புதன், 30 டிசம்பர், 2020

உங்களுக்கு பிடித்த ராகம் எது? ஏன்?

 


பானுமதி வெங்கடேஸ்வரன்: 

> உங்களுக்கு பிடித்த ராகம் எது? ஏன்?

# மோகனம், ஆரபி, பேகடா, காம்போதி, ஹமீர் கல்யாணி, ரசிகப்ரியா இன்னும் பல. எதானாலும் (பஜ்ஜி, பாகற்காய் கறி உட்பட) ஏன் பிடிக்கிறது என்பதற்கு பதில் தர இயலாது.  காரணம் பதில் தெரியாது.

& ரஞ்சனி ராகம். லயித்துக் கேட்கும்போது ஏதோ வேறு உலகத்திற்கு அழைத்துச் சென்றுவிடும். 

> வாய்ப்பாட்டை விட வாத்திய இசையை ரசிப்பதற்கு நுட்பமான ரசனைவேண்டும் என்று தி.ஜானகிராமன் சொன்னதை ஒப்புக் கொள்கிறீர்களா?

# ஜானகிராமன் சொன்னாரா என்று தெரியவில்லை.  நான் ஒப்புக் கொள்ள மாட்டேன்.  அவர் என்ன சொன்னாலும் ஒப்புக்கொண்டாக வேண்டும் என்ற கட்டாயம் இல்லை அல்லவா ! சாகித்தியம் புரிவது மாதிரி வாசிப்பது பெரிய சாமர்த்தியம்.  ஆனால் அதை ரசிக்க சாகித்தியம் தெரிந்திருக்க வேண்டும்.

& வாய்ப்பாட்டில் என்ன க்ருதி என்பதை உரித்துப் பார்த்துக் கண்டுபிடிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் வாத்திய இசையில் - வாசிப்பவர் 'நாத தனுமநிஷம்' வாசிக்கிறாரா அல்லது பி யூ சின்னப்பாவின் 'காதல் கனிரசமே' வாசிக்கிறாரா என்று கண்டுபிடிக்க நுட்பமான ரசனை வேண்டும் - என்று சொல்லியிருப்பாரோ ? 

>  இவற்றில் எந்த வாத்திய இசை பிடிக்கும்?
a. நாதஸ்வரம்
b. வீணை
c. வயலின்
d. புல்லாங்குழல்
e. கிடார்
f. மாண்டலின்
g. கீ போர்ட்

# வயலின், வீணை, புல்லாங்குழல், நாதஸ்வரம்.

& இவற்றில் மட்டும் என்றால், புல்லாங்குழல், வயலின், மாண்டலின். 

> சஞ்சய் சுப்பிரமணியம் நல்ல வித்வத் உள்ளவர்தான். அவருடைய ஸ்வர ப்ரஸ்தாரங்கள் மெச்சத் தகுந்ததுதான், இருந்தாலும் "துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ இன்பம் சேர்க்க மாட்டாயா?" பாடலுக்கு ஸ்வரம் பாடுவது அந்தப் பாடலின் மூடை கெடுத்து விடவில்லையா?

$  'ஓர் இரவு' படப்  பாடலாக நினைத்துக் கேட்பவர்கள், சஞ்சய் சுப்ரமணியம்
"கண்ணே கண்ணே என்று என்.."  வசனத்தையும் கூட எதிர் பார்ப்பார்களோ!
பாரதிதாசனின் பாடலை ஸ்வரங்களுடன் அமைத்துப் பாடுகிறார் என்று கொள்ளலாமன்றோ?


# ஸ்வரம் பாடுவது பாடலின் மூடைக் கெடுக்கும் என்று தோன்றவில்லை.

& பல வருடங்களுக்கு முன்பு - சென்னை தமிழ் இசை சங்க கச்சேரி - ரேடியோவில் கேட்டேன் - மதுரை மணி ஐயர் பாடினார். 'மாலே மணிவண்ணா' திருப்பாவை பாடி, கடைசியில் அதற்கு ஸ்வரமும் பாடினார். ரசிகர்கள் கைதட்டி ரசித்தார்கள். இசை ரசிகர்களுக்கு எல்லாமே தெவிட்டா தேன்தான். 

> பொதுவாழ்க்கையில் இருக்கும் ஒருவரை நாடு கடத்தும் உரிமை உங்களுக்கு வழங்கப்பட்டால் யாரை நாடு கடத்த உத்தரவிடுவீர்கள்?

# நிறையப் பேர் இருக்கிறார்கள்.  குறிப்பிடுவதில் தர்ம சங்கடங்கள் உண்டென்பது புரியும் தானே !

& Mr. Corona. 

> நித்தியானந்தா உங்களுக்கு கைலாசம் செல்ல பாஸ்போர்ட்டும், சார்ட்டர்ட் விமானமும் அனுப்பினால் என்ன செய்வீர்கள்?

#  ரிடர்ன் டிக்கெட் ஆனாலும் போகமாட்டேன்.  இகலோகத்தில் நிறைய அடைக்கக் கடனும் அனுபவக்கக் கொடைகளும்  பாக்கி இருக்கிறதே.

& பாஸ்போர்ட்டைக் கிழித்து எறிந்துவிட்டு, சார்ட்டர்ட் விமானத்தை விற்று, பணத்தை சுவிஸ் பாங்கில் போட்டுவிடுவேன். 

நெல்லைத்தமிழன்: 

? ரோட்டுக் கடைகளில் போடும் பஜ்ஜிகள்போல ஏன் வீட்டில் வருவதில்லை?

# அதானே !! நாம சோடாப்பு (பொட்டு/பட்டாணி)க் கடல மாவெல்லாம் போடறதில்லை என்பதால் இருக்குமோ ?

& ரோடு கடைகளில் பஜ்ஜி - நாம் நடந்து செல்லும்போது திடீர் என்று முடிவெடுத்து - பஜ்ஜி ஆசை வந்த ஒரு நிமிடத்திற்குள் வாங்கி சுடச்சுட சுவைத்துவிடுகிறோம். ஆசை தோன்றிய உடனேயே கிடைத்துவிட்டதால் திருப்தி, சந்தோஷம். 
வீட்டில் - பஜ்ஜி தயாரிப்பது என்று முடிவு செய்தால், அதற்கான பொருட்களை வாங்கி வந்து, சரியான விகிதத்தில் கலந்து, உப்பு உறைப்பு எல்லாம் சரியாக அமைந்து - பஜ்ஜிகள் சரியான பதத்தில்  வெந்து - அவற்றை சுவைப்பதற்குள் பஜ்ஜி ஆசை போய்விடும் - பொருட்களிலோ அல்லது தயாரிக்கும் முறைகளிலோ எங்கேனும் தரம் இல்லை என்றால் end product சரியாக அமையாது. Murphy Law படி அப்படி அமையாமல் போவதற்கே சந்தர்ப்பங்கள் அதிகம்! 

நிற்க - சென்ற திங்கட்கிழமை தேடிக் கிடைக்காத பஜ்ஜி போட்டோ இதோ இங்கே : 


>>> சென்ற வாரப் பதிவில் கேட்கப்பட்ட கீ சா + நெ த கேள்விகளுக்கு அடுத்த புதன்கிழமை பதில் அளிப்போம். 

= = = = 

சென்ற வாரக் கேள்விகளை வேண்டும் என்றேதான் கணக்கு, சரித்திரம், பூகோளம் என்று பல பிரிவிலிருந்து தேர்ந்தெடுத்துக் கேட்டிருந்தேன். 
நான் எதிர்பார்த்தது போலவே கணக்கு கேள்விக்கு பதில் அளித்தவர்கள் மிகவும் குறைவு.

கணக்கு கேள்விக்கு முதலில் விடை அளித்த பானுமதி அவர்கள் x, y வேல்யூ சரியாக கண்டுபிடித்திருந்தாலும், 2 x y என்ற கேள்விப் பகுதியை கவனிக்கத் தவறிவிட்டார். அவருக்கு ஆறுதல் பரிசாக ஆலயமணி படத்தில் அபிநய சரஸ்வதி பயன்படுத்திய சோப்புப் பெட்டி பரிசு. 



வாழைப்பழக் கேள்விக்குத்தான் அதிக response வரும் என்று எதிர்பார்த்தேன் - அதுவும் சரியே! 

கேள்விகளுக்கு அதிகபட்ச சரியான விடைகள் பதிந்தவர் : 

Jayakumar Chandrasekaran 
கேள்விகளுக்கு விடை:

1. 2XY = 12.
2. புலிகேசியை வென்றவன் நரசிம்ம பல்லவன். சிவகாமியின் சபதம்.

3. கூகிள் (ஆண்டவர் சரணம்) சொன்னது SACCHARUM OFFICINARUM. எனக்கு லத்தீன் எல்லாம் தெரியாது.

4. How many elder brothers and sisters do you have? இது சரியில்லை என்றாலும் பரவாயில்லை. (உயிருடன் இருப்பவர்கள் மட்டுமே கணக்கில் எடுக்கப்படும்)

5. தோலிருக்க சுளை முழுங்கி. பழத்தின் நீளவாக்கில் கீறி பழத்தை முழுதாக எடுத்து சாப்பிடுவது. நேந்திரன் பழங்களுக்கு இது பொருந்தும்.

Jayakumar

வாழைப்பழ கேள்விக்கு எங்கள் மனோ தத்துவ நிபுணர் சொன்ன பலன்கள் :

'ஆ' பகுதியிலிருந்து பழத்தை உரிப்பவர்கள் படைப்பாற்றல் மிக்கவர், சிக்கனமானவர்.  
தோலிருக்க சுளை விழுங்கி என்ற வகையில் உரிப்பவர்கள் practical ஆசாமிகள், நகைச்சுவை உணர்வு அதிகம் கொண்டவர்கள். வேடிக்கைக்காக அல்லது விளையாட்டாக இவர் சொல்லும் சொற்களும் அல்லது செயல்களும் பலசமயங்களில் மற்றவரைப் புண்படுத்தும். ஆனாலும் இவர்கள் உள்நோக்கம் கொண்டு எதையும் செய்பவர்கள் அல்ல. 

இந்த வாரக் கேள்வி : 

2021 ஆம் ஆண்டு எப்படி எல்லாம் இருந்தால் நல்லது என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? 

= = = = 
மீண்டும் அடுத்த வருடம் சந்திப்போம்!
= = = = 

  

55 கருத்துகள்:

  1. அனைவருக்கும் அன்பின் வணக்கம்..
    என்றென்றும் நலம் வாழ்க...

    பதிலளிநீக்கு
  2. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
    நாளை பிறக்கப் போகும் புது வருடம்
    அனைவருக்கும் நன்மைகளை அள்ளித் தரவேண்டும். ஆரோக்கியம் பெருக வேண்டும்.
    அன்பு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  3. சுவையான கேள்விகள் பதில்கள்.மிகவும் ரசிக்கும்
    வண்ணம் இருக்கின்றன.
    பஜ்ஜி சூப்பர். மைலாப்பூர் மாட வீதி பஜ்ஜி மிக சுவையாக இருக்கும். அதுவும் மார்கழி
    வாடைக் காற்றுக்கு அந்த ச்சூடும் சுவையும் அமிர்தம்:)
    55 வயதுக்கு மேல் வயிறு ஒத்துக் கொள்ளாது.

    பதிலளிநீக்கு
  4. 2021 ஆம் ஆண்டில்
    எதிர்பார்ப்பது நோயிலிருந்து உலகம் விடுபட.
    ஐந்தாவது தடுப்பூசியும் வரப்போகும் நிலையில்

    அனைவரும் பாதுகாப்புடன் இருந்து நலம் பெற வேண்டும்.

    பதிலளிநீக்கு
  5. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். வரும் 2021 ஆம் ஆண்டில் இருந்து தொற்று முழுதும் விலகி எங்கும் ஆரோக்கியமான, மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவப் பிரார்த்திப்போம்.

    பதிலளிநீக்கு
  6. நாடு கடத்தும் நபராகக் "கொரோனா"வைத் தேர்ந்தெடுத்த கௌதமன் சாருக்குப் பாராட்டுகள், வாழ்த்துகள், நன்றி. பஜ்ஜிகள் படத்துக்கும் நன்றி. பின்னர் வரேன்.

    பதிலளிநீக்கு
  7. பதில்களை பாராட்டியமைக்கு நன்றி. 

    பதிலளிநீக்கு
  8. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  9. புத்தாண்டில் அனைவரும், பயப்படாமல் நிறைய பஜ்ஜி, பக்கோடா சாப்பிட்டு மகிழ்வோமாக ! இல்லை, ஸ்வீட்டுதான் வேணுமெனில் அவற்றையும் வரிசையாக வாங்கி உள்ளே தள்ளுக. நம் வாய்க்குள் போகாத பஜ்ஜி, பக்கோடா, ஸ்வீட்டுகள் வாழ்ந்து என்ன பிரயோஜனம் !

    பதிலளிநீக்கு
  10. கேள்வி பதில்கள் ரசித்தேன்.

    பொது வாழ்க்கையில் நாடு கடத்துவது - இரண்டாவது பதில் சுயநலமா இருக்கு. மத்த தேசங்கள் எக்கேடு கெட்டால் என்ன, நாம தப்பித்துவிடுவோம் என்பதுபோல

    பதிலளிநீக்கு
  11. பாடகரின் திறமையையும் இராகங்களை கையாள்வதையும் ரசிக்கவே கச்சேரிக்குப் போகிறோம். அதில் நமக்குத் தெரிந்த கீர்த்தனை என்றால் கூடுதல் மகிழ்ச்சி.

    ஸ்வரத்துக்கும் பாடலின் மூடுக்கும் சம்பந்தம் உருவாக்கக்கூடாது.

    அடுத்தது, பாடகர் "துன்பம் நேர்கையில் யாழெடுத்து", "தண்ணீர் விட்டோ வளர்த்தோம் சர்வேசா" போன்ற பாடல்களை நெக்குருகி பாடுகிறார், ஆனால் பெண்மணிகள் மேக்கப்பும் பட்டுப்புடவையும் நகைகளுமா பல்லைக் காட்டிக்கொண்டிருப்பது பாடகரை அவமதிப்பதுபோல் இல்லையோ என்ற கேள்வியும் எழுப்புவாங்களோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் எஸ்கேப் - உங்களுக்கு பதில், பா வெ வந்து சொல்லட்டும்!!

      நீக்கு
  12. வெங்காய பஜ்ஜிகள் படம் அழகு.

    டெலிவரி சார்ஜ், வாங்கினா அரைக்கிலோ வாங்கணும் என்பதால் நேற்று ஆர்டர் செய்யவில்லை.

    பதிலளிநீக்கு
  13. 2021 எப்படியெல்லாம் இருந்தால் நல்லது? - எப்படி இருந்தாலும் அதுவும் புது அனுபவத்தைத்தானே கொடுக்கும்.

    இணையத்தால் நெருங்கியவர்களுக்கு பெர்சனல் டிராஜடிகள் இல்லாமல் ஓரளவு சந்தோஷமாக வைத்திருந்தாலே போதும்.

    பதிலளிநீக்கு
  14. அருமையான கேள்விகள், ரசிக்கும்படியான பதில்கள்.

    பதிலளிநீக்கு
  15. பஜ்ஜிகள் எண்ணெய் குடிக்காமல் உப்பலாக வட்டமாக வந்திருக்கின்றன. தேர்ந்த கை செய்த வேலை எனத் தெரிகிறது. :)))))

    பதிலளிநீக்கு
  16. 1.ரஜினிகாந்த் அரசியலில் இருந்து விலகுவது குறித்து இத்தனை வாத, விவாதம் தேவையா?
    2.அவர் வந்துவிட்டால் எல்லாவற்றையும் மாற்றிவிட்டுப் பாலும், தேனுமாக ஓட விட்டிருப்பாரா?
    3. நம் மக்களால் ஏன் திரைப்பட நடிகர்களால் தான் நல்லாட்சி தர முடியும் என்பதைத் தாண்டி சிந்திக்க முடியவில்லை?
    4.உங்களுக்குப் பிடிக்காத விளம்பரம் எது? ஏன்?
    5.விளம்பரங்களில் ஜாதியை/அதிலும் குறிப்பிட்ட ஜாதியைச் சுட்டிக்காட்டி அவங்க கூட எங்க பொருட்களை வாங்கறாங்க என விளம்பரப் படுத்துவதால் என்ன லாபம்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //மாற்றிவிட்டுப் பாலும், தேனுமாக ஓட விட்டிருப்பாரா?// - இறைவா... என்னை ஏன் இந்த மாதிரி லைனைப் பார்க்க வைக்கிறாய்?

      பாலாறும் தேனாறும் ஓடுதுன்னு வச்சிக்கோங்க. அது நல்லாவா இருக்கும்?

      சின்ன வயசுல, பாற்கடலில் பெருமாள் பள்ளிகொண்டிருப்பார் என்பதை நான், என்ன போயும் போயும் பாற்கடல்... திருக்கண்ணமுது கடலில் படுத்திருந்தால் ஆகாதோ..அந்த மாதிரி ஒரு கடல் இருந்தால் அதன் கரையில் இருந்து எவ்வளவு குடிக்கலாம், வெறும் பால் கடல்ல என்ன பிரயோசனம் என்றெல்லாம் நான் நினைத்திருக்கிறேன்.

      நீக்கு
  17. ஹிஹிஹி, மாட்டி விடற ஒரு கேள்வி!

    6. கார்ப்பொரேட், கார்ப்பொரேட் என்கிறார்களே! அது இல்லாமல் இருந்தால் நாட்டில் பாலாறும், தேனாறும் ஓடிக் கொண்டிருக்குமா?
    7. ஒரு காலத்தில் தொழிலுக்கு முன்னுரிமை கொடுக்கணும்னு சொல்லிட்டு இன்னிக்குத் தொழிலதிபர்களைக் குறித்து மாறுபட்ட கருத்துகளைச் சொல்லுவது சரியா?
    8. அம்பானியும், அதானியும் மட்டும் தான் இந்தியாவில் கார்ப்பொரேட்டா? மற்றவர்கள் டாடா, பிர்லா, பஜாஜ், தொலைக்காட்சி சானல்கள், பத்திரிகைக்குழுமங்கள், இன்ஃபோசிஸ், ஷிவ்நாடாரின் எச் சிஎல், காக்னிசன்ட், போன்றவை எல்லாம் கார்ப்பொரேட்டில் சேராதா? விடுபட்டவை நிறைய உள்ளன. பொதுவாக அனைவரும் அறிந்தவற்றை மட்டும் சொல்லி இருக்கேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த மூணு கேள்வியும் எனக்குக் கடுப்பேத்துது....

      இவனுவோ பீட்சா சாப்பிட்டு வெளிநாட்டு கார்ப்பொரேட்டுகளை வளப்பானுவளாம், உடைகள் இதெல்லாம் மொத்த விலைக்கு கார்ப்பொரேட்டுகளிடம் வாங்கி இங்க சில்லரை விலைக்கு விற்பாங்களாம், ஆப்பிள், ஹிமாச்சல் பிரதேஷ் கார்ப்பொரேஷன்ல வாங்கி இங்க சில்லரைக்கு விற்பாங்களாம், ஆனா அதானி அம்பானி என்றால் வயிற்றெரிச்சல் வந்துடுமாம். இப்படிப் பேசறவங்க வாங்கின ஷேர் எல்லாம் செல்லாதுன்னு அரசு அறிவிச்சாத்தான் சரிப்படும்.

      நீக்கு
    2. இந்தியக் கார்ப்பொரேட்டுகளைப் பற்றிக் கேள்வி கேட்கிறவங்க உடுத்தும் உடை, உண்ணும் உணவு வகைகள், பேஸ்ட், டூத்ப்ரஷ், சோப் வகைகள், டிடெர்ஜென்ட் என எல்லாவற்றிலும் வெளிநாட்டுக் கார்ப்பொரேட்டுகளின் தயாரிப்பைத்தான் பயன்படுத்திட்டு இருக்காங்க. ஆனால் கேள்வி கேட்பது என்னமோ இந்தியாவில் தான் உலகிலேயே கார்ப்பொரேட்டுகளை ஆதரிக்கிறாப்போல் கேட்பாங்க!

      நீக்கு
  18. சென்ற வாரம் கேட்கப்பட்ட உங்கள் பெற்றோருக்கு நீங்கள்,எத்தனையாவது குழந்தை என்னும் கேள்விக்கு நான்தான் சரியான விடை கூறியிருந்தேன். நரசிம்மவரம பல்லவன் என்னும் விடையையும் நான்தான் சொல்லியிருந்தேன். எனக்கு ஆறுதல் பரிசாமே? எ.பி.பேச்சு கா.., இந்த வருடம் முழுவதும் உங்களை புறக்கணிக்க முடிவெடுத்து விட்டேன். கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா ! கோவிச்சுக்காதீங்க! எல்லாம் ஒரு ஜாலிக்குத்தான். உங்க கிட்டே ஒரு ரகசியம் சொல்கிறேன். எனக்கு முதல் கேள்வி மற்றும் வாழைப்பழக் கேள்வி தவிர வேறு எந்தக் கேள்விக்கும் பதில் தெரியாது.

      நீக்கு
    2. மேலும் கணக்குக் கேள்விக்கு பதில் அளித்தவர்களுக்கு மட்டுமே பரிசு.

      நீக்கு
    3. சோப்பு டப்பா பரிசுக்கு இவ்வளவு கோவமா?

      நீக்கு
    4. யாராவது எனக்காக "போங்கு" என்று குரல் கொடு்த்து என் விரதம் பங்கமாகாமல் காப்பாற்றுவார்களா?

      நீக்கு
  19. //இவற்றில் எந்த வாத்திய இசை பிடிக்கும்?//

    பறை...!

    பதிலளிநீக்கு
  20. துன்பம் நேர்கையில் என்ற பாடல் ஒரு தந்தை பள்ளிக்கூடம் போகும் தன் மகளை பார்த்து பாடும் பாடல், தெரியுமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இல்லை என்று நினைக்கிறேன். தலை வாரி பூச்சூதட்டி உன்னை பாடல்தான் தந்தை / மகள் பாட்டு என்று நினைக்கிறேன்.

      நீக்கு
  21. 2021 கடந்து போன 2020 போல நிச்சயமாக இருக்கக் கூடாது. அப்பப்பா...!! வீட்டுச் சிறை.....!!!

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!