்றுக் கொள்கிறேன். 

Bhanumathy Venkateswaran சொன்னது…

பெண்கள் திருத்தமாகவும், சிறப்பாகவும் அலங்கரித்துக் கொண்டு விசேஷங்களுக்குச் செல்வது அவர்களின் கணவர்களுக்கு கௌரவம் சேர்க்கத்தான். உங்கள் மனைவி ஒரே புடவையை எல்லா திருமணங்களுக்கும் கட்டிக்கொண்டு சென்றால்,"பாரு இந்த செல்லப்பா பாங்கில் அதிகாரியாக பணியாற்றி என்ன பயன்? பொண்டாட்டிக்கு ஒரு நல்ல புடவை கூட வாங்கித் தருவதில்லை போலிருக்கிறது, பாவம் அந்த அம்மா, ஒரே புடவையையே எல்லா கல்யாணங்களுக்கும் கட்டிக்க கொண்டு வருகிறாள்" என்று பேசுவார்கள். தேவையா இது? ஹாஹா! வருகைக்கு நன்றி சார். 

Bhanumathy Venkateswaran சொன்னது…

நன்றி ஏன்ஜல்.

Bhanumathy Venkateswaran சொன்னது…

ஆமாம்! இப்போதெல்லாம் மெஹந்தியும், ஸங்கீத்தும் இல்லாத திருமணம் கிடையாது. உணவும் வட இந்திய பாணியில்தான். 

Bhanumathy Venkateswaran சொன்னது…

நட்பு வட்டாரத்தில் சிலர் அப்படி நடத்தியிருக்கிறார்கள். 

Bhanumathy Venkateswaran சொன்னது…

:)))

Bhanumathy Venkateswaran சொன்னது…

//சுறுசுறுவென்று ஆரம்பித்த கதை, கையில் இன்னொரு பத்திரிக்கையுடன் திருதிருவென விழிக்கிறதே!//ஷொட்டு கொடுக்கிறீர்களா,குட்டு வைக்கிறீர்களா? என்று புரியவில்லை, எதுவாக இருந்தாலும் ஏற்றுக் கொள்கிறேன். நன்றி. 

Bhanumathy Venkateswaran சொன்னது…

//ஆனால், நம்ம ஆட்கள் ? சினிமா நடிகைகளிலிருந்து கல்யாண வழக்கங்கள் வரை, மேலும் என்னென்னவோ, வடநாட்டுக்குப் பின்னே ஓடுவதே இவர்களுக்குப் பிடித்திருக்கிறது.//  
100% உண்மை. பெயர்கள் கூட நமக்கே உரிய பிரத்தியேக பெயர்களை தொலைத்து விட்டோம். எங்கே வகுளாபரணன்? எங்கே ஆராவமுதன்? எங்கே செங்கமலம்? அன்புச்செல்வன், கலைச்செல்விகள்ளெலாம் காணாமலே போய் விட்டார்கள். எங்கள் உறவில் ஒரு பெண் தன்னுடைய பெண் குழந்தைக்கு சொன்ன பெயர் என்னவென்று இன்னும் நினைவுபடுத்திக் கொள்ள முயற்சிக்கிறேன், ம்ஹூம்! ஏதோ படத்தில் தீபிகா படுகோனுக்கு அந்தப் பெயர் என்று மட்டும் நினைவில் இருக்கிறது. இன்னொரு உறவினர் அவர்கள் குடும்பத்தில் புதிதாக பிறந்த குழந்தைக்கு என்ன பெயர் என்று கேட்டதற்கு, "ஐஸ்வர்யா ராயின் பெண்ணின் பெயர்" என்றார். 

Bhanumathy Venkateswaran சொன்னது…

நன்றி.

Bhanumathy Venkateswaran சொன்னது…

அழகான விமர்சனத்திற்கும், பாராட்டுக்கும் நன்றி துளசிதரன்.

Bhanumathy Venkateswaran சொன்னது…

இணைய படுத்தல், பவர் கட் போன்ற அசௌகரியங்களையும் தாண்டி வந்து பாராட்டியதற்கு மிக்க நன்றி கீதா.  

Bhanumathy Venkateswaran சொன்னது…

//அது வேறு வடிவில் வரும்...இங்கு...ஹிஹிஹிஹி ஆனா எப்பன்னு தான் தெரியலை..!!!!!!!!//
We are waiting :))

Bhanumathy Venkateswaran சொன்னது…

//வெளிநாடுகளில் மிகவும் ஓவராகிப் போய்க்கொண்டிருந்ததைப் பொறுக்க முடியாமல்தான் கடவுள் கொரோனாவை அனுப்பியிருக்கிறார் போலும் ஹா ஹா ஹா//வாங்க அதிரா! வெளிநாடுகள் மட்டுமல்ல, இங்கும் இந்த கூத்துகள் அதிகமாகிக் கொண்டேதான் இருக்கின்றன. நீங்கள் சொல்லியிருப்பதுதான் எனக்கும் தோன்றியது. நன்றி.   

Bhanumathy Venkateswaran சொன்னது…

நீங்கள் எப்போது எழுதப் போகிறீர்கள்? எழுதும்போது மறக்காமல் கதைக்கு கீழே அருஞ்சசொற்பொருள் கொடுத்து விடுங்கள். 

Bhanumathy Venkateswaran சொன்னது…

நன்றி மாதேவி.