சனி, 23 ஜனவரி, 2021

நல்ல செய்திகள்

 

24 மணி நேரம் ஆன்லைனில் வகுப்பு! கின்னஸ் சாதனையில் பங்கேற்ற கோவை ஆசிரியை


கோவை:சி.பி.எஸ்.இ., மற்றும் இன்டெல் நிறுவனம் இணைந்து, சமீபத்தில் மேற்கொண்ட, கின்னஸ் சாதனை முயற்சியில், கோவையில் இருந்து, ஆறுமுககவுண்டனுார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியை சத்யபிரபாதேவி பங்கேற்று, பாராட்டு சான்றிதழ் பெற்றுள்ளார்.செயற்கை நுண்ணறிவு மூலம், புதிய கண்டுபிடிப்புகளை மேற்கொள்வதன் அவசியம் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ஒருநாள் ஆன்லைன் பயிற்சி பட்டறை, கடந்த அக்.,13ம் தேதி நடந்தது. தொடர்ந்து 24 மணி நேரம், இந்த ஆன்லைன் பயிற்சியில் பங்கேற்பதோடு, செயற்கை நுண்ணறிவு குறித்த கேள்விகளுக்கும் பதிலளிக்க வேண்டும். 

இம்முயற்சியில், நாடு முழுக்க, தொழில்நுட்ப வல்லுனர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் பலர் பங்கேற்றனர்.கோவை, தொண்டாமுத்துார், ஆறுமுககவுண்டனுார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியை சத்யபிரபாதேவியும், இம்முயற்சியில் பங்கேற்றார். இவரை பாராட்டி, சி.பி.எஸ்.இ., சான்றிதழ் வழங்கியுள்ளது.

இதுகுறித்து, ஆசிரியை சத்யபிரபாதேவி கூறியதாவது:மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் இன்டெல் நிறுவனம் இணைந்து, கடந்த செப். மாதம், செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தி, செயல்திட்டங்கள் தயாரிப்பதற்கான கருத்துருக்கள் அனுப்பி வைக்கும் போட்டியை நடத்தியது.இதில், எங்கள் பள்ளி எட்டாம் வகுப்பு மாணவி தாரணி, சூழல் மேம்பாட்டை வலியுறுத்தி, குப்பை மேலாண்மை குறித்தும், மாணவி ஷோபனா ஆசிரியரில்லாத போது வகுப்பறையை மேலாண்மை செய்வது குறித்தும், மாணவி பிரியதர்ஷினி, ஜி.பி.எஸ்., பொருத்தப்பட்ட கைக்கடிகாரம் அணிவதன் மூலம், பாலியல் சீண்டல்களில் இருந்து விடுபடுவது குறித்தும், செயல்திட்டங்களை சமர்ப்பித்தனர்.நாடு முழுக்க, ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பங்கேற்ற இந்நிகழ்ச்சியில், அரசுப்பள்ளி மாணவிகளும், ஆன்லைன் மூலம் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. இச்செயல்திட்டங்களுக்கு பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக தான், கின்னஸ் சாதனை முயற்சியில் பங்கேற்றேன். பள்ளி கல்வித்துறை அதிகாரிகள், இதில் பங்கேற்க பெரிதும் ஊக்கமளித்தனர். கிராமப்புற பள்ளி மாணவர்கள், இதுபோன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்பதன் மூலம், அவர்களின் தேடல் மேலும் விரிவடையும்.இவ்வாறு, அவர் கூறினார்.

==== 

பிரிஸ்பேன் டெஸ்ட்: இந்தியா சாதனை வெற்றி. 


பிரிஸ்பேன்: நான்காவது டெஸ்டில் சுப்மன் கில் , புஜாரா, ரிஷாப் பன்ட் அரைசதம் கடந்து கைகொடுக்க இந்திய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் பிரிஸ்பேன் மைதானத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி புதிய சாதனை படைத்தது.

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி, நான்கு போட்டிகள் கொண்ட ‛பார்டர்-கவாஸ்கர் டிராபி' டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. முதல் மூன்று போட்டிகளின் முடிவில் தொடர் 1-1 என, சமநிலையில் இருந்தது. நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் பிரிஸ்பேனில் நடந்தது. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 369, இந்தியா 336 ரன்கள் எடுத்தன. இரண்டாவது இன்னிங்சில் ஆஸ்திரேலிய அண 294 ரன்கள் எடுத்தது. பின், 328 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சவாலான இலக்குடன் 2வது இன்னிங்சை துவக்கிய இந்திய அணி, 4ம் நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 4 ரன் எடுத்திருந்தது. ரோகித் (4), சுப்மன் (0) அவுட்டாகாமல் இருந்தனர்.

ஐந்தாம் நாள் ஆட்டத்தில், 324 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் 2வது இன்னிங்சை துவக்கிய இந்திய அணிக்கு ரோகித் சர்மா (7) ஏமாற்றினார். அபாரமாக ஆடிய சுப்மன் கில் (91) அரைசதம் கடந்தார். கேப்டன் ரகானே (24) நிலைக்கவில்லை. நிதானமாக ஆடிய புஜாரா (56) தன்பங்கிற்கு அரைசதமடித்தார். மறுமுனையில் அசத்திய ரிஷாப் பன்ட் அரைசதம் கடந்தார். மயங்க் அகர்வால் (9) நிலைக்கவில்லை. லியான் 'சுழலில்' வாஷிங்டன் சுந்தர் (22) போல்டானார். ஹேசல்வுட் 'வேகத்தில்' ஷர்துல் தாகூர் (2) வெளியேறினார். ஹேசல்வுட் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய ரிஷாப் பன்ட் வெற்றியை உறுதி செய்தார்.

இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணி 7 விக்கெட்டுக்கு 329 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ரிஷாப் பன்ட் (89), நவ்தீப் சைனி (0) அவுட்டாகாமல் இருந்தனர். ஆஸ்திரேலியா சார்பில் கம்மின்ஸ் 4, லியான் 2 விக்கெட் கைப்பற்றினர். இதனையடுத்து நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி தொடர்ந்து 2வது முறையாக 'பார்டர்-கவாஸ்கர்' கோப்பை வென்றது. தவிர, இம்மைதானத்தில் ஆஸ்திரேலிய அணி முதன்முறையாக தோல்வியை தழுவியது.

= = = = 

ஏழுமலையானுக்கு முஸ்லிம்கள் நன்கொடை. 

திருப்பதி: திருமலை ஏழுமலையானுக்கு, ஆந்திர மாநிலத்தில் உள்ள இஸ்லாமியர்கள், 3 டன் காய்கறிகளை நன்கொடையாக வழங்கினர்.

திருப்பதி, திருமலை ஏழுமலையான் பெயரில், தேவஸ்தானம் நடத்தி வரும் அன்னதான அறக்கட்டளைக்கு, பல ஊர்களைச் சேர்ந்த விவசாயிகள், வியாபாரிகள், காய்கறிகள், மளிகை பொருட்களை நன்கொடையாக அளித்து வருகின்றனர். இந்நிலையில், சித்துார் மாவட்டம் கேஜி கண்டரிக பகுதியில் காய்கறி வியாபாரம் செய்து வரும் இஸ்லாமியர்கள் இணைந்து, ஏழுமலையானின் அன்னதான அறக்கட்டளைக்கு ஜனவரி 19 அன்று மூன்று டன் காய்கறிகளை நன்கொடையாக அனுப்பினர்.

'பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குவது இறைவனுக்கு வழங்குவதற்கு சமம். அதற்கு எங்களால் இயன்ற சிறு முயற்சி' என, நன்கொடை வழங்கிய இஸ்லாமியர்கள் தெரிவித்தனர். நேற்று முன்தினம் திருமலை ஏழுமலையான் உண்டியலில் செலுத்தப்பட்ட காணிக்கைகள் நேற்று கணக்கிடப்பட்டன. அதில், மூன்று கோடியே, 11 லட்சம் ரூபாய் தேவஸ்தானத்திற்கு வருமானமாக கிடைத்துள்ளது. கடந்த சில நாட்களாக, சராசரியாக 2 கோடி ரூபாய் வசூலாகி வந்த உண்டியல் காணிக்கை,   ஒரே நாளில், 3 கோடி ரூபாயை எட்டியுள்ளது.

= = = =

மிளகாய் தரும் மின்சாரம்!

சூரிய ஒளியில் மின்சாரம் தயாரிக்க உதவும் மின் தகடுகளை செய்ய, 'பெரோவ்ஸ்கைட்' என்ற புதுவகை தாது பயன்படுகிறது. சிலிக்கானுக்கு மாற்றாக வந்துள்ள இதன் செயல்பாட்டை அதிகரிக்க, மிளகாயின் காரத்திற்கு மூலமாக இருக்கும், 'கேப்சைசின்' என்ற பொருளை பயன்படுத்தலாம் என, ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

பெரோவ்ஸ்கைட் தாதுவை சூரிய ஒளி மின்தகடாக மாற்றும்போது, அதன் வேதிச் சமநிலையின்மையால் விரைவில் வெப்பமடைகிறது. இதை தடுக்க, சிலிக்கன் போன்ற பிற தாதுக்களை கலந்தே பெரோவ்ஸ்கைட் தகடுகளை ஆய்வகத்தில் விஞ்ஞானிகள் தயாரித்தனர். அத்தகைய கலவைக்கு கேப்சைசினை சேர்த்தால், அந்த தகடுகள் வேதியல் ரீதியாக உறுதியடைவதுடன், கூடுதலாக மின்சாரத்தையும் உற்பத்தி செய்வதை விஞ்ஞானிகள் கவனித்தனர்.

இந்த ஆய்வு, 'ஜூல்' இதழில் வெளியாகியுள்ளது.இயற்கையில் கிடைக்கும் தாதுவுடன், இயற்கையில் விளையும் மிளகாய் சேரும்போது நடக்கும் இந்த விந்தையால், சூரிய மின் ஒளி உலகம் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளது.

= = = =


37 கருத்துகள்:

 1. அனைவருக்கும் இனிய காலை வணக்கம். அனைத்து நலங்களையும் இறைவன்
  அருள வேண்டும்.

  பதிலளிநீக்கு
 2. மதிப்பிற்குரிய ஆசிரியை பங்கெடுத்து கின்னஸ்
  சாதனை புரிந்ததும்,
  மாணவிகள் பங்கேற்ற பிரிவுகளும்
  மனதைப் பிரமிக்க வைக்கின்றன.
  திருமதி சத்திய பிரபா தேவிக்கு
  மனம் நிறைந்த பாராட்டுகள்.இமாலய சாதனைதான். தெரிவித்த உங்களுக்கும் நன்றி ஜி.

  பதிலளிநீக்கு
 3. திருப்பதி தேவஸ்தானத்தில்
  அன்னதானத்தில் பங்கேற்ற முஸ்லீம் நண்பர்களின்
  பெருந்தன்மையான உபகாரம் மிகுந்த
  பெருமைக்குரியது.
  உண்மையிலேயே மகிழ்ச்சி தரும் செய்தி.
  நலமுடன் இருக்க வேண்டும்.

  பதிலளிநீக்கு
 4. ஜூல்'' என்று ஒரு இதழா? அட!!!

  சூரிய மின்சாரம். மிளகாயிலிருந்து கிடைக்கிறது என்பதே வியப்பு.
  அதுவும்
  காரம் என்ற ஒரு சுள்ளென்ற சுவையிலிருந்து
  கிடைக்கும் நல்ல சக்தி.
  தெலுங்கு தேசத்தில் நிறைய சக்தி கிடைக்கும் என்று நம்பலாம்.
  விஞ்ஞான வளர்ச்சிக்கு வந்தனங்கள்.

  பதிலளிநீக்கு
 5. அனைவருக்கும் காலை வணக்கம். வித்தியாசமான பாசிட்டிவ் செய்திகள்.
  கின்னஸ் ரெகார்டுகளால் ஏதாவது பயன் உண்டா? அந்த ஆசிரியையை விட மேற்படி தகவல்கள் பிடித்தன.
  திருமலையில் அன்னதானத்திற்காக காய்கறிகள் அளித்த இஸ்லாமியர்கள் பற்றிய செய்தி எனக்கு மஸ்கட்டில் இருந்த முகமது என்னும் காய்கறி வியாபாரியை நினைவு படுத்தியது. அவர் ஒவ்வொரு வருடமும் அங்கு ஐயப்பன் பூஜை நடக்கும் பொழுது அன்னதானத்திற்கு தேவையான தேங்காய்களை வழங்குவார்.
  மிளகாயிலிருந்து மின்சாரமா? Interesting!
  பல வருடங்களுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவில் கோப்பையை வென்றிருக்கிறோம். மகிழ்ச்சிதான். என்றாலும் பாசிட்டிவ் செய்திகளில் அதை சேர்த்தது...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பாசிடிவ் செய்திகள் என்பதை நல்ல செய்திகள் என்ற தலைப்பில்தான் சில வாரங்களாக வெளியிடுகிறோம். கோப்பை வென்றது நல்ல செய்திதானே!

   நீக்கு
 6. சனிக்கிழமை ‘நல்ல செய்தி’களில் இந்திய கிரிக்கெட் வெற்றிபற்றியா!
  கிரிக்கெட் சாதனைகளும் சனிக்கிழமைகளில் வருமா? ஆச்சரிய சனியாக இருக்கிறதே இது!

  பதிலளிநீக்கு
 7. ஶ்ரீராமின் மருமகன் சுபாஷிற்கு பிறந்தநாள் வாழ்த்துகள்(Jan23)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பேஸ்புக் ல shivram sugavanam என்று தேடி அங்கே வாழ்த்துங்கள்.

   நீக்கு
 8. இன்று பிறந்த நாள் கொண்டாடும் ஶ்ரீராமின் மருமகன் சுபாஷிற்கு பிறந்த நாள் வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஸ்ரீராமின் மருமகனா! அவ்வளவு ‘பெரிய’ ஆளா ஸ்ரீராம்!
   @ BV: ரகசியத்தை போட்டு உடைத்துவிட்டீர்களோ?

   சுபாஷிற்கு மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துகள். பயப்படாமல் இனிப்பு சாப்பிட்டு மகிழட்டும்!

   நீக்கு
  2. சுபாஷ் பற்றிய தகவல்கள் கடந்த வியாழன் பதிவில் படிக்கவில்லையா!

   நீக்கு
 9. இத்தகைய இஸ்லாமிய நண்பர்கள் ‘சுஃபி’ வகை உயர்சிந்தனை உடையவர்கள் எனத் தோன்றுகிறது. பக்தி, ஞானம், தெய்வம் என்பனவற்றை ஒரே நேர்கோட்டில் பார்த்துப் பரவசப்படுபவர்கள். அல்லா அல்லது தெய்வம் எந்த ரூபத்திலிருந்தாலென்ன.. அரூபமாயிருந்தால்தான் என்ன.. அவனுக்கே எல்லாம், அவனடியாரே யாவரும் என சிந்திக்கும் நலமுடையவர்கள் போலும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம்..இஸ்லாமியர்களில் சூஃபிகள் (இரானில் தோன்றியது) இறைவனோடு ஒன்றிய சாத்வீக இறைச்சிந்தனை உள்ளவர்கள். தர்க்ஹா போன்றவற்றில் நம்பிக்கை உடையவர்கள்.

   நீக்கு
  2. ’.. என சிந்திக்கும் நலமுடையவர்கள் போலும்’ என நான் எழுதியது திருப்பதியில் அன்னதானம் செய்து உதவிய நண்பர்களைப்பற்றி.

   சுஃபிகள் பற்றி அடியேனும் கொஞ்சம் அறிவேன். அந்த ஞானமரபில் வந்த ஒருவர் பற்றிய கட்டுரை ஒன்றும் ‘சொல்வன’த்தில் முன்பு எழுதியிருக்கிறேன். பர்ஷியப் பின்புலம் (இப்போதைய ஈரான், ஈராக், ஆஃப்கானிஸ்தான் பகுதிகள்) உடைய முந்தைய நூற்றாண்டுகளின் பல சுஃபி ஞானிகள்/கவிஞர்களில், சிலரைப்பற்றியே நமக்கு அறியக் கிடைத்திருக்கிறது.

   நீக்கு
  3. நல்ல தகவல்களுக்கு நன்றி.

   நீக்கு
 10. இன்றைய நேர்மறைச் செய்திகள் அருமை.

  பாலிடீஷியன் கோஹ்லி முதல் டெஸ்டுத் தோற்றபோதும், இளம் வீர்ர்கள் இரண்டு டெஸ்டுகளை வென்று எதிர்கால இந்திய அணிக்கு நம்பிக்கை கொடுத்ததனால் பாசிடவ் செய்திகளில் சேர்த்துவிட்டீர்களா?

  பதிலளிநீக்கு
 11. பாலிடீஷியன் கோஹ்லி!
  ‘முதல் டெஸ்டுத் தோற்றபோதுமா’? முதல் டெஸ்ட்டில் மண்ணைக் கவ்வியபோதும்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கோஹ்லிக்கு இது அழிக்க முடியாத கருப்புப் பொட்டு. Test Lowest Score captain Kohli. நம்ம கவாஸ்கருக்கு ஒரு நாள் போட்டியின் ஆமை வேக ஸ்கோர் ரெகார்ட் மாதிரி. ரவி சாஸ்திரிக்குத்தான் மச்சம். வெத்தாக இருந்த போதும் அடுத்தவன் வெற்றியைத் தன் வெற்றியாகக் காண்பிக்க முடிகிறது.

   நீக்கு
  2. ரவி சாஸ்திரியால்தான் உலகமே திரும்பிப் படுத்தது எனச் சொல்வோர்கள் சிலரையும் மீடியாவில் -அதாவது குறிப்பாக தமிழில்- பார்க்கிறேன்!

   நீக்கு
 12. ஏழுமலையானுக்கு இஸ்லாமிய நண்பர்கள் உணவுப் பொருள் வழங்கியது மத நல்லிணக்கத்தை காட்டுகிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தமிழன் நட்டுவிற்கு, அற்ப மாமா மாமீஸ், "எரியுதடி மாலா" எனும் மிக நல்ல செய்திகள் அறிந்திருப்பீர்கள் ஜி... நன்றி...

   நீக்கு
 13. தெரியாத அரிய செய்திகளைத் தொகுத்துக் கொடுத்தமைக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 14. அடடே.. 3 கோடி ரூபாய்... நன்று... முஸ்லிம்கள் கொடுத்தால் என்ன...? பணம் முக்கியம்...(!)

  பதிலளிநீக்கு
 15. வாழ்க வளமுடன்
  நல்ல செய்திகளுக்கு வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!