புதன், 2 மார்ச், 2022

பழங்கால மருத்துவம்/இப்போதைய மருத்துவம் இரண்டில் எது சிறந்தது?

 

கீதா சாம்பசிவம் :

1. பழங்கால மருத்துவம் / இப்போதைய மருத்துவம் இரண்டில் எது சிறந்தது?

$ பழங்காலம் என்றால் பாட்டி (அல்லது வீட்டு) வைத்திய முறையா?

தலைவலி வயிற்று வலி நிவாரணம் பல உண்டு. 

சில சமயங்களில் பல்வலிக்கு யார் என்ன சொன்னாலும் செய்து மறுநாள் வலி போன பின் எந்த மருந்து வேலை செய்தது என்று தெரியாமல் போவதுண்டு .

வேப்பிலை ஒவ்வொரு வருடம் பூச்சி அழிப்புக்கு பயன்படுவதில்லை 

இலைகளில் azadiractin எனும் insecticide உண்டாவதில்லை.

நாட்டு வைத்தியருக்கு அதை அறிய வாய்ப்பு குறைவு 

இது மாதிரி இன்னும் எத்தனையோ?

# ஒவ்வொரு சந்தர்ப்பத்தில் பழங்கால (ஆயுர்வேத) மருத்துவமும் வேறு நிலையில் அலோபதி மருத்துவமும் சிறந்தது.  ஆயுர்வேத மருந்துகளில் பக்க விளைவு இராது என்பதை நாம் அறிவோம்.  அவசர சிகிச்சை தேவைப் படும் போது நவீன மருத்துவத்தை நாடுவது நம் இயல்பு.  நீண்ட நாள் சாப்பிட வேண்டிய மருந்துகளுக்கு ஆயுர்வேத மருந்துகள் டானிக்குகள் சிறந்தவை . விபத்தில் ரத்தம் சேதம் ஆகும்போது ஆரிய வைத்தியசாலை நோக்கிப் போவோர் இருக்க இயலாது.

& இப்போதைய பழங்கால மருத்துவம்தான் சிறந்தது. செலவு குறைவு, பக்க விளைவுகள் கிடையாது. 

அந்தக் காலத்து மருத்துவர்கள் பச்சிலை, சூரணம், பத்தியம் என்று சிகிச்சை அளித்து நோயாளிகளை குணப்படுத்தினார்கள். 

இந்தக் காலத்து மருத்துவர்கள் பெரும்பாலும் கத்தி, கத்தரிக்கோல், சுத்தியல் + scan என்று நோயாளிகளை படுத்துகிறார்கள். 

2. சித்தா/ஆயுர்வேத மருந்துகளைப் பயன்படுத்தியது உண்டா?

$ ஆயுர்வேத எண்ணைக் குளியல் மிகவும் உபயோகமாக இருந்தது stroke ஆல் வந்த partial paralysis இலிருந்து விடுபட ! 

கடலூரில் இருந்தபோது சித்த வைத்தியர் அகஸ்தியர் அவுஷதாலயா என்ற பெயரில் நடத்தி வந்த வைத்திய சாலைக்கு அம்மா அழைத்துச் செல்வார் . தேனில் குழைத்து சாப்பிட ஒரு பொடி (6 பொட்டலம்) சோமலதா என்றொரு 2 oz திரவம்...எல்லா ஜூரமும் சரியாகி விடும். 

# சித்தா தெரியாது.  ஆயுர்வேத மருந்துகள் அதிகம் பயன்படுத்துவதுண்டு. 

& உண்டு. 

3. ஆயுர்வேதம்/சித்தா போன்றவற்றிலும் அறுவை சிகிச்சை முறை உண்டு. சஸ்திர சிகிச்சை என ஆயுர்வேதத்தில் சொல்கிறார்கள். சித்தாவில் என்ன பெயர்னு தெரியலை. ஆனால் பிரபலம் அடையவில்லை. இன்றைய ஆயுர்வேத மருத்துவர்களில் அறுவை சிகிச்சை நிபுணர்கள் உண்டா? கேள்விப் பட்டிருக்கீங்களா?

 $ இன்றைய ஆயுர்வேத மருத்துவர்கள் TT injection போடுவது கூட குற்றமாக பார்க்கப் படுகிறது

# பிரபல ஆயுர்வேத மருத்துவர்களே கூட சஸ்திர  சிகிச்சை என்று வரும்போது அலோபதி ஆஸ்பத்திரிக்குதான் போகிறார்கள்.  சரக சம்ஹிதை குறிப்பிடும் அறுவை சிகிச்சைகள் தற்போது புழக்கத்தில் இல்லை.

& // ஆயுர்வேத மருத்துவர்களில் அறுவை சிகிச்சை நிபுணர்கள் உண்டா? // 
என்னுடைய பதில் (தமாஷ்தான் - சீரியஸ் பதில் இல்லை) 

சுமார் நாற்பது வருடங்களுக்கு முன்பு - காதில் இரைச்சல், இடது காது மந்தம் போன்ற தொந்தரவுகள் இருந்த சமயம், பக்கத்து வீட்டில் இருந்த நண்பர் கந்தசாமி சொன்ன ஆலோசனையில், மாம்பலத்தில் இருந்த ஒரு பிரபல ஹோமியோபதி  வைத்தியரை  நாடிச் சென்றேன். 

வெகு நேரம் காத்திருந்தபின், அந்தப் பழைய வீட்டின் புராதன அறை ஒன்றில், உட்காரந்திருந்த வயதான வைத்தியரின் தரிசனம் கிடைத்தது. வெள்ளை நிற பைஜாமா + வெள்ளை நிற ஜிப்பா அணிந்த பிக்விக் (Mr Pickwick ) போல இருந்தார் . 

என்னுடைய பிரச்சனையை சொன்னேன். கேட்டுக்கொண்டார். 

அப்புறம் கேட்டார். 
அவர் : " படுத்துத் தூங்கும்போது எந்தப் பக்கமாகப் படுத்துத் தூங்குவீர்கள்? "
நான் : " மனைவி படுத்திருக்கும் பக்கமாக " 
அ : " அவங்க ?"
நா : " என் பக்கமாக. "
அ : " அவங்க உங்களுக்கு இடது பக்கத்தில் படுத்துத் தூங்குவாங்களா அல்லது வலது பக்கத்திலா ?"
நா : " ரெண்டு பக்கத்திலும் "
அ : " ரெண்டு மனைவியா ?" 
நா : " இல்லை - ஒன்றுதான் "
அ : " அப்போ எப்படி அவங்க ரெண்டு பக்கமும் படுத்துத் தூங்கமுடியும்? "
நா : " அப்பப்போ மாறி படுத்துக்குவாங்க "
பேசிக்கொண்டிருக்கும்போதே அவர் தான் வைத்திருந்த ஒரு கனமான பழைய புத்தகத்தை சில பக்கங்களைப் புரட்டிப் பார்த்தார். நானும் அவர் என்ன படிக்கிறார் என்று எட்டிப் பார்த்தேன். அவர் சட்டென்று அந்தப் புத்தகத்தை தன் பக்கம் இழுத்துக்கொண்டு, வேறு கேள்விகள் கேட்க ஆரம்பித்தார். என்னுடைய பரம்பரையில் யாருக்கெல்லாம் காது பிரச்சனை என்று கேட்டுத் தெரிந்துகொண்டார். மீண்டும் புத்தகத்தில் சில பக்கங்களை ரகசியமாக நோட்டம் விட்டார் - நான் பார்க்கமுடியாதபடி கைகளால் மூடியபடி!  
அவர் : " குளிக்கும்போது காதை மூடிக் கொள்வீர்களா ?"
நான் : " இல்லை - மனைவி திட்டும்போது மட்டும்தான் "
அவர் : " உங்களுக்கு என்ன சுவை பிடிக்கும்? "
நான் : (' நகைச்சுவை' என்று சொன்னால் டாக்டர் வெகுண்டு எழுந்துவிடுவார் என்ற பயத்துடன் ) " இனிப்பு "
இதே போல கேள்வி பதில் கிட்டத்தட்ட அரைமணி நேரம் தொடர்ந்தது. 
கடைசியில் ஐம்பது மில்லி அளவு பாட்டிலில் சிறு சீனி உருண்டைகளை நிதானமாக எண்ணி 200 போட்டுக் கொடுத்து, எவ்வளவு சீனி உருண்டைகள் எப்பொழுதெல்லாம் சாப்பிடவேண்டும் என்று சொல்லி ஃபீஸ் (எவ்வளவு என்று மறந்துபோய்விட்டது ) வாங்கிக்கொண்டு அனுப்பினார். 

ஒரே மாதத்தில் தீர்ந்து போனது - மருந்து. 

நெல்லைத்தமிழன்: 

1. நல்ல பாம்புனு ஏன் பெயர் வந்தது?  

$ வஞ்சப் புகழ்ச்சி !

# சிவன் தலையில் பாம்பு இருப்பதால் அது நல்ல பாம்பாகத்தான் இருக்கவேண்டும் என்ற நம்பிக்கை காரணமாக வந்திருக்கும்.  மேலும் பாம்பு சில கொள்கைகளைக் கடைப்பிடிப்பதாக ஒரு மூட நம்பிக்கை இருப்பதும் காரணமாக இருக்கலாம். 

& நவம்பர் 10 2021 - ஜெயகுமார் சந்திரசேகரன் கேள்வியும் கிட்டத்தட்ட இதே கேள்விதான் 

2. ஏன் வேட்பாளர்களைப் பார்த்து வாக்களிப்பதில்லை?

$ அவ்வை யின் சீடரோ?  தன்னைப்போல்...

# வேட்பாளர்கள் குறித்து அந்த அளவு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

& ஒரு மாறுதலுக்காக கடந்த தேர்தலில் நான் வோட்டு போட்டு ஜெயித்த எம் எல் ஏ வை இரண்டு வருடங்களுக்கு முன்பு நேரில் சென்று பார்த்து பேச வாய்ப்பு கிடைத்தது! எங்கள் பகுதி போக்குவரத்துப் பிரச்சனை குறித்து ஒரு குழுவாகச் சென்று அவரிடம் மனு கொடுத்தோம். பிரச்சனை இப்போது ஓரளவுக்கு சரிப்படுத்தியுள்ளார்கள். 

3. Hotstar, Amazon Primeல் பார்க்க வேண்டிய தொடர்கள் சினிமாக்கள் என்ன? 

$ அமேசான் prime

Tv shows மட்டுமே பார்க்கிறேன்

NCIS

Covert affairs

Good wife bad wife

Madam secretary

Person of interest

Mentalist

Crime scene investigation

Young sheldon

# தெரியவில்லை. 

4. விளம்பரங்களில் சொல்லப்படும், காட்டப்படும் பொய்களை யார் கட்டுப்படுத்துவது?

 $ யார் என்று தெரியாது. ஆனால் சில விளம்பரங்கள் காணாமல் போவதுண்டு.

# தவறான விளம்பரம் என்றால் அதைக் குறித்து புகார் செய்ய வசதி இருப்பதாக நினைக்கிறேன்.  நிச்சயமாகத் தெரியவில்லை.

& We can register complaints in the net area : Grievances Against Misleading Advertisements page of the web page of Department of Consumer Affairs. 

LINK :  https://gama.gov.in/ <<<  இந்த சுட்டியில் கிளிக் செய்து, உங்கள் புகாரைப் பதியலாம். 

கில்லர்ஜி தேவக்கோட்டை: 

கணவனை செல்லமாக பொதுவெளியில் வாடா போடா என்று அழைக்கலாமா ?

# செல்லமாக அழைப்பதற்கெல்லாம் இலக்கணம் சொல்ல முயற்சிக்கக் கூடாது.

& மனைவியை ' வாடி  போடி ' என்று அழைப்பவர்களுக்கு அதுதான் சரியான பதிலடி!! இது எப்படி ? அம்மாடி - யாரும் என்னைத் துரத்துபவதற்கு முன் நான் போகிறேன் ஓடி !! 

ஜெயக்குமார் சந்திரசேகர் : 

தாம்பூலம் என்றால் என்ன? ஏன் அந்த பெயர் வந்தது?  தாம்பாளத்தில் வைத்து தரப்படுவதாலா? 

# தாம்பூலம் இடுகுறிப்பெயராக இருக்கும்.  

வெற்றிலை பாக்கு போடும் வழக்கம் போய்விட்ட இந்தக் காலத்திலும் தாம்பூலம் (வெற்றிலை பாக்கு) வைத்து அழைக்கா  விட்டால் மரியாதை குறைவு என்று கருதுவது ஏன்? 

# வெற்றிலை பாக்கு வைத்து அழைப்பது மரியாதை.  வைக்காவிட்டால் அவமரியாதை அல்ல.  சில பழக்கங்கள் காலம் காலமாக நம்மிடையே இருந்து வருகின்றன.  அவற்றில் இதுவும் ஒன்று.  சில சம்பிரதாயங்கள் ஒருவிதமான மன நிறைவை ஏற்படுத்தும். வெறும் பழக்க தோஷம்தான்..

அழைப்பிதழ் என்பது அவசியம் தானா? அழைப்பிதழ் தந்து வாய் அழைப்பு இல்லை எனில் வாயைத் திறந்து கூப்பிட்டானா என்கின்றனர். அழைப்பிதழ் இல்லாமல் சும்மா கூப்பிட்டால் ஒரு பத்திரிகை இல்லை, மரியாதை இல்லை என்கின்றனர். இந்த இரண்டும் தவிர்க்க முடியாதது ஏன்?

# வாய்நிறைய அழைத்தால் மனம் குளிர்ந்து போகும்.  அத்துடன் பத்திரிகை என்பது அழைப்பை உறுதி செய்கிறது.  இரண்டையும் சிறப்பாகச் செய்து விடலாமே.  சில நேரங்களில் அன்பு, அக்கறை  &  மரியாதை இருப்பதை உறுதி செய்ய வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.

தாம்பூலம் கொடுத்து உபசரிப்பதே மங்களம் என்று இருக்கிறது. பூஜையிலும் தாம்பூலம் அர்ப்பணம் பண்ண வேண்டும். அது ஸெளபாக்ய சின்னம்; அதோடு ஜீர்ணகாரி, ரத்த சுத்தி. சுண்ணாம்பில் கால்ஷிய ஸத்து இருக்கிறது. (காஞ்சிப் பெரியவர் உரை)

= = = = =

படம் பார்த்து கருத்து எழுதுங்கள் :

1) 

2) 

3) 

= = = =

130 கருத்துகள்:

  1. நோய் நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும் வாய் நாடி வாய்ப்பச் செயல்..

    குறள் நெறி வாழ்க..

    பதிலளிநீக்கு
  2. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
    இறையருள் சூழ்ந்து எங்கும் இன்பமே நிறைந்து வாழ்க..

    வாழ்க நலம்..
    வாழ்க தமிழ்..

    பதிலளிநீக்கு
  3. அன்பின் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
    தொற்றில்லா வாழ்வு தொடரட்டும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கேள்விகளும் பதில்களும் வெகு சுவாரஸ்யம்.
      ஆயுர் வேத எண்ணெய்களில்
      நல்ல பலன் கண்டிருக்கிறேன்.

      எல்லாமே விலையேறி விட்டன.
      சூரணங்கள் அம்மாவீட்டில் இருக்கும்போதும்
      கச்சேரி ரோடு வெங்கட் ரமணா வைத்தியசாலையிலும்
      வாங்கி சாப்பிட்டதுண்டு.

      நீக்கு
    2. கரூரைத் தலைமையிடமாகக் கொண்ட இந்த வெங்கட்ரமணா வைத்தியசாலையின் இப்போதைய வாரிசு தான் எனக்குப் பார்த்துக் கொண்டிருந்தார். அவர் தற்சமயம் கொரோனா வந்த 2020 ஆம் ஆண்டிலிருந்து இங்கே வருவதில்லை. இங்கே அவர் அனுப்பிக் கொண்டிருந்த மருந்துகளும் கூரியர் சேவையும் பேருந்து சேவையும் இல்லாமல் தாமதம் ஆகவே நான் மூன்று மாதங்களுக்கும் மேலாக அவதிப்பட்டேன். இப்போதும் அவர் வருவதில்லை. :(

      நீக்கு
  4. பெண் கான்ஸ்டபிள்கள்

    இது மாதிரி எல்லாம் தலை அலங்காரம் பண்ணக் கூடாது
    2, முதல்ல உன் தொப்பி எங்கேன்னு சொல்லு.

    ஆசீர்வாதம் செய்யும் அனுமன்.

    பதிலளிநீக்கு
  5. அனைவருக்கும் காலை/மதிய/மாலை வணக்கம். நல்வரவும், வாழ்த்துகளும், பிரார்த்தனைகளும். போர் முற்றிலும் நின்று அமைதி எங்கும் நிலவப் பிரார்த்தனைகள். சாந்தி நிலவ வேண்டும்.

    பதிலளிநீக்கு
  6. கர்நாடகா வாழ் மருத்துவ இளைஞரின் இறப்புக்கு அஞ்சலிகள். பெற்றோருக்கு ஆறுதல்கள். சும்மா இப்படிச் சொல்லிக்கலாமே தவிர்த்துப் பெற்றோரின் நிலைமையை நினைக்க நினைக்க வேதனை அதிகம் ஆகிறது. காயம் பட்டிருக்கும் இன்னொரு

    இளைஞர் முற்றிலும் குணமாகித் தன் உற்றாரை/பெற்றோரைச் சேர்ந்திடவும்
    பிரார்த்தனைகள். போர் தொடங்கும்போதே அரசு பல முறை அறிவுறுத்தியும் தங்கள் இருப்பிடத்தை விட்டு வெளியே வராமல் இருந்த மாணவர்கள்! என்ன நினைத்து அங்கேயே தங்கினார்களோ தெரியவில்லை. குடிநீர், ஒருவேளை உணவுக்குக் கூடத்தட்டுப்பாடு. மீதம் இருக்கும் இந்திய மாணவ/மாணவிகளாவது விரைவில் தங்கள் பெற்றோரை அடையப் பிரார்த்தனைகள். என்ன பிரச்னைன்னா இப்போ மேற்குப் பகுதி தவிர்த்து மற்றப் பக்கம் எல்லாம் மூடிவிட்டார்கள். :( இறைவன் தான் காப்பாற்ற வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏவுகணைத் தாக்குதலில் உணவு வாங்கச் சென்ற கர்நாடகாவைச் சேர்ந்த 3 இளைஞர்கள் ஒருவர் கொல்லப்பட்டார். ஒருவர் பலத்த காயம். இன்னொருவர் தப்பி விட்டார். நேற்று மாலையே செய்திகள் வந்தன. :( பிரதமர் மற்றவர்களைக் காப்பாற்ற எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றி முக்கியமான ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தினார். இந்திய தூதரகம் மாணவர்களை/இந்தியர்களை இருப்பிடத்தை விட்டு வெளியே வராதீர்கள் என எச்சரித்துக் கொண்டே இருக்கிறது.

      நீக்கு
    2. இதுவே தமிழ்நாட்டு மாணவர் எனில் இத்தனை நேரம் அல்லோலகல்லோலப் பட்டிருக்கும். மோதி தான் திட்டம் போட்டு உக்ரேனியர்களிடமும்/ரஷியர்களிடமும் சொல்லி அந்த மாணவனைக் கொன்றதாக எல்லா சானல்களிலும் வாத/விவாதங்கள் ஆரம்பித்திருக்கும். தமிழகத்தை மத்திய அரசு வஞ்சிக்கின்றது எனப் பல்லைக் கடித்துக் கொண்டு அரசியல்வாதிகள் முழக்கம் இடுவார்கள். இறந்த மாணவன் குடும்பத்திற்குக் குறைந்த பட்சமாக ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டுப் போராட்டங்கள் நடைபெறும்.

      நீக்கு
  7. கேள்விகளுக்கான பதில்கள் நன்று. குஜராத்தில் ஜாம்நகர் ஆயுர்வேதப் பல்கலைக் கழகத்தில் சஸ்திர சிகிச்சைக்கான பிரிவு தனியாக உண்டு. ஜப்பான், இந்தோனேஷியாவில் இருந்தெல்லாம் அங்கே வந்து படிக்கும் மாணவ/மாணவிகளைப் பார்த்திருக்கோம். அறிவியல் பாடம் மட்டுமில்லாமல் சம்ஸ்கிருதத்திலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பலரும் இதுக்காகவே சம்ஸ்கிருதம் கற்றுக் கொண்டு சேர்ந்து வருகின்றனர். இதோடு இல்லலமல் ஒரு சில மருத்துவர்கள் ஜோசியமும் நன்றாகக் கற்று வைத்திருப்பார்கள். ஜாதகத்தைப் பார்த்து அதிலுள்ள கிரஹங்களின் நிலைமைக்கு ஏற்ப மருத்துவம் செய்வார்கள். இதைக் கண்கூடாகப் பார்த்திருக்கோம். இப்போவும் அப்படியே இருக்கும் என நம்புகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜாம்நகர் பலகலைபோன்று தமிழ்நாட்டில் ஏதும் உண்டா? அதாவது சமஸ்க்ருதம்,வேதம், ஆயுர்வேதம் என்றெல்லாம் கற்றுக்கொடுக்கும் கல்வி நிறுவனங்கள்..

      நீக்கு
    2. தமிழ்நாட்டிலாவது சம்ஸ்கிருதம், ஆயுர்வேதம் கற்றுக் கொடுப்பதாவது? சம்ஸ்கிருத பாரதி மூலமாகவும், சில தனியார்கள் மூலமும் சென்னை சம்ஸ்கிருதக்கல்லூரி மூலமாகவும் சம்ஸ்கிருதம் இன்னமும் ஓரளவுக்கு ஆரோக்கியத்துடன் இருந்து வருகிறது. அதே போல் வேத பாடசாலைகளும். முன்பை விடப் பலரும் இப்போது வேத பாடசாலைகளை ஆதரிக்கிறார்கள். என் உபிச திரு தி.வாசுதேவன் கடலூரி ஸ்வாமிநாதர் அறக்கட்டளை என்னும் பெயரில் ஓர் வேதபாடசாலையைப் பராமரித்து வருகிறார். எனக்குத் தெரிந்து பதினைந்து வருஷங்களாக. அதற்கு முன்னால் எத்தனை ஆண்டுகள்னு தெரியாது. அதே போல் தில்லியிலிருந்து சீதாராமன் என்னும் வைதிகர் இங்கே வந்து கும்பகோணம்--திருச்சி சாலையில் களஞ்சேரி என்னும் ஊரில் ஒரு பெரிய வேதபாடசாலை, முதியோர் இல்லம், அங்கே நாம் தனியாகவும் வீடு வாங்கிக்கலாம் என்னும்படி பல ஏற்பாடுகள் செய்து பெரிய அளவில் நன்கொடைகள் பெற்று நடத்தி வருகிறார். இங்கே ஶ்ரீரங்கத்திலேயே எங்க குடும்பப் புரோகிதர் தவிர்த்துத் திருவானைக்கா, ஶ்ரீரங்கம் கோயில்கள் மூலமும் வேதபாடசாலைகள் நடக்கின்றன. ஆயுர்வேதம் மருந்தெல்லாம் மத்திய அரசின் ஆயுஷ் மூலமோ அல்லது தன்வந்தரி வைத்தியசாலை, ஆரிய வைத்தியசாலை மூலமோ தான் வாங்க வேண்டி இருக்கு. சித்தா மருந்துகளை இப்போது கொரோனாவுக்கப்புறமாத் தமிழ்நாடு அரசும் ஆதரிப்பதால் ஓரளவு உயிர்ப்புடன் இருக்கு.

      நீக்கு
  8. முதல் படத்தில் ஒரு பெண்ணின் ஷூ ப்ரவுன் நிறத்திலும் இன்னொரு பெண்ணின் ஷூ கறுப்பு நிறத்திலும் காணப்படுகிறது. அந்தக் கறுப்பு நிற ஷூ அணிந்த பெண் தான் மேலதிகாரியோ? இன்னொரு பெண்ணைக் கண்டிப்பது போல் தெரிகிறது.

    பதிலளிநீக்கு
  9. அது என்ன பூசாருக்கு முன்னே எரியும் மெழுகுவர்த்தியை வைத்திருப்பதைப் பார்த்தால் கேக் மாதிரித் தெரியலை. மெழுகு அதுவும் வண்ணத்தில் மெழுகு எனத் தோன்றுகிறது. ஏனெனில் கேக் எனில் சுற்றிலும் அடைப்பு இருக்காது. இங்கே ஓர் பெட்டிக்குள் அடைச்சு வைச்சிருக்காப்போல் இருக்கே. எப்படியோ பிறந்த நாள் வாழ்த்துகள் பூஸாருக்கு.

    பதிலளிநீக்கு
  10. குழந்தை பயமே இல்லாமல் முன்னோரிடம் போய் ஆசி வாங்கிக்கிறதே! பழகினதோ? என்றாலும் கொஞ்சம் பயம்தான். அவங்கல்லாம் எப்போ எப்படி மாறுவாங்கனு தெரியாது.

    பதிலளிநீக்கு
  11. நல்ல பாம்பு பற்றி நேற்றுக் கூட எங்கேயோ (முகநூலில்?) படிச்சேன். நல்ல எனில் தெலுங்கில் கறுப்பு என அர்த்தம் எனச் சொல்வார்கள். ஒருவேளை நல்ல பாம்பெல்லாம் கறுப்பு நிறத்தில் தான் இருக்குமோ? ஆனால் கருநாகம் எனத் தனியாக வேறே சொல்லுவார்களே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கும் அப்படி ஒரு சந்தேகம் உண்டு.

      நீக்கு
    2. அப்படீன்னா ‘நல்லபாம்பு’ங்கிறது தெலுங்கு வார்த்தையா.. நல்லாருக்கே!

      நீக்கு
    3. ஹாஹாஹாஹா "நல்ல" என்னும் சொல்லே தெலுங்கு தானே!

      நீக்கு
  12. விளம்பரம் குறித்த கேள்விக்கு! ஒரு குறிப்பிட்ட ப்ரான்ட் விளம்பரம் பிராமணர்களைக் கேவலப்படுத்துவது போல் இருந்ததால் எல்லோருமாகச் சேர்ந்து புகார்ப்பக்கம் கையெழுத்து இட்டு அதை முற்றிலும் நீக்கினார்கள். ஆனால் அதன் பின்னரும் அதே ப்ரான்ட் உணவுக்கு அதே போல் பிராமணர்களைக் கேலி செய்யும் விதமாக வந்து கொண்டு தான் இருக்கு. ஆனால் புகார் செய்யலாம் என்பது பலருக்கும் தெரியறதில்லை.

    பதிலளிநீக்கு
  13. ஹோமியோபதியில் குடும்ப சரித்திரம் முழுவதும் விசாரிப்பார்கள். நான் கொஞ்சம் கொஞ்சம் ஹோமியோபதி படித்ததால் அது குறித்துத் தெரியும். அதோடு ஹோமியோபதி மருந்துகள் எடுத்துக் கொள்ளும்போது பூண்டு, வெங்காயம் சேர்க்கக் கூடாது. காஃபி,தேநீர் குடிக்கக் கூடாது. இப்போல்லாமும் இதைக் கடைப்பிடிக்கிறாங்களானு தெரியலை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படி இல்லை. கொரோனாவின் ஆரம்ப கட்டத்தில் எங்க குடியிருப்பில் இருக்கும் கணவன்/மனைவியான இரண்டு ஹோமியோபதி மருத்துவர்கள் கொரோனா தடுப்பு மருந்துகளை இலவசமாக எங்களுக்கு அளித்தார்கள். பலன் இருந்தது. இப்போக் குஞ்சுலு வந்திருந்தப்போ சாப்பிடலைனு சொல்லி ஹோமியோபதி மருந்து தான் வாங்கிக் கொடுத்தோம். ஊருக்குக் கிளம்புவதற்குள்ளாக இரண்டு வேளையும் படுத்தாமல் சாப்பிட்டது.

      நீக்கு
    2. எங்க பெண்ணிற்கும் ஆறு, ஏழு வயதில் டான்சிலிடிஸ் குணமாக ஹோமியோபதி மருந்து தான் கொடுத்து வந்தோம். சுமார் ஒரு வருஷம் கொடுத்திருப்போம்.

      நீக்கு
  14. வயிற்றுத் தொந்திரவு, கால் வலி, முழங்கால் மூட்டு வலி போன்றவற்றிற்கு ஆயுர்வேதமே சிறந்தது என்பது என் தனிப்பட்ட கருத்து.

    பதிலளிநீக்கு
  15. //வேப்பிலை ஒவ்வொரு வருடம் பூச்சி அழிப்புக்கு பயன்படுவதில்லை
    இலைகளில் azadiractin எனும் insecticide உண்டாவதில்லை.
    நாட்டு வைத்தியருக்கு அதை அறிய வாய்ப்பு குறைவு // நாட்டு வைத்தியம் என்று எதைச் சொல்கிறீர்கள் எனப் புரியவில்லை. சித்தா/ஆயுர்வேதம் இரண்டுமே நம் நாட்டு வைத்தியம் தான். அவற்றில் இப்போது பற்பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுத் தரமான ஆங்கில மருத்துவத்தை விடவும் நல்ல பலனளிக்கும் மருந்துகள் வருகின்றன. அதோடு ஆங்கில மருத்துவ மாத்திரைகள் போலவே காப்சூல்கள், மாத்திரைகள், சிரப்புகள் என வருவதால் அதைப் பழங்கால மருத்துவம் எனத் தள்ளிவிட முடியாது. இடைவிடாத மூச்சுத் திணறல்/ஆஸ்த்மாவிற்கு ஸ்வாஸாம்ருதம் என்னும் ஒரு சிரப் தொடர்ந்து சில நாட்களுக்கு எடுத்துக் கொண்டால் நெபுலைசர், ஆக்சிஜன் போன்றவற்றைத் தவிர்க்கலாம். சொந்த அனுபவம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்வாஸாம்ருதம் ஆயுர்வேதக் கடைகளில் மட்டும்தான் கிடைக்கிறதா? இந்த மாதிரி கைகண்ட மருந்துகளை அனுபவஸ்தர்கள் பகிர்வது மற்றவர்களுக்கும் பயன் தரும்.

      நீக்கு
    2. ஏகாந்தன், இங்கே திருச்சியைப் பொறுத்தவரை அலோபதி மருந்துக்கடையில் கூடக் கிடைக்கிறது. இது ஓர் சித்த மருந்து தான். 21 மூலிகைகளால் தயாரிக்கப்பட்டது.ஐ.எஸ்.ஓ தரச்சான்றிதழ் பெற்றது. ஶ்ரீசாமுண்டீஸ்வரி ஃபார்மஸி, சேலம்.636008. லான்ட்லைன் தொலைபேசி 0427 226086.தமிழ்நாடு அரசு அங்கீகாரம் எண் 1237/சித்தா! இந்த சிரப் கடுமையான ஆஸ்த்மாவுக்கும் நல்ல பலன் தருகிறது. 2,3 வருஷங்களாக நான் ரோடா ஹேலரோ, நெபுலைசரோ பயன்படுத்தவில்லை. எங்க பையர் இங்கே வந்தப்போ இருமலால் அவதிப்பட்டதற்கும் இதைத் தான் வாங்கிக் கொடுத்தோம். நல்ல பலன் இருப்பதை உணர்வதாகத் தெரிவித்தார். போகும்போது 2 பாட்டில்கள் வாங்கிக் கொடுத்திருக்கோம்.

      நீக்கு
    3. Swasamrutham is available in Amazon also. 400 ml costs about Rs 536

      நீக்கு
    4. நான்/நாங்க அமேசான் மூலம் எதுவுமே வாங்கியதில்லை. பெண்ணோ/பிள்ளையோ அவ்வப்போது எங்களுக்கு ஏதானும் அனுப்பணும்னா அமேசானில் பதிவு செய்துவிட்டு cash on delivery யில் அனுப்புவாங்க.ஏனெனில் அம்பேரிக்க டாலர்களில் இந்தியாவுக்குப் பணம் கட்டி அனுப்ப முடியலை எனச் சொல்கின்றனர். அதோடு இந்த மருந்து வகைகள் எல்லாம் அமேசான்.இந்தியாவில் தான் கிடைக்கின்றன. அமேசான்.இந்தியா மூலம் அனுப்பினால் ரூபாய்களில் தான் பணம் கொடுக்கணும். அம்பேரிக்க டாலர்களை அது ஏத்துக்கறதில்லை என்பார்கள்.

      நீக்கு
    5. ஸ்வாஸாம்ருதம் விலை அதிகம் தான். 200 மிலி. 250 ரூபாய்க்குத் தான் வாங்குகிறோம்.

      நீக்கு
  16. ஹிஹிஹி, நானே மொத்தக்குத்தகை எடுத்துட்டேன் போல. இன்னிக்கு அமாவாசை என்பதால் பின்னர் வரேன். :))))

    பதிலளிநீக்கு
  17. ஶ்ரீராம் உடல் நலமாய் இருக்கார் இல்லையா? திங்கள் கிழமையிலிருந்து அவரை இங்கே வலைப்பக்கம் பார்க்கவே முடியலை. :)

    பதிலளிநீக்கு
  18. அதிகமான, செறிவான செய்திகள். ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  19. இந்தக்காலத்தில் மருத்துவத்துறை அடைந்திருக்கும் பிரும்மாண்ட வளர்ச்சியை ஒதுக்கிவிட முடியுமா? பிராமணர்களை வேரறுக்க வில்லை, பிராமணீயத்தைதான் வெறுக்கிறேன். ஜோசியத்தை நம்புகிறேன், ஜோதிடர்களை நம்பவில்லை என்பது போல நவீன மருத்துவம் நல்லது, மருத்துவர்கள் தான் மோசம் எனலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹா, அவரவர் கருத்து அவரவருக்கு. ஆங்கில மருத்துவத்தைக் குறைத்து எடைபோடவில்லை. ஒரு சில தவிர்க்க முடியாத நோய்களுக்கு ஆங்கில மருத்துவமே சிறப்பு. என்னோட இணையத்தோழி நான் இணையத்துக்கு வந்த ஆரம்பத்திலேயே அறிமுகம் ஆனவர் திருமதி ராமச்சந்திரன் உஷா அவர்களின் அம்மா புற்று நோயிலிருந்து குணமடைந்தது ஆயுர்வேத மருந்துகளாலேயே. வெங்கட்ரமணாவில் தான் காட்டி வந்தார் என நினைக்கிறேன். முதலில் அவர் விபரம் சொல்லவில்லை. பின்னர் ஆங்கில மருத்துவரிடம் காட்டித்தன் அம்மாவின் உடல்நிலையில் தற்போதைய நிலைமையைத் தெரிந்து கொண்ட பின்னரே அறிவித்தார்.

      நீக்கு
    2. எங்கேயும் மோசடி செய்யும் மருத்துவர்கள் உண்டு. இங்கேயே ஒரு சித்தா மருத்துவர் லைசென்ஸ் இல்லாமல் பரம்பரையாகப் படித்த அறிவை வைத்து மருத்துவம் பார்த்து நல்ல சம்பாத்தியம். ஆனால் யாரோ எழுதிப் போட்டுக் கார்ப்பொரேஷன் சுகாதாரத் துறை வந்து அவரைப் பிடித்து விட்டது. அவரும் அதிகப் பணத்திற்கு ஆசைப்பட்டு 50 ரூ மருந்துக்கு 500ரூ வாங்கிக் கொண்டிருந்தார். இப்போ எல்லாம் போச்சு.

      நீக்கு
  20. நச்சுப் பாம்பை நல்ல பாம்பு என்று அழைப்பது வஞ்சப் புகழ்ச்சியா? அமங்கலமானதை மங்கலாக குறிப்பிடும் இடக்கரடக்கலா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படியும் இருக்கலாம் !!

      நீக்கு
    2. சிவன் கழுத்தில் இருந்த வாசுகியின் உதவியால் கிடைத்த நலன்கள் என்று புராணத்துக்குப் போகிறது பெயர்க் காரணம்.
      நல்ல பாம்பு மட்டுமே தான் செலுத்தும் விஷத்தின் அளவைத் தேவைக்கேற்ப கட்டுப்படுத்தும் என்று படித்திருக்கிறேன் (அதாவது தற்காப்பு அவசியம் ஏற்பட்டாலொழிய நல்ல பாம்பின் கடிகள் விஷயம் கலக்காத கடிகள் - இது உடான்ஸ் ஆகவும் இருக்கலாம். இல்லை, உண்மை தான் என்று யாராவது நிரூபிக்கக் கிளம்பினால் நான் பொறுப்பல்ல.)

      நீக்கு
    3. *விஷம் கலக்காத கடிகள்

      நீக்கு
  21. படம் 1. எவ்வளவு தடவை சொல்லியிருக்கேன் ஓவர் ஆக்ட் குடுக்காதன்னு? அடங்க மாட்டியா?

    படம் 2. ஃபோட்டோ எடுத்தாச்சா? கேக் கட் பண்ணலாமா?

    படம் 3. நமஸ்காரம் தாத்தா.

    பதிலளிநீக்கு
  22. அனைவருக்கும் வணக்கம் , வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  23. கேள்வி பதில்கள் சுவாரஸ்யமாக இருந்தது ஜி

    பதிலளிநீக்கு
  24. கே ப நல்ல சிரிப்பு.

    பழங்கால வியாதிகள் தற்கால வியாதிகள் பற்றி ஒரு கேள்வி கேட்டிருக்கலாம்.

    ஆயூர்வேத மருந்துகள் பக்கம் போகலாமென்று யோசித்துக் கொண்டிருக்கிறேன். பக்க விளைவுகளே இருக்காது என்று சொல்கிறார்களே என்று அலோபதி ரசிக நண்பரைக் கேட்டேன் .. விளைவுகளே இருந்தால் தானே பக்க விளைவு என்றார் நண்பர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹா! அப்பாதுரை, //விளைவுகளே இருந்தால் தானே பக்க விளைவு என்றார் நண்பர்.// இது முழுத்தவறு. உங்கள் கண்ணெதிரே நான் இருக்கேனே! அதோடு இல்லாமல் நம் எ.பி.ஆசிரியர் குழுமத்தின் கே.ஜி.எஸ். இருக்காரே! மருத்துவர் நல்ல தேர்ந்த மருத்துவராக இருக்கணும். சமீபத்தில் கூடக் கென்யப் பெண் ஒருத்தியின் கண்பார்வையைக் கேரளத்தின் ஆயுர்வேத கண் வைத்தியசாலையின் உதவியால் சீரடைந்தது என பாசிடிவ் செய்திகளில் போட்டிருந்தனர். ஆனால் ஒரு விஷயம். அவங்க பத்தியம் சொன்னால் அதைக் கடுமையாகக் கடைப்பிடிக்கணும். இப்போ ஸ்வாம்ஸ்ருதம் சாப்பிடுவதால் கத்திரிக்காய், தட்டைப் பயிறு,தயிர், கொய்யாப்பழம் சாப்பிடக் கூடாது. வீட்டில் வாங்குவதே இல்லை. அசைவ உணவுக்காரர்கள் மீன், கோழி, கருவாடு போன்றவற்றையும் மேற்சொன்ன காய்களோடு தவிர்க்கணும்.

      நீக்கு
    2. பழங்காலத்தில் சொல்லப்பட்ட மதுமேகம் என்னும் நோய்தான் தற்போதைய நீரிழிவு.

      நீக்கு
    3. ஆயுர்வேதம் பழகி குணமானவர்கள் நிறைய பேரை அறிவேன். என் நெருங்கிய உறவினர் ஒருவர் ஆயிர்வேத விற்பன்னர். நிறைய பேரை நிறைய உபாதைகளிலிருந்து குணப்படுத்தியிருக்கிறார்.

      என் அனுபவத்தில் ஆயுர்வேதம் பலன் தெரிய நாளாகும். பொறுமை வேண்டும். பல நேரம் ஆயுர்வேதம் பலனளிக்க தினசரி வாழ்வியல் மாற்றங்களை எதிர்பார்க்கிறது. (உதாரணத்துக்கு சர்க்கரை வியாதி சிகிச்சையில் ஆயுர்வேதம் அதிகாலை 3:30 அல்லது நாலு மணிக்குள் ஒரு மருந்தை சாப்பிடச் சொல்கிறது.)

      நீக்கு
    4. பொறுமை வேண்டும். அதைவிட அதிகமான ஒழுக்கமும் கட்டுப்பாடும் வேண்டும்.
      யார் கிட்ட?

      நீக்கு
    5. அதிகாலை எல்லாம் எந்த ஆயுர்வேத மருத்துவர் சாப்பிடச் சொன்னார்னு தெரியலை. எங்க மருத்துவர் காலை ஆறு ம்ணிக்கு வெறும் வயிற்றில் ஒரு கஷாயம் நீர் கலந்து சாப்பிடச் சொல்லுவார். அதே போல் மாலை ஆறு மணிக்கு. சாப்பிட்டப்புறமாச் சாப்பிடச் சூரணம்.

      நீக்கு
    6. சுவாரஸ்யமான கருத்துப் பரிமாற்றங்களுக்கு நன்றி.

      நீக்கு
  25. படம் 1 - ஸ்ஸுப்பாஆஆஆஆஆ எனக்கு பர்த்டேன்னு சொல்லிட்டு இதுங்கதான் ஒரே ஃபோட்டோ ஷூட் நடத்திட்டுருக்குங்க பாத்திரத்துல என்ன இருக்கோ! அது எப்ப என் வாய்க்கு வருமோ?! ஹூம்

    கீதா

    பதிலளிநீக்கு
  26. படம் 2 -முந்திரிக்குத்தான் ஆட்டைய போட வந்திருக்கோன்னு நினைச்சேன்..நல்லகாலம் பழக்க தோஷம்ல என் தலைய பார்த்தோடன பேன் பாக்கத் தொடங்கிருச்சு...நீ பாருடா செல்லம், நல்லா பார்த்தா ரெண்டு முந்திரி தரேன்!

    கீதா

    பதிலளிநீக்கு
  27. ஆ கௌ அண்ணா படங்கள் நம்பர் மாறி வந்துடுச்சு...முதல் கருத்து பூஸாருக்கு, ரெண்டாவது கருத்து பாப்பா, மூதாதையர் படத்துக்கு...

    கீதா

    பதிலளிநீக்கு
  28. போலீஸ் பெண்கள் படம் - குடுமிபிடி சண்டையோ!!!!!!!!!!! சண்டைல இடது புறம் கறுப்பு ஷூ பெல்ட் அந்தப் பொண்ணோட கொண்டைய வலதுபுற பொண்ணு பிடிச்சதுல அது போனி டெயிலாகிடுச்சு அதுக்குதான் அந்தப் பொண்ணு கன்னதுல பளார்னு ஒரு அடி கொடுத்து மிரட்டுது போல பாருங்க வலது பக்கப் பொண்ணு கன்னத்த தடவிட்டுருக்கு.!!!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  29. // வேப்பிலை ஒவ்வொரு வருடம் பூச்சி அழிப்புக்கு பயன்படுவதில்லை.. //

    இதனோடு நொச்சி எனும் செடியின் இலைகளையும் சேர்த்துப் பயன்படுத்த வேண்டும்..

    இன்றைய நாட்களில் ஆலமரங்களே அடியற்று ஆதரவற்றுப் போகும் போது நொச்சியாவது.. குச்சியாவது!..

    பதிலளிநீக்கு
  30. // சிவபெருமான் தலையில் இருப்பதால் நல்ல பாம்பாகத் தான் இருக்க வேண்டுமென்ற நம்பிக்கை.. //

    அது கெட்ட பாம்பாக மாறியதும் உண்டு.. அப்படி மாறியதால் தான் சிவராத்திரியன்று நான்கு காலங்களிலும் நான்கு தலங்களில் வழிபட்டது..

    இப்படி ஒரு பதிவு ஆறேழு ஆண்டுகளுக்கு முன் இட்டு வைத்திருக்கின்றேன்..

    இங்கே கேள்விகளுக்கு பதில் அளிப்பவர்கள் எனது தளத்திற்கு வருகின்றார்களா என்பது தெரிய வில்லை.. திரு கௌதம் ஜி அவர்களும் வருவதில்லை..

    பின்னே எப்படி தெரிந்து கொள்வது!?...

    பதிலளிநீக்கு
  31. தாம்பூலம்!..

    இல்லம் தேடி வருபவர்களுக்கு அளிக்கப்படும் உயர்ந்த மரியாதை..

    இது பற்றி - முப்பது வருடங்களுக்கு முன்னால் ஒருமுறை பேசிக் கொண்டிருந்த போது ஒருவன் சண்டைக்கு வந்து விட்டான்..

    திருவிளையாடல் பாணியில்
    தாம்பாளம் தான் தாம்பூலம்..
    தாம்பூலம் தான் தாம்பாளம்..
    - என்று!..

    மயானத்தை நோக்கிச் செல்லும் பிரேதத்தைக் கூட சும்மா அனுப்புவதில்லை..

    கையில் தாம்பூலம் கொடுத்திருப்பார்கள்..

    பதிலளிநீக்கு
  32. பராக் வாயன் - தான் தாம்பூலத்தைக் கெடுத்தவன்..

    நமது மங்கலங்களுள் ஒன்று தாம்பூலம்.. அது ஒரு மதத்தினருக்கு ஒவ்வாது.. எல்லாமே ஏட்டிக்குப் போட்டி..

    பதிலளிநீக்கு
  33. இரவு உணவு முடிந்து உறங்கச் செல்லும் முன் கணவன் மனைவி இருவரும் தாம்பூலம் மாற்றிக் கொள்ளும் வழக்கம் நம்மிடையே இருந்தது..

    அதற்குள் ஒரு ரகசியம் வேறு இருந்தது.. (கிழவனுக்குக் கிலுகிலுப்புத் தான்!..)

    மன்னரது வலப் பக்கம் இருந்து தாம்பூலம் கொடுப்பது பழக்கம்..

    அப்படி தாம்பூலம் கொடுப்பவரது பெயர் அடைப்பைக்காரர்..

    நம்மாழ்வார் வெற்றிலையை சொல்லியிருக்கின்றாரே!..

    ஏதேது.. இதுவே பதிவு போல் ஆகி விடும் போல் இருக்கின்றதே!..

    பதிலளிநீக்கு
  34. // சித்த வைத்தியத்தில் அறுவைச் சிகிச்சை..//

    வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன் பால்...

    என்று திவ்யப் பிரபந்தத்தில் பிரமாணம் இருக்கின்றது..

    மருத்துவன், மருந்து,அதனைக் கொடுக்கும் செவிலியன் - பற்றி திருக்குறள் பேசுகின்றது..

    ஆனால், கரை ஒதுங்கிய சிலரால் தான் டம்ளனுக்கு படிப்பு கிடைத்தது என்று - சில நரிகள் ஊளையிட்டுக் கொண்டிருக்கின்றன..

    பதிலளிநீக்கு
  35. எல்லா மருத்துவமும் அதனதன் வழியில் சிறப்புதான். ஒரு சில ஆயுர்வேதம்/சித்தா மருந்துகளினால் குணம் கிடைக்கிறது. ஒரு சில ஆங்கில மருத்துவங்களால். சில இரண்டும் கலந்து - உதாரணத்திற்கு சமீபத்திய கொரோனா.

    2 படம். கொரோனா காலம் என்பதால் பூனை தனியாகப் பிறந்த நாள் கொண்டாடுகிறதோ.

    3 படம். ஏதோ இரண்டு படங்களைத் தனியாகக் கட் செய்து பொருத்திச் சேர்த்திருப்பது போல் இருக்கிறது.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  36. மருத்துவம் - முன்பு சேவை, இன்று வியாபாரம்...!

    பதிலளிநீக்கு
  37. கேள்விகளும், பதில்களும் சிறப்பாக இருக்கிறது.
    பின்னூட்டங்கள் மிக நன்றாக இருக்கிறது.

    கீதா சொன்னது போல எல்லா மருத்துவமும் சிறப்புதான். ஒவ்வொருவர் உடம்பு ஒவ்வொரு மருத்துவம் ஏற்றுக் கொள்ளும். குடும்பத்தினர் சிறு வயதிலிருந்து எந்த மருத்தை கொடுத்து பழக்கி இருக்கிறார்களோ அதுவே ஒத்துக் கொள்ளும்.

    உடனடி அறுவை சிகிட்சைக்கு அலோபதிதான் . மெதுவாக குணமானால் போதும் என்றால் ஆயுர்வேதம், சித்தா. ஹோமியோபதியில் சர்க்கரை நோய்க்கு மருந்தே இல்லை என்கிறார்கள்.

    மருத்துவம் தனபாலன் சொல்வது போல சேவையாக செய்ய வேண்டும், மருந்தை உட்கொள்ளுபவர்கள் நம்பிக்கையுடன் நோய் சரியாகி விடும் என்று உட்கொள்ள வேண்டும்.

    மருந்து மேலேயும், மருத்துவர் மேலேயும் நம்பிக்கை இல்லாமல் மருந்து சாப்பிட்டால் பலன் அளிக்காது எந்த முறை வைத்தியமும்.

    மருத்து பாதி, நம்பிக்கை பாதிதான் நோயை குணபடுத்தும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆயுர்வேத மருத்துவர்/சித்தா மருத்துவர் இருவருமே எங்களுக்குச் சர்க்கரை நோய்க்கு மருந்துகள் கொடுத்திருக்கின்றனர். மருந்து இல்லை என்பதெல்லாம் கிடையாது. கூடவே உணவுக்கட்டுப்பாடும்.

      நீக்கு
  38. 1. இனிமேல் என் விஷயத்தில் தலையிடாதே ! அடுத்த கன்னமும் பழுத்துடும்.ஜாக்கிரதை !

    2.பிறந்தநாள் வாழ்த்து சொல்ல யாரும் வரவில்லையா செல்லம்!

    3. நல்லா இரு குழந்தை,கீழே கிடப்பதை எடுத்து சாப்பிட கூடாது சரியா

    பதிலளிநீக்கு
  39. நல்ல பாம்பு என்ற பெயர் எப்படி வந்தது

    "எத்தனையோ வகை பாம்புகள் இந்த உலகத்தில் இருந்தாலும், இருப்பதிலேயே மிக மோசமான நச்சுத்தன்மை உடைய ஒரு பாம்புக்குப் போய் ஏன் இந்தத் தமிழன் நல்ல பாம்பு என்று பெயர் வைத்தான்? என்பதை இன்னும் கொஞ்சம் யோசித்துச் சொல்லுங்கள்" - என்றேன்.

    அப்போது ஒரு மாணவர் எழுந்து கொஞ்சம் கம்பீரமாகச் சொன்னார்

    "சார் ஒரு சிறந்த வேலைக்காரனை 'நல்ல வேலைக்காரன்' அப்படின்னு சொல்லுவோம்.
    நிறைய பசித்தால் 'நல்ல பசி' அப்படின்னு சொல்லுவோம்.
    நிறைய மழை பெய்தால் இன்று 'நல்ல மழை' என்று சொல்லுவோம். ஆக எது ஒன்றுமே சிறப்பாக இருக்கும்போது அதற்கு 'நல்ல' என்ற அடைமொழியைக் கொடுத்துச் சொல்வது நம் தமிழர்களின் மரபு. பாம்புகள் நிறைய வகைகள் இருந்தாலும் அந்தப் பாம்புகளிலேயே இந்தப் பாம்புதான் சிறந்த பாம்பு. அதனால்தான் அதற்கு 'நல்ல பாம்பு' என்று பெயர்" - என்றார்.


    வகுப்பறையில் இருந்த மாணவர்களை ஒரு பார்வை பார்த்துவிட்டு கேட்டேன் "இங்கே யாராவது வீட்டில் தெலுங்கு பேசக்கூடிய மாணவர்கள் இருக்கிறீர்களா?"

    என்னுடைய நல்ல நேரம் ரேணுகா என்று ஒரு மாணவி இருந்தார். அவரிடம் கேட்டேன் "கருப்பு என்பதை தெலுங்கில் எப்படி சொல்வீர்கள்?" - என்று.

    அவர் 'நல்ல' என்று சொன்னார் அவர் சொன்ன 'நல்ல' கொஞ்சம் வேறுபட்ட உச்சரிப்பில் இருந்தது. ஆனாலும் அது 'நல்ல'தான்.

    சரி இனிமேல் இதை எளிமையாக விளக்கி விட முடியும் என்ற நம்பிக்கை வந்தது. சொல்லத் தொடங்கினேன்.

    "தமிழிலே நல்ல என்ற சொல்லுக்கு GOOD என்ற பொருள் மட்டுமல்ல, கருப்பு என்ற பொருளும் இருக்கிறது. நீங்கள் அனைவருமே நல்ல என்பதை GOOD என்ற பொருளிலேயே விளக்க முயன்றீர்கள். அதனால்தான் அது சரியாகப் பொருந்தவில்லை. இப்போது கருப்பு என்ற பொருளில் அதைப் பொருத்திப் பாருங்கள். சரியாகப் பொருந்தும்.

    நல்ல பாம்பு என்றால் கருப்பு நிற பாம்பு என்பதுதான் அதன் பொருள். இந்த உலகத்தில் எத்தனையோ பாம்புகள் இருந்தாலும் இந்தப் பாம்பு மட்டுமே கருப்பாக இருப்பதால்தான் இதற்கு நல்ல பாம்பு என்று பெயர்.

    ஆக நாம் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டிய செய்தி - நல்ல என்பதன் பொருள் கருப்பு என்பதாகும். நல்ல பாம்பு என்பதன் பொருள் கருப்பு நிறப் பாம்பு என்பதாகும்.

    இந்த நல்ல பாம்பு என்பதற்கு இணையான இன்னொரு சொல் கருநாகம் என்பதாகும். அதாவது கருப்பு நிறத்தில் உள்ள நாகம் என்பதாகும். இந்த இரண்டு சொற்களும் பொருள் அளவில் ஒன்றியிருப்பதை நம்மால் உணர முடியும். கரு என்றால் 'நல்ல' என்று பொருள். நாகம் என்றால் பாம்பு என்று பொருள்.

    தற்காலங்களில் 'நல்ல' என்பதை கருப்பு என்ற பொருளில் நாம் பயன்படுத்துவதில்லை. என்றாலும் தமிழில் இருந்து பிறந்த மொழியான தெலுங்கில் இன்றைக்கும் கருப்பு என்பதை நல்ல என்றே அழைக்கிறார்கள் என்பதற்கு இந்த வகுப்பறை மாணவி ரேணுகாவே சாட்சி.

    இதை இன்னும் நன்றாகப் புரிந்து கொள்ள இன்னொரு சொல்லை எடுத்துக் கொள்ளலாம். அந்தச் சொல் - நல்லெண்ணெய் என்பது.

    நாம் சமையலுக்குப் பயன்படுத்தும் எண்ணெய்களில் இந்த நல்லெண்ணெய்தான் சிறந்தது என்ற பொருளில் அதற்கு அந்தப் பெயர் வைக்கப்படவில்லை. சொல்லப்போனால் அதை விடவும் நல்ல எண்ணெய்கள் இருக்கத்தான் செய்கின்றன. பிறகு ஏன் அதற்கு மட்டும் நல்லெண்ணெய் என்று பெயர்?

    உண்மையில் நல்லெண்ணெய்யின் நிறம் கருப்பு நிறமாகும். இன்றைய நல்லெண்ணெய்கள் அப்படி இருப்பதில்லை என்பதையும் ஒப்புக்கொள்கிறேன். ஆனாலும் ஒரு நல்ல நல்லெண்ணெய் கருப்பாகத்தான் இருக்கும்.
    ஏனென்றால் அது எள்ளில் இருந்து எடுக்கப்படுகிறது. குறைந்தபட்சம் எள்ளின் நிறம் கருப்பு என்பதையாவது ஏற்பீர்கள் என்று நம்புகிறேன்.

    மங்கலம் என்பது என்னயென்றால் அமங்கலமான ஒன்றையும் மங்கலகரமான பெயர் வைத்து அழைக்கும் நமது வழக்கத்திற்கு மங்கலம் என்று பெயர்.

    உதாரணமாக ஒருவர் இறந்து விட்டால் அவர் இறந்துவிட்டார் என அமங்கலமாகச் சொல்லாமல் அவர் சிவலோகப் பதவி அடைந்தார் அல்லது வைகுண்டம் அடைந்தார் அல்லது இறைவனடி சேர்ந்தார் என்றெல்லாம் மங்கலகரமாகச் சொல்லுவோம். இந்த வழக்கத்தைத்தான் தமிழ் இலக்கணம் மங்கலம் என்கிறது.

    இந்தப் பாடப் புத்தகத்தில் நான் முரண்படுகின்ற செய்தி என்ன இருந்தது என்றால் மங்கல வழக்கிற்கு உதாரணமாக நல்ல பாம்பு என்ற சொல்லைக் கொடுத்திருந்தார்கள்.

    அதாவது மோசமான நஞ்சை வைத்திருக்கும் பாம்பு என்றாலும் அதற்கு மங்கல அம்சம் ஏற்றி அதை நாம் நல்ல பாம்பு என்று அழைக்கிறோம். அதனால்தான் அதன் பெயர் மங்கலம் என்கின்ற பார்வையில் அது தரப்பட்டிருந்தது.

    பதிலளிநீக்கு
  40. நெல்லையில் நீ...ண்....ட விளக்கத்திலிருந்து நான் சொன்னதும்(இடக்கரடக்கல்) சரி என்று புரிகிறது. நன்றி.

    பதிலளிநீக்கு
  41. வைத்தியம் என்பதே மருந்து+பத்தியம்தான். அலோபதியிலும் இதை சொல்கிறார்கள். அந்த மருந்துகள் உடனடி பலன் தருவதால் பத்தியம் தேவையில்லை என்று நாமாக நினைத்துக் கொள்கிறோம். சித்தா, ஆயுர்வேதா போன்ற மருத்துவங்களில் பத்தியத்தை கடைபிடிக்காவிட்டால் பலன் இருக்காது. அலோபதி சில நாட்கள் பலனளித்து விட்டு நிறுத்தி விடும். மருந்து வேலை செய்யவில்லை என்று மருந்துகளை மாற்றிக் கொள்வோம்.
    உயர் ரத்த அழுத்தம் இருக்கிறது, ஊறுகாய், சிப்ஸ் போன்றவை சாப்பிடக்கூடாது, நடை பயிற்சி அவசியம் என்று மருத்துவர்கள் கூறுவதை கருத்தில் கொள்வது எத்தனை பேர்கள்?
    Diabates is not a disease, it is a disorder. வாழ்க்கை முறையை மாற்றிக் கொண்டால் அதோடு சிறப்பாக வாழலாம் என்று அறிவுறுத்துகிறார்கள். அப்படி வாழ்க்கை முறையை மாற்றிக் கொண்டு மருந்தும் எடுத்துக் கொண்டு ஆரோக்கியமாக வாழ்பவர்களை எனக்குத் தெரியும்.

    பதிலளிநீக்கு
  42. எனக்கு இருந்த மைக்ரேன் தலைவலி ஹோமியோபதி மருந்து எடுத்துக் கொண்ட தில்லான் சரியானது. அந்த மருத்துவரிடம் நான்,"காபி, டீ சாப்பிடக் கூடாதா?" என்று கேட்டதற்கு அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை" என்றார். அந்த சமயத்தில் நான் சுதர்சன் கிரியா கற்றுக் கொண்டு ரெகுலராக செய்ய ஆரம்பித்ததும் ஒரு காரணமாக இருக்கலாம்.

    பதிலளிநீக்கு
  43. இனிமேல் புதன் கேள்வி பதில் பகுதியில் "கேள்வியும் நானே பதிலும் நானே" என்ற துணைப் பிரிவையும் ஆரம்பிக்கலாம் என்று தோன்றுகிறது.

    Jayakumar

    பதிலளிநீக்கு
  44. கேள்வி பதில்கள் சுவாரசியம்.

    பதிலளிநீக்கு
  45. கேள்வி பதில்கள் நன்று.... குறிப்பாக காது வலி குறித்த பதிலை மிகவும் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!