திங்கள், 28 மார்ச், 2022

"திங்க"க் கிழமை : தவலை அடை - கீதா சாம்பசிவம் ரெஸிப்பி 

 தவலை அடை

கீதா சாம்பசிவம் 

சில நாட்கள் முன்னர் ரேவதியோட பதிவிலே கிராமத்து முறையிலே தவலை அடை என்பதைப் பார்த்ததும் உடனே அந்த யூ ட்யூப் சானலைப் பார்த்தேன்.   என் வலை உலக  வாழ்க்கையிலேயே முதல் முதலாகப் பதிவைப் பார்த்ததுமே உடனே பார்த்த யூ ட்யூப் சானல் அதான்னு நினைக்கிறேன். ஹிஹிஹி, இல்லைனா, அப்புறமாப் பார்த்துக்கலாம்னு விட்டுடுவேன். சில/பல சமயங்கள் மறந்தே போகும். ஆனால் இது "தவலை அடை" என்பதால் பார்த்தேனோ? இருக்கும். அதைப் பார்த்ததும் தான் அட, இப்படித் தான் நாம் ஒரு தரம் செய்து படங்கள் எல்லாம் எடுத்தோமே, போடவே இல்லையேனு நினைப்பு வந்தது. நானும் இதிலே சொல்லி இருந்த மாதிரிக் கடாயிலே தான் பண்ணினேன். நன்றாகவே வந்தது.

தவலை அடை செய்யத் தேவையான பொருட்கள்


அரிசி. பெரும்பாலோர் பச்சை அரிசியே சேர்க்கின்றன. நான் இரண்டுமாகச் சேர்த்துக் கொண்டு (சமமாய்) ஒரு கிண்ணம் எடுத்துக் கொண்டேன். நன்கு களைந்துவிட்டு நீரை வடிகட்டி விட்டுச் சிறிது நேரம் வைச்சுட்டேன். பின்னர் துவரம்பருப்பு அரைக்கிண்ணம், கால் கிண்ணம் கடலைப்பருப்பு எடுத்துக் கொண்டேன். இதற்குப் பலரும் உளுத்தம்பருப்புச் சேர்ப்பதில்லை. என் தம்பி மனைவி சாதாரண அடைக்குக் கூட உ.பருப்புப் போடுவதில்லை. ஆனால் நான் இதில் ஒரு டேபிள் ஸ்பூன் உ.பருப்புச் சேர்த்தேன்.(சேர்ந்து வருவதற்காக)  அதோடயே தேவையான மி.வத்தலையும் ஊற வைச்சேன்.

வடிகட்டி ஊறிய அரிசியை மிக்சி ஜாரில் போட்டு ரவை பதத்துக்கு உடைத்து எடுத்துத் தனியாக வைத்துக் கொண்டேன். தேவையானால் அரைக்கிண்ணம் மோர்/தயிர் சேர்க்கலாம். உப்பு பின்னால் சேர்க்கலாம். இப்போ வேண்டாம். மேலே பார்ப்பது ரவை போல் உடைத்த அரிசியைக் கொஞ்சம் போல் ஜலம் சேர்த்து வைச்சிருக்கேன்.



பின்னர் ஊறியதை மிக்சி ஜாரில் போட்டு ரொம்பவே நைசாக இல்லாமலும், ரொம்ப்க் கொரகொரவென இல்லாமலும் அரைத்து எடுத்துக் கொண்டேன். 


அரைத்து எடுத்துக் கொண்டதை ரவை போல் உடைத்த அரிசியோடு சேர்த்து நன்கு கலக்கவும். தேவையான உப்பை இப்போது சேர்க்கலாம்.


அரிசி மாவோடு சேர்ந்த பருப்புக் கலவை. இதோடு கருகப்பிலை, கொத்துமல்லி, தேங்காய்த் துருவல் அல்லது கீற்றுக்கள் சேர்க்கலாம்.


இதற்குத் தாளிப்புத் தேவை. ஒரு சிலர் அரிசி ரவையை உப்புமாப் போல் கிளறிப்பாங்க. அப்போவும் தாளித்துப் பின்னரே கொஞ்சம் ஜலம் சேர்த்துக் கிளறணும். அதன் பின்னர் அரைத்த கலவையைச் சேர்க்கலாம். நான் இதிலும் தாளித்துக் கொண்டேன். கருகப்பிலையைத் தாளிப்பிலும் சேர்க்கலாம். தேங்காய் எண்ணெயை அடுப்பில் உள்ள வாணலியில் ஊற்றிக் கடுகு, உ.பருப்பு,பச்சை மிளகாய் ஒன்றிரண்டு விதைகளை நீக்கியது, இஞ்சி தோல் சீவிச் சேர்த்துக் கொண்டு அந்தத் தாளிப்பை இந்த மாவில் கொட்ட வேண்டும்.


பின்னர் மாவை நன்கு கலந்து உப்புத் தேவையானால் தேவையான அளவுக்கு மறுபடி சேர்த்துக் கலக்கிக் கொள்ளவும். 


எல்லாம் கலந்த மாவு. அடுப்பில் வாணலியை வைத்துச் சூடாக்கி உங்களுக்குத் தேவையான சமையல் எண்ணெயை ஊற்றவும். சுமார் ஒரு மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் தேவைப்படும். மாவை ஊற்றிய பின்னரும் எண்ணெய் தேவைப்படும். இது கெட்டியாக இருந்தால் மாவை அப்படியே எடுத்து உருட்டி வாணலியில் போட்டுக் கைகளால் தட்டலாம். நான் கொஞ்சம் எடுத்து ஊற்றும் பதத்திலேயே மாவை வைத்துக் கொண்டதால் வாணலி சூடானதும் எண்ணெய் ஊற்றி மாவை வாணலியிலேயே ஊற்றினேன். எண்ணெய் நன்கு எல்லாப் பக்கமும் போகும்படி ஊற்றியதும் ஒரு தட்டால் மூடினேன்.


உள்ளே நன்கு வேக வேண்டும் என்பதால் 2 நிமிடங்களுக்கும் மேல் வேக வைக்கலாம். பின்னர் திருப்பிப் போட வேண்டும். இப்போது மூடணும்னு அவசியம் இல்லைனாலும் மூடினாலும் தப்பில்லை. மறுபக்கமும் நன்கு வேகணும். 


திருப்பிப் போட்டு வெந்து கொண்டிருக்கிறது. 


திருப்பிப் போட்டு இருபக்கங்களும் வேக வைத்த தவலை அடை. இது கொஞ்சம் பெரிதாகவும் கனமாகவும் இருப்பதால் ஒன்று அல்லது இரண்டுக்கு மேல் சாப்பிட முடியாது. என்ன வேண்டுமானாலும் தொட்டுக்கலாம். பொதுவாக இதற்குத் தேங்காய்ச் சட்னி தான் தொட்டுப்பாங்க. இந்த அளவுக்கு சுமார் நான்கு முதல் ஐந்து அடைகள் வரை தயாரிக்கலாம். செய்து பாருங்க, சாப்பிட்டுவிட்டுச் சொல்லுங்க.

வாணலி இல்லாமல் பெரிய வாயகன்ற உருளியை எடுத்துக் கொண்டு காய வைத்துப் பின்னர் எண்ணெயை ஊற்றிக் கொண்டு அதிலும் தட்டலாம். வெண்கலப்பானை வாசனையோடு இதன் ருசி வேறு விதமாய் இருக்கும். எனக்கு இப்போல்லாம் பெரிய உருளியைத் தூக்க முடியாததால் அதில் பண்ணுவதில்லை. அரிசி உப்புமாவுக்கெனச் சின்னதாக ஒரு உருளி வைச்சிருக்கேன். அதில் தான் அரிசி உப்புமா, பொங்கல், சர்க்கரைப் பொங்கல், வெண் பொங்கல் எல்லாமும்.

65 கருத்துகள்:

  1. விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா மருந்தெனினும்
    வேண்டற் பாற்றன்று..

    குறள் நெறி வாழ்க..

    பதிலளிநீக்கு
  2. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
    இறையருள் சூழ்ந்து எங்கும் இன்பமே நிறைந்து வாழ்க..

    வாழ்க நலம்..
    வாழ்க தமிழ்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்க நலம்.

      வாங்க துரை செல்வராஜூ ஸார்..  வணக்கம்.

      நீக்கு
  3. தஞ்சாவூர் தவல அடை.. ன்னு சொல்லுவாங்களே!...

    அதுதானுங்களே - இது?!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இருக்கும், இருக்கும்.  இதை நான் சுவைத்திருக்கிறேனா என்றே தெரியவில்லை.  சமீப காலங்களில் இல்லை!

      நீக்கு
    2. திருநெவேலில சின்ன வயசுல இருந்து கடைகளில் (மிக்சர், காராசேவு ஓம்ப்பொடி போன்றவை செய்து விற்கும் வீடுகளில்), ஹோட்டல்களில் பார்த்திருக்கேன். தஞ்சை பகுதியில் அசோகா அல்வா தவிர இதெல்லாம் கேள்விப்பட்டிருக்கவே மாட்டாங்க. இங்க என்னடான்னா... துரை செல்வராஜு சார்.. தஞ்சாவூர் தவலை அடைன்னு பெயரையே மாத்தி வைக்கிறாரே...

      நீக்கு
    3. இன்னிக்கு இது வரும்னே மறந்து போச்சு. துரை சொன்னாப்போல் தஞ்சாவூர்க்காரங்க பண்ணும் தவலடை இதான். என் மாமியாரெல்லாம் உருளி, வெண்கலப்பானை(அகலமானது) ஆகியவற்றில் பண்ணுவாங்க. நான் அதில் பண்ணாமல் இரும்புச் சட்டியில் பண்ணினேன். இதில் அரிசி மாவை உப்புமாப் போல் கிளறிக்கொட்டிக் கொண்டு கூட மற்ற மாவுக்கலவையைச் சேர்த்துப் பண்ணலாம்.

      நீக்கு
    4. என் அம்மாவும் வெங்கட் உருளியில்தான் செய்வார்.

      நீக்கு
    5. வெங்கல உருமி வெங்கட் உருளியாகி விட்டது. ஆதி கோபித்துக் கொள்ளப் போகிறார்.

      நீக்கு
  4. அனைவருக்கும் வணக்கம். தவலை அடை முன்பே ஒரு முறை ரெசிபி போட்டிருக்கிறீர்கள் போலிருக்கிறதே? இதற்கும் சாதாரண அடைக்கும் என்ன வித்தியாசம்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க பானுமதி அக்கா... வணக்கம்.

      //தவலை அடை முன்பே ஒரு முறை ரெசிபி போட்டிருக்கிறீர்கள் போலிருக்கிறதே?//

      அப்படியா... இருக்கலாம். அது வெங்கலத்தவலை அடை. இது எவர்சில்வர்.

      நீக்கு
    2. ஒரு முறை அல்ல... பல முறை...

      சாதா அடைக்கும் இந்தத் தவலை அடைக்கும் தாளிப்பு தவிர வித்யாசம் தெரியலை.

      ஆனால் எனக்குத் தெரிந்த தவலை அடையை, எண்ணெயில் போட்டுப் பொரிப்பார்கள். (எப்படியோ பதில் சொல்லி வம்பை விலைக்கு வாங்கியாச்சு)

      நீக்கு
    3. நெல்லை எண்ணையில் பொரித்தால் வடை...

      அடை என்பது தட்டிப் போட்டுச் செய்வது.

      பானுக்கா தவலை அடைக்கும் மற்ற அடைக்கும் வித்தியாசம் உண்டு

      நம் வீட்டில் தவலை அடை கண்டிப்பாக மாதத்தில் இரு முறையேனும் மெனுவில் உண்டு

      நம் வீட்டில் கிளறிச் செய்வது..கீழே கருத்தில் சொல்லியிருக்கிறேன்.

      கீதா

      நீக்கு
    4. பானுமதி, முன்னால் போட்டது தவலை வடை. எண்ணெயில் போட்டுப் பொரிப்பது. தென்மாவட்டங்களுக்கே உரியது. தவலை வடை உருண்டையாக போண்டா மாதிரி மேலே மொறுமொறுவென்றும் உள்ளே ஸ்பாஞ்ச் போலவும் இருக்கும். நறுக், கறுக் எனத் தேங்காய்ச் சில்கள் கடிபடும்.தவலடையில் அடை போலத் தட்டுவது. முன்னெல்லாம் என் அம்மாவின் பிறந்த வீட்டில் அடையையே தோசைக்கல்லில் மாவைப் போட்டுக் கைகளால் தான் தட்டுவார்களாம். அம்மா சொல்லி இருக்கார். இப்போ மாதிரிக் கரைத்து மெலிசாக எல்லாம் வார்க்க மாட்டாங்களாம். ஒரு அடை தின்பதே கஷ்டம் என்பார். இது அது மாதிரி அடை. வெண்கலத்தில் (தவலை போன்ற பாத்திரத்தில் செய்வதால்) தவலடை என்று பெயர்.

      நீக்கு
  5. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் எவ்வித கலக்கங்களும் இல்லாத நல்ல நாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  6. வணக்கம் கீதா சாம்பசிவம் சகோதரி

    இன்றைய திங்கள் பதிவு அருமை. தங்கள் தயாரிப்பான தவலை அடை செய்முறை, மற்றும் படங்கள் நன்றாக உள்ளது. ஒவ்வொன்றையும் படங்கள் எடுத்து அழகாக விவரமாக சொல்லியுள்ளீர்கள். நீங்கள் சொல்வது போல் இரண்டு அரிசியும் சமமாக எடுத்துக் கொண்டால்தான் சாதாரண அடையானாலும்,இந்த தவலை அடையானாலும் ருசியாக இருக்கும். பச்சரிசி மட்டுமென்றால் கொஞ்சம் கடுக்கென்ற பதத்திற்கு சமயத்தில் போய் விடுமோ என்ற எண்ணம் எனக்கும் உண்டு.

    நான் அடை, குணுக்கு போன்றவற்றிலும், உ.பருப்பு கொஞ்சம் சேர்ப்பதோடு, பா. பருப்பையும் கொஞ்சம் போல் சேர்த்துக் கொள்வேன். எல்லாம் சேரும் போது அது ஒரு கலவையாக நன்றாக வரும் என்பது என் நம்பிக்கை. உங்கள் அளவுகள் நன்றாக உள்ளது. இது போலவும் சமயம் கிடைக்கும் போது செய்து பார்க்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கமலா ஹரிஹரன் மேடம்... இதை இப்போ அடைன்னு சொல்றீங்களா இல்லை பெரிய சைஸ் குனுக்குன்னு சொல்றீங்களா? எனக்கு அந்த உண்மை தெரிஞ்சாகணும்.

      நீக்கு
    2. தவலை வடையைப் பெரிய சைஸ் குணுக்குனு சொல்லலாம். இது அடை, அடை, அடையே தான்.

      நீக்கு
  7. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
    நட்புகள் அவர்கள் குடும்பங்கள் என்று எல்லோரும்
    நலமே வாழ இறைவன் அருள வேண்டும்.

    பதிலளிநீக்கு
  8. இது ஒன்று சாப்பிட்டாலே போதும் என்று நினைக்கிறேன் நன்றாக (வ)வெந்து இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  9. அன்பு கீதாவின் தவலை அடை நன்றாகத் தான் இருக்கும்.

    ஸ்ரீராம் சொல்வது போல வெங்கல உருளியில்
    செய்து வெளியிட்டிருந்தாரோ.

    இங்கே கொடுத்திருக்கும் அளவுகளும்,
    இரண்டு அரிசி கலந்து ஊறவைத்து அரைப்பதும்
    அருமை.

    பருப்பு அளவுகளும் உ.பருப்பு சேர்ப்பதும்
    சரியாக இருக்கும்.நல்ல படங்களும் சேர்ந்து
    அடை தட்டில் வந்து உட்கார்ந்திருப்பதைப்
    பார்த்தால் சாப்பிடும் ஆசை வருகிறது:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பக்கத்தில் வெங்காயச் சட்னி மிஸ்ஸிங்கோ?

      நீக்கு
    2. இதுக்குக் கூடவா வெங்காயச் சட்னி! அதெல்லாம் வெந்தய தோசை, இலுப்பச்சட்டி தோசை, ரவா தோசை ஆகியவற்றுக்குத் தான் நன்றாக இருக்கும்.

      நீக்கு
  10. தவலை அடை என்றாலே எனக்கு நினைவுக்கு வருவது ,
    என் அன்பு நாத்தனார் திருமதி பத்மா.

    மாமியாருக்கு மாமனாருக்கும்
    சமைத்துப் போட்டே உடல் தளர்ந்தவர்.

    அவர் வேகாத வெய்யிலில் மாவு மெஷினுக்குப்
    போய் விட்டு வருவதை நானே பார்த்திருக்கிறேன்.

    தவலை அடைக்கும் அரிசி பருப்பு எல்லாவற்றையும்
    ரவை பதத்துக்கு அரைத்து வருவார்.
    ஊற வைத்து, தேங்காய், இஞ்சி ,பச்சை மிளகாய்,சிவப்பு மிளகாய்

    மிக்சியில் அரைத்து மாவுடன் கலந்து,கரியடுப்பில்
    வெங்கலப் பானையில் (தவலை)
    தட்டிப் போட்டு, தட்டு வைத்து மூடி
    மேலே தணலும் போட்டு வைப்பார்.

    சரியாக ஒருமணிக்கு அவர்களுக்கு இலையில்
    போட்டு விடவேண்டும்.

    வெண்ணெய் ,வெல்லம், தேங்காய்த் துகையல்
    தொட்டுக்க வேண்டும்.

    கீதாவின் ரெசிப்பியில் நானே புராணம் சொல்லி விட்டேன்:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இவ்வளவு பார்த்துப் பார்த்துப் பண்ணிப் போடுபவர்கள் உடல் தளரும்போது, அவர்களுக்கும் இதுபோல அடுத்த தலைமுறை செய்கிறதா? என்று அறிய ஆவல்.

      நீக்கு
    2. ரேவதி சொல்லி இருப்பது மிக உண்மை. யாரும் இம்மாதிரி யாருக்கும் செய்து போடுவதில்லை என்பதே உண்மை நெல்லை. :))))

      நீக்கு
  11. அன்பு வாழ்த்துகளும் நன்றியும் கீதாமா.
    பதிவிட்ட ஸ்ரீராமுக்கும் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  12. தவலை அடை நன்றாக வந்திருக்கு. நான் பண்ணிப் பார்த்தபோது, தாளிப்பைச் செய்ததில்லை. தாளிப்பும் தேங்காய் பற்களும் ருசியைக்கூட்டும்.

    நல்ல ரெசிப்பி.

    அடையைத் திருப்பிப் போடும்கோதும், கருணையோடு எண்ணெய் விட்டிருந்தால் கருகுவதைத் தவிர்க்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், இதுக்கு எண்ணெயை ஊற்றுவதோ விடுவதோ இல்லை.கொட்டணும். அது படத்தில் தான் காந்தலாய்த் தெரியுதே தவிர உண்மையில் எதுவுமே கருகவில்லை.

      நீக்கு
  13. வல்லிம்மா சொல்லியிருப்பதுபோல, பருப்புகளையும் ரவை பத்த்திற்கு அரைத்து, எல்லாவற்றையும் ஊறவைத்து, மிளெஆய் கருவேப்பிலை இஞ்சி அரைத்துக் கலக்குவது சுலபமோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது கொஞ்சம் உதிர்ந்து போகிறது (எனக்கு) என்றாலும் அம்மா அப்படியும் செய்திருக்கார்.

      நீக்கு
  14. படங்கள் அழகு. அதிலும் திருப்பி விடுமுன் வெந்துகொண்டிருக்கும் படம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தொப்! தொப்! நான் மயக்கம் போட்டு விழுந்த சப்தம்.

      நீக்கு
  15. இதற்கு ஏன் தவலை அடை என்று பெயர் வந்தது என்று யாருக்காவது தெரியுமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெந்நீர் தவலை, ஜோடுதவலை (ஜோடுதலை) என்றெல்லாம் பித்தளைப் பாத்திரங்கள் உண்டு. அதுபோல ஒன்றில் இதனைப் போட்டு எண்ணை விட்டு எடுப்பதால் இந்தப் பெயர் வந்திருக்கும்னு நினைக்கிறேன். தவலை அடை என்று சொல்லமாட்டார்கள். தவலடை.

      நீக்கு
    2. உண்மையில் வெண்கல உருளி அல்லது வெண்கலப்பானையில் தான் செய்து பார்த்திருக்கேன். அப்போவெல்லாம் விறகு அடுப்பா!நன்றாக அடியில் முறுகலாக வேகும். அப்படியே தனியாய் உரித்து எடுக்கலாம்.

      நீக்கு
    3. ரவை போல உடைத்துக்கொண்டு ஜலத்தை தேங்காயுடன் கொதிக்கவைத்து ரவையை கொட்டி கிளறி பின்னர் அடையாக தட்டுவது தான் ஒரு தினுசு இல்லாவிட்டால் ஊறவைத்து கெட்டியாக அரைத்து வடை போல எண்ணெயில் தட்டிப்போட்டு சிவக்கஎடுப்பதே இன்னொரு முறை உங்கள் மெத்தட் மிகவும் நன்றாக இருக்கிறது அன்புடன்

      நீக்கு
    4. நமஸ்காரங்கள் அம்மா. நீங்கள் சொல்வதில் முதல்முறைப்படி என்மாமியாரும் இரண்டாவது முறையில் அம்மாவும் பண்ணுவார்கள். எண்ணெயில் பொரித்து எடுப்பதால் நாங்கல்லாம் தவலை வடை என்றே சொல்வோம். நன்றி அம்மா.

      நீக்கு
  16. @ நெல்லைத் தமிழன்..

    முன்னெல்லாம் அடை சாப்பிடும் போது அடை என்று தான் தெரியும்.. தவல அடை குவள அடை என்றெல்லாம் தெரியாது.. தஞ்சையிலும் கும்மோணத்திலும் சாப்பிட்டு இருக்கின்றேன்.. தஞ்சாவூர் தவல அடை என்றே அப்போது சொல்வார்கள்...

    பேரை அடிக்கடி சொல்லிக் கொண்டிருக்க வேண்டும்.. இல்லையென்றால் அடுத்த ஊருக்குப் போய் விடுகின்றது..

    திருவையாறு அசோகா
    கும்மோணம் கடப்பா.
    கும்மோணம் டி.காபி..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்னிக்குக் கும்மோணத்தில் காஃபி சாப்பிட்டுவிட்டுத் தலையில் அடிச்சுக்காத குறைதான். எனக்கு எப்போவுமே கும்பகோணம் காஃபியில் அவ்வளவு ருசி இல்லை. ஒரே சிகரியை அள்ளிப் போடுகிறார்கள். :(

      நீக்கு
    2. காபி குடித்த அரை மணியில் தன் வேலையைக் காட்டும். நெஞ்செரிச்சல் வந்து விடும். :(

      நீக்கு
  17. தஞ்சாவூர் தவலை அடை அந்த நாளிலிருந்தே புகழ் பெற்றது தான்! சகோதரர் துரை செல்வராஜ் எழுதியிருந்த மாதிரி சாப்பாட்டு விஷயத்தில் ருசியால் பிரபலமான பல சமையல் பக்குவங்கள் தஞ்சாவூரிலும் கும்பகோணத்திலும் உண்டு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மனோ சொல்வது சரியே! இந்தச் சேப்பங்கிழங்கு ரோஸ்ட், முழுக்கத்திரிக்காய் ரோஸ்ட் எல்லாம் தஞ்சை (அந்தக்காலப் பிரியாத தஞ்சாவூர்) மாவட்டத்துச் சிறப்பு உணவுகளே.

      நீக்கு
  18. அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள்!

    பதிலளிநீக்கு
  19. அருமையான பக்குவ முறை கீதா சாம்பசிவம்! இதில் பல்வேறு விதங்கள் இருக்கின்றன. உங்களது குறிப்பை செய்து பார்க்கிறேன். அரிசியை ஊறவைத்து உடைத்து கலப்பதற்கும் அப்படியே மற்ற பொருள்களுடன் கொரகொரப்பாக அரைப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறதா? சுவை கூடுமா?
    என் சினேகிதி சொல்லுவார், அவர்கள் வீட்டில் வெங்கலப்பானையில் தான் செய்வார்கள் என்று!
    வெங்கலப்பானையில் எண்ணெய் தாராளமாய் தடவி அடை தட்டி எண்ணெய் மேலும் விட்டு தண்ணீர் நிறைந்த ஒரு வாணலியால மூடி அடுப்பில் வைத்து மெதுவான தீயில் வேக வைத்து எடுப்பார்களாம். பொதுவாய் திருப்பி போட மாட்டார்கள் என்றும் இன்னும் மொறுமொறுப்பாக வேண்டுமென்றால் மட்டுமே திருப்பிப்போடுவது வழக்கம் என்றும் சொல்லுவார். இப்படித்தான் அந்த காலத்தில் விறகடுப்பில் செய்வது வழக்கம் என்றார். அரிசியை கழுவி காய வைத்து மற்ற பொருள்களையும் சேர்த்து ரவை பதத்துக்கு ரெடிமேடாக உடைத்து வைத்துக்கொள்வதும் உண்டு என்று சொல்லியிருக்கிறார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க மனோ. நீங்க சொன்னாப்போல் தான் என் மாமியார், அம்மா எல்லோரும் செய்வார்கள். அது தான் ஒரிஜினல் தவலடை என்றும் சொல்லுவார்கள். எனக்கு அது சில சமயங்கள் உதிர்ந்து விடுவதால் பைன்டிங்கிற்காக நான் அரிசியை உடைத்து வெந்நீரில் ஊற வைத்துப் பின் பருப்பு வகைகளை அரைத்துச் சேர்த்தேன். இது உதிரவில்லை.

      நீக்கு
  20. கீதாக்கா சூப்பர் தவலை அடை.

    நம் வீட்டில் எல்லாவற்றையும் ஊற வைத்து தண்ணீர் வடிகட்டி உலர வைத்து உடைத்துக் கொண்டு மாவு கிளறி தட்டிச் செய்வது.

    தவலை அடையில் மிள்கு ஜீரகமும் கொஞ்சம் சேர்ப்பதுண்டு.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதாவது அதாவது அதாவது... நல்லா தடிமனா செஞ்சா தவலை அடை, மெல்லிசா செஞ்சு அதையே அனுமார் வடையாவும் செய்துடலாம் என்ற Make one Get two திட்டமா? ஹா ஹா

      நீக்கு
    2. மிளகு, ஜீரகம் அரிசி உப்புமாவில் சேர்த்தால் கூட எனக்குப் பிடிப்பதில்லை. ஆகவே தவலடையில் சேர்க்க மாட்டேன்.

      நீக்கு
  21. தவலை அடை குறிப்பு சஹானாவில் ஆதிவெங்கட் போட்டிருந்தாங்க....அதே டிட்டோ மெத்தட் தான் நான் என் பாட்டியிடம் கற்றுக் கொண்டது.

    ஒவ்வொருவரும் ஒவ்வொரு முறையில் செய்வதைப் பார்க்கிறேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம், இணையத்தில் தேடினால் இன்னும்பல விதங்கள் கிடைக்கலாம்.

      நீக்கு
  22. தவலை அடை குறிப்பு , படங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  23. இன்னிக்கு நான் தான் வரலைன்னா ஶ்ரீராமும், கௌதமன் சாரும் கூட விடுமுறையா? ஒருத்தரையும் காணோமே!

    பதிலளிநீக்கு
  24. பெரிசா போணி ஆகலை போல! இப்போல்லாம் சமையல் குறிப்புகள் வர அன்னிக்குப் பதிவு காத்தாடுது. அதே புதன் கேள்வி/பதில், வியாழன்/ஶ்ரீராம், சனிக்கிழமை/பா.செ.நா.ப.பு ஆகியவற்றுக்குக் கூட்டம் கூடுகிறது.

    பதிலளிநீக்கு
  25. இன்னிக்கு இதோட சரி, இனிமே நாளைக்கு/ பிழைத்துக் கிடந்தால் பிச்சைக்காரனுக்குப் பார்க்கலாம். :))))

    பதிலளிநீக்கு
  26. தவலை அடை குறிப்பு நன்று... வீட்டில் அம்மாவும் ஆதியும் செய்வது உண்டு.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!