சனி, 4 செப்டம்பர், 2021

மாதவி நித்திய கன்னி

 எண்ணுார்-தலையணையில் மறைத்து வைத்திருந்த, 90 ஆயிரம் ரூபாயை, மூதாட்டி ஆட்டோவில் தவற விட்ட நிலையில், துரிதமாக செயல்பட்டு போலீசார் மீட்டுக் கொடுத்தனர்.

புதுடில்லியைச் சேர்ந்த முகமது வசீம், 35, மணலி புதுநகர் ஆண்டார்குப்பத்தில் தங்கி கார்பென்டர் வேலை செய்கிறார். இவரது தாய் சாந்தாபீ, 60.நேற்று முன்தினம் இரவு புதுடில்லி செல்ல சாந்தாபீ, தன் உடைமைகளுடன் ஆண்டார்குப்பத்தில் இருந்து ஆட்டோவில் விம்கோ நகர் ரயில் நிலையம் வரை சென்று, பின் மின்சார ரயிலில் சென்ட்ரல் ரயில் நிலையம் சென்றார்.அங்கு, டில்லி விரைவு ரயிலில் ஏறிய போது, தான் கொண்டு வந்த தலையணையை தவற விட்டது தெரிந்தது.

தலையணைக்குள், சிறுக சிறுக சேமித்த 90 ஆயிரம் ரூபாய் பணத்தை, சாந்தாபீ மறைத்து வைத்திருந்தார்.இதுகுறித்து, மகன் முகமது வசீமிடம் கூறியதும், அவர் எண்ணுார் காவல் நிலையத்தில் புகாரளித்தார். போலீஸ் விசாரணையில், மூதாட்டி ஆட்டோவில் தலையணையை தவற விட்டது தெரிந்தது. ஆட்டோ ஓட்டுனர் முருகன், 60, என்பவரிடம் விசாரித்த போது, தலையணையை குப்பை என நினைத்து, எம்.எப்.எல்., சந்திப்பில் ஓடையில் வீசியதாகக் கூறினார்.

அங்கு விரைந்து சென்று பார்த்த போது ஓடையில் தலையணையும், அதனுள் 90 ஆயிரம் ரூபாய் பணமும் இருந்தது. அதை சாந்தாபீயின் மகனிடம் போலீசார் ஒப்படைத்தனர்.துரிதமாக செயல்பட்டு, மூதாட்டியின் பணத்தை மீட்டுக் கொடுத்த எண்ணுார் குற்றப்பிரிவு போலீசாரை, உதவி கமிஷனர் பிரம்மானந்தம், மாதவரம் துணை கமிஷனர் சுந்தரவதனன் உள்ளிட்ட உயரதிகாரிகள் பாராட்டினர்.

=============================================================================================

தஞ்சாவூர் :மனநலம் பாதிக்கப்பட்ட பெண், பிரசவ வலியில் துடித்தபோது, துரிதமாக செயல்பட்டு தாயையும் சேயையும் காப்பாற்றிய பெண் போலீசாரை தஞ்சை டி.ஐ.ஜி., பாராட்டினர்.


தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் பொற்றாமரை குளத்தின் கிழக்கு கரையில், ஆதரவற்ற நிலையில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர், ஆக., 30ம் தேதி பிரசவ வலியால் துடித்து, ரத்தப்போக்குடன் கிடந்துள்ளார்.

அவ்வழியாக சென்ற, மேற்கு ஸ்டேஷன் பெண் போலீஸ் சுகுணா, மகளிர் போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் அளித்தார். அங்கு வந்த சில பெண் போலீசார், பிரசவ வலியால் துடித்த பெண்ணுக்கு முதலுதவி அளித்தனர். அங்கேயே பெண் குழந்தை பிறந்தது. கும்பகோணம் மேற்கு இன்ஸ்பெக்டர் பேபி, ஆம்புலன்ஸ் மூலம் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் தாய், சேயை சேர்க்க வைத்தார். தஞ்சை சரக டி.ஐ.ஜி., பிரவேஷ்குமார், தாயையும், சேயையும் காப்பாற்றிய பெண் போலீசாரை பாராட்டி, சான்றிதழ் வழங்கினார்.


விசாரணையில், பாலக்கரையைச் சேர்ந்த ஜான், 40 என்பவர், மனநலம் பாதித்த பெண்ணை கர்ப்பமாக்கியது தெரிந்தது. அவரை மகளிர் போலீசார் கைது செய்தனர்.

============================================================================================



நான் படிச்ச கதை 


ஜீவி 

------------------------------------------------





மாதவி என்றாலே நம் நினைவுக்கு வரும்  காவியம் சிலப்பதிகாரம் தான்.


ஆனால் மஹாபாரதத்து மாதவியைப் பலருக்குத் தெரியாது.   அந்நாளைய
பிரபல கும்பகோணத்து எழுத்தாளர் எம்.வி. வெங்கட்ராம் அவர்கள் எழுதிய 'நித்திய கன்னி' என்ற நாவலை வாசித்த பொழுது தான் எனக்கும் இந்த மஹாபாரதத்து மாதவியின் அறிமுகம் கிட்டியது.

இந்த மாதவி பெற்ற வரமோ வெகு விசித்திரமானது.  ஒரு  குழந்தை பிறந்ததும் அவள் கன்னியாகி விடுவாள் என்பது தான் அந்த  விசித்திர வரம். 
விஸ்வாமித்திரரின் சிஷ்யன்  காலவன்.  கல்வி கற்பித்த குருவிற்கு தட்சணை தர விரும்புகிறான். ஒரு காது மட்டும் கறுப்பாக இருக்கும் வெள்ளைக் குதிரைகள் எண்ணூறை தட்சணையாகக் கேட்கிறார் குரு.

தவப்புருஷர் யயாதியின்  மகள் தான் மாதவி.  விஸ்வாமித்திரர் கேட்ட எண்ணூறு குதிரைகளை யயாதியிடம் கேட்டுப் பெற்றுக் கொள் என்கிறார்  கருட பகவான்.  யயாதியிடம் சென்று காலவன் கேட்ட பொழுது அப்படிப்பட்ட குதிரைகள் என்னிடம் இல்லையே என்று திகைக்கிறார் யயாதி.  இருந்தும் அந்தணன் கேட்டதை இல்லையென்று சொல்ல மனம் பொறுக்காது இவளை வைத்து எண்ணூறு குதிரைகளைப் பெற்றுக் கொள்ளுங்கள்  என்று தன் மகளை காலவனிடம் ஒப்படைக்கிறார்.

காலவர் ரிஷியாக இருந்தாலும் ரிஷி பத்தினியாக மாதவியை ஏற்றுக் கொள்ள எந்தத் தடையும் இல்லாத போதும் விசுவாமித்திரரின் குரு தட்சணை இடையில் தடையாக இருக்கிறது. விசுவாமித்திரரே அதற்கும் வழி சொல்கிறார். "அயோத்தி, காசி, போஜ மன்னர்களை அணுகிப் பார். அவர்களிடம் இந்த மாதிரி ஒரு காது மட்டும் கறுப்பாய் இருக்கும் வெள்ளைக் குதிரைகள் இருக்கின்றன.

ஒவ்வொருவரிடமும் இரு நூறு குதிரைகள் தேறும். ஒருவருக்கு மாதவியை மனைவியாக்கி ஒரு குழந்தை பிறந்ததும் அடுத்தவர் என்று மூன்று பேர்களுடமிருந்து அறுநூறு குதிரைகள் கிடைக்கும். மீதி இருநூறு குதிரைகளுக்கு நானாச்சு" என்கிறார்.

மாதவியைப் பார்த்த மாத்திரத்தில் மதி மயங்கி அவளை மணக்க சம்மதிக்கிறான் அயோத்தி அரசன்.  காசி அரசருக்கோ குழந்தை இல்லை. அந்த பாக்கியம் கிடைக்க மாதவி அவருக்கு மனைவி ஆகிறாள். போஜராஜனோ ஒரு நேர்மையான முடிவெடிக்கிறான். "என் கணக்கில் இருநூறு புரவிகள் கொடுக்கிறேன். அதை விசுவாமித்திரரிடம் கொடுத்து இந்த சுழற்சி வலையிலிருந்து மாதவியை மீட்டு விடுங்கள். பின் நேரடியாகவே யயாதியிடம் சென்று விரும்பிக் கேட்டு மாதவியை மணம் புரிகிறேன்" என்கிறான். அப்பொழுது தான் காலவருக்கும் மாதவிக்கும் இருக்கும் நேசிப்பு அவருக்குத் தெரிய வருகிறது.  

இந்த இடத்தில் போஜராஜனாய் எம்.வி.வி. வெளிப்பட்டு எழுதிய எழுத்துக்கள் அக்னி பிழம்புகளாய் கனல் கக்குகின்றன.  ஒரு பெண்ணை பகடைக் காயாய் வைத்து இப்படி விளையாடும் அவலப் போக்கை சண்டமாருதமாய் சாடுகிறார்.

ஒரு இடத்தில் மாதவியின் நினைப்பாய் எம்.வி.வி. எழுதுகிறார்:

'பெண்ணை அபலை ஆக்கினார்கள்  அவளை ஆடவனே ரட்சிக்க வேண்டுமென்று விதியையும் ஏற்படுத்தினார்கள்.. ஆனால் அவள் அபலை என்ற அதே காரணத்தால் புருஷன் அவளுக்கு எவ்வளவு அக்கிரமங்களைச் செய்யத் துணிகிறான்? .. அவனே வகுத்த ஸ்த்ரீ தர்மத்தை அவன் தன் நலத்திற்கும் விருப்பத்திற்கும் ஏற்ப எவ்வளவு முடுக்குகிறான்? எவ்வளவு தளர்த்துகிறான்? தர்ம ஸ்தம்பங்கள் என்று கருதப்பெறும் முனிவர் பெருமான்களும் கூட இத்தகைய காரியங்களுக்கு பங்காளிகள் என்றால்?... அவர்களை மறுத்து யாரால் பேச முடியும்? மறுத்து வாய் திறப்பதே அதர்மம் ஆகி விடுமோ?" என்று குமுறுகிறாள்.

கடைசியில் கணக்கை நேர் செய்ய மீதி இருநூறு குதிரைகளுக்காக  விஸ்வாமித்திர  முனிவரே மாதவியை மணந்து கொள்கிறார். ஒரு குழந்தையும் அவர்களுக்குப் பிறக்கிறது. இந்த நிலையில் அவள் கன்னியாகிவிடுகிறாள், இல்லையா? ... காலவரும் தன் காதலி மாதவியை மணக்க வழியேற்படும் பொழுது குரு--சிஷ்ய உறவு தடையாக எழுகிறது. குரு விஸ்வாமித்திரரின் மனைவியாய் இருந்த்தினால் காலவருக்கு மாதவி அம்மா ஸ்தானத்தில் இருந்தவளாயிற்றே என்கிற நிலையில் குழப்பம்.  அந்த சென்டிமென்ட்டையெல்லாம் புறக்கணித்து காலவரும் மாதவியை மணக்க எத்தனிக்கையில் இதற்கு மேல் மனம் பொறுக்க சக்தியில்லாமல் மாதவி கானகம் புகுகிறாள்.

இந்த 'நித்திய கன்னி' புதினத்தில் ஓரிடத்தில் மஹாபாரத மாதவியின் கூற்றாய் இந்த வரிகள் வருகின்றன:

"உனக்கு விருப்பமா?' என்று கேட்டான் ஹர்யகவன்.  அதற்கு மாதவி, " பெண்ணுக்கு தனிப்பட்ட விருப்பம் ஏது? மணத்திற்கு முன் அவள் தந்தைக்கு உட்பட்டவள். மணமான பின் கணவனுக்கு.   கைம்பெண் ஆனால் அல்லது வயதானால் புத்திரர்களுக்கு அடங்கியவள். அவளுக்கு ஏது தனிப்பட்ட உரிமை?" என்று கேட்கிறாள்.  இத்தனை ஆண்டுகள் கடந்தும் இன்றைய நிலையில் இதிலெல்லாம் என்ன மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன என்பது நமது யூகத்திற்கே உரியது.  பெண்ணின் பாதுகாப்பை நிச்சயப்படுத்துவதில் எந்தக் காலத்திலும் மாற்றமில்லை என்று கொள்ளலாமா அல்லது அது அந்தந்த பெண்களின் வாழ்க்கை அனுபவங்களை ஒட்டியதாய் நிலமைகள் தலைகீழ் புரட்டலாய் மாறியிருக்கின்றன  என்று கொள்ளலாமா என்பதை இன்றைய பெண்னினத்தின் சொந்த அனுபவ முடிவுகளுக்கு விட்டு விடுவதே உசிதமானது.

எம்.வி. வெங்கட்ராம்:

தி. ஜானகிராமனுக்கு கிடைத்த அருமை நண்பர்.
'வேள்வித்தீ' என்ற பெயரில் தனது மனதிற்கிசைந்த நாவலை எழுதியவர்.  

மொழிபெயர்ப்பில் மனிதர்  மன்னன்.  நேஷனல் புக் டிரஸ்ட் ஆஃப் இந்தியாவுக்காக நிறைய மொழிபெயர்ப்புக்களைச் செய்திருக்கிறார்.

கலாபூர்வமான படைப்புகளை வெளிக்கொணர வேண்டுமென்ற ஆவலில் 'தேனி' என்ற பெயரில் புதுமையான பத்திரிகையை கும்பகோண ஷேத்திரத்தில் தொடங்கினார். கரிச்சான் குஞ்சு துணை ஆசிரியர்.

ஜானகிராமன்,  சிதம்பர சுப்ரமணியன், ந.பிச்சமூர்த்தி, க.நா.சு.,  ஸ்வாமிநாத ஆத்ரேயன், சாலிவாஹனன், கி.ரா., வல்லிக்கண்ணன் என்று ஒரு பெரிய இலக்கிய பட்டாளமே அணிவகுத்து வாள் (பேனா) தூக்கி நின்றது.  இருந்தும் எல்லா இலக்கிய ஏடுகளுக்கும் என்ன நடக்குமோ அது தான் நடந்தது... தாக்குப் பிடித்த காலம் பெயர் சொல்வதாய் இருந்தது தான் அவர்கள் வெற்றி.

ஆனாலும் எம்.வி.வி-யைப் போன்ற இலக்கிய தாகம் கொண்டவர்கள் வாழையடி வாழையாக வழிவழியாக பகவத்கீதையின் இதய வாசகம் போல், 'கடமையைச் செய்;  பலனை எதிர்பார்க்காதே'  என்று தம் பணியை ஆயிரம் இன்னல் வறுமைக் கிடையேயும் செய்து கொண்டு தான் இருக்கிறார்கள்.

அது தான் ஒரு மொழியின் வளர்ச்சிக்கான அடி உரமாகவும் தெரிகிறது.

20 கருத்துகள்:

  1. இந்த வாரம் பாசிட்டிவ் செய்திகள், நெகடிவ் பாசிட்டிவ் ஆன செய்திகள். பணம் போனது நெகடிவ். கிடைத்தது பாசிட்டிவ். அதே போன்று குளக்கரையில் பிரசவம் நெகடிவ். தாய் சேய்  மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது பாசிட்டிவ். மாதவி பலருக்கு மனைவி ஆக்கப்பட்டது நெகடிவ். MVV பற்றிய செய்திகள் பாசிடிவ்.

    Jayakumar

    பதிலளிநீக்கு
  2. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம். அனைவர் வாழ்க்கையிலும் ஆரோக்கியம் மேலோங்கி அமைதியான மகிழ்வான வாழ்க்கை வாழப் பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
  3. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
    எல்லோரும் என்றும் நலமுடன் இருக்க
    இறைவன் அருள வேண்டும்.

    பதிலளிநீக்கு
  4. மனித நேயத்தைக் குறிப்பிட்ட செய்திகளுக்கு மனமார்ந்த நன்றி. விஸ்வாமித்ரர்--காலவர் பற்றிய இந்தக் கதை படித்திருக்கேன். மனசு கிடந்து அலைபாயும். தவிக்கும். பொறுமை போய்விடும். பொருமித் தீர்க்கும்! :( எம்விவியின் எழுத்து அத்தகையது. அதிலும் "வேள்வித்தீ" படிச்சுட்டுப் பல நாட்கள் தூக்கமின்றித் தவிச்சிருக்கேன். எப்போவும் வயிற்றில் ஒன்றும் கைகளில் ஒன்றுமாகக் கட்டிக்கொண்டு குளத்தில் இறங்கிய கதாநாயகியின் நினைவே மேலெழுந்து நின்று தூக்கத்தை விரட்டி விடும். அத்தனையும் கடந்து அந்தக்கதாநாயகன் காதலித்த பென்ணோடு (ஹேமா? கதைப்படி விதவையாக இருப்பார். ) இணைந்ததை நினைக்கையில் மனசு பரிதவித்து அழுகை முட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம். உங்கள் நினைவுகள் சரியே.
      அந்தப் பெண்ணின் பெயர் ஹேமா தான்.

      வேள்வித்தீ
      உங்கள் நினைவு மீட்டலுக்காக:
      நாயகன் - கண்ணன்
      நாயகி - கெளசலை
      நாயகியின் தோழி- இளம் விதவை ஹேமா.

      வேள்வித்தீயின் மையக்கரு கும்பகோணம் சார்ந்த செளராஷ்டிர
      தறி நெசவாளர்களின் வாழ்க்கைப் போராட்டத்தைச் சித்தரிப்பது.

      நீக்கு
    2. நானும் படித்து இருக்கிறேன் வேள்வித்தீ
      மனதை கனக்க வைத்த கதை.

      நீக்கு
  5. "மூதாட்டியின் பணத்தை மீட்டுக் கொடுத்த எண்ணுார் குற்றப்பிரிவு போலீசாரை, உதவி கமிஷனர் பிரம்மானந்தம், மாதவரம் துணை கமிஷனர் சுந்தரவதனன் உள்ளிட்ட உயரதிகாரிகள் பாராட்டினர்."நாமும் பாராட்டுவோம் மிக நல்ல செய்தி. நன்றி கௌதமன் ஜி.

    பதிலளிநீக்கு
  6. "தஞ்சாவூர் :மனநலம் பாதிக்கப்பட்ட பெண், பிரசவ வலியில் துடித்தபோது, துரிதமாக செயல்பட்டு தாயையும் சேயையும் காப்பாற்றிய பெண் போலீசாரை தஞ்சை டி.ஐ.ஜி., பாராட்டினர்." அந்தத் தாயையும் குழந்தையையும் காப்பாற்றிய
    பெண்போலீஸாருக்கு அன்பு நிறை பாராட்டுகள்.

    அவரை இந்த நிலைக்கு ஆளாக்கின
    அறிவில்லாதவரைக் கண்டறிந்து தண்டிக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  7. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
    இறையருள் சூழ்க எங்கெங்கும்..

    வாழ்க வையகம்..
    வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  8. பாசிட்டிவ் செய்திகளுக்காக சந்தோஷப்பட முடியாமல் நித்திய கன்னி மாதவியின் கதை மனதை கணக்க செய்து விட்டது.

    பதிலளிநீக்கு
  9. பாசிட்டிவ் செய்திகளுக்காக சந்தோஷப்பட முடியாமல் 'நித்ய கன்னி' கதை மனதை அழுத்துகிறது. சுருக்கமே இத்தனை பாதிப்பை தந்தால் ஒரிஜினல் எப்படிப்பட்ட பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும்?

    பதிலளிநீக்கு
  10. சிறுக சிறுக சேமித்த 90 ஆயிரம் ரூபாய் பணத்தை, சாந்தாபீ அவர்களுக்கு மீட்டுக் கொடுத்த காவல்துறைக்கு வாழ்த்துக்கள்! நன்றிகள்.


    போலீஸ்சுகுணாஅவர்களின் மனிதநேயத்திற்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  11. ஜீவி, சார் பகிர்ந்த நித்திய கன்னி மாதவி மனதை சங்கடபடுத்தும் கதை.

    // " பெண்ணுக்கு தனிப்பட்ட விருப்பம் ஏது? மணத்திற்கு முன் அவள் தந்தைக்கு உட்பட்டவள். மணமான பின் கணவனுக்கு. கைம்பெண் ஆனால் அல்லது வயதானால் புத்திரர்களுக்கு அடங்கியவள். அவளுக்கு ஏது தனிப்பட்ட உரிமை?" என்று கேட்கிறாள்.//

    அன்றைய நிலை அப்படித்தானே!
    இப்போது மாறுதல் அடைந்து வருகிறது.

    பதிலளிநீக்கு
  12. அந்தக் காலத்து பெண்கள் இப்படி எல்லாம் வாழவேண்டி இருந்திருக்கிறது என்ற ஏக்கம்தான் வருகிறது.

    பதிலளிநீக்கு
  13. நல்ல செய்திகள். மகிழ்ச்சி.

    நான் படித்த கதை பகுதி சிறப்பாக இருக்கிறது. எம்.வி.வி. அவர்களின் கதை குறித்த பகிர்வு சிறப்பு. அவரது நூல்கள் இணைய/கிண்டில் வழி கிடைக்கிறதா என பார்க்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  14. அமேசானில் இந்தப் புத்தகமே கிடைக்கிறது, வெங்கட்.

    https://www.amazon.in/Nithya-Kanni-M-V-Venkatram/dp/8189359525

    தங்கள் கருத்துரைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!