சனி, 19 மார்ச், 2022

மொய்ப்பணம் யாருக்கு? & நான் படிச்ச கதை

 சென்னை,:ஆட்டோ ஓட்டுனரின் நேர்மையை பாராட்டி, போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் வெகுமதி வழங்கினார்.

சென்னை காவல்துறையில் சிறப்பாக பணியாற்றும் போலீசாருக்கு, ஒவ்வொரு மாதமும் நட்சத்திர காவலர் விருதுடன், 5,000 ரூபாய் பண வெகுமதி வழங்கப்படும். சமூக வலைதள நிறுவனங்களின் தகவல்களை சேகரித்து போலியான ஆவணங்கள் வாயிலாக 2.2 கோடி ரூபாய் வீட்டு கடன் பெற்று மோசடி செய்த மதுரையை சேர்ந்த கமலக்கண்ணன் என்பவரை, மத்திய குற்றப்பிரிவு எஸ்.ஐ., தியாகராஜன் கைது செய்தார்.


இந்த செயலை பாராட்டி, அவருக்கு நட்சத்திர காவலர் விருதை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் நேற்று வழங்கினார்.கொளத்துார், பூம்புகார் நகர் நான்காவது தெருவைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் நசீர், 44. கடந்த 10ம் தேதி இரவு 9:30 மணியளவில், ஆட்டோவில் புழல் - கதிர்வேடு பைபாஸ் மேம்பாலத்தின் கீழ் சென்று கொண்டிருந்தார்.அப்போது ஆட்டோவிற்கு முன்னால் சென்ற இருசக்கர வாகனத்தில் இருந்து, சாலையில் தவறி விழுந்த பையை, புழல் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். அந்த பையில், 6,133 ரூபாய் இருந்தது.

பையை தவற விட்ட நபர் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.ஆந்திராவில் இருந்து 'மெத்தம்பெடமைன்' போதை பொருட்கள் வாங்கி பதுக்கி வைத்து விற்பனை செய்த, எட்டு பேரை, மாதவரம் துணை கமிஷனர் சுந்தரவதனம் தலைமையிலான போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 2 கிலோ கஞ்சா, 860 கிராம், 'மெத்தம்பெடமைன்' போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.மேற்படி சம்பவங்களில் சிறப்பாக செயல்பட்ட ஆட்டோ ஓட்டுனர் மற்றும் போலீசாரை, போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் பாராட்டி வெகுமதி வழங்கினார்.

======================================================================================================

கொச்சி-கேரளாவில், சாலையோரம் டீக்கடை நடத்துபவரின் மகள் மருத்துவக் கல்லுாரியில் சேர பணமின்றி தவித்தார். அவருக்கு ஏராளமானோர் உதவி செய்துள்ளனர்.


கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியை சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது.கொச்சியை சேர்ந்த ஜாசன், வேன் டிரைவராக பணியாற்றினார். இவரது முதுகு தண்டுவடம் 2019ல் பாதிக்கப்பட்டது. இதனால் வேன் ஓட்ட முடியவில்லை. குடும்ப வருமானத்திற்காக, இவரது மனைவி பிந்து ஆட்டோ ஓட்டினார்.

ஜாசனின் மூத்த மகன் சாமுவேல் ஹோட்டல் நிர்வாகமும், இளைய மகன் ஒன்பதாம் வகுப்பும் படிக்கின்றனர். மகள் எட்னா, பிளஸ் 2 படித்து வந்தார். மனைவியின் வருமானம் போதாமல், வேனை விற்று சாலையோரம் டீக்கடை துவக்கினார் ஜாசன். வீடு இல்லாததால், குடும்பம் டீக்கடையிலேயே வசிக்கிறது. எட்னா, தந்தைக்கு உதவியாக டீக்கடையில் வேலைகளை பார்த்துக் கொண்டே படித்தார். டாக்டர் கனவு இருந்ததால், 'நீட்' தேர்வு எழுதி வெற்றி பெற்றார்.

ஆலப்புழா மருத்துவக் கல்லுாரியில் அவருக்கு இடம் ஒதுக்கப்பட்டது. ஆனால், கல்லுாரி மற்றும் விடுதி கட்டணம் செலுத்த பணம் இல்லாமல் தவித்தார். இதையறிந்த அப்பகுதி மக்கள், எட்னாவின் கல்விக் கனவை நிறைவேற்ற, 'வாட்ஸ் ஆப்' சமூக வலைதளத்தில் குழு அமைத்தனர். அதில் கிடைத்த தொகையை வைத்து, எட்னா கல்லுாரியில் சேர்ந்துள்ளார்.

=================================================================================================

மதுரை: மதுரை ஆத்மராவ், சுமதி தம்பதி மகள் அம்ரிதாவுக்கும், திருச்சி பாலகுமாருக்கும் நடந்த திருமணத்தில் உறவினர்கள், நண்பர்கள் கொடுத்த மொத்த மொய்ப்பணம் ஆதரவற்றோர் இல்லத்திற்கு வழங்கப்பட்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

மணமகள் பெற்றோர் கூறியதாவது: திருமண அழைப்பிதழில் நீங்கள் வழங்கும் மொய்ப்பணம் அன்பு இல்ல ஆதரவற்ற குழந்தைகளுக்கு வழங்கப்படும்' என குறிப்பிடப்பட்டிருந்தது அனைவர் கவனத்தை ஈர்த்தது. அதற்கு ஏற்ப திருமண மண்டபத்தில் மொய்ப்பணம் வைக்கும் உறைகளையும் வைத்திருந்தோம்.

திருமணத்திற்கு வந்தவர்கள் உறையில் எவ்வளவு பணம் என குறிப்பிடாமல் உள்ளே பணம் வைத்து குடத்தில் போட்டு சென்றனர். எவ்வளவு மொய் எழுதினார்கள், அவர்கள் பெயர் என்ன என்பதை கூட நோட்டு புத்தகத்தில் நாங்கள் எழுதவில்லை. எங்கள் வாழ்வில் பெரியளவு யாருக்கும் உதவி செய்யும் வாய்ப்புஅமையவில்லை.

அதனால் தான் மகள் திருமண மொய்ப்பணத்தை ஆதரவற்றோர் குழந்தைகள் இல்லத்திற்கு வழங்க முடிவு செய்தோம். ஆதரவற்றோர் மீதான அக்கறை, மனதிருப்திக்காக செய்தோமே தவிர விளம்பரத்திற்காக அல்ல. இதை பார்த்து பலர் ஆதரவற்றோருக்குஉதவ முன்வர வேண்டும் என்பதே எங்கள்நோக்கம். மொத்த மொய்ப்பணத்தை செக், டி.டி.,யாக மாற்றி ஆதரவற்றோர் இல்லத்திற்கு கொடுத்து விடுவோம் என்றனர்.

===========================================================================================================================================================================================================================


 நான் படிச்ச கதை

 ஜெயகுமார் சந்திரகேகரன் 

==============================================


காவேரி மடத்துக் கிழவர் – க நா சுப்ரமணியம் 

 

க நா சுப்ரமணியம் (1912-1988) வலங்கை மானில்  1912 இல் பிறந்து 1965 முதல் டெல்லியில் வாழ்ந்து 1988இல் சென்னையில் இறந்தார். முதலில் ஆங்கிலப் பத்திரிகைகளில் கட்டுரைகள் எழுதினார். பின்னர் புதுக்கவிதை, நாவல், சிறுகதை, விமர்சன நூல், மொழிபெயர்ப்பு என்று இவரது இலக்கியக் களம் விரிந்தது. மயன் என்ற புனைப்பெயரில் புதுக்கவிதைகள் எழுதினார். ‘சூறாவளி’, ‘சந்திரோதயம்’, ‘எழுத்து’ உள்ளிட்ட இதழ்கள், ‘ராமபாணம்’, ‘இலக்கிய வட்டம்’, ‘முன்றில்’ உள்ளிட்ட சிற்றிதழ்களை நடத்தினார். 1986-ல் இவர் எழுதிய ‘இலக்கியத்துக்கு ஒரு இயக்கம்’ என்ற இலக்கியத் திறனாய்வு நூலுக்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்தது. 

இவர் நடிகர் பாரதி மணியின் மாமனார்.

இவரைப்பற்றிய மேலும் விவரங்கள்

https://ta.wikipedia.org/s/bed

https://azhiyasudargal.blogspot.com/2012/10/blog-post_12.html 

தளங்களில் காணலாம்.

“கதை என்பது பொதுவானது. கவிதை கட்டுரை நாடகம் ஓவியம் இவற்றிற்கு ஆதாரமாக இயங்குகிற ஒரு அடிப்படைக் கோப்பு. சிறுகதை என்பது தனித்துறை. பத்திரிகைகள் யுகமும் அவசர யுகமும் தோன்றிய பின், கதை, சிறுகதை என்கிற இலக்கிய உருவம் பெற்றுப் பின்னர் பத்திரிகைக் கதை என்று ஒரு தேய்வும் பெற்றது.“ இவ்வாறு செல்கிறது இவரது சிறுகதை  ஆராய்ச்சி. “சிறுகதைக்கு ஒரு ஆரம்பம், நடு, முடிவு  என்பது கட்டாயம் தேவை. அவ்வாறு இல்லையேல் அவை சிறுகதைகள் அல்ல.”  என்றும் கூறுகிறார்.

இன்று நாம் காணப்போவது இவரது “காவேரி மடத்துக் கிழவர்” என்ற சிறுகதை பற்றிய அறிமுக விமரிசனம்.

https://drive.google.com/file/d/1UVyaA0Ak1SNDAHY4cPn5NBEtvuuTQAIh/view?usp=sharing

கதை என்னவோ கிசுகிசு கள்ளக்காதல் தான். கதையை சொல்பவர் ஒரு இளைஞர். பெயர் இல்லை. அவருடைய பாட்டி அவருக்கு ஒரு கதை சொல்கிறார்.

முப்பத்திரண்டு வருஷங்களுக்கு முந்திய கதை அது. எதிர்வீட்டு சாமாவின் தாயார் பெயர் தர்மி. அவள் பணக்கார வீட்டுப் பெண். ஸ்த்ரீதனமாக நிறைய பணமும் நிலமும் கொண்டு வந்தாள். அவள் கணவன் அப்போது கிராம முன்சீப். பெயர், சீனுவாசய்யர். தீவட்டி தடியன் மாதிரி இருப்பான். …எப்போதும் சிடுசிடுத்த முகம். போதாதற்கு அவன் தொழில் சதா மூச்சு நுழைவது தான்……தர்மி அழகாக இருப்பாள். ….

பக்கத்து  வீட்டிலே நாணு நாணு என்று ஒர் தடி பிரமச்சாரி இருந்தான். அவனுக்கு ஒரு விதவைத் தாயாரும் மூத்த சகோதரியும் தான் உறவினர்கள். ஆள் ஜோராக இருப்பான்…..அவன் குடியிருந்த வீட்டைத்தவிர அவனுக்கு வேறு சொத்தில்லை.  பலே கைகாரன் பேச்சுக்காரன்.

சுருங்கச் சொன்னால் நாணு வீசிய வலையில் விழுந்து விட்டாள் தர்மி. இது பல மாதங்களுக்கு அப்புறம் தான் சீனுவாசய்யருக்குத் தெரிய வந்தது….. கிடைத்த அடி எல்லாம் வாங்கிக்கொண்டு சொல்லிக் கொள்ளாமல் இரவோடு இரவாக ஊரை விட்டு ஓடி விட்டான் நாணு..

 நாணு ஊரை விட்டு ஓடியதற்கு எட்டு மாதங்களுக்கு அப்புறம் சாமா பிறந்தான்.

 மேலே கூறியது கதையின் நடுப்பகுதி.

 கதையின் துவக்கம் கீழே.

எங்கிருந்தோ வந்தார். வயது அறுபது அறுபத்தைந்து இருக்கும். காவேரி மடத்தில் பத்திருபது நாள் தங்கப் போகிறேன் என்றார். மஹாதேவ அய்யரிடம் மடத்தின் சாவியை வாங்கிக்கொண்டு மடிசஞ்சியும் தானுமாக ஒரு நாள் மடத்தில் குடிபுகுந்தார்.

அவர் அப்படிக் குடிபுகுந்ததில் சாமா ஒருவனுக்குத்தான் அதிருப்தி. சாமாவுக்கு பிறர் படுகை, வாழைத்தார்களில் மோகம் அதிகம். அவை தான் ருசியானது என்பது அவன் கொள்கை.

இவ்வாறு கதை தொடங்குகிறது.  இதிலிருந்து நீங்கள் பாதிக்கதையை ஊகித்திருக்கலாம். வந்த கிழவர் நாணு. சாமா, தர்மி வழி பிறந்த அவரது மகன். இது எல்லாம் சரியே. ஆனால் இக்கதைக்கு இரண்டு முடிச்சுகள் முடிவுகள் உண்டு. இரண்டும் உண்மையே.

மடத்தில் ஸ்நானம் பண்ணி விட்டு காயத்ரி ஜபம் பண்ணிக்கொண்டு உட்கார்ந்திருந்தார் கிழவர். …. பத்து நிமிசத்தில் …காலி செம்புடன் வெளியே வந்து ஆற்றைப் பார்த்துக் கொண்டு என் பக்கத்தில் உட்கார்ந்தார் கிழவர்.


சந்தேகத்தை எப்படித் தீர்த்துக் கொள்வது என்று யோசித்தேன். அச்சமயம் சாமா தன் வேஷ்டியை இழுத்துக் கட்டிக்கொண்டு எருமை மாட்டைக் குளிப்பாட்ட ஆற்றில் இறங்குவது ஏன் கண்ணில் பட்டது.

திடீரென்று முன் பின் யோசியாமல் “அது உங்கள் பிள்ளை” என்றேன். ….

தனக்கு இரண்டு தலைமுறைகளுக்கப்புறம் பிறந்த வாலிபன் ஒருவன் தன்னைக் கண்டு கொண்டான்; ‘ஆனால் அவமதிக்கவில்லை’ என்ற பெருமை அவர் கண்களில்….

மறுநாள் காலை நான் பால் கொண்டு போனபோது காவேரி மடம் வெறிச்சோடியிருந்தது. கிழவர் விடியற்காலையிலேயே கிளம்பிப் போய் விட்டார். என் அசட்டுத்தனம் அது……பாட்டி விசயத்தை அறிந்து கொண்டு என்னைக் கோபித்தாள்.

கதையை சிறுகதையாக்குவது எப்படி என்பதை இக்கதை விளக்குகிறது. கதை என்னவோ சாதாரணம் தான். இந்தக் கதையை இப்படி சொல்லிப் பாருங்கள்.

நாணு ஒரு பிரம்மச்சாரி இளைஞன். அடுத்தவன் மனைவியை அபகரித்தான். பிடிபட்டான். ஊரை விட்டு ஓடினான். 32 வருடங்களுக்குப் பின் திரும்ப வந்து எதையோ தேடி அலைந்தான். தேடி வந்தது கதாசிரியர் மூலம் வெளிப்பட்டதும், ரகசியம் வெளிப்பட்டதும் திரும்பவும் ஊரை விட்டுப் போய் விட்டான்.

இப்படி எழுதினால் அது சிறுகதை அல்ல. பத்திரிகை ரிப்போர்ட் அல்லது செய்தி.

சிறுகதைக்கு ஒரு துவக்கம் வேண்டும். ஆகவே கிழவர் ஊருக்கு வருவதை ஒரு திரைக்காட்சியாக முன்னில் வைக்கிறார். கிழவர் ஊருக்குப் புதியவர் அல்லர் என்பதற்குச் சில துப்புகளை அங்கங்கே தூவுகிறார் கதாசிரியர். நாணுவின் கதை வாசகர்களுக்குத் தெரிய, பாட்டி வழியாக ஒரு flash back (பின்னோட்டம்). அப்போது வாசகர்களுக்கு அவர்கள் உத்தேசித்த முடிச்சு முடிவு அவிழ்கிறது. இப்படியாகத் துவக்கம், நடுப்பகுதி, முடிவு என்று அவர் உத்தேசித்த சிறுகதை இலக்கணத்தைப் படிப்பிக்கிறார்.

(இந்த உத்தியைத்தான் ஆ மாதவன் “பாச்சி” என்ற சிறுகதையில் கையாண்டதை நாம் முன்னரே பார்த்தோம். மேலும் அதிலும் நாணு கதாநாயகன். என்ன ஒரு ஒற்றுமை!)

இக்கதையின் முடிச்சு பல இடங்களில் சூசகமாகச் சொல்லப்பட்டாலும் கடைசி வரி படித்த பின்தான் “அப்படியா” என்று ஆச்சர்யப்பட வைத்தது.

கீழே உள்ள மலையாள வாக்கியத்தைப் படிக்க முடியுமானால் புரிந்து கொள்ளலாம். அல்லாமல் சுட்டியின் வழியாகக் கதையின் கடைசி பக்கத்திற்குச் சென்று வாசிக்கலாம். கதை முழுதும் வாசித்தீர்கள் என்றால் மிக நன்று. கதைப் போக்கு, ஒழுக்கு, அன்றைய வழக்கங்கள், போன்றவற்றையும் புரிந்து கொள்ளலாம். கதை 1961இல் வெளி வந்தது.

ரா கி ரங்கராஜன், சுஜாதா போன்றவர்களும் சிறுகதை எழுதுவது எப்படி என்ற தலைப்பில் தொடர்கள் வெளியிட்டுள்ளனர். அந்த வரிசையில் இதையும் கொள்ளலாம். இந்தக் கதை ஒரு கதை எப்படி சிறுகதையாகிறது என்பதற்கு நல்ல உதாரணம். வாசகர்கள் அவசியம் சுட்டிக்குள்  சென்று கதையை வாசிக்கக் கோருகிறேன்.

പോടാ ചെറുക്കാ എന്നോട് ഒന്ന്  ചോതിക്കാമായിരുന്നു, നാണു എന്റ്റെ അനിയൻ

 https://drive.google.com/file/d/1UVyaA0Ak1SNDAHY4cPn5NBEtvuuTQAIh/view?usp=sharing

என்ன வாசகர்களே. கதையை படித்தாயிற்றா? உங்களுக்குத் தோன்றிய எண்ணங்களைப் பின்னூட்டமாக எ பி யில் தெரிவித்தால் அது எல்லோருக்கும் சென்றடையும்.

னது…….இலவச இணைப்பு.

எனக்கும் கேட்டது !!

“வெட்டு குத்து “

தொல்லைக் காட்சியில்

தொடர் நாடகம்.

மனைவி சமயலறையில்.

விளக்கம்: தொடர் நாடகங்களை விரும்பும் மனைவி எனக்கும் கேட்கும்படி சப்தம் கூட்டி சமைத்தபடி பார்க்கின்றார். (கேட்கின்றார்). தொடர் நாடகங்களில் வசனமே அதிகம் என்பதால்.

 

45 கருத்துகள்:

  1. தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு வேளாண்மை செய்தற் பொருட்டு..

    தமிழ் வாழ்க..

    பதிலளிநீக்கு
  2. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
    இறையருள் சூழ்ந்து எங்கும் இன்பமே நிறைந்து வாழ்க..

    வாழ்க நலம்..
    வாழ்க தமிழ்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்க வாழ்கவே...    வாங்க துரை செல்வராஜூ ஸார்...  வணக்கம்.

      நீக்கு
  3. மொய்ப் பணத்தை ஆதரவற்றோர் இல்லத்துக்கு வழங்கிய நல்ல உள்ளங்கள் வாழிய பல்லாண்டு!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்ல உள்ளங்கள் இன்னும் வாழ்ந்து கொண்டுதான் வருகின்றனர்...

      இதம்பாடல் குலதெய்வ கோயிலிலிருந்து... கில்லர்ஜி

      நீக்கு
    2. நன்றி ஜி.

      // இதம்பாடல் குலதெய்வ கோயிலிலிருந்து... கில்லர்ஜி //

      இன்னமும் அங்குதான் இருக்கிறீர்களா?

      நீக்கு
    3. பங்குனி உத்திரம் திருவிழா ஜி

      நீக்கு
    4. ஓ..   நேற்று சென்னையிலும் மக்கள் கோலாகலமாகக் கொண்டாடினார்கள்.

      நீக்கு
  4. அனைவருக்கும் இனிய காலை வணக்கம். நிலைத்திருக்கும் ஆரோக்யம் இறைவன் அருள வேண்டும்.

    பதிலளிநீக்கு
  5. கவனிப்பாரற்று இருக்கும் க.நா.சு.
    அவரை சீராட்ட மாலை வருகிறேன், ஜெஸி சார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கவனிப்பாரற்று இருப்பதன் பெயரே இலக்கியம். குறிப்பாக தமிழ் இலக்கியம்.
      நேற்று தமிழின் தலைசிறந்த படைப்பாளிகளில் ஒருவர் (அவரும் கவனிப்பாரற்று இருப்பவர்தான்) திடீரென அரசியல்வாதியால் புகழப்பட்டாரே..கவனித்தீர்களா! இலக்கிய/அரசியல் அதிர்ச்சி. தமிழ்நாடுன்னா என்ன, சும்மாவா!

      நீக்கு
    2. கநாசுவை கவனிக்க யாருமில்லைதான் போல!

      நீக்கு
    3. @ கீதா சாம்பசிவம் : //????//

      கொஞ்சம் சொல்கிறேன்..

      நேற்று வழக்கம்போல் ஆங்கில ஏடுகளை ஆய்ந்துகொண்டிருந்தேன், அவர்கள் அரிப்புகள், புலம்பல்கள் எப்படி இருக்கிறதென. இந்தியன் எக்ஸ்ப்ரெஸ் பக்கம் வந்ததோடு, தெரியாத்தனமாக அதன் தமிழ்ப் பதிப்பைத் தட்டிவிட்டுக் கண்களை ஓட்டினால், அங்கே தென்பட்டது, பொதுவாகக் காணக் கிடைக்காதது.

      இந்த இ.பா. இருக்கிறாரே..கொஞ்சம் சும்மா இருந்தாலென்ன, இதுவரை இருந்தது போலவே! ‘1952-லிருந்தே பார்த்துவருகிறேன்.. இதுதான் இதுவரை நான் பார்த்ததில் மாநிலத்தின் மிகச்சிறந்த பட்ஜெட்..’ என்று ட்வீட்டியிருக்கிறார். இதற்கு பதிலளித்த மந்திரிகளில் முதலாமவர், ‘தமிழின் தனிப்பெரும் படைப்பாளியாக விளங்கும் இந்திரா பார்த்தசாரதி..’ என்று ஆரம்பித்து(!) நன்றி சொல்கிறார். இப்படி ஒரு செய்தி அபூர்வமாகத்தானே தமிழரின் நாட்டில் வருகிறது

      எழுத்துக்காக ஏகப்பட்ட விருதுகள் வாங்கிய இ.பா.வுக்கு இப்படியும் ஒரு அங்கீகாரம்..

      நீக்கு
  6. திருமணத் தம்பதியர் , ஆதவற்றோருக்குப் பொருள் தந்து உதவி இருப்பது மிகச் சிறந்த நிகழ்வு. வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  7. ஒரே நிகழ்வை ஒன்றுக்கொன்று தொடர்பு ஏற்படுத்திப் பகிர்ந்தமைக்கு நன்றி. ஆதரவற்றோருக்குப் பொருள் உதவி செய்வது இந்தக் காலத்தில் புதிதுஅல்ல என்றாலும் இது புதுமணத்தம்பதியினரில் மொய்ப்பணம் என்பதால் சிறப்புப் பெற்றுள்ளது.

    பதிலளிநீக்கு
  8. சில நாட்களாய் DD பதிவுகள் பக்கம் வருவதில்லையே...   வெளியூர் சென்றிருக்கிறாரா?  நலமாய் இருப்பார் என்று நம்புகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஸ்ரீராம் நானும் நோட் செய்தேன். அவரிடமே கேட்கவும் நினைத்தேன். ஆனால், சமீபத்தில் அவர் இங்கு பங்களூர் வந்திருந்தார் ஜிஎம்பி சாரைப் பார்க்க அவர் வீட்டிற்கு வந்திருந்தார். அப்போது என்னோடு பேசினார். என்னை வரமுடியுமா என்று கேட்டார் ஆனால் என்னால் செல்ல முடியாத நிலை. அவர் போனில் பேசினார்.

      நலமுடன் இருப்பார் என்று நினைக்கிறேன்.

      கீதா

      நீக்கு
    2. நன்றி அன்பின் கீதாமா.
      சில சமயங்களில் விடைகள் தாமாகவே நம்மை வந்தடைகின்றன.'
      பேரனுக்காகத் திருக்குறள் வரிகளை எழுதிக் கொண்டிருந்தபோது டிடி
      நினைவில் வந்தார் .
      நலமாக இருக்கட்டும்.

      நீக்கு
  9. பாசிட்டிவ் செய்திகள் அனைத்தும் அருமை. மருத்துவம் படிக்க மாணவிக்கு உதவிய மக்கள் பாராட்டிற்குரியவர்கள்.

    ஒரே போன்ற செய்திகளை ஒன்றாகத் தொகுத்திருப்பது நல்லாருக்கு ஸ்ரீராம்

    திருமண மொய்ப் பணம் ஆதரவற்றோர் இல்லத்திற்கு வழங்கப்பட்டது சிறப்பு.

    (நம் வீட்டிலும் இதே பாலிசிதான்...)

    கீதா

    பதிலளிநீக்கு
  10. க நா சு அவர்களின் கதை மிக மிக சிம்பிள் கருதான் ஆனால் அதைச் சொல்லிய விதம் செம. வாசித்து வரும் போதே புரிந்துவிடுகிறது. கதை என்ன என்று. அது போல பாட்டி சொல்லும் போதும் தெரிந்துவிடுகிறது..நாணு அவர் தம்பி என்பதும். ஆனால் கதையைச் சொன்னவிதம் அதுவும் வள வள என்றில்லாமல் அழகாகச் சொல்லியிருப்பது. நல்ல கதை. ஜெ கெ அண்ணவிற்கு நன்றி.

    கீதா

    பதிலளிநீக்கு
  11. க.நா.சு.வின் இந்த வருகை, ஆச்சரியப்படவைக்கிறது..!

    பதிலளிநீக்கு
  12. இந்தக் கட்டுரைக்காக ஸ்ரீராம் தேர்ந்தெடுத்திருக்கிற படம் பிரமாதம்.
    இரண்டு - மூன்று முறை இதற்கு முன் எபியில் வந்திருந்தாலும் சலிக்காத படம். இந்தப் படத்தை வைத்து ஒரு செவ்வாய்க் கிழமைக்கு கதை எழுதச் சொன்னதாகவும் ஞாபகம்.

    பதிலளிநீக்கு
  13. செவ்வாய்க் கிழமை என்றதும் தான் இதுவும் சொல்லத் தோன்றியது. தமிழில் கதை எழுத முயற்சிக்கும் பதிவர்களுக்கு க.நா.சு. போன்றவர்களைத் தெரிந்திருக்க வேண்டும். ஒரு துறையில் நாம் நுழைய முயற்சிக்கும் பொழுது அந்தத் துறையில் சாதனைகள் செய்திருக்கும் முன்னோடிகளைப் பற்றி முதலில் பாடம் பயில்வது சென்ற தலைமுறை வழக்கம். அதனால் சொல்ல நேர்ந்தது.

    பதிலளிநீக்கு
  14. பாசிட்டிவில்  இருந்து நல்ல செய்திகளுக்கு போய் திரும்பவும் பாசிட்டிவ் ஆகி விட்டது. 


    மொய் பணம் கணக்கு பார்க்காமல் கொடுப்பது சரியல்ல என்று தோன்றுகிறது. காரணம் return மொய் செய்யும் போது மொய் வந்ததைக் காட்டிலும் கூடுதல்  ஆக இருக்க வேண்டும்.  ஆகவே சாதாரணமாக மொய் செய்தவர் பெயர் மற்றும் தொகை ஒரு  நோட்டில்  எழுதி வைப்பர். அது இல்லாமல் கஷ்டம்தான்.

     இன்றைய கட்டுரைக்கு வாழ்த்து சொன்ன ஏகாந்தன் சார், ஜீவி  சார், கீதா மேடம்  ஆகியோருக்கு நன்றி.

    Jayakumar

    பதிலளிநீக்கு
  15. பொய்ப் பணத்தை அன்பு இல்லத்திற்கு வழங்கியது நல்ல செயல். கிட்டத்தட்ட பதினைந்து வருடங்களுக்கு முன்பு எங்களுக்கு தெரிந்தவர்கள் வீட்டு திருமணத்தில் இப்படி செய்தார்கள்.

    பதிலளிநீக்கு
  16. க.நா.சு.அவர்கள் கதையைப் படித்து விட்டு சொல்கிறேன்.

    பதிலளிநீக்கு
  17. மொய் பணத்தை இல்லத்துக்கு வழங்கிய தம்பதிகளுக்கும் குடும்பத்தினருக்கும் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  18. தமிழ் எழுத்திலக்கியத்தில் மறக்கவே முடியாதவர் க.நா.சு. அவர்கள். நான் பிறப்பதற்கு ஏறத்தாழ 30 வருடங்களுக்கு முன் பிறந்தவரின் படைப்புகளை என் 20 வயதில் தேடித் தேடிப் படித்திருக்கிறேன். அந்நாட்களில் அரசு நூலகங்களில் நமக்குத் திகட்ட திகட்ட தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் கிடைக்கும்.

    க.நா.சு.வின் 'பொய்த்தேவு' என்ற நாவல் தான் நாவல் இலக்கணத்திற்கு ஏற்ப அமைந்த தமிழின் முதல் நாவல் என்பார் ஜெயமோகன் அவர்கள். என் நூலகத்தில் 'பொய்த்தேவு' இருக்கிற பெருமை எனக்குமுண்டு.

    என்ன இருந்தாலும் விமர்சனக் கலைக்கு பெயர் பெற்ற அவரின் இலக்கிய சண்டைகள் மறக்க முடியாதவை. சி.சு.செல்லப்பாவும் க.நா.சு. மோதிக்கொண்ட இலக்கிய போர்கள் என் இளமைக் காலத்தில் தேன் மாந்தியது போல இருந்தன. இந்தத் துறை போகிய எழுத்தாளர்களிடமிருந்து கற்றுக் கொண்டவை ஏராளம். தன் மொழி சிறப்புக்காக அயராது தங்களையே தத்தம் செய்த அற்புத படைப்பாளிகள் அவர்கள். இன்றும் தமிழ் எழுத்துலகம் பற்றி விவாதங்கள் வரும் பொழுது அந்த மஹானுபாவர்கள் போட்ட 'பிச்சை' பேருதவியாக இருந்து வழி நடத்துகின்றன.

    அயலக எழுத்துக்களை தமிழில் அறிமுகப்படுத்தியதும், தமிழ் எழுத்துக்களை ஆங்கிலத்திற்கு கொண்டு போனதும் க.நா.சு. அவர்களின் தனிச்சிறப்பு. இவரின் ஆங்கில மொழிப் புலமையில் நீல. பத்மநாபனும், சா. கந்தசாமியும் வலம் வந்தனர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. க.நா.சு. தமிழைத் தவிர பிறிதொரு இந்திய மொழியில் இத்தனைப் படைப்புகளைத் தந்திருந்தார் என்றால், அவரை நாடி பலப்பல விருதுகள், அங்கீகாரங்கள் வந்திருக்கும். க.நா.சு. , சி.சு.செ. போல் தங்கள் வாழ்க்கைகளையே எழுத்துக்காக விரும்பி தியாகம் செய்து, கடைசிவரை எழுத்தே எல்லாம் என்றிருந்த படைப்பாளிகள் இந்திய மொழிகளில் மிக அபூர்வம்.

      நீக்கு
    2. க.நா.சு. அவர்களின் 1000 பக்கங்களுக்கு மேலான
      திருவாலங்காடு 4 பாகங்கள்,
      மால் தேடி,
      வக்கீல் ஐயா,
      ஜாதி முத்து
      சாத்தனூர்,
      சாலிவாஹனன்

      -- போன்ற 15 க்கும் மேற்பட்ட எழுத்தாக்கங்கள் அச்சு வாகனம் ஏறாமல் இன்னும் கையெழுத்துப் பிரதிகளாகவே உள்ளனவாம். தஞ்சை பிரகாஷ் குறிப்பிட்டதாக நினைவு.

      இவற்றை யாராவது தேடி எடுத்து பிரசுரம் செய்தால் தமிழுக்கு செய்த புண்ணியமாகிப் போகும்.

      நீக்கு
    3. அம்மாடி.. எங்கு கிடைக்குமோ.. நன்றி ஜீவி ஸார்.

      நீக்கு
  19. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  20. இன்று நம் ஜெ.ஸி. ஸார் பகிர்ந்து கொண்டவை அவரது சென்ற பகிர்தல்களிலிருந்து சற்றே மாறுபட்ட தோற்றத்தைக் கொடுக்கிறது. எல்லா மாறுதல்களும் தனிப்பட்ட திறமையாளர்களின் வளர்ச்சிக்கே வழி வகுத்திருக்கிறது என்ற பேருண்மையில் அவரை வாழ்த்துகிறேன். நன்றி.

    பதிலளிநீக்கு
  21. சிறப்பான செய்திகள். அனைவருக்கும் பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!