வெள்ளி, 4 செப்டம்பர், 2020

வெள்ளி வீடியோ : பிரிந்தவர் மீண்டும் சேர்ந்திடும்போது அழுதால் கொஞ்சம் நிம்மதி

1961 இல் வெளிவந்த படம்.  பெரும்பாலும் அனைவருக்கும் பிடித்த படம்.  நான் இன்னும் பார்க்காத படம்!  ஆனால் இந்தப் படத்தின் பாடல்களைக் கேட்டுக்கேட்டு ரசித்த படம்!



படத்தில் ஒன்பது பாடல்கள்.  ஒன்பதுமே இனிமையான பாடல்கள்.  கவியரசரின் பாடல் வரிகளுக்கு இசை அமைத்தவர்கள் விஸ்வநாதன்-ராமமூர்த்தி.  சரவணா பிலிம்ஸ் ஜி என் வேலுமணி தயாரிப்பில் ஏ பீம்சிங் இயக்கம்.  சிவாஜி கணேசன், சரோஜா தேவி, சௌகார் ஜானகி ஆகியோர் முக்கிய பாத்திரத்தில் நடித்திருக்கும் படம்.

சரோஜா தேவி எம் ஜி ஆருடன் நடித்த படங்களில் இதுபோன்ற முக்கியத்துவம் வாய்ந்த பாத்திரங்கள் அவருக்கு கொடுக்கப்பட்டனவா என்று எனக்குத் தோன்றும்.



'நான் பேச நினைப்பதெல்லாம் பாடலை எம் எஸ் விஸ்வநாதனை மனதில் வைத்து எழுதினாராம் கண்ணதாசன்.  என்னை யாரென்று எண்ணி எண்ணி பாடலை சிந்து பைரவி ராகத்திலும், இந்த நாடகம் பாடலை சுபபந்துவராளி ராகத்திலும், இன்றைய முக்கிய பகிர்வுப்பாடலான காதல் சிறகை பாடலை காபி ராகத்திலும், டைட்டில் சாங் என்று அறியப்படும் பாலும் பழமும் பாடலை நடபைரவி ராகத்திலும் அமைத்திருக்கிறார்கள் மெல்லிசை மன்னர்கள்.


முதலில் டி எம் எஸ் -சுசீலா பாடிய இந்த பாடல்.  இந்தப் பாடலின் வரிகள் மிகவும் ஸ்பெஷல்.  மிக அருமையாக எழுதி இருக்கிறார் கவிஞர்.  எந்த வரியைத் தனியாகக் குறிப்பிட்டுப் பாராட்ட?  எல்லாமே சிறந்த வரிகள்.  டி எம் எஸ் பாடி இருக்கிறார் என்று பெயர்தான்.  வெறும் ஹம்மிங் மட்டும்தான்.  இந்த வகையில் டி எம் எஸ் ஒரு பாடல் முழுக்க ஹம் மட்டும் செய்த பாடல் இதுவாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.  பாடல் ஆரம்ப இசை முதல் முடிவு வரை இனிமையோ இனிமை.

நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும் 
நாளோடும் பொழுதோடும் உறவாட வேண்டும் உறவாட வேண்டும்  
நான் காணும் உலகங்கள் நீ காண வேண்டும் நீ காண வேண்டும் 
நீ காணும் பொருள் யாவும் நானாக வேண்டும் நானாக வேண்டும்  

பாலோடு பழம் யாவும் உனக்காக வேண்டும் உனக்காக வேண்டும் 
பாவை உன் முகம் பார்த்துப் பசியாற வேண்டும் பசியாற வேண்டும் 
மனதாலும் நினைவாலும் தாயாக வேண்டும் நானாக வேண்டும் 
மடி மீது விளையாடும் சேயாக வேண்டும் நீயாக வேண்டும்  

சொல்லென்றும் மொழியென்றும் பொருளென்றும் இல்லை பொருளென்றும் இல்லை 
சொல்லாத சொல்லுக்கு விலையேதும் இல்லை விலையேதும் இல்லை ஒன்றோடு ஒன்றாக உயிர் சேர்ந்த பின்னே உயிர் சேர்ந்த பின்னே 
உலகங்கள் நமையன்றி வேறேதும் இல்லை வேறேதும் இல்லை




இதே படத்தின் இன்னொரு பாடல் இது.  இதைத்தான் பகிர வந்தேன்.  மற்ற நல்ல பாடல்களிலிருந்து எதையாவது ஒன்றைச் சேர்க்க எண்ணி முதல் பாடலைச் சேர்த்தேன்.  மற்றவற்றை விடவும் மனமில்லைதான்!



இந்தப் பாடலில் வரிகள் ஸ்பெஷல் என்றால் சுசீலாம்மாவின் குரலும் ஸ்பெஷல்தான்.  காபி  ராகத்தில் இப்படி ஒரு சுகமான மெலடியைக் கொடுக்க முடியுமா?   முதல் பாடலிலும், அதைவிட இந்தப் பாடலிலும் சில வரிகள் இரண்டு முறை பாடப்படும்.  இரண்டாவது முறை பாடும்போது அதன் டியூன் மாறிவிடும்.  இந்தப் பாடலில்தான் பிரிவுத் துயரை எப்படி வெளிபப்டுத்துகிறார்கள் கவிஞர், இசை அமைப்பாளர், பாடகர்?  இந்தப் பாடலுக்கு இசை அமைக்கும் போது எம் எஸ் விக்கு 31 வயதாம்.


காதல் சிறகை காற்றினில் விரித்து 
வான வீதியில் பறக்கவா
கண்ணில் நிறைந்த கணவனின் மார்பில் 
கண்ணீர் கடலில் குளிக்கவா 

எண்ணங்களாலே பாலம் அமைத்து 
இரவும் பகலும் நடக்கவா 
எண்ணங்களாலே பாலம் அமைத்து 
இரவும் பகலும் நடக்கவா 
இத்தனை காலம்  பிரிந்ததை எண்ணி 
இத்தனை காலம் பிரிந்ததை எண்ணி 
இரு கை கொண்டு வணங்கவா 
இரு கை கொண்டு வணங்கவா.  

முதல் நாள் காணும் புதுமணபெண்போல் 
முகத்தை மறைத்தல் வேண்டுமா 
முதல் நாள் காணும் புதுமணபெண்போல் 
முகத்தை மறைத்தல் வேண்டுமா 
முறையுடன் மணந்த கணவர் முன்னாலே
முறையுடன் மணந்த கணவர் முன்னாலே 
பரம்பரை நாணம் தோன்றுமா 
பரம்பரை நாணம் தோன்றுமா

பிரிந்தவர் மீண்டும் சேர்ந்திடும்போது 
அழுதால் கொஞ்சம் நிம்மதி 
பேசமறந்து சிலையாய் இருந்தால் 
பேசமறந்து சிலையாய் இருந்தால் 
அதுதான் தெய்வத்தின் சந்நிதி 
அதுதான் காதலின் சந்நிதி




59 கருத்துகள்:

  1. ஆஹா! இனிய வெள்ளி காலை வணக்கம். மீண்டும் மீண்டும் கேட்ட பாடல்கள். நன்றி ஶ்ரீராம்.

    பதிலளிநீக்கு
  2. நண்பர்கள் அனைவருக்கும் இனிய நாளுக்கான வாழ்த்துகளும் பிரார்ததனைகளும்.

    பதிலளிநீக்கு
  3. பாலும் பழமும்” மறக்க முடியாத காதல் காவியம்.
    பாலையா,நாகையா, சௌகார் இவர்கள் சுற்றும் முத்துகளாக அவர், நடுவில் ஒளிவிடும் நட்சத்திரங்கள்
    சிவாஜியும் சரோஜா தேவியும். பாடல்கள் எதையுமே விட முடியாது. தம்பதிகள் அழுது கொண்டே பாடும் நான் பேசவும் மிகச் சிறப்பு.

    பதிலளிநீக்கு
  4. காதல் சிறகை பாடலை சிலோன் வானொலி பேட்டிக்காக. சரோஜாதேவியே பாடினார்.மயில்வாகனன் சென்னை வந்து எடுத்த பேட்டி. ஒவ்வொரு வரியும் நினைத்து நினைத்து அனுபவித்து இருக்கிறோம்.
    T.எம் எஸின் குரலும் சிவாஜியின் வாய் அசைப்பும் அதிசயிக்க வைக்கும்.ம்ம்ம்ம்ம்ம்.......மிக மிக லயிக்க வைக்கும்.

    பதிலளிநீக்கு
  5. அருமையான இரண்டு பாடல்கள். அனைவருக்கும் பிடித்திருக்கும்.

    நல்ல செலெக்‌ஷன்

    பதிலளிநீக்கு
  6. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  7. வணக்கம் சகோதரரே

    இன்றைய வெள்ளி பாடல்கள் இரண்டுமே பலமுறை கேட்டு ரசித்த பாடல்கள். இப்போதும் கேட்டு ரசிக்கலாம். அது குறித்து தந்த விபரங்களும் அருமை. இனிமையான பாடல்களை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிகள்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  8. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள். நீக்கப்பட்ட ஊரடங்கினால் யாருக்கும் பெரிய அளவில் பாதிப்பு இல்லாமல் இருக்கவும் பிரார்த்தனைகள். இனியாவது கொரோனாவை மறக்கும்படியான சூழ்நிலை உருவாகட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உருவாக்குவோம். முதல் படி : அந்தப் பெயரை ஒவ்வொருநாளும், ஒவ்வொரு பதிவிலும் பதியாமல் விடுவது.

      நீக்கு
  9. இந்தப் படம் நானும் பார்த்ததில்லை, தமிழில்! இஃகி,இஃகி,இஃகி, ஹிந்தியில் பார்த்திருக்கேன். "சா(த்)தி" என்னும் பெயரில் ராஜேந்திரகுமார், வைஜயந்திமாலா நடிச்சு வந்தது. வைஜயந்தி மாலா ஒரு காட்சியில் இஞ்செக்ஷன் கொடுக்கவேண்டிய மருந்தோடு கூடிய சிரிஞ்சை வாயில் கௌவிக்கொண்டு வீட்டுக்கு வெளியே பதித்திருக்கும் குழாயைப் பிடித்துக் கொண்டு மேலே ஏறும் காட்சி. இஃகி,இஃகி, எல்லோரும் உருகிக் கொண்டிருக்க எனக்கு மட்டும் சிப்புச் சிப்பாய் இருந்தது. :))))))))

    பதிலளிநீக்கு
  10. ஜிவாஜிக்காக உருகும் ஜரோஜா தேவியை நினைச்சுட்டு யாரும் உருகிட்டு அடிக்க வரதுக்குள்ளே ஓடிடறேன். ஜூட்!

    பதிலளிநீக்கு
  11. ஆஹா...காலம் வென்ற பாடல்களை பதிவிட்டு இரசிக்கத்தந்தமைக்கு மனமார்ந்த நன்றி...

    பதிலளிநீக்கு
  12. இனிய பாடல்...
    உணர்வு பூர்வமான இப்பாடலை இன்று பதிவு செய்தமைக்கு நெஞ்சார்ந்த நன்றி....

    பதிலளிநீக்கு
  13. நடிகர் திலகம் அவர்களை நயாகராவின் ஒரு நாள் மேயராக வைத்து சிறப்பு செய்ததெல்லாம் அவரது நடிப்பைப் பாராட்டித்தான்...

    ஆனாலும் விதி யாரை விட்டது?...

    பதிலளிநீக்கு
  14. அருமையான பாடல்கள் கொண்ட படம். கேட்க,கேட்க திகட்டாத பாடல்கள்.  ஆனால் "நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்.." என்று ஏன் நினைக்க வேண்டும்? நான் பேச நினைப்பதை என்னை பேச விடு, உனக்கு என்ன பேச வேண்டுமோ அதை  பேசிக்கொள்' என்று சொல்வதுதானே  ஆரோக்கியமான மண வாழ்க்கைக்கு அடையாளம் என்று எனக்குத் தோன்றும். அதீத அழகுணர்ச்சி.  

    பதிலளிநீக்கு
  15. //சரோஜா தேவி எம் ஜி ஆருடன் நடித்த படங்களில் இதுபோன்ற முக்கியத்துவம் வாய்ந்த பாத்திரங்கள் அவருக்கு கொடுக்கப்பட்டனவா என்று எனக்குத் தோன்றும்.//அதற்கெல்லாம் தன்னம்பிக்கை வேண்டும். எம்.ஜி.ஆர்.,அவரும் நடிக்க மாட்டார்,மற்றவர்களையும்  நடிக்க விட மாட்டார். அவருடைய படங்களிலும் தங்கள் நடிப்புத் திறமையை நிரூபித்தவர்கள் எம்.ஆர்.ராதா, நாகேஷ் போன்றவர்கள். எம்.ஜி.ஆர்.படங்களில் வெறும் ஷோ கேஸ் பொம்மைகளாக வந்த கதாநாயகிகள் தங்களுக்கு நடிக்கவும் வரும் என்று நிரூபித்தது  சிவாஜி படங்களில் நடித்த பின்புதான். 
    சிவாஜியும்,உஷா நந்தினியும் நடித்த ஒரு படத்திற்கு குமுதம்  விமர்சனத்தில், 'சிவாஜியோடு நடிக்கும் பொழுதாவது நடிப்பதற்கு உஷா நந்தினி முயற்சி செய்ய வேண்டும். இல்லாவிட்டால் மஞ்சுளாவுக்கு நேர்ந்த கதிதான் அவருக்கும் நேரும்' என்று எழுதியிருந்தார்கள். 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //..எம்.ஜி.ஆர்.,அவரும் நடிக்க மாட்டார்..//

      என்ன இப்படிச் சொல்லிவிட்டீர்கள்? அவர் படத்தில் மிளிரும் ஒரே காமெடியன் அவர்தானே !

      நீக்கு
    2. முதல்லே எம்ஜார் போட்டுக்கற உடைகள்! அதைச் சொல்லுங்க. அதை விடவா காமெடி அவர் நடிப்பு? எப்படித்தான் தேர்வு செய்தார்களோ! :( ஆனால் அவர் படங்களில் நல்லவராகவே, நல்லது செய்பவராகவே, அதிகம் படித்து ஆனால் ரிக்‌ஷா ஓட்டுபவராகவெல்லாம், இன்னும் சொல்லப் போனால் அப்பாவி மாதிரியெல்லாம் நடித்துப் பெயரைத் தக்க வைத்துக் கொண்டார். ஜிவாஜி நேர்மாறாக! அதனாலேயே அரசியல் வாழ்வில் ஜிவாஜி ஜெயிக்கலைனு நினைச்சுப்பேன். எம்ஜாருக்கு உள்ள ரசிகர் கூட்டமும் அவருக்கு இல்லை.

      நீக்கு
  16. எண்ணிலடங்கா முறை கேட்டாலும் இனிமை தரும் பாடல்கள்...

    பதிலளிநீக்கு
  17. பழையபாடல்களைப் போட்டு ரசிகர்களை மகிழவைத்த புண்ணியம் சிலோன் ரேடியோ, விவித்பாரதிக்கு அப்புறம் ஸ்ரீராமுக்குத்தான் !

    இரண்டாவது பாடல் ஆளை உருக்குவது என்றும். எதுவோ ஒன்று -அழகான பாடல்வரிகளைத் தாண்டியும், குரலோ, இசையோ எதுவோ கேட்பவரை எங்கோ கொண்டுபோய்விட்டுவிடும் தன்மை..
    பி.சுசீலா என்றொரு ஆளுமை தமிழ்த் திரைப்பாடல் உலகத்திற்கு கிடைத்திராவிட்டால்.. நினைக்கவே அதிர்ச்சியாக இருக்கிறது. தமிழ் திரைப்பாடல் உலகில் ’சுசீலா காலம்’ எனத் தனியாகக் குறிப்பிடலாம் எனத் தோன்றுகிறது. தமிழ்த் திரை இசைபற்றி எல்லாம் யாராவது ’நன்றாக எழுதி’ ஒரு நூலாக வெளியிடலாம்..

    பதிலளிநீக்கு
  18. // பரம்பரை நாணம்!...//

    கவியரசரின் கால்களைத் தொட்டு வணங்க வேண்டும்..

    இந்த நாணம் என்ற ஒன்றை பற்பல பாடல்களில் பற்பல விதமாகக் கொண்டாடுகின்றர்...

    இந்த நாணத்தை மக்கள் மனதில் இருந்து அகற்றியதே நாகரிகக் கல்வி...

    அதனால் தானே..

    நீயா நானா?.. நிகழ்ச்சி ஒன்றில் ஒரு பெண் கேட்கிறார் ஆண்களைப் பார்த்து -

    நாங்கள் தண்ணியடிப்பதால் உங்களுக்கு என்ன நஷ்டம்!?.. - என்று...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த ‘நானா நீயா’-வின் அடுத்த நிகழ்ச்சியில் ஒரு பெண் இப்படிக் கேட்கக்கூடும்: ”’பரம்பரை நாணம்’ ஆண்களுக்கு ஏன் இல்லை.. இதை ஏன் யாரும் இன்னும் கேட்கவில்லை?” - இப்படிக் கேட்டுவிட்டு ஹாண்ட் பேக்-இலிருந்து அந்த ஸ்லீக்கான பாட்டில தன் செவ்வாயில் கொஞ்சம் கவிழ்த்துவிட்டு நாத்கோபியைப் பார்த்து முறைக்கவும் கூடும்!

      நீக்கு
    2. // பரம்பரை நாணம் ஆன்களுக்கு ஏன் இல்லை.. இதை ஏன் யாரும் இன்னும் கேட்க வில்லை?..//

      ஒரு குறள்.. ஒரே ஒரு குறள்!..
      நல்லமாட்டுக்கு ஒரு சூடு என்கிற மாதிரி..

      ஈன்றாள் பசிகாண்பான் ஆயினும்
      செய்யற்க சான்றோர் பழிக்கும் வினை..

      இந்தக் குரள் மட்டும் மனதில் பதிந்து இருந்தால் அரசு அலுவலகங்களில் லஞ்சம் பெருகியிருக்குமா!..

      இன்றைய இளையோர் மனதில்
      பப்சி (பப்ஜி) பதிந்த அளவுக்கு பண்பாடு பதியவில்லையெனில் -

      அது யாருடைய குற்றம்?..

      நீக்கு
    3. நல்ல, ஆக்ரோஷமான கருத்துக்கள்! நன்றி.

      நீக்கு
    4. நல்ல மாட்டுக்குத்தானே ஒரு சூடு!
      இங்கே எல்லாம் கள்ள மாடுகள், ஆடுகள்.

      பாவம், விலங்குகளை இங்கு இழுப்பது சரியில்லை..

      நீக்கு
    5. பாவம் தான் விலங்குகள்...
      ஆனச்லும் அவற்றைப் பக்குவப்படுத்த சிலவற்றைச் செய்து தான் ஆக வேண்டியிருக்கிறது..

      ஆனாலும்
      இந்த நாட்டு மாடுகள் அடங்குவதில்லையே!..

      நீக்கு
  19. பிரிந்தவர் மீண்டும் சேர்ந்திடும்போது
    அழுதால் கொஞ்சம் நிம்மதி..
    பேசமறந்து சிலையாய் இருந்தால்
    அதுதான் தெய்வத்தின் சந்நிதி..

    காவியமான வரிகள்...

    பதிலளிநீக்கு
  20. பகிர்ந்த நல்ல பாடல்களை கேட்டு மகிழ்ந்தேன்.
    அருமையான பாடல்கள் பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  21. என்மனைவியின் சின்ன மாமா நான்சிவாஜி ஸ்டைலிலில் அப்போதைய தலை வாருகிறேன் என்பார் எனக்கு மிகவும்பிடித்த படமும் பாடல்களூம்

    பதிலளிநீக்கு
  22. அற்புதமான பாடல்கள் அனைத்துமே...

    பதிலளிநீக்கு
  23. நல்ல பாடல்கள். இரண்டினையும் கேட்டு ரசித்தேன்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!