வெள்ளி, 18 டிசம்பர், 2020

வெள்ளி வீடியோ : உன் எழில் மேவும் பனிமலர் பார்வையில் உலகம் நீலகிரி ஆகவே

 கிராமங்கள் நகரங்கள் என்று பிரித்து உணரக்கூடிய காலம் இருந்தது.  இப்போதும் ஓரளவு இருக்கலாம்.  அன்றைய கிராமத்துக்கும் நகரத்துக்கும் இருந்த வேறுபாடு மிகப் பெரிது.  இன்று இணையம் எனும் விஞ்ஞான நுட்பம் கிராமம் நகரம் என்கிற வேறுபாட்டையே இல்லாமல் செய்து விட்டது.

அன்றைய இளைஞர்கள் வேலைக்குச் சென்றாலும் ஒரு குறிப்பிட்ட சுற்று வட்டார பகுதியில் இருந்துகொண்டு அதாவது பணி செய்துகொண்டு வீட்டோடு இணைந்திருக்க முடிந்தது.  

ஆனால் இப்போது?  

வேலைவாய்ப்புகள் பெருகி விட்டாலும் அருகி விட்ட காரணத்தால் உலகம் முழுவதும் பரந்து விரிய வேண்டிய கட்டாயம்.  இதனால் அன்றைய கூட்டுக் குடும்ப வாழ்க்கை என்பது கேள்விக்குறி ஆகிவிடுகிறது.  

வருமானம் அதிகம்.  வாழ்க்கைமுறை வேறு.  முந்தைய காலங்களின் மகிழ்ச்சி இன்று இருக்கிறதா என்றால் அதை முன்னர் அனுபவித்தவர்கள் இல்லை என்பார்கள்.  இப்போதைய வாழ்க்கை முறை பழகியவர்கள் 'அதனால் என்ன குறைந்து விட்டது?'  என்பார்கள்.  இன்றைய வாழ்வின் வசதிகளை அடுக்குவார்கள்.

இழந்திருக்கிறோமா?  பெற்றிருக்கிறோமா?

எதற்கு இந்தப் புலம்பல்?  

இன்றைய பாடல் இடம்பெறும் காட்சி அழகான அந்தக்கால கிராமக் காட்சி.  விவசாயம் செய்துகொண்டு வீட்டோடு வசித்து இன்பம் கண்ட காலம்.

என்ன பாடல் என்று பார்ப்போமா? 

1958 இல் கன்னடத்தில் ஒரு படம் வந்தது...   'மனே தும்பிட ஹென்னு'..   இதை விஜயா ப்ரொடக்ஷன் நாகி ரெட்டி தெலுங்கில் 'குண்டம்மா கதா' என்றும் தமிழில் 'மனிதன் மாறவில்லை' என்றும் எடுத்தார்.


ஜெமினி கணேசன், சாவித்ரி, ஜமுனா' நாகேஸ்வரராவ் ஆகியோர் நடித்திருக்கும் இந்தப் படத்திலும் சாவித்திரியும், ஜமுனாவும் சகோதரிகளாக நடித்திருக்கிறார்கள். 


நகைச்சுவை கலந்து எடுக்கப்பட்ட படமாம்.  இன்று பகிரப்போகும் பாடல் ஏ எல் ராகவனும், பி சுசீலாவும் பாடியிருக்கும் பாடல்.  தஞ்சை ராமையாதாஸின் பாடலுக்கு இசை கண்டசாலா.  இந்தப் படத்தில் கண்ணதாசனும் இரண்டு பாடல்கள் எழுதி இருக்கிறார்.

காட்சியில் நடித்திருப்பவர்கள் நாகேஸ்வரராவும் ஜமுனாவும்.



காதல் யாத்திரைக்கு பிருந்தாவனமும் 
கற்பகச் சோலையும் ஏனோ 
வேல்விழி மாது என் அருகில் இருந்தால் 
வேறே சொர்க்கமும் ஏனோ 

தீர்த்தயாத்திரைக்கு ராமேஸ்வரமும் 
திருக்கழுக்குன்றமும் ஏனோ 
ஆருயிர் பதியும் அருகிலிருந்தால் 
வேறே தெய்வமும் ஏனோ 

புன்னகை வதனம் பூர்ணச்சந்திரன் போல் 
பகலில் நிலவாய் காயவே 
உன் எழில் மேவும் பனிமலர் பார்வையில் 
உலகம் நீலகிரி ஆகவே 

காதல் யாத்திரைக்கு கொடைக்கானலும் 
காஷ்மீரெல்லாம் ஏனோ ​

தந்தை தாயுடன் தமையன் பாசமும் 
தங்கள் அன்பினால் காணவே 
பதி ஆதரவே சதியின் மோட்சமென 
பழைய சாஸ்திரம் பேசவே 

தீர்தயாத்திரைக்கு சிவகைலாசம் 
ஸ்ரீவைகுண்டமும் ஏனோ 
உயிரும் உடலும்போல் சதிபதி இருந்தால் 
உலகமே சொர்க்கம் ஆகாதா 


                         

82 கருத்துகள்:

  1. மிக மிக இனிய காலை மலராகப்
    பழைய பாடல் மலர்ந்திருக்கிறது.
    நன்றி ஸ்ரீராம்.
    இன்றைய நாளும் எல்லா நாட்களும் நன்மை
    தரும் நாட்களாக இருக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  2. இழந்திருக்கிறோமா பெற்றிருக்கிறோமா? அருமையான தலைப்பு, புதன் விவாத்த்திற்கு.

    நான் சிறு வயதில் கிராம வாழ்க்கையைச் சிறிது அனுபவித்திருக்கிறேன். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கிராம நகரவாழ்க்கையும், பிறகு வெளியிடங்களில்.

    முடிந்தால் இன்று மின்னூல் சிறப்பிதழுக்கு எழுதுகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இழந்திருக்கிறோம் என்பதை அறிந்தால்தான் இழப்பு.  இலலாவிட்டால் எப்படி இழப்பாகும்?  இல்லையா?  முடிந்தால் என்ன, எப்படியும் எழுதி அனுப்புங்கள் நெல்லை!

      நீக்கு
  3. மனிதன் மாறவில்லை படம் நன்றாக நினைவில் இருக்கிறது. திண்டுக்கல்லில் பார்த்த படம்.
    இதே போலத் தெலுங்கில் வந்த இன்னோரு படம் கடன் வாங்கி கல்யாணம்.
    அது உண்மையிலேயே சிரிப்பாக இருக்கும்.

    இந்தப்படத்தில் சாவித்ரியின் வேலை செய்வது போல ஜெமினி வருவார்.
    சாவித்ரி தங்கை ஜமுனாவைப் பெண்பார்த்துத் திருமணம்
    செய்பவர் நாகேஸ்வர ராவ்.

    இதில் கடுமை காட்டும் அம்மாவாக ஒரு பெண் நடித்திருப்பார் என்று நினைக்கிறேன்.

    இந்தப்பாடல் கேட்க சிறப்பு. உண்மையும் கூட.
    நிஜமாகவாகவே காதல் இருந்தால்
    எங்காவது போக வேண்டுமா என்ன.
    மிக ரசித்தேன் ஸ்ரீராம் நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கடன் வாங்கி கல்யாணம் படத்தின் தெலுங்குப் பதிப்பைப் பார்த்தீர்களாம்மா?  நான் இந்தப் படம் எல்லாம் பார்த்ததில்லை.  சிலோன் ரேடியோ, விவிதபாரதியின் தயவில் நிறைய்....ய பாடல்கள் காதில் விழுந்து இதயத்தில் இடம் பிடித்திருக்கின்றன.

      //நிஜமாகவாகவே காதல் இருந்தால்
      எங்காவது போக வேண்டுமா என்ன.//

      ஹா..  ஹா..  ஹா...   யாருக்கு நிரூபிக்கிறார்கள் என்று தெரியவில்லை.  அல்லது சுற்றியிருக்கும் உறவுகள் மீது நம்பிக்கையின்மை?!!

      நீக்கு
  4. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
    நலமும் வளமும் என்றென்றும் வாழ்க..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்க நலம்.  வாங்க துரை செல்வராஜூ ஸார்...  வணக்கம்.

      நீக்கு
  5. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். மழை பெய்து கொண்டிருக்கிறது. மார்கழியில் மழைப்பொழிவு இருக்கக் கூடாது என்பார்கள். கெர்போட்டம் ஏற்படாது! ஆகவே மழை நின்று கெர்போட்டம் ஏற்பட்டு வரும் ஆண்டில் நல்ல மழை இருக்கவும், கொடிய தொற்று விலகி எங்கும் வளம் பெருகவும் பிரார்த்திப்போம்.

    பதிலளிநீக்கு

  6. இந்தப் படம் எல்லாம் பார்த்ததில்லை. கடன் வாங்கிக் கல்யாணம் தமிழிலும் வந்திருக்குனு நினைக்கிறேன். நகைச்சுவைப் படம் என்று கேள்விப் பட்டிருக்கேன்

    பதிலளிநீக்கு
  7. வருமானம் அதிகம். வாழ்க்கைமுறை வேறு. முந்தைய காலங்களின் மகிழ்ச்சி இன்று இருக்கிறதா என்றால் அதை முன்னர் அனுபவித்தவர்கள் இல்லை என்பார்கள். இப்போதைய வாழ்க்கை முறை பழகியவர்கள் 'அதனால் என்ன குறைந்து விட்டது?' என்பார்கள். இன்றைய வாழ்வின் வசதிகளை அடுக்குவார்கள்.//////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////அந்தந்த காலத்துக்கேற்ற வாழ்வு.
    யாரும் மாறவில்லை. மனங்களும்
    அவர்கள் எண்ணங்களும் அப்போதைக்கப்போது

    மாறிக் கொண்டு வரும். இது உயர்த்தி ,அது தாழ்வு
    என்பது அவரவர் அனுபவம் என்பது என் யோசனை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான்மா...   அதைதான் அந்தக் காலத்தின் அனுபவங்களை அறியாத இந்தத்தலைமுறையினர் அப்படி சொல்வார்கள் என்று சொல்லி இருக்கிறேன்.

      நீக்கு
  8. மதுரையையே ஒரு பெரிய கிராமம் என்பார்கள் முன்னெல்லாம். கல்யாணம் ஆகி வந்த புதுசில் தஞ்சை ஜில்லாக் கிராமங்கள் எல்லாமே கிராமங்கள் எனில் எல்லாவற்றிலும் கிராமமாகவே இருந்தது. மின்சாரமெல்லாம் இருக்காது. கழிவறை இல்லை. எங்குமே குழாய்களைப் பார்த்தது இல்லை. கிணற்றில் இருந்தே நீர் இறைக்கணும். தெருவில் நடுவே பொதுக்கிணறு இருக்கும். இப்போதெல்லாம் மாறி விட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மதுரையை பெரிய கிராமம் என்பார்கள்.  உண்மைதான்.  சரி ஒரு கேள்வி.  சரியான கிராமங்கள் என்றால் எந்த ஊர்ப்பக்கம் நினைவுக்கு வரும்?

      நீக்கு
    2. முதல்ல கிராம்ம் என்பதற்கே definition வேணும். பெரிய மளிகைக்கடை, ஹோட்டல், ஆட்டோ ஸ்டான்ட் மூன்று கிலோமீட்டர்களுக்குள் மருத்துவ வசதி (சாதாரண கிளினிக்) இல்லாதவைதான் கிராமங்கள். இத்துடன் ஏரியோ, ஊருணி அல்லது ஆறு இல்லாதவையும் (நீர் வசதி இல்லாதவை)

      நான் வாழ்ந்த இடங்களில் சில இன்னும் கிராம்ம்தான்.

      நீக்கு
    3. சரியான கிராமம் என்றால்
      தஞ்சாவூர் கும்பகோணம் பக்கம் தான்!...

      அந்தப் பக்கம் ஆறு.. இப்படியொரு குளம்.. வீட்டுக்குவ்வீடு நல்ல தண்னிக் கேணி...

      ஒன்றோ இரண்டோ என கோயில்கள்...

      இலுப்பைத் தோப்புக்குள்ள நாலு செக்கு.. கர்..கர்..ந்னு மரப்பட்டறை..

      ஹூய்..ங்...ந்னு சத்தம் போட்டுக்கிட்டு ஓடுற எருமைக் கிடா... மா மரத்துல தாவி ஏறி மேய்கிற வெள்ளாடு..

      மீனாச்சி..ந்னு வீட்டுப் பசுவக் கூப்பிட்டா அடுத்த வீட்டுல இருந்து வளையல் சத்தம்..

      இதுக்கு மேல சொர்க்கம் வேற ஏது?..

      எல்லாம் காவிரியாளின் கொடை அல்லவா!..

      நீக்கு
    4. //முதல்ல கிராம்ம் என்பதற்கே definition வேணும். //

      சரிதான் நெல்லை.  சில கேள்விகளுக்கு கிடைக்கும் பதில்கள் திருப்தி தராது.  இலக்கியத்துக்கு வரையறை என்ன என்றாலும் இதே மாதிரிதான்!  கிராமம் என்றால் நம் கற்பனையில் கான்க்ரீட் வீடு இருந்தாலே இடிக்கும்!  கூரை, ஒட்டு வீடுகள், குளம், ஏரி, வயல்வரப்புகள், மண்சாலை!  ரஃம்பப் பழங்காலமா யோசிக்கிறேனோ!!

      நீக்கு
    5. துரை செல்வராஜூ ஸார்...   பதிலிலேயே ரசிக்க வைத்து விடீர்கள்.  மாட்டைக் கூப்பிட்டால் மாதுவின் வளையோசை...   ரசிக்க வைத்து விட்டீர்கள்.

      நீக்கு
    6. சரியான கிராமம் என்றால் எனக்குத் தெரிந்தவரையில் நான் முதல் முதலாக மாட்டு வண்டிப்பாதையில் சென்ற திருவலஞ்சுழி கிராமம் தான். என் கடைசி மாமாவுக்கு அங்கே இருந்த சத்திரத்தில் கல்யாணம். பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய சத்திரம். அவ்வளவு குக்கிராமத்தில் வைத்தும் கல்யாணத்தில் நல்ல கூட்டம். நான் அப்போத் தான் எஸ் எஸ் எல்சி, முடிச்சுச் சில மாதங்கள் என நினைவு. அல்லது அடுத்த வருஷமோ? மதுரையிலிருந்து செங்கோட்டை பாசஞ்சரில் வந்தோமோ? அதுவும் நினைவில்லை. ஆனால் மதுரையிலிருந்து ரயிலில் இரவு முழுவதும் பயணம் செய்து காலை திருவலஞ்சுழி வந்தோம். நடுவில் வந்த பண்டாரவாடை கிராமம் வரும்போது என் மாமா(கடைசி மாமா எங்களுக்குச் சரியாக அரட்டை அடிப்பார்) "எல்லோரும் மூக்கைப் பொத்திக்கோங்க!" என்று சொல்ல விஷயம் புரிந்த மற்ற என் கசின்கள் சிரித்து ஆரவாரம் செய்ய நான் மட்டும் அப்பாவியாய் மூக்கைப் பொத்திக்கொள்ளக் கேலியும் கூச்சலுமாகச் சென்றோம். திருவலஞ்சுழியில் இறங்கி அங்கிருந்து மாட்டு வண்டிப் பயணம். வண்டிப்பாதையின் இரு புறமும் நெருங்கிய வேலிகள். உள்ளே தென்னந்தோப்பு, மாந்தோப்பு, குயில் தோப்பு(ஹாஹா) எனத் தோப்புகளாக இருக்க அதை எல்லாம் ரசித்துக் கொண்டே போனோம். சத்திரத்தில் கழிவறை இல்லாதது வேறே ஒரே ஆச்சரியமாக இருக்க! நாங்கள் இளவயதுப் பெண்கள் திகைத்தோம். பின்னர் அவசரம் அவசரமாக தென்னோலைத் தடுப்புக் கட்டப்பட நாங்கல்லாம் அங்கே காலைக்கடன்களை முடித்துக்கொண்டு இன்னொரு தென்னோலைத் தடுப்பினுள் போய்க் குளித்தோம். மதுரை பெரிய கிராமம் என்றாலும் குளியலறை, கழிவறை வசதி எப்போவோ வந்துவிட்டது என்பார் அப்பா.

      நீக்கு
    7. அப்போத் தெரியாது, இது மாதிரி ஒரு குக்கிராமத்திற்குத் தான் வாழ்க்கைப்பட்டுப் போகப் போகிறோம் என்பது! :))))) சரியாக நான்கு வருடங்களில் கல்யாணம் ஆகிப் புக்ககம் வந்தப்போக் கிட்டத்தட்ட அதே மாதிரிப் பயணம். ஆனால் இம்முறை மூங்கில் பாலம் வேறே இருந்தது. அதை நடந்து கடந்து அக்கரைக்குப் போய் மாட்டு வண்டியில் ஏறினேன்.

      நீக்கு
    8. இப்போதைய கிராமங்களில் நுழையும்போதே தேநீர்க்கடைகள், ஒலிபெருக்கி/இல்லைனால் ரேடியோ எஃப்.எம். மாட்டு வண்டிகளையே பார்க்க முடியாமல் இரு சக்கர வாகனங்கள், (சைகிள்கள் எல்லாம் இல்லை) இரு சக்கர வாகனங்களைப் பழுது பார்க்கும் கடை என ஒரே பரபரப்பும் ஓட்டமுமாக ஆகிவிட்டன.

      நீக்கு
    9. சில கிராமங்களில் ப்ரவுசிங் சென்டர்கள் கூட உள்ளன. அங்கன்வாடியும், மகளிர் சுய் உதவிக்குழுவின் கட்டடமும், சுகாதார நிலையமும், செவிலியரும் இல்லாத கிராமம் இப்போது இல்லை.

      நீக்கு
    10. இலுப்பைத் தோப்புக்குள்ளே நாலு செக்கு.. கர் கர்..ந்னு மரப்பட்டறை.
      .
      ஹையோ!! என்னமான வர்ணனை!

      நீக்கு
    11. கீதா அக்கா...   அந்தக் கால ரயில் பயணம் மனக்காட்சிக்கு வருகிறது.  ஊர் வர்ணனைகளும் சூப்பர்.  நான் மிகக்குறைந்த அளவே பயணங்கள் செய்தவன்.  அப்போது கரி எஞ்சின் ரயிலில் நானும் சென்றிருக்கிறேன்.   அனுபவம் மிகக்குறைவு.

      நீக்கு
    12. //அப்போத் தெரியாது, இது மாதிரி ஒரு குக்கிராமத்திற்குத் தான் வாழ்க்கைப்பட்டுப் போகப் போகிறோம் என்பது!//

      :-) அப்போதெல்லாம் சென்னை தவிர மற்ற எல்லா ஊர்களுமே சின்ன பெரிய கிராமங்கள்தானே!

      //சில கிராமங்களில் ப்ரவுசிங் சென்டர்கள் கூட உள்ளன. //

      ஆம்.  கிராமங்கள் தங்கள் பழமையை இழந்து வருகின்றன.

      நீக்கு
    13. //ஹையோ!! என்னமான வர்ணனை!//

      ஆம்.  அவர் வர்ணனைக்கு சொல்லணுமா என்ன!

      நீக்கு
    14. //கர்..கர்..ந்னு மரப்பட்டறை../மாமனார் வீட்டு வாசல்லேயே பட்டறை போட்டு எதானும் வேலை நடந்து கொண்டே இருக்கும். இரண்டு, மூன்று வண்டிகள் இருந்ததால் வேலைக்குக் குறைவு இருக்காது. ஒரு மாட்டு வண்டி பயணம் செய்ய, ஒரு வண்டி ஆட்கள், நெல், பயறு, உளுந்து, காய்கள், எனச் சாமான்கள் கொண்டு வர, ஒரு மொட்டை வண்டி தேங்காய்கள் பறித்துக் காணத்துக்காகக் கொண்டு வர. அதைத் தவிரவும் ஏர்க் கலப்பை, கொழு, (புரியுதோ?) மாடுகளைப் பூட்டுவதற்கான சாதனங்கள் என எல்லாமும் இருக்கும். வீட்டில் தான் வாசலில் ஆசாரி உட்கார்ந்து எல்லாவற்றையும் செப்பனிடுவார். தஞ்சை பாஷையில் "ஒக்க"ப்பண்ணுவார். :))))))

      நீக்கு
    15. //மற்ற எல்லா ஊர்களுமே சின்ன பெரிய கிராமங்கள்தானே!// - கீசா மேடம் இதைக் கவனிக்கலையே...அதுனால ஸ்ரீராம் தப்பிச்சுட்டார்.

      மதுரை டி.வி.எஸ். மறந்துடுச்சா? தமிழக நடுவில் உள்ள திருச்சியும் கிராமமாயிடுச்சா?

      சென்னையிலேயே, பாதிப் பகுதி 70கள்ல ரெடி பண்ணினவைதாமே. தியாகராய நகர் தனி, மாம்பலம் தனி, மைலாப்பூர் தனி, அடையாறு காடு. ஏவிஎம் ஸ்டூடியோவுக்கு அடுத்து அங்க வேறு எதுவும் கிடையாத காடு. இப்படி கிராமமும், பேட்டைகளும் ஏரியுமாக இருந்த இடத்தை, 'ஜிட்டி/City'ன்னு சொல்றாரே ஸ்ரீராம்...

      நீக்கு
  9. "மனிதன் மாறவில்லை" என்னும் பாடல் ஒன்று உண்டோ? அல்லது படத்தின் பெயர் தானா? நினைவில் இல்லை. ஆனாலும் இந்தப் பாடல், படம் இரண்டுமே புதுசு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாவமன்னிப்பு படப்பாடலான 'மனிதன் மாறிவிட்டான்'தான் சட்டென நினைவுக்குவ வருகிறது!  அப்புறம் கொஞ்ச நேரம் யோசித்த பின்தான் 'மனிதன் மாறவில்லை' பாடல் நினைவுக்கு வருகிறது!

      நீக்கு
    2. தெரியலை ஶ்ரீராம் எனக்கும். என்னதான் படங்கள் பார்த்திருந்தாலும் எல்லாமும் நினைவில் இருப்பதில்லை. அதே போல் புகழ் பெற்ற நடிக, நடிகையர் தவிர்த்து மற்றவர்களை அடையாளம் காண்பதும் கஷ்டம். பாடல்களையோ, படங்களையோ நீங்கள் ஆராயும் அளவுக்கெல்லாம் விசாலமான அறிவும் இல்லை! :)))) சில குறிப்பிட்ட படங்கள் தவிர்த்து மற்றவை பொழுதுபோக்காகப் பார்த்தவை தான். ஆகவே மனதில் நிற்காது.

      நீக்கு
    3. என் நினைவிலும் பாடல்கள்தான் இருக்கும் கீதா அக்கா.  மற்ற விவரங்கள் அவ்வ்ப்போது தேடி எடுப்பவைதான்!

      நீக்கு
  10. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  11. வணக்கம் சகோதரரே

    அருமையான பதிவும், பாடலும். இந்தப்பாடல் அடிக்கடி கேட்டுள்ளேன். நன்றாக இருக்கும். படமும் தொலைக்காட்சியில் பார்த்திருக்கலாம். நினைவிலில்லை. ஆரம்ப காட்சியை பார்க்க ஆரம்பித்தால் நினைவுக்கு வரும். அப்போதுள்ள படங்கள், அநேகமாக குடும்பத்திற்கு முக்கியத்துவம் தந்துதான் எடுக்கப்பட்டு வெளிவரும். மக்களின் மனோபாவங்களும் அதற்கு ஒத்துழைப்பு தரும். காலங்கள் மாறும் போது, மனிதர்கள் மாறி விட்டனரா? மனிதர்களின் விருப்பத்தை உணர்ந்து காலம் அனுசரிக்கிறதா? தெரியவில்லை. ஆனாலும் உலகம், அதைச்சார்ந்த இயற்கைச் செயல்கள் என்னவோ தன் இயல்புபடி இயங்கி கொண்டுள்ளது.

    பாடல் பகிர்வுக்கும், முதலில் எழுதிய பதிவின் சிந்தனை அலசலுக்கும், நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உலகம் இயற்கையை மீறி மாறி விட்டது.  ஏகப்பட்ட தொழில்  நுட்பங்கள்.  நாம் நம் அபிமான கிராம வடிவங்களை இது போல திரைப்படங்களில் பார்த்துக் கொண்டால்தான் உண்டு.  அல்லது இப்படி இருந்தால்தான் கிராமம் என்று நாமும் அந்தக் காட்சிகளை பார்த்துதான் ஒரு வடிவத்தைக் கட்டமைத்துக் கொண்டிருக்கிறோம்!

      நன்றி கமலா அக்கா.

      நீக்கு
  12. இன்றைய தலைமுறைக்கு அனுபவித்த சுகம் கிடையாது ஆகவே இழப்பு இல்லை.

    ஆனால் நமக்கு ?

    இரண்டையும் அனுபவிக்கும் நிலைப்பாடு.

    இது வரமா ? சாபமா ?

    அருமையான பாடல் அடிக்கடி கேட்டதுண்டு இலங்கை வானொலியில்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நம்மை மாதிரி ஆட்கள்தான் ஃபீல் செய்கிறோம்!  உண்மை கில்லர்ஜி!  நன்றி.

      வரமா?  சாபமா?

      விதி!

      நீக்கு
  13. பின்னூட்டங்களில் மற்றவர்கள் சொல்லாத புதுச்செய்தி எதையாவது
    பதிவைத் தொட்டுச் சொல்லி அந்தச் செய்தியை மேலெடுத்துச் செல்ல வேண்டும் என்ற எண்ணம் எனக்குண்டு. சொல்லப்போனால் என்னைப் பொறுத்த மட்டில் பின்னூட்டம் போடுவதற்கு உருப்படியான அர்த்தமே அது தான்.
    அந்த மேலெடுத்துச் செல்லும் பணி சிறப்பாக நடந்தால் பதிவுகளின் சிறப்பும், பின்னூட்டங்களின் அர்த்த பூர்வமான செழுமையும் கூடும் என்பது
    திண்ணம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜீவி ஸார்...   இந்தப் பதிவில் அப்படி தொட்டு எடுத்துச் செல்ல எதுவும் கிடைக்கவில்லை என்கிறீர்களா?

      நீக்கு
    2. வாசிப்பவரின் அனுபவங்களுக்கு ஏற்ப எந்தப் பதிவிலும் அது உண்டு. சென்ற கால பதிவுகளின் பின்னூட்டங்களின் பெருமை அது. இழந்த அந்தப் பெருமைகளை மீட்டெடுப்பதற்காகவே இந்த அம்சத்தை குறிப்பிட்டுச் சொல்ல நேரிட்டது.

      நீக்கு
    3. உதாரணமாக சென்ற பதிவில் நாடி ஜோதிடத்தின் அடிப்படை அம்சங்களைப் பற்திப் பேசியிருக்கலாம். போகட்டும்.
      இந்தப் பதிவிலும்----

      நீக்கு
    4. இந்தப் பதிவில் எடுத்தாண்டிருக்கிற 'காதல் யாத்திரைக்கு பிருந்தாவனமும்' பாடலின் அச்சு அசலான இன்னொரு பாடல் 'பிருந்தாவனமும் நந்தகுமாரனும்'.

      ஒரு வேடிக்கை என்னவென்றால் மேற்சொன்ன இரண்டு பாடல்களையும் இயற்றியவர் பெருமைக்குரிய தஞ்சை ராமையா தாஸ் அவர்கள் தான்.

      இரண்டு பாடல்களிலும் பி.சுசீலா அவர்களின் இனிமைக்குரல் ரீங்கரிக்கிறது.
      ஆண் குரல் மட்டும் வெவ்வேறு நபர்களது. பிருந்தாவனமும்-- பாடலில் ஏ.எம். ராஜா என்றால், காதல் யாத்திரைக்கு பாடலில் ஏ.எச். ராகவன்.

      பிருந்தாவனமும் பாடலுக்கு இசை அமைப்பு ராஜேஸ்வர ராவ் என்றால் காதல் யாத்திரைக்கு கண்டசாலா.

      பிருந்தாவனமும் பாடல் மிஸ்ஸியம்மா திரைப்படத்தில், காதல் யாத்திரை பாடல்
      மனிதன் மாறவில்லை படத்தில்.

      மிஸ்ஸியம்மா படம் 1955-ல் வெளிவந்தது என்றால் மனிதன் மாறவில்லை படம் 1962-ல்.

      சொல்லப்போனால் 'பிருந்தாவனமுன் நந்தக்குமாரனும்' பாடலின் விரிவு போலவே தஞ்சை ராமையாதாஸ் 'காதல் யாத்திரைக்கு' பாடலை எழுதியிருப்பார்.

      மிஸ்ஸியம்மா, மனிதன் மாறவில்லை இரண்டு படங்களுக்கும் தாயாரிப்பாளர்கள் இந்த இருவர்கள் தாம். நாகிரெட்டியும், அலுரி சக்ரபாணி.

      வேறு சில ஒற்றுமைகளும் உண்டு. மற்றவர்கள் தங்கள் கருத்துக்களைப் பதிவதற்காக அவற்றை விட்டு வைத்திருக்கிறேன்.

      நீக்கு
    5. * ஏ.எல். ராகவன்

      ** நாகிரெட்டியும் அலுரி சக்ரபாணியும்

      நீக்கு
    6. ஆம்.  நீங்கள் சொன்ன பிறகு இரண்டு பாடல்களும் ஒத்து வருவதைப் பார்த்தேன் ஜீவி ஸார்.  நான் நடிகை, நடிகையர் விஷயத்தை மட்டும் சொல்லி இருந்தேன்!

      நீக்கு
  14. இழந்திருக்கிறோமா அல்லது பெற்றிருக்கிறோமா? நல்ல கேள்வி! சாலமன் பாப்பையா பட்டிமன்ற தலைப்பு போல!

    பாடல் கேட்டதாகத் தெரியவில்லை.

    பதிலளிநீக்கு
  15. இந்த பாடலை கேட்ட மாதிரி இருக்கிறது. ஆனால் பாடலுக்கான லிங்க் எதுவும் கண்களில்  படவில்லையே..??!!  எனக்கு மட்டும்தானா??

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ப்ருந்தாவனமும் நந்தகுமாரனும் பாடலின் ராகத்தின் சாயல் நிறைய இருப்பதால் கேட்ட மாதிரித் தோன்றுகிறது. எனக்கெல்லாம் இந்தப் பாடலே/இந்தப் படமே இப்போத் தான் தெரியும்.

      நீக்கு
    2. காணொளி தெரியவில்லையா?  இதுவரை யாரும் ஒன்றும் சொல்லவில்லையே...

      நீக்கு
  16. காஷ்மீரெல்லாம் ஏனோ ...?
    பழைய சாஸ்திரம் பேசவே...
    உலகமே சொர்க்கம் ஆகாதா...?

    அர்த்தம் உள்ள வரிகள்...

    தஞ்சை ராமையாதாஸ் அவர்களின் தொகுப்பை அறிந்து தெரிந்தால்...

    புரியலாம்... !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லா தரப்பினரையும் திருப்பதி படுத்த வேண்டுமல்லவா...  நன்றி DD.

      நீக்கு
  17. என் சிறு வயதில் திருச்சி கூட பெரிய கிராமம்தான். காவேரி பாலத்தை  கடந்து விட்டால் ஒரே தோப்பும், வயல்களும்தான் கண்ணில் படும்.  ஏன் ஊரின் மத்தியில் இருந்த  உறையூர்  மேட்டின் ஒரு புறம் வயல், மறு புறம் கோட்டை ஸ்டேஷன், அதற்கு செல்லும் வழியில் நரிக்குறவர்கள் குடிசைகள். இரவில் அவர்கள் சமைப்பதற்காக மூட்டும் அடுப்பின் ஜொலிப்பு  தெரியும். இருட்டிய பிறகு அந்தப் பக்கம் செல்ல பயப்படுவார்கள். பின்னால் அவர்கள்  எங்கே சென்றார்கள் என்று தெரியவில்லை.  வலது புற வயலில்  மாரீஸ் தியேட்டர் காம்ப்ளெக்ஸ் வந்தது. தில்லை நகர் எக்ஸ்டென்ஷன் கிடையாது.  வயக்காடுதான். 
    கீதா அக்காவின் குடியிருப்பெல்லாம் தென்னந்தோப்புகளாக இருந்த காலத்தில் நாங்கள்," கிராமத்தின் அழகும், நகரத்தின் வசதியும்  ஒருங்கே சேர்ந்து இருக்கும் இந்த ஊர் போன்ற ஊரில்தான் இருக்க வேண்டும் என்று பேசிக் கொள்வோம். 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹா, இப்போவும் எங்களை என்ன இருக்குனு ஶ்ரீரங்கத்தில் போய் உட்கார்ந்திருக்கீங்கனு கேட்கும் உறவினர் உண்டு. அந்த ஊரில் ஒரு நல்ல பள்ளி உண்டா? மருத்துவமனை உண்டா? என்றெல்லாம் கேட்பார்கள். ஒரு காலத்தில்/இல்லை, இல்லை, இப்போவும் கல்விக்கும், மருத்துவத்துக்கும் இங்கே முதல் இடம் என்பது அவங்களுக்குத் தெரியலை! :))))) பல சிக்கலான அறுவை சிகிச்சைகள் இங்கே உள்ள காவேரி மருத்துவமனையில் நடந்திருக்கு.

      நீக்கு
    2. //என் சிறு வயதில்... வயக்காடு தான்..//

      பா.வெ! ஒரு சிறுகதையின் ஆரம்பம் போலவான உணர்வு வாசிக்கையில் எனக்கு ஏற்பட்டது. மனக்கண்ணில் காட்சியாய் விரியும் அற்புதமான வர்ணிப்பு!!

      நீக்கு
    3. வாங்க பானு அக்கா...   உங்கள் கமெண்ட் ஏற்கெனவே பாராட்டைப் பெற்றிருக்கிறது!

      நீக்கு
    4. நாங்க (மதுரைப்பக்கம்) வயக்காடுன்னா புஞ்சை நிலங்கள் பானுமதி! இன்னும் சொல்லப் போனால் பெரும்பாலும் காடு என்றே சொல்லிப் பழக்கம். கல்யாணம் ஆகி வந்தப்போ நான் மதுரைப்பக்கம் 3 போகமும் அரிசி போடுவார்கள் என்றதும் மாமனார் மற்றும் எல்லோருக்கும் சிரிப்பு! அப்போப் பயறு, உளுந்து எங்கே போடுவாங்க என்று கேலி செய்ய நான் சளைக்காமல், "அதெல்லாம் காட்டில் விளையும்!" என்று சொல்ல மறுபடி ஒரே சிரிப்பு. காடு எனில் அவங்க நினைச்சது உண்மையான காடு! பின்னர் எங்க வீட்டுப்பெரியவங்க சொன்னதும் தான் புரிந்து கொண்டனர். அதுவரை என்னைக் கேலி செய்து கொண்டே இருப்பார்கள். 3 போகம் நெல் விளையுதாம் அவங்க ஊரிலே என்பாங்க. பார்க்கப் போனால் சின்னமனூர் அருகே உள்ள மார்க்கையங்கோட்டை என்னும் கிராமம் அந்தக் கால கட்டத்தில் ஆசியாவின் அதிக நெல் விளைவிக்கும் பகுதியாகவும் சிறப்பான நெல் என்னும் முத்திரையும் வாங்கிக் கொண்டு இருந்தது.

      நீக்கு
    5. காடு, கழனி உண்டா என்றே அந்தக் காலப் பெரியவர்கள் கேட்பார்கள்! காடு எனில் புஞ்சை நில்ம், கழனி நஞ்சை நிலம்.

      நீக்கு
    6. அவர்கள் அவர்கள் ஊர் வழக்கப்படி புரிந்து கொண்டிருக்கிறார்கள் என்று கூட நாம் அறிந்திருக்க மாட்டோம்.  அப்புறம் உங்கள் வீட்டில் சொன்னதும் புரிந்து கொண்டார்களே...

      நீக்கு
  18. எங்கள் ஊரில் ஒரு தெருவையே கிராமம் என்கிறார்கள்

    பதிலளிநீக்கு
  19. அழகிய பாட்டு ரேடியோவில் பலமுறை கேட்டிருக்கிறேன்.

    எதுவும் சொல்வது சுலபம் ஸ்ரீராம், பார்க்க இனிமையாக நன்றாகத்தான் இருக்கிறது, ஆனா நம்மால் வயலில் இறங்கி உழ முடியுமோ? கால் புதைஞ்சிட்டாலே அப்படியே சேற்றில் மூழ்கிட மாட்டோம்? அந்த வெயில் சுட்டால் மயங்கி விழுந்திட மாட்டோம்.. ஹா ஹா ஹா அதனால அது அபடியே அந்த வாழ்க்கையில் இருந்து வந்தால் மட்டுமே அது சாத்தியம், நம் உடம்பு சொகுசு வாழ்க்கைக்குப் பழக்கப்பட்டு விட்டது:(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அதிரா...   உங்கள் பெயரின் முன்னுள்ள பட்டம் என்ன சொல்ல வருகிறது என்று புரியவில்லை!!

      வயலில் இறங்கி வேலை பார்த்தால்தானா?  வேறு வேலைகளும் செய்யலாமே...

      நீக்கு
    2. லாமே ஸ்ரீராம் லாமே.. கிணற்றில் நீர் அள்ளிப்போய் ஊற்றலாமே... கிராமம் என்றாலே நினைவுக்கு வருவது ஒன்று விவசாயம் மற்றொன்று தறி...

      பெயரா ஹா ஹா ஹா.. இது தன்னியங்கி அதிராவாக்கும்:))...

      நெல்லைத்தமிழன் அண்ணனைக்:) காணவில்லையே எனத் தேடினேன் இருக்கிறார் மேலே...

      நீக்கு
    3. ஓ...  நான் நினைத்ததுதானா?  நெல்லை காலையிலேயே விசிட் செய்து விட்டுச் சென்று விட்டார்.  மின்நிலா பொங்கல் மலருக்கு ஒரு கட்டுரை தயார் செய்து கொண்டிருக்கிறார்!

      நீக்கு
    4. ஆஹா தீபாவளிக்குத் தப்பி ஓடியவர் பொங்கலில் மாட்டிக் கொண்டாரோ ஹா ஹா ஹா நல்ல விசயம்தானே நாளிருக்கிறது அவசரப்படாமல் அழகாக எழுதி முடிப்பாருக்கும்.

      ஆவ்வ்வ் இன்று என் செக் இல்லை என கெள அண்ணன் களம் இறங்கிட்டாரே:)) ஹா ஹா ஹா.. கரீட்டு கெள அண்ணன்:))

      நீக்கு
    5. பொங்கல் மலருக்கு உங்கள் பங்கு ஏதும் உண்டா அதிரா?

      நீக்கு
    6. என்ன பண்ணோனும் ஸ்ரீராம்... முடிஞ்சால் ஏதும் செய்கிறேனே.. ஆனாலும் நீங்க எப்பூடி அஞ்சுவை தப்பி ஓட விட்டிட்டு என் வாலைப் பிடிச்சிட்டீங்க:)).. அஞ்சு கமோன்ன்ன்ன்... ஒரு கதை எழுதுங்கோ ஜொள்ளிட்டேன்ன்ன்ன்ன்:)..

      நீக்கு
    7. என்ன வேணும்னாலும் அதிரா...  சமையல் குறிப்பு, கட்டுரை, கதை...    உங்கள் விருப்பம்.  இந்த மாதம் முப்பத்தொன்றாம் தேதிக்குள் அனுப்பினால் போதும்!

      நீக்கு
    8. ஓ அப்படியோ, சரி இம்முறை முயற்சிக்கப்போகிறேன் நெடுகவும் தப்பி ஓட முடியாதெல்லோ.. இனிக் ஹொலிடே என்பதால் நேரம் கிடைக்கும்... ஒன்றும் முடியாதுபோனால் சமையல் குறிப்பு அனுப்புகிறேன்:))

      நீக்கு
    9. //அஞ்சுவை தப்பி ஓட விட்டிட்டு என் வாலைப் பிடிச்சிட்டீங்க:)).. அஞ்சு கமோன்ன்ன்ன்... ஒரு கதை எழுதுங்கோ ஜொள்ளிட்டேன்ன்ன்ன்ன்:).//

      ஹையோ ஹாயையோ இது கூட தெரில குண்டு பூனைக்கு :) உங்க வெயிட்டுக்கு ஓடிஏ முடில உருண்டுபோனதால் மாட்டியிட்டீங்க நான் குட்டி சுண்டெலி ஓடிட்டேனாக்கும் 

      நீக்கு
    10. நன்றி அதிரா...   எழுதி அனுப்புங்கள்.

      நீக்கு
  20. ஆஹா! என்ன அருமையான பாடலைத் தந்திருக்கிறீர்கள். இப்போதுதான் பார்க்கிறேன். ஏ எல் ராகவன், பி சுசீலா, கண்டசாலா. தஞ்சை ராமையாதாஸின் வரிகள் படுசுகம்..
    வெகுநாட்களுக்குப் பின் இந்தப் பாடலை நினைவில் கொண்டுவந்ததற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  21. ஆஹா !! பாட்டு சூப்பரா இருக்கே இசையும் குரலும் காட்சியும் எல்லாம் அருமை 

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!