வியாழன், 21 ஜனவரி, 2021

எப்படி எல்லாம் சிக்கிக்கொள்கிறோம் பாருங்கள்...

 குழந்தைகளை பராமரிப்பது ஒரு கலை.  நம் குழந்தைகளை விடுங்கள், நண்பர்கள் அல்லது உறவினர்கள் யாராவது 'கொஞ்சம் பார்த்துக்குங்க..  இதோ வந்துடறேன்'னு உங்க கிட்ட குழந்தையை விட்டுப் போயிருக்காங்களா?

எங்களுக்கு அந்த அனுபவம் உண்டு.

ஆனா ஒண்ணு, திருவிழா, மால், மார்க்கெட், பஸ் ஸ்டான்ட் என்று பொது இடங்களில் யாராவது அப்படிச் சொன்னால் உடனே ஓடிவிட வேண்டும்.  ஏனென்றால் அவர்கள் குழந்தையை உங்கள் பாதுகாப்பான கைகளில் சேர்த்து விட்டு காணாமல் போகக்கூடிய சாத்தியக்கூறுகள் அதிகம்.

வீட்டில் அப்படி நிலைமை இல்லை.  எனவே பயப்படாமல் பார்த்துக் கொள்ளலாம்.  பயப்படாமல் என்றா சொல்லி இருக்கிறேன்?  ஆமாம்...   எதற்கும் மேலே படியுங்கள்...

எனது தங்கை தன் இரண்டு குழந்தைகளையும் அவ்வப்போது எங்கள் வீட்டில் விட்டு விட்டு பணிக்குச் சென்று வந்திருக்கிறார்.  கொஞ்சம் கொஞ்சமாகப் பழகி அந்தக் குழந்தைகள் சில நாட்கள் கூட எங்கள் வீட்டிலேயே தொடர்ந்து இருந்திருக்கின்றனர்.  சாப்பிடுவதற்கு அடமான அடம் செய்வாள் தங்கையின் பெரிய பெண்.  அவள் சாப்பிடா விட்டால் என் அப்பா 'மூட் அவுட்' ஆகி எங்களை எல்லாம் காய்ச்சுவார்.  தங்கையும் வந்து எங்களை உண்டு இல்லை என்று செய்துவிடுவார்.  இப்போது அந்தக் குழந்தைக்கே ஒரு குழந்தை!  

இன்னொரு நண்பர் குழந்தையைப் பார்த்துக்கொள்ளுங்கள், மார்க்கெட் வரை போய்வந்து விடுகிறேன் என்று சொல்லிக் கிளம்ப முயற்சித்தால் அந்தக் குழந்தை அவர் கையைப் பிடித்துக்கொண்டு விடவே இல்லை.  புதுமுகங்களைக் கண்டு பயந்து விட்டது போலும்.  கடைசியில் அவர் குழந்தையையும் அழைத்துக் கொன்டுதான் சென்று வந்தார்!  

கேஜிஎஸ் மாமாவின் பேரனை சிறுவயதில் இரண்டு மணிநேரம் பார்த்துக்கொண்ட அனுபவம் இருக்கிறது.  ஒரு இடத்தில உட்காராமல் சுற்றிக்கொண்டே இருந்தான்.  வாசலுக்கு போவதிலும், மொட்டை மாடிக்குப் போவதிலும் அதீத ஆர்வம் காட்டினான்.  வாசல் இரும்பு கேட்டை மூடி வைத்தால் அதன்மேல் ஏறினான்.  அவன் பின்னாலேயே சென்று, அவனை எங்கும் ஏறி விழுந்து விடாமல் காத்து ஒப்படைத்தோம்.

ஒரு உறவினரின் குழந்தை அம்மா விட்டுச் சென்றுவிட, அப்பாவும் மகனுமாய் எங்கள் வீட்டில் கொஞ்ச நேரம் இருந்தனர்.  அவன் அம்மாவைத் தேடி அழும்போதெல்லாம் ஏதாவது ஒரு பொருளை எடுத்து அதன் கையில் கொடுப்பார்.  அது அதைத் தூக்கி எறியும்.  இவர் விழுந்து விழுந்து சிரிப்பார்.  குழந்தை உடனே கவனம் மாறி கையில் ஏதாவது ஒரு பொருளை வாங்கித் தூக்கி எறியும் விளையாட்டில் ஆர்வம் காட்டும்.

என்ன கஷ்டம் என்றால் அவர் குழந்தையின் கையில் கொடுத்தது நான் சேர்த்து வைத்திருந்த ஒலி நாடாக்களை!  நான் ஆட்சேபித்தும் அவர் கேட்கவில்லை.  அப்புறம் புத்தகங்கள்.  மேசை கடிகாரத்தைக் கையிலெடுத்ததும் பாய்ந்து பிடுங்கி வைத்து விட்டேன்.  குழந்தையைத் தூக்கிக்கொண்டு வெளியில் சென்று வேடிக்கைக் காட்டி, கவனம் திருப்பி, சிரிக்க வைத்து உள்ளே வந்தேன்.  நண்பர் நிம்மதியாக ஸோபாவில் தூங்கிக் கொண்டிருந்தார்.  கிர்ர்ர்ர்ர்ர்.......


சமீபத்தில் மறைந்த என் மாமா - அக்கா கணவர் - அவரின் பேரனைப் பார்த்துக் கொண்டது ஒரு அனுபவம்.  அதைப்பற்றிதான் கொஞ்சம் விரிவாக சொல்லப்போகிறேன்.  ஆதௌ கீர்த்தனாரம்பரத்திலே மாமாவின் பெண்ணும் மாப்பிள்ளையும் அப்போது கிருஷ்ணகிரியில் இருந்தனர்.  அவ்வப்போது சென்னை வந்து மருத்துவரைச் சந்தித்து, வேறு சில வேலைகள் முடித்து திரும்புவார்கள்.

அவர்களுக்கு ஒரே பையன்.  அவனுக்கு ஸ்ரீராம் மாமா என்றால் இஷ்டம்.  சென்னை  என்றாலே அவனுக்கு ஸ்ரீராம் மாமா வீடுதான்!  எங்கே போறோம்..  என்று எப்போது, எந்த இடத்துக்குக் கிளம்பினாலும் கேட்டால், 'ஸ்ரீராம் மாமா வீடு' என்பானாம்!

சென்னையில் டாக்டர் ஜேவியை பார்ப்பது அவர்கள் மாதாந்திர வழக்கம்.  அல்லது இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை. 

நாங்களும் எங்கள் பெரிய பையனை அவரிடம்தான் காட்டினோம்.  அது ஒரு தனி அனுபவம்.  முடிந்தால் இன்னொரு வியாழனில் அதுபற்றிக் கதைத்து ஒப்பேற்றுகிறேன்!

ஒருமுறை அவர்கள் வந்திருந்தபோது அந்த ஜேவி அலைச்சலை முடித்து வீடு வந்த கையோடு மறந்துபோன பர்ச்சேஸ் ஒன்று நினைவுக்கு வர, தி நகருக்குக் கிளம்பினார்கள்.  குழந்தையை அழைத்துப் போகவேண்டாம் என்று முடிவு செய்தார்கள்.  அவனுக்குத்தான் ஸ்ரீராம் மாமா பிடிக்குமே..  சமாளித்து விடலாம் என்று எண்ணி, மேலும் அது அவன் தூங்கும் நேரம் வேறு என்பதால் எப்படியும் கொஞ்ச நேரத்தில் தூங்கி விடுவான் என்று நம்பி குழந்தையை எங்கள் பாதுகாப்பில் வீட்டுக் கிளம்பினார்கள். 

எல்லாம் சரியாய்தான் போய்க்கொண்டிருந்தது.  சமர்த்தாக இருந்தான்.  சொன்னதைக் கேட்டான்.  ஆனால் தூங்குவதற்கான அறிகுறியையே காணோம்!  எங்களோடு உற்சாகமாகப் பேசிக்கொண்டும் நடந்துகொண்டும், சிரித்துக்கொண்டும் விளையாடிக்கொண்டும்தான் இருந்தான்.  ஆனாலும் ஸ்ரீராம் மாமாவை விட அம்மா உசத்தியாச்சே..   இந்த அப்பாவையும் காணோமே என்று மனதுக்குள் தோன்றி இருக்கும் போல...   இங்கும் அங்கும் நடந்து இல்லம் முழுவதும் அவர்களைத் தேடினான்.  இதுமாதிரி நேரங்களில் குழந்தையிடம் எல்லோரும் சொல்லும் வசனத்தைச் சொன்னோம்..  "ஊசி போட்டுக்கப் போயிருக்காங்க..   வந்துடுவாங்க..."

பாவம் சுபாஷ் (அதுதான் அவன் பெயர்)  சமர்த்தாக இருந்தான்.  சரி..    இன்னும் கொஞ்ச நேரத்தில் வந்து விடுவார்களே என்று நினைத்து, அதுவரை குழந்தை கொஞ்சம் டிவி பார்க்கட்டும் என்று எண்ணி, டிவி போட்டு பாடல்கள் வைத்தோம்.  விதி சிரித்தது.

அவன் அதைப் பார்த்துக்கொண்டிருக்க, நாங்கள் வேறு வேலை பார்த்துக் கொண்டிருக்க டிவியில் "ஒரு பொண்ணு ஒண்ணு நான் பார்த்தேன்.."  பாட்டு ஆரம்பித்தது.  எழுந்து நின்று மெதுவாய் ஆடியபடி பாடலை ரசித்தான்.

திடீரென வீறிட்டான்.  தொடர்ந்த அழுகை.  என்ன செய்தும் அழுகை நிற்கவில்லை.  எறும்பு ஏதாவது கடித்து விட்டதா, எங்காவது மோதிக் கொண்டானா என்று முழங்கை, முழங்கால், நெற்றி எல்லாம் ஆராய்ந்துகொண்டே சமாதானப்படுத்த முயன்று கொண்டிருந்தோம்.  

ஊ..ஹூம்.  விட்டு விட்டு அழுகை.  விசும்பல்.  'அம்மா... 'அம்மா' ன்று வாசலை நோக்கிக் கைகாட்டி, காட்டி விசும்பல்.

என்ன காரணம் என்றும் தெரியவில்லை..  குழந்தை அழுதால் அவன் அம்மாவுக்குத் தாங்கவே தாங்காது. அந்த டென்ஷனும் சேர்ந்து கொண்டது.

நல்லவேளையாக கொஞ்ச நேரத்தில் அவன் அம்மாவும் அப்பாவும் உள்ளே நுழைந்து விட, அவன் அழுகைக்கு காரணமான புதிர் அந்த கணத்திலேயே விடுபட்டது.

உள்ளே நுழைந்தபடியே அவன் அம்மா குரல் கொடுத்தாள்...   "பாப்பூ..."

சிரித்து விட்டோம்.  நாங்களும் டீவில நல்ல பாட்டு வச்சோம் போங்க...  நல்ல வேளையில் அவங்களும் அந்தப் பாட்டை ஒளிபரப்பினார்கள் போங்க!


இந்த சுபாஷுக்கு நாளை மறுநாள் பிறந்த நாளுங்க...   என் அப்பா சுபாஷ் சந்திரபோஸ் மேல் அதீத பிரேமை கொண்டவர்.  பேரன் அவர் பிறந்த நாளில் பிறந்ததும் அவனுக்கு சுபாஷ் என்று பெயர் வைத்தார். சான்றிதழில் அவனுக்கு சிவராம் என்று பெயரிட்டிருந்தாலும் நாங்கள் அவனை அப்படிதான் அழைப்போம்.  

================================================================================================

ஒரு சஷ்டியப்தபூர்த்திக்குச் சென்று வந்து ஓய்வாகப் படுத்துக் கொண்டிருந்தபோது யாரோ வந்து எட்டிப்பார்த்து மறைந்த உணர்வு.  திரும்பிப் பார்த்தால் யாரும் இல்லை.  மீண்டும் கண்கள் அசந்த கணம் மறுபடி அதே உணர்வு.  மீண்டும் கண்திறந்து பார்த்தால் யாரையும் காணோம்.  மர்மத்தை விலக்க கொஞ்ச நேரம் கண்திறந்து காத்திருந்தபோது அரவம் காட்டாமல் மென்மையாக வந்து என்னை எட்டிப்பார்த்துச் சென்றது யார் என்று தெரிந்தது.   உடனே பேஸ்புக்கில் பகிர்ந்து விட்டேன்!


எட்டிப் பார்த்துச் செல்கிறது
திரைச்சீலை..
'நானும் இந்த வீடுதான்..
கட்டி வைத்து விட்டீர் என்னை
வாசல் கதவோடு..
எப்படி இருக்கிறீர்கள் 
எல்லோரும்?'
ஒட்டியாணம் சுற்றி 
ஒய்யாரமாய் நிற்கிறாள் 
அவ்வப்போது மெல்ல 
நடனமும் ஆடுகிறாள் 

மேலும் சில 'திரை'க்கவிதைகள் எழுதி வைத்திருக்கிறேன்.  அவ்வப்போது பகிர்கிறேன்.  அல்லது பொறுமை இல்லாமல் ஒருநாள் மொத்தமாகப் பகிர்ந்து விடுகிறேன்.

==========================================================================================================

பொக்கிஷம்  :

தேதி 19-2-1946


படிக்க சற்றே சிரமம்.  ஆனால் படித்தால் சிரிக்கலாம்!


==========================================================================================

விளம்பரங்கள் பழசு!

சச்சினும் ஷாரூக்கானும் இணைந்து தோன்றிய பெப்ஸி விளம்பரம்...

86 கருத்துகள்:

 1. காலை வணக்கம் அனைவருக்கும்.

  இன்றைய பகுதி நல்லா அருந்தது. குழந்தையைப் பார்த்துக்கொண்ட அனுபவமே எங்களுக்கு இல்லை

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காலை வணக்கம்.  பாராட்டுக்கு நன்றி.  குழந்தை பார்த்துக் கொள்வதில் நாங்கள் பட்டம் வாங்குவதற்கு அருகில் இருந்தோம்!!

   நீக்கு
 2. கடைசிச் சிரிப்பு புத்தகத்தில்்படித்திருக்கிறேன். இங்கு படிக்க ரொம்பக் கஷ்டம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம்.   கணினியிலேயே கஷ்டம்.  குறிப்பாக மொபைலில் ரொம்பவே கஷ்டம்.  ஆனாலும் குண்ட்ஸா ஜோக் புரிந்து விடும் என்று நம்பியே வெளியிட்டேன்! 

   நீக்கு
 3. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம். நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். தடுப்பு ஊசி பற்றி நல்ல செய்திகளே கிடைத்து வருகின்றன. தொடர்ந்து அது பயன்பாட்டில் இருந்து மக்களைக் காப்பாற்றப் பிரார்த்திக்கிறோம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க கீதா அக்கா...   பிரார்த்தனைகளுக்கு நன்றி, வணக்கம்.

   நீக்கு
 4. ஊரிலுள்ள குழந்தைகள் எல்லாம் என்னிடம் தான் இருக்கும் என்னோட சின்ன வயசிலே. எல்லா அப்பா, அம்மாக்களும் நம்பி விட்டுட்டுப் போவாங்க. அநேகமா நினைவு தெரிந்ததில் இருந்தே குழந்தைகளைப் பார்த்துக்கொள்ளும் வேலையை சந்தோஷமாகச் செய்திருக்கேன். இதில் முழுக்க முழுக்க என் கண்காணிப்பில் என் 2 சித்தி பிள்ளைகள் இருந்தனர். சின்னமனூர்ச் சித்தியின் கடைசிப் பிள்ளையும், அசோகமித்திரன்/சித்தியின் கடைசிப் பிள்ளையும் அநேகமாக நான் வளர்த்தவர்கள் என்றே சொல்லலாம். எல்லாக் குழந்தைகளும் நான் சொல்லுவதைக் கேட்டும் நடந்து கொள்வார்கள்! என் குழந்தைகளைத் தவிர்த்து! :)))) இஃகி,இஃகி,இஃகி, நான் வளர்க்கச் சிரமப்பட்டது இவங்களைத் தான்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்கள் திருமணத்துக்கு முன்னா, பின்னா மற்ற குழந்தைகளை பார்த்துக் கொண்டது?  முன் என்றால் செல்லாது!  அப்போ வேற வேலை பெரிசா எதுவும் இருந்திருக்காது!

   நீக்கு
  2. திருமணத்துக்கு முன்னர் எங்க வீடே ஒரு நர்சரி பள்ளி மாதிரித் தெருக்குழந்தைகள் எல்லாம் என்னுடன் இருக்கும். அதான் "நினைவு" தெரிஞ்சதில் இருந்துனு சொல்லி இருக்கேனே! கல்யாணத்துக்குப் பின்னர் பக்கத்து வீட்டுக் குழந்தைகள், நாத்தனார் குழந்தைகள்னு நான் தான் பார்த்துக்கொள்ள வேண்டி இருக்கும். இதிலே என் குழந்தைங்க தான் ரொம்பச் சமர்த்தாக இருப்பாங்க. அதைத் தவிர நான் ட்யூஷன் எடுத்ததில் வேறே அக்கம்பக்கம் வீட்டுக் குழந்தைகள் படிக்க வருவாங்க. குழந்தைகளோடு சீட்டு ஆடுதல்,ட்ரேட் விளையாடுதல், தாயம் ஆடுதல்னு அவங்களுக்குச் சமமா விளையாடுவேன். கதை சொல்லுவதும் உண்டு. மாமனாருக்குக் கோபமாய் வரும்! கண்டு கொண்டதே இல்லை! :((( அதான் அப்போல்லாம் மனதுக்கு சாந்தி தரும் விஷயம்.

   நீக்கு
  3. //மாமனாருக்குக் கோபமாய் வரும்!//

   ஹா...  ஹா..   ஹா....   இது வேறா?

   நீக்கு
  4. ஹாஹாஹா, அக்கம்பக்கம் மாமிகள் யாரேனும் வட இந்திய உணவு வகைகளோ அல்லது எங்க ஊர்ப்பக்க சமையல் பத்தியோ என்னிடம் கேட்டால் கூட மாமனாருக்குக் கோபம் வந்துடும். சிலரை வாசலிலேயே திருப்பி அனுப்பிடுவார். அவளுக்கு வேலை இருக்குனு சொல்லியோ/அவளுக்கு இதெல்லாம் தெரியாதுனு சொல்லியோ அனுப்பிடுவார். மாமியாருக்கும் அவ்வளவாய்ப் பிடிக்காது. என்னவோ பண்றா! வேகம்(வாசனைக்கு அவங்க பயன்படுத்தும் வார்த்தை) வருது! அதை எல்லாமா சாப்பிடுவாங்க என்பார்! ஹாஹாஹாஹா! :))))) பின்னர் தனியாகக் கொல்லைப்புறமாய் வகுப்பு நடக்கும்.

   நீக்கு
  5. தலைமுறை இடைவெளி.  மருமகள் வல்லவர் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாத மனோநிலை போலும்!

   நீக்கு
 5. கல்யாணம் ஆன பின்னரும் நாத்தனார் குழந்தைகள்/என் குழந்தைகளோடு சேர்த்துப் பார்த்துக் கொண்டிருக்கேன். இதிலே பெரிய நாத்தனார் பிள்ளைதான் கொஞ்சம் சிரமம்! முரட்டு விஷமம். கிணற்றுக் கைப்பிடிச் சுவர் மேலே ஏறிச் சுற்றி நடந்து கொண்டு, கிணற்றிலே விழப் போறேன் என்று பயமுறுத்துவான். நாத்தனாரோ காலை வெளியே போனா இரவு தான் வீடு திரும்புவாங்க. திக், திக், திக் தான்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. என் தங்கையும் அப்படியே...  வேலை முடிந்து வீடு திரும்ப நேரம் ஆகும்.  மேலும் பலசமயம் அவர்கள் வீட்டுக்குச் சென்று விடுவாள்.  வார இறுதியில் வந்து அழைத்துச் செல்வாள்.  

   கிணற்றுச் சுவரின் மீதா....   அம்மாடி...  சலங்கை ஒலி பார்த்து பழகிக்கொண்டார்களா!

   நீக்கு
  2. அவங்க எல்லாம் பிலாய், நாக்பூர், மும்பை, ஒடிஷா என்று இருந்து வளர்ந்தவர்கள். தமிழ் பேசத்தான் தெரியும். தமிழ்த் திரைப்படம் எல்லாம் பார்த்திருக்க வாய்ப்பில்லை. சலங்கை ஒலியில் கமல்ஹாசன்(உல(க்)கை அப்படி நடிச்சிருக்காரா? சலங்கை ஒலியெல்லாம் நான் பார்த்தது இல்லை. விரும்பிப் போன படம் ஏக் துஜே கேலியே/மரோ சரித்ரா! கதைக்காக!

   நீக்கு
  3. நானும் சும்மா விளையாட்டுக்குதான் கேட்டேன்.  ஆமாம்..  தகிட தத்திமி தகிட தத்திமி பாடல் காட்சி நினைவில்லையா?!!

   நீக்கு
  4. தகிட தத்திமி? தகிட தத்திமி? முகநூலில் ருக்மிணி ஆடுவதைப் பார்க்கையில் பின்னணியில் ஒலிக்கும் குரல். நீங்க சொல்லுவது படத்திலா? நான் அங்கொன்றும் இங்கொன்றுமாய் உலக்கையின் படங்களோட நகைச்சுவைக் காட்சிகள் பார்த்திருக்கேன். ஆனால் சலங்கை ஒலி? ம்ஹூம்! பார்த்ததே இல்லை. தெனாலி படக் காமெடி கொஞ்சம் நல்லாத் தெரியும்! அதே போல் பஞ்ச தந்திரம்? ரம்யா கிருஷ்ணன் செத்தவராய்க் காமெடி பண்ணுவார். அதெல்லாம் பிடிக்கும்.

   நீக்கு
  5. நீங்கள் சொல்வதெல்லாம் காமெடி காட்சிகள்.  இது பாடல் காட்சி!

   நீக்கு
  6. சலங்கை ஒலி மிக மிக நல்ல படம் youtube ல கிடைத்தால் பாருங்கள். கமல் நடிப்பு, மற்றவர்கள் நடிப்பு, சரத்பாபு , ஜெயப்ரதா எல்லோருமே பிரமாதமாக நடித்திருப்பார்கள்.

   நீக்கு
 6. சுபாஷுக்குப் பிறந்த நாள் வாழ்த்துகளைச் சொல்லிவிடுங்கள். ஆசிகளையும். திரைக்கவிதை ஏற்கெனவே படிச்சுட்டேன். கப்பல் படையின் போராட்டங்கள் குறித்துச் சில பதிவுகள் எழுதி இருக்கேன். 2006/2007 ஆம் ஆண்டுகளில்னு நினைக்கிறேன். காந்தி செய்த துரோகம் மறக்க முடியாத ஒன்று. :( படேல் இல்லைனா அப்போப் பலர் தண்டனை பெற்றுச் சிரமப்பட்டிருப்பார்கள். "வெளிச்சம் தெரிகிறது!" அந்தக்கால விகடன் தலையங்கம் பார்த்த நினைவு. சித்தப்பா வீட்டில் பார்த்திருப்பேன். அந்த ஜோக்கும் பிரபலமானது. புத்தகத்தில் படிச்சிருக்கேன். இங்கே பெரிசு பண்ணிப் படிக்கக் கஷ்டமா இருந்தது என்றாலும் படிச்சுட்டேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சுபாஷுக்கு பிறந்தநாள் வாழ்த்தைச் சொல்லி விடுகிறேன்.

   திரைக்கவிதை ஒன்றுதான் பேஸ்புக்கில் பகிர்ந்திருந்தேன்.  இன்னொன்று இங்கே இப்போது இன்ஸ்டன்ட்டாய் எழுதியது!

   நீக்கு
  2. //இன்னொன்று இங்கே இப்போது இன்ஸ்டன்ட்டாய் எழுதியது!// ஓஹோ!

   நீக்கு
 7. சச்சின், ஷாருக் விளம்பரம் பார்த்த நினைவு இல்லை.

  பதிலளிநீக்கு
 8. அனைவருக்கும் இனிய காலை வணக்கம். எல்லோர் நலனையும்
  இறைவன் காத்து நன்மை அளிக்கட்டும்.

  இன்றைய பதிவு மிக சுவாரஸ்யம்.
  நகைச்சுவையும் கூட.
  திருமணமான புதிதில் நான் தான் வீட்டுக் குஹந்தைகளுக்குக் காவல். எல்லோரும் சினிமா போய் விடுவார்கள்.
  நானும் அந்த வால்களோடு பெரிய ஊஞ்சலில் ஆடி மகிழ்ந்திருக்கிறேன்.
  ஏகப்பட்ட கதைகள் உருவான காலமும் அதுதான்.
  இப்போது அவரவர்க்குப் பேரன் பேத்தி வந்து அவர்களும் வளர்ந்து விட்டார்கள்.

  பாப்பூஊஊ பாடல் நினைவில்.
  நல்ல சிரிப்பு சுபாஷுக்கு வாழ்த்துகள்.

  கடவுள் கருணையில் காலை பார்க்கலாம்.


  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க அம்மா.  வணக்கம்.  உங்கள் மருந்துகள் உங்கள் கைக்கு கிடைப்பது இம்மட்டில் இருக்கிறது?

   ஹா..  ஹா..  ஹா...   குழந்தைகளை பார்த்துக் கொள்ளும் அனுபவத்திலிருந்து நெல்லை தம்பதியினர் மட்டும்தான் தப்பித்திருக்கிறார்கள் போல!!

   நீக்கு
  2. இந்த ஊரிலேயே இல்லையே.. தளத்துல இருக்கும் 4 flatsல், ஒன்று பாகிஸ்தானி, ஒன்று பிலிப்பினோ, இரண்டு இந்தியர்கள் என்று இருந்தால் எங்க மத்தவங்க குழந்தையை, அதை விடுங்க, மத்தவங்களையே எப்போ பார்க்கிறது?

   நீக்கு
  3. இங்கே மட்டும் என்ன நெல்லை...   பிளாட்ல இருக்கற வீடுகள் கதவு எப்பவும் மூடியே இருக்கின்றன.  யாரையும் பார்ப்பது கடினம்.  வேண்டுமானால் க்ரூப்பில் மெசேஜ் போட்டுக்கொள்ள வேண்டும்!

   நீக்கு
  4. அன்பு ஸ்ரீராம்,
   நன்றி மா. மருந்துகள் வராத நிலையில் இந்த ஊர்ப் பாலத்து ஜோசியர்
   அதாவது வைத்தியர் கொடுக்கிறார்.
   ஒரு வாரத்துக்கு ஒரு முறை போய் வாங்கிக் கொள்ள வேண்டும்:)

   அவர் கொடுக்கும் மருந்தில் பாதி தான் எடுத்துக் கொள்கிறேன்!!!!!!!!

   நீக்கு
  5. ஏன் அப்படி?  நீங்கள் ரெகுலராக சாப்பிடும் மருந்துகளிலிருந்து வேறுபட்டதா?  அப்படி நீங்களாகவே குறைத்துக் கொள்வது தவறில்லையோ?

   நீக்கு
 9. //பாப்பூஊஊ பாடல் நினைவில்.
  நல்ல சிரிப்பு சுபாஷுக்கு வாழ்த்துகள்.// எனக்கு அந்த இடம் புரியலை. ஒருவேளை பாடலைக் கேட்டிருந்தால் புரிந்திருக்கலாம். அப்படி எல்லாம் பாட்டு வந்ததே தெரியலை! :((((

  பதிலளிநீக்கு
 10. முதல் திரைக் கவிதை alright!

  அந்த விளம்பரத்தில் சச்சின் மட்டுமா? ஜடேஜா (அஜய்), அஸருத்தீன், அசட்டு முகத்தோடு ராஹுல் திராவிடும் வருகிறார்கள். கடைசியில் சச்சின். பெப்ஸி கா கமால்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி. அப்போது மற்றவர்களெல்லாம் இரண்டாம் கட்ட பிரமுகர்கள்!!

   நீக்கு
  2. திரைச்சீலையும் ஜோர். அதன் கட்டுக் கவிதையும் வெகு ஜோர்.

   விகடன் சுவை அப்போது அவ்வளவு நன்றாக இருந்திருக்கிறது!!!
   இப்போது யார் படிக்கிறார்கள்.

   நீக்கு
 11. அதுசரி, பெப்ஸி பாகிஸ்தான் டீமின் ஸ்பான்சர் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஓஹோ... பாகிஸ்தானுக்கும் என்று சொல்ல வேண்டுமோ...

   நீக்கு
  2. ஆமாம், கேள்விப் பட்டிருக்கேன். உண்மைதான் என்பது இப்போது தெரிந்தது. ஆனால் ஏற்கெனவே இதெல்லாம் குடிப்பதில்லை! எங்க வீட்டுக் குளிர்சாதனப் பெட்டியில் எந்தவிதமான இயற்கை/செயற்கை பழச்சாறு வகைகள் வைப்பதே இல்லை. அவ்வப்போது வேணும்னா போட்டுப்பேன்.

   நீக்கு
  3. உண்மையில் எங்கள் வீட்டிலும் எந்த குளிர்பானமும் குடிப்பதில்லை.  பழக்கமே இல்லை.  எப்போதாவது விருந்தினர்களுக்காக வாங்கி வைத்ததுதான்,

   நீக்கு
 12. 1946-ல்தான் விகடன் எவ்வளவு தேசபக்தியோடு, பொறுப்பாக எழுதியிருக்கிறது தலையங்கம்? (அப்போது படேல், காந்தி, திலக், போஸ் போன்ற ’நேதா’க்கள் காட்டிய தலைமப்பண்புதான் என்னே.. என்பதும் மனதில் தாக்கம் தருகிறது).

  இப்போதெல்லாம் ’ஆனந்த’ விகடனில் வரும் தலையங்கம்/கட்டுரையின் ஒரு சிறுபகுதியை - ஒரு சாம்பிளாக, contrast-க்காகச் சேர்த்திருக்கலாம்-ஜோராக இருந்திருக்கும்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இப்போதைய விகடனைப்பார்த்து நான்கைந்து ஆண்டுகள் ஆகிறது.. ஆனால் நல்ல யோசனை!

   நீக்கு
  2. ஏகாந்தன் சார்... அப்போ உள்ள ஏதேனும் ஒரு ஆனந்தவிகடன், இப்போதுள்ள விகடன் கட்சிப் பத்திரிகை, அப்போது இருந்த குமுதம், இப்போது உள்ள குமுதம் சினிமாப் பத்திரிகை - இரண்டையும் எடுத்துக்கொண்டு குறைந்தபட்சம் சில வார வியாழனில் வெளியிடலாம். பத்திரிகைக்காரங்கதான் எவ்வளவு மாறிட்டாங்க, அல்லது படிக்கறவங்கதான் எவ்வளவு மாறிட்டாங்கன்னு தெரிஞ்சுக்கலாம்.

   நீக்கு
  3. விகடனெல்லாம் பார்த்தே/படித்தே 20 வருஷங்கள் ஆகப் போகின்றன. சுஜாதாவின் "கற்றதும் பெற்றதும்" வந்தப்போப் படித்தது.

   நீக்கு
 13. குழந்தைகளை கவனித்துக்கொள்வது என்பது ஒரு பெரிய கலை. அந்த நோக்கில் எடுத்துக்கொண்டால் அதிக சிரமம் இருக்க வாய்ப்பில்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சிரமம் என்றில்லை, சில சுவாரஸ்யமான மாட்டிக் கொள்ளல்கள்!

   நன்றி முனைவர் ஐயா...

   நீக்கு
 14. மனைவியின் ரிலேஷன், ஒரு பெண் இருக்கிறார் (திருமணமானவர). இங்க எல்லாப் பசங்களும், என் பசங்க உட்பட, எந்த விசேஷத்திலும் அவங்ககூடத்தான் இருப்பாங்க. பேய்க்கதைலாம் சொல்லி எல்லாருமே அவங்களைச் சுத்தி கத்திக்கிட்டிருப்பாங்க. மனைவியின் கசினும் இந்தபாதிரி சின்னக் குழந்தைகளோடு விளையாடுவார்கள். அதுக்கெல்லாம் ஒரு திறமை வேண்டும். என்னிடம் அது கிடையாது, பொறுமையே கிடையாது. ஹாஹா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம்.. சுவாரஸ்யமாய் கதை சொல்பவர களுக்கு, குழந்தைகளிடம் எப்பவுமே மவுசுதான்!

   நீக்கு
  2. கல்லூரி முடித்து வேலைக்கு போவதற்குமுன் ஒரு 3-4 ஆண்டுகாலம் கிராமத்தில் இருந்தேன். மரங்கள், செடி கொடிகள், வயல்கள் எனப் பார்த்துக்கொண்டு. தண்ணீர் வற்றிய குளத்தை மைதானமாக்கி சிறுவர்களுக்கு கிரிக்கெட் சொல்லிக்கொடுத்து சேர்ந்து ஆடிக்கொண்டு எனக் கழிந்த காலம். அப்போது மாலை நேரங்களில் சிறுவர்கள் என்னை சுற்றியிருப்பார்கள். ஊர்க்கதை, உலகக்கதை என அவர்களுக்கு சுவாரஸ்யமாக சொல்வேன். கொஞ்சம் பொது அறிவை ஊன்றி வளரச் செய்திருக்கிறேன். சிறுவர்களுக்காகவே மாயா ஜால, சித்திரக்குள்ளன் கதைகளை சிருஷ்டித்து தொடரும் போட்டதால், ஒவ்வொரு மாலையிலும் வீட்டைச் சுற்றிச் சுற்றி வருவார்கள் கதை கேட்க.

   தங்கள் வீட்டுப்ப் பிள்ளையை மணிக்கணக்காக காணவில்லை என்றால், எங்கள் வீட்டுக்குப் போய் பார்க்கச்சொல்லும் அம்மாக்கள் - ‘அங்கேதான் ஒக்காந்து கத கேட்டுக்கிட்டு இருப்பான்..போய்ப் பாத்து இளுத்துகிட்டு வா..’

   இப்படியிருந்த காலம் மனதில் பசுமையாக இருக்கிறது. காலையில் சாப்பிட்ட டிஃபன் நினைவுக்கு வரத் தாமதமாகிறது@

   நீக்கு
  3. உங்கள் அனுபவம் சுவாரஸ்யம்.  உங்கள் ஊர் டி கல்லுப்பட்டி பக்கத்தில் என்று நீங்கள் முன்னர் சொன்ன நினைவு.  அல்லது அது என் கற்பனையோ!  பள்ளிக்காலத்தில் நன் பார்த்த திரைப்படங்களின் கதையை நண்பர்களுடன் ஸீன்  பை ஸீன் பகிர்வது வழக்கம்.  என் கற்பனையும் அதில் இருக்கும்.  கார்த்தி எனும் நண்பன் சொல்வான்.  நான் படம் பார்த்துட்டேன்..  ஆனாலும் நீ சொல்றது சூப்பரா இருக்கும்பான்!  அதற்காகவே ஒரு நண்பர்கள் குழு என்னுடன் சேர்ந்து ஸ்கூலுக்கு நடந்து வரும்!

   நீக்கு
 15. அன்பின் வணக்கம் அனைவருக்கும்...
  நலமே எங்கும் வாழ்க...

  பதிலளிநீக்கு
 16. பஹ்ரைன்ல சத்சங்கத்துக்கு பெற்றோருடன் இரண்டு குழந்தைகள் வரும். வாலுனா அளவுக்கு அதிகம். ஹோஸ்ட், அவங்களை விட்டுட்டு நீங்க மட்டும் வாங்க என்று சொல்லும் அளவிற்கு. பசங்களை கன்ட்ரோல் பண்ண முடியலைனா பெற்றோர்கள் வெளிலயே கூட்டிக்கிட்டு வரக்கூடாது. அடுத்த வீட்டில் அவங்க பொருட்களை உடைத்தால், சோபா மெத்தை மீது குதித்தால், ஆர்ப்பாட்டம் போட்டால்....

  என் பசங்களும் மெத்தைல, சோபால ஆட்டம் போடுவாங்க. ஒரு தடவை அடி வச்சுட்டேன். அப்புறம் நான் ஆபீஸ்ல இருந்து மாலை வீட்டுக்கு வரும்போது எப்போதுமே அமைதியா இருக்கும். எனக்குத்தான் சந்தேக புத்தி உண்டு. சத்தம் காட்டாமல் ஒரு நாள் சட் என்று கதவைத் திறந்தால் குடு குடுவென ஓடி அமைதியாயிட்டாங்க. சில வருஷம் கழித்து என் பையன் சொன்னான்... நீங்க தூரத்துல வரும்போதே சாவி சத்தம் கேட்கும். அமைதியாயிடுவோம். அதுக்கு முன்னாலதான் ஜாலியா ஆட்டம் போடுவோம் என்றான். ஹாஹா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹா... ஹா... ஹா... எங்க அப்பா தெருமுனைல வரும்போதே நாங்க அப்படிதான் செட்டிலாயிடுவோம். எதிர்பாராமல் மாட்டிக்கொண்டால் சிலசமயம் கடுகடு என்பார். சிலசமயம் கண்டுக்காம விட்டுடுவார்.

   நீக்கு
  2. நாங்களும் அப்பாவுக்குத் தான் ரொம்பவே பயப்படுவோம். அப்பாவும் மிரட்டி, அடக்கினு கடுகடுவெனவே இருப்பார். எங்க கொட்டமெல்லாம்/முக்கியமாய் என்னோட கொட்டமெல்லாம் அப்பா இல்லாதப்போத் தான்! என் குழந்தைங்க இரண்டும் என் மேல் படுத்துக் கொண்டு கதை கேட்பார்கள். எங்க அம்மாவீட்டில் எல்லோரும் கோவிச்சுப்பாங்க, குழந்தைகளை, அம்மாவை ஏன் தொந்திரவு பண்ணறீங்க என்று.

   நீக்கு
  3. அப்போ எல்லாம் அப்பான்னா கடுகடுன்னுதான் இருக்கணும் என்பதுபோல இருப்பார்கள்!!  சிரித்த முக அப்பாக்கள் ரொம்ப ரேர்.

   நீக்கு
  4. அதெல்லாம் இல்லை. என் தாத்தா(அம்மாவின் அப்பா) அதிர்ந்தே பேசமாட்டார். குழந்தைகளைக் கடிந்து கொள்ளக் கூடாது. அவச் சொல் சொல்லக் கூடாது. அவர் சொல்லித் தான் எனக்கு திக் தேவதைகள் வீட்டைச் சுற்றிச் சுற்றி வருவார்கள் என்பதும் "ததாஸ்து" எனச் சொல்லுவார்கள் என்பதும் தெரியும். அவச்சொல் சொல்லும்போது அவங்க "ததாஸ்து"னு சொல்லிட்டால் அது நடந்துடும் என்பார். இம்மாதிரிப் பல விஷயங்கள் சொல்லிக் கொடுப்பார். காரண, காரியங்களோடு எதைச் செய்யணும்/செய்யக் கூடாது என்பதெல்லாம் அவரும் என் பெரியப்பா ஒருத்தரும் சொல்லிக் கொடுத்தவை தான். இதெல்லாம் கொஞ்சமானும் எனக்குத் தெரிஞ்சிருக்குனு சொன்னால் அதுக்குக் காரணம் இத்தகைய பெரியவர்கள் என் வாழ்க்கையில் இடம் பெற்றதே!

   நீக்கு
  5. அப்பா = கடுகடு ; தாத்தா = கொடு கொடு.

   நீக்கு
  6. முன்னோர்கள் நடந்துகிட்டதுலேர்ந்துதான் நாம கத்துக்கறோம்னு நினைக்கிறேன்.

   அவங்க என்ன பண்ணுவாங்கன்னா... பையனை பாராட்ட மாட்டாங்க. கொஞ்சம் கடுகடுன்னு, ரொம்ப நல்லா பண்ணினா, 'ம் என்ற புன்னகை' இப்படி இருப்பாங்க. ரொம்ப பாராட்டினா வளர்ச்சி தடைபடும் என்பது அவங்களோட கருத்து (ஹா..ஹா.நானும் அதைத்தான் ஃபாலோ பண்ணறேன்). ஆனால், தாத்தா பொஸிஷன் வரும்போது, 1. அவங்களுக்கு தந்தையின் பொறுப்போ, பயமோ இல்லை கவலையோ கிடையாது. பேரன்/பேத்தியோட நல்ல ரிலேஷன் பில்டப் பண்ண மட்டும்தான் அவங்க விரும்புவாங்க. தான் தன் மகனிடம், நெருக்கமா இருக்காம இழந்த காலத்தை, பேரன்/பேத்திட்ட காட்டி அதை மீட்டெடுப்பாங்க. 2. அந்த வயசுல அவங்களுக்குப் புரிஞ்சுடும்.. நாம கவலைப்பட்டு, கண்டித்து அதுனால ஒரு எழவும் பண்ணமுடியலை. எல்லாம் அவரவர் விதிப்படி என்பதை தெளிவா புரிஞ்சுக்குவாங்க. அதுனால... சரி... சந்தோஷமாகவாவது வச்சுக்குவோமே என்று நினைப்பாங்க.

   நீங்க என்ன சொல்றீங்க?

   நீக்கு
  7. இந்த வழிதான் பிள்ளையைக் கொஞ்சாமல் பேரன் பேத்திகளைக் கொஞ்சும் மனோபாவமோ!

   நீக்கு
  8. நீங்க புரிஞ்சுகொண்டிருக்கிற மாதிரியிலே எங்க தாத்தா இல்லை. என் அம்மாவையும் சேர்த்து ஐந்து பிள்ளைகள், நான்கு பிள்ளைகள், தாத்தாவின் தம்பி, அம்மாவைக் கூடவே வைத்துக் கொண்டிருந்தார். 3,4 சகோதரிகள். யாரையும் எப்போதும் எதற்கும் கடிந்து கொண்டதில்லை. அவதூறு பேசவோ அபசகுனமாகப் பேசவோ மாட்டார். மிக நன்றாக ஜோசியம் பார்ப்பார். ஆனால் சொந்த வாழ்க்கையில் பார்த்தது பலித்துவிட்டது என்பதால் வெளியே யாருக்கும் பார்ப்பதில்லை. நல்லதானால் சரி, அல்லாதது ஆனால்? தன் வாயால் எந்தவிதமான அவச்சொல்/தீங்கான வார்த்தைகள் வரக்கூடாது என்பதில் கவனம். தமிழார்வம் அதிகம்! அந்தக் காலத்து சேதுபதி மஹாராஜாவின் திவான் எங்க தாத்தா. ஆனால் பரம்பரையாக வந்ததால் திவான் பதவியைத் தாத்தா ஏற்க மறுத்ததால் சேதுபதி மஹாராஜா தாத்தாவைக் கடைசிவரை தன்னுடைய சட்ட ஆலோசகராக வைத்துக் கொண்டிருந்தார்.

   நீக்கு
 17. குழந்தைகளைப் பார்த்துக் கொண்ட அனுபவம் எல்லாம் இல்லை.. பக்கத்து வீட்டுக் குழந்தைகளை வளர்த்த அனுபவம் உண்டு.. அப்போது எனது வயது 20..

  பதிலளிநீக்கு
 18. சுபாஷுக்கு முன்கூட்டிய இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்...

  குழந்தைகளுக்கு அம்மா ஞாபகம் வந்தால் சமாளிப்பது சிரமம் தான்... ஆனால் எங்கள் வீட்டிற்கு வரும் குழந்தைகள், தன் அம்மா அப்பாவுடன் செல்வதற்கு அடம் பிடிக்கும்...

  தவழ தவழ தரை தொடும் வரை இருக்கும் திரைச்சீலை, வீட்டுக்குள் வந்து விசாரிப்பது அழகு...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாழ்த்துக்கு நன்றி. சுபாஷ் வரும் ஜூலையில் நல்லதொரு நிறுவனத்தில் பணியில் இணைய இருக்கிறான்!

   தரையில் தவழும் ஒட்டியாண திரைச்சீலை வேறு, எட்டிப்பார்க்கும் திரைச்சீலை வேறு. வெவ்வேறு இடங்கள்.

   நன்றி DD.

   நீக்கு
 19. குழந்தைகளை பார்த்துக் கொண்ட அனுபவம் நிறையவே உண்டு. அப்பாதுரை ரேஞ்சுக்கு அமானுஷ்யமான ஏதோ எழுதப் போகிறீர்கள் என்று நினைத்தால்.. திரைச் சீலை என்று முடித்து விட்டீர்கள். கவிதை நன்றாகத்தான் இருக்கிறது. நீங்களே ஒரு பொக்கிஷமாக இருப்பீர்கள் போலிருக்கிறதே? எத்தனை திரைப்பட பாடல்கள்!எத்தனை பழைய புத்தகங்கள்! எத்தனை விளம்பரங்கள்! உங்கள் வீட்டிலும், நினைவிலும் சேமித்து வைத்திருக்கிறீர்கள்!! 

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க பானு அக்கா...   !  பிறர் குழந்தைகளை பார்த்துக் கொண்ட அனுபவம்தான் சுவாரஸ்யம்.

   திரை விஷயத்தில் அமானுஷ்யமாக எதிர்பார்த்தீர்களா!  முயற்சி செய்கிறேன்!

   நீக்கு
 20. என்னைப் பொருத்தவரை பல குழந்தைகள் என்னிடம் இசைந்து இருக்கிறது.

  ஆனாலும் பிறர் குழந்தைகளை பார்த்துக் கொள்வது கஷ்டமான காரியம்.

  பதிலளிநீக்கு
 21. அது எப்படி திரைசீலை தலைகீழாகவா எட்டிப் பார்க்கும். எட்டு வைத்தது திரைசீலை என்றால் பொருத்தமாக இல்லையா? 

  Jayakumar

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கால் வைத்து எட்டிப்பார்க்க முயற்சிக்கிறது என்று கூட நினைக்கலாமே!!   நன்றி ஜெயக்குமார் சந்திரசேகர் ஸார்...    இன்னும் காணோமே என்று பார்த்தேன்.

   நீக்கு
 22. இந்த வியாழனில் மிகவு ரசித்தது ட்டிப் பார்த்துச் செல்கிறது
  திரைச்சீலை..
  'நானும் இந்த வீடுதான்..
  கட்டி வைத்து விட்டீர் என்னை
  வாசல் கதவோடு..
  எப்படி இருக்கிறீர்கள்
  எல்லோரும்?'

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நானும் இந்த வீட்டைச் சேர்ந்தவன்
   உங்கள் எல்லா ரகசியமும் எனக்குத் தெரியும்.
   அதை வெளியில் உள்ளவர்களுக்குத் தெரியாமல்
   மறைப்பதுதான் என் வேலை.
   சிலசமயம், அடுத்த அறையில் என்ன பண்ணறீங்கன்னு
   சந்தேகம் வந்தால் எட்டிப் பார்க்க முயல்கிறேன்.

   நீக்கு
  2. இன்னும் பலவாறு யோசிக்கலாம்!

   நீக்கு
 23. குழந்தைகளை பார்த்து கொண்ட அனுபவங்கள் நிறையவே. இப்பொழுதும் நாள் முழுவதும் இது தானே :))

  ஜோக்ஸ் சிரிக்க வைத்தது.

  பதிலளிநீக்கு
 24. குழந்தைகளை பார்த்துக் கொண்ட அனுபவம் - எனக்கும் சில அனுபவங்கள் உண்டு! சில சுவையானவை! சில வேதனையானவை!

  மற்ற பகுதிகளும் நன்று.

  பதிலளிநீக்கு
 25. வாழ்க வளமுடன்
  எப்போதும் பக்கத்து வீட்டுக் குழந்தைகள் எங்கள் வீட்டில் இருக்கும், விளையாட்டு, கதை கேட்டல் சாப்பாடு தூக்கம் கூட உண்டு.
  பெரியவர்கள் ஆனபோதும் எங்களுடன் தான் போற இடமெல்லாம் வருவார்கள்.

  இப்போதும் என்னுடன் பேசி கொண்டு இருக்கிறார்கள்.

  சுபாஷுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் ! வாழ்க வளமுடன்.
  என் அப்பா குழந்தைகளிடம்(எங்களிடம்) சிரிக்க சிரிக்க பேசுவார்கள். அம்மாதான் கண்டிப்பு அப்பா செல்லம்தான்.

  கவிதை நன்றாக இருக்கிறது.
  சிரிப்பு நன்றாக இருக்கிறது பெரிது செய்து படித்து சிரித்தேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க கோமதி அக்கா..   உங்களுடனும் சாருடனும் பழகிய குழந்தைகள் உங்களை எப்படி மறக்கும்?  சுபாஷுக்கு வாழ்த்துகளை சொல்லி விடுகிறேன்.  நன்றி.  கவிதை பாராட்டுகளுக்கு நன்றி.

   நீக்கு
 26. சுபாஷுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! குழந்தைகளைப் பார்த்துக் கொள்வது ஒரு இனிய சவால் :).

  திரைச்சீலைக் கவிதைகள் தொடரட்டும்!

  தொகுப்பு நன்று.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!