சனி, 12 மார்ச், 2022

விஞ்ஞான முன்னேற்றங்கள் ! & நான் படிச்ச புத்தகம்

 

பூச்சியை காப்பியடிக்கும் 'ட்ரோன்'!


இயற்கையை காப்பியடிப்பதில் விஞ்ஞானிகளுக்குள் போட்டியே நடக்கிறது. சொல்லப் போனால் இயற்கையைவிட ஒரு படி மேலே போக முடியுமா என்றும் அவர்கள் உழைத்து வருகின்றனர்.

இங்கிலாந்தை சேர்ந்த, பிரிஸ்டால் பல்கலைக்கழக விஞ்ஞானிகள், ஒரு பறக்கும் மினி ரோபோவை உருவாக்கியுள்ளனர். அந்த ரோபோவின் இறக்கைகள், பூச்சிகளைவிட சிக்கனமாக ஆற்றலை செலவிடுகின்றன.

இதற்கு முன் உருவாக்கப்பட்ட பூச்சி வடிவ ட்ரோன்கள் கூட, சிக்கலான மினி மோட்டார்கள், பற்சக்கர அமைப்புகளை கொண்டிருந்தன.ஆனால், பிரிஸ்டால் விஞ்ஞானிகள், அதுபோன்ற சிக்கலான அமைப்புகளை அறவே தவிர்த்துவிட்டனர்.

மாறாக, இரண்டு மின் காந்த முனைகளை நேரடியாக இறக்கைப் பகுதிக்கு அருகே வைத்து, மாறி மாறி மின் துாண்டல் தந்தால், அது பூச்சி இறக்கையை அடித்துப் பறப்பதுபோன்று இருக்கிறது. இதனால் குறைந்த மின்னாற்றலில், பூச்சியைவிட வேகமாக இறக்கை அடித்துப் பறக்க அந்த ட்ரோனால் முடிகிறது.

இந்த ஆய்வின் முடிவில், கண்காணிப்பு, மீட்பு, தேடல் பணிகளுக்கு ஏற்ற, சிறிய ட்ரோன்களுக்கான ஒரு தொழில்நுட்பத்தை உருவாக்க முடியும் என, பிரிஸ்டால் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

====

மின்கலன் மறுசுழற்சிக்கு புதிய ஊக்கம்!

மின்சார வாகனங்களை எல்லா நாட்டு அரசுகளும் ஊக்குவிக்கத் துவங்கிவிட்டன. இதனால் காற்று மாசு குறையும். ஆனால், சற்று கவனமாக இருக்காவிட்டால், குப்பை மேடுகளில் வேதியியல் மாசின் அளவு பன்மடங்காகிவிடும். காரணம், மின் வாகனங்களில் பயன்படும் லித்தியம் அயனி மின்கலன்கள் தான்.

அவை சில ஆண்டுகள் பயன்பாட்டுக்கு பின் குப்பையில் போடப்படுகின்றன.இந்த அவலத்தைத் தடுக்க, மின்கலன்களை மறுசுழற்சி செய்வது சிறந்தது. ஆனால், தற்போது வெறும் 5 சதவீத லித்தியம் அயனி மின்கலன்களே மறுசுழற்சி செய்யப்படுகின்றன.

இதற்கான தீர்வை இங்கிலாந்திலுள்ள 'அசென்ட் எலிமென்ட் மற்றும் கூரா' ஆகிய இரு நிறுவனங்களும் கூட்டாக ஆராய்ச்சி செய்து கண்டறிந்துள்ளன. அந்த தீர்வின்படி, லித்தியம் அயனி மின்கலன்களில் உள்ள கிராபைட் மின்முனைகளை 99.9 சதவீதம் அளவுக்கு மீண்டும் மீட்டெடுக்க முடியும்.

லித்தியம் அயனி மின்கலன்களில் இன்னும் சில தாதுக்களை மீட்க முடியும் என்றாலும், கிராபைட்டை இவ்வளவு அதிக அளவில் திரும்பப்பெற முடிவது, பெரிய விஷயம். இது ஒன்றே கூட, லித்தியம் அயனி மின்கலன்களை மறுசுழற்சி செய்வதற்கு உதவும் என வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

அப்படி மறுசுழற்சி செய்யப்படும் கிராபைட்டை, எந்த பதப்படுத்தலும் இன்றி, நேரடியாக பேட்டரி தயாரிப்புக்கு பயன்படுத்த முடியும். எனவே இது, நிச்சயம் மறுசுழற்சியை நிச்சயம் ஊக்குவிக்கும்.

= = = =

குண்டு துளைக்காத 'கெவ்லா'ருக்கு போட்டி!

ராணுவத்தினர் முதல் அரசியல் தலைவர்கள் வரை பலரும் அணியும் குண்டு புகமுடியாத உடை, கெவ்லார் என்ற இழைகளால் ஆனவை. போன நுாற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்ட கெவ்லாருக்கு இப்போது சரியா போட்டிப் பொருளை அமெரிக்காவில் உள்ள விஸ்கான்சின் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் உருவாக்கி உள்ளனர்.

நேனோ தொழில்நுட்பத்தில் கடந்த சில ஆண்டுகளாக கார்பன் நேனோ குழாய்கள் உருவாக்கப்பட்டன.இந்தக் குழாய்களின் தடிமன் எவ்வளவு தெரியுமா? ஒரு அணுவின் அளவு தான்! நேனோ கார்பன் குழாய்களை வைத்து பின்னப்படும் இழைகள், கெவ்லாரைவிட அதிக வலுவும், இரும்பைவிட அதிக தாங்கு திறனும் கொண்டவையாக உள்ளன.

'நேனோ இழைப் பாய்' என்று இதை விஞ்ஞானிகள் அழைக்கின்றனர்.பாய் போல நெய்யப்பட்ட கார்பன் நேனோ குழாய்கள் மிகவும் எடை குறைவாகவும் உள்ளன.இதனால், இவற்றை தோட்டா தடுப்புக் கவசம் போல அணிபவர்களுக்கு உறுத்தாமல் இருக்கும். எனவே, நேனோ இழைப் பாய்கள் விரைவில் கெவ்லாரை வீட்டுக்கு அனுப்பும் என எதிர்பார்க்கலாம்.

ராணுவ பயன்களோடு விண்வெளி பயன்களும் நேனோ இழைப் பாய்களுக்கு உண்டு என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இப்போது விண்வெளியில் காலாவதியான செயற்கைக்கோள் குப்பை கழிவுகள் அதிகரித்து வருகின்றன. இவை, இயங்கி வரும் செயற்கைக் கோள்கள் மீது பட்டால், அவை செயலிழந்துபோகும் வாய்ப்பு அதிகம். ஆனால், செயற்கைக்கோள்களுக்கும், விண்வெளி ஆய்வு மையங்களுக்கும் வெளிப்புறத்தில் நேனோ இழைப் பாய்களை போர்த்தினால், அவை மோதும் பொருளின் ஆற்றலை உள்வாங்கி, பிசுபிசுக்கவைத்து, தாக்குதலின் பாதிப்பை ஏறக்குறைய பூச்சியமாக ஆக்கிவிடும்.

= = = =

சொந்தமாக மின்சாரம் தயாரித்து இயங்கும் ரயில்!

இரும்பு போன்ற தாதுக்களை சுரங்கத்திலிருந்து தோண்டி எடுத்து, அவற்றை ஆலைகளுக்கு ரயில் வாயிலாக கொண்டு செல்வது மிகவும் செலவு பிடித்த வேலை. அதுமட்டுமல்ல, சுற்றுச்சூழலுக்கு மிகவும் கேடு. ஆஸ்திரேலியாவில் சுரங்கத் தொழில்கள் பல உள்ளன.

எனவே மூலப் பொருட்களைக் கொண்டு செல்லும் ரயில்களை பசுமை வாகனங்களாக மாற்றும் முயற்சிகள் நடக்கின்றன.அதில் ஒன்று தான் புவியீர்ப்பு விசையை வைத்தே ஆற்றலை தயாரித்து ரயிலை ஓட்டுவது. ஆஸ்திரேலியாவின் 'போர்டெஸ்கியூ' சுரங்க நிறுவனமும், பிரிட்டனின் 'டபிள்யு.ஏ.இ.,' நிறுவனமும் கூட்டாக இந்த தொழில்நுட்பத்தை உருவாக்கி உள்ளன.

மூலப்பொருட்களை சுமந்தபடி செல்லும் ரயில் வண்டிகளை, சற்றே இறக்கமான பாதைகளை அமைத்து, அதில் இயந்திர இழுவை இல்லாமல் தானாகவே செலுத்துகின்றன.அப்போது சக்கரங்களின் சுழற்சியில் மின்சாரம் தயாராகிறது. அந்த மின்சாரத்தை வைத்து, அடுத்து மேடாக அமைக்கப்பட்டுள்ள ரயில் பாதையில் வண்டி செல்லும்.

பின் மீண்டும் இறக்கப் பாதை... இப்படியே புவியீர்ப்பு விசையை மட்டும் வைத்து அந்த ரயில் ஆலைவரை மூலப்பொருட்களைக் கொண்டு வந்து சேர்த்துவிடும்.இதற்கென தனிப்பாதைகளை அமைத்து இரு நாட்டு நிறுவனங்களும் சோதனைகள் செய்து வெற்றி கண்டுள்ளன. இந்த நுட்பத்திற்கு 'இன்பினிட்டி டிரெயின்' என பெயரிட்டுள்ளது, போர்டெஸ்கியூ நிறுவனம்.

அதாவது, 'முடிவிலி தொடரி!' இந்த தொழில் நுட்பம் நடைமுறைக்கு வந்தால், இந்தியா போன்ற நீண்ட நெடிய ரயில் வண்டி அமைப்பை வைத்திருக்கும் நாடுகளில், ரயில் பயணம் மிக மிக குறைவானசெலவில் இயங்கத் துவங்கிவிடும்.

= = = =


நான் படிச்ச புத்தகம்

ஜீவி 

=======================================


தமிழக கோயில்களின்  சரிதம்.

யரமான கோபுரங்களைக் கொண்ட கோயில்கள் தமிழ்நாட்டிற்கே உரிய பெருமைகளில் ஒன்று.  'தமிழ்க் கோயில்கள் தமிழர் பண்பாடு' என்ற 130 பக்க

 குட்டிப் புத்தகம் ஒன்று வாசிக்கக் கிடைத்து  இந்த கோயில்கள் எப்படி அமைய வேண்டும் அது பற்றி ஆகமங்கள் என்ன கூறுகின்றன என்பதெல்லாம் தெரிய வந்த போது பிரமிப்பாய் இருந்தது.  

ஆலயத்தின் பிரதான பாகம் மூலஸ்தானம் என்னும் இறைவனின் திரு உருவம் அமையப் பெற்ற  இடம் என்ற அளவில் நாம் அறிந்த ஒன்று தான்.  மூலஸ்தானம் அல்லது கர்ப்பக்கிரகம் ஆலயத்தின் மற்ற பகுதிகளை விட மிகச் சிறியது மட்டுமில்லை ஒரே ஒரு வாயிலை மட்டுமே கொண்டது.  கர்ப்பக் கிருகத்தை அடுத்து சற்று விசாலமாக இருப்பது இரண்டு வாயில்கள் கொண்ட அர்த்த மண்டபம்.  அங்கு நின்றே அர்ச்சகர் தீபம் ஏற்றி தீபாராதனை எல்லாம் செய்வார்.  பக்தர்கள் தரிசனம் செய்யும் இடமோ அர்த்த மண்டபத்திற்கு வெளியே உள்ள மகா மண்டபம்.


சிவன் கோயில் என்றால் அர்த்த மண்டபத்தில் சிவலிங்கத்திற்கு எதிர் முகமாக சிறிய நந்தி விக்கிரகம்.  மூலஸ்தானத்தின் வாயிலின் வலதுபுறம் விநாயகரும் இடது புறம்  சுப்பிரமணியரும் இருப்பர்.

ஆலயத்தை நாம் வலம் வரும் பிரகாரம் நமக்கு ரொம்பவும் பழக்கப்பட்ட பெயர் தான்.. மூன்று அல்லது  ஐந்து பிரகாரங்கள் இருப்பது வழக்கம். கர்ப்ப கிருகத்தைச் சுற்றியிருக்கும் பிரகாரத்தில் கோஷ்டங்கள் அமைத்து தென் பக்கத்து கோஷ்டத்தில் தஷிணாமூர்த்தியும்,  மேல்பக்கத்துக்  கோக்ஷ்டத்தில் லிங்கோத்பவரும், வட பக்கக்து  கோஷ்டத்தில் துர்க்கையும்
அருள் பாலித்து இருப்பர். துர்க்கைக்கு  எதிரே எதிர்முகமாக சண்டீசர் இருப்பார்.

வெளிப் பிரகாரத்தில் வாயிலுக்கு நேரே கொடிமரம்,  பலிபீடம், பெரிய நந்தி முதலியவைகளும் அமையும். கோயிலின் முதல் வாயிலிலேயே கோபுரமும் மூல ஸ்தானத்தின் மீது விமானமும் கட்டப்பெறும். விமானத்தின் மீதும் கோபுரத்தின்  மீதும் பொற்கலசம் அமைக்கப்படும்.  கோயிலைச் சுற்றி கட்டப்பெறும் மதில் சுவர் மீது வெளியிலிருந்து காண்பவர் சிவாலயம் என்று தெரிந்து கொள்வதற்கு வசதியாக நந்தியையேனும் இல்லை சிவ கணங்களையேனும் அமைத்து இருப்பர். கி.மு. இரண்டாம் நூற்றாண்டிலேயே தமிழக குடிமங்கலம் கிராமத்தில் ஒரு லிங்கத் திரு உரு  இருந்தது என்று அறிகிறோம்.  இதுவே தென்னகத்தின் முதல் சிற்பவடிவமாகச் சொல்கிறார்கள்.

மேலே குறிப்பிட்டவைகளில் நமக்குத் தெரிந்தவைகளுக்கு மட்டும் தாராளமாக நம் இஷ்டப்படி மார்க் போட்டுக் கொள்ளலாம். 

அடுத்து வைணவ கோயில்கள்.

விக்கிரக ஆராதனையின் தாத்பரியஙகள், ஆலய அமைப்பின் முறைகள் போன்றவற்றை விரிவாக எடுத்துச் சொல்ல வைணவ ஆகமங்கள்  நூற்று எட்டு  சமஸ்கிருத மொழியில் உள்ளன.  சங்கிதைகள் (தொகுதிகள்), தந்திரங்கள்
(முறைகள்) உள்ளடங்கிய அனைத்தும் சேர்த்து பாஞ்சராத்திரம் என்று பெருமையுடன் அழைக்கப் படுகிறது.

பாஞ்சராத்திரம் தொன்மை வாய்ந்தது.  பர, வியூக, விபவ, அந்தர்யாமி, அர்ச்ச என்று பஞ்ச ரூபங்களில் ஸ்ரீமத் நாராயணன் தன்னை வெளிப்படுத்துகிறார் என்பது வைணவ ஆகமங்களின் ஆழமான கொள்கை. வைஷ்ணவ கோயில்களின் வழிபாட்டு முறைகளில் வைகானச முறை என்று இன்னொரு  வழிபாட்டு முறையும் உண்டு.

மூன்றாவது சாக்த ஆகமங்கள். இறைவனின் அருட்சக்தி பிரபஞ்ச சிருஷ்டியின் பொருட்டு இறைவனிடமிருந்து வெளிப்பட்டு சக்தி என்ற ரூபம் கொண்டிருக்கிறது.  ஆதிசக்தி, பராசக்தி,  ஞான சக்தி, இச்சா சக்தி, க்ரியா சக்தி என்றெல்லாம் பெயர் கொண்டிருக்கும் இறைசக்தி. 

கிறிஸ்து பிறப்பதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே பதஞ்சலி, பாணினி காலத்திலேயே விக்கிரக வணக்கம் இருந்திருப்பதற்கு பதஞ்சலியின் 
மஹாபாஷ்யத்தில் குறிப்புகள் காணப்படுகின்றன என்று அதுபற்றி விவரம் தெரிந்தவர்கள் சொல்கிறார்கள்.

கி.பி. ஆறாம் நூற்றாண்டில் தொண்டை மண்டலத்தை ஆண்ட விசித்திர சித்தன் என்ற பல்லவ மன்னன், செங்கல், சுண்ணாம்பு, மரம், உலோகம் முதலியவைகளின் உபயோகத்தில் கோயில்கள் எழுப்பப் பட்டிருப்பதால் கால ஓட்டத்தில் சிதலமடைந்திருக்கின்றன என்று அறிந்து பெரிய பெரிய கற்பாறைகளைக் குடைந்து அதனுள் சிற்பிகள் துணைகொண்டு
தூண்கள், முக மண்டபம், மகா மண்டபம், கருவறை முதலியவற்றை
அமைத்திருக்கிறான்.  மலைகளைக் குடைந்து கட்டியமையால் அவை குடைவரை கோயில்கள் என்ற பெயர் பெற்றன. இன்று நாம் பார்க்கும் கோயில்களுக்கு முற்பட்ட காலத்து தென்னக கோயில்கள் இவை. இந்த விசித்திர சித்தன் வேறு யாருமில்லை, மகேந்திர பல்லவ மன்னனே. 

கி.பி.க்கு 200 ஆண்டுகளுக்கு முன்பே அசோக சக்ரவர்த்தியும் அவன் பேரன் தசரதனும் (!)  பீகார் கயா நகர பக்கலில் குடைவரை கோயில்களை அமைத்திருக்கிறார்கள்.  பின்னர்  எழுந்தவை தான் எல்லோராவும், அஜந்தாவும். அதற்குப் பின்னால் நம்ம மகேந்திர பல்லவன் அமைத்த  மண்டகப்பட்டு (விழுப்புரம் அருகில்) குடைவரை கோயில் தான் தமிழகத்தில் அமைந்த முதல் கு.கோ.  பின்னர் சென்னை பல்லாவரத்தில், திருச்சி மகேந்திர வாடியில், சீயமங்கலத்தில், சிங்கவரத்தில், மாமண்டூரில், தளவானூரில், சித்தன்ன வாசலில் என்று குடைவரைக் கோயில்களாகவே வரிசை கட்டியிருக்கிறான். தந்தை வழியிலேயே நரசிம்மவர்மனும் என்றாலும் மகனோ குடைந்த மலைகளின் வெளிப்புறத்தையும் வெட்டிச் செதுக்கி
கோயில்களாக, ரதங்களாக உருவாக்கி கற்பாறைகளிலேயே பல்லவ சிம்மம், ரிஷபம், யானைகள் என்று வடிவம் கொடுத்திருக்கிறான்.  குடைவரை சுவர்களில் பிரம்மா, விஷ்ணு, ருத்திரன் என்று ம.ப. காலத்தில் என்றால் ந.ப. காலத்திலோ மூர்த்திகள், தெய்வத் திரு உருவங்கள் எல்லாம் அர்த்தசித்திரமாக உருவானார்கள்.  அனந்த சயனனும், மகிஷமர்த்தனியும், லஷ்மியும், துர்க்கையும், அர்த்தநாரீஸ்வரரும், பினாகபாணியும் இன்னும் தேவர்களும் துவாரபாலகர்களும் என்று  நரசிம்ம வர்மனின் குடைவரைக் கோயில்கள் கனவு நம்மை பிரமிக்க வைக்கிறது.  கல்லிலேயே கலைவண்ணம் கண்டவன் அவன்.

மாமல்ல புரத்து கற்தூண்களில் சிம்மம், கலசம், தாடி, கும்பம், பலகை போதிகைகள்,  அர்த்த சித்திரமாக மகிஷாசுர மர்த்தன போர்க்காட்சி, கல்ரதங்கள்...  மகேந்திரவாடி, மாமண்டூர், மண்டகப்பட்டு கு.கோயில்களில் நான்கு தூண்களோடு கூடிய முக மண்டபம், அர்த்த மண்டபம், திருக்கழுகுன்றத்தை அடுத்த குடைவரையில் பொலியும் வடிவ அழகோடு துவார பாலகர்கள், திருச்சி தாயுமானவர் கோயிலிருந்து மணிமண்டபம் செல்லும் வழியில் குடைவரையில் கங்காதரர் சிற்பம்,  செஞ்சிக் கோட்டைக்கருகே சிங்கவரத்து குடைவரையில் ரங்கநாதர் பள்ளி கொண்ட அழகில், புதுக்கோட்டை அன்னவாசலை அடுத்த சித்தன்ன வாசல் முக மண்டபத்தில்  பார்சவ நாதரது திரு உருவங்கள், சாமவசரணவப் பொய்கை,
காரைக்குடி அடுத்த பிள்ளாயார் பட்டி ஈஸ்வரன் கோயிலில் கல்லில் வடிவம் கொண்டிருக்கும் மஹாகணபதி -----

சிம்ம விஷ்ணு பரம்பரையில் வந்த பல்லவ மன்னன் மகேந்திர வர்மனில் ஆரம்பித்து அவன் பேரன் ராஜசிம்ஹன் வரை
கல்லில் குடைந்த குடைவரைக் கோயில்கள் அமைக்கும் திருப்பணியை தமிழகத்தில் ஆரம்பித்து வைத்ததோடு அல்லாமல் அந்த இறைப்பணிக்கு தங்களை ஆஹிருதி ஆக்கிக் கொண்டது வரலாற்று ஏடுகளில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்ட உண்மைகள்.  இருப்பினும் திருக்கோயில்கள் என்று வரும் பொழுது சோழ, பாண்டிய மன்னர்களையே முன்னிலைப்படுத்துவது மட்டுமல்லாது அவர்களோடையே தேங்கி விடுவது வரலாற்று பிழையோ என்று என் மனம் மருகுகிறது.

புத்தகக் குறிப்பு:

பல வருஷங்களுக்கு முன்னால் திருச்சி வானொலி நிலையத்தார் தமிழ் நாட்டுக் கோயில்கள் பற்றி ஒரு சொற்பொழிவிற்கு ஏற்பாடு செய்திருந்தனர். பின்னர் ஒரு தமிழ் வருஷப் பிறப்பன்று தமிழர் பண்பாடு என்ற தலைப்பிலும் வானொலி உரை நிகழ்ந்தது.  இச் சொற்பொழிவுகளில்
திருவாளர்கள் தொ.மு. பாஸ்கர தொண்டைமான், 
பி.ஸ்ரீ. ஆச்சார்யா, கே  வாசுதேவ சாஸ்திரியார், ச. சிவக்குமார், திருமதி அ.ரா. இந்திரா முதலியோர்  கலந்து கொண்டனர்.  அறிஞர் பெருமக்களின் பேருரைகளின் தொகுப்பாக்கம் தான் இந்த நூல்.

திரு. தொ.மு. பாஸ்கர தொண்டைமான் ஆற்றிய குடைவரைக் கோயில்கள்
பற்றிய சொற்பொழிவை மட்டும் எடுத்துக் கொண்டு நான் படிச்ச புத்தகமாகச் சொல்லியிருக்கிறேன்.

சென்ற தலைமுறையினருக்கு மிக நெருக்கமாக அறிமுகமானவர் தொ.மு.பா. அவர்கள்.  குற்றால முனிவர் ரசிகமணி டி.கே.சி. அவர்களின் பிரதம சீடர். தொ.மு.பா.வின் 'வேங்கடம் முதல் குமரி வரை' நூல் சென்ற தலைமுறை தமிழர்களுக்கு மிகவும் பரிச்சியமான ஒன்று. இவரது தமிழ்ப் பணியும் கலைப்பணியும் என்றும் நினைவு கொள்ள வேண்டியவை.

புத்தக விவரம்:

தமிழ்க் கோயில்கள் தமிழர் பண்பாடு
நிவேதிதா பதிப்பகம்
அசோக் நகர்,
சென்னை -- 600 083


59 கருத்துகள்:

 1. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம். நல்வரவு. வாழ்த்துகள், பிரார்த்தனைகள். தொடரும் சமரசப் பேச்சு முற்றிலும் வெற்றியில் முடிந்து அனைத்து மக்களுக்கும் நன்மை பயக்கப் பிரார்த்தனைகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பிரார்த்திப்போம். வாங்க கீதா அக்கா... வணக்கம்.

   நீக்கு
 2. இன்னுமா யாரும் எழுந்திருக்கலை? நெல்லை தன்னைத் தானே தனிமைப் படுத்திக் கொண்டிருப்பதால் எழுப்ப ஆள் இல்லையோ? ஶ்ரீராம்? கௌதமன் சார்? வேலை அதிகமோ? அல்லது இன்னிக்கு அறிவியல் பாடம் எனப் படித்துத் தெரிந்து கொண்டு எல்லோரும் ஜகா வாங்கிட்டாங்களோ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹா.. ஹா.. ஹா... ஆண்டிறுதி அவஸ்தைகள்!

   நீக்கு
  2. ஓஹோ! நிதி ஆண்டின் இறுதி அவஸ்தையா? கௌதமன் சார்?

   நீக்கு
  3. வந்து கொண்டிருக்கிறார்...

   நீக்கு
  4. அப்பப்போ வந்து பாத்துக்குவேன் !!

   நீக்கு
  5. நான் வைரமுடி யாத்திரையில் இருக்கிறேன் கீசா மேடம்

   நீக்கு
  6. ஓ, நல்லது நெல்லை. சிறப்பான தரிசனம் கிடைக்கப் பிரார்த்தனைகள்.

   நீக்கு
 3. வல்லியையும் மத்தவங்களையும் எ.பி. குழுமத்திலும் பார்க்கலை. அல்லது நான் தான் சரியாப் பார்க்கலையோ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தெரியலை. ஓகே. எஞ்சாய்! நான் கிளம்பறேன். மணி ஏழு! :))))

   நீக்கு
  2. இன்று அலுவலகத்துக்கு லீவு... ஆனால் பிளாக்கில் ஹெவி வொர்க் இருக்கு...!!

   நீக்கு
  3. ஆகா!..

   //இன்று அலுவலகத்துக்கு லீவு... //

   ச. க. கா. கி!..

   இன்றாவது உருண்டு ஓடட்டும்..

   நீக்கு
 4. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
  இறையருள் சூழ்ந்து எங்கும் இன்பமே நிறைந்து வாழ்க..

  வாழ்க நலம்..
  வாழ்க தமிழ்..

  பதிலளிநீக்கு
 5. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
  அனைத்து உயிர்களும் இறைவன் அருளுடன்
  நலமாக இருக்க வேண்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பிரார்த்திப்போம்.  வாங்க துரை செல்வராஜூ ஸார்.. வணக்கம்.

   நீக்கு
 6. கீதாமா,
  எல்லோரும் பேசிக் கொண்டிருந்தோமே.

  சென்னையில் ஒரு உறவினருக்கு ரொம்ப உடம்பு முடியாமல்
  இருக்கிறது.
  அதனால் மனம் நிலைத்து லயிக்க முடியவில்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உறவினர் சீக்கிரம் நலம்பெற இணைந்து பிரார்த்திப்போம் அம்மா..

   நீக்கு
  2. ஓஓ! கவனிச்சிருக்க மாட்டேன் ரேவதி. அல்லது கவனம் சிதறி இருக்கும். :( உறவினர் நல்லபடி நலம் பெறப் பிரார்த்திக்கிறோம்.

   நீக்கு
 7. @ நான் படித்த புத்தகம்...

  // கி.மு. இரண்டாம் நூற்றாண்டிலேயே தமிழக குடிமங்கலம் கிராமத்தில் ஒரு லிங்கத் திரு உரு..//

  குடிமங்கலமா?..
  குடிமல்லமா? (சித்தூர்)..

  பதிலளிநீக்கு
 8. @ நான் படித்த புத்தகம்

  //கி.பி.க்கு 200 ஆண்டுகளுக்கு முன்பே அசோக சக்ரவர்த்தியும் ..//

  கி.பி.க்கு 200 ஆண்டுகளுக்கு !?..

  கிறிஸ்துவுக்கு இருநூறு ஆண்டுகளுக்கு முன்பே - என்றிருக்க வேண்டுமோ!..

  பதிலளிநீக்கு
 9. பாசிடிவ் என்பதை "நல்ல" என்று மாற்றிவிட்டீர்கள். நான்கு செய்திகளும்; பூச்சி டிரோன், கிராபைட் மறுசுழற்சி, நானோ பாய், புவிஈர்ப்பின் ஆற்றல் மறுசுழற்சி என்று இந்த வாரம் வித்யாசமாக உள்ளன. எப்போதும் நல்ல மனிதர்கள், நல்ல நிறுவனங்கள் என்றே பாசிட்டிவ் செய்திகள் அமையும். இந்த வாரம் விஞ்ஞானத்தைப் புகுத்தி நல்ல கண்டுபிடிப்புகளை அறிமுகப் படுத்தியது சிறப்பு. இப்படிப்பட்ட சிறு மாற்றங்கள் எ பி க்கு புத்துணர்வு ஊட்டும்.


  ஜீவி ஐயாவின் புத்தக அறிமுகம் நன்று. ஆனாலும் அவருடைய இன்றைய கட்டுரை நடை அவருடைய பாணியில் இல்லை என்று தோன்றுகிறது. கட்டுரையில் சொல்லப்பட்ட விவரங்கள் யாவும் தெரிந்து கொள்ள வேண்டியது தான். 


  பாஸ்கர தொண்டைமான் எப்போது பா ஜ க வில் சேர்ந்தார்?. தொண்டைமான் எந்த காட்சியிலும் இருந்ததில்லை. வேறு படம் தேர்ந்தெடுத்திருக்கலாம். இணையத்தில் நிறைய உண்டு. 


  Jayakumar

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காட்சி என்பதை கட்சி என்று திருத்திக்கொள்ளவும் 

   நீக்கு
  2. நன்றி ஜெயக்குமார் சந்திரசேகர் ஸார்...  

   நீக்கு
  3. தொண்டமான் அவர்களின் படம் திரு எச்.ராஜா.ஆர்க் தளத்தில் இருந்து அவரது தமிழறிஞர்கள் தொகுப்பில் இருந்து எடுக்கப்பட்டிருக்கிறது. இதில் எந்தத் தப்பும் இருப்பதாகத் தெரியவில்லை. தாமரைப்பூவால் பூஜை கூடச் செய்ய மாட்டீங்க போல! அவ்வளவு என்ன வெறுப்பு என நினைத்தால் ஆச்சரியம் தான்! :)))))

   நீக்கு
 10. அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள்!

  பதிலளிநீக்கு
 11. @ ஸ்ரீராம்..

  //இன்று அலுவலகத்துக்கு லீவு... //

  மகிழ்ச்சி.. நன்றி..

  பதிலளிநீக்கு
 12. இந்த வாரத்து அறிவியல் முன்னேற்றத் தொகுப்புக் கட்டுரைகள் தற்காலத்தில் படிக்கும் பிள்ளைகளுக்குத் தேவையான ஒன்று. கூடவே நாமும் புதிய மாற்றங்களைத் தெரிந்து கொள்ள முடிகிறது. "நல்ல" பாசிடிவ் செய்திகளில் இருந்து அறிவியல், மருத்துவத்தில் முன்னேற்றம் கண்டு பிடித்த விஷயங்கள் என மாறி இருப்பதும் நன்றாகவே உள்ளது. காலையிலேயே சொல்ல நினைச்சுட்டுப் பின்னர் சொல்லலாம்னு போயிட்டேன்.

  பதிலளிநீக்கு
 13. @ கீதாக்கா.

  // குடிமல்லம் //

  அது குடிமல்லம் என்று தெரியும்... பதிவில் தவறாக குடிமங்கலம் என்று இருப்பதால் தான் கேட்டேன்..

  நன்றியக்கா..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மன்னிக்கவும் அக்கா..

   இங்கே வந்து கருத்துக்குக் கருத்து சொல்வதில்லை என்றொரு கருத்துக்கு வந்திருக்கின்றேன்.. இருந்தாலும் ஆர்வக் கோளாறினால் சொல்லி விட்டேன்.. அதை நீக்கியும் விட்டேன்..

   மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 14. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 15. எவ்வளவு விஞ்ஞான வளர்ச்சி வந்தாலும் மனிதன் மாட்டு வண்டியிலும், நடையிலும் வாழும்போது முழுமையான சந்தோஷத்தோடு வாழ்ந்தான்.

  இன்று எல்லாவற்றிலும் அவசரம் எங்கே போகிறான் ? முடிவை நாம் நினைக்க மறுக்கிறோம்.

  பதிலளிநீக்கு
 16. // மகேந்திர பல்லவன் அமைத்த மண்டகப்பட்டு (விழுப்புரம் அருகில்) குடைவரை கோயில் தான் தமிழகத்தில் அமைந்த முதல் கு.கோ.// அதற்கும் முன்னரே பிள்ளையார்பட்டிப் பிள்ளையார் கோயில் முற்காலப் பாண்டியர்களால் அமைக்கப்பட்டது. குடவரைக்கோயில்கள் அமைப்பதில் முற்காலப் பாண்டியர்கள் சிறந்தவர்களாக இருந்தனர். மஹேந்திர பல்லவன் காலத்துக்கு முன்னரே ஐந்து நூற்றாண்டுகள் பழமை வாய்ந்தது பிள்ளையார்ப்பட்டிக் கோயில்.

  பதிலளிநீக்கு
 17. இன்னும் சிலர் அதற்கும் முன்னதாகத் திருப்பரங்குன்றம் குடவரைக்கோயிலைச் சொல்லுவார்கள். இப்போதுள்ள சிற்பங்கள் ஆறு/ஏழு நூற்றாண்டுகளில் செதுக்கி இருக்கலாம் எனவும் முன்னால் இந்தக் கோயிலில் ஆடும் கூத்தனும்/கூத்தியும் ஆட்சி செலுத்தியதாகவும் தற்போதுள்ள கருவறைக்கு வலப்பக்கம் சிதைந்த நிலையில் கூத்தனின் சிலை காணப்படுவதாகவும் சொல்கின்றனர். எத்தனையோ முறை போனாலும் இதை எல்லாம் நின்று கவனித்துப் பார்க்க முடியறதில்லை. மூன்று தூண்களும் மனதைக் கவரும். ஏகப்பட்ட கல்வெட்டுக்கள். முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் காலத்துக் கல்வெட்டும் கிடைத்திருக்கிறது. 2,300 ஆண்டுகள் பழமை வாய்ந்தவை இவை. சமணர் குடைந்த சிற்பங்கள் எல்லாம் இந்த மலையைச் சுற்றிவரும்போது நேர் பின்னால் இருக்கும் தென்பரங்குன்றத்தில் காணமுடியும். இவையும் மிகப் பழமை வாய்ந்தவை. குறைந்தது 2000 ஆண்டுகளுக்கு முற்பட்டது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இந்த கருத்துக்களையெல்லாம் பதிந்து முற்கால பாண்டியர்கள் பற்றி எபியில்
   நீங்கள் ஒரு கட்டுரை எழுதுங்கள். அப்பொழுது தான் மு.பா. பற்றி ஒரு தெளிவு ஏற்படும்.

   நீக்கு
  2. ஆங்காங்கே இம்மாதிரிச் சில பதிவுகளில் கருத்துரைகளாகப் பதிந்திருக்கேன். ஆனால் பாண்டியர் தொன்மை பற்றி நான் சொல்லித் தான் தெரிஞ்சுக்கணும்னு எல்லாம் இல்லை.பல்லவ, சேர, சோழர்களுக்கு முன்னிருந்தே இருந்தவர்கள் பாண்டியர்கள். சுத்தத் தமிழர்கள்/ கலப்பே இல்லாதவர்கள். பின்னாட்களில் அரச குடும்பங்களிடையேயும் பொதுமக்களிடையேயும் கலந்து திருமணம் செய்து கொள்ளுதல் என ஏற்பட்டது.

   நீக்கு
  3. வரலாற்று ஆசிரியர்களே இப்படித் தீர்மானமாக எதையும் வரையறுத்துச் சொல்வதில்லை.

   சேர சோழர்களை விட்டுத் தள்ளுங்கள். நாம் நீங்கள் சொல்லும் முற்கால பாண்டியர் -- பல்லவர் பற்றி பேச நீங்கள் எழுதினால் வாய்ப்பு கிடைக்கும்.

   நீக்கு
  4. தீர்மானமாய் என்ன சொல்லிட்டேன்? பாண்டியர்கள் தொன்மையானவர்கள் என்பதில் எல்லா வரலாற்று ஆசிரியர்களும் சொன்னதே!

   நீக்கு
  5. பிள்ளயார் பட்டி ஈஸ்வரன் கோயிலில் கல்லில் வடிவம் கொண்டிருக்கும் மஹா கணபதி பல்லவரால் அமைக்கப் பட்டது என்பது பாஸ்கர தொண்டமான் அவர்கள் கருத்து. இதில் ஒன்னொரு வார்த்தையும் முக்கியம். பிள்ளையார் பட்டி கோயில் அமைப்பு பற்றி வரலாற்று ஆசிரியர்கள் வெவ்வேறு கருத்துக்களைக் கொண்டிருக்கின்றனர். தங்கள் தகவலுக்காக.

   நீக்கு
 18. ஒரு நீண்ட கட்டுரையை வாசித்ததில் விளைந்த ஆகப் பெரிய சந்தேகங்கள்:

  இவற்றில் எது சரி?

  1. கிறிஸ்துவுக்கு 200 ஆண்டுகள் முன்பேவா?
  அல்லது
  கிறிஸ்து பிறப்பதற்கு (கி.பி) 200 ஆண்டுகள் முன்பேவா?

  2. குடிமங்கலமா?
  அல்லது
  குடிமல்லமா?

  போகட்டும்.

  ஜெஸி சார்! ஜீவியின் எழுத்து நடை பாணியைப் பற்றிக் குறிப்பிட்டீர்கள். வானொலி உரையாய் இருக்கும் வரலாற்று செய்திகளைத் தொகுக்கும் பொழுதும் என் பாணியில் சொல்ல முயற்சித்திருக்கிறேன் என்று நினைக்கிறேன்.

  என்ன எழுதி என்ன பயன்?..

  'திருக்கோயில்கள் என்று வரும் பொழுது சோழ பாண்டிய மன்னர்களையே முன்னிலைப் படுத்துவது மட்டுமல்லாது அவர்களோடையே தேங்கி விடுவது வரலாற்றுப் பிழையோ?..

  --- யாராவது கட்டுரையின் இறுதிப் பகுதியில் வதும் இந்தக் கேள்வியைத் தொட்டு சிந்தித்து கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வார்கள் என்று எதிர்பார்த்தால்.....

  பதிலளிநீக்கு
 19. அறிவியலில் பலவும் அறிந்து கொண்டோம்.
  திரு.ஜீவி அவர்களின் ஊட்டமும் சிந்திக்க வைக்கிறது.

  பதிலளிநீக்கு
 20. இயற்கையை காப்பியடிப்பதில் விஞ்ஞானிகளுக்குள் போட்டியே நடக்கிறது.//

  பாட்டு கூட உண்டே

  //பறவையை கண்டான் விமானம் படைத்தான்
  பாயும் மீன்களில் படகினை கண்டான்
  எதிரொலி கேட்டான் வானொலி படைத்தான்//

  கீதா

  பதிலளிநீக்கு
 21. இன்றைய விஞ்ஞான புதிய கண்டுபிடிப்புகள் தகவல்கள் நன்று. வித்தியாசமான புதிய பகுதி.

  கீதா

  பதிலளிநீக்கு
 22. பல்லவர்கள் செய்த பாவம் தான் என்ன? இல்லை, அவர்கள் செய்த பாவமாக மற்றவர்கள் நினைத்துக் கொண்டிருப்பது தான் என்ன?
  வரலாற்று உண்மைகள் தெளிவாகத் தான் இருக்கின்றன.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பல்லவர்கள் பாவம் ஒன்றும் செய்யவில்லை. அவர்கள் கட்டிய கோயில்களுக்கு ஒரு grandeur இல்லை. 100 ஏக்கர் 200 ஏக்கர் என்று பறந்து இருக்கும் ஸ்ரீரங்கம், சிதம்பரம், தஞ்சாவூர், மதுரை போன்று இல்லை.  நுட்பமான சிற்பங்கள் இல்லை. அவர்களது கோயில்கள் காஞ்சிபுரம் போன்ற இடங்களில் குறுகிய இடங்களில் அமைந்தன. இரண்டாவது பல்லவர்களை தமிழர்களாக தமிழர்கள்  பார்க்கவில்லை. அவர்கள் வெங்கி நாடு போன்ற தமிழகத்து அப்பாற்பட்டு இருந்த நாடுகளில் இருந்து வந்தவர்கள் என்று கருதப்பட்டனர். 

   Jayakumar

   நீக்கு
  2. குடைவரை கோயில்கள் பிற்கால பிர்மாண்ட கோயில்களுக்கு முற்பட்டவை. எல்லா விஷயங்களிலும் முற்பட்ட காலத்து சிறப்புகளுக்கென்று தனி மரியாதை உண்டு. அதனால் இந்த ஒப்பு நோக்கல் வரலாற்று விஷயங்களில் செல்லுபடியாகாது.

   நீக்கு
  3. தமிழர்கள்?..

   வேடிக்கை தான். சேர நாடு மலையாளக் கரையான கதை தான்!..

   நீக்கு
  4. வரலாற்றின்படியே குடவரைக்கோயில்கள் எழுப்புவதில் சிறந்தவர்கள் முற்காலப் பாண்டியர்கள். அவர்களுக்கும் பின்னால் ஐந்து அல்லது ஆறு ஏழு நூற்றாண்டுகளுக்குப் பின்னரே மஹேந்திர பல்லவன் காலத்தில் தொடங்கி ராஜசிம்ம பல்லவன் வரை குடவரைக்கோயில்கள், கற்களைக் குடைந்து சிற்பங்கள் என ஏற்பட்டன. அந்த வகையில் மாமல்லபுரம் இன்றளவும் பல்லவர்கள் பெயரைத்தான் சொல்லிக் கொண்டிருக்கிறது. பல்லவர் காலத்துக்குடவரைக்கோயிலுக்கும் முன்னாலே இருந்த கோயில்களுக்கு அவை பல்லவரால் எழுப்பப்படவில்லை என்பதாலேயே சிறப்பு மரியாதையைக் கொடுக்க முடியாது என்பது ஏற்க முடியாத ஒன்று. சோழர் காலத்தில் குடவரைக்கோயில்கள் எழுப்பப்படவில்லை எனினும் ஶ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலும் சிதம்பரம் நடராஜர் கோயிலும் அவர்களால் முக்கியத்துவம் பெறப்பட்டுப் பல திருப்பணிகள் செய்யப்பட்டுப் பெரிதும் பிரபலப்படுத்தப்பட்டன. இதற்குக் காரணம் சோழர்களின் முடிசூட்டுவிழாவைத் தில்லை அந்தணர்களும்/ஶ்ரீரங்கத்து வைணவர்களுமே ஏற்பாடு செய்ததும் ஒரு காரணமாக இருந்திருக்கலாம். கம்பர் ராமாயணத்தை ஶ்ரீரங்கத்தில் தான் அரங்கேற்றினார்.

   நீக்கு
 23. கோவில்கள் பற்றி தெரியாத பல வரலாற்றுத் தகவல்கள் பல அறிய முடிந்தது.

  கீதா

  பதிலளிநீக்கு
 24. படித்த புத்தகம் - ஜீவி சார் அருமை. நிறைய எழுதலாம். நல்ல அறிமுகம்

  பதிலளிநீக்கு
 25. வாங்க, நெல்லை. உங்கள் பின்னூட்டதைப் பார்த்ததும் பொன்னியின் செல்வனில் கல்கி அவர்களின் விவரிப்புகள் மனசில் பளிச்சிட்டுப் போயின.

  பதிலளிநீக்கு
 26. அறிவியல் கண்டுபிடிப்புகள் புதிய பகுதி அறிமுகம் நன்று. இது பயனுள்ள தகவல்கள்.
  முன்பும் இப்படி ஒரு பகுதி இட்டிருந்த நினைவு.

  வாசித்த புத்தகத்திலிருந்து குடவரைக் கோயில்கள் பற்றிய தகவல்கள் சொன்ன விதம் அருமை.

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
 27. விஞ்ஞானம் குறித்த தகவல்கள் அனைத்தும் சிறப்பு. நூல் அறிமுகம் குறித்து படித்துக் கொண்டிருக்கிறேன். நின்று நிதானித்து வாசிக்க வேண்டிய விஷயம்.

  பதிலளிநீக்கு
 28. விஞ்ஞான தகவல்கள் அருமை.
  ஜீவி சார் வாசித்த புத்தகம் பகிர்வும் அருமை.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!